குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/வளர்ச்சி அல்ல; வீக்கம்!
இனிய செல்வ,
நமது நாடு நாட்டின் பொருளாதாரம் எங்குப் போய்க் கொண்டிருக்கிறது? வானளாவப் புகழப் பெறும் புதிய பொருளாதாரக் கொள்கை என்ன? இதன் விளைவு என்ன? திருக்குறள் அரசுக்குக் கூறிய பொருளாதாரம் என்ன? இனிய செல்வ, திருக்குறள் அரசுக்குரிய பொருளாதாரம்.
"இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு"
என்பது. அதாவது, அரசின் செலவினங்கள் தெருகி வளர்வது இயற்கை. அதற்கேற்ப அரசின் வருவாய்த் துறையும் அகன்று-கொண்டே இருத்தல் வேண்டும்.
அங்ஙனம் அகலுதலும்கூடப் புதிய, புதிய வாயில்களின் வழியாக அகலுதல் வேண்டும். அதுவே இயற்றல். இனிய செல்வ, புதிய புதிய வாயில்களில் செல்வத்தை ஈட்டுதல் - சம்பாதித்தல் வேண்டும். ஈட்டிய செல்வத்தை - அச்செல்வம் மூலதன வடிவம் பெறும் வரை காத்தல் வேண்டும். அரசுக்குக் கருவூலம் இன்றியமையாதது. அரசு வரவுகளைச் சில்லறையாக உடனுக்குடன் செலவு செய்தல் கூடாது. பொதுவாக வரவுகளைத் தொகுக்காமல் சில்லறையாகச் செலவழிப்பது செல்வ வளர்ச்சிக்குத் துணை செய்யாது. "சில்லறைச்செலவு” செல்வச் சீரழிவேயாம். அதுபோலவே அரசுகள் செலவு. வாயிற் கதவைத் தட்டிய பின் செல்வத்தைத் தேடுவதும் ஆகாது. ஏன்? அரசுக்கு மட்டும் அல்ல. தனி நபர்களுக்கும் கூடச் செலவு வந்தபின் செல்வம் தேடினால் வரவு குறையும்; உள்ள நிலை பாதிக்கும்; அமைதி குறையும். இனிய செல்வ, செல்வத்தை ஈட்டித் தொகுத்துக் காத்த பிறகு அச் செல்வத்திற்குரிய செலவுத் திட்டம் தயாரித்துச் செலவழிக்க வேண்டும்.
இனிய செல்வ, அரசு பல்வேறு பொறுப்புக்கள் உடையது. ஆதலால் பல்வேறு பொறுப்புக்களை நிறைவேற்றும் வகையில் செலவுக்குத் திட்டமிடுதல் வேண்டும். அரசின் பொறுப்பு பெரியது ஆதலால் செலவில் ஆழ்ந்த சிந்தனையும் திட்டமிடும் பாங்கும் தேவை. இன்றைய அரசின் பொருளாதாரக் கொள்கை திருக்குறட் பொருளாதாரத்துடன் ஒத்துப்போகிறதா? இல்லை! இல்லை! அர்சு தனது வருவாய்க்காகத் தனது மக்களைக் குடிகாரனாக்குகிறது; அத்திட்டத்தை நம்பி வாழும் ஏமாளியாக்கப் பரிசுச் சீட்டு விற்கிறது. இவை அரசின் கடமையொடு சார்ந்த வரவு வாயில்கள் அல்ல. "நல்நடை நல்குதல் வேந்தர்க்குக் கடனே.” என்பதற்கு, இன்றைய அரசுகளின் நிதிநிலை மூலதனத் திரட்சியைப் பெறுவதில்லை. இஃது ஒரு பெரிய குறை.
