குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4/திருவள்ளுவர் காட்டும் அரசு

விக்கிமூலம் இலிருந்து

2

திருவள்ளுவர் காட்டும் அரசு

நம்முடைய மொழி காலத்தோடு கலந்து வளர்ந்திருக்கிறதா? வளரவில்லையே! அது வளர வேண்டாமா? இவை நம் முன் உள்ள வினாக்கள்!

இன்னமும் நாம் “தமிழிலே அறிவியலைக் கொண்டுவர முடியுமா? முடியாதா?’ என்று திருவுளச்சீட்டுப் போட்டுக்கொண்டு இருக்கின்ற நிலையில் இருந்து கொண்டிருக்கிறோம். ஆனால் தத்துவங்களைப்பற்றி- மெய்யியல் தத்துவங்களைப் பற்றி-கட்புலன்களுக்கு வாராத தத்துவங்களைப்பற்றி, மிக எளிய நடையில் பேசிய மொழியை, பருப்புலனுக்கு வரக்கூடிய பொருளுக்கு ஆய்ந்து, அதைப் பற்றிச் சொல்வதிலே அந்த மொழிக்கு ஆற்றல் இருக்காது என்று சொன்னால் நாம் எங்ஙனம் நம்புவது?

இல்லாத ஒன்றை, வெற்றுக் கற்பனையாகத் தமிழில் சில உண்டு என்று சொன்னால் நாம் நம்ப வேண்டாம். ஆனால் சில தமிழிலே உண்டு என்பதை நாம் கருதாது போனால் நமக்கு ஒரு தன்னம்பிக்கை இருக்காது.

ஆனால் தமிழில் இவை உண்டு என்று இருக்கின்றவற்றைக் கருதாதுபோனால் நமக்கு மேலே தாண்டிப் பறக்க முடியும் என்ற நம்பிக்கை தோன்றாது. ஆதலினாலே பழந்தமிழ் இலக்கியத்திலே சில இருக்கின்றன என்று கருதிப் பெருமை கொள்வதிலே ‘இடம், பொருள் கருதி’ தவறா சரியா என்று கொள்ள வேண்டுமே தவிர ஒட்டு மொத்தமாகக் கொள்ள முடியாது. பழந்தமிழ் இலக்கியங்களிலே அறிவியல் செய்திகள் உண்டு.

மாணிக்கவாசகர் திருவாசகம் பாடுகிறார். பக்திப் பண் ஒலிக்கிறது.

அதிலே இரும்பைக் காந்தம் இழுக்கிறது என்ற விஞ்ஞானத் தகவல் கிடைக்கிறது. இதை அழகாகப் பாடுகிறார்;

‘இரும்பு தரு மனத்தேனை
ஈர்த்து ஈர்த்து என் என்புருக்கி’

என்று.

இழுத்தல் என்றால் கைபோட்டு இழுப்பது. ஈர்த்தல் என்றால் கண்ணுக்குப் புலனாகாத ஒரு ஆற்றல் இழுப்பதற்கு ஈர்த்தல் என்று பெயர்.

இரும்பு காந்தத்தை இழுக்கும். இரும்பை இழுக்கக் கூடியது காந்தம் ஒன்றுதான்.

அது இழுக்கிற பொழுதுகூட ஈர்த்தல் என்றார்.

இதிலிருந்து, காந்தம்-காந்தத்தினுடைய ஆற்றல் இவற்றை ஆராய்ந்து இருந்தால் இந்த நாடு இந்நேரம் கொஞ்சம் முன்னுக்குப் போயிருக்கும்.

திருத்தக்கத்தேவர் மயிற்பொறி பற்றிப் பாடினார். மயிற்பொறி என்று ஒன்று இருந்தது. அது வானிற் சென்றது. சீவகன் இயக்கினான். ஆனால் இலக்கிய உலகம் அதற்குப் பதவுரை, பொழிப்புரை, இலக்கணக் குறிப்பு, ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் கண்டது.

விண்வெளியில் பறந்து இராவணன் சீதையைத் தூக்கிக்கொண்டு போனான் என்று கம்பன் பாடினான்.

ஆனால் நாம் அந்தப் பாட்டுக்குக்கூடப் பதவுரை பொழிப்புரைதான் கண்டோம். இன்னும் இடைக் காலத்தில் சமய உலகு ஒரு தவறு செய்தது.

தவறு என்றுதான் கருதுகிறேன். மற்றவர்களுக்குத் தெரியாதிருந்தால் உடன்பட வேண்டாம். கடவுளுக்கு நிரம்பப் பெருமை தரவேண்டும் என்பதற்காக, இந்த மனிதனை முடமாக்க வேண்டும் என்று இடைக்காலத்திலே சமயம் கொஞ்சம் வேலை செய்தது.

அதாவது, கடவுளுக்குப் பெருமை இருக்க வேண்டு மென்றால் மனிதன் கொஞ்சம் குறை உடையவனாக இருந்தால்தான் நல்லது என்று சமயம் கருதியது.

எனவே, மனிதனிடத்திலே கடவுளால் கொடுக்கப் பெற்ற-அவனுடைய அருளாகக் கிடைக்கப்பெற்ற அறிவைக் கூட அவன் இயக்கி வேலை செய்தால்தான் அது, பயன்தரும். ஆனால் அவனுடைய அறிவை இயங்கச் செய்தவனுக்குப் பெருமை சேர்க்காமல் கடவுளிடம் வரம் வாங்கினான். அதனால் செய்கிறான் என்றவுடன், அதைப் படிக்கின்றவன் கூட கடவுளிடம் சென்று வரம் வாங்க முடியுமா? என்ற எண்ணம் மேலோங்கி அவநம்பிக்கை தோன்றலாயிற்று.

இராவணன் வான் வழியாகப் போனதற்குச் ‘சிவ பெருமானிடம் வாங்கிய வரம்’ என்று ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்கள். இராவணனிடத்திலே இருந்த அறிவு தவறாகப் பயன்பட்டிருக்கலாம்.

