குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4/திருக்குறள் வாழ்க்கைச் செயல்முறைக் குறிப்புகள்

விக்கிமூலம் இலிருந்து

1
திருக்குறள் வாழ்க்கைச்
செயல்முறைக் குறிப்புகள்

1. கடவுள் வாழ்த்து

திருக்குறள், கடவுளை நம்பித் தொழுதலை ஏற்றுக் கொள்கிறது. திருக்குறள் நெறியில் கடவுள் வழிபாட்டுக்கு உருவம் இன்றியமையாததன்று; பெயர் இன்றியமையாத தன்று. உருவமாகிய பற்றுக் கோடின்றிச் சிந்திக்க இயலாதார் உயிரினங்களைத் தாங்கி யருளும் திருவடிகளை மட்டும் வைத்துக் கொள்ளலாம். (திருப்பெருந்துறையில் திருவடி வழிபாடு இருப்பது அறிக) வழிபடுவோர்க்குச் சுற்றுப்புறச் சூழ்நிலைத் தூய்மை இன்றியமையாதது. காற்று மண்டலத் தூய்மைக்கும், இனிய சூழ் நிலையைப் படைக்கவும் நறுமணப் புகையைப் பயன்படுத்தலாம். வேறு எப்பொருளும் - படையல் பொருள்கள் உட்படத் தேவையில்லை. காலையில் கதிரவன் எழும் நேரமும் மாலையில், கதிரவன் படும் நேரமும் ஏற்றன. இயலாதார் காலையில் எழுந்தவுடனும், இரவில் படுக்கப் போகும் முன்னும் செய்யலாம். ஒருவகையில் பின் குறிப்பிட்டுள்ள நேரம் அதிக நன்மை தரும.

திருக்குறள் வழிபாட்டின் பயன்கள் நான்கு.

1. நெஞ்சத்தில் இறைவனை இருக்கச் செய்து நினைத்தல்; சிந்தித்தல்.

2. இறைவனைத் தலை தாழ்த்தி வணங்குதல்.

3. இறைவன் புகழ் கூறுதல்.

4. விருப்பு, வெறுப்பின்றிப் பொறிகளில் தூய்மையுடன் இறை நெறியில் வாழ்தல்.

பொறிகளில் தூய்மை என்பது நல்லனவும் உரிமையுடையனவும், இன்றியமையாதனவுமே. விரும்புதல், துய்த்தல்.

பொறிகளின் இயல்பு மற்றவர்க்கு இனிமையாயமைத்தல்.

இறைவனைச் சிந்தித்தல் (தியானித்தல்) தனக்குவமையில்லாதவனாகவும், எண்குணத்தானாக இருப்பவனும் என் மனத்தின்கண் எழுந்தருளி அருளுபவனும், எல்லாப் புகழையும் தனக்கேயுடையவனுமாகிய இறைவனுக்குப் போற்றி! போற்றி!

2. வான் சிறப்பு

இறைவனின் அருளிப் பாடாக நினைந்து போற்றத்தக்க இயற்கை நிகழ்வு வான்மழை, ஆதலால் வான்மழை போற்றுதல் வேண்டும். இங்குப் போற்றுதல் என்பது, தூய்மையாகப் பாதுகாத்துப் பேணிப் பயன்படுத்துதல்.

வாழ்க்கைக்குத் தண்ணீர் இன்றியமையாதது. ஆதலால், மழைத்தண்ணீரைத் தேக்கிப் பயன்படுத்த வேண்டும். தண்ணீர் ஆளுமை (நிர்வாகம்) இன்றியமையாதது. தண்ணீரை வீணடிக்கக் கூடாது. தண்ணீரைக் கலப்படம் ஏற்படாமலும், தூய்மை கெடாமலும் பாதுகாக்கவேண்டும்.

வான்மழை சுரத்தலுக்கு உதவியாகக் காடுகளைப் பேணி வளர்க்க வேண்டும். ஒருவர் தம் வாழ்நாளில் ஆண்டு ஒன்றுக்கு ஒரு மரம் வைத்தால்கூட நமது நாடு சோலையாக மாறிவிடும். ஆதலால், திருக்குறள் நெறி நிற்போர் தாம் பிறந்த நாள் நினைவாக ஆண்டுதோறும் மரம் நடுதல் நல்லது.

1. மழைத் தண்ணீரைத் தேக்கிப் பாதுகாத்தல்.

2. தண்ணீரை வீணடிக்காமல் உரியவாறு பயன் படுத்துதல்.

3. தண்ணீரின் தூய்மை கெடாமல் பாதுகாத்தல்.

4. மழைவளம் காணக் காடுவளம் காணல்.

ஆகியன வான்மழையைச் சிறப்பிக்கும் நெறி முறைகள்.

3. நீத்தார் வழிபாடு

“உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு” என்பர். வாழ்க்கையில் குணமென்னும் குன்றேறி நின்று விளங்குபவர்கள் உயர்ந்தோர். இவர்களே நீத்தார். நீத்தார் பெருமைகளைப் பாராட்டி அவர்தம் நெறியில் நிற்றல்.

1. இதுதான் உலகியல் என்று கருதிப் போற்றும் பொருள் முதலியவற்றைப் பற்றுக்கோடாகக் கொண்டொழுகும் ஒழுக்கத்தை விட்டவர்களின் பெருமை உயர்ந்தது.

2. புலன்கள், பொறிகளின்மீது தமது அறிவாட்சியைச் செலுத்தி முறையாக வைத்திருப்பவர்கள்.

3. உலகியல் வாழ்க்கையின் பகுதிகளாகிய கடவுள், உயிர், நிலம், நீர், தீ, வளி, வெளி இவற்றை நுகரும் பொறிகள், பொறிகளுக்குத் துணை நிற்கும் அறிகருவிகள், மனம், அறிவு (புத்தி), நடைமுறை (சித்தம்), அகங்காரம், செய்கருவிகள் ஆகியவற்றின் இயல்பறிந்து மெய்ப் பொருள்களை (தத்துவங்களை)ச் சிந்தனையால் நாள் தோறும் தூய்மை செய்து வாழ்க்கைக்கு உரியவாறு பயன்படுத்திக் கொள்ளலில் வெற்றி பெற்றவர்கள்.

4. குற்றங்குறைகளைக் கடந்து குணக் குன்றாக விளங்குபவர்கள்.

5. செயற்கரிய செயல்களைச் செய்யும் ஆற்றல் பெற்றவர்கள்.

6. எல்லா உயிர்களிடத்தும் செந்தண்மை கொண்டொழுகும் அருளாளர்கள்.

இவர்களைக் காணின் போற்றுதல்; அவர் தம்மைப் பேணுதல்; அவர் அருளும் மறை மொழிகளைக் கேட்டு அவ்வழி நடத்தல்.

குறிப்பு: இதனால் தோற்றத்தால் மட்டும் துறவிகளாக (சந்நியாசிகளாக) இருப்பவர் போற்றத்தக்கவர்கள் அல்லர் என்பது வெளிப்படை

4. அறம்

திருக்குறளில், அறம் என்பது ஒன்றேயாம். அதாவது "மனஙீகூஷிதுக்கண் மாசிலனாக வாழ்தலே அறம்”. இந்த அறத்தை வாழ்க்கையிற் பெறத் துணையாக அமையும் ஒழுக்கங்களையும், பெற்ற தூய்மையைப் பேணிப் பாதுகாத்தலுக்குப் பயன்படும் ஒழுக்கங்களையும் அறம் என்று ஏற்பது உலகியல் வழக்கு.

1. மனத் தூய்மையாகிய அறம் கெடாத வழியில் செல்வம் சேர்க்கலாம்; வீட்டின்பத்தையும் பெறலாம். அற வாழ்க்கையின் மூலம் பெறும் செல்வமே உயிர்க்குத் துணை.

2. சிந்தனை, செயல் ஆகியவற்றால் வாழ்க்கையின் துறைதோறும் இயன்றவாறெல்லாம் அறநெறிபேணல். 3. மனத்தின்கண் மாசின்றி வாழ்தலே அறம். மனத்தின்கண் மாசுகொண்டு செய்யும் செயல்கள் ஆரவாரத் தன்மையுடையன.

4. மனத் தூய்மைக்குக் கேடு செய்யும் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் நான்கையும் தாம் விளக்கி வாழ்தலே அறம். இத்தீமைகள் மற்றவர்களிடம் தோன்றாதவாறு, தாம் முறையாக வாழ்தலும் அறம்.

(அ) அழுக்காறு: அழுக்கு வழி, அதாவது மற்றவர்கள் செல்வம், புகழ் முதலியவற்றைப் பெற்றிருப்பதையும் மகிழ்ந்து வாழ்வதையும் பொறுத்துக் கொள்ள முடியாது தவித்தல். எந்த வகையிலும் அழுக்காறு, ஒன்றைப் பெறத் தூண்டாது; ஊக்குவிக்காது; வழி நடத்தாது. அழுக்காறு, மற்றவர்கள் பெற்றிருப்பதற்குக் குற்றம் கண்டு பிடிக்கவும், அதனை அவர்கள் இழந்து அல்லற்படுமாறு செய்யவுமே விரும்பும். ஆதலால், அழுக்காறு கொள்ளுதல் கூடாது.

அழுக்காறு என்ற கொடிய தீமையை விலக்க ஒரே வழி மற்றவர்கள் வாழ உரிமையுடையவர்கள், அவர்கள் வாழ வேண்டும் என்று நினைத்தால், மற்றவர்கள் வாழத் தம் வாழ்க்கையின் தேவைகளைக் கூட விட்டுக்கொடுத்தல்; குறிப்பாகச் சொன்னால் வாழ்தலைவிட வாழ்வித்தலில் ஆர்வம் காட்டுதல்.

(ஆ) அவா: வாழ்க்கைக்கு இன்றியமையாதன அல்லாத வற்றையும் விரும்புதல். எதையும் மிகையாக விரும்புதல் கூடாது.

(இ) வெகுளி: விரும்பும் ஒன்றைப் பெறாதபோது வரும் சினம் (கோபம்). இது கூடவே கூடாது.

(ஈ) இன்னாச்சொல்: சினத்தால் (கோபத்தால்) கடுஞ் சொற்களைக் கூறுதல். இது கூடாது.

5. அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் ஆகியவற்றை வாயிலாகக் கொண்டே மனத்துரய்மை கெடுகிறது; அறம் கெடுகிறது. இவை வளர்ச்சியடையாதவர்களை இழுத்து எறியும் ஆற்றலுடையன. இவற்றின் இழுப்பில் செல்லாது அறநெறி பேணுதல் கடமை. தாம் எளிமையாக வாழ்தல், மற்றவர்களுக்கு வெகுளி உண்டாகும்படி நடவாதிருத்தல், மேற்கொண்டு அறவாழ்க்கையை உறுதி செய்க.

6. மனத் தூய்மையாகிய அறநெறி பேணுதல் ஒவ்வொரு நொடியிலும் செய்யத்தக்கது. இதற்குக் காலக்கெடு வைக்க வேண்டாம்.

7. மனத் தூய்மையைத் தரத்தக்க - பேணத்தக்க அறச் செயல்களை இயன்றவாறெல்லாம் வாயில்களை வலிய அமைத்துக்கொண்டு செய்க. அங்ஙனம் செய்யும் அறச்செயல்களை வாழ்க்கையில் துறை தோறும் மேற்கொள்க. அறம் என்றும்-எப்போதும் பயன்படும்.

8. மனத்தூய்மை கெடாதிருக்கத் துன்புறுவார் துன்பம் அறத்தின் வழியது என்று நினைத்துத் துன்பம் துடைத்தலைத் தவிர்க்க வேண்டும்.

9. வாழ்க்கையின் ஒவ்வொரு முயற்சியையும் மேற்கொள்ளும்போது அம்முயற்சிகளை, மனத்தூய்மை கெடாதவாறும், மற்றவர் வாழ்க்கைக்குத் துன்பம் செய்யாதவாறும், நன்மையாக அமையுமாறும் பார்த்துக் கொண்டால் அறவாழ்க்கை எளிது.

10. உயிர் நலத்திற்கு அறமே துணை செய்யும். அறமே இப்பிறப்பு வாழ்க்கைக்குரிய செல்வத்தையும், வீடு பேற்றினையும் தரும்.

(அறவழி வந்த பொருள் வீட்டின்பத்துக்கும் துணை செய்யும்).
5. இல்வாழ்க்கை

மனத்தூய்மையே அறம். மனத்தூய்மை, அன்பு செய்தல்; இன்புறுத்தல், வாழ்க்கையின் வாயிலாக அடையக் கூடியது. மேலும், மனத்தூய்மை உழைத்தல் வழியும் அடையலாம். இல்வாழ்க்கைக்குப் பொருள் இன்றியையாதது. இல்லற வாழ்க்கைக்குப் பொருள் செய்ய வேண்டியிருப்பதால் உழைத்தலைக் கட்டாயமாக்குதலால் அறத்தினைச் செய்தலுக்கு இல்வாழ்க்கை சிறப்புடைய முதன்மையான களம்.

‘இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.’

41

வாழ்க்கையின் நடுப்பகுதி இல்வாழ்க்கையே. இல்வாழ்க்கையில் பொருளியல் வாழ்க்கை தற்சார்புடையது. அதாவது இல்வாழ்க்கை வாழும் ஒவ்வொருவரும் பொருள் ஈட்டவேண்டும். (1) குமுகாயத்தில் வாழ்க்கையின் முதற்பகுதியாகிய கல்விகற்கும் பருவம் (2) இல்வாழ்க்கையில் முறையே வாழ்ந்து சிறந்தது பயிற்றலாகிய முதுமைக்காலை அந்தண வாழ்க்கையை மேற்கொண்டார். (3) பொருளியற்ற இயலாத கடமைகளையுடையவர்கள், ஆகிய இவர்களைப் பேணுதலும், இவர்தம் நெறிக்குத் துணை நிற்றலும் வேண்டும்.

1. கல்வி கற்கும் பருவத்தினர் ஊண், உடை இன்னபிற வாழ்க்கைத் தேவைகளுக்குக் கவலையுறாமல், கல்வி கற்கும்படி செய்தல்;

2. கல்வி கற்பதற்குரிய ஏந்துகள் (வசதிகள்) அமைத்துத்தருதல்;

3. சிறந்தது பயிற்றும் தவத்தினருக்கு ஊண், உடைகள் வழங்குதல்;

4. அந்தணர் வாழ்க்கையை மேற்கொண்டவர்களுக்கு ஊண், உடைகள் வழங்கி, அவர் தம் நெறியில் நின்றொழுகத் துணை நிற்றல்.

இதனால் வளரும் தலைமுறை கல்வி, அறிவு நலம் பெறும். மூத்தோர் உடல், உணர்வு வருந்தாமல் அமைதியாக வாழ்வதின் வாயிலாக நற்சிந்தனையாளர்களாகித் தவத்தால் வையகத்திற்கு இன்ப வாழ்க்கையையும் அவர்தம் மெய்யறிவால் (ஞானத்தால்) உயர்ந்த நூல்களையும் அருளிச் செய்வர். இத்தகு அறிஞர்கள்-மெய்யறிவாளர்களால் செய்யப்பெற்றவை அறநூல்கள். குமுகாயப் பொது அறம் தழைக்க நோற்கும் அந்தணர்கள் வாயிலாகக் குமுகாயம் இணக்கமும் மேம்பாடும் அடையும்.

‘துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.’

42

இல்வாழ்க்கை, கடமைகளுடையன. கடமைகளும், பொறுப்புகளும் இல்வாழ்க்கையின் தலைவனை, அறிவறிந்த ஆள்வினையாளனாக, பொருள்கள் 'பல படைத்துள்ளவனாக, ஒப்புரவு நெறிமேற் கொண்டொழுகுதல் வழி அவனை அற வாழ்க்கை மேற்கொண்டவனாக மாற்றி வளர்க்கிறது. கடமைகளும் பொறுப்புகளும் சுமைகள் அல்ல. மாந்தனை வளர்க்கும் வாயில்கள்!

1. ஏதாவது ஒரு காரணத்தால், உரியவர்களால் ஏற்றுக் கொள்ளப் பெறாது ஒதுக்கப்பட்டவர்களைப் பாதுகாத்தல்.

வாழ்க்கை, அகநிலை உணர்வுகளால் ஆயது. இஃது எல்லாருக்கும் ஒரே தன்மையதாக (மாதிரியாக) இயல்பாக அமைந்துவிடாது. இவ்வழி, குமுகாயத்தில் ஏற்படும் பிழைகள் ஏராளம், தந்தை-மகன் பிரிவு, கணவன்-மனைவி பிரிவு கூட வந்துவிடுகின்றன. இங்ஙணம் உரிமைச் சுற்றமுடையோரால் துறக்கப் பெற்வர்கள் வாழத் துணை செய்தல். (அ) 1. இளைஞராயின் கல்வி கற்கத் துணை செய்தல்; அவர்கள் தாமே தம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளத் துணை செய்தல்.

2. தொழில் செய்யும் திறமுடையாருக்குத் தொழில் அமைத்துக் கொடுத்தல்.

3. தொழில் செய்யும் அகவையும், ஆற்றலும் இல்லாதாருக்கு ஊணும் உடையும் மருந்தும் முதலியன வழங்கிப் பாதுகாத்தல்.

(ஆ) உலகியலில் துய்க்கும் பொருள்கள் பலப்பல. இவற்றுள் தாம் ஒன்றைத் துய்த்து மகிழ்ந்து வாழும்பொழுது அவற்றைத் துய்க்கும் வாய்ப்பில்லாதவர்களுக்குத் துய்க்கும் வாய்ப்புக்களைப் படைத்துத் தருதல்.

இப்பணி உதவி, ஈதல், ஒப்புரவு முதலிய நெறிகளால் மட்டுமின்றி. “எல்லாருக்கும் எல்லாம்” என்ற ஒப்பற்ற குமுகாயம் அமைந்தாலே “துவ்வாதவர்கள்” இல்லாமற் போவர் என்பதும் கொள்ளத்தக்கது.

அதாவது, எந்த ஒன்றையும் தாம் மட்டுமே துய்க்காது மற்றவர்களுடன் கூடிக் கலந்து துய்த்தல். இதனால், அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் முதலிய குற்றங்கள் தோன்றா.

இ) துய்த்தற்கு இயலாத வறுமை வாழ்க்கையில் இருப்பவர்களுக்குத் துணைசெய்ய, “எல்லாருக்கும் எல்லாம்” என்ற குமுகாய அமைப்பை அடையக் கூட்டுறவின் வழி தொழிற்கழகங்களை நிறுவிப் பணிசெய்தல்.

(ஈ) யாதொரு பற்றுக்கோடும் இன்றி இறந்தார்க்கு இறுதிக் கடன்களைச் செய்தல்.

இறுதிக் கடன்களைச் செய்தல் சார்ந்தார், உரியார் கடமை. அங்ஙனம் யாருமில்லையாயின் குமுகாயத்தின் பொறுப்பேயாம். இதில் அரசுக்கு யாதொரு கடமையும்

தி.iv.3. இல்லை. இடுகாடு வரையில் அரசு வருவது, குமுகாயத்தின் பொறுப்புணர்வைக் குறைக்கும்.

‘தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.’

43

1) முன்னோர்: இன்று அறிவராக வாழ்வோர், தென்திசை நோக்கியும் தங்கியும் அறிவுரைகள் வழங்கி வாழ்விக்கும் நல்லறிஞர்கள் ஆகியோரைத் தென்புலத்தார் என்றல் தவறன்று.

தமது குடியில், தமது குடியின் மேம்பாட்டுக்காக வாழ்ந்து மறைந்து போனவர்களை நினைவு கூர்தல்; அவர்கள் நினைவு பசுமையாக விளங்க, அவர்கள் விரும்பி மேற்கொண்டு செய்த அறங்களை நினைவு கூர்ந்து செய்தல்; அவ்வறங்களை வாழ்த்துதல்; இதுவே நீத்தார் வழிபாடு. மற்றச் சடங்குகள் பயனற்றவை; பொருளற்றவை.

2) கடவுளை வணங்குதல்; கடவுட் கோயிலைப் பேணுதல். இதனால் அறிவு, ஆள்வினை வளர்த்து ஞானம் வரும். கடவுட் கோயில் வளர்வதன் மூலம் குமுகாய இணக்கங்கள் ஏற்படும்; குமுகாயம் மேம்பாடுறும்.

3) நாடு விட்டு நாடு காணும் இயல்பினராக - அந்தணராக வரும் புதியவர்கள், விருந்தினர்கள். இவர்களை வரவேற்று ஊண், உடை முதலியன வழங்கிப் பேணுதல். இதனால் அயல்வழி உறவுகள் வளரும். குமுகாயம் விரிவடையும்.

4) ஒக்கல்: சுற்றம், சுற்றம் என்பது இல்வாழ்க்கைத் தலைமகனது உடன் சுற்றமாகும். அதாவது தன் உடன் பிறந்தார் முதற்சுற்றம். அடுத்துத் தந்தை, தாய்வழி, உடன் பிறப்புச் சுற்றம், மனைவி வழி உடன் பிறப்புச் சுற்றம்.

சுற்றத்தினரைப் பேணுதல் குடும்பம் வளமையாக அமையத் துணை செய்யும். சுற்றத்தினரைப் பேணுதல் என்பது அவர் தம் வாழ்க்கைத் தேவைகளைப் பெறுதற்குரிய வாயில்களை அமைத்துத் தருதல்.

சுற்றம் பழகும் பழக்கங்களால், வழக்கங்களால் அகவுணர்வுகள் செழுமையாக வளர்ந்து பயன் தருவது. அதனால், அடிக்கடி கண்டும் கலந்தும் மகிழ்ந்து உரையாடியும், கலந்து உண்டும், மகிழ்ந்து விளையாடியும், உதவிகள் செய்தும், உதவிகள் பெற்றும் உறவு நிலைகளைப் பேணுதல் இன்றியமையாதது. உறவுகள் செழிப்பாக அமையாத சுற்றம் சுமையாகிவிடும்.

5) தான்: தலைவன். அவன் இல்வாழ்க்கையின் குடும்பத்தின் ஆக்க நிலையில் அமைந்த உறுப்பு. ஆதலால், அவனும் தன்னைக் காலத்தில் உண்ணுதல், உடல்நலத்திற் குரிய உழைப்புகளை மேற்கொள்ளல், நல்ல நூல்களைக் கற்று அறிஞனாக விளங்குதல், அன்பு நலத்தை வளர்த்துக் கொள்ளற்குரிய வாயில்களைப் பெறுதல் - அமைத்தல் ஆகியவை வழி பேணிக்கொள்ளுதல் இன்றியமையாதது.

‘பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.’

44

மற்றவர்களால் பழிக்கப்படும் தீய செயல்களைச் செய்ய அஞ்சி வாழ்தல் வேண்டும். இவை இரண்டு வகையின.

1. பழித்தற்குரிய தீய செயல்களைச் செய்யாது தவிர்த்தல்.

2. இல்வாழ்க்கைக்குரிய செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யாது விடுதல் வாயிலாகப் பழிவருதல்.

ஆதலால் மனை வாழ்க்கை சிறப்புறுதலுக்குரியன செய்க. செய்யத் தகாதன செய்யற்க.

பழியஞ்சுதல்:

1. தம்மைச் சார்ந்தோரும் சுற்றத்தாரும் வருந்தத் தாம் மகிழ்ந்து வாழாமை. 2. தாம் மகிழ்ந்து இனிது வாழ்வதற்காக மற்றவர்களை வருத்தாமை.

3. தாம் வளர்த்து மேம்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டிய மக்களைப் பேணும் பணியில் சோர்விலாதிருத்தல்.

4. தன்னயப்புகளால் குமுகாயப் பொது அறங்களைச் செய்தலில் அயர்தல் அல்லது செய்யாது விடாமை.

பாத்தூண்:

உணவு பகுத்துண்டல் பண்பாடுகளின் களன். பகுத்து உண்ணலால் அன்புக் கிளர்ச்சிகளும் மனமகிழ்வும் தோன்றும். அவ்வழி வாழ்க்கை செழிக்கும்.

1. குடும்பத்திற்கு உரியார் அனைவரும் விருந்தினர் உண்டாயின் அவரும், சுற்றத்தார் இருப்பாராயின் அவரும், உடனிருந்து பகுத்து, மற்றவர் விருப்பம் அறிந்து வழங்கி உண்பித்து, உண்டு வாழும் வாழ்க்கையை உடையார் தலை முறை தலை முறையாக வளர்வர்.

‘அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது’.

45

அன்பும் அறனும் உடையதாக அமைந்த இல்வாழ்க்கை பண்பாகவும் அப்பண்பின் பயனாகவும் விளங்கும்.

அன்பு:

இல்வாழ்க்கை அன்பு விளைவிக்கும் பண்ணை. அன்பு செய்தலே முன்னுரிமை. அவ்வழிதான் அன்பு பெறுதல் இயலும். தன்னை நடுவமாகக் கொண்ட வாழ்க்கையில் அன்பு செழிக்காது. மற்றவர்களை நடுவமாகக் கொண்ட வாழ்க்கையில் அன்பு செழிக்கும். இல்வாழ்க்கையிலும் பழுத்த துறவு வேண்டும். தாம் துய்த்தற்காக அல்லாது, துய்த்தற்குத் தருதலும் அவ்வழியில் மற்றவர் துய்ப்பு இடையீடின்றி நிகழத் தான் துய்த்தலும் தவிர்க்க முடியாத வழித் துய்த்தலுமே அன்பின் செயல்கள். இத்தகைய அன்பின் விளை நிலமாக இல்வாழ்க்கை சிறந்து விளங்க வேண்டும். இத்தகு அன்பில் மனத் தூய்மையும் அவ்வழி நிகழும் செயல்களும் அறமாகும்.

1. வாழ்க்கைத் துணை நலமாக அமைந்த மனைவிக்காக, அன்பு காட்டும் அவளுக்காக வாழ்க! மக்களிடமும் சுற்றத்திடமும் அன்பு காட்டுக.

2. அறம்: வாழ்வாங்கு வாழ்தல்; வாழ்வித்து வாழ்தல்.

‘அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றிற்
போஒய்ப் பெறுவது எவன்.’

46

அறநெறியில் இல்வாழ்க்கையில் பெறாத எதனைப் புறநெறிகளில் போய்ப் பெறமுடியும்?

முற்கூறிய அறநெறியில் இல்வாழ்க்கையைச் சிறப்புற நடத்தினாலே இம்மை, மறுமை நலன்களை அடையலாம். இல்வாழ்க்கையில் பெற முடியாத எந்த ஒன்றையும் துறவு நெறியில் பெற்றுவிட முடியாது.

நின்றொழுகும் நெறிகள் விருப்பத்தின்பாற் பட்டனவேயாம். இரு நெறிகளிலுமே வாழ்க்கை நலன்களையும் திருவருளின்பத்தையும் பெறலாம்.

‘இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.’

47

இல்வாழ்க்கைக்குரிய இயல்புகளுடன் கூடி வாழ்பவன், வாழ்க்கையை வெற்றிகரமாக - இன்பமாக அமைத்துக் கொள்ள முயற்சி செய்வார் எல்லாருள்ளும் தலைவன் ஆவான்.

1. இல்வாழ்க்கையின் இயல்பு, காதல் மனையாளுடன் கூடிக் கலந்து மகிழ்ந்து வாழ்தல்.

2. நன் மக்களைப் பெறுதல்.

3. பொருள் ஈட்டுதல்; ஈத்து மகிழ்தல்; துய்த்தல்.

4. சுற்றம், விருந்து பேணுதல்.

5. தென்புலத்தார், தெய்வம் போற்றுதல்.

6. புகழ் பெறுதலுக்குரிய அறவினைகளைச் செய்தல்.

7. இம்மை, மறுமை இன்பங்களைப் பெறச் செய்யும் முயற்சிகளில் தலையாயது இல்வாழ்க்கை. துறவாவது போன்ற அமைப்பில் துறத்தலும், இன்புறுதலும் அமைந்துள்ள இல்வாழ்க்கை முயற்சி சிறப்புடையது.

‘ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.’

48

தவம் செய்வோருக்கு உரிய உதவிகள் செய்து அவர் தம்மைத் தவநெறியில் நிற்கச்செய்தும், தாமும் தமது நெறியில் நின்றொழுகும் இல்வாழ்க்கை, தவம் செய்வாரின் தவத்தினும் சிறப்புடையது.

குறிப்பு: இல்லறத்தார் தவத்திற்குத் துணை செய்தலாகிய அறத்துடன் தமது இல்லற அறத்தினையும் மேற்கொள்வதால் சிறப்புடையதாயிற்று.

1. தவம் செய்வோர் தமக்குரியனவற்றைத் தேடாமல் அவர்களுக்கு வழங்குவதன் வாயிலாகத் தவத்திற்கு உறுதுணையாயிருத்தல். நுகர்வன தேடுவதன் வாயிலாகப் பொருட் பற்றுகள் வளரும். பாலுக்குப் பதில் பசுவின் மீது நாட்டமும் - பசுவுக்கும் புல் வளர்க்க நிலத்தின் மீது நாட்டமும் செல்லும். தவம் செய்வார்க்கு நுகர்வனவும் துய்ப்பனவும் தர வேண்டுமே ஒழிய மூலப் பொருள்களோ பணங்களோ தருதல் கூடாது. அங்ஙனம் முறைபிறழ்ந்து கொடுத்ததன் விளைவை இன்று நாடு அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

2. தவம் செய்வோர் தவம் செய்தற்குரிய சூழல்கள் அமைத்துத் தருதல்.

‘அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று.’

49

இல்வாழ்க்கை அறம் என்று சிறப்பித்துக் கூறப் பெற்றதேயாம். அத்தகு இல்லற வாழ்க்கையும் மற்றவர்களால் பழிக்கப் படாமல் இருக்குமாயின் நன்று.

1. இல்வாழ்க்கை அறத்தின்பாற் பட்டதே. ஆனாலும் பழிப்புக்குரியதாக இல்லாமலிருத்தல் நன்று.

2. இல்வாழ்க்கையில் ஏற்படும் ஊடல், புலவி ஆகியன நீட்டிக்க அனுமதிப்பதன் வாயிலாக ஒழுக்கச் சிதைவுகள் தோன்ற அனுமதித்தல் கூடாது.

3. காதலர்களின் குறை - நிறைகள் தம்தம் நெஞ்சிற் கிடந்து திருத்தங்கள் காண முயலவேண்டும். அவை புறத்தே மற்றவர்களிடத்திலும் கடவுள் முன்னிலையிலும் கூறத் தக்கனவல்ல.

4. தம் வாழ்க்கை வளமாக அமைய மற்றவர் வாழ்க்கையைக் கெடுப்பதன் வாயிலாக வரும் பழியைத் தவிர்த்தல்.

5. காதல் மிகுதியால் தகாதன செய்யாதிருத்தல் (பெண் வழிச் செல்லுங் குற்றம்).

6. நன் மகனைப் பெறுதல் இருவரின் நோன்புவழி நடைபெறக் கூடியது. ஆதலால் நன் மக்களைப் பெறுதலுக்கிசைந்தவாறு இல்லறத்தினை அன்புத் தவமாக நிகழ்த்துதல்; மக்களை முறையாக வளர்த்தல். இவை வாயிலாகப் பழியைத் தவிர்க்கலாம்.

‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.’

50

இம்மண்ணில் வாழும் முறைப்படி வாழ்பவர்கள் இம்மண்ணிலேயே தெய்வம் போல் மதிக்கப்படுவார்கள்.

1. வாழ்வாங்கு வாழ்தல் - முற்கூறிய நெறிமுறைகளின் படி (இல்வாழ்க்கை, குறள் 1 முதல் 9 முடியவுள்ள விளக்கம் காண்க.)

2. தெய்வமாம் தகுதிக்கு விண்ணகம் வேண்டாம். மண்ணகமே போதும் - வாழ்வாங்கு வாழ்ந்தால்.

தெய்வம்: கண்டோர் வணங்க - மகிழ - வாழ்வளிப்பது.

அது போலவே சிறந்து வாழ்பவர் வாழ்க்கையும் அமைதலின் தெய்வம் என்றார்.

6. வாழ்க்கைத் துணை நலம்

முன்னுரை

திருக்குறள், தலை மகனின் வாழ்க்கைக்குத் துணையாக அமையும் பெண்களை "வாழ்க்கைத் துணை” என்று குறிப்பிடுகிறது. துணையாக அமைவது எல்லா வகையாலும் தம் அளவுக்கு வளர்ந்ததாக, தம்மிலும்கூட வலிமை சார்ந்ததாக அமைந்தால்தான் துணையாக அமைய முடியும். இதனால் பெண்ணிற்குக் கல்வி முதலிய உரிமைகளும், சமநிலைப் பாங்கும் வேண்டும் என்று கூறியதாயிற்று. ஆதலால் திருக்குறளில் வரும் தலைவனின் துணையாய் அமையும் பெண் வாழ்க்கைத் துணையாகின்றாள்! ‘இல்லை’ அந்தத் துணையால் அடையக் கூடிய ‘நல’மாகத் திகழ்கின்றாள்.

‘மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.’

51

மனையறத்திற்குத் தக்க மாட்சிமைக்குரிய பண்புகளை உடையவளாக விளங்கி, தலைமகனின் வருவாய்க்குத் தக்கவாறு குடும்பத்தை அமைத்துத் துணையாய் அமைபவள் வாழ்க்கைத் துணை.

1. மனையறத்துக் குரிய பண்புகளுள் முதன்மையானது இன்புறு காதல் வாழ்க்கை நிகழ்த்துதல்.

2. மனையறத்துக்குரிய தன்னுடைய தலைவனை முறையாக வளர்த்தல்.

3. இருவர் கூடி முழுமையான வாழ்க்கை வாழ்தல் எளிமையான ஒன்றன்று. அத்தகு முழுமையான வாழ்க்கை வாழ்தலே முழுமையான வாழ்க்கை - வெறுப்பு, துன்பம், பழி வராத வாழ்க்கை.

4. வளத்தக்காள்: தலைமகன் பொருள் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டுப் பொருளீட்டுவான். அப்பொருள் வந்து சேரவேண்டிய கருவூலம் வாழ்க்கைத் துணையே. இல்வாழ்க்கையில் பொருட் செல்வப் பொறுப்புடையவள் வாழ்க்கைத் துணைவியேயாம். அவள் பொருட் செல்வத்தை முறையாகப் பங்கீடு செய்து தலைமகளின் - குடும்பத்தின் பொறுப்புகளை நிறைவேற்றி, எதிர் காலச் சேமிப்பும் வைக்கவேண்டும்.

