குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/பொறுமையின் இலக்கணம்

விக்கிமூலம் இலிருந்து

70. பொறுமையின் இலக்கணம்

இனிய செல்வ,

திருக்குறள் ஒரு வாழ்க்கை நூல். திருக்குறள் வாழ்க்கை நூலாதலே வேண்டாம் என்று பலரும் பேசுகின்றனர்; எழுதுகின்றனர். திருக்குறள் வாழ்க்கை நூலாதல் இயலுமா? அதுவும் இந்த நூற்றாண்டில் இயலுமா?

இனிய செல்வ, ஆய்வு செய்ய வேண்டும். போதிக்கும் ஒழுக்க நெறி உயர்ந்ததாக இருக்கலாம். மிக உயர்ந்தவர்கள் கூட ஒழுக்க நெறிகளைப்பற்றி உபதேசிக்கலாம். ஆனால், நடைமுறை எப்படி இருக்கிறது? ஏன் இந்த நிலை? திருவள்ளுவர் மிக மிக உயர்ந்த நிலையில் இருந்து கொண்டு மக்கள் சமூகத்தைப் புரிந்துகொள்ளாமல் ஒழுக்க நெறிகளை உபதேசித்துள்ளாரா? இந்த வினாக்கள் அண்மைக் காலமாக அடிக்கடி எழுகின்றன!

திருக்குறள் ஒரு இலட்சிய நூலே! நடைமுறைக்கிசைந்த வாழ்க்கை நூலல்ல! இனிய செல்வ, நீ சொல்வது புரிகிறது! ஆயினும் மக்களின் நிலைக் கேற்பவும் அறம் கூறமுடியாது; ஒழுக்க நெறி கூறமுடியாது. ஆயினும் பள்ளத்தில் கிடப்பவரை எழுப்பிக் கொணர வேண்டாமா? படிமுறை வளர்ச்சிதான் சாத்தியம்! சுத்த நீதியும் மக்கள் மன்றத்தில் எடுபடாது. திருவள்ளுவருக்கு இது தெரியும்.

"இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்”

(314)

என்ற திருக்குறளில் பழி வாங்கும் உணர்வுடைய மனிதர்களுடன் திருவள்ளுவர் கூடவே போகிறார் என்பதை "ஒறுத்தல்" "அவர்நாண" என்ற சொற்கள் புலப்படுத்துகின்றன. ஆயினும் பல்வேறு திருக்குறளைப் பார்க்கும்போது திருக்குறள் வாழ்க்கை நூலாதல் இயலுமா என்ற வினா எழும்பாமல் இருக்காது.

இனிய செல்வ, இன்றைய நமது நாட்டின் போக்கில் யாருக்காவது கோபம் வராமல் இருக்குமா? எங்குப் பார்த்தாலும் வன்முறை! இழிவான பேச்சு! பழிதூற்றல்! உப்புக்கும் பெறாத செய்திகளுக்கும் போராட்டங்கள்! அறமல்லாதவற்றிற்கும்கூட, "கூட்டம் கூடி”ப் போராடுகின்றனர், சுயநலத்தின் அடிப்படையில்! இன்று யாருக்கும் வேலை செய்ய விருப்பமில்லை! இந்த நெறியல்லா நெறி வழிச் செல்லும் மக்கள்மீது நமக்குக் கோபம் வரவேண்டாமா? இனிய செல்வ, திருவள்ளுவர் என்ன அவர் சொன்னபடி வாழ்ந்தனரா? "செத்தாருள் வைக்கப்படும்” என்று கூறியல்லவா திட்டுகிறார்!