அதை விமரிசனம் செய்வது வேறு; ஆனால் அவனிடமிருந்த அறிவை ஒத்துக்கொள்ளுகிற மனப்பான்மை இல்லை. ஆதலினாலே, அதை அந்தத் துறையிலே ஆய்வதற்குப் பதிலாக, அதை ‘வரம்’ என்று போட்டவுடனே, கேட்பவர்கள் வியப்பாகச் “சிவ பெருமானைப் பார்த்து, வரம் வாங்கி நாமாவது, வானில் போவதாவது; முடியாத காரியம்” என்று முடித்துவிட்டார்கள்.

இந்த இரண்டு தலைமுறையை அடுத்துப் பகுத்தறிவுத் தலைமுறை நமது நாட்டில் தோன்றியது. அவர்கள் கொஞ்சம் ஆராய்ந்தார்கள். சிந்தனை செய்யத் தொடங்கினார்கள்.

அவர்களும் அங்கே இருந்த தட்டுமுட்டுப் பாடல்களை வைத்துக்கொண்டு, இது சரியா தவறா என்று ஆராய்ந்தார்களே தவிர, அதிலேயிருந்த அறிவியல் கருத்துக்குரிய பாடலை எடுத்து, “விண்ணிலே பறப்பது எப்படி” என்று ஆராய்ந்து இருந்தால், அவர்கள் முன்னுக்குப் போயிருப்பார்கள்.

அவர்கள் எல்லாப் பாட்டையும் ஒன்றாக ஆக்கி, எதையும் ஆராயாமல், எல்லாம் பொய் என்றும், புளுகு என்றும், மூட்டை கட்டி அவற்றிற்குத் தீ வைக்க வேண்டும் என்றும் சொன்னார்கள்.

ஒருவர் படித்து மகிழ்ந்தார்; இன்னொருவர் செய்யலாமென்றார்; மற்றவர், “ஒன்றும் முடியாது, சிவ பெருமானிடம் வரம் வாங்க வேண்டும்” என்றார்.

இப்படி இருந்தால் தமிழ் எப்படி வளரும்? ஆகையினாலே அதை நாம் எண்ணிப் பார்க்கவேண்டும்.

இந்திய அரசியல் சட்டம் பற்றி நமக்குத் தெரியும். அது, கிட்டத்தட்ட உலக நாடுகளிலே உள்ள அரசியல் சட்டத்தைப் படித்து, பார்த்து, தொகுக்கப்பட்ட அருமையான சட்டமாகும். அதற்கு நாம் எவ்வளவு பெரிய பெருமை கொடுக்கிறோம் என்பது நமக்குத் தெரியும்.

ஆனால் டாக்டர் அம்பேத்கார் போன்ற பெரிய மேதைகள், அந்த வேலையைச் செய்திருந்தாலும்கூட அவர்களுக்கு ஓர் அடித்தளம் இருந்தது. அமெரிக்க நாட்டு அரசியல் சட்டம் இருந்தது. இங்கிலாந்து நாட்டு அரசியல் சட்டம் இருந்தது. வேறு பல நாடுகளின் அரசியல் சட்டங்கள் இருந்தன. அவற்றை ஆராய்ந்து அதிலிருந்து இதைச் செய்தார்கள்.

திருவள்ளுவர் ஓர் அரசியலைப்பற்றிப் பேசும் பொழுது இந்த உலக அரசியல் சட்டங்களையெல்லாம் கருதவோ படிக்கவோ எண்ணவோ அவர்க்கு வாய்ப்பில்லை. அவருடைய அரசியல்சட்டம் சுய சிந்தனையிலே இந்நாட்டினுடைய மண்ணுக்கு ஏற்றவாறு-நிலத்திற்கேற்ற வாறு- தகுதிக்கேற்றவாறு- தரப்பாட்டிற்கேற்றவாறு அமைந்த ஒரு சட்டம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

நீதிமன்றங்கள், குற்ற இயல் நீதி வழங்குகின்ற மன்றங்கள், இவற்றைக் கேட்டால்கூட நம்முடைய குறள் நெறி அமைப்பு, சட்டத்திற்கு ஒத்து இருக்கிறது என்று நிர்ணயம் செய்து சொல்லும்.

அவ்வளவு தெளிவாக இந்த அரசியல் சட்டத்தை-வாழ்க்கைச் சட்டத்தை ஆக்கியிருக்கிறார் வள்ளுவர்.

திருவள்ளுவர் தனி மனிதனை நம்பி அவனை அணுகுகிறார். தனி மனிதன்மீது அவருக்கு இருந்த கங்கு கரையற்ற-அளவு கடந்த நம்பிக்கை இவ்வளவு அவ்வளவு என்று சொல்ல முடியாது.

மனிதனை வெறும் சோளக் கொல்லை பொம்மை போல் அவர் கருதாமல், அவன் எல்லாச் சக்திகளும் படைத்தவன். அவன் நினைத்தால்-விரும்பினால், எண்ணிய எண்ணியாங்கு எய்த முடியும் என்று மிக நன்றாக நம்பி அவனை அணுகுகிறார். அவனைக் குடும்பத்தோடு கொண்டு போய்ச் சேர்க்கிறார்; அதற்குப் பிறகு சமுதாயத்திற்கு அழைத்துச் செல்லுகிறார். இந்த அமைப்பிற்கு வந்த பிறகு, அவன் எங்கேயாவது வழுக்கி விழுந்துவிட்டால் அவனுக்கு ஒரு பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக அரசு என்ற ஒன்றையும் அமைக்கிறார். அவன் காவலுக்கும், நலனுக்கும் அரசே தவிர, அவனைக் கட்டி வைப்பதற்கு அரசு அல்ல.

திருவள்ளுவர் அரசைக் காட்டுகிறார். அந்த அரசு ஒரு உச்ச வரம்பு உடையது அன்று. அந்த அரசு மக்களைக் கட்டி மேய்க்கின்ற அமைப்பு அன்று. அவனுக்கு ஏவல் செய்து, நலம்செய்ய வல்ல ஒரு சேம வைப்பு. இன்னும் சொல்லப் போனால், கடவுளிடத்தே நேரிடையாகச் சென்று முறையிட்டுக் கொள்ள முடியாததினால் அதை அரசனிடம் முறையிட்டுக் கடவுளின் பிரதிநிதியாக நினைக்கச் செய்கின்ற இடம்.