‘மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.’

52

வாழ்க்கைத் துணையாய் அமைந்தவளுக்கு மனையறத்திற்குரிய சிறப்புடைய பண்புகள் இல்லையாயின் ஒருவன் வாழ்க்கை, செல்வம் முதலிய வேறு வகைகளில் சிறப்புடைய தாய் அமைந்திருப்பினும் அச்சிறப்புகளால் பயன் இல்லை.

1. செல்வம் இருந்தாலும் முறையான செயற்பாடு இன்மையால் செல்வம் அழிந்துவிடும்.

2. தலைமகன் புகழ்படு செயல்கள் பல உடையனாயினும் இவளின் வழிபடு செயல்களால் அவன் புகழும் கெடும்.

3. தலைமகள், வாழ்க்கைத்துணையாய் அமைந்தும், அவள் முறையாகத் துணையாயமைந்து செயற்படாததால் உணவுக்கும் உணர்வுக்கும் வேற்றிடங்களை நாடி ஒழுக்கம் குன்ற நேரிடும். ஆதலால் வாழ்க்கைத் துணை நலம் தேடி அமைக்கும் முயற்சி சிறப்பாக அமைதல் வேண்டும்.

‘இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை.’

53

இல்லத்துத் தலைவி மாண்புடையவளாக விளங்கினால் அந்த இல்லத்தில் இல்லாதது எது? இல்லத்துக் குரியவள் மாண்புடையவளாக இல்லாது போயின் உள்ளது எது?

"இல்லை" என்பது இல்லாமையால் மட்டும் பிறப்பதன்று; இல்லாமை இல்லாமல் செய்து ஒழுகுதல் என்ற ஒழுக்கமின்மையால் பிறக்கிறது. தேவைகளை முன் கூட்டியே அறிந்து உரிய முயற்சிகளை மேற்கொண்டு, தேவை வரும்போது பயன்படுத்துதல் என்பது நல்லாட்சி முறை. சிறந்த இல்லத்தாட்சி இப்படி இருக்குமாயின் அந்த வீட்டில் இல்லாதது எது?

சிறந்த இல்லத்தாட்சி இல்லையாயின் உள்ளதையும் கூட அன்றைக்குப் பயன்பாடு இல்லையென்று கருதி, கவனிக்காது அழியவிட்டுப் பின் அந்தத் தேவை வரும்பொழுது இல்லையென்று கூறுதல். அல்லது தேவை வந்த பிறகு தேடுதல் சிறந்த இல்லாட்சி முறையன்று.

1. இல்லத்தாட்சிப் பொறுப்புள்ளவள் அனைத்தையும் வரும் முன்பே உரிய காலத்திலேயே திட்டமிட்டுத் தேடிப் பாதுகாத்துத் தேவைக்குப் பயன்படுத்த வேண்டும்.

2. உணவுப் பொருள்களை உரிய பருவக் காலங்களில் சேகரித்தால் விலை குறைவு, அவ்வப்பொழுது தேடும் உழைப்பும் மிஞ்சும்.

3. ஒரு வீடு பலர் வாழ்வது; ஆதலால், யாருக்காவது எப்போதாவது உடல்நலமில்லாது போகலாம். அதற்குரிய முதல் உதவி மருந்துப் பொருள்கள் இல்லத்தில் இருக்கவேண்டும்.

4. தம் மக்கட் செல்வங்களின் கல்வி, திருமணம் முதலிய நிகழ்வுகளுக்குரிய பொருள்களை உரிய காலத்திலேயே திட்டமிட்டுச் சேகரித்து வைத்து அவை வரும் பொழுது கடன் படாமலும், பெருமூச்சைச் செலவழிக்காமலும் செய்தல் வேண்டும்.

‘பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின்.’

54

ஒருவன் அடையக் கூடிய பேறுகளில் இல்லாளின் மேம்பட்ட பொருள் யாது? அவள் உறுதியான கற்பினைப் பெறின்.

பெண் பெருமையுடையவள். வாழ்க்கைத் துணையாகிய இல்லாளே பெறக் கூடிய பெரும்பேறு அவளிடம் கற்பென்ற உறுதி இருக்குமாயின்!

ஒருவனின் உடல் தேவைகளையும் உயிர்த் தேவைகளையும் உணர்வுத் தேவைகளையும் அறிந்து, கடப் பாட்டுணர்வுடன் காலத்தால் வழங்கி வாழ்விப்பவள் இல்லாள். ஆதலால் சிறப்புடைய பேறு.

காதலர்களிடையே நிலவ வேண்டிய மாறாத அன்பைக் கற்பு என்று சிறப்பித்துக் கூறுதல் மரபு.

கற்பு, திண்மையுடையதாதல் எங்ஙனம்?

1. காதல் வாழ்க்கையைக் குறிக்கோளாகக் கருதுதல்.

2. காதல் வாழ்க்கையில் நிகழவேண்டிய அன்பை நாள் தோறும் முறையாக வளர்த்துச் சோர்விலாது காப்பாற்றிக் கொள்ளல்.

3. அன்பு நிகழ்தலுக்கும் உறுதிப்பாடு அடைதலுக்கும் உரிய செயல்களை இல்லத்துப் பணியாட்கள் வாயிலாக அன்றித் தாமே செய்தல்.

4. இடையூறுகளும் சோர்வுகளும், உற்றுழி நிலையில் மாறாது நிற்றல்.

கற்பென்னும் திண்மை:

வாழ்க்கை நம்பிக்கையால் ஆவது; உறுதியான அன்பால் வளர்வது; வாழ்வது, யாதானும் ஒரு வகையில் உரிய தலைமகள் குறைப்பட்டுழி, இல்லாள் அக்குறைகளின் காரணமாகக் கணவனை இகழ்தல், காதல் செய்யாதிருத்தல், விலகிப் போதல், உடை அணிகள் இன்ப ஆசைகளால் பிற ஆடவர்களை நாடல் முதலியன பெண்ணின்பால் நிகழ்ந்தால் அன்பு குறையும்; ஒழுக்கம் குன்றும்; கற்புக் கெடும். இவ்வழி அவளும் பெருமை இழப்பாள்; கணவனுக்கும் தீங்கு செய்வாள்.

கற்பு உடையதாக அமைவதுடன் அது உறுதியுடையதாக வேண்டும். ஏன்? யாதானுமொரு காரியத்தைச் செய்ய ஆற்றல் மிக்க கருவியாகப் பயன்படுதல் வேண்டும். கற்பென்னும் திண்மை பெற்ற பெண்ணுக்குத் தெய்வங்களும் ஏவல் செய்யும்.

‘தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.’

55

தெய்வங்களைத் தொழமாட்டாள்; கணவனைத் தொழுது எழுவாள், அத்தகையவள், பெய்யெனப் பெய்யும் மழை.

இல்லாள், தெய்வங்களைத் தொழும் ஆவலைத் தணித்துக் கொள்ளுதல் வேண்டும். கடவுளைத் தொழுதல் தவறில்லை. அக்கடவுளையும் கூடக் கணவனோடியைந்து தொழுதலே சிறப்பு. கடவுள் வழிபாட்டில் குறைகள் கூறுதல் இல்லை. பேரறிவு, பேராற்றல் பெறுதல் கடவுள் வழிபாட்டின் நோக்கம்.

உறக்கத்தில் இல்லாளுக்கு உணர்வு இல்லை. உறக்கம் தெளிந்தவுடன், உணர்வுகள் திரும்பியவுடன் தன் தலைவனை, கணவனை நெஞ்சத்தால் தொழுது வாழ்த்தி எழுதல் வேண்டும். இதனால் மறவாது நினைந்து வாழும் திறன் வளரும். இங்ஙனம் வாழும் பெண் தன் கணவருக்கும் பெய்யென வேண்டும்போது பெய்து உறுதுணையாய் அமையும் மழை போல் துணையா யமைவாள்.

பெய்யென வேண்டும் பொழுது பெய்யும் மழையே பருவ மழை, பருவ மழையினாலேயே பயிர்கள் வளரும்.

‘தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.’

56

இல்லாள் தனது கற்பொழுக்கத்தைக் காத்துக்கொள்ள வேண்டும்; தன்னுடைய கணவனையும் பேணிக் காத்தல் வேண்டும். தம் குடும்பத்திற்குரிய பெருமைமிக்க புகழையும் காப்பாற்ற வேண்டும். இந்தப் பணிகளைச் செய்தலுக்கேற்றவாறு சோர்விலாது இருத்தல் வேண்டும்.

தற்காத்தல்:

1. ஒரு பெண் தனது கற்பைக் காப்பாற்றிக் கொள்ளும் வகையில் ஒழுகித் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுதல் வேண்டும். அதாவது தன் கணவன் கண்டு மகிழ்தலுக்கு மட்டுமே மாலை நேரங்களில் ஆடைகளால், அணிகலன்களால் ஒப்பனை செய்து கொள்ளுதல் வேண்டும், மற்ற நேரங்களில் கவர்ச்சியாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

மற்ற வீடுகளுக்குச் சிறப்பு நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் பொழுதும் கவர்ச்சியான ஒப்பனைகள் இல்லாது எளிமையாகச் செல்லவேண்டும்.

2. இயன்றவரை கணவனுடனேயே நிகழ்ச்சிகளுக்கும் திருக்கோயிலுக்கும் செல்லவேண்டும்.

3. திருமணமாகாத - திருமணமாகியும் சீராக வாழாத ஆடவர்களிடம் பழகுதலைத் தவிர்த்தல் வேண்டும். இன்றியமையாமை ஏற்படின் தேவைக்குப் பேசி, விடுதல் வேண்டும்.

4. மற்றக் குடும்பத் தலைவர்களிடம் அவர்கள்தம் வாழ்க்கைத் துணைவிகளுடன் உள்ளபொழுதே அளவோடு பேசி அதுவும் அவள் வாயிலாக அவருடன் பேசும் முறையை மேற்கொள்க.

5. மற்ற ஆடவர்களின் நிறைகளை எண்ணுதல், பேசுதல் தவிர்க்கப்பெறல் வேண்டும். தம் கணவனுக்கு ஒப்பார் யாருமில்லை என்று கருத்துக் கொள்ளுதல் வேண்டும்.

6. தன் கணவன் யாதானும் ஒரு வகையில் நிறையுடையன் அல்லனாயினும் அதைக் குறையாக எண்ணுதல் கூடாது. நிறைவைத் தரத்தக்க முயற்சிகளை மேற் கொள்ள வேண்டும். இதனால் தன் கற்புக்குப் பற்றுக் கோடாக உள்ள அன்பு வளரும்.

தற்கொண்டாற் பேணல்

1. தன் கணவனின் அனைத்துத் திறன்களையும் வளர்த்துப் பேணவேண்டியவள் பெண்ணே.

2. கணவனின் காதல் இன்பப் பெட்டகமாக இருந்து அவன் நிறைவுபெறத் தக்க வகையில் கூடலும் ஊடலும் செய்து இன்புறுத்துவதன் வழியாகக் கணவனைப் பிறனில் விழையாமலும் பரத்தையின் வழிச் செல்லாமலும் பாதுகாப்பது பெண்ணின் கடமையேயாம். கணவனின் கற்புக்கு இல்லாளே பொறுப்பு.

3. கணவனின் உடல் நலமே மனையறத்திற்கு முதல். அதனை உரியவாறு பேணல்.

4. கணவன் அறிவிலும் ஆற்றலிலும் தொழில் திறனிலும் வளர்ந்து மனையற வாழ்க்கையைச் செப்பமாக அடையத்தக்க வகையில் இல்லாள், கணவனுக்குப் பற்றாக்குறைகளையும் - அரிப்புத் தொல்லைகளையும் கவலைகளையும் தராது வாழ்தல்.

தகைசான்ற சொற்காத்தல்

1. தன் குடும்பத்தின் பெருமைக்குரிய சொற்களைப் பாதுகாத்தல். அதாவது, குடும்பத்தைச் சீராக நடத்திப் புகழ்பெறுதல்.

2. குடும்பக் குறைகளை வெளியிற் சொல்லாமல் குடும்பத்தின் உயர்வினை என்றும் பாதுகாத்தல்.

சோர்வின்மை

1. குடும்பக் கடமைகளை நிறைவேற்றுதல்; சுறுசுறுப்பாய் இருத்தல்.

2. குடும்ப வாழ்க்கையில் ஒரோ வழி இன்பங்கள் குறையினும் துன்பங்கள் வரினும் அவை காரணமாகச் சோர்ந்து விடாமல் எழுச்சியுடன் கடமைகளைச் செய்து குடும்ப வாழ்க்கையைச் சீரமைத்தல்.

‘சிறைகாக்குங் காப்புஎவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.’

57

மகளிரைச் சிறை வைத்துக் காக்கும் காப்பு என்ன செய்ய இயலும்? மகளிர் தம் கற்பினால் காத்துக்கொள்ளும் காப்பே தலையாயது.

பெண்களை அவர்கள் கற்புக் கெடாதவாறு பாதுகாக்க வீட்டிற்குள் அடைத்து வைத்துக் காத்தல் பயனைத் தராது. பெண்கள் தம்மை அவர் தம் கற்பொழுக்கத்தால் காத்துக் கொள்வதே தலையாயது.

வீட்டிற்குள் சிறை வைத்திருக்கும்போது அவள் உள்ளத்தால் நினைந்தொழுகினும் கற்பு நலம் குன்றிடும். அவ்வழி உரியவளிடத்தில் ஒழுகும் கற்பொழுக்கத்தில் சிதைவு தோன்றும். உடலினால் கெட்டால் மட்டும் கற்பு கெடுதல் இல்லை. உள்ளத்தால் நினைத்தாலும் கெடுகிறது. அதோடு உரியவனிடத்தில் ஒழுகும் கற்பொழுக்கத்தின் தரம் குறைந்தாலும் கற்பு கெட்டது போலவேயாம்.

கணவன் தன் மனைவியைச் சிறைப்படுத்தி வைப்பதனால் புறநிலைகளைக் காண - மகிழ அவளுக்கு ஆவல் தோன்றும். நேரிடையாக ஆவல்கள் நிறைவு செய்யப் பெறாது போனால் புறவழிகளைக் காணவும் அவ்வழி கற்பொழுக்கம் கெடவும் வாயில் அமையும். அதோடு அவர் தம் மனம், நிறைவும் மகிழ்வும் பெறாதபோது அன்பொழுக்கத்தில் குறைப்படுதலும் கற்பொழுக்கத்தின் குறையேயாம். ஆதலால் வீட்டிற்கு வெளியே இயற்கைக் காட்சிகளையும் அறவோர் காட்சிகளையும் கண்டு மகிழத் தக்கவாறு மனைவியை அழைத்துச் செல்க.

‘பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.’

58

சிறந்த இல்லாளை ஒருவன் பெறுவானாயின் அவன் புத்தேளிர் உலகத்தைப் பெறுவான்.

ஒருவன் வீட்டின்பத்தை அடைய சிறந்த இல்லாள் துணை செய்ய முடியும் என்பதாம்.

‘புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை; இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.’

59

புகழுக்குரியவாறு வாழும் இல்லாளைப் பெறாதார் தம்மை இகழ்வார் முன் பெருமையுடன் நடந்துகொள்ள முடியாது.

தனது கற்பின் திறத்தாலும் சீராகக் குடும்பத்தை நடத்துதலால் செல்வ வளம் காத்தலாலும், உயர் அன்பின் காதலிற் களித்து இன்புறுதலாலும் கணவனைத் தன்பால் ஈர்த்து அவனையும் கற்பொழுக்கத்தில் நிலை நிறுத்தி இருப்பதனாலும், மனையறத் தவத்தில் நன்மக்களைப் பெற்று முறையாக வளர்ப்பதாலும் கணவனுடைய - மனையறத்தினுடைய யாதொரு கடமையும் தவறாது செய்தாலும் குமுகாயத்தின் முன் தன் கணவன் புகழும் - பெருமையும் உடையவனாக மற்றவர் மதிக்கச் செய்தல்.

இங்ஙனம் சீராக வாழாத இல்லாளைப் பெற்றவனுக்குப் புகழ் இல்லையென்பதாம்.

‘மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.’

60

ஒருவனுக்கு நன்மையா யமைவது இல்லாள்; சிறந்த இல்லாள். அதற்கு மேலும் அணி செய்வது நன் மக்களைப் பெற்றெடுத்தலேயாம்.

தி.iv.4 1. இல்லாளைப் பெருமைக் குரியவளாக அமைத்துக் கொண்டும் வளர்த்தும், பேணுவதே கணவனின் கடமை.

2. நன் மக்கள்: பால் வேறுபாடுகளின் சேர்க்கைவழி மக்கட்பேறு தோன்றுதல் இயற்கை. மனைமாட்சி சிறப்புறுவது நன் மக்கட் பேற்றால்! நன்மக்களைப் பெறுதல் எளிதன்று, இதற்குத் தலைவனும் தலைவியும் ஒத்த அன்பினராகி உயர்தவமுடையவராகி அன்பிற் கலத்தல் வேண்டும்.

3. கூடுதலில் உடல்நிலை மறந்து உயிர்களின் உணர்வு கலத்தல் வேண்டும்.

4. உடற்பசி இழிநிலைக் காமம். உயிர்ப்பசி காதல்.

5. கூடிக் கலந்து மகிழும் நாளில் நீராடி நற்சிந்தனைகளைச் சிந்தித்து எண்ணிக் கூடுதல் வேண்டும்.

6. கூடும் நேரத்தில் காமச்சூடு இருத்தல் கூடாது.

7. மக்கட்பேறு

காதல் மனையற வாழ்க்கை மக்கட் பேற்றை நோக்கமாக உடையது. எந்தவோர் உயிரினத்திற்கும் தம்மினம் இடையீடின்றித் தழைத்து வளரவேண்டும் என்ற ஆவல் இயற்கையாக உண்டு.

மனையறத்தின் பயன் மக்கட் பேறேயாம். மக்களைப் பெறுதல் மூலம் குடும்பம் தொடர்ந்து வளர்ந்து வாழ்கிறது. குமுகாயம் தொடர்ந்து பெருகி வளர்கிறது. ஆதலால் மக்கட் பேறு சிறப்புடையது.

'பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.’

61

யாமறிந்தவரையில் மக்கட் பேற்றினை ஒத்த சிறப்பான பேறு எதையும் அறிந்ததும் இல்லை; மதித்ததும் இல்லை.

உலகியலில் மக்கட்பேறே சிறப்புடையது; மதிப்புடையது. ‘அறிவறிந்த மக்கட் பேற்றிற்குக் கரணியமாக அமைந்த வாழ்க்கையில் ஈடுபட்ட காதலர்களின் காமக்களியாட்டத்தில் அறிவு தொழிற்படாது; காதற் களிப்பில் அறிவு தொழிற்படும். ஆதலால் காதலர்கள் கூடும் பொழுது இன்ன செயலை முடிக்க இன்ன தகுதியுடைய மக்கள் தேவை என்று எண்ணித் திட்டமிடல் வேண்டும் என்பது கருத்து.

‘எழுபிறப்பும் தீயவை தீண்டா பழியிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.’

62

எழு பிறப்புகளிலும் தீமை வந்தடையாது பழிகள் பெறாத மக்களைப் பெறின்.

எழுபிறப்பு:- இனிவரும் பிறப்புகள், எப்பிறப்பு என்பது உறுதிசெய்ய முடியாது. மானிடப்பிறப்பு படிமுறை (பரிணாம) வளர்ச்சியில், முடிவானது. இதில் தவறு செய்யின் படிமுறை வளர்ச்சியின் தொடக்க நிலைக்குச் செல்ல வேண்டியிருந்தாலும் இருக்கலாம். எழுந்த பிறப்பு என்று பொருள் கொண்டு இப்பிறப்பில் என்று பொருள் கொண்டாலும் கருத்தில் முரண்பாடு இல்லை.

பழியிறங்கா மக்கள்

1. கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்குதல்.

2. நல்லெண்ணமும் நம்பிக்கையும் பெற்றுக் குமுகாயத்தில் விளங்கித் தோன்றுதல்.

3. தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுப் பொருள் ஈட்டுதல்.

4. தம் குடும்பத்தின் வழிவழிச் சொத்துகளையும், தந்தை ஈட்டிய சொத்துகளையும் நம்பி வாழாது. தம் முயற்சியையே நம்பி வாழ்தல். 5. தம் குடும்பத்தின் வழிவழிச் சொத்துக்களையும் தந்தை ஈட்டிய சொத்துக்களையும் பாதுகாத்து வளர்த்தல்.

‘தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.’

63

அறிந்தோர் தாம் பெற்ற மக்களைத் தம் பொருள் என்று கொண்டு போற்றுவர். தம் மக்கள் ஈட்டிய பொருளும் அவர் தம் செயல்வழி பெற்றோரை நோக்கிவரும்.

பொருள்: வாழ்க்கைக்குத் தப்பாது பயன்படக் கூடியவைகளே "பொருள்” என்று சிறப்பாகக் கொள்ளுதல்.

தம் காதல் வாழ்க்கையின் பயனாகத் தோன்றி, தம் வாழ்க்கையின் உறுப்பாக அமைந்து, தமது பணிகளைத் தொடர்ந்து செய்தலோடன்றி, முதுமைக் காலத்தில் துணையாய் அமையும் மக்களைப் "பொருள்” என்று கருதிப் போற்றுதல்.

அவர் பொருள்

1. தம் மக்கள் ஈட்டும் பொருள் பெற்றோரின் துய்ப்புக்குரியன.

2. மக்கள் செய்யும் எச்செயல்களையும் உலகம் பெற்றோருடன் இணைத்தே கண்டு சிறப்பிக்கும்.

3. ஆதலால், மக்கள் சிறப்புற வாழ்ந்தால் அந்தப் புகழும் பெற்றோரையே சாரும்.

‘அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.’

64

தம் மக்கள் சிறு கைகளால் குழப்பிய கூழ், அமிழ்தினும் இனியதாம்.

1. அமிழ்து சுவைமிக்க உணவு (புராணங்களின் வழி அமிழ்தம் வானோர் உணவு என்பர்). தூய்மைக் குறைவாகவும், சுவை குன்றிய சூழ்நிலையிலும் விளங்குவதாயினும் தம்மக்கள் சிறுகையிட்டுக் குழப்பிய உணவு, அமிழ்தமேயாம்.

2. குழந்தைகளை உண்பித்தலும், குழந்தைகளோடு உடனிருந்து உண்டுமகிழ்தலும், குழந்தைகள் தர உண்ணுதலும் தவிர்க்கக் கூடாதன.

‘மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.’

65

குழந்தைகளின் உடலைத் தீண்டி விளையாடி மகிழ்தல் உடலுக்கு இன்பம். அவர்தம் சொல் கேட்டல் செவிக்கு இன்பம்.

1. மக்களை எடுத்தும் அவர்களோடு விளையாடியும் மகிழ்தல் மூலம் பெற்றோர் பண்பாட்டில் வளர்கிறார்கள்; குழந்தைகளும் சிறப்பாக வளர்வர்.

2. மக்களின் சொற்களைக் கேட்டு மகிழ்தல் மூலம் குழந்தைகளிடத்தில் தன்னம்பிக்கையையும் சொல்லும் ஆற்றலையும் வளர்க்கலாம். கேட்கும் வாய்ப்பு ஏற்படும் இடத்தில் சொல்லவும் வாய்ப்பிருக்கும், அல்லவா?

‘குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.’

66

தம் மக்களின் மழலைச் சொற் கேளாதவர் குழலிசையும் யாழிசையும் இனிதென்பர்.

யாதொரு முரண்பாடும் இலாத மழலைச் சொல் கேட்பதில் இருபாலும் பயன் இருப்பதால் இசையினும் சிறந்தது.

‘தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்.’

67
ஒரு தந்தை, தம் மக்களுக்குச் செய்யக்கூடிய உதவி, கற்ற அறிஞர்களவையில் அவர்களை முதன்மைபெறத் தகுதியுடையராக்குதலே.

1. மக்களைச் சிறந்த கல்விகற்கத் தூண்டித் துணைநின்று வழிநடத்தி அறிஞராக்குதல்.

2. தம் மக்களைக் கல்வியுடையராக்குதலே பெற்றோரின் தலையாய கடமை.

‘தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.’

68

தம்மைவிட தம் மக்கள் அறிவுடையராதல் இவ்வுலகத்து உயிர்களுக்கெல்லாம் இனிது.

1. பெற்றோரின் அறிவைவிட, மக்களறிவு சிறந்திருத்தல் வேண்டும். அங்ஙனம் சிறந்திருத்தலே வளர்ச்சிக்கு அடையாளம், அங்ஙனம் வளராதிருப்பின் தேக்க நிலையாகிவிடும். ஆதலால் தம் மக்கள் "தம் சொல்வழி நடப்பாரோ?” என்ற ஐயத்தில் தம் மக்களின் அறிவு மேலும் வளர உதவி செய்யாமலிருப்பது தவறு. மக்கள் அறிவின் வளர்ச்சி, பெற்றோருக்கே புகழ் தரும்.

2. தம் மக்கள் அறிவுடையராக இருத்தல் மாநிலத்துக் கெல்லாம் சிறப்புடையது என்று எண்ணி அறிவு வளர்ச்சிக்கு விரைந்து உதவி செய்க.

‘ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.’

69

தாய் தன்மகனைச் சான்றோன் என்று கூறக் கேட்டபொழுது, பெற்ற காலத்தில் அடைந்த மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.

1. மகன், புறத்திணைகளில் நாட்டுப்பணிகளில் ஈடுபடுத்தலுக்குரியவன்; அங்ஙனம் ஈடுபட்டுச் செய்யும்பொழுது அவனுடைய பணிகளால் பயன் பெற்றோர் “சான்றோன்” எனப் பாராட்டி வாழ்த்திப் புகழ்ந்து கூறும் பொழுது மகிழ்ச்சி கொள்க.

அங்ஙனமில்லாது மகன் என்ற அளவில் மகிழ்ச்சி அடைந்தால் சிறப்பில்லை; புகழும் தராது. பிறர் சொல்லக் கேட்பதே புகழ். அதனை விரும்புக.

‘மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
என்னோற்றான் கொல்எனுஞ் சொல்.’

70

மகன் தந்தைக்குச் செய்யக்கூடிய உதவி “இவன் தந்தை என்ன நல்வினை செய்தான்னோ இந்த நல்வினையாளனைப் பெறுதற்கு” என்று பாராட்டத் தக்கவாறு வாழ்தலேயாம், என்னோற்றான் கொல் எனும் சொல்.

1. பெற்றோர் தம் முதிய காலத்தில் மக்களின் பொருளாதாரத்தை நம்பி வாழ்தல் நன்றன்று; சிறப்பும் தராது. பெற்றோரை முதுமைக்காலத்தில் காப்பாற்றுவது என்பது மகனின் அறவழிப்பட்ட கடமையே. ஆனால் உலகியலில் அது சிறப்பதில்லை. கூடுமானவரை தவிர்த்தல் நல்லது.

2. தம் மகன் நல்ல செயல்களைச் செய்து அவ்வழிவரும் புகழில் மகிழவேண்டுமேயன்றி, தம் மக்களிடம் உள்ள பொருள்களில் மகிழ்தல் நன்றன்று. ஆனாலும் மகிழக் கூடாது என்பதன்று.

3. ஒரு குடும்பத்தின் வளர்ச்சியைத் தந்தைக்குத் தந்த பொருளிலிருந்து அளந்து மதிப்பிட்டுப் பாராட்டுதல் வளர்ச்சியின் அடையாளமன்று. மக்களின் சிறப்பை அளவு கருவியாகக் கொண்டே தந்தையின் சிறப்பை அளந்தறிவர். ஆதலால் நன்மக்களைப் பெறுதலிலும் பெற்ற மக்களை முறையாக வளர்ப்பதிலும் பெரிதும் அக்கறை காட்டுதல்.

8. அன்புடைமை

இல்லறத்தின் கடமைகளை முறையே செய்யவும், உணர்வுகள் குடும்பம் என்ற குறுகிய நிலையில் தங்கி விடாமல் பரந்த குமுகாய அளவிற்கு விரிவடையவும் தேவை அன்பு. அன்பு என்பது ஒருவரைக் கண்டுழியும், காணா வழியும் அவர்மாட்டு நமது பரிவு நிறைந்த உணர்வுகளைச் செலுத்தி நலமறிய நாடல்; நலம் பேண உதவுதல் முதலியன நிகழ்வதற்குக் காரணமாய் அகத்தே நிகழும் ஓர் உணர்வு.

‘அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும்.’

71

அன்பினைக் காட்டாது தடுக்கத் தாழ்ப்பாளும் உண்டோ? இல்லை! தம்மால் அன்பு செய்யப் பெற்றாரது துன்பங் கண்டபோது அன்புடையாரின் கண்கள் நீரைச் சிந்தும். அக்கண்ணீர்வழி அன்புடைமையை அறியலாம்.

அன்புடைமை செயல்களில் மட்டும் வெளிப்படுவதன்று; உணர்தலிலேயே வெளிப்படுவதாகும்.

அன்பு என்பது ஒரு சடங்கன்று. ஒப்புக்குக் காட்டுவன வெல்லாம் அன்பல்ல. உண்மையிலேயே மற்றவர்களிடம் அன்போடு பழகுக. அவர்தம் துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதுக. அதுவே அன்புடைமையின் சிறப்பு

‘அன்பிலார் எல்லாந் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.’

72

அன்பிலார் எல்லாவற்றையும் தமக்கே உரிமையாக்கிப் பயன்படுத்துவர். அன்புடையார் தம்மை மற்றவர்க்கு உரிமையாக்குவர்.

1. "தமக்கே உரியராகும்” தனி உடைமை நஞ்சு, அன்பின்மையால் வருவது; வளர்வது. "என்பும் உரியர் பிறர்க்கு” - பொதுவுடைமை உணர்வு வருவது; வளர்வது. ஆதலால் குமுகாயத்தில் நாம் ஒருவர் என்று கருதிக் குமுகாயத் தேவையே தம் தேவையாகக் கருதிடுக.

2. எப்பொருளையும் தேடுவதில், படைப்பதில் இலாப நோக்கின்றி குமுகாயத் தேவையை மையமாகக் கொண்டு தொழிற்படுக.

3. வையம் உண்ணாமல் உண்பதும், வையம் உடுத்தாமல் உடுப்பதும் அன்பின்மையின் விளைவே. ஆதலால் இதனை வருவித்த ஒருவரின் தனித்திறன்கள் குமுகாய வரலாற்று நிகழ்வுகள் தந்தவையேயாம். ஆதலால் தனியே எந்த ஒன்றிற்கும் ஒருவர் உரியராதல் இயலாது.

4. “என்பும் உரியர்” - ஒருவர் தமது அறிவாற்றலையும், உழைப்பையும் அவ்வழி படைக்கப்படும் பொருள்களையும் குமுகாயப் பொதுமையாக்குக.

5. பொதுமை நலத்திலிருந்து விலகிய தனிமை வளரக்கூடாது. அங்ஙனம் வளரின் அன்பு தோன்றி வளர்தலுக்குரிய ஊற்றுக் கண்கள் அடைபடும். ஆதலால் தன்னயத்தை மறந்திடுக. தற்பெருமையைத் தள்ளிவிடுக. தற் செருக்கினைத் துறந்திடுக. அன்பைத் தடுக்கும் அழுக்காறு, அவா, வெகுளி இன்னாச்சொல் முதலியன தோன்றவும் அவ்வழி அன்பு கெடவும், உறவுகள் சீரழியவும் விடாமல் பொது நலம் நாடுக.

6. ஆதலால் அன்பினைக் காட்டுக. மற்றவர்களோடு இணைந்து பொதுமையைக் காண்க.

‘அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.’

73

உயிர், உடம்போடு இயைந்த தொடர்பு. இணைப்பு அன்போடு இயைந்த வழக்கென்ப.

1. உயிர் உடம்பினைத் துணையாகப் பெற்று வாழத் தொடங்குதல் அன்பு செய்தலுக்கேயாம்.

2. உயிர்களுக்கு எலும்பு முதலியவற்றால் ஆய உடம்புடன் தொடர்பு ஏற்பட்டுப் பிறந்ததே, தலைவனும் தலைவியும் தம்முள் அன்பு செய்த வழக்கத்தின் பயன் அல்லவா?

3. உடற்பிறவி எடுத்த உயிர்கள் அன்புடை யராயிருத்தலே வழக்கம். ஆதலால் அன்பு காட்டுதலைக் கடமையாகக் கொள்க; பழக்கமாக்குக; வழக்கமாக்குக.

‘அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அது ஈனும்
நண்பெனும் நாடாச் சிறப்பு.’

74

அன்பு விருப்பங்களைத் தோற்றுவிக்கும்; நட்பைத் தரும்.

1. அன்பு உயிர்ப்புள்ள உணர்வு; வளர்ச்சித் தன்மை உடையது. மற்றவர்களோடு அன்பு கொண்டு பழகுக; அதுபோது அவர் தம் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைக்கும் ஆர்வம் தோன்றும் முயற்சிகள் கால் கொள்ளும். முயற்சிகள் பயன்களைத் தந்து வாழ்விக்கும். அவ்வழி நட்புத் தோன்றும்; அத்தகு நட்பே நாடி அடையாத - அடையத்தக்க சிறப்புகளைத் தரும்.

2. உற்றவர்களிடத்தில் அன்புடையராதலும் விருப்பங்களுடையராதலும் உறவுக்கு மூல உணர்வுகளாகும்.

3. அன்பு காட்டுக; விருப்பங்களைப் பேணுக. உறவுகளை வளர்த்திடுக; நட்புறவைப் பெற்றுச் சிறப்புடன் வாழ்க.

‘அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.’

75

வையகத்து வாழ்க்கையில் இன்புறுதலும், சிறப்புகள் பெறுதலும் அன்பினராகி வாழ்ந்த வழக்கத்தின் பயன். அன்புடையராதல் - வழக்காதல்: ஒரோ வழியன்றி இடையீடின்றி எப்பொழுதும் தொடர்ச்சியாக அன்புடையராதலை வழக்கம் என்று சிறப்பித்தார். அன்புடையராக வாழ்தலே வையகத்தில் இன்பத்தைத் தரும்; சிறப்பினைத் தரும். ஆதலால் அன்பு காட்டுதலைப் பழக்கங்களாக்குக! வழக்கங்களாக்குக.

