உள்ளடக்கத்துக்குச் செல்

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/தாய்மொழிவழிக் கல்வி-3

விக்கிமூலம் இலிருந்து

8. தாய்மொழிவழிக் கல்வி-3

இனிய தமிழ்ச் செல்வ,

திருவள்ளுவரின் கல்வி, "கற்பவை கற்க!” திருவள்ளுவரின் கேள்வி, "நல்லவை கேட்க!” திருவள்ளுவரின் அறிவு "உலகந்தழீஇய ஒட்பம்”. திருவள்ளுவரின் அறிவு ஒழுக்கம் 'உலகத்தோடு ஒட்ட ஒழுகுதல்’ திருவள்ளுவரின் வாழ்நிலை.

"எவ்வது உறைவது உலகம் உலகத்தோ(டு)
அவ்வது உறைவது அறிவு”

நாடு எதுவாயினும் அதுவே திருவள்ளுவரின் நாடு!

"யாதானும் நாடாமால் ஊராமல் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு”

இனிய தமிழ்ச் செல்வ! இந்தத் திருக்குறள்கள் நமது தமிழினத்தின் வாழ்க்கை நெறிகளாக மலர்ந்திருப்பின் இன்று, தென் கிழக்காசிய நாடுகளில் ஒரு தமிழர் கூட்டுக் குடியரசு நிலவும் வாய்ப்பிருந்திருக்கும். அந்த நல்லூழ் நமக்கு இல்லாமப் போய்விட்டது. அதற்கு வரலாறு பிழைசெய்து விடவில்லை. நாம் செய்த பிழையே காரணம். இனிமேலும் தொடர்ந்து பிழை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

இன்று, நம் மத்தியில் மொழிச் சிக்கல் பரவலாகப் பேசப்படுகிறது; இந்தி எதிர்ப்புணர்ச்சி காட்டப்படுகிறது. இவை சரியா? தவறா? என்று திருவள்ளுவர் பார்வையிலும் இன்றைய சூழ்நிலையை அனுசரித்தும் பார்ப்பது நமது கடமை அல்லவா?