இங்கே திருவள்ளுவருக்குரிய அரசியல் அமைப்பிலே, 2000 ஆண்டுகளுக்கு முன்பு, இன்றைக்கு மிகப் பெரிய நாடுகளாகக் கருதப்பெறுகின்ற இங்கிலாந்து, அமெரிக்கா, சோவியத் யூனியன் எப்படி இருந்தன, எங்கு இருந்தன, அவற்றில் என்ன அரசு இருந்தது என்பவற்றை எண்ணிப் பார்க்க வேண்டும்.

நம்மோடு ஒத்துவரக் கூடிய, கிட்டத்தட்ட கொஞ்சம் நாகரிக அமைப்பிலே, தகுதியிலே, ஒரு நாடு இருக்குமானால், அது கிரேக்க நாடு ஒன்றுதான். அது அந்தக் காலத்தில் இருந்து வந்திருக்கிறது. அந்த அரசு கூடத் திருவள்ளுவர் காண்கின்ற அரசு அன்று.

சாக்கரட்டீஸ்கூட ஏதன்ஸ் நகர அரசைத்தான் அரசு என்கிறார். ஒரு சின்ன நகராட்சி அமைப்புத்தான் அங்கே அரசாகக் காணப்படுகிறது.

இப்படி நாடுகளைக் கடந்து, மொழிகளைக் கடந்து, இனங்களைக் கடந்து ஒரு ஒப்பற்ற பேரரசை உருவாக்குகின்ற சக்தி அதற்குரிய அமைப்புக்கூட பிளாட்டோவின் அரசியலுக்குக் கிடையாது.

சிறு சிறு நகரங்களாக அமைகின்ற சிறு அமைப்புகள்-நகராட்சி எவ்வளவு சுலபமானது என்பது நமக்குத் தெரியும். நாட்டாட்சியைவிட நகராட்சி சுலபமானதுதான். ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன் விரிந்த, பரந்த ஒரு பேரரசுக்கு அடித்தளமிடுகிறார்.

முடியாட்சி எங்கு பார்த்தாலும் கோலோச்சுகின்ற காலத்தில், அரசன் தெய்விக உரிமையுடையவன் என்பது உலக நாடுகளின் கருத்தாக இருந்தது.

இங்கிலாந்து நாட்டுச் சரித்திரத்திலும், மற்ற நாட்டுச் சரித்திரத்திலும், இதற்காகவே மனிதர்கள் போராடியிருக்கிறார்கள்.

அரசன் தெய்விக உரிமையுடையவன். அவன் தெய்வத்தினாலே அதிகாரத்தைப் பெற்றிருக்கிறான். அவன் தவறே செய்யமாட்டான். அரசன் தவறு செய்வான் என்று கருதுவதே பாபம். இது நாம் இன்றைக்குப் பெரிதாகப் பாராட்டுகின்ற ஆங்கிலேயரின் கருத்து; ஆங்கில நாட்டினுடைய நாகரிகம்.

நமக்கு மொழியின்மீது வேண்டுமானால் பற்று இருக்கலாம். மொழியை ஒட்டியிருக்கின்ற கருத்திலே நமக்கு ஒன்றும் பற்று வாராது என்று நினைக்கிறேன். இது நாட்டினுடைய மரபு.

ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாட்டில் நல்ல முடியாட்சி இருக்கின்ற காலத்தில் திருவள்ளுவர், முடியாட்சியிலே குடியாட்சி தழுவிய ஒரு மரபை நினைவு படுத்துகிறார்.

‘முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்(கு)
இறையென்று வைக்கப் படும்.’

388

என்றார்.

அரசனுக்குச் சொல்லுகின்றபோது இலக்கணம் சொல்லுகின்றார். நீ அரசு கட்டிலே வந்ததினால் அரசு அல்ல; உனக்கு வழி வழியினாலோ, வேறு காரணத்தில் வந்ததினாலோ அரசு அல்ல. நீ முறை செய்து காப்பாற்றினால், தகுதியறிந்து கடமையறிந்து இந்த இரண்டையும் அறிந்து நீ முறை செய்தால் உன்னை இறை என்று வைப்பர். ‘இறை என்று வைக்கப்படும்’ என்பது, என் தகப்பனார் மாதிரி கருதுகிறேன் என்றால், கருதுகிறாரே தவிர, தகப்பன் அல்ல என்பது தெரிகிறது.

“நீ கடவுள் போல” என்றால் கடவுள் அல்ல, ஆனால் கடவுள் போலக் கருதுகிறேன் என்று பொருள் ஆக, தெய்விக உரிமை என்று அரசுக்கு உரிமையிருந்த காலத்தில் ஒன்றே முக்கால் அடியிலே இந்த நாட்டிலே நல்ல கொடிகட்டி ஆண்ட பேரரசுகள் இருக்கின்ற பொழுதுகூட திருவள்ளுவர் புரட்சி செய்கிறார்.

இதே கருத்தைப் பிரெஞ்சுப் புரட்சி வருகின்றபொழுது, சொல்வதற்கு ரூஸோ பட்ட அல்லல் நமக்குத் தெரியும். அந்த நாடு அதை ஏற்றுக்கொள்வதற்கு எவ்வளவு அல்லல்பட்டது என்பதும் நமக்குத் தெரியும். ஆனால் எளிய புரட்சியாகத் திருவள்ளுவர்,

‘முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறைஎன்று வைக்கப் படும்.’

388

என்றார்.

இறை என்று சொன்னால் மட்டும் போதுமா? குடிகளை நன்றாகத் தழுவி ஆட்சி செய்ய வேண்டும்.

புறநானூற்றுக் கவிஞன் இவருக்கு அடி எடுத்துக் கொடுக்கிறான். புறநானூற்றுக் கவிஞன் அரசனைப் பார்த்துச் சொல்லுகிறான்; ‘நீ நாட்டு மக்களை எப்படிக் காப்பாற்றவேண்டும், தெரியுமா? ஒரு தாய் தன் குழந்தையைக் காப்பாற்றுவதுபோல் காப்பாற்ற வேண்டும்.”