அறத்தின் இயலையும் அன்பின் இயலையும் அறியாதவர்கள் அன்பு, அறத்திற்கு மட்டுமே சார்பு என்பர். அன்பின்மை போல் அன்பு, அறத்திற்கு எதிரான மறத்திற்கும் துணையேயாம்.

1. அன்பு, மற்றவர்களுக்குப் பயன்படும் அறச்செயல்களைச் செய்யத் துணையாகிறது.

2. கழனியில் பயிர் வளர, களை எடுத்தாக வேண்டும். அதுபோல அன்புக்குத் தொடர்பில்லாத அறத்திற்கு மாறான மறச் செயல்களையும் செய்ய வேண்டிவரும். ஏன்? அன்பிலாத-பயன்படாத செயல்களைச் செய்து சிலர், தாம் அழிவதோடன்றிக் குமுகாயத்திற்கும்(சமுதாயத்திற்கும்) தீமை செய்வர். இத்தகு தீமைகளைக் கண்டும் பொறுத்துக் கொள்ளுதல் அன்பு அல்ல. பொறுத்துக் கொள்ளாது அறிவுறுத்தல், கண்டித்தல், தண்டித்தல் முதலிய அன்பிலாமை போலத் தோற்றமளிக்கும் மறச் செயல்களை மேற்கொள்ளுக. இத்தகு மறச் செயல்கள் நேரிடையான அன்பு இல்லை; ஆனால், விளைவு அன்பேயாம்.

3. ஆதலால், குமுகாய நலனுக்குப் பயன்படாதவற்றைச் செய்து வீனே பாழ்பட வாழ்பவர்களைக் கண்டிப்பதில் தவற வேண்டாம். தேவைப்பட்டால் வன்முறையால்கூட திருத்தலாம். இச்செயல் தீயவரை அழிக்கும் நோக்குடையதாக இருத்தல் கூடாது. அன்பினால் அவர்களைத் திருத்தி நெறி நிற்கச் செய்யும் நோக்குடையதாக அமையவேண்டும்.

‘என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.’

77

எலும்பில்லாத புழுக்களை வெயில் எரிக்கும்; அதுபோல அன்பில்லாத உயிரை அறம் சுடும்.

1. வெயிலின் வெப்பத்தைத் தாங்கமுடியாமல் புழுக்கள் சுருண்டு விழுவதைக் காண்கின்றோம். அதுபோல அன்பிலாத உயிர்களை அறம் சுடும்.

2. அன்பு இல்லாமையே ஓர் உயிர்க்குறை. இக்குறைபாடு அறக்கடவுளின் சுடுதலுக்கு இலக்காகிறது. இங்கு அறம் முறைமை (நியதி)

அன்பு செய்யாமையாலும் உயிர்கள் கேடுற்று அழியும். அன்பு செய்யாத உயிர், வளர வாய்ப்பில்லை. அன்பு காட்டுதல் தவிர்க்க முடியாத கடமை. ஆதலால் அன்பு காட்டுதலைக் கடமையாகக் கொள்க. அன்பு காட்டுதல் அன்பு செய்யப்படுவாரின் வாழ்வுக்கு என்று எண்ணற்க. அஃது அன்பு செய்வாரை வாழ்விப்பது என்று அறிக.

அன்பு செய்யாதபோது ஆர்வம் இல்லை; முயற்சி இல்லை; பொருள் இல்லை; உறவு இல்லை; நட்பு இல்லை. அதனால் உயிர் இழிவுநிலை எய்திவிடும். ஆதலால் அன்பு காட்டுதலில் மற்றவர்கள் பயன் பெறுகின்றனர் என்று கருதாது, தாம் வளர அன்பு செய்க.

‘அன்பகத் தில்வா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.’

78

உள்ளத்தில் அன்பு இல்லாத வாழ்க்கை, பாலை நிலத்தில் பட்டுப்போன மரம் தளிர்த்தல் போலாம்.

உயிர் தழைத்து வளர்வது அன்பினாலேயாம். உள்ளத்தில் அன்பு உணர்வு பெறாதவர் வாழ்க்கை தளிர்க்க இயலாது; பூத்துக் குலுங்காது. ஒரு மரம் வளர, மரத்திலும் உயிர்ப்புக்குரிய - வளர்ச்சிக்குரிய பசுமை இருக்கவேண்டும். அம்மரம் வளரவேண்டிய நிலப்பரப்பிலும் நீர்வளம் இருக்க வேண்டும். அதுபோலத் தனி மாந்தனிடத்தில் அன்பு உணர்வும், அந்த அன்பு உணர்வை வளர்த்துப் பாதுகாக்கக் கூடிய அன்புடைய குமுகாய அமைப்பும் இருக்கவேண்டும்.

i. ஆதலால், உள்ளத்தில் அன்பினைப் பெறுக. உள்ளவாறு அன்புடையராக ஒழுகுக. அன்புடைய குமுகாய அமைப்பைக் காண்க.

2. தனி மாந்தனை அன்பினில் வளர்க்கக் கூடிய குமுகாய அமைப்பினைக் காணுக.

3. உள்ளத்தில் அன்பினைக் கண்டு வளர்த்துக் கொள்ளக் குமுகாய அமைப்புத் தேவை என்ற உணர்வோடு குமுகாயத்தை அணுகிக் கலந்து குமுகாயத்தில் ஓர் உறுப்பினராகுக.

‘புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.’

79

புறத்தே காணப்படுவனவாகிய மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய உறுப்புகள் மாந்த உயிரின் உள் உறுப்பாகிய அன்பு இல்வழிப் பயன்படா; பயனற்றவை.

ஒருவருடைய வாழ்க்கையின் வெற்றிச் சிறப்புக்குரிய இடம், பொருள், ஏவல் முதலியன சிறப்பாக அமைந்திருந்தாலும் அந்த ஒருவருடைய உயிரில் அன்பு என்ற பண்பு இல்லாது போயின் பயனற்றவையாகிவிடுகின்றன.

1. பொறிகள். அன்பைப் பெறுதலுக்கும், தருதலுக்கும், அவ்வழி வாழ்க்கையின் சிறப்புக்குரியனவாதற்கும் வாயில்கள்.

உள்ளத்தில் அன்பு இல்லையேல் கண்கள் பேசா. வாய் பேசாது. இந்நிலையில் வாழ்வியல் நடைபெறாது. ஆதலால் அக நிலையில் அன்பை வளர்த்து, பொறிகளின் வாயிலாக வெளிப்படுத்துக.

2. காலம், இடம், பொருள், ஏவல் பெற்றிருந்தாலும் அன்பு இல்லையாயின் இயங்கா; தொழிற்படா; ஆதலால், காலம், இடம், பொருள், ஏவல் பயன்படத் தக்கவகையில் அன்பினைக் காட்டுக.

‘அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.’

80

அன்போடு பொருந்திய உடம்பே உயிருள்ள உடம்பாகும். அவ்வன்பு இல்லாதவர்களுடைய உடம்புகள் எலும்பைத் தோலால் மூடியனவேயாகும். அதாவது வெற்றுடம்புகளேயாம்.

உயிரின் இயற்கை, உயிர்ப்பு. உயிர்ப்பாவது இயக்கம். உயிரின் இயக்கத்திற்குக் கருவியே உடம்பு. உடலிடையுள்ள உயிரின் உயிர்ப்பு-இயக்கம் அன்புடையதாக அமையின் அவ்வுயிர்க்கும் பயன் உண்டு. மற்றவர்க்கும் பயனுண்டு. அன்பில்லையாயின் பயன் இல்லை. பயனில் வழி, பயனற்ற வெற்றுடம்பு. அதனால் "என்பு தோல் போர்த்த உடம்பு” என்றார்.

ஆதலால், உயிரின் உயிர்ப்பை அன்பாக்குக. உயிர்ப்பின் வழிச் செயற்படுக. சிந்தனைக்கு அன்பைப் பொருளாக்குக. சிந்தனை வழி வரும் செயற்பாட்டை அன்பின் வழியதாக்குக.

உடலில் உயிர் உள்ளது என்று துணிதலுக்குரிய அளவை அன்பொழுக்கமேயாகும். அன்பில்லாதவர்களின் உடலில் உயிர் இல்லை. ஆதலால், அவர்கள் எலும்பு தோல் போர்த்த போர்ப்புகள் என்று எண்ணப்பெறுவர்.

உயிர் உடலினை உடுத்துக் கொண்டதே அன்பு செய்தலுக்காகவும் அன்பினைப் பெறுதலுக்காகவுமேயாம். இதுவே இயற்கை விதி. உடலின் நோக்கம் நிறைவேறாத பொழுது பயனற்றதாகிறது. உலகில் வளர்ந்துள்ள தீமை, உடல்கொண்டு வாழ்வதையே பெரிதென்று எண்ணித் தன்னயப்பால் அன்பினைக் கொன்றும் வாழ்வதேயாம். இது தவறு. அன்பினைச் செய்யும் ஒழுக்க நிலையிலேயே உயிர் உள்ள வாழ்க்கை அமைந்திருக்கிறது.

9. விருந்தோம்பல்

‘இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.’

81

கணவனும் மனைவியுமாக இல்லத்தின்கண் இருந்து பொருள்களைப் பேணி வாழ்வதெல்லாம் விருந்தினரைப் பேணுதலுக்கேயாம்.

விருந்து: புதியதாக அறிமுகம் ஆகியவர்கள்; அல்லது உறவு, சுற்றம் ஆகிய சார்புகள் இல்லாதவர்கள்.

அகமும் முகமும் மலர வரவேற்று, தேவையானவற்றைத் தந்து உபசரித்தல்.

நிலத்தை உழுது பயன்காணும் வேளாண்மை என்ற தொழிற் பெயரை விருந்தோம்புதலுக்குப் பொருத்திக் கூறியது, மனம் என்ற நிலத்தில் அன்பால் உழுது, அருள் என்னும் பயன் காண்பதால் என்பதறிக.

1. இவ்விருந்தோம்பல் தமது இல்லத்தின் பொருள் நிலைக்கேற்பவும், காலச் சூழ்நிலைகளுக்கேற்பவும் செய்தல் வேண்டும்.

2. விருந்தினர் - புதியவர் என்றாலும் தமக்கு அறிமுகமான வேறு ஒருவரின் பரிந்துரையுடன் விருந்தினராக ஏற்றுக்கொள்ளுதல் நல்லது.

3. அல்லது இடம் விட்டு இடம் பெயர்ந்து உலா வருதலுக்குரிய தெளிவான நோக்கம் இருக்கிறதா என்பதை ஆராய்ந்து தெளிந்து ஏற்றுப் பேணுதல் வேண்டும்.

‘விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.’

82

1. விருந்தினர், வீட்டின் புறத்திண்ணையில் இருக்க, மரணமிலாப் பெருவாழ்வு வழங்கும் அமிழ்தமேயாயினும் தனியே உண்ணல் முறையன்று. உண்பதற்கு முன் உண்பிக்க வேண்டிய விருந்தினர் உளரா என்று அறிந்து, உளராயின் உண்பித்துவிட்டு உண்ண வேண்டும்.

2. இஃது இயலாததாயின் பொருள் நிலைக்கேற்றவாறு பருகுவன தந்து பேணி வழியனுப்பிவிட்டு உண்ணல் நன்று.

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.

83

நாள்தோறும் தன்னிடத்தில் வரும் விருந்தினரைப் பேணுவானது இல்வாழ்க்கை, வறுமையால் துன்புற்றுக் கெடுவதில்லை.

1. விருந்தைப் பேணும் செயலுணர்வினால் தூண்டப் பெற்று மேலும் மேலும் செலவை விஞ்சிய வரவு தேவை என்ற உயர் நோக்கில் பொருள் ஈட்டும் முயற்சியில் ஈடுபடுவான்.

வரவுக்குள் செலவு - பாதுகாப்பு உணர்வினால் ஆகும் ஒழுக்கம்; செலவுக்கு விஞ்சிய வரவு மேலும் ஆள்வினையுடன் பொருள் செயலில் ஈடுபடும் ஒழுக்கம். ஆதலால் வறுமை வராது, அன்பின் விளைவால் அது ஆள்வினையில் ஆற்றுப்படுத்தும்.

‘அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.’

84

முக மலர்ச்சியுடன் நல்ல விருந்தினரைப் பேணுவானது இல்லத்தின்கண் திருமகள் மனமகிழ்ந்து குடியிருப்பாள்.

செல்வம் வற்றாது தங்கியிருக்கும் என்பது கருத்து. திருமகள் குடியிருப்பாள் என்பது உருவகம்.

செல்வம் செலவழிப்பதற்குரிய வழிகளைப் பொறுத்துச் செல்வம் வளரும்; அல்லது அழியும்.

நல் விருந்து பேணுதல் மூலம் செல்வம் பயனுள்ள வழியில் அன்பை, ஆர்வத்தை, ஆள் வினையைத் தூண்டி இயக்கும் வழியில் செலவழிக்கப்படுவதால் செல்வம் குறையாது; வளரும்; தங்கும்.

அதோடு நல்விருந்தினர் சிந்தனையால், உணர்வால், செயலால் வாழ்விப்பார்கள். அதனாலும் செல்வம் தங்கும்.

‘வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.’

85

விருந்தினரைத் தமக்கு முன்பு உண்பித்து விட்டுப் பின்பு மிகுந்ததைத் தாம் உண்ணும் வேளாளனது நிலத்திற்கு விதை தெளித்தலும் வேண்டுமோ? வேண்டியதில்லை என்பது கருத்து.

இது விருந்தோம்பும் பண்பின் திறத்தை எடுத்துக் கூற, உயர்வு நவிற்சியாகக் கூறியதெனக் கோடல் பிழையன்று. ஆயினும் நடை முறைக்கு வராதது என்று கொள்ளுதல் எதிர் காலத்தில் வளரும் செப்பத்தை மறுத்தலாகும்.

பயன்படுவார் நிலத்தில் பயன் கொள்வோரும் அறநெறிச் சான்றோரும் கூட, பயன் நோக்கி விதைக்கலாம் அல்லவா?

இத் திருக்குறளின் பயன், குமுகாயத்திடம் நம்பிக்கையை வளர்ப்பது ஆகும்.

‘செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.’

86

தி.iv.5

தன்னிடம் முந்தி வந்த விருந்தினரைப் பேணி விட்டுப் பின் வரக்கூடிய விருந்தினரையும் வரவேற்றுப் பேணக் காத்திருப்பவன் விண்ணகத்தாரால் பேணப் பெறும் நல்விருந்தினனாவான்.

வந்த விருந்தினர்களை ஏற்றுப் பேணியதால் ஏற்பட்ட பொருள் செலவினாலும், உடற்களைப்பினாலும் மனச் சோர்வு அடையாமல் கிளர்ந்தெழும் அன்புணர்ச்சியுடன் மேலும் விருந்தினர்களை எதிர்பார்த்து இருந்து வரவேற்பதே அன்பு, ஊக்கம் ஆகியவற்றை வழங்கும்.

மறுமைக்குத் துணை செய்வன உடைமைகளைக் கொண்டு செய்யும் அறங்களேயாம்.

‘இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.’

87

விருந்தினர்க்கு உணவு படைத்தலின் பயன் இவ்வளவினது என்று அளவிட்டுச் சொல்லுதல் இயலாது; விருந்தினரின் தகுதியளவே அதன் பயன்.

விருந்தினரின் தகுதி பற்றியதாகப் பயன் மிகும்-குறையும் என்பது கருத்து.

1. விருந்தினரைத் தேர்ந்து தெளிதல் நன்று. பயன்கருதிச் செய்யலாமா? என்ற வினாவுக்கு விடையாகத் தீப்பயன் வாராது தவிர்த்தலுக்காகப் பயன் என்று உணர்த்தியதாகக் கொள்ளல் வேண்டும்.

2. விருந்தினர் நல்லோராயின் விருந்தளித்தாரைச் சிந்தனையால், உணர்வால், செயலால் வாழ்விப்பர். அஃதிலாதவர் பரிமாறிய உணவின் அளவுக் குறையையும், சுவைக் குறையையும் இன்ன பிற செய்திகளையும் எடுத்துக் கூறிப் பழி தூற்றுவர். உண்ணும் பொழுதே களவு முதலியன செய்யவும் துணிவர். ஆதலால், தேர்ந்து தெளிந்து தக்காரல்லாரைத் தவிர்த்தல் வேண்டும்.

‘பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.’

88

விருந்தினரைப் பேணி அவர்களுக்குச் சிறந்த உணவு படைத்தலை மேற்கொள்ளாதார் செல்வத்தை நிலையானதென்று கருதி - வருந்திப் பாதுகாத்து அச்செல்வத்தை இழந்த போது யாதொரு பற்றும் இல்லையே என்று நொந்து கூறுவர்.

செல்வத்தின் பயன் விருந்தோம்புதல். விருந்தோம்பும் பண்பு, செல்வத்தை இழக்கும் பொழுது உற்றுழி உதவும், துணை செய்யும் என்ற கருத்தை எதிர்மறையாக உணர்த்தியது.

வேள்வி - விருப்பமுடன் செய்வது வேள்வி என்றால் தீ வளர்க்கும் யாகம் என்று கொள்ளுதல் தமிழர் மரபன்று.

விருப்பமுடன் செய்யும் தொண்டு வேள்வியாகும். தமிழ் நெறியில் ஐவகை வேள்வியாவன: திருமணம் செய்வித்தல், விருந்தினரைப் பேணல், தெய்வத்திற்குப் படைத்தல், பேய்களுக்குப் படைத்தல், கொடை.

இந்த ஐவகை வேள்விகளையும் வாய்ப்பு ஏற்படும் பொழுதெல்லாம் விரும்பிச் செய்தால் செல்வம் பயன்படுகிறது என்பதாகும்.

‘உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.’

89

பொருள் பெற்றிருக்கும் காலத்திலும் வறுமையாவது விருந்தோம்பாமை.

இத்தகு மடமை அறியாதாரிடத்து உண்டு.

செல்வத்தின் பயன் இல்லாமையால் பொருளுடைமையும் வறுமையாயிற்று.

அறியாமை செல்வத்தையும் வறுமையாக்கும் என்பதால் செல்வம் பெற்ற அளவிலேயே பயன் இல்லை.

செல்வத்தின் பயன் அடையும் பொழுதே உடைமைக்குப் பொருள் தெரிகிறது.

விருந்தோம்புதல் மூலம் தக்கார் நட்பும் உறவும் கிடைப்பதால் என்றும் வாழ்தலுக்கு வழி உண்டு என்பது கருத்து.

‘மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.’

90

அனிச்சப் பூவை மோந்தவுடன் அது வாடிப்போம். அதுபோல விருந்தினர் முகம், வேறுபட்டு நோக்கும்பொழுது வாடும். விருந்தினர், வறுமையால் உந்தப்பட்டுப் பிழைப்புக் கருதி வருபவர் அல்லர். நாடு காணும் நோக்குடனும், மக்கள் மன்றத்திற்குப் பணி செய்யும் நோக்குடனும், திருத்தலப் பயண நோக்குடனும் பயணத்தில் வருபவரே விருந்தினராக வருபவராவர்.

ஆதலால், தகுதி மிகுதியும் உடையவரே விருந்தினர். அப்பூதியடிகள் இல்லத்திற்கு வந்த அப்பரடிகள் விருந்தினர்; ஒப்பு நோக்கி அறிக.

விருந்தினரை முகமலர்ச்சியுடன் வரவேற்றுப் பேணுதல் வேண்டும். எந்தவொரு காரணத்தினாலும் முகம் கடுகடுக்க அல்லது வேறுபட்டு விருந்தினரை நோக்கக் கூடாது.

விருந்தோம்புதலில் பரிமாறப்பெறும் உணவுப் பொருள்களை விடப் பேணும் (உபசரிக்கும்) பண்பே மிகுதியும் வேண்டற்பாலது.

10. இனியவை கூறல்

‘இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாஞ்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.’

91

மெய்ப் பொருளையறிந்த சான்றோரின் வாய்ச்சொல் வஞ்சனை இல்லாதனவாய் அன்பு கலந்தனவாய் அமையும் இனிய சொற்களாகும்.

செம்பொருள் காண்பதாவது, நிலையில்லாதனவற்றையும் பயன் தராதனவற்றையும் நாடாது நிலையான இன்ப அன்பினையே நாடுவார் நெஞ்சம் அன்பிற்கனியும். பொய்ம்மையுடன் தொடர்பிலாது வாய்மையோடு தொடர்புடைய நெஞ்சம் அன்பில், - அருளில் பழுத்து விளங்கும். அதனால், அவர்கள் சொல்லும் சொற்கள் செவிப்புலனுக்கும் வாழ்க்கைக்கும் இனியனவாக அமையும்.

1. நாளும் ஒருமனப்பட்ட சிந்தனையுடன் செம் பொருளைச் சிந்தனை செய்க.

2. சிந்தனையிலும் செயலிலும் பொய்மையை நீக்குக.

3. அன்பு நெஞ்சத்தில் நனைந்த சொற்களையே கூறிப் பழகுக

‘அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொல னாகப் பெறின்.’

92

ஒருவரைக் கண்ட அளவிலேயே முகமலர்ச்சியோடு விரும்பி இனிதாக நோக்கி, பின் அகமலர்ந்த இனிய சொற்களைச் சொல்லுதல் ஒரு பொருளைக் கொடுத்தலைவிடச் சிறந்தது.

செவிப்புலனைவிடக் கட்புலனே காலத்தால் முந்தியும் எளிதிலும் கவர்ந்து ஈர்ப்பது. ஆதலால், முகமலர்ச்சியுடன் வரவேற்கப் பழகிக் கொள்ளவேண்டும். முகமலர்ச்சிக்குத் தடையான பிணக்கு, பகை, வெறுப்பு, அயலாந் தன்மை ஆகியனவற்றை உட்கோளாகக் கொண்டால் முகமலர்ச்சி வராது.

ஆதலால், அன்பு நிறைந்த உள்ளத்துடன் ஒருமை உணர்வுடன் வரவேற்கவும் அகமும் முகமும் மலர்ந்தவழி இனிய சொற்கள் தம்மியல்பாகவே வரும்.

பொருள் தேவையே பெரிது. ஆயினும் பொருளைவிட அகமும் முகமும் மலர்ந்த வரவேற்பும் இன் சொற்களுமே விரும்பத்தக்கன.

‘முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.’

93

யாவரையும் விரும்பி மலர்ந்த முகத்துடன் இனிதாக நோக்கி, பின் மனமும் வாக்கும் ஒத்து இனிய சொல்லைச் சொல்லுதலே அறம்.

1. எந்த வகையாலும் கடுகடுத்த முகத்தைத் தவிர்க்கவும்.

2 மலர்ந்த முகத்துடன் வரவேற்கவும்.

3. இனிய சொற்களைப் பேசவும்.

4. பொருள்தருதல் - தராமை; அறிவுறுத்தல், அச்சுறுத்தல் ஆகிய செயல்கள் எப்படி அமையினும் மலர்ந்த முகமும் இனிய சொற்களும் குறைகளை நீக்கி நிறைகளைத் தரும்.

‘துன்புறுஉந் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.’

94

எல்லாரிடத்தும் இன்பம் விளைவிக்கும் இன்சொல்லை உடையார்க்குத் துன்பத்தை விளைவிக்கும் வறுமை இல்லையாம்.

1. ஒருவர் இயற்றும் செயல்களின் விளைவே பட்டறிவுக்குரியது. பிறரை இன்புறுத்துபவர்கள் ஒருகாலும் துன்புறமாட்டார்கள். 2. மலர்ந்த முகத்தாலும், இனிய சொற்களாலும் இயன்றதைக் கொடுத்து உதவுவதாலும் மற்றவர்களை இன்புறுத்துக, அவ்வழி வறுமையைத் தவிர்க்கலாம்.

3. மற்றவர்களை இன்புறுத்தும் இயல்பில்லாதார் அடுக்கிய கோடி செல்வம் பெறினும் துய்த்தல் அரிது. அவருக்கு மற்றவர்கள் துணை நிற்கமாட்டார்கள்.

‘பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவருக்கு
அணியல்ல மற்றுப் பிற.’

95

ஒருவனுக்கு அணியாவன அடக்கமுடைமையும் இன்சொல்லுடைமையுமாம். மற்றுப் பொன்னாலும் மணியாலும் செய்யப் பெற்ற அணிகள் அணிகளாகா. பணிவும் இன்சொல்லும் உடனிகழும் பண்புகள்.

1. எல்லாரிடத்தும் எப்போதும் பணிவுடையோராக நடந்து கொள்ளுக.

2. உடற் பணிவுமட்டுமன்றி வணக்கமுடைய வாய்ச் சொற்களையும் பேசுக.

‘அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.’

96

இனிய முறையில் சொன்னால் தீயவை தேயும்; அறம் பெருகும்.

1. ஒளியை உண்டாக்கினால் இருள் அகலும். அதுபோலவே நல்லவற்றை நாடி, அந்த நல்லவற்றை இனிய சொற்களால் சொன்னால் தீமை அகலும்; அறம் வளரும்; நன்மை பெருகும்.

2. வாழ்க்கையில் தொல்லை - துன்பம் தீமையால் வருவது. இத்தீமையை நினைந்து கவலைப்பட்டாலும் அல்லது நீக்க முயன்றாலும் அது நீங்காது. அதற்கு மாறாகத் தீமையை, அவ்வழிப்பட்ட துன்பத்தை அடியோடு மறந்துவிட்டு நல்லவற்றை நாடிச் சொன்னால், செய்தால், தீமை தானே அகலும்; துன்பமும் தொலையும்.

3. சொற்கள் விளைவுகளுக்கு உரியன. ஆனாலும், சொல்லுக்குரிய பயன் விளைய வேண்டுமானால் தேர்ந்து இனிய சொற்களால் சொல்லவேண்டும். நல்லவை சொன்னாலும் அந்த நல்லவைகளையும் கூட இனிய சொற்களாலேயே சொல்லுதல் வேண்டும்.

4. சொல்லில் இனிமை தவறின், சொல்லால் நன்மை விளையாது.

‘நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.’

97

இனிய பண்பின் நீங்காத சொல், பிறர்க்கும் நன்மையைக் கொடுத்து, அங்ஙனம் சொல்பவருக்கும் இம்மையிலும் பொருள், புகழ் முதலியன தரும்; மறுமையிலும் இன்பம் தரும்.

1. சொல்லும் சொற்களைக் கேட்பதற்கு இனிமையாக அமைவதோடன்றி கேட்பவர்க்கு நன்மைகளையும் உண்டாக்க வேண்டுமென்பதை அறிந்து சொல்லுதல் வேண்டும்.

2. ஆதலால், சொல்லுபவருக்கும் கேட்பவருக்கும் நன்மையை உண்டாக்கும் இனிய சொற்களையே சொல்லப் பழகுதல் வேண்டும்.

3. இனிய சொல் என்று கருதி, நன்மை பயவாத சொற்களைச் சொல்லக்கூடாது. சொல்லுவது நன்மை தானே என்ற எண்ணத்தில் கேட்பதற்கு இனிமையாக இல்லாத சொற்களைச் சொல்லக் கூடாது. கடுஞ்சொற்கள், சொல்லும் நன்மையைக் கெடுத்துவிடும்.

‘சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பந் தரும்.’

98

கேட்பவருக்கு மனவருத்தம் தராத சொல், இம்மையும் மறுமையும் இன்பம் தரும்.

1. யாருக்கும் (பகைவருக்கும்கூட) மனவருத்தம் தராத சொற்களாகச் சொல்லுதல் வேண்டும்.

2. சொல்லும் சொல்லளவிலும், பொருள் அளவிலும் மற்றவர்க்கு மனவருத்தம் தராதவாறு சொல்லுதல் உயர்ந்த பழக்கமாகும்.

3. “நல்லதுக்குத் தானே சொல்லுகிறேன்” என்று ஏசக்கூடாது; திட்டக்கூடாது; பழி தூற்றக்கூடாது; வேண்டாதவைகளை நீக்குவதற்கு, துன்புறுத்தாத இனிய முறைகளே நிலையான பயன்தரும்.

‘இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.’

99

இனிய சொற்கள் இன்பம் பயத்தலை அறிந்தும், கடுஞ் சொல்லைச் சொல்லுவதேன்?

1. பிறர் கூறும் இனிய சொற்கள் தன்னிடத்தில் இனிய பயன் தரத்தக்க விளைவுகளை உண்டாக்குவதைத் துய்த்து அறிந்திருப்பவன், பிறரிடத்திலும் இனிய சொற்களாலே பேசி, நன்மைகளை - இன்பங்களை வளர்க்க வேண்டும்.

2. எந்தக்காரணத்தை முன்னிட்டும் எந்தச் சூழ்நிலையிலும் கடுஞ் சொற்களைக் கூறாமல் இனிய சொற்களையே வழங்கினால் அந்தச் சூழ்நிலைகளையும் நல்ல சூழ்நிலைகளாக மாற்றிவிடலாம். எந்தத் தீமையையும் நீக்கி நன்மையை அடையலாம்.

ஆதலால், இனிய சொற்களையே சொல்லியும் பேசியும் பழகுக!

‘இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.’

100

இன்பம் பயக்கும் இனிய சொற்கள் தன்னிடத்தில் இயல்பிலேயே அமைந்திருக்கும் பொழுது, அவற்றைக் கூறாது கடுஞ் சொற்களை முயன்று கூறுதல், கையகத்தில் இருக்கும் கனியைச் சுவைக்காது கையகத்தில் இல்லாததும் பிறரிடத்தில் இருப்பதுமாகிய காயைக் கவர்வதை ஒத்தது.

1. இயல்பாயமைந்த நிலை இனிய சொற்களை வழங்குதலேயாம்.

2. தம்மிடத்தில் இயல்பில் இல்லா அழுக்காறு, வெகுளி முதலியவற்றை முயன்று அடைந்து அவற்றால் சூடேற்றப்பட்டுக் கடுஞ் சொற்களைக் கூறுதல் கூறுவோருக்கும் இரத்தக் கொதிப்பு முதலிய நோய்களைத் தரும்; கடுஞ் சொற்களால் பாதிக்கப்பட்டோர் தரும் துன்பங்களும் வந்தமையும். ஆதலால், கடுஞ் சொற்களைக் கூறாது தவிர்த்திடுக.

3. கடுஞ் சொல்: சொல்லின் பொருள் நல்லது; ஆனால் சொல்லும் சொல் கேட்க இயலாததாக இருக்கும்.

கொடுஞ்சொல் சொல்லாலும் பொருளாலும் இன்னல் விளைவிப்பது. பொய், புறங்கூறல் முதலியன.

11. செய்ந்நன்றி அறிதல்

‘செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்ற லரிது.’

101

நீ, முன்பு யாதொரு உதவியும் செய்யாத நிலையில் உனக்கு ஒருவர் உதவி செய்தால், அந்த உதவியை விண்ணுலகு மண்ணுலகு ஆகியவற்றைவிடப் பெரிதாகக் கருதிப் போற்றுக.

பொதுவாக உலகியலில் உதவிக்கு உதவி செய்தல் கூட அரிது. முன்பு நீ யாதொரு உதவியும் செய்யாதபொழுது வலிய உனது தேவை நோக்கி உதவி செய்யும்பொழுது அவர் உண்மையில் நல்லவராக இருத்தல் வேண்டும். இந்தச் சூழ்நிலையில் அவர் செய்யும் உதவி மிக மிக உயர்ந்தது என்று கருதிப் போற்றவேண்டும்.

‘காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.’

102

உனக்கு உதவி தேவைப்பட்ட நெருக்கடி காலத்தில் ஒருவர் செய்த உதவியை ஞாலத்திலும் பெரிதாக எண்ணிப் போற்றுக.

‘பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலிற் பெரிது.’

103

நாம் இன்ன உதவி செய்தால் நமக்கு இப்படி உதவி செய்வர் என்று எண்ணாமல் செய்த உதவியின் பயனை அளவிட்டுப் பார்த்து அந்த நன்மை கடலினும் பெரிது என்று கருதுக.

‘தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.’

104

தமக்கு ஒருவன் தினை அளவு நன்மை செய்தாலும் பயனைப் பனையளவாகக் கருதிக் கொள்வர் உதவியின் பயனைத் தெரிந்தவர்.

செய்த ஓர் உதவி அளவிற் சிறியதாயினும் அதன் பயன் நோக்கிப் பெரிதாக எண்ணி மகிழ்க! முகமன் கூறுக.

‘உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.’

105

ஒருவருக்குச் செய்த உதவி, அந்த உதவியின் அளவை பொறுத்ததன்று. யாருக்கு உதவி செய்யப் பெற்றதோ, அவர்தம் பண்பாட்டின் அளவுக்கு நிகர்த்தது.

1. ஒருவர் உனக்குச் செய்யும் உதவியைப் பொருளளவில் வைத்து மதிப்புத் தராதே.

2. உதவி யென்பது அளவிற் குறைவுடையதேனும் அதைப் பேரளவினதாகக் கருதுவதே பெருமைக்குரியது.

‘மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.’

106

துன்பக் காலத்தில் தனக்குத் துணையாயிருந்து காத்தவரின் நட்பை நீங்காது போற்றுக. மனத்தில் குற்றமற்றவரது உறவை மறவற்க.

"மாசறுத்தார் கேண்மை” என்றும் பாடம் உண்டு. இங்ஙனம் பாடங்கொள்ளின் அறியாமை நீக்கிய ஆசிரியரின் உறவை மறவாது பேணுக என்பது கருத்து.

1. துன்பம் வந்தபொழுது பெரும்பாலோர் செய்வதறியாது திகைப்பர். மற்றவரும் அந்த நேரத்தில் உதவிக்கு வருவது இயல்பல்ல. இந்த உலகியல்பைக் கடந்து உனக்குத் துன்பக் காலத்தில் துணையாயிருந்து உதவி செய்தவரின் நட்பை ஒரு பொழுதும் மறக்கக்கூடாது.

2. வாழ்க்கையைக் கெடுப்பது அறியாமை. இந்த அறியாமையை அகற்றும் ஆசிரியரின் உதவிக்குக் கைமாறாக ஈடு செய்யக்கூடியது எதுவுமில்லை. ஆதலால், அறியாமை நீக்கிய ஆசிரியனின் உறவை மறவாது பேணிக் காத்து வளர்த்துக் கொள்ள வேண்டும்.

