குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/பிறப்பால் இல்லை பிரிவினை

விக்கிமூலம் இலிருந்து

15. பிறப்பால் இல்லை பிரிவினை

இனிய தமிழ்ச் செல்வ!

ஆரியர்களும் ஆங்கிலேயர்களும் விதைத்த நச்சு விதைகள் கிளைத்துச் செடிகளாகி நச்சுக் கனிகளைத் தந்து கொண்டுள்ளன. ஆம்! சாதிமுறைகள் ஆரியம் தந்தவை. ஆரியர்கள், வருணம், கலாசாரம் என்றெல்லாம் பேசி மானுடத்தைப் பிரித்தனர். ஒரு பிரிவினர், இன்னொரு பிரிவினருக்கு இடையே எந்தச் சூழ்நிலையிலும் கலந்துவிடாத வண்ணம் இந்து மத விதிமுறைகளைக் கடுமையாக்கினர். இந்தப் பிரிவினைப் போக்கினையே ஆங்கில ஏகாதிபத்தியம் தனது ஆட்சிக்கு அரணாக்கிக் கொண்டது. இந்தப் பொல்லாத சாதித் தீமைகளைத் தமிழக மக்கள் கடந்த பல ஆயிரம் ஆண்டுகளாக எதிர்த்துப் போராடி வந்துள்ளனர். ஆனால் பயன்தான் கிடைக்கவில்லை. ஆம் செல்வ, இது முற்றிலும் உண்மை! "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற வள்ளுவர்வழி வெற்றி பெறவில்லை. ஆயினும் "ஒரு குலத்திற்கு ஒரு நீதி" என்று கூறும் மனுவாதி நூல்கள் வெற்றி பெற்று விட்டன.

ஆரியரும் ஆங்கிலேயரும் போட்ட பாட்டையிலேயே நமது நாட்டுத் தலைவர்களும் நடைபோட்டனர்; நடை போடுகின்றனர். மக்களின் மனப்போக்கை - உணர்ச்சிகளை (வெற்று உணர்ச்சிகளை) ஒட்டியே சென்று எளிதில் வெற்றிக் கனிகளைக் கொய்ய நினைக்கின்றனர். இதன் விளைவு நமது நாட்டில் இன்னமும் தீண்டாமை அகலவில்லை. ஏன்? நமது தலைமுறையில் அகலுமா என்பதே இன்றுள்ள பிரச்சனை. மருந்துக்குப் பழகிப்போன உடம்பு மருந்தின் பயனாகிய நோய் நீக்கத்தைத் தராது என்பர். அதுபோல சாதிகளிலேயே பழகிப்போன நமக்குச் சாதிகளை விடமுடியாத அளவுக்கு மூடத்தனம் வளர்ந்து விட்டது. மூடத்தனம் மட்டுமல்ல. முரட்டுதனமும் வளர்ந்து வருகிறது. இன்று எங்கு பார்த்தாலும் சாதிச் சங்கங்கள்! சாதிச் சண்டைகள்! முற்போக்குத் தன்மை வாய்ந்தவை என்று கூறிக்கொள்ளப்படுகின்ற கட்சிகளில்கூட சாதி தொடர்பான எண்ணங்கள் இடம் பெற்றுள்ளன. அவைகளும்கூட வழிவழியாகச் சாதிப் பெயரால் சமூக மேலாண்மையை வைத்துக் கொண்டுள்ள சமூகத்தினிடத்தில் தான் சங்கமித்திருக்கின்றன. பச்சையாகச் சாதியை தீண்டாமையைப் பின்பற்றுகின்ற - வளர்க்கின்ற மடங்களிடத்தில் அரசியல் தலைவர்களுக்குள்ள பாசம் அலாதியானது. காரணம் அவர்கள் பாடங்களிலிருந்து "ரஷிப்பவர்கள்" அல்லவா! .

இலக்கியத்துறையில் திருக்குறள் தோன்றி "பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று நெறி காட்டிய தமிழகத்தில் மீனாட்சிபுரம், புளியங்குடி, விழுப்புரம், தோப்பூர் என்று சாதிக் கலவரங்கள் நடந்த இடங்களைப் பட்டியல் போட வேண்டியிருக்கிறது. இன்று உடனடியாகச் "சாதி” என்ற புற்றுநோய்க்கு மருத்துவம் செய்யாவிடில் இது இரத்தப் புற்றாக மாறிவிடும்! எச்சரிக்கை!

சாதிகளைப் பற்றி எண்ணி நினைத்துப் பார்க்கக்கூட இந்த மக்களுக்கு வாய்ப்பளிக்கக் கூடாது. சாதீய அமைப்புகள், சங்கங்கள் தடை செய்யப்படவேண்டும்.

இந்த நாட்டில் பிறந்தவர்கள் அனைவரும் இந்த நாட்டு மக்கள் அனைவரும் அனைத்துரிமைகளுக்கும் உரியவர்கள் ஆயினும் கல்வியில், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்குச் சில தனிச் சலுகைகள் வழங்க வேண்டியது, தவிர்க்க இயலாதது. இதற்கு அளவுகோல் பிறந்த சாதியல்ல! பின் தங்கிய நிலையே என்பதனை உறுதியாக்க வேண்டும். இங்ங்ணமின்றி மீண்டும் மீண்டும் "சாதிகளை ஒழிப்போம்; வகுப்பு வாதங்களை முறியடிப்போம்” என்று கூறிக்கொண்டே சாதிகளை வளர்க்கும் முறைகளைப் பேணி வளர்ப்பது முற்றிலும் முறையான செயலன்று. பின் தங்கியவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேறுவதற்கு என்று ஏற்படுத்திய சலுகைகள், உதவிகள் நமது நல்லூழின்மையால் "சாதிகளைக் காப்பாற்றுபவைகளாக" மாறிவிட்டன. செல்வ! இனியும் பொறுத்தாற்ற என்ன இருக்கிறது? உடனடியாக சிந்தித்து,

"நன்றாற்ற லுள்ளும் தவறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை."

என்ற குறளை ஒரு நூறு தரம் சிந்தித்துச் செயற்படுதல் நன்று.
இன்ப அன்பு
அடிகளார்