இனிய செல்வ, ஆழமாகச் சிந்திக்க வேண்டும். சிந்திக்க விருப்பமே! ஆனாலும், சூழ்நிலை பாதிக்கிறது! பொறுத்தால் கோழையாகி விடுவோமோ என்ற அச்சம் மேலிடுகிறது! நாளெல்லாம் கொலை, பொழுதெல்லாம் கொள்ளை என்ற நிலை நாட்டில்! நிர்வாணமான சுயநலம் அரங்கேறுகிறது; ஆத்தான மண்டபம் ஏறுகிறது. இந்தச் சூழ்நிலையில் பொறையுடைமைப் பண்டை ஏற்க முடியுமா? பொறையுடைமை மேற்கொண்டு ஒழுக இயலுமா? இனிய செல்வ, இந்தப் போராட்டம் ஆண்டாண்டு காலமாக இருந்து வருகிறது. ஆயினும் திருவள்ளுவரின் சொல்லாட்சி முறை, பொருள் வைப்பு முறை நம்மைச் சிந்திக்க வைக்கத் துரண்டுகிறது.

ஒருவர் நம்மைப் பழி தூற்றுகிறார்! இல்லாதன, பொல்லாதனவெல்லாம் கூறுகிறார்! நமக்கே கேட்டுக் கொண்டிருக்க இயலாத நிலையில் ஆத்திரம் மேலிடுகிறது! இனிய செல்வ, என்ன செய்வது? திருவள்ளுவரின் ஆலோசனை பொறுத்துக் கொள்! துறவியைப் போலப் பொறுத்துக் கொள் என்பது. ஏன்? உன்னைப் பழிதூற்றுவோர் யார்? நல்லவர்கள் அல்ல; பிழைப்பவர்கள்; தகுதியில்லாதவர்கள்! அவர்கள் பேச்சுக்குக் கவலைப்படுவானேன்? கதிரவன் நாய் குரைப்புக்காக ஞாலம் சுற்றி வருவதைத் தவிர்க்கிறதா? அல்லது விரைந்தோடும் ஊர்தி, குரைத்துக்கொண்டு வரும் நாயைக் கண்டு நின்று விடுகிறதா? ஒன்றும் நடப்பதில்லை! நெறியின் நீங்கியோர், நன்மையை நன்மை என்று அறியாதார், நன்று தீது தேர்ந்து தெளியும் அறிவிலாதார் - இவர்கள் மூர்க்கர்கள்! சொந்த புத்தியும் இல்லாதவர்கள், சொற்புத்தியும் ஏற்றுக்கொள்ளாதவர்கள். அவர்கள் பேதையர்; கொண்டதை விடார்! அவர்களிடம் சொல்லும் எதையும் கேளார். கல்லில் முளையடித்த முயற்சி போல் பாழே. இத்தகுதியோர் வார்த்தைகளுக்கு அஞ்சுவதில் பயன் என்ன? ஒன்றும் இல்லை. மற்றவர் வருத்தத்தில் துன்பத்தில் மகிழ்வது தீயவர்களுக்குப் பொழுதுபோக்கு!

இனிய செல்வ, இவர்களுடைய இன்னாத சொற்களைப்பற்றி அலட்டிக் கொண்டாலும் பயன் இல்லை. என்பதனாலேயே,

"துறந்தாரின் தூய்மை யுடையர் இறந்தார்வாய்
இன்னாச் சொல் நோற்கிற் பவர்"

(159)

என்றார்.

துறவிகளிடம்கூட சாபமிடுதல் போன்ற துன்பம் விளைவிக்கும் செயல்கள் உண்டு. அதனால், துறந்தாரின் தூய்மையுடையார் என்றார்.

இனிய செல்வ, திருக்குறள் கூறும் பொறையுடைமை எண்ணத்தக்கது. இன்னாதன கூறுவார் மாட்டுப் பொறையுடைமை வேண்டும். அதேபோழ்து நமது வாழ்வை ஆக்கிக்கொள்ள வேண்டும். வாழ்க்கையைப் பொருளுடையதாக்குக நிலம் போல என்றார்.

"அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை”

(151)
ஆதலால், பொறையுடைமை என்பது அழுவதும் அல்ல; அழிவதும் அல்ல. பயனற்ற சின்ன மனிதரிடம் சண்டை போடாதே! ஒதுங்கி வாழ்க! ஆற்றலுடன் வாழ்க! சீறுவோர்ச் சீறுக! ரெளத்திரம் பழகுக! இனிய செல்வ, இது ஒரு ஆலோசனை!
இன்ப அன்பு
அடிகளார்