‘எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமத் துடைத்தவர் நட்பு.’

107

தங்களுக்கு நேர்ந்த துன்பத்தை நீக்குபவர்களுடைய நட்பை ஏழேழு பிறவியளவும் நினைப்பர் நன்றியறிவுடையோர்.

1. உனக்கு ஒரு துன்பம் வந்த பொழுது அதனைத் துடைத்து உதவி செய்தவர்களின் நட்பை, எப்பொழுதும் அன்புடன் நினைந்து போற்றி வளர்த்துக் கொள்க.

2. துன்பம் நீங்கியவுடன் துன்ப நீக்கத்திற்கு உதவி செய்தவரை மறந்துவிட்டால் மீண்டும் துணையாய் வருபவர்கள் இல்லாமற் போவர். அதனால், ஒருவர் செய்த உதவியை மறவாமல் பாதுகாப்பது பண்பினையும் வளர்க்கும்; மேலும் உதவியாளர்களைக் கொண்டு வந்தும் சேர்க்கும்.

<poem>‘நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று.’</poem

>
108

ஒருவர் செய்த நன்மையை மறப்பது அறமன்று. தீமையை அன்றே மறப்பது அறமாகும்.

1. ஒருவர் செய்த உதவியை மறக்கக்கூடாது.

2. ஒருவர் செய்த நன்மைக்கு ஈடாக நாம் செய்யக்கூடிய நன்மையை அல்லது உதவியைச் செய்ய என்றும் அணியமாய் இருக்கவேண்டும்.

3. நமக்கு ஒருவர் செய்த தீமையை மனத்துட் கொள்ளாது அப்பொழுதே மறந்துவிடவேண்டும்.

4. நமக்கு ஒருவர் செய்த தீமைக்கு எதிராக நாமும் தீமை செய்யலாகாது.

5. நமக்கு ஒருவர் செய்த தீமைக்கு எதிர்த்தீமை செய்யாத ஒழுக்கம் அத்தீமையை மறப்பதன் மூலம்தான் பெற முடியும்.

6. நமக்குத் தீமை செய்தவரை மனத்துட் கொள்ளாமைக்குச் சான்று, அவர்க்கு நன்மை செய்தலேயாம். ஆனால், தீமை வழியினால் அனுபவித்த துன்பம் நெஞ்சத்தை உறுத்திக்கொண்டே யிருக்கும். அந்த உறுத்தலிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள நமக்கு ஏற்பட்ட துன்பம் நமது அறியாமையினாலோ, ஊழின் வயத்தாலோ வந்தமைந்தது என்று நினைத்து அமைதி கொள்வது தீமையை மறத்தற்குத் துணை செய்யும் பழக்கம்.

‘கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.’

109

நமக்கு முன்பு நன்மையைச் செய்தவர், பின்பு கொன்றாற் போன்ற பெருந்தீங்குகளைச் செய்தாராயினும் அத்துன்பமெல்லாம் அவர் செய்த யாதானும் ஒரு நன்மையை நினைந்த அளவில் நீங்கும். அவர் துன்பம் செய்கிறார் என்ற நினைப்பும் நீங்கும்.

1. நமக்கு, ஒருவர்-பழகிய அன்புடன் பலகாலும் நன்மை செய்தவர் நல்லூழின்மையால் அறிந்தோ அறியாமலோ கொலையனைய துன்பத்தைச் செய்தாராயினும் அவர்மீது சினம் கொள்ளக்கூடாது.

2. அத்துன்பத்தை அனுபவிக்கும் பொழுது அவர் மாட்டுத் தோன்றும் சினத்தைத் தவிர்க்க அவர் முன்பு செய்த நன்மைகளில் யாதானும் ஒன்றை நினைந்து மகிழ முயன்றால் அத்துன்பமும் நீங்கும். துன்பம் செய்வாரிடத்துத் தோன்றும் சினமும் நீங்கும்.

‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.’

110

எத்துணைப் பெரிய அறங்களைக் கெடுத்தவர்க்கும் கழுவாய் உண்டு. ஆயினும் ஒருவர் செய்த நன்றியைக் கெடுத்தவர்க்குக் கழுவாயே இல்லை.

ஒருவர்க்கு உதவி செய்தல் அறம் என்றே போற்றப்பெறுகிறது. அதுபோலவே ஒருவர்க்குக் கிடைக்கும் உதவியைத் தடுக்காதிருத்தலும் அறமேயாம்.

1. எந்த ஓர் அறத்தையும் கெடுத்தல் கூடாது. ஆயினும் சில அறங்களைக் கெடுத்தார்க்குக் கழுவாய் உண்டு என்று அறநூல் கூறும். மருந்து உண்டு என்பதற்காக நோயை வரவழைத்துக் கொள்ளவேண்டிய கட்டாயம் என்ன? ஆதலால், எந்த சூழ்நிலையிலும் அறங்களைக் கெடுக்காது வாழ்தலே சிறப்பு.

2. அறங்களிலெல்லாம் தலையாயது உதவி செய்தல் என்ற அறம். உயிரினங்கள் தம்முள் ஒத்து உதவி செய்து கொள்ளும் இயல்பினாலேயே உலகியல் நடைபெறுகிறது. இந்த உலகியல் இடையீடின்றி நடைபெற வேண்டுமானால் உதவிகளைப் பாராட்டுதலும் உதவியாக இருந்தவைகளை - இருந்தவர்களைப் பேணிப் பாதுகாத்தலும் அறம். இந்தப் பேரறத்தைச் செய்யா தொழுகின் உலகியல் தடைப்படும். அதனால், கழுவாய் இல்லை என்றார். ஆதலால், எந்தச் சூழ்நிலையிலும் ஒருவர் செய்த உதவியை மறப்பதைத் தவிர்த்திடுக.

3. மறவாதிருப்பதற்குரிய பயிற்சி, திரும்பத் திரும்ப உதவி செய்தவர்களை நினைந்து பாராட்டுவதுதான். இங்ஙனம் உதவி செய்தவர்களை நினைந்து பாராட்டுவதால் அவர்களுடைய உதவி செய்யும் பண்பும் மேலும் வளரும்.

12. நடுவுநிலைமை

‘தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.’

111

நடுவு நிலைமையெனச் சொல்லப்படும் ஓர் அறம் மட்டுமே நன்று. அது பகை, உறவு, பொது, நட்பு என்னும் பகுதிதோறும் முறைமை தவறாது ஒழுகப் பெறுதல் வேண்டும்.

"தகுதி” எனச் சொல்லப்படும் பண்பு நடுவு நிலைமையேயாகும்.

1. சார்பால், பழக்கத்தால் மனம் உண்மையைக் காண்பதில் ஆராயாது தவறு செய்யக்கூடாது.

2. உறவு, பகை ஆகியவற்றின் காரணமாக நன்றல்லனவற்றை நன்று என்றும் தீதல்லனவற்றைத் தீது என்றும் சொல்லுதல் கூடாது.

3. உதவி செய்தல், வழக்குகளில் முடிவெடுத்தல் இன்னோரன்ன துறைகளில் செயற்படும்போது உறவு, பகை, நட்பு ஆகிய அடிப்படையில் செய்தல் அல்லது செய்தலைத் தவிர்த்தல் கூடாது.

4. நமக்குப் பகைவரேயானாலும் அவருக்கு எதிராக அறமல்லாதனவற்றைச் செய்யக் கூடாது. அவருக்குச் செய்யவேண்டிய நன்மையைச் செய்யாமலும் தவிர்க்கக் கூடாது.

5. ஒருவரிடம் நமக்கு இருக்கிற நட்பு அல்லது உறவின் காரணமாக அவர் செய்யும் அறமல்லாதனவற்றிற்கு உடன் நிற்கக் கூடாது.

‘செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து.’

112

நடுவு நிலைமை யுடையவனின் செல்வம், அழிவு இன்றி அவனுடைய வரும் தலைமுறையினருக்கும் வலிமையுடையதாக அமைந்து பாதுகாப்புத் தரும்.

செப்பம்: பகை, நட்பு ஆகியவற்றின் காரணமாக மாறுபடாது சிறப்புடன் அமைந்த குணம் அல்லது பண்பு.

சிறந்த நடுநிலைமையுடையார் யாரோடும் பகை கொள்ளார்; ஒரோ வழி பகை வந்தாலும் பகை நட்பாகக் கொண்டொழுகும் இயல்பினைப் பெற்று விளங்குவதால் செல்வத்திற்கு அழிவு வராது. ஆதலால், செல்வம் நிலையாக அமைந்து அடுத்த தலைமுறையினருக்கும் பயன்படும்.

நடு நிலைமையுடையார் பகை, நட்புக் காரணமாகச் செல்வத்தை இழப்பதற்குரிய வாயில்கள் இல்லை. ஒரோ வழி இழப்பினும் அவர் தம் நடுநிலைக் காரணமாக மற்றவர்கள் அவர்களை வாழ்விப்பர்.

‘நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல்.’

113

நடு நிற்றலைத் தவிர்ப்பதின் மூலம் வரும் பொருள் நன்மையைத்தரினும் அப்போதே ஒழிய விடுக; பேணாது கைவிடுக.

1. நடுவு நிற்றல் என்ற பண்பை இழப்பதால் வரும் பொருள் நன்மையைத் தராது என்பதை “நன்றே தரினும்” என்றார்.

2. நடுவு நிற்றல் என்ற பண்பை இழந்து பெறும்

(அ) பிறர் பங்கைத் திருடுதல்,

(ஆ) மற்றவர் உழைப்பிற்குரிய ஊதியத்தைத் தராமல் சுரண்டுதல்,

(இ) வணிகத்தில் ஏமாற்றுச் செய்தல்,

தி.IV.6.

(ஈ) முறைமன்று முதலியவைகளில் சார்ந்து நின்று முறைகேடாகச் செய்தல்,

ஆகிய வாயில்கள் வழி வரும் பொருள்களைத் தவிர்த்திடுக.

3. மேற்கூறிய வழிகளில் பொருளீட்டிச் சேர்த்தல் அறிவையும் ஆள்வினையையும் கெடுத்துவிடும். அறிவும், ஆள்வினையும் என்றும் பயன்படும் ஆற்றல்கள்; விலை மதிப்புள்ளவை. பொருளை நம்பி இவற்றை இழப்பது நிரந்தரமான இழப்பாகப் போய்விடும்.

4. அதோடு, நடுவிகந்த வழியில் பொருள் ஈட்டுவதால் அப்பொருளை இழப்பவர்கள் பகை கொண்டு, பொருளைத் தட்டிப் பறிக்கவும் துன்புறுத்தவும் செய்வர்.

5. வணிக ஏமாற்று வெளிப்படும் போது அரசு தண்டனைகள் வழங்கும்.

6. மேற்கூறிய வழிகளில் ஈட்டப்படும் பொருள் இம்மையிலும் மறுமையிலும் இன்பமே தராது, துன்பத்தையே தரும். ஆதலால், அப்பொழுதே கைவிடுக.

‘தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்.’

114

நடுவு நிலைமை யுடையவர்-நடுவு நிலைமை இல்லாதவர் என்பது அவரவர்களுடைய மறைவிற்குப் பின் நிற்கும் புகழினால் காணப்படும்.

அவரவர்களுடைய பிள்ளைகளாலும் அறியப்படும் என்று கூறுவர்; இக்கருத்துத் தவறன்று. ஆயினும் நடை முறையில் நூற்றுக்குநூறு பொருந்துவதில்லை. ஒரோ வழி மாறுபாடுகள் நிகழ்கின்றன. அதுமட்டுமல்ல; மாற்றங் களுக்கும் வளர்ச்சிக்கும் உரிய வாய்ப்புகளால் மாறுபடும் என்பதே உண்மை. “புகழ்” என்பது முற்றிலும் பொருந்தும்.

நடுவு நிலை நின்று வாழ்தல் மூலம் பலரை வாழ்விக்க வாய்ப்பு உண்டு. அதனால், மரணத்திற்குப் பிறகும் புகழ் நிலவும்; நடுவு நிலை பேணுக.

‘கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.’

115

உலகியலில் வாழ்தலும் கெடுதலும் இல்லாத மரபல்ல; இயல்பாக அமைந்தவை. இவற்றின் காரணமாக நடுவு நிலை பிறழாது நெஞ்சத்தாலும் (நினைவாலும்) பிறழாது வாழ்தலே அறிவுடையோர்க்கு அழகு.

1. வாழ்தல், கெடுதல் என்பன பெரிதல்ல. இவை உலகியலில் அமைந்தவை. நாம் உலகியலை அறிந்து, அறிவறிந்த ஆள்வினையோடு வாழ்ந்தால் கேட்டையும் கூட வாழ்வாக மாற்றி அமைத்துக் கொள்ளமுடியும். ஆதலால், மாற்றியமைத்துக் கொள்ள கூடிய வாழ்க்கைக்காக நிலையான-நீடித்த ஆக்கத்தையும் புகழையும் தரக்கூடிய நடுவு நிலைமைப் பண்பிலிருந்து நினைப்பாலும் பிறழ்ந்து ஒழுகவேண்டாம்.

‘கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுஒரீஇ அல்ல செயின்.’

116

தன் நெஞ்சம் நடுவு நிற்றலை ஒழிந்து நடுவு நிலைமையல்லாத செயல்களைச் செய்ய நினைக்குமாயின் தான் கெடுதல் உறுதி என்பதறிக.

1. நடுவு நிலை தவறிச் செல்ல நெஞ்சம் நினைக்குமாயின் நாம் கெட்டுப்போதல் உறுதி என்பதை உணர்ந்து நடுவு நிலையிலிருந்து பிறழ்தலைத் தற்காப்புணர்வுடன் தவிர்க்க வேண்டும்.

2. நடுவு நிலை பிறழ்ந்த சிந்தனை, நினைப்பு ஆகியவற்றிலிருந்து செயல்களில் முறை பிறழ்வு தோன்றுவது தவிர்க்க இயலாதது. ஆதலால், நினைப்பில் தவிர்த்தலே சிறந்த பாதுகாப்பு.

‘கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.’

117

நடுவு நிலைமையாகிய உயர்ந்த நன்மைகளை ஏற்று ஒழுகியதால் ஒரோவழி தாழ்வு ஏற்பட்டாலும் அதனை உலகம் கேடாகக் கருதாது. இழிவு செய்யாது.

1. நடுவு நிலைப் பண்பு மேற்கொண்டு ஒழுகுதலால் தாழ்வு வராது. தாழ்வாவது வறுமை, இகழ்வு முதலியன.

2. நடுவு நிலைப் பண்பை மேற்கொண்டு ஒழுகியதால், ஒரோ வழி தாழ்வு வந்தாலும் உலகம் அதனைத் தாழ்வாகக் கருதாது. ஏன் எனில் நன்மை என்பது ஓர் இடத்தில் தாழ்வைக் கொடுத்தால் நன்மை செய்யப் பட்டாரிடம் ஆக்கத்தைத் தந்திருக்கும். அதனால், ஓர் ஆக்கத்திற்காக ஏற்பட்ட தாழ்வு என்று கருதிக் கேடாகக் கருதாது, இகழாது உலகம். நடுவுநிலை பிறழ்ந்து செய்யப்படும், ஒரு நன்மை செய்யப்பட்டிருக்கும் நன்மை, (நன்மை இல்லை. ஆனால் நன்மைபோல அறிவிலிகளால் கருதப்படுவது) ஆக்கத்தைத் தராது. ஆதலால் நடுவுநிலை பேரறமாகிறது.

வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் விருப்பு - வெறுப்பு, பகை - நட்பு, சார்பு - சார்பின்மை, வேண்டியவர் - வேண்டாதவர், உதவியவர் - உதவாதவர், நமது இனம் - அயலினம், நமது மதம் - அயல் மதம், நமது சாதி - அயல் சாதி என்ற காரணங்களுக்காக மனம் மாறுபட்டு ஒழுகுதல் கூடாது; பழகுதல் கூடாது, நன்மையைச் செய்தல் அல்லது தவிர்த்தல் கூடாது. இங்ஙனம் நடுவுநிலைமை மேற்கொண்டு ஒழுகுதல் மூலம் உலக ஒப்புரவு தோன்றும்; வளரும்.

‘சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.’

118

நிறுவை செய்யப் பெறுவதற்கு முன் சமனாக நின்று, பின் எடையையும் அதற்கு நிகரான பொருளையும் நிறுத்து அளவு காட்டும் துலாக்கோல் போல, முதலில் எந்த ஒன்றையும் சமநிலையான நடுவுநிலையில் நின்று ஆராய்ந்து முடிவுகள் எடுத்து அறம் காட்டும் ஒழுக்கம், சான்றோர்க்கு அணியாகும்.

1. எந்த ஒரு செய்தியையும், கருத்தையும், நிகழ்வையும் சமநிலை உணர்வில் அதாவது தம் கருத்து, தம்முடைய நலம்போலக் கருதி ஆய்வு செய்தலே ஒழுக்கம்.

2. சாதி, இனம், சமயம், உறவினர், உறவினர் அல்லாதார் பகை - நட்பு காரணமாக ஒன்றை ஆய்வு செய்வதிலும் ஏற்பதிலும் விலக்குவதிலும் முறை பிறழாது அறம் நோக்கியே செயற்படுதல் வேண்டும்.

3. இன்றுள்ள உலகியல் இந்தச் சிறந்த அறத்தின்வழி இயங்காததே துன்பம் அனைத்திற்கும் காரணம். இத்தகு விருப்பு, வெறுப்புகள் இருப்பதால் செல்வமுடையார், அதிகாரமுடையார் ஆகியோரிடத்தில் நடிப்பாளர்கள் மேவிப் பழகும் வாய்ப்புகள் ஏற்பட்டு உண்மையான நட்பும் உறவும் காண இயலவில்லை. இத்தகு சூழ்நிலையால் இம்மைக்குப் பயன் இல்லை; மறுமைக்கும் பயன் இல்லை.

துலாக்கோலின் நடுமுள், தட்டுகளில் உள்ள பொருள்களின்பால் நாட்டமில்லாமலும், பொருள்களுக்கு உரியார்பால் சார்பு இல்லாமலும் அளவு காட்டும் இயல்பே தன் இயல்பென இயங்குதல் போல் நடுவு நிலை உடையவர்களும், அறத்தியல்பை இலக்காகக் கொண்டு முடிவுகள் எடுக்க வேண்டும்; செயற்பட வேண்டும்; இயங்க வேண்டும்.

‘சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.’

119

நடுவு நிலைமையாவது சொல்லின்கட் சார்பு இல்லாமல் இருப்பதாகும். இப்பண்பு மனத்தின்கண் சார்பு இல்லாது இருந்தால் தான் வந்தமையும்.

1. ஒன்றற்குச் சார்பாக அல்லது எதிரிடையாகப் பேசுதல் என்பது வாழ்வியலில் தவிர்க்க முடியாதது. இயற்கையும் கூட! ஆனால், அப்படிச் சொல்லுவதற்குக் கண்ணுக்குத் தெரிந்த அல்லது தெரியாத மறைமுகமான சார்புகள் ஏதும் இல்லாதிருத்தல் இன்றியமையாதது.

2. புகை படிந்த கண்ணாடி, உருவத்தைத் தெளிவாகக் காட்டாததுபோல், கலங்கிய தண்ணீர் தம்மிடைப் பட்ட பொருள்களைத் தெளிவாகக் காட்டாதது போல், பகை-நட்பு, உறவு-உறவின்மை, தன்னலம் ஆகிய சார்புகளால் தாக்கப்பெற்ற மனம், எது அறம்? எது நன்மை? எது தீமை? என்பதை அறியாது. ஆதலால், நமது மனம் சார்புகளால் தாக்கப்பட்டு அறத்தினை, நன்மையைத் தேர்ந்து தெளிந்து அறியும் இயல்பினை இழந்துவிடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

வாழ்க்கை யென்றால் பகையும்-நட்பும் உறவும்-உறவின்மையும் இருக்காதா? இருக்க வேண்டாமா? ஆம், இருக்கும்! துலாக் கோலைவிட்டு அளவு காட்டும் நடுமுள் விலகியா போய்விட்டது? துலாக் கோலிலிருந்து எளிதில் பிரிக்க முடியாதபடி நடுமுள் இருக்கிறது. அதுபோல நடுநிலைமை, அறம் என்ற பெயரால் யாரிடமிருந்தும், பிரிந்து ஒதுங்குவது, ஒதுக்குவது என்பது கொள்கையும் அல்ல; கோட்பாடும் அல்ல. அந்த உறவுகள் நன்மையை அறத்தை அறிந்து சொல்லுவதில் தடையாக இருக்கக் கூடாது. புவியீர்ப்பு ஆற்றலை வெற்றிகண்டு உயிர்க்குலம் வாழ்வதுபோலச் சார்புகளின் காரணமாக நடுநிலை பிறழாமல் நாம் வாழக்கற்றுக் கொள்ளவேண்டும். நம்மைச் சார்ந்தோரையும் இம்முறையில் பழக்கி விட்டால் சார்புகள் காரணமாக நடுநிலை பிறழ வேண்டிய இன்றியமையாமை வராது. அதுமட்டு மன்று, நடுவுநிலை யுடையோர் அணி வலிமை பெறும்.

3. சொல், வாயோடு மட்டும் உறவுடையது அன்று. மனத்தின் மாட்சிக்கு - நடுவுநிலைப் பண்புக்கு ஏற்பவே சொல் அமையும். பயன் தரும்.

‘வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோற் செயின்.’

120

பிறர் பொருளையும் தம் பொருள்போல் பேணி வாணிகம் செய்வார்க்கு வாணிகம் நன்றாக அமையும்.

1. தன்னயப்பு மிகவும் கொடுமையான நஞ்சு. தன்னயப்பு பிறர் பொருளையும் தம் பொருளாக்கிக் கொள்ளத் தூண்டும். இத்தூண்டுதல் இயக்கும் உணர்வுக்கே பேராசை என்று பெயர். பேராசை கூடாது.

2. “பிறர் பொருள்” என்பது ஆழ்ந்தகன்ற பொருளுடையது. இன்றைய உலகியலில் உள்ள வழக்கின்படி “சட்டங்களின் அடிப்படையில் உடைமையாகப் பெற்றிடுதலே” என்பதை உரிமைக்குச் சான்று என்று கொள்ளக்கூடாது. முறை கேடான வழிகளில் கூட, பிறர் பொருளைத் தம்பொருள் போலவே ஆக்கிக் கொள்பவர்கள் இருக்கிறார்கள்; இதுவும் கூடாது.

3. காலம், உழைப்பு, பொருள் ஆகிய அனைத்திலும் எடுத்துக் கொள்வதற்கு ஏற்ப, திரும்பக் கொடுக்கத் தவறுதல் வாணிகம் அன்று. நெறிமுறை தவறிய வாழ்க்கையுமாகும். ஆதலால், இந்த வாழ்வியலில் நாம் துய்த்து மகிழும் பொருள்களையும் அனுபவங்களையும் வழங்கும் இயற்கை உலகிற்கும், சமூதாயத்திற்கும் நாம் திரும்பக் கொடுக்கும்படி சிறந்த வாழ்க்கை, - அற வாழ்க்கை வாழவேண்டும்.

4. குறிப்பாக வாணிகத் துறையில் ஈடுபட்டிருப்பவர்கள் கூடுதல் விலை, குறைந்த எடை - அளவு முதலியன செய்தல் தீது. செல்லாக் காசுகளை வாங்க மறுப்பது போலக் கலப்படப் பொருள்களை விற்கவும் மறுக்க வேண்டும்.

13. அடக்கமுடைமை

‘அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.’

121

அடக்கமுடையராயிருத்தல் பெரும் பயனையும் புகழையும் தரும். மனம், மொழி, மெய் மூன்றாலும், அடக்க முடையராய் வாழ்தலே அடக்கமுடைமையாகும்.

தற்செருக்கின்றி மற்றவர்களை மதிக்கும் மனப்பான்மையுடையோரே அடக்கமுடையராய் வாழ்தல் இயலும்.

1. யார்மாட்டும் அடக்கம் உடையராய் வாழ்தல் வேண்டும்.

2. எல்லாரையும் மதிக்கவும் பெருமைப்படுத்தவும் வேண்டும்.

3. தனக்குத் தெரியாதவை பல மற்றவர்களுக்குத் தெரியும் என்று கருத வேண்டும்.

4. மற்றவர்களிடமிருந்து தெரிந்துகொள்ளும், ஆர்வம் வேண்டும்.

5. எந்தச் சூழ்நிலையிலும் தன்னைத்தானே பெருமையடித்துக் கொள்ளுதல் கூடாது.

6. தற்செருக்கு இல்லாது பழகுதல் வேண்டும்.

7. பிறர், தன்னைப் புகழ அனுமதித்தல் கூடாது.

‘காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு.’

122

உயிர்களுக்கு அடக்கத்திலும் சிறந்த செல்வம் இல்லை. ஆதலால், அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு அழியாமல் காக்கவும்.

1. பொருள் ஈட்டவும் அடக்கம் துணை செய்யும்; பொருள் செய்யும் முயற்சியில் தொடர்புடையாரிடத்திலெல்லாம் அடக்கமாகப் பழகுக.

2. அடக்கமுடையராக இருப்பது, பொருள் காக்கும் முயற்சியிலும் துணைசெய்யும். மற்றவர் இவர் செல்வமுடையாரென்று கருதாவண்ணம் அடங்கி ஒழுகினால் செல்வத்திற்குக் கேடு இல்லை; காப்புப் பெறும்.

3. அடக்கமுடையராக வாழ்ந்து, செல்வத்தைத் துய்ப்பதில் பலமடங்கு இன்பம் உண்டு. ஆதலால், அடக்கமுடையாராக இரு; செல்வத்தின் மிடுக்கைக் காட்டாதே.

‘செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.’

123

ஒருவன், தான் அறியத்தக்க நூல்களை அறிந்து அடங்கி ஒழுகுவானாயின், அவ்வடக்கம் பிறரால் அறியப்பட்டுச் சிறந்த நன்மை பயக்கும்.

1. கற்று அறியவேண்டிய நூல்களைக் கற்று, அறிய வேண்டியவைகளை அறிக.

2. கற்று அறியவேண்டிய நூல்கள் திருக்குறள், திருமுறைகள், திருவாய்மொழி (திவ்வியப் பிரபந்தங்கள்) முதலியன. ஆங்கிலத்தில் சேம்சு ஆலன் எழுதிய வாழ்க்கை நூல்கள்.

3. ஆராய்ந்த அறிவின் முடிவு, அடக்கமுடையவராயிருத்தல் என்பதறிந்து அடக்கமாக வாழ்க.

4. அறிவுடைமையின் காரணமாக அகந்தை வராமல் அடக்க முடையவராயிருக்கவும். இதனால் மேலும் அறிவு வளரும். பாராட்டப்பெறும்.

‘நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.’

124

இயற்கையின் ஒழுங்கு பிறழா நிகழ்ச்சிகளுக்குள் நின்று ஒழுகி அடக்கமுடையராய் வாழ்பவரின் உயர்ச்சி, மலையினும் உயர்ந்தது.

வாழ்க்கையின் அமைப்பும் முறையும் இயற்கையோடிசைந்தது. உயிர்க்குப் புலன்களும், உடற்குப் பொறிகளும் இன்ப நுகர்ச்சிக்கும் அவ்வழியே வேட்கைத் தணிவிற்கும் தெளிவிற்குமாகவே அமைந்தவை. ஐம்புலன் நுகர்வு இழிவன்று; தவறன்று; முறையன்று; குற்றமுமன்று. ஆனால் ஐம்புல நுகர்வு தலையாய அன்பையும், அவ்வழியிலான இன்பத்தைக் குறிக்கோளாகக் கொண்டதாயும் இருத்தல் வேண்டும். நுகர் தலிலும் வெறித்தன்மை கூடாது; அடக்கம் இருத்தல் வேண்டும். நுகர்வில் வெறித்தன்மை தோன்றின் அகந்தையும், அழுக்காறு முதலிய தீக்குணங்களும், அவ்வழியே பகையும் தோன்றும். ஆதலால், இயல்பான நெறியில் பொறிபுலன்கள் அமைந்தவகையில் வாழ்க்கையை நடத்துதல் அடக்கத்தினைத் தரும். இத்தகையோர் ஆகுலங்கள் - ஆரவாரங்கள் செய்யார். ஆயினும் அவர்தம் பெருமை மலையைவிட உயர்ந்தது. மலையின் உயரம், வளத்தின் சிறப்பு, மலையை அணுகுவோர்க்கே தெரியும். மலை ஆர்ப்பரவம் செய்யாது. ஆனால், முகட்டில் துஞ்சும் முகில் இடித்து ஆர்ப்பரவம் செய்யும். முகிலுக்கு நிலைபேறு இல்லை. மலையே உயர்ந்தது.

1. இயற்கையோடிசைந்த வாழ்வில் ஈடுபடுக.

2. ஐம்புலன்களை வலிந்து அடக்கித் துன்புற வேண்டாம். அவற்றின் இயல்பான இன்பங்களை ஆர்ந்து நுகர்க.

3. ஐம்புலன் அடக்கம் என்பது, நெறிதவறி நுகர ஆசைப்படுதலைத் தவிர்த்தலேயாகும்.

4. புலன் நுகர்விலும் தன்னலமறுப்பு, பிறர்நலம் பேணல், அமைதி கைக்கொள்ளல் முதலியன அமையுமானால் சிறப்புடைய வாழ்க்கையாகும்.

5. காதலின்பம் தன் காதல் மனைவியை இன்புறுத்தலுக்காகவே, காதலித்தல் இயற்கை வழியிலானதென்க. தாம் மட்டும் இன்புறக் காதலித்தல் இயற்கை வழியன்று; அறமும் அன்று. இன்புறுத்துதலுக்காகவும் அஃது அமைந்ததென உணர்தல் வேண்டும்.

‘எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.’

125

செருக்கின்றி அடங்கி ஒழுகுதல் எல்லார்க்கும் பொதுவாக நல்லதாகும். ஆயினும் அவ்வெல்லாருள்ளும் செல்வம் உடையவருக்கு அதுவே வேறொரு செல்வமாய் அமையும்.

பொதுவாகச் செல்வம் செருக்கைத்தரும் இயல்பினது. அதனால், செல்வமுடையார் அடக்கமுடையராயிருத்தல் இயல்பன்று.

செல்வமுடையார் அடக்கமுடையராக இருந்தால் அச்செல்வம் கேடுறாமல் வளரும்; அதனால் அதனை வேறொரு செல்வம் என்றார்.

1. செல்வத்தின் காரணமாகச் செருக்குக் கொள்ளாமல் அடக்கத்துடன் வாழ்க.

2. செல்வத்தின் துணைகொண்டு நினைத்ததை முடிக்கக் கூடும் என்ற எண்ணத்தில் செருக்குக் கொள்ளுதல் கூடாது. இங்ஙனம் செருக்குக் கொள்ளாது முயன்றால் நினைத்தது எளிதில் - பெரும்பொருள் செலவில்லாமல் கைகடும்.

3. செல்வமுடையோம் என்ற எண்ணத்தில் ஆடம்பரமாக வாழாதே; ஆடம்பரமான வாழ்வு, மற்றவர் மனத்தில் அழுக்காற்றைத் தூண்டும். அதனால் தீமைகள் செய்வர். செல்வம் அழியும் வாய்ப்புகள் உருவாகும். ஆதலால், எளிய வாழ்க்கையே வாழ்க.

‘ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து.’

126

ஆமையானது, தீங்கு வந்துற்றபொழுது பாதுகாப்பாகத் தனது உறுப்புகளை உள்ளடக்கிக் கொள்ளும். அதுபோல, மனிதனும் தீமை வந்து சாராத வண்ணம் தன் பொறிகளை அடக்கிக் கொள்ளும் ஆற்றல் பெறுவானாயின் எழுமையும் பாதுகாப்பாக அமையும்.

ஆமை தன் உறுப்புகளைத் தீமை வந்துற்ற பொழுது அடக்கிக் கொண்டாலும், நேரிய நலம் பயக்கும் இன்பங்களைத் துய்க்கத் தனது உறுப்புகளை வெளியே அமைத்து வாழ்தல் கண்கூடு. அதுபோல ஐம்புலன்களை, பொறிகளை அடக்குதல் என்றால் நுகர்தல் கூடாது என்பதோ அழித்து விடுதல் என்பதோ பொருளன்று.

நல்லற நெறியில் வந்து பொருந்தும் இன்பங்களை ஆர்ந்து துய்ப்பதில் தடையில்லை என்பது பெறப்பட்டது.

1. நம்முடைய உழைப்பால் கிடைக்கும் பொருள்களை நுகர்தலில் தவறில்லை.

2. உழைப்பாலும், உறவு முறை அமைப்புகளாலும் தமக்கே உரியவற்றை மட்டும் நுகர விரும்புக.

3. நுகர்தலை ஆசையாக மாற்றிக் கொள்ளாமலும் இன்றியமையாத் தேவையாக ஆக்கிக் கொள்ளாமலும் நுகர்தல் வேண்டும். துய்த்தலோடு துய்ப்பித்தலும் நோக்கமாதல் வேண்டும்.

4. ஆதலால், விரும்பி நுகர்பவைகள், தேவைகளாக மாறிவிடாமல் தடுக்க இடையிலேயே நோன்புகளின் பெயரால் நுகர்வுகளுக்கு ஓய்வு தருதல் நல்லது.

5. ஆகையால் பொறிகளை உள்ளடக்க இயலாது போனால், பொறிகளுக்கு வேறு நல்ல பணிகளைத் தந்து தீமையைத் தவிர்த்திடலாம்.

6. தீயன விளைவித்திடும் நட்பு, சூழல் ஆகியவற்றைத் தவிர்ப்பதும் துணை செய்யும்.

7. அகநிலையில் வளர்ந்தவர்களே தனித்திருக்க இயலும்; தீய எண்ணங்களின்றித் தனித்திருக்க இயலும். ஆதலால் அகநிலையில் போதிய வளர்ச்சி பெறாத மக்கள் தனித்திருப்பதைத் தவிர்த்து நல்லோருடன் எப்போதும் சேர்ந்திருப்பது நல்லது மட்டுமன்று, தேவையுமாகும்.

‘யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.’

127

மக்கள் வேறு எவற்றைக் காவாவிடினும் நாவையாவது காத்துக் கொள்க. நாவைக் காவா விடின் சொற்குற்றப்பட்டுப் பெருந்துன்பம் அடைவர்.