நம்முடைய நாட்டிலே உயர்ந்த அன்பிற்குச் சொல்லுவதெல்லாம் தாயன்பைத்தான்.

அந்த அன்புகூடக் காலப்போக்கிலே, நமது நாட்டிலே, நவீன உலகத்தின் காரணமாகப் பூரணமாகச் செழித்து வளருமோ வளராதோ என்ற ஐயப்பாடு தோன்றியிருக்கிறது.

‘பால் நினைந்தூட்டும் தாயினும்
சாலப் பரிந்து’

என்றார் மாணிக்கவாசகர். அவருக்கு அதிலே நிறைய இன்பம். அந்த வார்த்தைகளைச் சொல்லுகின்றபோதே அவருடைய நாவினிக்கின்றது.

‘நினைந்தூட்டும் தாயினும்
சாலப் பரிந்து.’

என்ற வாக்கியத்திற்கு நீண்ட நாட்களாக எனக்கு உரை விளக்கம் கிடைக்கவில்லை.

நினைந்து ஊட்டுகிற தாய் என்பதைக் கேட்டிருக்கிறோம்.

நினைந்து ஊட்டுகின்ற தாய் மிகவும் பெருமை மிக்கவள் அல்லவா? நினைந்து ஊட்டுவதைவிடச் சிறப்பு என்ன இருக்கிறது?

சாதாரணமாக அழுதும் ஊட்டாத தாயை உலகத்தில் நாம் பார்க்கத்தான் செய்கின்றோம்!

அழுத பிறகு ஊட்டுகின்ற தாயையும் பார்க்கின்றோம்.

சில பேர் காலம் அறிந்து நினைந்து ஊட்டுவார்கள்.

மாணிக்கவாசகர் இந்த மூன்று தாயையும் பற்றிச் சொல்லுகிறார்.

‘நினைந்து ஊட்டுகிற தாயைவிடச் சிறந்தவன்’

என்பதற்குத் திருவள்ளுவர்தான் விளக்கம் சொல்ல வேண்டும்.

அவர் இன்பத்துப்பாலிலே, தலைமகன் ஒருவன் தலைவியைப் பிரிந்து, பொருளீட்டும் பொருட்டுச் சென்றிருந்தவன், மீண்டும் வந்து தலைவியைப் பார்த்த போது, “நான் பிரிந்திருந்தபொழுது உன்னை நினைத்துப் பார்த்தேன்” என்று தலைவியிடத்திலே சொன்னவுடன், தலைவி அழுகிறாள். சொல்லுகின்ற ஆளுக்குத் திண்டாட்டமாகப் போய்விடுகின்றது. என்ன சொல்வது என்பது தெரியவில்லை!

‘பிரிந்த நேரத்திலே உன்மேல் கொண்டுள்ள பாசத்தால் உன்னை நினைத்துப் பார்த்தேன் என்று சொன்னேன். இதற்குப்போய் அழுகிறாயே?” என்றுதான் கவலைப்பட்டுச் சொல்கிறான்.

அவள் சொல்லுகிறாள்: ‘நீங்கள் நினைத்துப் பார்த்தீர்கள் என்றால் என்னை மறந்துதானே நினைத்தீர்கள். அப்பொழுது நீங்கள், என்னை ஒருபொழுது மறந்து விட்டீர்கள் என்றுதானே அர்த்தம்’ என்கிறாள்.

இறைவன் நினைந்து ஊட்டுகிறதாயென்றால், அப்பொழுது இறைவன் ஒருபொழுது உயிர்களை மறந்தானோ என்ற கேள்வி வருகிறது. ஆனால், உயிர்களை இறைவன் எப்பொழுதும் மறப்பதே இல்லையென்பதை,

{{block_center|

‘நினைந்தூட்டும் தாயினும்
சாலப் பரிந்து’}}

என்று சொல்லுகிறார்.

நமது செந்தமிழ்க் குமரகுருபர அடிகள் இதற்கு ஓர் அழகான உவமை சொன்னார்.

நம்முடைய தில்லையம்பலவாணனுடைய திரு மேனியைப் பார்த்தால் அவனுக்குப் பக்கலில் நமது சிவகாமி அம்மை, பெருமானின் முகத்தைப் பார்த்துக் கொண்டு இருப்பது போல அந்த மூர்த்தி வைக்கப்பட்டிருப்பதை அறியவாம். அது சில கோவில்களில் முறை தவறி வைக்கப் பட்டிருக்கும். அது தவறு. ஏன், அந்தப் பேரின்பக் கூத்தை அந்த அம்மை பார்த்துக்கொண்டு இருக்கிறாள் என்று குமர குருபரர் வினா எழுப்பி விடை சொல்லுகிறார்.

அம்மையார் கூத்தைப் பார்க்கவேண்டும் என்ற அனுபவத்தோடு அல்லது பெருமானுடைய அழகைப் பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தோடு அவ்வாறு இருக்கவில்லை. அந்தக் கூத்து ஒரு பேரின்பக்கூத்து. நிறைய நாள் வரட்சியிலே இருக்கிற உயிர்களுக்கு அந்தக் கூத்தினுடைய பேரின்பத்தைப் பார்ப்பதுடன், வாரி விழுங்கவும் ஆசை வரும்.

‘வாரி விழுங்கினேன், விக்கினேன்,
விதியின்மையால்’

அப்படிக் கண்டபடி வாரி விழுங்கினால், உண்ணத் துவங்கினால், அவர்கள் விக்கிச் சாவார்கள்.

ஆகையினால் தகுதியறிந்து ஊட்ட வேண்டும் என்பதற்காக அந்தக் கூத்திலே விளைகின்ற இன்பத்தையெல்லாம் அவள் வாங்கி, உயிர்களினுடைய தரம் அறிந்து பக்குவமாக ஊட்டுகிறாள் என்று சொன்னார்.

அது எப்படி என்று குமரகுருபரர் சொல்லுகிறார். குழந்தைக்கு நோய் என்றால் தாய்தான் மருந்து உண்பாளே தவிர, குழந்தை மருந்துண்பதில்லை.