இனிய தமிழ்ச் செல்வ! தமிழின் வளர்ச்சி வேறு! தமிழ் வளர்ந்தால் தமிழனும் வளர்வான்! தமிழன் வளர்ந்தால் தமிழும் வளரும்! ஆனால் இவையிரண்டும் உடன் நிகழ்வாக நிகழ வேண்டும். சில சமயங்களில் தமிழுக்குத் தொடர்பில்லாமல் தமிழன் வளர்வான். இது வரவேற்கத்தக்கதல்ல! இனிய தமிழ்ச் செல்வ! இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காண்பதற்கு முன்பு சில அடிப்படை உண்மைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். முதலாவது இன்று தமிழர்கள் உலகம் முழுதும் பரவி வாழ்கிறார்கள். உலக ஆட்சி பெறவில்லையே தவிர, உலகக் குடிமக்களாக வாழ்ந்து வருகின்றனர். செல்வ! உண்மை என்னவென்றால் நமது தமிழ் நாட்டில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கையை விட இந்தியாவின் பிறமாநிலங்களிலும், உலகின் பல்வேறு நாடுகளிலும் தமிழர்கள் வாழ்கிறார்கள். தமிழ் நாட்டில் வாழும் நமது எழுத்தும் பேச்சும் எடுக்கும் முடிவுகளும் உலகந்தழீஇ வாழும் தமிழ் மக்களுக்கு ஊறு விளைவித்து விடக் கூடாது. செல்வ, இரண்டாவதாக இன்றைய உலகம் சுருங்கி வருகிறது. உலக மானுடம் ஒன்றாகும் காலம் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. இந்தக் காலக் கட்டத்தில் நாம் தமிழனாகவும் இந்தியனாகவும் உலகக் குடிமகனாகவும் வாழ வேண்டியது வரலாற்றின் கட்டாயமாகும். அதுமட்டுமல்ல. அதுதான் அறிவு என்றும் திருவள்ளுவர் கூறுகிறார். இதைத்தான் திருவள்ளுவர் "உலகந் தழீஇயது ஒட்பம்” என்று கூறுகின்றார். சிறந்த மொழிப் பற்றுடைய இனத்தவர் உலகின் எத்தனை மொழிகளைக் கற்றாலும் தாய்மொழிப் பற்றில் சிறந்தே விளங்குவர். இன்றைய தமிழரிடத்தில் தமிழ்ப்பற்றே இல்லை! தமிழ் மூலம் பயில முன்வரமாட்டேன் என்கிறார்கள். தமிழில் அருச்சனை செய்ய முன்வருகின்றார்கள் இல்லை. ஏன்? இதழ்களைப் படிப்பதிலும் கொச்சைத் தமிழ் பரப்பும் தாளிகைகளைத் தானே விரும்பிப் படிக்கின்றனர். 1957-ம் ஆண்டு முதல் தமிழ் பயிற்று மொழி இயக்கத்தில் நமக்குத் தொடர்பு உண்டு. ஆனால், கலைப் பாடங்கள் மட்டுமே தமிழ் பயிற்று மொழித் திட்டத்தில் வந்தன. அறிவியல், கணிதம், தொழில்நுட்பப் பாடங்கள் தமிழ் மூலம் கற்கும் முயற்சியில் தமிழர்களுக்கு நாட்டம் இல்லை; அரசுக்கும் அக்கறை இல்லை. இன்று, தமிழ், தமிழ் நாட்டின் பல்கலைக் கழகங்களில் பயிற்று மொழியாகத் தடை இல்லை! அரசியல் சட்ட ரீதியாகக் கூட தமிழ் நாட்டில் தமிழே அனைத்துத் துறைகளிலும் ஆட்சி செய்தல் வேண்டும். ஆனால் இந்த இனிய பேறு, தமிழ்த் தாய்க்குக் கிடைக்கவில்லை. இனிய செல்வ, இன்று தமிழ் வளர்ச்சியின்மைக்குக் காரணம் தமிழர்களே தாம். இந்திய அரசியல் சட்டம் தடையாக இல்லை. இன்று தமிழ் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பது இந்தியல்ல; ஆங்கிலமேயாம். ஆங்கிலத்தை அகற்றி விட்டால் அந்த இடத்தில் இந்தி வந்து நுழைந்து விடும் என்று பயமுறுத்துகிறார்கள்! இந்தியை நடுவணரசிலிருந்து அகற்ற வேண்டாம். இந்தியை இந்தியர் அனைவரும் ஒருமொழியாகக் கற்பதைத் தடுக்க வேண்டாம். ஆங்கிலம் ஒருமொழியாகக் கற்பிக்கப் பெறுதல் வேண்டும். அவசியமும் கூட. ஆனால் தமிழ்நாட்டில் ஆங்கிலம் ஒரு மொழியாகக் கற்பிக்கப் பெறவில்லை என்பதறிக! ஆங்கிலம் பயிற்று மொழியாக விளங்குகிறது. அதனால் துறைதோறும் துறைதோறும் தமிழ் பயிற்று மொழியாவது தடைப்படுகிறது; தமிழரின் வளர்ச்சியும் தடைப்படுகிறது: ஆதலால் இன்று தமிழின் வளர்ச்சிக்குத் தடையாயிருக்கும் ஆங்கிலம் பயிற்று மொழியாயிருப்பதை அகற்றித் தமிழுக்கு அந்த இடத்தைத் தந்தாக வேண்டும். ‘கற்பவை கற்க! தமிழே கற்பிக்கும் மொழி; கற்கும் மொழி! தமிழ் வாயிலாகக் கற்போம்! ஆங்கிலம் மொழிப் பாடமாக மட்டுமே கற்பிக்கப் பெறுதல் வேண்டும். இது தொடர்பாக நிறைய எழுத வேண்டியிருக்கிறது. தொடர்ந்து எழுதுகின்றோம்.

இன்ப அன்பு

அடிகளார்