1. பொறிகளையும் புலன்களையும் மற்றவர்க்குத் தீமை செய்யாவண்ணம் அடக்கி ஒழுகுதல் நல்லொழுக்கம்.

2. இங்ஙனம் எல்லாப் பொறிகளையும் புலன்களையும் அடக்காது போனாலும் நாவையாவது அடக்கி அதாவது வாய்ப்பேச்சை அடக்கி ஒழுகுதல் இன்றியமையாதது.

உலகின் எல்லாத் தீமைகளும் வாயினால்தான் தோன்றின. கோள்கறல், புறங்கூறல், பழிதூற்றல் முதலியன கொடிய எதிர்விளைவுகளை உண்டாக்க வல்லன. ஆதலால், வாயை அடக்கிப் பேசினாலே பல தீமைகளை வெற்றி கொள்ளலாம்.

3. கோள் என்பது ஒருவரைப் பற்றி, மற்றொருவரிடத்தில் இல்லாததைச் சொல்லித் தப்பான எண்ணத்தை உருவாக்கல்; பிரித்தல்; பகை கொள்ளச் செய்தல். இது ‘குறளை’ என்றும் வழங்கப்படும்.

4. புறங்கூறல் என்பது ஒருவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றித் தவறான கருத்து உண்டாகுமாறு செய்திகளைக் கூறல். ஆனால், அவரே நேரில் காணுமிடத்தில் பாராட்டுதலும் செய்தல். இது முறையன்று. அப்பரடிகள் "குற்றங்கள் பேசியும். குணங்களைப் பேசியும்” என்பார்.

5. பழிதூற்றல் என்பது; குற்றம் குறைகளே இல்லாத மனிதர் உலகத்தில் இல்லை; இருத்தல் இயலாது. ஒருவரின் குணங்களை மறைத்து விட்டு, அவரிடம் உள்ள குறைகளையே பலரறியக் கூறுதலால் குற்றங்கள் நீங்காதது மட்டுமின்றிப் பழியும் பகையும் வளரும். குற்றங்களுடையவரிடம் நட்புணர்வு கொண்டு அவர்தம் குற்றங்களை நேரில் மற்றவர் அறியாவண்ணம் கூறின் குற்றங்கள் நீங்க வாய்ப்புண்டு. ஆதலால், கோள் சொல்லுதல், புறங்கூறுதல், பழி தூற்றுதல் ஆகிய செயல்களைத் தவிர்த்திடுக.

‘ஒன்றானும் தீச்சொற் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.’

128

ஒருவன் கூறும் தீய சொற்களின் பொருளால் விளையும் துன்பம் ஒன்றேனும் பிறர்க்கு உண்டாயின், அவன் சொன்ன பயனுடைய பிற சொற்களும் நல்லன வல்லவாகி விடும்.

1. சிலர் பாராட்டுவர்; போற்றுவர். அங்ஙனம் பாராட்டும் பொழுதே “ஆனாலும்” என்று போட்டுத் தீமையையும் சொல்லி விடுவர். இங்ஙனம் சொல்வதால் - பயனுடையனவும் பயனற்றனவும் கலந்து கூறுவதால்-பயனுடையன, மகிழ்வு தரத்தக்கன பல கூறினாலும் ஒரு தீச்சொல் நம்பிக்கையைக் கெடுத்து, நல்லெண்ணத்தைக் கெடுத்துத் தீய பயன்களைத் தந்துவிடும். ஆதலால், நல்லனவே சொல்லுக! பேசுக! ஒரு தீச்சொல் பல நன்மைகளைக் கெடுத்து விடும். ஆதலால், சொற்களைத் தேர்ந்து பேச்சுக்குப் பயன்படுத்துக!

‘தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.’

129

ஒருவன், ஒருவனை நெருப்பினால் சுட்ட புண் மருத்துவத்தாலும் காலத்தாலும் ஆறும். ஆயினும் அப்புண்ணினால் ஏற்பட்ட தழும்பு (வடு) மாறாது இருக்கும். ஆனால் ஒருவனை ஒருவன் நாவினால் சுடுதலாகிய கடுஞ் சொல்லையும் பழிச்சொல்லையும் கூறின் அச்சொற்கள்

‘யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்விழுக்குப் பட்டு.’

127

மக்கள் வேறு எவற்றைக் காவாவிடினும் நாவையாவது காத்துக் கொள்க. நாவைக் காவா விடின் சொற்குற்றப்பட்டுப் பெருந்துன்பம் அடைவர்.

1. பொறிகளையும் புலன்களையும் மற்றவர்க்குத் தீமை செய்யாவண்ணம் அடக்கி ஒழுகுதல் நல்லொழுக்கம்.

2. இங்ஙனம் எல்லாப் பொறிகளையும் புலன்களையும் அடக்காது போனாலும் நாவையாவது அடக்கி அதாவது வாய்ப்பேச்சை அடக்கி ஒழுகுதல் இன்றியமையாதது.

உலகின் எல்லாத் தீமைகளும் வாயினால்தான் தோன்றின. கோள்சுறல், புறங்கறல், பழிதூற்றல் முதலியன கொடிய எதிர்விளைவுகளை உண்டாக்க வல்லன. ஆதலால், வாயை அடக்கிப் பேசினாலே பல தீமைகளை வெற்றி கொள்ளலாம்.

3. கோள் என்பது ஒருவரைப் பற்றி, மற்றொருவரிடத்தில் இல்லாததைச் சொல்லித் தப்பான எண்ணத்தை உருவாக்கல்; பிரித்தல்; பகை கொள்ளச் செய்தல். இது ‘குறளை’ என்றும் வழங்கப்படும்.

4. புறங்கூறல் என்பது ஒருவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றித் தவறான கருத்து உண்டாகுமாறு செய்திகளைக் கூறல். ஆனால், அவரே நேரில் காணுமிடத்தில் பாராட்டுதலும் செய்தல். இது முறையன்று. அப்பரடிகள் "குற்றங்கள் பேசியும். குணங்களைப் பேசியும்" என்பார்.

5. பழிதூற்றல் என்பது; குற்றம் குறைகளே இல்லாத மனிதர் உலகத்தில் இல்லை; இருத்தல் இயலாது. ஒருவரின் குணங்களை மறைத்து விட்டு, அவரிடம் உள்ள குறைகளையே பலரறியக் கூறுதலால் குற்றங்கள் நீங்காதது மட்டுமின்றிப் பழியும் பகையும் வளரும். குற்றங்களுடையவரிடம்

2. கற்ற அறவழிக் கருத்துகளை அறிவாக்கித் தெளிந்து அவ்வழி நின்று அடங்கி ஒழுகுதல் செய்க.

3. எந்தச் சூழ்நிலையிலும் சினம் வாராமல் தற்காத்து ஒழுகுதல் வேண்டும்.

4. பலர் கண்டு உரையாடி மகிழ்தலுக்குரிய இனிய பொழுதுகளை உருவாக்கிக் கொள்க.

14. ஒழுக்கமுடைமை

‘ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.’

131

ஒழுக்கம் எல்லாருக்கும் சிறப்பைத் தருதலால், அந்த ஒழுக்கம் உயிரினும் சிறப்புடையதாகப் பேணிக் காக்கப்படும்.

ஒழுங்குகளிலிருந்து ஒழுக்கம் தோன்றுகிறது. ஒழுக்கங்கள் ஒழுங்குகளை உறுதிப்படுத்துகின்றன. உலகில் வாழும் எந்த உயிருடனும் தன்னயப்பின் காரணமாக மோதாது செவ்விதாய் வாழும் நிலையே ஒழுக்கமுடைமையாகும். ஒழுக்கமுடைமைக்கு அளவுகோல் பிறர் நலம் பேணும் பண்பேயாகும். பொறிகளிலும் புலன்களிலும் ஒரு சேரத் தூய்மை காத்தலே ஒழுக்கமுடைமை. இங்குத் தூய்மை என்பது அன்பின் வழி இயங்குதலேயாம்.

1. ஒழுக்கத்துடன் தொடர்பு இல்லாத சிறப்புகள் சிறப்புடையன அல்ல; பெருமைகள் பெருமையுடையன அல்ல. அவற்றை விரும்பற்க. ஒழுக்கம் உடையராய் வாழ்தலே வாழ்க்கை. உயிரிடத்து உள்ள காதல் போலவே ஒழுக்கத்திலும் ஆர்வம் காட்டுக. ஒழுக்கமுடையராய் வாழ்ந்தாலே வாழ்க்கைக்குப் பயன் உண்டு. அதனால் ஒழுக்கத்தை உயிரினும் பெரிதாகப் போற்றுக.

தி.iv.7.

2. யாருக்கும் (பகைவர் உட்பட) மனத்தினால் தீங்கு எண்ணாதே. தீங்கு எண்ணாதிருத்தல் இயல்பன்று? ஆதலால் யார் மாட்டும் அன்பு செய்யும் எண்ணமே தீமை நினைப்பதைத் தடுக்கும். இது தலையாய ஒழுக்கம்.

3. மற்றவர் வருந்தப் பேசாதே. மற்றவரை வருத்தும் பேச்சுக்களாவன: கோள் கூறுதல், புறங்கூறுதல், இழித்துக் கூறுதல்; பழித்துக் கூறுதல். இவற்றைத் தவிர்த்திடுக. எல்லாரையும் பாராட்டுக.

4. உடலால் யாருக்கும் தீமை செய்யாதே, இது வன்முறை உணர்வில் விஞ்சி அடித்தல் கொல்லுதல் முதலியனவாம். இந்த வன்முறைச் செயல்களைத் தவிர்த்திடுக.

‘பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.’

132

ஒழுக்கத்தை எந்த வகையிலும் கெடாதவாறு வருந்தியும் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும்.

தெரிந்து ஆராய்ந்தாலும் ஒழுக்கமே துணையாக அமைகிறது.

1. நல்லொழுக்கத்திற்கு இடர்ப்பாடுகள் மிகுதி. அந்த இடர்ப்பாடுகளைக் கடந்து ஒழுக்கத்தைக் காப்பாற்ற வேண்டும்.

2. ஒழுக்கத்திற்கு எதிராக நின்று கெடுப்பவை தன்னயப்பு துய்த்தல் வேட்கை முதலியன. இத்தீய இயல்புகளைக், கடிந்து ஒதுக்குதல் வேண்டும். தீயொழுக்கங்களைக் கடிந்து ஒதுக்குதலை விட நல்லொழுக்கங்களை இடை விடாது மேற்கொண்டு ஒழுகுதலே சிறந்த வழி.

‘ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.’

133

ஒழுக்கமுடையராய் இருத்தலே குடிமக்களுக்குரிய சிறப்பு. ஒழுக்கமிலராயின் குடிமை நிலையிலிருந்து தாழ்ந்து கீழானவர்களாகிக் குற்ற இயல்பினர் வகையில் சேர்க்கப் படுவர்.

“இழிந்த பிறப்பு” எனின் மானிடப் பிறப்பின்றி மானிட உருவில் உலவும் கொடிய விலங்குகள், நச்சு நோய்களைப் பரப்பும் புழு, பூச்சிகள் பட்டியலில் சேர்த்து எண்ணப்படுவர் என்றும் கூறலாம்.

1. குடிமைப் பண்பு என்பது நாட்டின் பொதுப் பண்புக்கு இசைந்து வாழ்தல். அதாவது நாட்டில் உள்ளோர் அனைவருடனும் ஒத்துப் போகத் தக்க வாழ்க்கையினை மேற்கொள்ளல்.

2. அதாவது இனம், சாதி, சமயப்பிரிவுகள் பாதிக்கப்படாத பொதுமை உணர்வுடன் பலருடனும் இசைந்து வாழ்தல்.

3. மற்றவர்க்குப் பயன்படும் வாழ்க்கை வாழ்தல்.

4. சமூக உறவுகளைக் கெடுக்கும் செய்திகளைப் பேசாதும், செய்யாதும் வாழ்தல்.

‘மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்.’

134

கற்றவேதம் மறந்தானாயினும் திரும்பக் கற்றுக் கொள்ளலாம், பார்ப்பான். பார்ப்பான் பிறப்புக்குரிய ஒழுக்கத்தில் கெடுவானாயின் கெட்டுப்போவான்.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பது வள்ளுவம். ஆதலால் இங்குப் ‘பிறப்பொழுக்கம்’ என்பது இரண்டாவது பிறப்பையேயாம். பார்ப்பனர்க்கு இருபிறப்பு உண்டு. முதற்பிறப்பு எல்லாரும்போல. இரண்டாவது பிறப்பு, முப்புரிநூல் அணிந்து காயத்திரி முதலிய மந்திரங்கள் எண்ணத்தலைப்படுதல். இந்த அடிப்படை ஒழுக்கம் தவறக் கூடாது.

பார்ப்பனர்க்குரிய பிறப்பொழுக்கம் குன்றியவர்களைப் பார்ப்பனர் என்று மதிக்காதே!

பார்ப்பனராவார் வேதம் ஓதுதல், ஓதுவித்தல் என்ற தொழிலையே மேற்கொள்ள வேண்டும். மற்றத் தொழில்கள் பார்ப்பனர்க்குரியன அல்ல. மற்றத் தொழில்கள் செய்வாராயின் அந்தந்த இனத்திலேயே அவர்களைச் சேர்க்க வேண்டும்.

‘அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு.’

135

அழுக்காறு உடையவரிடம் வளர்ச்சி இல்லை. அதுபோல ஒழுக்கமில்லாதவனுக்கு உயர்வு இல்லை.

அழுக்காறு கொள்ளும் மனம் வளர்ச்சிக்குரிய நெறிகளை நாடாமல் மற்றவர் வளர்ச்சியைக் கண்டு எரிச்சலுற்று அழிக்கும் செயல்களில் ஈடுபடுவதால், அவர் வளர்ச்சிக்குரிய வழிகள் தடைப்பட்டுப் போகின்றன. ஆதலால், மற்றவர் வளர்ச்சியைப் பார்த்து மகிழ்க! பாராட்டுக! அவர் வளர்ந்த வகைகளை அறிந்து அந்நெறிகளைப் பின்பற்றுக! இதுவே வளர்ச்சிக்குரிய வழி!

ஒழுக்கம் என்பது உயர்வுக்கு வாயில், ஒழுக்கமில்லாதாரிடம் காலம் வீணாகும். அவர்தம் பொறிகளும், புலன்களும் தீயவழியிலான நுகர்ச்சிகளில் ஈடுபடும். அதனால், உயர்வுக்குரிய வாயில்கள் அடைபட்டுத் தாழ்வுற்றுத் துன்புறுவர்.

ஆதலால், ஒழுக்கத்திற்கு வித்தாகக் காலம் போற்றுக. வாழ்க்கையை வளர்க்கும் வள்ளுவத்தைப் போற்றுக; பொறிகளுக்கும் புலன்களுக்கும் நற்காட்சிகளையும், நற்கருத்துகளையும் விருந்தாகத் தருக.

‘ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.’

136

மனவலிமையுடையோர், ஒழுக்கத்தில் நின்றபின் அருமை நோக்கி ஒழுக்கத்தைக் கைவிடார். ஒழுக்கத்தில் வழுவிவிடின் இழிகுலத்தைச்சாரும் குற்றமுண்டாகும்.

ஒழுக்க நெறியில் நிற்றல் சற்று அருமையான முயற்சியேயாகும். தொடக்கநிலையில் ஒழுக்கநெறி நிற்றல் இடர்ப்பாடாக இருக்கும்; ஆயினும், பழகப் பழக ஒழுக்கநெறி இயல்பாக அமைந்துவிடும். எளிதில் எய்த இயலாத ஆக்கத்தையும் பெருமையையும் அடையலாம். ஆதலால், அருமை கருதி அயர்ந்துவிடாமல் தொடர்ந்து ஒழுக்க நெறியில் நிற்றல் வேண்டும்.

‘ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.’

137

ஒழுக்கமுடையவர் மேம்பாட்டை அடைவர். ஒழுக்கம் தவறியவர் அடைதற்குரியதல்லாத பழியை அடைவர்.

ஒருவர் ஒழுக்கம் உடையராயிருந்தால் அவர்க்கு மட்டும் நன்மையன்று. அவரைச் சார்ந்தோர்க்கும் அவர்தம் நாட்டுமக்களுக்கும்கூட நன்மைதருவது. அதனால், எல்லார்க்கும் நன்மைபயக்கும் ஒழுக்க நெறியை அடைதல் நன்மையையும் தரும்; மேன்மையையும் தரும்.

ஒழுக்கத்தினின்றும் இழிதல், தனக்கும் தீமையைத் தரும்; மற்றவர்க்கும் தீமையைத் தரும். பலரால் பழிக்கப்படும் பழியையும் தரும். ஆதலால், ஒழுக்கத்தில் தவறுவதைத் தவிர்த்திடுக. ஒழுக்கத்தில் தவறுவதால் பொதுப்படையாக, “கெட்டவர்” என்று பெயர் வாங்கிவிடுவதால் சில சமயங்களில் தாம் செய்யாத தவறுகளுக்கும் ஆளாக்கப்படுவர் என்பதனால் “எய்தாப்பழி” என்றார்.

‘நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.’

138

நல்லொழுக்கம் அறத்திற்கு வித்தாகும். தீய ஒழுக்கம் என்றும் துன்பம் தரும்.

நல்லொழுக்கம் அறத்திற்கு வித்தாகும் என்று கூறியதால் இன்பம் வந்தடையும் என்பது உணர்த்தியது. தீயொழுக்கம் என்றும் துன்பம் தரும் என்றதால் இம்மை மறுமை இரண்டிலும் என்பது பெறப்பட்டது.

ஆதலால், அறத்திற்கும் இன்பத்திற்கும் காரணமாக இருக்கும் ஒழுக்கத்தை இடையீடின்றி மேற்கொள்க.

‘ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.’

139

ஒழுக்கமுடையவர்கள் மறந்தும் தம் வாயால் தீய சொற்களைச் சொல்லுதல் இயலாது.

ஒழுக்கமுடையவர்கள் மற்றவர்களுக்குத் தீங்குபயக்கும் தீய சொற்களைச் சொல்லமாட்டார்கள். அவர்கள் முயன்றாலும் அவர்களால் சொல்லமுடியாது. அது அவர்கள் தம் ஒழுக்கம்.

நெஞ்சிற் கிடக்கும் சிந்தனை-உணர்வுகளுக்கு ஏற்பவே சொற்கள் அமையும். நெஞ்சத்தில் அல்லது சிந்தனையில் நல்லெண்ணம் இருப்பின் சொற்களும் நல்லனவாக அமையும். ஆதலால், ஒழுக்கம் என்பதை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டுமானால் மனம், புத்தி, சிந்தனை, சொல், செயல் அனைத்திலும் கடைப்பிடிக்க வேண்டும். ஒன்றிற் கடைப்பிடித்து மற்றொன்றிற் கடைப்பிடியாது போனாலும் ஒழுக்கம் சிதைவுறும். ஆதலால், வாழ்க்கையில் அனைத்துத் துறையிலும் ஒழுக்க நெறி பேணுக.

‘உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.’

140

உலகத்துக்கு இசைந்த வகையில் ஒழுகக் கற்காதவர்கள் பற்பல கற்றாராயினும் அறிவு இல்லாதார் என்றே கருதப்படுவர்.

திருக்குறளில் இஃதொரு சிறந்த குறள்; உலகம் என்பது மாற்றத்திற்குரியது; மாறிக் கொண்டே வருகிறது. உலகத்தில் மாற்றங்களிருந்தால்தான் வளர்ச்சியிருக்கும். ஒவ்வொரு வரும் அந்தந்தக் காலச் சூழலுக்கேற்ற ஒழுகலாறுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். நடைமுறைக்கு ஒவ்வாத பழைய பழமைகளைத் தொடர்ந்து பின்பற்றுவதில் பயனில்லை. ஆயிரம் கற்றும் உலகியல் நடைமுறைக்கு இசைந்து வாழாது போனால் என்ன பயன்?

சான்றாக, ஒருகாலத்தில் சாதிமுறை இருந்தது. அவற்றிற்கேற்ப அன்றைய நடை முறைகள் கற்பிக்கப்பெற்றன. இன்றைய உலகம் பிரிவுகளை வெறுக்கிறது; உயர்வு தாழ்வுகளை ஒதுக்குகிறது; மனித குல ஒருமைப்பாட்டை விரும்பி நிற்கிறது. இன்னும் பழைய சாத்திரங்களின் பெயரால் சாதிகளைக் காப்பாற்ற நினைப்பவர்கள் உலகத்தோடு ஒட்டஒழுகக் கற்காதவர்கள். ஆதலால், நாடொப்பன செய்க. உலகத்துக்கு இசைந்து வளர்க! வாழ்க!

15. பிறனில் விழையாமை

(காமம் மீதூர்ந்து மற்றொருவனுக்கு வாழ்க்கைத்துணை நலமாக அமைந்திருப்பவளை விழைதல் கூடாது. இங்ஙனமின்றி விழைவதால் சமூக இனங்கள் கெடும். கலகமும், கொலையும் வளரும். மன்பதை இன்பமும், அமைதியும் தழுவிய வாழ்க்கையை இழக்கும்.)

பிறனில் விழைவோர் அறத்தையும் இழக்கின்றனர். பிறர் வீட்டுக் கடைவாயிலில் நின்று, அச்சத்தால் விரும்பிச் சென்ற இன்பத்தையும் இழக்கின்றனர். அதனால் இருந்தும் இறந்தார்போல் ஆகின்றனர். பிறன்மனை விழைவால் இறந்தார்போலன்றி அவர் மாட்டுப் பகை, பாவம், அச்சம் முதலியனவும் நின்று வருத்தும். பிறன்மனை விழையாமையே அறநெறி, பேராண்மை என்றும், அவரையே நல்லோர் என்றும் பாராட்டவும் செய்கிறார் திருவள்ளுவர். ஆதலால் பிறனில் விழையாமைக்குரிய செயல் முறைகளைக் காண்போம்.

பிறனுக்கு வாழ்க்கைத் துணை நலமாய் அமைந்த பெண்களைத் தாய்போலவும், தமக்கைபோலவும், தங்கை போலவும் எண்ணுதல் வேண்டும்.

ஒருவர் வீட்டிற்குச் செல்லும்பொழுது அவ்வீட்டிற் குரிய குடும்பத்தலைவனும், தலைவியும் இருக்கும் நேரம் அறிந்தே செல்லவேண்டும். குடும்பத்தலைவி தனித்திருக்கும் போது செல்லுதல் கூடாது. தனித்த நிலையில் உரை யாடுதலும் கூடாது.

அதுபோல், தன்னுடைய வாழ்க்கைத் துணையை அழைத்துக் கொண்டன்றித் தான் வெளியில் செல்லுதலும் மற்றவர் வீட்டுக்குச் செல்லுதலும் கூடாது.

நெடிய நாள்கள் தன் வாழ்க்கைத் துணைநலத்தைப் பிரிந்திருத்தலும் கூடாது. ஒரோ வழி வாழ்க்கைத் துணை நலத்தைப் பிரிய நேரிடும்பொழுது வாளா சோம்பி இல்லாமல் சுறுசுறுப்பாக நற்பணிகளில் ஈடுபடுதல் வேண்டும்.

16. பொறையுடைமை

(பொறையுடைமை என்பது, பொறுத்தாற்றுதல் என்பதாகும். அறிந்தோ, அறியாமலோ பிறர் தமக்குச் செய்த தீமைகளை மனம் ஒப்பித் தாங்கிக் கொள்வதோடன்றி, அவர்க்குத் திரும்பத் தீமை செய்யாமை பொறையுடைமை யாகும்)

பொறுத்தாற்றுதல் என்பது தீமை செய்தார்க்குத் திரும்பத் தீமை செய்யாமை. ஆனால் பிறர் செய்யும் தீமையால் தாம் அழிந்துபடாமலும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். பொறையுடைமை என்பது தமக்குத் தீமை செய்பவர்க்குத் தீமை செய்யாமையோடு அத்தீமையால் தாம் அழிந்துபோதலுக்கு உடன்படுவதன்று. மேலும், பிறர் செய்யும் தீமைகளால் அழியாமல் பாதுகாத்துக் கொள்வதோடன்றி அத்தீமைகளின் வாயிலாகவே தம்மை வளர்த்துக் கொள்ளவும் வேண்டும். அதுமட்டுமின்றித் தமக்குத் தீமை செய்தார்க்கு வாழ்வும் அளிக்க வேண்டும்.

நிலம், தன்னைக் கொத்தியும், வெட்டியும் துன்புறுத்துவாருக்குத் துன்பம் செய்வதில்லை. மாறாகத் தன்னைக் கொத்துதலையும், வெட்டுதலையும் பொறுத்துக் கொண்டு அதுவே வாயிலாகத் தன்னை வளப்படுத்திக் கொண்டு கொத்தியும் வெட்டியும் துன்புறுத்தினார்க்கு வாழ்வளிக்கிறது. அதுபோல வாழுதலே பொறையுடைமை.

அறியாதவர்கள் அகந்தையின் காரணமாகச் செய்யும் துன்பத்தைப் பொறுத்தாற்றுதல் வலிமையின் அடையாளம்; ஆதலால், தமக்குத் தீமை செய்தார்க்குத் தீமை செய்யாமை கோழைத்தனம் ஆகாதோ? என்று வருந்திக் கவலைப்படக் கூடாது. தீமை செய்தார்க்கும் தீமை செய்யாமைதான் வன்மை என்று கருதி மனநிறைவு பெறவேண்டும். இங்ஙனம் பொறுத்தாற்றும் பண்பின் பெருமையை அறியாதார் கோழைத்தனம் என்று பழிதூற்றாது புகழினைச் சேர்ப்பர் என்பதையும் அறிதல் வேண்டும்.

துறவு, தூய்மையானதுதான்; ஆயினும் துறவிலும் தூய்மையுடையது பிறர் சொல்லும் பழிச்சொற்களைத் தாங்கிக் கொள்ளுதல். பெரியவர்கள் உண்ணா நோன்பிருக்கும்பொழுது சிறு செயல்களைக் கூடத் தாங்கிக் கொள்ள முடியாமல் வெகுண்டும் பேசுவர். அதனால், நோன்பு பயனற்றுப் போகிறது. பிறரின் பழிச்சொல்லைத் தாங்கிக் கொள்பவர்கள் உண்ணாநோன்பு மேற்கொள்ளும் பெரியவரினும் சிறந்தவராவர். உண்ணாநோன்பு முதலியன, தீமைகளுக்குக் காரணமாக உடல் அமையும்பொழுது அதை வருத்தித் திருத்துவதற்குத்தான். அதனால் உண்ணா நோன்பிருப்பதில் பயனில்லை. ஆதலால், உடலைப் பழக்கினால் மட்டும் போதாது. உணர்வுகளையும் பழக்கிக் கொள்ள வேண்டும்.

17. அழுக்காறாமை

அழுக்காறாமை என்பது, பிறர் ஆக்கமும் நலமும் கண்டு, மகிழும் பண்பின்றி, அவர் தம் ஆக்கத்தையும், நலத்தையும் கண்டு மனப் புழுக்கமுற்று அந்த ஆக்கத்திற்கும், நலத்திற்கும் இழுக்குக் கற்பித்தல், கேடுசெய்தல் ஆகியன கூடாது என்ற ஒழுகலாறுகளை வற்புறுத்துவது.

அழுக்காறாமையை ஒழுக்க நெறியாக மேற்கொள்ள வேண்டின் எல்லோரிடத்திலும் அன்பு காட்டும் அடிப்படைப் பண்பு தேவை. மற்றவர்கள் ஆக்கத்திற்கும் நலத்திற்கும் உதவியாக இருக்கவேண்டும் என்ற குறிக்கோள் தேவை. இத்தகைய பண்பையும் குறிக்கோளையும் பெற்றவர், ஏனையோர் ஆக்கமும் நலமும் பெறத்துணை செய்வர். அவர்கள் ஆக்கமும் நலமும் அடைந்துழித் தாமே பெற்றது போல மகிழ்வர். அதனால் மற்றவர் ஆக்கமும் நலமும் கண்டு அழுக்காறு கொள்ளாது மகிழும் பண்பு இயல்பாக அமையும்.

அழுக்காறு, ஒருவர் ஆக்கத்திற்கும் உதவி செய்யாது; மாறாகத் துன்பத்தையே தரும். ஆக்கம் என்பது அறிவறிந்த ஆள்வினையாலன்றி ஒரு பொழுதும் கைகூடுவதில்லை. அழுக்காறுடையவர் தமது ஆற்றலைத் தமது ஆக்கத்திற்குச் செலவழிக்காமல், மற்றவர் ஆக்கத்தை அழிக்கப் பயன் படுத்தலால், இவர்தம் ஆக்கமும் கெடுகிறது. மற்றவர் ஆக்கமும் கெடுதலால் அறம் செய்ய இயலாமையும், மற்றவர் ஆக்கத்திற்குக் கேடு செய்தலால் பாவமும் வந்து அமைகின்றன; அதனால் துன்பம் தழுவிய வாழ்க்கையே அழுக்காறுடைய வர்க்கு அமையும்; ஆதலால் அறமும், ஆக்கமும் வேண்டு வோர் மற்றவர் ஆக்கமும் நலமும் கண்டு புழுங்கற்க! மகிழ்க!

அழுக்காறு உடையாரை அழிக்கப் பகைவர் வேண்டியதில்லை. அவர்களை அழுக்காறே அழித்து விடும். ஆதலால் எப்பொழுதும் எந்தச் சூழ்நிலையிலும் மற்றவரின் ஆக்கமும் நலமும் கண்டு மகிழவே கற்றுக் கொள்க. இதுவே வாழும் வழி.

ஒருவர் நலங்கருதிப் பிறிதொருவர் கொடுப்பதை எக்காரணம் கொண்டும் தடுக்காதே. அங்ஙனம் தடுப்பவர் உறையுளும் உண்டியும் இன்றி அல்லற்பட்டு வருந்துவர். அவர் மட்டுமின்றி அவ்வழுக்காற்றுச் செயலுக்குத் துணையாய் அமைந்த சுற்றமும் கூடக் கெடும். ஆதலால் அழுக்காறுடையவராகவும் வாழ வேண்டாம். மற்றவர்களிடத்தில் அழுக்காற்றைத் தூண்டவும் வேண்டாம். எக்காரணத்தைக் கொண்டும் ஒருவர் பிறிதொருவர்க்கு வழங்குவதையோ, தமக்குக் கிடைக்காதது மற்றவர்க்கும் கிடைக்கக் கூடாது என்ற எண்ணத்தாலோ தடுக்க வேண்டாம்.

அழுக்காறு உடையவன் வாழ்க்கையில் திருமகள் ஆட்சி செய்யமாட்டாள். ஏன்? திருமகளுக்கும் அழுக்காற்றுக்கும் நெடுந்தொலைவு. அழுக்காறுடையவன் இடத்தில் திருமகள் தங்கமாட்டாமல் மூதேவியை ஆற்றுப் படுத்தி விட்டு நீங்கிவிடுவாள்.

அழுக்காறுடையவன் பாவி. அழுக்காற்றின் காரணமாக உழைப்பின்றி வாழ்தலால் இம்மையில் செல்வம் வராது. செல்வம் இன்மையால் வறுமையுற்று, அழிதலால் தீயூழ்ப் பட்டு நரகத்தில் வீழ்வர். அதனோடு அழுக்காற்றின் காரண மாக மற்றவர்க்கும் தீங்கு செய்தலால், பாவத்திற்கும் ஆளாகி நரகத்தில் வீழ்வர். ஆதலால் இம்மை மறுமை நலன்களை விரும்புவோர் அழுக்காற்றினைத் தவிர்த்திடுக.

பொறாமை உடையவனுக்குச் செல்வம் வராது. ஒரோ வழி வந்தாலும் அச்செல்வம் வந்தவழி ஆய்வு செய்யப் பெறும். அது போலவே அழுக்காறு இல்லாத நன்மனம் உடையாருக்குக் கேடும் வருவதில்லை. ஒரோ வழி கேடு வந்தால் இயற்கை நியதிக்கு மாறானது என்பதால் இதுவும் ஆய்வு செய்யப்படும்.

ஒருவர் பெற்றுள்ள ஆக்கம், நலம், புகழ்-இவற்றைப் பார்த்து அழுக்காறு உடையோராக வாழ்ந்தவர், வாழ்க்கையில் பெரியவராய் உயர்ந்ததே இல்லை.

அழுக்காறு இல்லாதவர் ஆக்கம் பெற்று உயர்வது உண்மை. இதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆதலால் பெருமையும், ஆக்கமும் வேண்டுவோர் அழுக்காறு கொள்ளற்க. அனைத்துயிர்களும் வாழ்வது கண்டு இன்புறுக.

1. எல்லாரிடத்திலும் அன்பு காட்டவேண்டும்.

2. எல்லாரும் மகிழ்ந்து இன்புற்றுவாழ வாழ்தலே தம்முடைய வாழ்க்கையின் இலட்சியமெனக் கொள்ள வேண்டும்.

3. மற்றவர் வாழ்க்கைக்குத் துணையாய்த் தம்வாழ்க்கை அமையும்பொழுதே தம்வாழ்க்கை இன்பமாக அமையும், என்ற எண்ணத்தைப் பெறுதல் வேண்டும்.

4. பிறந்த மேனியை ஒத்த தன்னல நயப்பினைத் தவிர்த்திடுதல் வேண்டும்.

5. பிறிதொருவர் நலம் வளர்வதிலேயே தன்னலமும் அடங்கி இருக்கின்றது என்று அறிந்து கொள்ளுதல் வேண்டும்.

18. வெஃகாமை

வெஃகல்-விரும்புதல். இயற்கையில் விருப்பம் தவறுடையதன்று. உயிர்களின் விருப்பங்கள்தாம் மனித குலத்திற்குப் புதியன கானும் ஆர்வத்தைத் தருகின்றன. இந்த ஆர்வம் படைப்பாற்றலாய் வளர்ந்து வளர்ந்து புதிய நுகர்வுப் பொருள்களைப் படைத்துத் தரும். ஆதலால், இயற்கையில் வெஃகல் தவறன்று. ஆனால், விருப்பங்கள் தன்னுடைய ஆற்றல், உழைக்கும் தகுதி, சமூகத்தின் இயல்பு ஆகியவைகட்கு ஏற்றனவாக இருக்கவேண்டும். தன்னுடைய ஆற்றலுக்கும் சமூகத்தின் அளவுக்கும் இசைந்தவாறு இல்லாமல் மிகையாக விரும்புதல் ஒழுக்கக் கேடாகும். இப்பண்பின் மிக்க நிலையே இவறல், எனப்படும். இத்தகைய முறைகேடான விருப்பங்களை விலக்குவது ‘வெஃகாமை’ அதிகாரத்தின் நோக்கம்.