குழந்தையின் நோயின் மருந்துக்குத் தாய்தான் பத்தியம் பிடிப்பாளே தவிர, குழந்தை பத்தியம் பிடிக்காது. அது போல, உயிர்களுடைய துன்பத்திற்கு இறைவன்தான் பத்தியம் பிடிக்கிறான்.

இதைத் திருக்கோவையாரிலே மாணிக்கவாசகர் இன்னும் நுணுக்கமாகக் கேட்கிறார். திருநீறு அணிந்தால் வினை போகும் என்று சொல்லுகிறார்கள். சரி, நாம் எல்லாம் அணிகிறோம்.

சிவபெருமானும் அணிந்திருக்கிறானே?

அப்படியென்றால் சிவனுக்கு ஏதாவது வினையுண்டா? என்று கேட்பது போல மாணிக்கவாசகர் கேட்கிறார்.

சிவனுக்கு வினை இல்லை!

‘தொழுதெழுவார் வினைவளம்
நீறெழ நீறு அம்பவவன்’

மற்றவர்கள் நோய் நீங்க வேண்டும் என்பதற்காக அவன் நீறு அணிகின்றான்.

புறநானூற்றுக் கவிஞன் சொல்லுகிறான், குழந்தைகளைத் தாய் காப்பாற்றுவது போல, குடிமக்களைக் காப்பாற்றுவது மன்னன் கடமை என்று.

திருவள்ளுவர் இதை ரொம்ப அழகாகக் கூறுகிறார்.

‘குடிதழீஇ கோலோச்சும் மாநில மன்னன்’

என்றார்.

தழுவப்படுகின்ற பொருள் எப்படியும் நம்மிலும் உயர்ந்தது என்று நாம் கருதவேண்டும். சில சமயம் நம்மிலும் தாழ்ந்ததையும் தழுவுவது உண்டு. ஆனால் இங்கே நம்மை விட உயர்வரம்பாக இருக்கின்ற அதிகார வரம்புடைய-ஆட்சிப் பொறுப்புடைய ஒரு அரசு குடி மக்களைத் தழுவுகிறது என்று சொன்னால், அங்கே குடிமக்களுக்குரிய தரத்தை, தகுதியை, பெருமையை, உரிமையைத் திருவள்ளுவர் பெரிதுபடுத்துகிறார்.

‘குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.’

(544)

என்றார்.

ஆக, முடியாட்சிக் காலத்திலேயே குடியாட்சியைப் பற்றி-குடியாட்சிக்குரிய இயல்புகளையெல்லாம் பற்றித் தெளிவாகத் திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார்.

இது அவருடைய அரசியலிலே மிக முக்கியமான ஒரு செய்தி. இப்பொழுது அரசு என்றால் ஒரு அதிகார அமைப்புடையதாகக் கருதப்படுகின்ற மனப்போக்கு வளர்ந்திருக்கிறது. அதற்கு உள்ளே போகவேண்டும். இல்லையெனில் அவர்கள் கண்ணிலாவது படவேண்டும் என்ற ஒரு பேரவா மனத்திலே உந்திக்கொண்டு இருப்பதாலே நமது அரசியல் உலகம் சழக்குகளாக - சேறாகப் போவதைப் பார்க்கிறோம். அஃதோடு சில கடமைகள் உடைய பணிமனையாக மட்டும் இருக்குமானால் இவ்வளவு பெரிய போட்டி, பொறாமை, சூது, காய்ச்சல் பாடு அதிலே தோன்றா.

திருவள்ளுவர் இதை நினைவிலே வைத்துக்கொண்டு சொல்கிறார். ‘நீ குடிகளைத் தழுவி ஆட்சி செய்ய வேண்டும். நீ குடிகளுக்குச் சில நன்மைகள் செய்கிறாய் என்றால் அது உனது கடமை, உன்னுடைய பொறுப்பு' என்று கருதினார். இது அவருடைய ஆட்சியிலே இருக்கின்ற அரசியல் சிறப்பு என்பதை மறந்துவிடக் கூடாது.

கிட்டத்தட்ட இன்றைய மக்களாட்சி மரபு அரசும் இதுவும் ஒத்து இருக்கிறது. அடுத்து, இந்த அரசுக்குப் பொருள் என்ன என்பதை மிகத் தெளிவாகச் சொன்னார்.

இன்றைய தினம் பத்திரிகையில் தலைப்புச் செய்தியில் வரி இல்லை என்று செய்தி வந்துள்ளது. அரசு வரவு செலவுத் திட்டத்திலே வரி விதிக்கவில்லை.

நம்முடைய திருவள்ளுவர், அரசுக்குப் பொருள் வருவாய் எப்படி, என்ன என்பதைச் சொல்லுகிறார், பொருள் இயலிலே.

உலகத்திலே இந்தப் பொருளாதாரம் என்பது ஒரு பெரிய சித்தாந்தமாக-தத்துவமாக வளர்ந்திருக்கிறது.

கிட்டத்தட்ட திருவள்ளுவர் நல்ல பொருளியல் நுட்பங்களை அறிந்தே பேசியிருக்கிறார். அந்த நுட்பங்களையெல்லாம் அறிந்தால்கூட நமது நாட்டிலே செல்வம் செழிக்கும்.

திருவள்ளுவர் பொருளை ஈட்டுவதைப்பற்றிச் சொல்லும்பொழுது,

‘இயற்றலும், ஈட்டலும், காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு.’

385

என்று சொன்னார். இயற்றல் என்பது மிக நுட்பமான சொல். நமக்கு இயற்றுகிற குணமும் இப்பொழுது கிடையாது.

கோடி வீட்டுக்காரர் ஒரு கடை வைத்தார். நல்ல வியாபாரம் நடந்தது என்றால் பக்கத்து வீட்டுக்காரரும் அதே வியாபாரம் நடத்த எண்ணுகிறார். அவருக்கு இன்னொரு புதுத் தொழில் காண்பதற்கு விருப்பமே கிடையாது. அவருக்கு அதிலே லாபம் வந்ததா? நாமும் அதைச் செய்வோம் என்கின்ற எண்ணம் வருகின்றது.

