குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/புறம் கூறல் தீது!

விக்கிமூலம் இலிருந்து

35. புறம் கூறல் தீது!

புறங் கூறல்-அதாவது ஒருவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றிய குற்றம் குறைகளைப் பேசுதல், மேலும் அவர் முன்னே முகமனாகப் பாராட்டுதல்; புகழ்தல்; அந்த நபரை அவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றிய பழிகளை மட்டும் கூறுதல் புறங்கூறுதலாகும்.

சிலர் புறங்கூறுதல் என்ற தீமையை, நன்மை கருதிச் சொல்வதாகக் கூறுவர். ஆனால் புறங்கூறித்தான் நன்மையைக் காப்பாற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. எல்லாரும் நேரிடையாக நன்மையை எடுத்துச் சொன்னால் மறுப்பார் யார்? அறம் சொல்லுவார்போல் நடித்துப் புறம் சொல்லுதல் தீயபழக்கம்.

சிலர் வாயிலிருந்து சொற்கள் வருவதில்லை. "எரியும் நெருப்புக் கனலே வீசுகிறது" என்று ஒரு பழமொழி உண்டு. நன்மையையே சொன்னாலும் புறத்தே சொல்லுதலை நன்மையென எடுத்துக்கொள்ள மாட்டார்கள். இதனால் பகையே வளரும், மானம்-அவமானச் சிக்கல்கள் தோன்றும். புறஞ்சொல்லுதல் ஒரு பயனையும் தராததால் புன்மை என்றார் திருவள்ளுவர். "குணங்கள் சொல்லியும் குற்றங்கள் பேசியும்” என்று திருமுறை கூறும்.

ஒருவர் இல்லாத இடத்தில் அவர்தம் நற்குணங்களைப் பற்றி மட்டுமே கூறவேண்டும். அவர் முன்னே குற்றங்களை எடுத்துக் கூறலாம். புறங்கூறுதலால் பிணக்கும் பகையும் வளர்ந்து பிரிவினைகள் உருவாகும். இதனால் புறம் பேசுதலில் ஒரு நன்மையும் இல்லை; தீமை மட்டுமே உண்டு.

குற்றங்களையே எண்ணிப் பேசுதலால் காலப் போக்கில் குற்றங்கள் நம் மீதே சாரும் என்பதையும் அறிக! குற்றங்களைப் பொறுத்தாற்றும் உணர்வோடு ஏற்றுக் கொண்டு பழகும் அனுபவம் இருந்தால் குற்றங்கள் தொடரா.

நல்லனவற்றை நேரில் கூறுக. புறங்கூறுதல் அளவிறந்த தீமை தரும். அதனால் 'புன்மை’ என்று ஏளனம் செய்யப் பெறுகிறது.

புறங்கூறும் பழக்கமுடையவர்களுக்கு மற்றவர்களின் குணங்களும் அருமைப்பாடும் தெரியாது, குற்றங்குறைகளையே காண்பர்; விமர்சிப்பர்; ஏசுவர்; பழிதூற்றுவர். இதனால் பகை வளரும். ஆதலால் புறங்கூறுதல் தீது. நன்மையை நோக்கிக்கூடப் புறங்கூறக் கூடாது.

"அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்."

(185)