அடுத்து, நாட்டின் தேவைக்கு ஏற்ப அரசு பொருள் திரட்டுவதில்லை. அதனால் பற்றாக்குறை விழுகிறது, பற்றாக் குறை மட்டுமா? அரசின் நிலையான செலவினங்களுக்கும் போதிய நிதி ஆதாரங்களைத் தேடாமையால் அரசின் பல துறைகளில் பணி இடங்கள் நிரப்பப்படாமலும் போதிய வசதிகள் இல்லாமலும் காலந்தள்ளப்படுகிறது. குறிப்பாகக் கல்வித் துறையைக் கூறலாம். அரசுகள் திட்டக்குழுக்கள் வைத்துள்ளன. ஆயினும், வீண் செலவுகளைத் தவிர்த்த பாடில்லை. குடியரசுகள் இராஜரீக அரசுகளாக மாறி வருகின்றன, பொதுத்துறைகளில் ஒரு சில இழப்புக்கள் தாம்! ஏன் இழப்பு? இனிய செல்வ! பொதுத்துறை, அரசியல்வாதிகள் புகுந்து விளையாடும் இடம்! நிர்வாகத் தலையீடு! அதனால் இழப்பு! பொதுத்துறையை இழப்பு என்று காரணம் கூறித் தனியார் உடைமையாக்கினால் என்னாகும்! எல்லாம் எந்திர மயமாகும். வேலையாட்கள் குறைவர்! அதனால், வேலையில்லாத் திண்டாட்டம் கூடும்! அரசின் வருவாய் குறையும்! மக்கள் நலப் பணிகள் பாதிக்கும். இதை யார் உணர்கிறார்கள்? இனிய செல்வ, புதிய பொருளாதாரக் கொள்கை மூலம் பன்னாட்டு மூலதனம் இந்தியாவுக்கு வரும். இதனால் இந்தியாவில் பணம் புழங்கும். இந்தியாவில் இந்தியருக்குப் புதிய சொத்து உருவாகுமா? நமது நாடு தன்னிறைவு அடையுமா? அந்நிய மூலதனம் இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பாதுகாப்பா? இவையெல்லாம் எண்ணத்தக்கன. சிந்திக்கத்தக்கன. இனிய செல்வ, புதிய பொருளாதாரக் கொள்கை மூலம் வரவு-செலவு உயர்ந்து காட்டும் - உண்மை. ஆனால், இது வளர்ச்சியல்ல! வீக்கம்! தனியுடைமை ஊக்கப்படுத்தப்படுவதன் மூலம் கள்ளப் பணம் பெருகி வளரும். அரசுடன் முதலாளிகள் போராடுவர். அரசைப் பலவீனப்படுத்துவர், இவையெல்லாம் விரும்பத் தக்கனவா? இனிய செல்வ, சிந்தனை செய்க! இந்தியப் பொருளாதார வாயில்கள் இன்னமும் முழுமையாகப் பயன்படுத்தப் பெறவில்லை! ஏராளமான செல்வாதாரங்கள், செல்வம் எடுக்கப் பயன்படாமலேயே அழிகின்றன. இவற்றில் நிலம் முதன்மையானது, நமது நாட்டில் தரிசு நிலம் பல லட்சக் கணக்கான ஏக்கர்கள் உள்ளன, நாட்டில் நீர் வளம் முழுதும் பயன்படுத்தப்படவில்லை; ஏன்? மனித சக்தியைக் கூட பூரணமாகப் பயன்படுத்தவில்லை. எங்குப் பார்த்தாலும் மக்கள் கூட்டம். கடை வீதிகளில் நின்றும் இருந்தும் பேசியே பொழுது போக்குகிறார்கள். ஏன்? பகலிலும் இரவிலும் எப்போதும் திரைப்படம் பார்க்க இந்தியாவில் தான் முடியும்! தமிழ்நாட்டில் தான் முடியும்! இனிய செல்வ வேலைக்கு ஆள் இல்லை! ஆளுக்கும் வேலை இல்லை! இதுதான் இன்றைய இந்தியா; வேலைகள் நிறைய உள்ளன, தரமான வேலைக்காரர்கள் கிடைப்பதில்லை. அர்ப்பணிப்பு உணர்வுடன் பயன்தரத்தக்க வகையில் வேலைகளைச் செய்வதில்லை, அதேநேரத்தில் ஏராளமான படித்த இளைஞர்களுக்கு வேலையில்லை என்று காத்திருக்கிறார்கள்! இவையிரண்டும் உண்மை. இனிய செல்வ, இந்தியா வளர வேண்டுமாயின் நமது பொருளாதார அமைப்பு திருக்குறள் நெறியில் அமைய வேண்டும். இனிய செல்வ, நாட்டின் நலன் கருதியும், அடுத்த தலைமுறையின் நலன் கருதியும் வரவு செலவு திட்டமிடப்படுதல் வேண்டும், தேர்தல் வெற்றி கருதிய வரவு செலவுத் திட்டம் நாட்டின் நலனை முற்றாகக் காத்தல் இயலாது. இனிய! அடுத்த கடிதத்தில் மேலும் எழுத எண்ணம்!இன்ப அன்பு
அடிகளார்