நம்முடைய நாடு இப்பொழுது போய்க்கொண்டு இருப்பதைப் பார்த்தால், உலகப் பொருளியல் நிபுணர்கள், சாக்ரட்டீஸ் போன்ற சிறந்த அரசியல் மேதைகள் “ஒரு நாட்டிலே வியாபாரம் அதிகம் பெருகினால் அந்த நாடு அழியும்” என்று கூறியது உண்மையாகி விடுமோ என்று அஞ்சவேண்டியுள்ளது.

அந்த நாட்டிலே வர்த்தகங்கள் இருக்கலாம். அவன் வியாபாரத்திற்கும் வர்த்தகத்துக்கும் இடையே வேற்றுமை பிரிக்கிறான். நெடிய தொலைவிலிருந்து, இல்லாத பொருளைக் கொண்டுவந்து கொடுப்பது வர்த்தகம்.

இங்கே இருக்கின்ற அல்லது உற்பத்தியாகின்ற பொருட்களை நெடிய தொலைவில் விற்பது வர்த்தகம்.

மாம்பலத்திலே உள்ள பொருளை மயிலாப்பூரிலே விற்பதும், மயிலாப்பூரிலே இருக்கின்ற பொருளை மாம்பலத்திலே விற்பதும் வர்த்தகமாகாது; வியாபாரமாகும்.

இதில் பெரும்பாலும், புதுப் பணம் உற்பத்தியாகாமல், கையிலே இருக்கின்ற பணம் சுழன்றுகொண்டிருக்கும். இயற்றலும் என்று வள்ளுவர் கருதுகின்றபோது, புதுப் பொருளாதாரச் சித்தாந்தப்படி, புதிய தொழிற் புரட்சிகளை-புதிய தொழில் அமைப்புகளை-உருவாக்கிப் புதிய வழியிலே பொருளீட்ட வேண்டும்.

பொருள் வருவதற்குப் புதிய வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்.

அரசுக்கு அதுதான் வேலை என்று திருவள்ளுவர் நினைக்கிறார்.

ஏதோ வந்து கொண்டிருக்கின்ற ஒரே துறையிலே வருவாய் வந்தால் போதாது. ஆக புதிய வழிகளிலே புதிய புதிய தொழில்களிலே செல்வம் வந்து குவியும்படியாகச் செய்யவேண்டும்.

‘ஈட்டல்’-அவற்றை ஒழுங்காகக் கொண்டுவந்து சேர்த்தல்.

‘காத்தல்’-கொஞ்ச நாளைக்குக் காக்கவேண்டும்.

செல்வம் வர வர உருண்டுகொண்டு இருந்தால், திரும்பச் செல்வம் வருகின்ற வழியை இழந்துவிடுகின்றது.

ஒரு நூறு ரூபாய் ஒருவரிடத்திலே இல்லாமல் நூறு பேரிடம் ஆளுக்கு ஒரு ரூபாய் வீதம் இருந்தால், அந்தச் செல்வத்திற்குத் திரும்பி வரும் சக்தி இல்லாமல் போய்விடுகிறது.

அதற்கு ஒரு மூலதனம் என்று பெயர் வராது. ஆனால் இந்த நூறு பேரும் அரசின் வங்கியிலே இட்டால், இந்த நூறு பேரும் ஒரு சிறு சேமிப்பிலே இட்டால், நூறு ரூபாயும் ஒரு இடத்திலே சேருகிறது. அது ஒரு பெரிய பொருளைச் சேர்க்கின்ற சக்தியைப் பெறுகின்றது.

சாதாரணமாக உதிரி உதிரியாக வருகின்ற பணத்தை, சில்லறையாக வந்து சேருகின்றதைத் தயவு செய்து உடனுக்குடன் அழித்துவிடாதீர்கள். அதை ஒரு மூலதனமாக உருவாகிற வரையில் அந்தப் பொருளைப் பத்திரமாகச் சேமித்து வையுங்கள்.

மூலதனத்தின் திரட்சி தேவை என்பதை, பொருளியல் நூல்கள் கருதுவதை, வள்ளுவர் 2000 ஆண்டுகளுக்கு முன்பு எவ்வளவு தெளிவாகவும், நுட்பமாகவும், சொல்லியிருக்கிறார்.

புதிய துறைகளில் பொருள் வருவாய்க்காகச் செய்ய வேண்டும். அவற்றை முறையாக ஈட்டிக்கொண்டு வர வேண்டும். அவற்றைக் கொண்டுவந்து பிறிதொரு மூலதனத்தைப் பெறுதற்குரிய இன்னொரு செல்வத்தை, தகுதி பெறுகின்ற காலம் வரையில் காக்க வேண்டும்.

ஆனால் நெடிய நாட்களுக்கு அந்தப் பணம் தூங்கி விட்டாலும் ஆபத்து. அதற்குப் பிறகு அதை வகுத்து முறைப்படுத்த வேண்டும்.

வகுத்தல் என்றால் விநியோகம் என்றோ, வேறு மாதிரியாகவோ நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த நாட்டிலே விநியோகம் என்பது ஒழுக்கமில்லாத ஒன்று. அதனாலே விளைகின்ற இன்னல்கள் ஏராளம்.

உதாரணமாக, நம் நாட்டிலே வழிபாட்டு நிலையங்கள், பஜனை மடங்களுக்குச் சென்றால், கடைசியாக எல்லோருக்கும் சுண்டல் கிடைப்பது தெரிந்ததே!

வழிபாட்டு நிலையங்களுக்கு நம் நாட்டிலே இது ஒரு முத்திரையாயிற்று. ஒருநாள் வழிபாட்டு நிலையத்திலே வழிபாடுகள் எல்லாம் முடிந்த பிறகு, சுண்டல் கொடுக்கின்ற காலக் கட்டம் வந்தது; அன்று கூட்டம் கொஞ்சம் அதிகம். ஆனால் சுண்டல் கொஞ்சம் குறைவாக இருந்தது.

