குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/சாதிகள்-களைகள்

விக்கிமூலம் இலிருந்து

90. சாதிகள்-களைகள்
(1)

இனிய செல்வ,

"பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்” என்ற திருக்குறள் நெறி இனி இந்தநாட்டை வென்றெடுக்குமா என்பது ஐயத்திற்குரியதாகி வருகிறது. எங்கு நோக்கினும் சாதிகளின் பெயரால் பேரணிகள், சாதிகள் மாநாடுகள், சாதிகளுக்கு இடையே பேதங்கள், சாதிக் கலவரங்கள், மதச் சண்டைகள், படுகொலைகள் இவையெல்லாம் நமக்குக் கற்றுத்தரும் படிப்பினை என்ன? இனிய செல்வ. இன்று நாட்டில் செல்வாக்குப் பெற்றுள்ள அணிகளுக்கும் கூட உள்ளூர குளிர்சுரம் இருக்கிறது; பயம் இருக்கிறது. தங்களுடைய இருப்பை நிலையாக்கிக் கொள்ள சாதிகளைப் பயன்படுத்துகின்றன என்று தெளிவாகத் தெரிகிறது; புலனாகிறது. இனிய செல்வ, இதனால் விளையப் போவது என்ன?

தமிழினம் பல்குழுவாகப் பிரியும்; சாதி, குலம், கோத்திரங்கள் ஆழம்பட்ட நிலையில் வேரூன்றும். இந்தச் சிறு சிறு குழுக்களிடையே பகை வளரும்; கலகங்கள் நடக்கும்; சமுதாயம் என்ற அமைப்பு இருக்காது. சமூகம் என்ற அமைப்பு இருக்காது; வலிமை இழப்பர்; வாழ்வை இழப்பர். இனிய செல்வ, எல்லைகளைக் கடந்து தேசியத் தலைவர்களாக விளங்கினவர்களை-இன்றும் தேசியத் தலைவர்களாக மதித்துக் போற்ற வேண்டியவர்களை மிக முயன்று சாதித்தலைவர்களாக ஆக்குவது வரலாற்றுக்கு மாறுபட்டது. அந்த மாபெரும் தேசியத் தலைவர்களுக்கு மரியாதை செய்வது என்ற பெயரில் அவர்களுடைய மதிப்பைச் சீர்குலைப்பதாகும். இனிய செல்வ, மதுரையில் வ.உ.சி. சிலை ஒன்று சிம்மக்கல் பக்கம் நிற்கிறது. இனிய செல்வ, சிலைக்கு அடியில் சிலை நிறுவியது "சைவ வேளாளர் சங்கம்" என்று எழுதப் பெற்றுள்ளது. வ.உ.சி.க்கு வரலாற்றில் நிலைத்த புகழுண்டு. வடபுலத்தில் பாலகங்காதர திலகரைப் போல் தென்புலத்தில் வ.உ.சி. ஆங்கில சாம்ராஜ்யத்தின் வர்த்தகக் கப்பல்களை எதிர்த்து, சுதேசிக் கப்பல் விட்டு வெற்றி கண்ட பெருந்தகை. இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் வ.உ.சி.க்கு நிலையான இடம் உண்டு.

இனிய செல்வ, பசும்பொன் தந்த தேவர் திருமகன் என்று பாராட்டப் பெறும் முத்துராமலிங்கத் தேவர் தேசியத் தலைவர்; தெய்வீக நெறியில் தோய்ந்த தலைவர்; வீரர்; ஆற்றொழுக்காகப் பலமணிநேரம் தத்துவ மெய்ப் பொருள் பேசும் ஆற்றல் மிக்கவர். அவர் ஒர் ஆன்ம ஞானி; தேவர் திருமகனாரையும் சாதித்தலைவர் ஆக்க முயன்று வெற்றியும் பெற்று வருகின்றனர். இது தேவர்; திருமகனாரின் புகழுக்கு அணி சேர்க்குமா? என்பது குறித்து அன்பர்கள் சிந்திக்க வேண்டும். இனிய செல்வ, திருவள்ளுவரையும் வள்ளுவப் பண்டாரக்குலத்தில் தோன்றியவர் என்ற செய்தி பரப்பப்படுகிறது.

வளரும் சமுதாயத்திற்குச் சாதிகள்-களைகள். களைகள் நிறைந்த கழனியில் பயிர் வளராது. இனிய செல்வ. அதுபோலச் சாதிப்புன்மைகள், வேற்றுமைகள் வளரும் மனிதக் கூட்டத்தில் மனிதர்கள் ஒருவருக்கொருவர் அன்னியமாகி விடுவர். மனிதக் கூட்டத்தில் வாழும் ஒவ்வொருவரும் சமூகம் உருவாகத் துணையாக அமைய மாட்டார்கள். ஒருவருக்கொருவர் கடமைப் பொறுப்பு இருப்பதை உணரார், இந்த நிலையில் கூடி வாழ்தல் எனும் பண்பு அரிதாகிவிடும். காலப்போக்கில் தமிழரும் இல்லை, இந்தியரும் இல்லை என்றாகிவிடும். இனிய செல்வ, இந்தியா அந்நியருக்கு அடிமையானது ஏன்? எப்படி? வீரம் இல்லாமலா? விவேகம் இல்லாமலா? இல்லை! உலகத்தின் எந்த இனத்தையும் விட இந்தியர்களுக்கு வீரம் அதிகம் உண்டு; விவேகமும் உண்டு. ஆயினும் ஒருவர் பிறிதொருவருடைய வீரத்தை, விவேகத்தை அங்கீகரிப்பதில்லை. ஏன் ? சாதிகளே காரணம்; மத வேற்றுமைகளே காரணம்.