‘நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.’

171

நடுவுநிலை பிறழ்ந்து பிறருடைய நற்பொருளிடத்து ஆசை வைத்தால் குடி கெடும்; குற்றமும் உண்டாகும்.

‘நன்பொருள்’ - என்றது உழைப்பினால் ஈட்டிய பொருளை உணர்த்தற்கு.

தன்னுடைய காலத்தையும் ஆற்றலையும் உழைப்பில் பயன்படுத்தித் தன்னுடைய தேவைகளை நிறைவு செய்து கொள்ளும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். தன்னுடைய ஈட்டத்திற்கு மேற்பட்ட வகையில் நுகர்தலை வளர்த்துக் கொள்ளக்கூடாது.

தன்னுடைய உழைப்பில் வாராத எதையும் விரும்புதல் கூடாது. மற்றவர் கொடுத்தாலும் தாம் உழைக்காமல் நுகர்தல் என்னும் பழக்கத்தை ஊக்குவிக்குமாகலால் மறுத்தலே நல்லது. இக்கருத்தைத் திருவள்ளுவர் பிறிதோரிடத்திலும் "நல்லாறு எனினும் கொளல் தீது” என்றார். எந்தச் சூழ்நிலையிலும் பிறர் பொருளை நஞ்சு எனக் கருதும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளவேண்டும். தான் ஈட்டிய பொருளுக்கு எவ்வளவு மதிப்பு, உண்டோ அதே மதிப்பை மற்றவர் பொருளுக்குந் தருதல் வேண்டும்.

நாம் உழைத்து ஈட்டிய பொருளை நம்முடைய உழைப்பில் பங்கு பெறாத ஒருவர் விரும்பிக் கேட்டாலோ, களவுத் தனமாக எடுத்தாலோ நமக்கு எவ்வளவு ஆத்திரம் வருமோ அதே போல் பிறர் பொருளை நம் மனம் விரும்பும் போது நம்மை நாமே ஆத்திரத்தால் தாக்கிக் கொள்ளும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும்.

'படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.’

172

நடுவு நிலை பிறழ்ந்து வாழ்ந்திட அஞ்சி நாணுபவர்கள் பயன் கருதிப் பிறர் பொருளை விரும்பிப் பழிக்கத் தக்க செயல்களைச் செய்ய மாட்டார்கள்.

வாழ்க்கை யென்பது பல நோக்குடையது. அறிவு, ற்றல், அன்பு, அருள், திறன், ஒழுக்கம், இன்பம் ஆகியன அனைத்தும் அமைந்த வாழ்க்கையே பயனுடைய முழுமையான வாழ்க்கை. இத்தகைய முழுமையான வாழ்க்கையை உழைத்துப் பொருளீட்டி முறையாக வாழ்ந்தால்தான் அனைத்துப் பயனும் கிடைக்கும். மேற்கூறிய வாழ்க்கைப் பயன்களில் ஒன்றிருந்து ஒன்றில்லையானாலும் வாழ்க்கை முழுமையாகாது. முழுமையான பயன்களை வாழ்க்கையின் இலட்சியமாகக் கொள்ளாமல் ஒன்று அல்லது இரண்டை அதாவது அப்பட்டமான நுகர்வை மட்டுமே விரும்பினால் வாழ்க்கை வளராது; முழுமையுறாது. அது மட்டுமன்று. ஊரார் பணத்தில் "மஞ்சட் குளிப்பவர்" என்று பழிக்கப்படும் நிலையும் ஏற்படும். அதனால் சாதாரணப் பயன்களைக் கருதிப் பிறர் பொருளை விரும்பாதிருத்தல் நல் வாழ்க்கைக்குத் துணை செய்யும்.

‘சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.’

173

அறத்தினால் வரும் இன்ப அன்பினை விரும்புபவர்கள் சிறு பொழுதே அனுபவிக்கும் சாதாரண இன்பத்தை விரும்பி அறமல்லாத செயல்களைச் செய்து பிறர்பொருளை எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

“சிற்றின்பம்” என்றது அளவுகளின் பாற்பட்டதன்று. எளிமைத் தனமான இன்பம் இளிவரவானது. “மற்றை இன்பம்” என்றது உழைப்பு, ஆற்றல், அன்பு, அறம், இன்பம் ஆகியவற்றைக் குறிக்கும்.

“சிற்றின்பம்” என்பது ஆன்மாவுக்கும் அறிவுக்கும் புலன்களுக்கும் தொடர்பின்றிப் பொறிகளால் மட்டுமே துய்ப்பது. பொறிவழிப்பட்ட இன்பம் கொச்சைத் தனமானது. தவிர்த்துப் பழகவேண்டும். தனக்கு இன்பத்தையும் மற்றவர்க்குத் துன்பத்தையும் தரக்கூடியதாக அமையும் இன்பமும் சிற்றின்பமேயாம். ஆதலால், எப்பொழுதும் அறிவாலும் உணர்வாலும் துய்த்து மகிழும் இன்பத்தையே நாடவேண்டும். பொறிகளைத் தனது அறிவாண்மையின் வழி இயக்குதல் வேண்டும்.

“மற்றின்பம்” என்பது ஆன்மாவும் அறிவும், உணர்வும் ஒருங்கிணைந்ததாகவும் தாம் இன்புறும் நோக்கத்தோடு மட்டுமின்றி மற்றவர்களையும் இன்புறுத்தும் தன்மையுடையதுமாகும்.

நாம் எத்துறை வாழ்க்கையை மேற்கொண்டாலும் அவ்வாழ்க்கையில் ஆளுமையைப் பதித்து, அறிவொடும் உழைத்து வாழும் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

இத்தகைய உழைப்பு வாழ்க்கையில் இன்பம் காணும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

வாழ்க்கை, இல்லறமா? துறவறமா? என்பதெல்லாம் உரையாடற்குரியதல்ல. எப்படி வாழ்கிறோம் என்ற முறையில்தான் அது சிற்றின்பமாகவோ, பேரின்பமாகவோ இடம் பெறுகிறது.

19. புறங்கூறாமை

புறங்கூறுதல் என்பது ஒருவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றிய குற்றங்குறைகளைச் சொல்லுதல். பொதுவாகப் புறங்கூறுதலுக்கு இதுவே இலக்கணமானாலும் முழுமையான இலக்கணமன்று. ஒருவரைக் கண்டவிடத்து முகமன் பேசிப் பாராட்டிவிட்டு அவர் இல்லாதவிடத்து அவரைப்பற்றியே குற்றங்குறைகளைச் சொல்லுதல் புறங்கூறலாகும். அதுமட்டுமன்று, ஒருவர்முன்னே அவர் தம் குற்றங்குறைகளை எடுத்துக்கூறி அவரைக் குற்றங்குறைகளிலிருந்து விலக்கி நலங்காண வாய்ப்பிருக்குமானால் அவ்வாய்ப்பினைப் பயன்படுத்தாது, புறத்தே-அதாவது அவர் இல்லாத இடத்தே-அவர்தம் குற்றங்குறைகளைக் கூறுதல் புறங்கூறுதலாகும். இத்தகைய புறங்கூறலில் பயனில்லை. மாறாகப் பழியும் பகையும் வரும்.

புறங்கூறல் என்கிற குற்றம் தோன்றும் வாயில்கள்:

1. ஒருவரின் செல்வம், புகழ், தகுதி முதலியவற்றின் பாற்பட்ட சிறப்புகளைத் தாங்கமாட்டாது அழுக்காறு கொள்வதால் தோன்றும்.

2. ஒருவரின் கருத்தை நேரிடையாகப் பேசி மறுக்கும் திறன் இன்றி, அதேபொழுது தன் கருத்தை மிகைப்படுத்தும் பொய்மை வந்துழி புறங்கூறல் தோன்றும்.

3. ஒரே பொருளை இருவர் விரும்புகிறபொழுதும் தோன்றும்.

4. தம் பகைவரை நேரிடையாகச் சந்திக்கும் துணிவு இல்லாத பொழுதும் தோன்றும்.

5. ஒருவரைப் பொய்ம்மையாக வஞ்சக இன்சொல் பேசிப் புகழ்ந்துரைந்து, வாழ விரும்பும்பொழுதும் தோன்றும். சிறப்பாகத் தெளிவு, துணிவு, தறுகண் ஆகிய சிறப்புடைப் பண்புகள் இல்லாதவரிடம் தோன்றும்.

6. ஒருவர் தம்மைவிட மற்றொருவர் செல்வம், புகழ், பெருமை பதவிகள் பெற்றிருப்பதைத் தாங்க மாட்டாமல் அவர் பெற்றிருப்பவை அனைத்தும் தகுதியில்லாத அறமல்லாத நெறிகளில் அடையப்பெற்றவை என்று கூறுதல்.

7. ஒருவர் தம்மைத்தாமே உயர்த்திக்கொள்வதன் காரணமாகவும் புறங்கூறல் இயல்புதோன்றும். அதாவது மற்றவரினும் தாம் உயர்வு என்று காட்டிக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறபோது, உயர்வுக்குரிய காரணங்கள் இன்மையால் மற்றவர்களின் குற்றங்களைச் சொல்லுதல்மூலம் தம்மை உயர்வுடையவராகக் கருதும் மனப்போக்கு.

8. ஒருவருடைய உயர்வை ஏற்றுப் பாராட்டக்கூடிய பெருந்தன்மை இல்லாமல், தன்னிகழ்வு மனப்பான்மை இருந்தாலும் புறங்கூறல் தோன்றும்.

9. வறுமொழிகளினால் ஆகிய பேச்சரங்கு நடத்தும் பழக்கம் இருந்தாலும் பேச்சுக்குரிய செய்திகள் கிடைக்காத போது புறங்கூறல் தோன்றும்.

தி.IV.8.

10. ஒருவர் தம்முடைய பொருந்தாப் பழக்கத்தை மறைத்துக் கொள்ளும் மனப் போக்கிலும் புறங் கூறல் தோன்றும்.

11. தனக்குத் தகுதியில்லாத ஒன்றை அவாவி அது தகுதியின்மையின் காரணமாக மறுக்கப்படும் பொழுதும் தகுதியின்மையை மறைத்துக் கொள்ளும் நிலையில் புறங்கூறல் தோன்றும்.

12. ஒருவருக்குரியதை ஏமாற்றித் தனது உடைமையாக்கிக் கொள்ளும்போது ஒரோவழி புறங்கூறுதல் தோன்றும்.

13. ஒருவர் முறையாக உழைத்து நல்லின்பத்தை அடைந்து துய்த்தலும் அது போலத் தாம் இன்புறுவதற்குரிய விலையாகிய உழைப்பைக் கொடுக்காமல் வாழ விரும்புகிற போதும் புறங்கறுதல் தோன்றும்.

14. தன்னுடைய பகைவனை முறையாக வெற்றி கொள்ள முடியாத நிலையிலும் தோன்றும்.

15. ஒருவருடைய குற்றத்தை அவர்முன் சொல்லும் நெஞ்சுர மின்மையின் காரணமாகவும் புறங்கூறல் தோன்றும்.

புறங்கூறல் என்கிற குற்றத்தைத் தவிர்க்கும் செயல்முறைகள்

1. மற்றவர்களை மதிக்கும் மனப்பான்மை வேண்டும்.

2. மற்றவர்கள் மகிழ்ந்து இன்புற்று வாழ்வதைக் கண்டு மகிழும் மனப்பாங்கு வேண்டும்.

3. அழுக்காறு கொள்ளுதல் கூடாது.

4. யாரினும் தாம் அறிந்தவர் உயர்ந்தவர் என்கிற மனப்போக்குக் கூடாது. அடக்கமும் எளிமையும் வேண்டும்.

5. பயனின்றிப் பேசும் பழக்கம் கூடாது.

6. தான் ஒன்றை அடைந்து மகிழ விரும்பினால் அதற்குரிய தகுதியை உழைப்பின்வழியே அடையவேண்டும்.

7. ஒன்றினைக் குறுக்கு வழியில் அடைய முயலுதல் கட்டாது.

8. ஒருவருக்குரியது என்று அறுதியிடப்பட்ட ஒன்றை அவரிடமிருந்து எடுத்துக் கொள்ள முயலுதல் கூடாது.

9. பொதுவாக யாரோடும் பகை கொள்ளாதிருத்தல் நன்று. ஒரோ வழி அறநெறியில் பகை தோன்றி விட்டால் முறையான வலிமை மூலமே வெற்றி கொள்ள வேண்டும். பகைவரின் வலியைவிடத் தன் வலியைக் கூட்டி வெற்றி கொள்ள வேண்டுமே தவிர, பகைவரின் தகுதியை வலிமையை அழித்தல் கூடாது.

10. ஒருவரிடத்தில் தவறுகளைக் காணின் அவரிடத்தில் நேரிலேயே நயம்பட உணரத்தக்க வகையில் தவறுகளை எடுத்துக் காட்டித் திருத்தம் காண வேண்டும். ஒரோவழி குற்றங்கள் எடுத்துக் காட்டப்படும் போது கண்ணோட்டமின்றிக் கடுமையாகக் கூட நேரில் சொல்லலாம். இங்ஙனம் கூறுவதால், மனநோவு வரக்கூடும். குற்றமுடையவருக்கும் பழிப்புவராது. பழகினவருக்கும் தூற்றினார் என்ற பழிவராது.

எந்த வகையாலும் பயத்தின் காரணமாகத் தவற்றை எடுத்துக் காட்ட இயலாதிருப்பின் குற்றமுடையாரின் குற்றம் நிகழும் வாயில்களைக் கண்டு அவர்க்கும் தெரியாமலே அந்த வாயில்களை அடைத்துக் குற்றங்களிலிருந்து விடுதலை பெற உதவி செய்ய முடியும். இதற்கும் வாய்ப்பில்லாது போனால் பழகிய நட்பின் காரணமாகத் திருத்துவதற்குரிய காலம் கருதிக் காத்திருக்க வேண்டும். எந்தக் காரணத்தை முன்னிட்டும் குற்றங்களைக் கூறுதல் புறங்கூறுதல் பாற்படும்.

புறங்கூறல் என்கிற குற்றம் வளராமல் தவிர்ப்பதற்குரிய வழிகள்:

1. எல்லாரையும் எப்போதும் மதித்துப் பாராட்டி மகிழும் நல்லியல்பை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

2. யாருடனாவது மாறுபாடுகள் தோன்றினாலும் அம் மாறுபாட்டை மாற்றிக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

மாறுபாடுகளைக் காழ்ப்பாகவும் பகையாகவும் வளர்த்துக் கொள்ளக்கூடாது.

3. உலகில் எல்லாரிடத்திலும் ஏதாவது நல்ல தகுதிகள் இருக்கத்தான் செய்யும். அத்தகைய நல்ல தகுதிகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். காலம் பயனுடையது ஆதலால், எப்போதும் நற்சிந்தனை, நல்ல பேச்சு, நல்ல செயல் ஆகியவைகளில் இடை விடாது ஈடுபடல் வேண்டும்.

4. எந்த வொன்றையும் அயராத உழைப்பின் மூலமே அடைய வேண்டும்.

20. பயனில சொல்லாமை

"எல்லாச் சொல்லும் பொருள்குறித்தனவே” என்பார் தொல்காப்பியர். பொருள் என்பது வாழ்க்கைக்குப் பயன்படக்கூடிய எதையும் குறிக்கும். அதாவது நுகர் பொருள்கள், செல்வம், வாழ்க்கைக்குரிய நற்கருத்து, நற்பண்பாடு, மகிழ்ச்சி தரக்கூடிய கலை முதலியவற்றைக் குறிக்கும். எந்த ஒரு பொருளையும் அல்லது பயனையும் தராத சொற்களைச் சொல்லுதல் கூடாது. பயனில்லாத சொற்களைப் பேசாமை என்பது ஓர் ஒழுக்கம். இந்த ஒழுக்கத்தின் மூலம் மனித ஆற்றல் வீணாக்கப்படாமல் பாதுகாக்கப்பெறும்; தேவையில்லாத வதந்திகள் தவிர்க்கப்பெறும். பகை முதலியனவும் தவிர்க்கப்படும். ஆதலால், காசுகளை எண்ணிச் செலவிடுதலினும் கவனமாகச் சொற்களை எண்ணிச் சொல்லப்பழகுதல் வேண்டும். பயனற்ற சொற்களை ‘வறுமொழி’ என்று இளங்கோவடிகள் கூறுவார்.

பயனில்லாத சொற்களைப்பேசும் நிலை, காலத்திற்கு அளவான உரிய கடமைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளாதவர்க்கு ஏற்படும் சோம்பல் நிலையில்தான் பயனில சொல்லும் பழக்கம் தோன்றும். ஆதலால், சோம்பலைத் தவிர்த்து எப்பொழுதும் ஏதாவதொரு பணியில் ஈடுபட்டுச் செய்து கொண்டேயிருக்கவேண்டும். அடுத்துத் தேவையில்லாமல் வம்புவளர் அரங்கஞ் செய்யும் பழக்கத்தைத் தவிர்க்கவேண்டும்.

பயனற்ற சொற்கள் இரண்டு வகையின. முதலாவது முற்றாகப் பயனற்ற சொற்கள். இரண்டாவது சிறிதளவு பயன் தந்து பெரிதளவு பயனற்றவை. ஒரு கருத்தை நேரிடையாக விளக்கும் வகையில் குறைந்த சொற்களையே பேசவேண்டும். சுற்றி வளைத்து இசை ஆளத்தி (இராக ஆலாபனம்) போலச் செய்து கொண்டிருக்கக்கூடாது.

நம்முடைய வாழ்நாள் நொடிக்கணக்கில் கணக்கிடப்படுகிறது. இயற்கை வெறுப்பு விருப்பின்றித் துல்லியமாகக் கணக்கிட்டு எந்தக் காரணத்தை முன்னிட்டும் தவணை கொடுக்காமல் வாழ்க்கையை முடித்துவிடுகிறது. ஆதலால் நம்முடைய வாழ்நாளில் ஒவ்வொரு நொடியையும் கணக்கிட்டுக் கடமைகளைச் செய்து வாழ்க்கையின் முடிவில் வாழ்க்கை பயனுடையதாக அமைய ஓயாது முயலுதல் வேண்டும். வாழ்க்கையின் உயர்ந்த நோக்கத்தைப் புரிந்து கொண்டு அந்த நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ளத் தக்க வகையில் கடமைகளை எடுத்துக்கொண்டு ஓயாது தொடர்ந்து செய்தல்மூலம் பயனற்ற சொற்களைப் பேசும் பழக்கத்தைத் தவிர்க்கலாம்.

சொல்லவேண்டிய ஒன்றை நன்றாக ஆராய்ந்து முடிவெடுத்துச் சொன்னால், குறைந்த சொற்களில் நிறைந்த கருத்தை விளக்க முடியும்.

வாழ்க்கையில் நோக்கமில்லாதவர்கள், யாதொரு கடமையையும் பொறுப்புடன் ஏற்றுக்கொள்ளாதவர்கள், எத்தர்களாக வாழ்பவர்கள், நடுநிலைப் பண்பில்லாதவர்கள், விடாப்பிடிக்காரர்கள் ஆகியோரிடம் கூடுமானவரையில் பேசுவதைத் தவிர்த்துவிட வேண்டும். ஒரோவழி பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் சொற்செட்டாக இரண்டொரு சொற்களில் பேசி முடித்துவிட வேண்டும். இத்தகையோரை மனமாற்றம் அடையச்செய்யமுடியும் என்ற நம்பிக்கையில் நாம் பேசி நம்முடைய காலத்தை வீணாக்கக் கூடாது.

ஆயினும், மேற்கண்ட தீயஇயல்புடையோரை முற்றாக ஒதுக்கினாலும் அவர்கள் தீயநெறியிலேயே மேலும் வளர்வர். இங்ஙனம் கைவிடுதலும் வரவேற்கத்தக்கதன்று. ஆதலால், அவர்களிடத்திலிருக்கிற தொடர்பை முற்றாக நீக்கிவிடாமல், அவர்கள் போக்கிற்கு நாம் போய்விடாமல் தற்காத்துக் கொண்டு, மெல்ல மெல்ல அவர்களையும் கடமையில் கருத்துடையவர்களாக வளர்க்கவேண்டும். இத்தகையோரிடத்தில் நாம் பேசும்பொழுது வாழ்க்கையின் நோக்கம் அருமை, கடமை ஆகியன குறித்துப்பேசுதல் பயனற்ற சொற்களைப் பேசுதலாக எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. இத்தகைய பேச்சுகளல்லாதவற்றை ("அரட்டையடித்த”லைத்)தான் நாம் பயனற்ற சொற்கள் என்று கருதுகிறோம்.

நாம் பயனற்ற சொற்களைத் தவிர்க்கவேண்டும் என்று கருதி, முயற்சிகளை மேற்கொள்ளும் பொழுது சிலர் நம்மீது ‘பெருமை பாராட்டிக் கொள்கிறோம்’ என்று தவறாக எண்ணி வருத்தப்பட நேரிடும். இதனால் சிலருடைய மனத்தொல்லைகளும் பகையுங்கூட வரக்கூடும். இதைத் தவிர்க்க யாரையும் கண்டவுடன் அவர்களை மதிக்கும் உணர்வுடன் மலர்ந்த முகங்காட்டி நலம் முதலியன கேட்பதன் மூலம் இந்தத் தொல்லையைத் தவிர்க்கலாம்.

1. பயனில சொல்லாமையால் காலம் வீணாவது தவிர்க்கப்படும்.

2. பயனில சொல்லாமையால் வதந்தி, கோள், பகை மூட்டும்சொல், பழி தூற்றல் முதலியவற்றைத் தவிர்க்கலாம்.

3. பயனில சொல்லாமையின் மூலம் மற்றவர்களுக்குப் பழி தருதலையும், தாம் பழி சுமத்தலையும் தவிர்க்கலாம்.

4. பயனுடைய சொற்களைத் தேர்ந்து சொல்லுதல்மூலம் காலம் மிஞ்சும்; வாழ்க்கை பயனுடையதாக அமையும்.

5. யோக நெறிப்படி வாணாள் வளரும்.

பயனில சொல்லாமையாகிய இந்த ஒழுக்கத்தைத் திருக்குறள் அறமாகவும் நயன்மை (நீதி)யாகவும் அறிவுடைமையாகவும் எடுத்துக் காட்டி விளக்குகிறது.

‘பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.’

191

பலரும் வெறுக்கத்தக்க வகையில் பயனற்ற சொற்களைச் சொல்வோர் அனைவரும் எல்லாராலும் இழிவாகக் கருதப்படுவர். காலக்கேடு கருதியும் கடமைச் சிதைவுகள் ஏற்படுதல் எண்ணியும் பயனற்ற சொற்களேயாயினும் அதன் உள்ளடக்கமாகிய எள்ளல், பழி தூற்றல் ஆகிய சொற்களால் தடைப்படுவோர் தமது செயல் தடுப்புக் கருதியும் வெகுளுவர். பயனற்ற சொற்கள் பேசுதல் இழிவையே தருவதால் இகழ்வாக நினைக்கப்படுவர்.

‘பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலின் தீது.’

192

அறிஞர்முன் பயனற்ற சொற்களைச் சொல்லுதல் நண்பர்களிடத்து விரும்பத் தகாத செயல்கள் செய்வதை விடத் தீமையாம். நண்பர்கள் நட்பு நலன் கருதிப் பொறுத்தாலும் பொறுப்பர். ஆனால் யாரும் பயனற்ற சொற்களைப் பேசிப் பொழுது போக்குதலை பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.

‘நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை.’

193

ஒருவன் நயன்மை (நீதி)யற்றவன் என்பதை அவன் பயனற்ற பொருள்களை விரித்துரைக்கும் உரைகளால் அறியலாம்.

‘நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து.’

194

பலரிடத்தும் பயனற்ற-பண்பற்ற சொற்களைச் சொல்பவர், நன்மை, நயன்மை (நீதி) முதலிய நற்குணங்களிலிருந்து நீங்குவர்.

‘சீர்மை சிறப்போடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்.’

195

இனிய தன்மையுடைய உயர்ந்தோர் சோர்வினாற் பயனற்ற சொற்களைச் சொல்ல நேரிடுமாயின் அவருடைய உயர்வும் மதிப்பும் நீங்கிவிடும்.

இதனால், எவ்வளவு உயர்ந்தோரும் பயனற்ற சொற்களைச் சொல்லக்கூடாது என்ற ஒழுக்கத்தைச் சோர்விலாது காப்பாற்ற வேண்டும்.

’பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்.’

196

பயனற்ற சொற்களை விரும்பிச் சொல்பவன், மனிதனல்லன்; மக்களுள் பதராவான்.

நெல்லில் உள்ளீடில்லையானால் பதர், மனிதரில் அறிவாகிய உள்ளீடில்லையானால் பதர். அறிவற்றவரே பயனற்ற சொற்களைச் சொல்வர்.

‘நயனில சொல்வினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று.’

197

அறிவுடையோர் சோர்வினால் ஒரோவழி நேர்மையற்ற சொற்களைச் சொல்லினும் ஏற்றுக் கொள்ளப்பெறும். ஆனால், எக்காரணத்தை முன்னிட்டும் பயனற்ற சொற்களைச் சொல்லுதல் ஏற்றுக் கொள்ளப் பெறமாட்டாது.

‘சொல்லினும் சொல்லுக’ என்றமையால் சொல்ல மாட்டார் என்பதே கருத்து. நேர்மையற்ற சொற்கள் ஒரோ வழி எல்லைக்குட்பட்ட தீமையைத் தரும். பயனற்ற சொற்களைச் சொல்லுதல் அங்ஙனமன்று; பல மடங்கு தீமையைத் தரும். அதனால், நேர்மையற்ற சொற்களைவிடப் பயனற்ற சொற்கள் அதிகத் தீமை பயப்பன என்பது பெறப்படுகிறது.

‘அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.’

198

அறிதற்கரிய பயன்களை ஆராய்ந்தறியும் இயல்புடைய அறிவோர் மிகுபயனற்ற சொற்களை ஒருபோதும் சொல்ல மாட்டார்கள்.

பயனுடைய சொற்களாய் இருத்தல் நன்று. அதனினும் நன்று, அதிகப் பயன் விளைவிக்கும் சொற்கள். அதாவது ஒரோ வழி குறைவான பயன் தருதலைவிட நெடிய வாழ்க்கைக்கும் தலைமுறை தலைமுறைகளுக்கும் பயன் தரக்கூடிய சொற்கள் மிகுந்த சிறப்புடையதாகும்.

‘பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்.’

199

ஐயத்திற்கிடமின்றித் தெளிந்த அறிவுடையோர் பயனற்ற சொற்களை மறந்தும் சொல்லமாட்டார்கள்.

ஐயம் நீங்கிக் குற்றமற்ற அறிவுடையவர்கள் வளர்ந்தவர்கள், அவர்கள் பயனற்ற சொற்களை ஒரு போதும் சொல்லமாட்டார்கள்.

‘சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.’

200

பயனுடைய சொற்களையே சொல்க, பயனற்ற சொற்களைச் சொல்லற்க.

உடன்பாட்டு வகையால் பயனுடைய சொற்களைச் சொல்லுக, என்றும் எதிர்மறை வகையால் பயனற்ற சொற்களைச் சொல்லற்க என்றும் சொல்லியது இந்த ஒழுகலாற்றின்மீது திருவள்ளுவருக்கிருந்த அழுத்தத்தை, உறுதிப்பாட்டைக் குறிக்கிறது.

21. தீவினையச்சம்

அறமல்லாதன பாவங்கள், தீய வினைகள் செய்ய அஞ்சுதல். எண்ணத்தாலும் சொற்களாலும் நிகழும் குற்றங்களை விலக்கிய ஆசிரியர் தீயன செய்தலையும் விலக்குகின்றார்.

தீவினைகள் செய்ய அஞ்சினால் செய்யும் துணிவு ஏற்படாது. தீவினைகள் செய்ய அஞ்சுதல் என்பது ஓர் உயர் பண்பு. எதைச் செய்தாலும் இச்செயலால் மற்ற உயிர்களுக்கு யாதானும் ஒரு துன்பம் உண்டாகிவிடுமோ என்று எண்ணி ஆய்வு செய்து யாதொரு துன்பமும், யாதோர் உயிர்க்கும் வராது காரியங்களைச் செய்தல் தீவினை அச்சமாகும்.

தீய செயல்களில் அச்சம் ஏற்படுதலுக்குக் காரணம் தீய செயல்களால் வாழ்க்கையில் துன்பங்கள் நிறையத் தோன்றுகின்றன என்பதே. எந்த உயிர்க்குத் துன்பம் செய்யப் பெற்றதோ அந்த உயிர் தனக்குத் துன்பம் செய்தாருக்குத் துன்பம் செய்ய முற்படுதல் இயற்கை. தீயன செய்தமைக்குரிய பயனை மறுமையிலும் துய்த்தாக வேண்டும். இஃதொரு முறை (நியதி). அதுமட்டுமன்று, தீயன செய்வதிலேயே காலமெல்லாம் போனதால் நல்லுலகம் பெறுதற்குரிய நல்வினைகள் செய்யப் பெறவில்லை. ஆக, இம்மை-மறுமையில் ஏற்படும் தீமைகட்காகவே தீவினை அஞ்சப் படுகிறது.

அடுத்து, யாதானும் ஒரு நன்மை செய்தல் என்பது அரிய முயற்சியினால் ஆவது, இஃது எளிதில் கை கூடுவதில்லை. நன்மை செய்யுமாறில்லையாயினும் தீவினையிலிருந்து அஞ்சித் தற்காத்துக் கொள்ளுதல் அறம் என்ற எண்ணம்.

1. தீவினை அஞ்சுதலாகிய நற்பண்பினைக் கடைப் பிடித்தொழுக நம்முடைய பொழுதெல்லாம் நற்பணிகளைக் கடமைகளை வகுத்துக் கொண்டு ஓயாது தொழிற்பட வேண்டும். சோம்பிய மனம் எளிதில் தீய வினைகள் செய்தலில் ஈடுபடும். இஃது இயற்கை.

2. இன்புற்று மகிழ்தலையே ஒவ்வொருவரும் விரும்புகிறோம். ஆதலால், செய்யும் தீய வினைகளால் மற்றவர்கள் பெறக்கூடிய துன்பத்தை எண்ணிப் பார்த்தாலே அச்சம் ஏற்படும்; செய்யும் துணிவு வராது.

3. மகவெனப் பல்லுயிரையும் ஒக்கப் பார்த்தலாகிய உறவுப் போக்கு, சமநோக்கு ஆகியவற்றை வளர்த்துக் கொள்ளுதல் தீயவினைகள் செய்வதிலிருந்து தப்பிப்பதற்கு ஒரு வழி.

4. யார் மாட்டும் நட்பு, பகைமை, நொதுமல் என்ற வேறுபாடின்றி அன்பு காட்டினால் தீய வினைகள் செய்தலினின்றும் எளிதில் மீளலாம்.

அழுக்காறு, பகைமை போன்ற காரணங்களாலேயே தீய வினை செய்யும் சூழ்நிலைகள் வளர்கின்றன. அழுக்காறு, பகைமைகளை மறந்து விட்டால் தீயவினைகள் செய்யும் மனம் தோன்றாது.

யாரும், எவர்க்கும், எதற்கும் நன்மை செய்வதே வாழ்க்கையின் நோக்கம் என்ற உணர்வுகளை வளர்த்துக் கொள்வதன் மூலம் தீய வினைகள் செய்யாமை ஏற்படும்.

தீய வினைகள் செய்யாமையை முற்றாகத் தவிர்க்கும் பொழுது ‘ஏமாளி’, ‘கோழை’ என்ற ஏளனப் பேச்சுகள் கிடைக்கும். கவலற்க; இழிவை விரும்பாமை போலவே புகழையும் விரும்பாதிருத்தல் உயர் பண்பாகும்.

அழுக்காற்றையும், பகையையும் தவிர்த்திடுக. தீயவினைகளைச் செய்ய அஞ்சுதல் மூலம் யாண்டும் பயமின்றி வாழலாம்; துன்பமே வாராது; இன்புறும் நலன்கள் பலவும் பெற்று வாழலாம்; உறவுகள் வளரும்.

திருக்குறள் அறநூல்; தீயவினை செய்யாமையாகிய அறத்தினை அறநூல் விளக்கியது.

‘தீவினையா ரஞ்சார் விழுமியா ரஞ்சுவர்
தீவினை யென்னுஞ் செருக்கு.’

201

செருக்காகிய தீமையின் பாற்பட்டவர்கள் தீய வினைகள் செய்ய அஞ்சமாட்டார்கள். நல்லவர்கள் தீயவினைகள் செய்ய அஞ்சுவார்கள்.

செருக்கு என்பது எல்லாரையும்விடத் "தாம் உயர்வானவர்,” “தம்மால் எதையும் செய்ய இயலும்" என்ற மன எழுச்சியாகும். செருக்கின்மை தீவினை அஞ்சுதலுக்குந் துணை.

‘தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.’

202

தீயவினைகள் தீமையையே தரும். ஆதலால் தீமை, தீயைவிட அஞ்சப்படும்.

நெருப்பு, தொடின் தப்பாமல் சுடும். அதுபோலத் தீயவினை தப்பாமல் தீமை செய்யும்.

தீயின் இயல்பு நன்மை செய்தலே; உலகத்தின் ஆக்கமும் வளர்ச்சியும் தீயினாலேயாம். எல்லை இகந்து தொட்டால் சுடும். மற்றபடி தீயினால் விளையும் பயன்கள் ஆயிரம் ஆயிரம்.

தீய வினைகளால் நன்மை சிறிதும் இல்லை; இன்பமே இல்லை. துன்பந்தான் கிடைக்கும். ஆதலால் தீயவை தீயினும் அஞ்சப்படும்.

‘அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.’

203

தம்மைப் பகைப்பவர்க்கும் தீமையானவற்றைச் செய்யாது விடுதல், அறிவுச் செயல்கள் யாவற்றிலும் சிறந்தது என்பர் அறிவுடையோர்.