அதை எடுத்துக் கொடுக்க ஆரம்பித்தபொழுது, அங்கு இருந்த ஒரு பெரியவர் சட்டியைப் பார்த்தார். ‘கூட்டம் அதிகமாக இருக்கிறது. சுண்டலோ குறைவாக இருக்கிறதே! எல்லோருக்கும் கிடைக்குமா?" என்று பெரியவர் சுண்டல் கொடுக்கிறவரைப் பார்த்துக் கேட்டார். ‘சுண்டல் கொஞ்சம் குறைவாக இருக்கிறது, எல்லோருக்கும் கிடைக்கும்படியாக நிரவிக்கொடு’ என்று சொன்னார்.

சுண்டல் கொடுப்பவர் நிரவிக் கொடுக்க ஆரம்பிக்கையில், கூட்டத்திற்குப் பின்னால் ஒருவன் உட்கார்ந்திருந்தான். அவன் பஜனைக்குக்கூட வரவில்லை சுண்டலுக்காக வந்தவன்.

இத்துணை பேருக்கும் கொடுத்துக்கொண்டு வந்தால் நமக்கு வராதோ என்ற கவலை அவனுக்கு ஏற்பட்டதோடு மட்டுமின்றி, அச்சம் வேறு வந்துவிட்டது. ஆகையினாலே, முன்னால் இருந்தவர்களைத் தள்ளிக்கொண்டு சென்று பத்துப் பேருக்குரிய சுண்டலைக் கைபோட்டு எடுத்துச் சென்றுவிட்டான். அந்த இடத்திலே நிகழ்ந்த அச்சம்பவத்தை, அந்த இடத்திலே இருந்த யார் பார்த்தாலும் பொறுமையாக இருக்க மாட்டார்கள்.

எவ்வளவு பெரிய பொறுமைசாலியாக இருந்தாலும், ‘என்னப்பா! பத்துப் பேர் சுண்டலை ஒரு ஆள் அள்ளிக் கொண்டு போகிறாயே!’ என்று கேட்டுத்தான் கோபிப்பார்கள்.

பஜனை மடத்திலே பத்துப் பேருக்கு விநியோகிக்க வேண்டிய சுண்டலை ஒரு ஆள் அள்ளிக்கொண்டால், அதற்கு நமக்குப் பொறுமை கிடையாது, தாங்குகிற சக்தி நமக்குக் கிடையாது.

ஆனால் நாட்டிலே, நிலத்திலே, சுரங்கங்களிலே, மலைகளிலே, காடுகளிலே விளைகின்ற ஏராளமான செல்வங்களை, பத்துப் பேர் சாப்பிடக்கூடியவற்றை ஒரு ஆள் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டால், “அவன் கொடுத்து வைத்தவன்” என்று சொல்லுகிறார்கள்.

இதே ஆட்கள்-சுண்டலுக்கு மனம் வருந்தியவர்கள், ஏராளமான நாட்டினுடைய இயற்கைச் செல்வங்கள் முறையாக விநியோகப்படாமல், முறையாகப் பகிர்ந்து கொடுக்கப்படாமல், பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்ற இயல்புக்கு ஏற்பச் செய்யப்படாமல் அவை எங்கோ சென்று குவிவதைப் பார்த்தால், அதை ஏன் என்று கேட்கத் தைரியம் கொள்ளமாட்டார்கள். தைரியம் கிடைக்காமல் இருப்பதற்குக் காரணம், ஏதோ கடவுள் ஒரு நீதியை ஏற்படுத்திவிட்டான் என்ற ஒரு பாறைக்கல், ஒரு சுமை நம் மூளைமீது ஏற்றப்பட்டிருப்பதால் நாம் அதைத் தட்டிக் கேட்பதற்கு அச்சப்படுகின்றோம்.

‘இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.’

1062

என்று வள்ளுவர் குரல் கொடுக்கிறார்.

ஆக, திருவள்ளுவர் காத்தலுக்குப் பிறகு ‘வகுத்தலும் வல்லது அரசு’ என்று சொன்னார்.

ஆக, ஒரு பொருளியல் என்று சொன்னால், அது எப்படி இருக்கவேண்டும்; ஒரு அரசு பொருளை எப்படி நிர்வாகம் செய்யவேண்டும் என்பதை மிகத் தெளிவாக, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புதிய வழிப் பொருளியல், பொருள் ஈட்டல், பொருளைப் பாதுகாத்தல்,

தி.ΙV.12. வகுத்தல் என்ற அமைப்பிலே சொன்ன அழகை நாம் பார்க்கின்றோம்.

அடுத்து, நம்முடைய அமைப்பிலே அவருக்கு இருப்பது நாட்டின் நில வருவாய். இப்பொழுது பெரும்பாலும் நாட்டிலே நில வருவாய்தான் அதிகம். நம்முடைய நாட்டின் ஆட்சித் துறையிலேகூட வேளாண்மைத்துறை மிக முக்கியமான உயிர் நாடி என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

திருவள்ளுவர் "வாரி பெருக்கி" என்பதை அரசைப் பார்த்துச் சொன்னார். நல்ல நீர் மராமத்து, குடி மராமத்துக்களைச் செய்து, தண்ணீர் வளத்தைப் பெருக்கும்படியான காரியங்களைச் செய் என்பதைத்தான் வள்ளுவர்,

"வாரி பெருக்கி வளம்படுத்து"

என்றார்.

இந்த வேளாண்மை என்ற தொழில் இருக்கிறதே அதிலே மழைக்கு-தண்ணீர் வளத்திற்கு வாரி என்று, பெயர். இந்த வாரி வேலைகளை-கால்வாய் வேலைகளைக் காலா காலத்திலே முறையாகச் செய்து, அவைகளைத் தூய்மைப்படுத்தித் தண்ணீரை நிறையக் கொண்டுவந்து சேர்த்து, வளம்படுத்த வேண்டும். நிலங்களை வளப்படுத்த வேண்டும். போதுமா? அதற்குப் பிறகு பூச்சிபொட்டு அழிவு வருகிறதே! அதற்கு? உற்றதை ஆராய்ந்து, உரியதைச் செய்து, நீர்வளம் பெருக்கி நிலவளம் காக்க வேண்டும்.