(2)

இனிய செல்வ, இந்தச் சாதிப்புன்மைகள் பழமையானவையும் அல்ல. சமயங்கள் பெற்றெடுத்த நச்சுக் குழந்தைகளுமல்ல. நிலப் பிரபுத்துவமும் தனியுடைமையும் பெற்றெடுத்தவை. இவற்றைப் பின்னால் அங்கீகரித்துப் பாதுகாத்தன சமய நெறிகள். இனிய செல்வ, தொன்மைக் காலத்து மகரிஷிகளின் வாழ்க்கையில்-திருமண உறவில் கூடச் சாதிகள் இருந்ததில்லை. இன்று இந்தச் சாதிகள் வளர்ந்து மனித சமுதாயத்தை ஆட்டிப்படைக்கின்றன. பல தலைமுறைகளாகத் தாழ்த்தப்பட்டவர்களாக வாழும் - வாழ்ந்து கொண்டிருக்கிற ஆதி திராவிடர்களும் இன்னமும் மற்ற சாதியினரின் அங்கீாரம் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் சலிப்படைந்து சமுதாயத்திற்கு எதிர் விளைவு சக்திகளாக உருமாற்றம் பெற்று வருகிறார்கள். இதனை இந்திய சமூகம் அறிந்து, உணர்ந்து ஆதி திராவிடர் சமூகத்தை அங்கீகரிக்க முன்வர வேண்டும். இனிய செல்வ, ஆதி திராவிடர் சமூகமும் தனித்து நிற்பதால் தீண்டாமை போய் விடாது. காவிரி கடலில் கலந்தால்தான் காவிரி கடலாகும். உப்பு, உணவில் கலந்தால்தான் உணவுக்கு ருசி. அதுபோல, ஆதி திராவிட சமூகமும் மற்ற சமூகங்களும் கலக்க வேண்டும். ஒன்றாக சங்கமிக்க வேண்டும். அப்போதுதான் வேற்றுமைகள் அகலும். ஒருமைப்பாடு தோன்றும்!

இனிய செல்வ, இன்று சாதிகளாலும் மதங்களாலும் நோய்வாய்ப்பட்டுள்ள இந்திய சமுதாயத்திற்கு வள்ளுவமே மருந்து! "பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்” என்ற பெருநெறி நின்று ஒழுக வேண்டும் இனிய செல்வ, உலகத்திற்குத் தமிழ் கூறும் நல்லுலகம் தந்த நெறிகள் பலப்பல, அவற்றில்,

"பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்”

என்பது.

"யாதும் ஊரே, யாவரும் கேளிர்”

என்பது.

"பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!”

என்பது.

"எல்லாரும் இன்புற்று இருக்க
நினைப்பதுவே அல்லாமல்
வேறொன்றறியேன்”

என்பது. இந்த நெறிகள் மானுடத்தின் ஒழுகலாறாகும் பொழுதுதான் மானுடம் வெல்லும்; வையகம் வளரும்.

இனிய செல்வ, இன்று தமிழகம் திருக்குறள் நெறியிலிருந்து நெடுந்தொலைவிற்கு விலகிச் சென்று கொண்டிருக்கிறது. இந்த நூற்றாண்டில் திருக்குறள் தமிழகத்தை வென்றெடுக்குமா? அல்லது திருவள்ளுவரும் திருக்குறளும் வழிபாட்டுப் பொருள்களாக்கப் படுவார்களா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

இனிய செல்வ, நமக்கும் உழுதசால் வழிச் செல்லும் பழக்கம் இருக்கிறது போலும்! 'காலம்’-மனிதனை உருவாக்கும் சாதனமே. ‘காலம்’ மனிதனை உருவாக்குவதில் பங்கேற்கலாம்; பொறுப்பேற்க முடியாது. காலத்திற்கும் மனித வாழ்க்கைக்கும் இடையில் நடக்கும் போராட்டமே வாழ்க்கை! இந்தப்போராட்டத்தில் மனிதனைக் காலம் வெற்றிகொண்டுவிட்டால் காலம் மனிதனின் முதுகில் மூப்பு, முதுமை என்ற முத்திரைகளைக் குத்திச் சுடுகாட்டுக்கு அனுப்பி விடுகிறது. மனிதன் காலத்தை வெற்றி கொள் வானானால் மனிதன் காலத்தின் முதுகில் முத்திரையைக் குத்தினால் "அசோகர் காலம்” என்பதுபோல அவன் பெயரைச் சுமந்து கொண்டு காலம் விளங்கும். இந்தத் தலைமுறையில் இந்தப்பேறு தமிழினத்திற்குக் கிடைக்குமா? தமிழரில் யாருக்காவது கிடைக்குமா? ஏன்? காத்திருப்பானேன்? முயற்சியைத் தொடங்குவோம்! முடிவு எப்படியானாலும் ஆகட்டும்! இனிய செல்வ, சாதிகளை மறப்போம்! பண்பாட்டு மலை உச்சியில் ஏறுவோம்! நம்முடன் பிறந்த மானுடப் பரப்பைப் பார்ப்போம்! மனித சமுத்திரத்தில் சங்கமமாவோம்! எல்லாரும் ஒன்றென முரசு கொட்டுவோம்; இனிய செல்வ, அடுத்து எழுதுகின்றோம்!
இன்ப அன்பு
அடிகளார்