நமக்குத் தீமை செய்தாருக்கு நாம் தீமை செய்தாலும் தீமையின் பயன் வாராமல் போகாது. ஆதலால் தீமைக்குத் தீமை என்பது முறையன்று, தீமைக்கு நன்மை என்பதே வாழ்வியல் முறை.

‘மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.’

204

ஒருவன், மற்றவர்க்குக் கேடு செய்யும் வினையை மறந்தும் எண்ணவேண்டாம். அங்ஙனமின்றிக் கேடு செய்ய எண்ணின் அவனுக்குரிய கேட்டினை அறம் சூழ்ந்து செய்யும் என்பது கருத்து.

கேடு செய்தாருக்கும் தீமை செய்யக் கூடாது என்றால் அறத்திற்கு மட்டும் இது விதி விலக்கா?

அறக்கடவுள் என்பது, முறை (நியதி). அவரவர் செய்த செயல்களின் பயன்களை அவரவர் துய்க்கும்படி செய்வதே அறக்கடவுளின் கடப்பாடு, ஆதலால் அறக்கடவுளுக்கு வேறுபாடுகள் இல்லை. காய்தல், உவத்தல் இல்லை; அறக்கடவுளுக்கு மகிழ்ச்சியும் துன்பமும் இல்லை. சுவையற்ற துலைக்கோல், பொருள்களை நிறுத்துத் தருவது போன்றது அறக்கடவுளின் செயல்.

‘இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து.’

205

ஒருவன், தான் வறியவன் என்றும் செல்வம் பெறலாம் என்றும் எண்ணித் தீய வினைகளைச் செய்யற்க. அங்ஙனமின்றித் தீயவினைகளைச் செய்யின் மீண்டும் வறியவன் ஆகவே ஆவான்.

வறுமையைத் தீயவினைகளால் நீக்க முற்படுதல் கொள்ளிக் கட்டையைக் கொண்டு சொறிந்து கொண்டது போலத்தான்! தீய வினைகளால் மற்றவர்களுடையதைக் கவர்ந்து கொண்டாலும் வறுமை நீக்கம் நிலைத்து நிற்காது. கவர்ந்த பொருள் செல்லுழி, ஈடு செய்யும் ஆற்றலின்மையின் காரணமாக மீண்டும் வறியராதலே இயற்கை.

‘தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பாவ
தன்னை அடல்வேண்டா தான்.’

206

துன்பங்கள் தன்னை வருத்த வேண்டா என்று எண்ணுகிறவன், மற்றவருக்குத் துன்பம் தரும் செயல்களைச் செய்யாது தவிர்த்திடுக.

தன்னலம் பற்றியாயினும் தீய வினைகளைச் செய்யாதிருக்கவும் என்று கூறியவாறு.

‘எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்(று) அடும்.’

207

எத்துணைப் பெரிய பகையைப் பெற்றாரும் தப்புதற்கு இயலும்; தீ வினையாகிய பகையோ நீங்காது செய்தவரைத் தொடர்ந்து சென்று துன்பம் தரும். தப்புதல் இயலாது.

பகையைவிட, தீயவினை செய்தல் துன்பம் தரும். பகைமைக்கு மாற்று, தீயவினை என்று எண்ணும் மனப்போக்குத் தவறு என்பது கருத்து.

‘தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வியாது அடிஉறைந் தற்று.’

208

ஒருவனது நிழல் அவனையே தொடர்ந்து சென்று தங்குதல் போல், தீமை தவறாது தொடர்ந்து தீமை செய்யும்.

ஒருவரை நிழல் தொடர்தல் இயற்கை. இருள் வந்த விடத்து நிழல் தெரியாது மறைந்து போகும். பின் ஒளிவந்த விடத்துப் புலப்படும். நிழல் காணப்படாதது, நிழல் இல்லை என்பதன்று.

ஒரோ வழி செல்வம், செல்வாக்குகள் காரணமாகத் தீய வினைகளின் பயனாகிய துன்பம் தாக்கப்படாமல் இருப்பது போலத் தோன்றும். சூழ்நிலைகள் தளர்வுறும்போது தீவினைகள் துன்பத்தைத் தந்தே தீரும்.

‘தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்.’

209

ஒருவன், தான் துன்பப் படாமல் இருக்க ஆசைப்படுவானாயின் பிறர்க்கு எத்துணையும் தீமை செய்யாமல் இருத்தல் வேண்டும்.

‘அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.’

210

ஒருவன், அறநெறியினின்றும் விலகி மற்றவர்க்குத் தீவினைகளைச் செய்யாமல் இருப்பானாயின் அவன் கேடில்லாதவன் ஆவான்.

22. ஒப்புரவறிதல்

தம்மைச் சார்ந்த பலரும் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் எண்ணத்தாலும் செயல்களாலும் உதவிகள் செய்யும் பாங்காலும் பயன் விளைத்து வாழ்தல் ஒப்புரவு ஆகும்.

குமுகாயத்தின் ஓருறுப்பு தனி மனிதன். குமுகாயம் இவனை வளர்த்து வாழ்விக்கிறது. அதற்கு ஈடாகக் குழுகாயமும் பயனடைகிறது. குமுகாயத்தில் ஓர் உறுப்பு என்று உணர்ந்து வாழும் பொழுது, ஒப்புரவு என்ற ஒழுக்கம் தவிர்க்க இயலாதது. குமுகாயத்திற்கு ஒத்தது அறிந்து செய்தலும் குமுகாயத்திற்கு இசைந்தவாறு வாழ்தலும் ஆகும்.

1. வளர்ந்து வாழ்வதற்குத் துணையாக அமைந்துள்ள குமுகாயத்திற்குப் பயன் பட வாழவேண்டும் என்ற உணர்வில் ஒப்புரவு தோன்றும்.

2. சிந்தையாலும் செயலாலும் குமுகாயத்திற்குப் பயன்பட வாழ்தல் வேண்டும் என்ற உணர்வே ஒப்புரவு நெறியின் தோற்றம்.

3. தற்சார்பான வாழ்க்கையை விடக் குமுகாயச் சார்பான வாழ்க்கையே அறச்சார்புடையது என்று எண்ணி வாழத் தலைப்படும் பொழுது, ஒப்புரவு நெறி தோன்றுகிறது.

4. வரலாற்று உணர்வோடும் குமுகாயச் சிந்தனையோடும் வாழத் தலைப்படும் பொழுது, ஒப்புரவு ஒழுக்கம் கால் கொள்ளும்.

5. எந்த ஒன்றையும் குமுகாய உணர்வுடன் சிந்தித்துக் குமுகாயம் பயனுற வேண்டும் என்ற உணர்வுடன் இயற்றுதல் ஒப்புரவறிதலை நடைமுறைப்படுத்தும் வழி.

6. ஒப்புரவறிதல் ஒழுக்க நெறி நிற்கும் பொழுது ஒரோ வழி இடர்ப்பாடுகளும் வரலாம். குமுகாயம், நன்மையைத் தெரிந்து ஏற்காமல் மறுதளிக்கலாம்; தொல்லைகளைத் தரலாம். ஆயினும் ஒப்புரவறிதல் நெறி நிற்றலே சிறப்புடைய வாழ்க்கை. வரலாற்றில் ஒப்புரவறிந்து வாழ்வோர் இடம் பெறுவர். ஏசு, முகம்மது நபி, சாக்ரடீசு, அப்பரடிகள், வள்ளலார், காந்தியடிகள் முதலானோரின் ஒப்புரவு நெறி நின்ற வாழ்க்கை அன்றைய குமுகாயத்தின் முன்னோடிகளால் ஏற்கப்படவில்லை; மாறாக அவர்களுக்குத் தொல்லைகளும் வழங்கின. ஆனால், இன்று உலகம் நினைவு கூர்வது இந்தப் பெருமக்களையேயாம்.

‘கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு.’

211

மாற்று உதவியை எதிர்பார்க்காது மழை பொழிவதைப் போல, ஒப்புரவாளர்கள் யாதொன்றையும் எதிர் பாராது குமுகாயத்துக்கு நன்மைகளைச் செய்வர்.

1. ஒன்றை எதிர்பார்க்கும் மனநிலையில் உதவிகளைச் செய்தல் வணிக மனப் போக்கினைச் சார்ந்தது. வணிக மனப் போக்கு அன்பு, அறம், அருள் ஆகிய உணர்வுகளுக்கு எதிர் மறையானது. ‘அறவிலை வணிகன் ஆய் அலன்’ என்பது புறநானூறு.

2. எதிர்பார்த்தது நடவாத போது ஏமாற்றம் ஏற்பட்டு ஒப்புரவுக்கு எதிர்மறையான பகை உணர்வு கால் கொள்ளும். ஆதலால், யாதொன்றையும் எதிர்பாராமல் செய்வதே ஒப்புரவுக்கு நல்லது.

தி.iv.9.

3. பலசமயங்களில் உதவி பெற்றவர் திரும்பச் செய்ய நினைத்தாலும் இயலாத நிலை நேர்வதுண்டு. அப்போது அவர், 'உதவி செய்தவர் எதிர்பார்த்தபடி செய்ய முடியவில்லையே' என்று நினைத்து வருந்துவர்.

‘தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.’

212

ஒப்புரவாளன் முயன்று ஈட்டிய செல்வம் முழுதும், தக்கவர்களுக்கு உதவி செய்தலுக்கே யாம்.

“தாளாற்றித் தந்த பொருள்” அயரா முயற்சியால் ஈட்டிய பொருள் என்பது கருத்து. தாளாற்றித் தந்த பொருள் என்றதால் வழி வழி வரும் செல்வமும் ஆகூழால் வரும் செல்வமும், பிறர் பங்கைத் திருடுவதால் வரும் செல்வமும் செல்வமாகா என்ற உண்மை பெறப்படுகிறது. உழைப்பின் மூலம் வரும் செல்வமே செல்வம் என்பது வள்ளுவம் காட்டும் உண்மை.

"தக்கார்க்கு வேளாண்மை செய்தல்” என்றதால் தகுதி உடையவர்க்கே உதவி செய்தல் வேண்டும் என்பது கருத்து. இங்குத் தகுதியுடையவர் என்றது, பெற்ற உதவியைக் கொண்டு மேலும் வளர்வதற்குரிய இயல்பினைப் பெற்றவர் என்று பொருள் தரும். ஒழுக்கக் கேடிலாதவர் என்றலும் அமையும்.

1. ஓயாது உழைத்துப் பொருள் ஈட்டுக.

2. உதவி வேண்டியவர்களுக்கும், உதவியின் மூலம் வளர்ந்து வாழக்கூடியவர்களுக்கும் உதவி செய்க.

‘புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.’

213

ஒப்புரவு போன்ற நல்ல செயல்களைத் தேவர் உலகத்திலும் பெறுதல் அரிது. இந்த மண்ணுலகிலும் அரிதாகவே காண இயலும்.

தேவருலகத்தில் காமதேனு, கற்பகத்தரு ஆகியன இருப்பதால் ஈவாரும் ஏற்பாரும் இல்லை என்பது புராணக் கருத்து. மேலும், தேவர்கள் தற்சார்பினால் சண்டை போட்டுக் கொள்ளும் இயல்பினர். ஆதலால், அமரருலகில் ஒப்புரவு ஒழுக்கம் இல்லை போலும்.

‘ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.’

214

குமுகாயத்திற்கு ஒத்ததறிந்து செய்பவன் வாழ்கின்றவனாகின்றான். இங்ஙனம் குமுகாயத்திற்கு ஒத்தது அறிந்து செய்யாதவன் வாழ்கின்றானில்லை; செத்தவனாகின்றான்.

1. குமுகாய நலமறிந்து செய்தல் ஒத்ததறிந்து செய்தலாகும்.

2. உயிர்க்குரிய இயல்பும் பயனும் இன்மையால் செத்தார் என்றார்.

தனக்கு நலம் பயப்பனவெல்லாம் மற்றவர்க்கும் ஆம் என்று அறிந்து செய்தல் ஒத்ததறிதல் என்று கூறலும் அமையும்.

‘ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.’

215

உலகு தழுவிய வாழ்க்கையை விரும்புகின்றவனுடைய செல்வம் ஊரில் உள்ளாரெல்லாம் உண்கின்ற தண்ணீர் நிறைந்த ஊருணி போன்றது.

“ஊருணி” உண்ணும் நீரினையுடைய நீர்நிலை. இன்றும் இந்த வழக்கு உள்ளது.

உலகு தழுவிய வாழ்க்கையை விரும்புகின்றவர்கள் “நான்” “எனது” என்ற உணர்வுகளைக் கடந்தவர்கள். அதன் காரணமாக அவர்தம் செல்வம் ஊருணி போன்றதாயிற்று. ஊருணி ஊராருக்குப் பயன்படுவதன்மூலம் தனது தூய்மை, ஊற்றுவளன், நிலையாய் அமைதல் ஆகிய பயன்களையும் பெறுகின்றது; அதுபோலப் பிறருக்கும் குமுகாயத்திற்கும் பயன்பட வாழ்பவர்களும் பயனடைதல் இயற்கை என்பதை உணர்த்தியவாறு. “ஊருணி” உதவுவதில் ஊருணிக்கும் பயனுண்டு. ஊருணி ஒத்தவர் வழங்குவதில் உலகறிய வாழ்தல் முதலான பயன் பல விளையும்.

‘பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.’

216

நேர்மையாளனிடம் உள்ள செல்வம் பயன்படும் மரம் ஊர் நடுவே பழுத்தாற் போன்றது.

நேர்மைப் பாங்குடையவர் செல்வத்தின் பயன் ஈதல் என்பதை உணர்வர். ஆதலால் “நயனுடையான்" என வியந்து கூறினார்.

"பயன்மரம்” உள்ளூர்ப் பழுத்தற்று; விரும்புவார்க்கு எளிதில் பயன்படத் தக்க நிலையில் ஊருக்குள் பழுத்தமரம் என்பது கருத்து. சில செல்வர் உள்ளூரிலேயே இல்லாமல் நெடுந் தொலைவில் உள்ள நகரங்களில் போய் வாழ்வர். இது உள்ளூராரிடமிருந்து தப்பித்தலுக்கே என்று எண்ணுவதில் தவறில்லை.

பயன்படு மரங்கள் பயன்படு நிலையில் உரிமையுள்ளவை. விருப்பு-வெறுப்பு ஆகியவற்றிற்கு இடமில்லை என்பது உண்மை. அதுபோல நயனுடையார் விருப்பு-வெறுப்புகளுக்கு அப்பால் நின்று வாழ்வர்.

விருப்பு-வெறுப்புகளின்றி அனைவரும் பயனுறத் தக்க வகையில் வாழ்க.

‘மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.’

217

பெருந்தகையாளனிடம் சேரும் செல்வம் தப்பாது பயன்படும் மருந்து மரம் அணையது.

”பெருந்தகையார்” தமக்கு வரும் இடர்களையும் ஏற்றுக் கொண்டு குமுகாயம் பயனுற வாழ்பவர்.

மருந்து மரம், தான் இடர்ப்பட்டும் சார்ந்தார் நோய் நீக்கத்திற்குப் பயன்படும்.

இடர்ப்பாடுகளைப்பற்றி எண்ணாது மற்றவர் துன்பத்தை நீக்க முயல வேண்டும்.

‘இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.’

218

வாழ்க்கையின் கடப்பாட்டினை அறிந்தவர்கள் வளமான செல்வம் இல்லாத காலத்திலும் ஒப்புரவு நெறி நிற்பதற்குத் தளர்ச்சியடைய மாட்டார்கள் (முந்துவர்).

வளமான செல்வம் உள்ளபோது செய்தலைவிட வறுமையுற்ற நிலையில் ஒப்புரவு நெறி நிற்றலின்மூலம் தன் துன்பம் தாங்கும் உணர்வும் செல்வம் ஈட்டும் முயற்சியும் தோன்றும். ஆதலால் ஒப்புரவறிதலுக்கு வறுமை தடையில்லை. வறுமை நிலையில் ஒப்புரவறிதல் இயலாது என்று கருதி வாளா இருத்தல் கேடு செய்யும். இந்நிலையிலும் முயன்று செய்தலே வாழ்க்கையின் கடப்பாடு.

‘நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு.’

219

நேர்மையாளனுக்கு வறுமையாவது, ஒப்புரவுப் பண்பை முறையாகச் செய்ய இயலாது போதலேயாகும்.

நேர்மையாளனுக்கு வறுமை, ஒப்புரவு மேற்கொள்ளாமையேயாகும்.

தாம் நுகர்தலைவிட மற்றவர்க்குப் பயன்பட வாழ்தலே பெரிது என்று கருதுதல் ஒப்புரவு நெறிக்குரிய பண்பு.

எந்தச் சூழ்நிலையிலும் ஒப்புரவு நெறி நிற்கத் தவற வேண்டாம்.

‘ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து.’

220

ஒப்புரவினால் கேடு வரும் எனில் அக்கேடு விலை கொடுத்தாயினும் கொள்ளத் தக்கதேயாம்.

"ஒப்புரவினால் வரும் கேடு எனின்” என்றதால் ஒப்புரவினால் கேடு வராது என்பது திருவள்ளுவரின் முடிபு.

இதனை "வித்தும் இடல் வேண்டுங்கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம்" என்று கூறியதாலும் அறிய முடிகிறது.

ஒப்புரவு நெறி நிற்காதொழியின் பழிவரும், அதனால் பழி நீங்கிய வாழ்க்கை பெற எந்த விலையும் கொடுக்கலாம் என்பது கருத்து.

23. ஈகை

ஈகை என்பது, துய்ப்பன பெறாது வறுமையால் வருந்துவோர்க்குத் துய்க்கும் பொருள்கள் கொடுத்து உதவுதலாகும்.

நமது குமுகாய அமைப்பு, செல்வத்தில் ஏற்றத் தாழ்வுள்ள குமுகாய அமைப்பாகும். ஒரு கோடியில் அடுக்கிய பலவளமும் மற்றொரு கோடியில் வருத்திக் கொல்லும் வறுமையும் இருப்பது நம்முடைய நாடு. இந்த நிலை சங்ககாலந் தொட்டே இருந்து வருகிறது. இத்தகைய சமுதாய அமைப்பில் ஈகை என்பது தவிர்க்க இயலாத அறம்; கடமை. ஏன்? செல்வத்தில் நிறைய ஏற்றத் தாழ்வில்லாத பொது உடைமை நாட்டிலே கூட, துய்ப்பதற்குரிய எல்லாப் பொருளும் எல்லாரிடத்திலும் இருக்காதல்லவா? வறுமையில்லாது போனாலும் பொருளில்லாமைக் குமுகாயம் ஈகையை அவாவி நிற்கும். அதுமட்டுமன்று. ஒருவர் வாழ்க்கை முழுமையாக வெற்றிபெற எத்தனை தேவைகள் உள்ளன! தேவை யென்றால் பொருள் தேவை மட்டுந் தானா? அறிவு, அன்பு, ஆற்றல், குணம் முதலியனவும் தேவை தானே! இவற்றை வழங்குவதும் ஒருவகையில் உதவி செய்தலாதலால் ஈகையின் பாற்படுத்தி எண்ணினாலும் தவறன்று.

ஈகை என்ற நல்லொழுக்கம் ஒருவரிடத்தில் தன்னலம் குறைந்து சமுதாய நலம் மிகும்பொழுது தோன்றக் கூடியது. ஒருவர், அன்பிற் சிறந்தவராகவும் செல்வத்தின் பயன் தெரிந்தவராகவும் இருக்கும்பொழுது ஈகைப் பண்பு தோன்றி வளரும்.

மற்றவர்கள் உண்பன. உடுப்பன இன்றி வருந்தும் துன்பமே ஈகை தோன்றுதற்குரிய வாயில்கள்.

மற்றவர்கள் படும் துன்பத்தை மாற்றும் வகையில் வேண்டியன கொடுத்து உதவி செய்ய வேண்டும். அங்ஙனம் கொடுத்து உதவி செய்யும் பொழுது, வறுமையிலிருந்து மீளத்தக்க வகையில் உதவி செய்ய வேண்டும்.

உதவி செய்வதற்குரிய தகுதி, வறுமையில் வருந்துவதைத் தவிர வேறு எந்தக் காரணமும், காரணமாக அமையக் கூடாது.

ஈகை அறம் செய்யும் பொழுது, செல்வ இழப்பு ஏற்படுகிறது. இங்ஙனம், செல்வ இழப்பு ஏற்படாமல் இருக்க தொடர்ச்சியான பொருள் செயல் முயற்சிகளை மேற்கொண்டு பொருள் ஈட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.

யாருக்கு உதவி செய்யப்படுகிறதோ அவர் பெற்ற உதவியைக் கொண்டு வளராமையின் காரணமாக வெறுப்புத் தோன்றும். இந்த வெறுப்பை அடக்கிக் கொண்டு அவரைப் பக்குவப்படுத்தி வளர்க்கத் தொடர்ந்து அவருடன் போராட வேண்டும்.

ஈகை அறம் இயற்றும்பொழுது தமது உதவியைப் பெற்றவரிடம் திரும்ப ஓர் உதவியைத் தாம் எதிர்பார்க்கக் கூடாது.

நன்றிக் கடப்பாடு, புகழ் முதலியவற்றைக் கருதியும் ஈகை செய்தல் கூடாது.

சார்புகள் வழிச் சிக்கிய நிலையில் உதவி செய்தல் அல்லது செய்யாமை மேற் கொள்ளுதல் கூடாது.

ஈகை அறம் முறையாக நிகழ்வதன்மூலம் சமுதாயத்தில் வறுமை நீங்கும்; அன்பு பெருகும்; சமுதாய உறவுகள் வளரும்; சமுதாயம் அமைதியான சூழ்நிலையில் நடைபோடும்.

தனிமனிதனுடைய மேம்பாட்டுக்கும் சமுதாயமேம் பாட்டுக்கும் ஒரு சேர ஈகை உதவி செய்வதால் அது சிறந்த அறம்.

‘வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.’

221

வறுமையின் வாய்ப்பட்ட ஏழையர்க்குச் செய்வதே ஈகை. இங்ஙனமல்லாது கொடுப்பது எல்லாம் யாதானு மொன்றை-யாதானுமொரு பொருளைத் திரும்ப அடையும் வகையில் வழங்கப்பெறும் கடனேயாம்.

பொருள் இல்லாதார் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கே ஈகை என்ற அறம். ஆதலால், வறுமையுடையோரைக் கண்டால் அலட்சியப்படுத்தாது அவர்களுக்குக் கொடுப்பது தான் அறம்; இங்ஙனம் கொடுப்பதே இம்மையிலும் மறுமையிலும் பயன்தரும்,

‘நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.’

222

பிறரிடத்திலிருந்து வாங்குவது வீட்டுலகத்திற்குச் செல்வதற்குரிய நல்வழியென்று அறநூல் கூறினாலும் பிறரிடமிருந்து கொள்ளுதல் தீயதே. பிறருக்குக் கொடுப்பதால் மேலுலகத்தைப் பெறமுடியாது என்று கூறினாலும் கொடுத்தலே நல்லது.

எந்தச் சூழ்நிலையிலும் கொள்ளுதல் தீது; கொடுப்பதே நன்று.

கொடுத்தலைத் தாழ்த்தியும் கொள்ளுதலை உயர்த்தியும் அறநூல் கூறுமானால் அஃது அறநூலன்று. அது பொய்ம்மையான சாத்திரம் என்று அறிக.

இது பிறர் மதம் மறுத்தது. வாங்குதலின் மூலம் இந்த உலகத்தில் நாட்டுத் தேவராகவும் மறுமை உலகத்தில் தேவராகவும் ஆகி வாழுகின்ற பிறர் மதம் மறுத்துத் தமிழ்மரபு நிலை நிறுத்தியமையை அறிந்து இன்புறுக.

ஈகை அறத்தைச் செய்தல் மூலம் இந்த உலக வாழ்க்கையில் நல்லுறவும் அமைதியும் இருக்கும். இஃது உடனடியான தேவை. ஆதலால், “மேலுலகு இல்லெனினும் ஈதலே நன்று” என்றார்.

இந்த உலக வாழ்க்கை அனைத்துத் துறையிலும் சீருடையதாக அமையின் மேலுலகம் கிடைத்தே தீரும், அதை இல்லை என்று சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது.


‘இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே உள.’

223

ஒருவன் தான் ஏழை என்று தனது ஏழ்மையை வெளிப்படையாக மானம் போகிற வகையில் சொல்லிக் கேட்பதற்கு முன்பே அவன் வறுமையினை அறிந்து ஈதல் செய்யும் சிறந்த குணம் உயர்குடிப் பிறப்பாளரிடம் உண்டு.

“இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்” என்பதற்கு ஒருவருடைய ஏழ்மையை மற்றவர்களிடம் கூறி, மானக்கேட்டிற்கு ஆளாக்காமல் அவர்தம் வறுமையை விளம்பரப்படுத்தாமல் மறைத்து உதவி செய்யும் பெருங்குணம் உயர்குடிப் பிறர்ந்தார் கண்ணே உண்டு என்னும் பொருள் கொள்வர்.

1. வறுமையின் கீழ்மையை உணர்வோர் மானத்திற்கு அஞ்சி எளிதில் சென்று இரக்க மாட்டார். அதனால், வறுமையால் இறத்தலும் நிகழ்தல் கூடும். இதனைத் தவிர்க்க வறுமையுற்றோர் இரந்து கேட்கட்டும் என்று எதிர்பார்க்காமல் வலியச் சென்று உதவி செய்தலே உயர்குடிப் பிறப்பின் இலக்கணம்.

2. ஒருவரின் வறுமையை மற்றவர்களிடம் எடுத்துக் கூறி இழிவை உண்டாக்காமல் வறுமையுற்றோர் தகுதி குறைவுபடாமல் கொடுத்து உதவும் பண்பு உயர்குடிப் பிறந்தார்களிடம் உண்டு.

3. வறுமை வாய்ப்பட்டு வருந்துவோரின் வறுமைத் துன்பத்தை முற்றாக நீக்கக் கூடிய வகையில் உதவி செய்வதே ஈதல். இங்ஙனம் ஈதல் மேற்கொள்ளும் பண்பு. உயர்குடிப் பிறந்தாருக்கே உண்டு.

4. ஒருவரின் துன்பத்தை - வறுமைத் துன்பத்தை முற்றாக நீக்கப் பயன்படாத ஈகை, வறுமையொடுபட்ட ஈகையாகும். இத்தகு வறுமையொடுபட்ட ஈகை யாற்றலால் பயன் இல்லை.

5. "எவ்வம் உரையாமை ஈதல்" என்றதால் வறுமைக்குக் காரணம் குமுகாய நடைமுறையின் குறைபாடுகளே என்ற கருத்து உய்த்துணரக் கூடியது.

6. "குலனுடையான் கண்ணேயுள” என்றதால் உயர் குடிப் பிறப்பின் தன்மை ஈகை ஒன்றாலேயே அறியப்படும்.

வேறு காரணங்களால் உயர்குடிப் பிறப்புரிமை கொண்டாடுதல் அறமன்று.

‘இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகம் காணும் அளவு.’

224


உயர்குடிப் பிறந்தார்க்குத், தம்மிடம் இரந்தவரின் இன்முகம் காணும் அளவுக்கு வழங்க இயலாத பொழுது இரக்கப்படும் நிலையில் இருத்தலும் துன்பமேயாம்.

இந்தக் குறள் பட்டறிவில் பிறந்த குறள். இந்தக் குறள், நம்மில் பலருடைய வாழ்க்கையில் அன்றாட நடைமுறை. இரப்போன் பேராசையுடையோனாக இருந்தாலும், இரப்போனின் மனம் நிறைவு பெறத்தக்க வகையில் வழங்குவதற்குப் பொருளில்லாது போயினும் இரக்கப்படுதல் துன்பந்தான்னே!

இத்துன்பத்திலிருந்து தப்பிப்பதற்கான வழிகளாவன:

1. வறுமையுற்றோர்க்குத் துய்ப்பனவாகிய பொருள்களையே வழங்காமல், அந்தப் பொருள்களை அவர்கள் பெறுவதற்குரிய வாயில்களை அமைத்து ‘முதலை’ மட்டும் தருதல் ஒரு வழி.

2. ஈகை அறம் மேற்கொண்டால் அந்த அறம் வளரும் தன்மையது. அதனால் ஈகை அறத்தினை முழுமையாகச் செய்யவும், இடையறவு படாமல் இயற்றவும் தொடர்ந்து அறிவறிந்த ஆள்வினையை மேற்கொண்டு பொருளீட்டுதல் இன்றியமையாதது.

‘ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.’

225

தவத்தின் ஆற்றலால் பசியைப் பொறுத்துக் கொள்ளும் தவத்தோரின் ஆற்றல், உயிர்களை வருத்தும் பசியை உணவு முதலியன கொடுத்துத் தீர்த்து வைப்போரின் ஆற்றலுக்குப் பின்னதேயாம்.

உயிர்க்குலத்தை வருத்தும் பசியை, உணவு முதலியன வழங்கி நீக்குபவர்களின் ஆற்றலுக்கு அடுத்துத்தான் தவத்தின் வலிமையால் பசியைப் பொறுத்துக் கொள்வோரின் ஆற்றல் வைத்தெண்ணப்படும்.

தவத்தோராலும் பசியைப் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் பொருள் கொள்வர்.

தவத்தோர் பசியைப் பொறுத்தல் என்பது தன்னளவிலேயாம். ஈகை அறம் மேற்கொண்டான் தன்னளவில் மட்டுமன்றி, மற்றவர் பசியையும் மாற்றுகின்றான். அதனால் பின்னது சிறப்புடையது.

பசியை அடக்குதல் முதலிய நோன்புகளில் உடம்பை வருத்துவதை விட உடம்பை வருத்திப் பசித் துன்பத்தை நீக்குதல் அறம் என்பதறிக. இந்த அறம் தவத்தினும் சிறந்த தாகும்.

‘அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.’

226

ஒருவன் தான் ஈட்டிய பொருள் வறிதே வீணாகாமல் இம்மைக்கும் மறுமைக்கும் பயன்படக்கூடிய வகையில் சேமித்து வைக்கும் வழி, வறியவரின் கடும்பசியைத் தீர்த்தலே யாம்.

வறுமையுடையோரை அழிக்கும் பசியை நீக்க உதவுதலே ஒருவன் தான் பொருளைப் பத்திரமாகச் சேமித்து வைக்கும் இடம்.

‘பசி’ உயர் குணங்களையும், அறிவையும், ஆற்றலையும் அழிப்பதாலும் ஒரோவழி உயிரையே அழித்தலாலும் ‘அழிபசி’ என்றார்.

"பொருள் வைப்பு" - சேமவைப்பு, பின் தேவைக்கு உதவத் தக்கவகையில் சேமித்துவைக்கும் முறை.

இன்னும், வங்கியில் சேமித்தல் மூலம் பொருள், வட்டியால் பெருகி வளர்ந்து நமக்குத் தேவை ஏற்படும் பொழுது வந்து சேர்கிறது. வங்கிகள், வறுமையுற்றோருக்கு தமது முதலைக் கடனாகக் கொடுத்துத் தொழில் செய்யச் செய்து, வறுமையை மாற்றுகின்றன. இது முதலை இழக்காதது மட்டுமன்று; வளர்த்துக் கொண்டு அறம் செய்யும் முறை. ஆதலால் தேசிய சேமிப்புப் பத்திரங்களில் இடுக.

‘பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.’

227

பகுத்து உண்ணப் பயின்றவனைப் பசியென்னும் தீப்பிணி தீண்டுதல் இல்லை.

ஒருவரிடத்தில் உள்ள எல்லா நன்மைகளையும் கொன்று தீமையைச் செய்து பிணி முதலியவற்றை வரவழைத்துத் தருதலால் “தீப்பிணி” என்றார்.

பலரோடும் பகுத்துண்க; அங்ஙனம் பகுத்துண்பதால் இவரோடு பலர் பகுத்துண்ணக் காத்திருப்பர். ஆதலால், பசிப்பிணி தீண்டல் அரிது; அணுகாது.

‘ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.’

228

உடைமைகளை வைத்து இழக்கும் அருளிலாதார், வறியார்க்கு ஒன்று ஈத்துவக்கும் இன்பத்தினை அறியமாட்டாதார் போலும்!

வறுமையுடையோர் வறுமைத் துன்பத்தை நீக்கிக் கொண்டு மகிழ்ச்சியாக வாழும்பொழுது அவர்தம் மலர்ந்த முகத்தைக்கண்டு உவத்தலே சான்றோர் செயல்.

‘இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.’

229

ஒருவருக்குப் பிறர்பால் சென்று இரத்தல் துன்பமானது; ஆனால், இதனினும் துன்பம் தருவது வறுமையுடையோருக்கு உதவாது தாமே தனியே உண்டல்.

1. இரத்தல் துன்பமானது, இத்துன்பம் வரும் வாழ்க்கையில் வாழற்க! அதாவது பொருள் செயல் முயற்சியில், ஈடுபட்டுப் பொருள் ஈட்டுக.

2. "தமியர் உணல்" என்றதால் தனியே உண்டல் கூடாது; பலரோடு கூடி உண்க என்பதாகும்.

‘சாதவின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை.’

230

ஒருவருக்குச் சாதல் போலத் துன்பமானது இல்லை. ஆனால், வறியோர்க்கு உதவி செய்ய இயலாதபொழுது சாதலும் இன்பம் தரும்.

பயன்படாது வாழ்தலின் சாதல் நன்று என்பது கருத்து.

24. புகழ்

புகழ் மானிட வாழ்க்கையின் இம்மைப்பயன். ஒருவனுடைய வாழ்க்கை மூலம் பயன் அடைந்தவர்கள் பாராட்டிக் கூறுவது புகழ். இன்று புகழ் என்பது விற்பனைப் பொருளாகவும் விளம்பரப் பொருளாகவும் ஆகிவிட்டது. திருவள்ளுவர் கூறும் புகழ், வாழ்க்கையில் விளைவது; வாழ்க்கையின் பயன். அறத்துப் பாலில் இல்லறவியல் முடிவில் புகழ் அதிகாரம் வைக்கப் பெற்றுள்ளது. ஏன்? ஒருவருடைய இல்வாழ்க்கை அறஞ்சார்ந்த வாழ்க்கை என்பதை அவரை மற்றவர்கள் புகழ்ந்துரைக்கும் உரைகளின் வாயிலாகவே அறியமுடியும் என்பதை உணர்த்தவேயாம். அடுத்து, துறவறம் தொடங்குகிறது. துறவுக்குப் புகழ் உரிய தன்று. துறவு, புகழ், பழிகளைக் கடந்தது. ஆனால், இன்றோ இல்லறத்தாரை விடத் துறவிகளே புகழ் வேட்டையாடுகின்றனர். துறவிகளிடத்தில் புகழ் வேட்கை தலையெடுத்ததுடன் விளம்பர மனநிலையும், பொய்யும் நடிப்பும் மிகுந்து வளர்ந்து வருகின்றன.

பொதுவாக, இல்லற வாழ்க்கை இறுக்கமான பாசத்தை பொருட்பற்றை உருவாக்கும் என்பது உலகியல் நடைமுறை. இதன் காரணமாகத் தன்பெண்டு - தன்பிள்ளை என்ற உணர்வில் உடன் பிறந்தாரைக்கூட, குருதிக் கலப்புடைய சுற்றத்தாரைக்கூட அந்நியராக்கும் கொடுமையை நாள் தோறும் காண்கின்றோம். பழைய வரலாறுகளும் குடும்பப் பாசத்தின் அதிக வளர்ச்சியால் ஏற்பட்ட தீமையை எடுத்துக் காட்டத் தவறவில்லை. நமது திருவள்ளுவர் குடும்பத்தையே அறமனையாக்கும் புதுமை செய்கிறார். மற்றவர்க்கு உதவி செய்வதால் குடும்பம் கெடாது வளரும் என்ற நம்பிக்கையைத் தருகின்றார். புகழ் ஓர் ஊக்குவிக்கும் வலிவு ஆகும். ஆதலால், புகழ் மேலும் மேலும் பொருள் ஈட்டத்தில் ஆற்றுப்படுத்தும், ஈத்துவந்து புகழுடன் வாழும் வாழ்க்கை உணர்வை வளர்க்கும் என்பது வள்ளுவத்தின் முடிவு.

1. அறநெறி வாழ்க்கை மேற்கொள்வதன் மூலம் புகழ் பெறலாம்.

2. எந்தச் சூழ்நிலையிலும் அறமல்லாதனவற்றை - பிறரால் பழிக்கப்படுதற்குரியனவற்றைச் செய்யா திருத்தல் புகழைத் தரும்.

3. தாம் இடர்ப்பாடுற்றுத் துன்புறும் பொழுதும் அறநெறி பிறழாது வாழ்ந்தால் புகழ்வரும்.

4. மகவெனப் பல்லுயிரும் ஒக்க நோக்கி அன்பு செய்து வாழ்தல்வழி புகழ் தோன்றும்.

5. செய்தற்களிது என்று கருதி மற்றவரால் கைவிடப் பெறும் கடமைகளை எடுத்து அரிதின் முயன்று செய்து முடிப்பதன் மூலம் புகழ் பெறலாம்.

புகழ்பெற முற்றிலும் தற்சார்பான வாழ்க்கையைத் தவிர்த்தல் வேண்டும். (முற்றிலும் தற்சார்பானது என்பது அப்பட்டமான தன்னலம்-மற்றவர்க்கு இம்மியும் நலம் பயந்து விடக்கூடாது என்ற எண்ணம்).

கடமைகளை விருப்பார்வத்துடன் செய்யவேண்டும். மற்றவர்க்கு உதவி செய்யும் வாழ்க்கையை ஆர்வத்துடன் செய்யவேண்டும்.

புகழ் விரும்பிய வாழ்க்கையில் பழிவருதல் தவிர்க்க இயலாதது. அதனால், பழிக்கும், வசைக்கும் அஞ்சி, கொண்ட கொள்கையை (இலட்சியத்தை) விடக்கூடாது.

புகழ் விரும்பிய வாழ்க்கையில் சராசரி வாழ்க்கையின் இன்பங்களைக்கூட இழக்க வேண்டிவரும். அதைப் பற்றியும் கவலைப்படக் கூடாது.

பொருளிழப்பு முதலியன நேரிடலாம். கவலைப்படக் கூடாது.

‘ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.’

231

வறியவர்களுக்குரியனவற்றைத் தந்து உதவிசெய்து வாழ்தலே வாழ்க்கை. உயிர்க்கு ஊதியமாகிய புகழும் இதுவேயாம்.

உயிர்க்குரிய ஊதியம் புகழ் என்பது கருத்து.

வறியோரின் துன்பம் நீக்கும் வாயிலாகப் பெறும் புகழே உயிர்க்கு ஊதியம் என்பது கருத்து.

வறுமையுடையோரின் துன்பம் நீக்க உதவி செய்தலைப் பிறர்க்கு உதவி செய்தல் மட்டுமாகக் கருதக் கூடாது. அது ஒருவர்க்கு ஊதியமாகவும் விளங்குகிறது.

உதவி செய்தல் என்பது மற்றவர் உயிர் வாழவும் உயர்வு பெறத் தக்கதாகவும் அமைய வேண்டும்.

உதவி செய்வதன்வழி ஊதியமும் புகழும் கிடைப்பதால் உதவி செய்யப்படுவோரை எள்ளி நகையாடல் கூடாது.

உதவி செய்யப்படுவோரை நொந்து, நோகச் செய்து பின் கொடுத்தல் புகழும் இல்லை; ஊதியமும் ஆகாது.

‘உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்.’

232

உலகத்தில் ஒருவரைப் பற்றிச் சிறப்பாகச் சொல்பவர் சொல்வதெல்லாம், வறுமையால் இரப்பவர்க்கு அவர் வேண்டியதொன்றை ஈவார்மேல் நிற்கும் புகழேயாம்.

புகழினைப் பல வாயில்களால் அடையலாம்; எழுத்து பேச்சு வீரம்-இன்ன பிறவற்றாலும் புகழ் வந்துசேரும். ஆனால் வறியவர்க்குக் கொடுத்து அவர்தம் துன்பத்தை நீக்கும் புகழே சிறந்த புகழ்; ஏனைய புகழெல்லாம், அடுத்த நிலையினவே என்பது கருத்து.

1. மற்றவரின் வறுமை நீக்கி அவர் துன்பத்தை மாற்றி வாழ்விக்கப் பயன்படும் அறிவை, ஆற்றலை, செல்வத்தை மற்ற வழிகளில் வரும் புகழ் கருதிச் செலவழித்து விடக் கூடாது.

2. ஒரோவழி வளம் (வசதி) உடையோரும் உதவி நாடி வருவர் அவருக்குக் கொடுத்தாலும் புகழ் கிடைக்கும். ஆனால், இது புகழன்று; புகழ் போலத் தோன்றும் விளம்பரமே! வறுமையுடையோர்க்கு உதவுதலே உண்மையான புகழினைத் தரும். இந்தப் புகழுக்குச் செலாவணி அதிகம் இருக்காது. ஆனால், உயிர்க்கு ஊதியமாக நின்று நிலையான புகழைத் தரும்.

‘ஒன்றா உலகத்(து) உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன்று இல்.’

233

இந்த உலகத்தில், உயர்ந்த புகழையல்லாமல் அழியாது நிற்பது வேறொன்றும் இல்லை.

“ஒன்றா உலகத்து” என்பதனை “ஒன்றா உயர்ந்த புகழ்” என்று கொண்டு கூட்டிப் பொருள் கொண்டு, தனக்கு இணையில்லாதவாறு என்று பொருள் கூறுவர். இது தவறில்லை, ஆயினும் சிறந்த நோக்கில்லாதது.

தி.iv.10.

இந்த உலகில் காண்பன, நுகர்வன, அனைத்தும் நம்மை விட்டு நீங்கும்; ஆயினும் பெறுகிற புகழ்மட்டும் அழியாது; மாறாது.

"உயர்ந்த புகழ்" என்றது ஓருயிரை ஓருடம்பிடையில் நிறுத்தி வைத்து வாழவைப்பது. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய இறை செய்யும் ஐந்தொழில்களைப் போல அமைந்து விடுதலின் உயர்ந்த புகழாகும்.

பசியால் வருந்தி அழியாது காத்தலால் காத்தலும் படைத்தலுக்கு ஒப்பாகும் இயல்பிலே காத்தல் நிகழ்கிறது.

ஒருவனின் வறுமைத் துன்பமும் இழிவும் மற்றவர்க்குப் புலனாகாமல் உதவி செய்யப் பெறலால் மறைத்தல் நிகழ்கிறது.

மனித குலத்திற்குத் தீமையானவற்றை அழித்தலால் அழித்தல் தொழில் வந்தமைகிறது.

மகவெனப் பல்லுயிரும் ஒக்கப் பார்த்து வேறுபாடு கருதாமல் வாழ்வித்தல் அருளல் ஆகிறது.

‘நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு.’

234

ஒருவன் இந்நிலவுலகத்தில் புகழ்பட வாழின் தேவருலகம் தேவரைப் போற்றாது.

இம்மண்ணுலக வாழ்க்கையில் புகழ்பட வாழ்தல் என்பது அருமையுடைய வாழ்க்கை. இந்த அருமையுடைய வாழ்க்கை ஒருவரால் ஆற்றப்படுமெனின், புகழ்பட வாழ விருப்பமில்லாது வறிதே வாழும் தேவர்களைத் தேவருலகம் பாராட்டாது.

புகழ் என்பது ஒருவர் புகழ்வதனால் வருவதன்று; நிலைத்த செயல்களைச் செய்தலின் மூலம் வருவதே புகழ்.

ஆதலால் விளம்பர வேட்டை ஆடற்க! செய்தித்தாள்களில் பெயர்களைத் தேடி அலைய வேண்டாம்; விழாக்கள் எடுத்து விளம்பரம் தேடவேண்டாம்; மானிட சாதியை வருத்தும் துன்பங்களை மாற்றுதற்குரிய நிலையான அரிய முயற்சிகளையும் செயல்களையும் மேற்கொள்க! அச்செயல்களே புகழ்!

‘நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது.’

235

ஆக்கம் போல் கேடும், வாழும் சாக்காடும் திறப்பாடுடையவர்க்கே உண்டு; மற்றவர்க்கு இல்லை.

தவறான முறையில் வரும் ஆக்கம் அல்லது வளர்ச்சி ஆக்கம்போலக் காட்டிக் கேட்டினைச் செய்யும், இதைத் தவிர்த்திடுக.

சாக்காடு, வரக்கூடிய ஒன்றே; சாக்காட்டிற்கு அஞ்சிப் பயன் என்ன? செத்தும் சாகாமல் வாழ்தல் அருமைப்பாடுடைய வாழ்க்கை நல்லறச் செயல்கள் பல செய்து புகழ்பெறும் வித்தகர்களுக்கே இந்நிலை அமையும்; ஆதலால், வித்தகராக முயல்க!

‘தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.’

236

ஒருவர் மற்றவர் காண வெளிப்பட்டுத் தோன்றும் நிலை ஏற்படின் புகழோடு தோன்றுக. அங்ஙனம் மற்றவர்முன் புகழொடு தோன்ற இயலாதார் தோன்றாது மறைந்தொழிதல் நன்று.

புகழுக்கு ஏதுவான குணத்தோடு பிறக்கவேண்டும் என்றும் உரை கூறுவர். பிறந்தபின் தேடுவதே குணம். ஆதலால், இவ்வுரை பொருந்தாது.

நல்லறச் செயல்களைச் செய்து புகழுடன் விளங்கு! அதன்பின் அரங்கிற்கு வா!

நாலுபேர் அடக்கம், எளிமை, சொல்லும் முயற்சியை விடக் கேட்டல் ஆகிய நற்பண்புகளிருந்தால் விளங்கித் தோன்றலாம். இப்பண்புகளைப் பெற்றுப் பலர்முன் தோன்றுக! அவ்வாறு வெளிப்படுதற்கு இயலவில்லையெனில் வெளிவராதிருத்தலே நன்று.

புகழ்பட வாழத் தெரியாதார், பலர் முன் தோன்றுதல் வசையைக் கைக்கொள்ளலாகும். இதனால் யாருக்கும் பயனில்லை. மேலும், ஒருவரின் வசைப்பட்ட வாழ்க்கை பலருடைய இசை பொருந்திய வாழ்க்கையைக் கெடுக்கும். அதனால் தோன்றுதலைத் தவிர்த்திடுக என்றார்.

‘புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவ(து) எவன்.’

237

தமக்குப் புகழ் உண்டாகும்படி வாழாதவர்கள் தமது இழிவினை நோக்கித் தம்மையே நொந்து கொள்வதில்லை. ஆனால், பிறர் தம்மை இகழ்ந்து கூறினால் உடனே நொந்து வேதனைப்படுவர். இது ஏன்?

புகழ் என்பது ஒருவருடைய வாழும் முறையால் பெறுவது. ஒருவருடைய புகழுக்கும் இகழுக்கும் அவரே பொறுப்பு. இங்ஙனம் புகழ்பட வாழ முயற்சி செய்யாதவர்கள் தங்களைத் தாங்களே நொந்து கொண்டு திருத்தங்களைக் கண்டு புகழ்பட வாழ்தல் முறை. அங்ஙனம் வாழ முயற்சி செய்யாதவர்கள் மற்றவர் இகழும்பொழுது வருந்திப் பயனில்லை.

‘வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்.’

238

ஒருவன் தனக்குப் பின்னும் தன்புகழ் விளங்கி நிற்குமாறு வாழாமற் போனால் அவன் வாழ்க்கை மக்களால் பழிக்கத் தக்கதாகும்.

ஒருவன் ஈட்டும் பொருள் முதலியன அவனுக்குப் பின் அவன் பெயரில் நிற்பனவல்ல. ஆனால் அவனீட்டிய புகழ் அவனுக்கே சொந்தமாகத் தொடர்ந்து நிலைத்து நிற்கும். அவனைச் சார்ந்தோருக்கும் உதவி செய்யும்.

ஆதலால், நாள்தோறும் புகழ்பெறத் தக்க நிலையான செயல்களைச் செய்திடுக.

‘வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.’

239

புகழைச் செய்யாத உடம்பைச் சுமந்த நிலத்தில் பழிப்பில்லாத வளமுள்ள விளைச்சல் குறையும்.

நிலத்திற்கும் உயிருண்டு போலும்; நிலம் புகழத்தக்க செயல்களைச் செய்வாரோடு உறவு கொள்ளும்போது பழிப்பில்லாத வளமுள்ள பயனை வழங்குகிறது. அங்ஙனமின்றிப் புகழற்ற உடம்புகளை நிலம் தாங்கும் பொழுது புழுக்கத்தினால் வெப்பமடைந்து வளம் குன்றிப் பயனற்றுப் போகிறது.

ஆதலால், புகழ்பெறும் வாழ்க்கையே வாழ்க! இயலா தொழியின் வசை பெறாமலாவது வாழக் கற்றுக் கொள்க!

‘வசைஒழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்.’

240

தமக்குப் பழிப்பில்லாமல் வாழ்பவரே உயிர்வாழ்பவராவர்; புகழின்றி வாழ்பவரே உயிரோடிருந்தும் இறந்தவராவர்.

வாழ்தலுக்கும் சாதலுக்கும் இடையிலுள்ள வேறுபாடு உண்ணல், உறங்கல் அல்ல; புகழும் இகழுமேயாம்.

நாள்தோறும் புகழினைத் தரும் புண்ணியச் செயல்களைப் போற்றிச் செய்திடுக; மறந்தும் வசையினைத் தரக்கூடிய செயல்களைச் செய்யற்க! என்று திருவள்ளுவர் தெரிவிக்கின்றார்.

வாழ்க்கைப் பிணைப்புகளைத் துறந்து அறம் பேணுதல் துறவறம். தமிழர் வாழ்வியலில் இல்லறமும் உண்டு; துறவறமும் உண்டு. இல்லறத்தில் நின்று வளர்ந்து துறவறத்தைச் சார்தல் தமிழர் மரபு. இல்லறஞ் சாராமலேயே துறத்தல் என்ற மரபும் இருந்து வருகிறது. இம்மரபு பெளத்த, சமண சமயங்களின் தொடர்பு தமிழகத்திற்குக் கிடைத்த பிறகு வந்திருக்கலாம் என்று எண்ண முடிகிறது. தமிழரின் துறவற வாழ்க்கையைத் தொல்காப்பியம்,

‘காமஞ் சான்ற கடைக்கோட் காலை
ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே’

(தொல். கற்பியல்-51)

என்று கூறி விளக்குகிறது. திருவள்ளுவரின் திருக்குறள் இயல் வைப்பும் இல்லறவியலை அடுத்துத் துறவறவியல் பேசப்படுவதாலும் இஃது உய்த்துணர முடிகிறது. புகழ் அதிகாரத்திற்குப் பின் துறவறவியல் தொடங்குகிறது. இல்லறவியலின் பயன் புகழ், புகழின் பயன் துறத்தல். தமிழர்தம் சமய நெறியில் வழிபடுந் தெய்வத்தை அம்மையப்பனாகக் கருதி வணங்குவதால் இல்லறத்தை வெறுத்த துறவு தமிழர்க்கு இல்லையென்பது துணிவு. இல்லறம் ஆசைகளுக்கு உட்பட்டது; துறவறம் ஆசைகளுக்கு அப்பாற்பட்டது என்பதும் முற்றான விளக்கமன்று. அறுபான் மும்மை நாயன்மார் வரலாற்றில் வரும் இல்லறத்தில் வாழ்ந்த சான்றோர்கள் துறவியரும் தொழும் சான்றோர்களாக, பற்றற்றவர்களாக விளங்கியதைக் காண்கின்றோம்.

தவம், இல்லறத்திற்கு இல்லையென்பது தமிழக வழக்கமன்று. "மேருவரையின் மேம்பட்ட தவத்தான்” என்று நம்பியாரூரரை, இறைவன் வாயிலாகச் சேக்கிழார் சிறப்பித்துக் கூறுவதை அறிக! இல்லறத்தில் வாழ்ந்தவர்கள் பக்குவம் அடைந்த நிலையில் அடுத்த தலை முறையினரிடம் தமது வழித்தோன்றல்களிடம் குடும்பப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, முழுமையாக இறைவனை எண்ணவும் தொண்டு செய்யவும் மேற்கொள்ளும் வாழ்க்கை, துறவு வாழ்க்கை

25. அருளுடைமை

அருளுடைமையாவது மகவெனப் பல்லுயிர்களிடத்தும் அன்பு பாராட்டுதல். யார் மாட்டும் பாய்ந்து செல்லும் அன்புடைமையே எல்லை கடந்தமையால் அருளுடைமை என்று போற்றப்படுகிறது.

‘அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.’

241

பெறத்தக்க செல்வங்களுள் சிறந்தது அருளுடைமை. அருள் உள்ளத்தைப் பெறுதற்கு யாண்டும் எப்போதும் சம நோக்கே கொள்க.

எந்த வகையிலேனும் வந்து பற்றும் சார்புகளை நினைந்து பொருட்படுத்தாது, சார்புகளைக் கடந்து எல்லாவுயிர்களிடத்திலும் அன்பைப் பொழிக! இரக்கத்தைக் காட்டுக:

எந்தச் சூழ்நிலையிலும் யார் மாட்டும் மனவருத்தம் கொள்ளற்க. மனவருத்தம் பிணக்கைத் தோற்றுவிக்கும்; பகையைத் தரும்; அருளுடைமையைக் கெடுக்கும்; அதனால், உற்றாரும் இல்லை, பகைவரும் இல்லை என்று ஒழுகுவதே அருள் ஒழுக்கத்தைப் பேணும் வழி.

26. புலால் மறுத்தல்

புலாலை உண்ணாமல் விடுதல். அருளுடைய நெஞ்சு உயிர்க் கொலைக்கு அஞ்சுதல் இயற்கை. அதனால் அருளுடைமையை அடுத்துப் புலால் மறுத்தல் கூறப்படுகிறது.

‘தன்னுரன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.’

251

தன் உடம்பைப் பெரிதாக்குவதற்காகத் தான் வேறோர் உயிரின் உடம்பைக் கொன்று தின்பவன் எங்ஙனம் அருளைக் கையாள முடியும்?

"ஊன் பெருக்கம் உயிர்ப் பெருக்கமாகாது” என்பதுணர்த்த ஊன் பெருக்கம் என்றார்.

ஊன் பெருத்தல் பயனற்றது மட்டுமின்றி நோயும் தரும். பயனற்ற ஊனைப் பெருக்க யாதொரு குற்றமும் செய்யாத உயிரினங்களைக் கொல்லலாகாது என்று எண்ணுக.

ஊன் பெருத்தால் எளிதில் நகரமுடியாது; பணிகளைச் செய்ய இயலாது என்பதை எண்ணுக.

ஊன் பெருத்ததாலேயே பண்டு வாழ்ந்த உயிரினங்கள் இறந்து பட்டுப் போயின என்ற வரலாற்றை எண்ணுக.

நிலைத்து நிற்கும் இயல்பின வல்லாத உடலின் ஊனினை வளர்க்க, நிலையானதும் என்றும் உயிர்க்கு ஆக்கம் தருவதுமான அருளுடைமையைத் துறக்க வேண்டுமா? எண்ணுக! எண்ணுக! எண்ணுக! புலாலைத் தவிர்த்திடுக!

‘பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை; அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.’

252

பொருளைப் போற்றிப் பாதுகாக்காதவர் பொருளுடையராதல் இல்லை. அதுபோல ஊனைத் தின்பவர்களுக்கு அருளை உடையராகிச் செலுத்துதல் இல்லை.

1. புலாலை உண்ணும் பொழுது - அறுக்கப்படும் பொழுது உயிர்கள் துடித்து வருந்துதலை நினைந்து பார்த்திடுக. அதனால், ஊன் உண்ணும் வேட்கை எழாது; தடைப்பட்டுப் போகும்.

2. புலாலை உண்ணுவதற்காக ஒருயிரை வருத்தி அறுக்கும் பொழுது அதனை ஒத்த துன்பம் நமக்கு வந்தால் நாமுறும் பாட்டை நினைந்து பார்த்திடுக. அதனால் உயிர்க் கொலை தவிர்க்கும் வாய்ப்பு மிகும்.

3. உடலியக்கத்திற்குத் தேவையான ஆற்றல், காய், கனிகளிலும் கிடைக்கும். அவை ஓரறிவுயிர். அறிவு மிக மிக இனவளர்ச்சி குறைதலை மனங் கொள்க. அதனால் புலால் உண்ணல் தவிர்க்க முடியாதது என்று கருத வேண்டாம்.

4. பொருளின் இன்றியமையாமை கருதி அருளுடைமையும் கூறினார். பொருள் வருந்தித் தேட வேண்டும். தேடிய பொருளை வீணாகச் செலவழிக்காமல் போற்றிப்பாதுகாக்க வேண்டும். அதாவது, சிக்கனமாய் வாழ்தல். சிக்கனமென்பது இவறுந் (உலோபத்) தன்மையன்று. சிக்கனம் பொருள் வாழ்க்கைக்கு இன்றியமையாதது.

‘படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்காது ஒன்றன்
உடல் சுவை உண்டார் மனம்.’

253

கொலை செய்யும் கருவியைத் தம் கையில் கொண்டவரின் மனம் கொலையையே நோக்கும்; அருளை நோக்காது.

படையைக் கையிலெடுக்கத் துணிந்தவர்கள் கொலையையே குறிக்கோளாகக் கொள்வர். படை கொண்டார் மனம் அமைதி, சமாதானம், நட்புறவு இவைகளைப் பற்றிக் கருதாது; பிறிதோர் உயிரின் துன்பம் பற்றிக் கருதாது கொலை செய்த உடலைச் சுவைத்து உண்டவர்களின் மனம் அருளை நோக்காது.

புலால் உணவு கொலைத் தொடர்புடையது. ஆதலாலும் அதனுடன் சேர்க்கப் பெற்ற உணர்வு வகையாலும் புலால் உண்டவர் மனம் நன்மையைக் கருதாது; நன்மையின்பாற் செல்லாது.

1. எந்தச் சூழ்நிலையிலும் படைக்கருவிகளைத் தொடக்கூடாது.

2. ஏமாற்றங்கள் - கோபங்கள் ஏற்படும் போது படைக் கருவியைக் கட்டாயம் தொடக் கூடாது.

3. படைக் கருவியைக் கையில் எடுத்தல் கொலை செய்வதில் கொண்டுபோய் விடும். ஆதலால், மறந்தும் படைக் கருவிகளை எடுத்தல் கூடாது.

4. கையில் தாங்கும் கருவிகள், நெஞ்சத்தை இயக்கும் தகுதியை உடையன. விழிப்புணர்வுடன் இருந்து நெஞ்சத்தினைப் பேணுக.

5. உணவு முறையால் நெஞ்சத்தின் இயல்புகள் மாறுவதை அறிந்து நெஞ்சத்தினை நன்னெறியில் செலுத்தாத உணவைத் தவிர்த்திடுக.

‘அருளல்லது யாதெனில் கொல்லாமை; கோறல்
பொருளல்லது அவ்வூன் தினல்.’

254

அருள் யாதெனில் கொல்லாமை; அருளல்லது யாதெனில் கொல்லுதல். கொலையின் வழி கிடைத்த புலாலைத் தின்னுதல் பொருளல்லாத செயல்.

"பொருள்" - நிலையான வாழ்வளிக்கும் பயனைப் பொருள் என்றார்.

அருளுடைமை என்பதே கொல்லாமை என்று வலியுறுத்தியது.

1. தட்டில் இட்டுண்ணும் புலால் கொலையினால் வந்தது என்பதை எண்ணுக; உணர்க! அப்போது அருளுணர்வு கால்கொள்ளும்; புலாலைத் தவிர்க்கும் துணிவு தோன்றும்.

2. வாழ்க்கை நிலையான பயனை - இன்பத்தினைக் குறிக்கோளாகக் கொண்டது. இக்குறிக்கோளிலிருந்து வழுவித் துன்பத்தினை அனைத்துக் கொள்ளுதல் போலாகும் புலாலுண்ணல் என்பதனை எண்ணுக. அவ்வழி புலால் உணவில் வெறுப்புத் தோன்றும்.

‘உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.’

255

ஊன் உண்ணாமையால் உள்ளது உயிர்நிலை. ஊனை உண்டால் நரகத்திற்குச் செல்ல நேரிடும். அந்நரகமும் தன்னிடம் அகப்பட்டவரை வாயில் திறந்து வெளியே விடாது.

ஊனுண்டோர் மீளாத் துன்பம் அடைவர் என்பது கருத்து.

அருளுடையோரே உயிருடன் வாழ்வோர்; என்றும் மதிக்கப்படுபவர். அதனால், “ஊன் உண்ணாமை உயிர் நிலை” என்றார்.

1. நரகத்தில் அனுபவிக்க வேண்டிய துன்பத்தினை எண்ணிப் பார்த்தால் புலால் உணவில் அச்சம் தோன்றும்; இந்த அச்சம் அருளுணர்வைத் தந்து புலால் உணவைத் தவிர்த்திடும் நெறியில் உய்த்துச் செலுத்தும்.

‘தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்.’

256

ஊனினைத் தின்பதற்காக உயிர்களை உலகத்தார் கொல்லாரெனின், விலைக்கு ஊனைத் தருவாரும் இல்லை. ஊனினை உண்பார் யாரும் இல்லையாயின் ஊன்வாணிகம் இல்லை; அதனால் கொலையும் இல்லை என்பது கருத்து.

1. தாம் கொல்லாது விலைக்கு வாங்கிய ஊனை உண்ணுதல் பாவமில்லை என்ற பெளத்த சமயக் கருத்தை மறுத்து மொழிந்தது இது.

ஊன் கொள்வார் இல்லையாயின் ஊனை விற்பாரும் இல்லை; கொலைஞரும் இல்லை என்பது கருத்து.

2. ஊனினை உண்ணும் பொழுதெல்லாம் கொலை நிகழ்வதை உன்னுக. ஊன் உண்ணும் ஆசை, பிறிதொரு மனிதனைக் கொலைஞனாக்குவதை உணர்க! அதனால் ஊன் உண்ணும் அவா தடைப்படும். ‘கொள்ளாது’ என்ற பாடவேறுபாடும் சிறப்பானதே.

‘உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்.’

257

புலால் என்பது வேறோர் உடம்பின் புண்ணே என்ற உண்மையை உணர்ந்தால் ஊனை உண்ணா திருத்தல் வேண்டும்.

"புண் - நோய்வாய்ப்பட்டது; அருவருப்பானது என்று உணர்ந்தால் புலால் உண்ணும் ஆவல் அற்றுப் போகும் என்பது கருத்து.

1. ஊன் உணவு, பிறிதோருடம்பின் நோயுற்றபுண்; நோயினைத் தரும்புண் என்று உணர்க.

2. புலாலின் தீமைகளை அறிந்தால் போதாது. உணர்தல் வேண்டும்.

‘செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.’

258

மயக்கம் நீங்கிய தெளிந்த அறிவினை உடையவர் உயிர் நீங்கிய பிணத்தை உண்ணார்.

1. உயிர் நீங்கிய உடம்பு, பிணம் என்பதை அறிக; அதனை உண்ணற்க.

2. ஊன் உண்டலால் கொலை முதலிய குற்றங்கள் வரும் என்பதை அறிந்து தெளிக.

3. ஊன் உண்ணும் ஆசையால் அறிவை இழக்கக் கட்டாது.

‘அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.’

259

தீயின்கண் நெய்முதலிய பொருள்களைச் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலினும் ஒரு விலங்கின் உயிரைப் போக்கி அதன் உடம்பைத் தின்னாமை நன்றாம்.

வேள்விகளிலும் கொலை வேள்விகள் உண்டு. இத்தகு கொலை வேள்விகளைத் தவிர்த்திட வேண்டும் என்று கூறியது.

1. அருளின்மைக்குக் காரணமாகிய, கொலையைத் தவிர்த்திடாமல் வேள்வி முதலியன செய்தல் பயனற்றது என்றறிக.

‘கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்.’

260

ஓருயிரையும் கொல்லாதவனாய், புலாலையும் உண்ணாதவனை எல்லா உயிர்களும் கைகுவித்து வணங்கும்.

கொல்லாதவன் புலால் உண்பவனாக இருக்கலாம். புலால் உண்ணாதவன் கொல்பவனாகவும் இருக்கலாம் என்பதை உணர்த்தியது.

இன்று புலால் உண்பவர்களில் வாங்கி உண்பவரே மிகுதி. அதனால் இவர்கள் கொல்வதில்லை. இன்று புலால் உண்ணா மரபினைச் சார்ந்தவர்கள் துமுக்கியை (துப்பாக்கியை)க் கொலைக் கருவியைத் தாங்குவதைப் பார்க்கின்றோம்.

1. அருளுடைமையால் உயிர்கள் பேணிக் காக்கப் பெறுதலால் காக்கப் பெற்ற உயிர்கள்-மக்களைத் தொழுது வாழ்த்துகின்றன.

2. புலால் உண்ணாமையால் விலங்கு முதலிய உயிரினங்களும் கொல்லாமையால் மக்களும் பயனடைகின்றனர் என்பதறிக.

3. எல்லா உயிர்களும் மகிழ்ந்து தொழுது வாழ்த்துவதனை எண்ணிப் பார்த்துக் கொலையைத் தவிர்த்திடுக! ஊன் உணவினைத் தவிர்த்திடுக!

27. தவம்

தவம் - பொறிகள் வழி உணர்வு செல்லாது நோன்பு முதலியவற்றை ஏற்று ஒழுகுதல். மேலான செயல் என்ற பொருள் தரும் ‘தவ’ என்ற உரிச்சொல்லடியாகப் பிறந்த சொல் இது.

புலன்கள், அழுக்காற்று நெறியில் செல்லாமல் அருள் நெறியில் செல்லப்-பக்குவப்படுத்த, நன்னெறியினை எண்ணுதல்-சிந்தித்தல்.

தற்சார்பான உணர்வுகளிலிருந்து விடுதலைபெற, பிறர் நலம் பேணும் தொண்டுகளில் ஈடுபடுதல்.

‘உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு.’

261

தனக்கு வந்த பசி, பிணி இன்ன பிறவற்றைத் தாங்கிக் கொள்ளுதல்; பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமை என்ற அளவினதே தவம்.

பசி முதலியனவற்றைத் தாமே நீக்கிக்கொள்ளும் திறனோ, அவற்றைத் தாங்கிக்கொள்ளும் திறனோ இல்லாதவர்கள் மற்றவர்களுக்குத் தீங்குசெய்தாவது தீர்த்துக் கொள்ள எண்ணுவது தவமாகாது.

1. உடலுக்கோ-உணர்வுக்கோ ஊறு, இயற்கையின் வழியோ அல்லது மற்றவர்கள் மூலமோ வந்தால் அதனைப் பொறுத்தாற்ற வேண்டும்.

2. ஊறு செய்தவர்களுக்குத் திரும்ப ஊறு செய்ய நினைக்கக் கூடாது.

‘தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை
அஃதிலார் மேற்கொள் வது.’ 262

தவம்-தவத்தையே உடைமையாகக் கொண்டவர்க்கேயாகும். தவத்தையே உடைமையாகக் கொள்ளாதவர்கள் பிற நோக்கத்திற்காகத் தவம் மேற்கொள்ளுதல் அவமாகும்.

1. தவம் செய்ய முனைவோர் தவத்தையே உடைமையாகக் கொள்ளுதல் வேண்டும்.

2. தவம் செய்வார் காதற்ற ஊசியும் உடைமையாகக் கொள்ளுதல் சாலாது.

3. துவரத் துறக்கும் முயற்சியின் முடிவிலேயே தவம் செய்யும் முயற்சி மேற்கொள்ளுதல் வேண்டும்.

‘துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்.’ 263

யாதொரு பற்றுக் கோடுமின்றி முழுவதும் துறந்தவர்க்கு, உயிர் வாழ்தலுக்கு இன்றியமையாதனவாகிய உண்டி முதலியன வழங்குவதற்காகத் துறந்தாரல்லாத மற்றவர்கள் தவநெறியை மறந்தார்கள் போலும்.

1. தவம் செய்வார்க்கு இன்றியமையாதனவாகிய பொருள்களை வழங்குதல் தவம் உடையாரைத் தவத்தில் ஈடுபடுத்தியதாகும்.

2. தவம் மேற்கொள்ளாது வாழ்பவரின் கடமை, தவம் செய்வாரைப் பேணுதல்.