இதற்குப் பிறகு, பயிர் அழிந்துவிடாமல் இருப்பதற்குரிய காவலும் வேண்டும். ஆகவே, ஒரு நீர்ப் பாசனத்துறை, விவசாயத்துறை, வேளாண்மைத்துறை அமைச்சர் அலுவலகத்தில் இந்தக் குறள் இருந்தால்-இந்த மூன்று வேலைகளையும் ஒழுங்காகச் செய்தால், வேளாண்மைத்துறையில், நிச்சயமாக உணவுத் தட்டுப்பாடு இல்லாமல் இருக்கும். இப்பொழுது வாரி பெருக்குவது என்பதே கிடையாது.

பழங்காலத்திலே நமது சிற்றரசர்களிலே மூவேந்தர் காலங்களிலேகூடக் குடிக்கு ஒரு மரக்கால் என்று நெல் எடுத்து, தன்னுடைய வாய்க்கால் வருகின்ற வரப்புக் கால்களை எல்லாம் பழுது பார்த்துச் சீர்செய்து முறைப்படுத்தி வைப்பார்கள். ஒரு சொட்டுத் தண்ணீர் பெய்தால் கூட அது கண்மாய்களுக்கும், ஏரிகளுக்கும்தான் வந்து சேரும்.

இப்பொழுது ஒரு சொட்டுத்தண்ணீர் பெய்தால் இடையிலே இருக்கின்ற திட்டுமுட்டுகளிலே தங்கி வருவதற்குள்ளாக வீணாகிவிடுகிறது.

ஆக, ‘வாரி பெருக்குதல்’ என்ற ஒரு கடமையை அரசுக்கு வற்புறுத்துகிறார்.

வாரித் தீர்வை என்றே தமிழக அரசு ஒரு தீர்வை வாங்கி, இந்த வாரி, கால்வாய்களை எல்லாம் பழுது பார்த்திருக்கிறது!

ஆனால் இப்பொழுது அது ‘வாரி பெருக்குதல்’ என்கிற ஒரு வேலையை முற்றிலும் செய்வது இல்லை.

அது திருவள்ளுவர் கண்ட அரசிலே மிகச் சிறந்த சிறப்பு.

நிலத்தை வளப்படுத்த வேண்டும் என்று சொன்னார்.

பெரும்பாலும் நம்முடைய நிலம் எய்த்துப் போய்க் கிடக்கிறது.

ஒரு சாண் மண், இரண்டு சாண் மண், கிண்டிக் கிண்டி பத்து நூறு ஆண்டு அவன் எடுத்துக்கொண்டு இருந்திருக்கிறான்.

நீ எவ்வளவு எடுத்தாயோ, அதிலே பத்தில் ஒரு பங்காவது நிலத்திற்குத் திரும்பக்கொடுக்க வேண்டாமா?

கொடுக்க வேண்டும். அதைத்தான் வள்ளுவர், நிலத்திற்கு வளம் இட வேண்டும் என்கிறார். பின்னால் எரு இடுதல் என்றே சொல்லுகிறார்.

ஆழ உழ வேண்டும்; அகல உழுவதைவிட எரு இடுதல் சிறந்தது என்று கூறுகின்றார் திருவள்ளுவர். எரு இடுதல், புழுதிகூட எப்படி உழ வேண்டும், எப்படிப்பட்ட புழுதி இருக்கவேண்டும், என்றும் சொல்லுகிறார்.

எனவே, வேளாண்மைத் துறைக்கு ஒரு சிறந்த பொறுப்பை அரசு ஏற்றுக்கொள்ளவேண்டும். அது அதனுடைய கடமைகளிலே மிகச் சிறந்தது என்றே சொன்னார். அதற்குப் பயிர் பச்சைகளையெல்லாம் காப்பாற்றவேண்டும் என்று சொன்னார்.

சரி, அப்பொழுது நான் வரியே இல்லை என்று சொன்னேனே, வரியில்லாமல் அரசு எப்படி நடந்தது? அரசுக்கு வரி எப்படி வந்தது? ஆனால், இப்போது எல்லாரும், எல்லா இடங்களிலும், பல வாசற்படிகளில் வரி கொடுக்கிறோம். ஒரு வாசற்படியிலே, ஒரு ஆளிடம் மட்டுமல்ல, பல இடங்களிலே-பல கட்டடங்களிலே, பல வடிவங்களிலே-பல பெயர்களிலே வரி கொடுக்கிறோம்.

சிலர் நாம் வரி கொடுக்கிறோம் என்பதுகூடத் தெரியாமல் இன்னொருவர் மூலமாகக் கொடுக்கிறோம். இதெல்லாம் இப்பொழுது முதலாளித்துவத்தின் அரசில். அரசு வேறு; மக்கள் வேறு என்கிற இடத்தில் இருக்கின்ற வரி அமைப்பு முறைகள்.

ஆனால் திருவள்ளுவருடைய அரசு அமைப்பு முறையிலே ஆளப்படுகிறவர்களும், ஆளுகின்றவர்களும் நெருங்கிய உறவினர்கள். அங்கே, ஒருவனை ஒருவன் ஏமாற்ற வேண்டும் என்றோ, நல்லது கெட்டதைச் சொல்லிச் செய்ய வேண்டுமென்றோ அவசியமில்லை.

அரசுக்குத் தேவை என்றால், ‘இறை ஒருங்கு நேர்வது நாடு’ என்றார் வள்ளுவர். அரசுக்கு இன்று ஒரு ஆபத்து ஏற்பட்டுவிட்டது. அந்நியப் படையெடுப்பு வந்திருக்கிறது. இன்ன நாட்டிலிருந்து ஐயாயிரம் அகதிகள் வந்திருக்கிறார்கள். இதற்கு இவ்வளவு ரூபாய் தேவை என்று எவ்வளவு திட்டமிட்டுச் சொல்கிறானோ அந்தத் திட்டமிடுகிற தொகையை ‘இறை ஒருங்கு நேர்வது நாடு’ என்றார்.

அரசு அறிவித்த 24 மணி நேரத்திற்குள்ளாக, அந்த அரசு கேட்கின்ற தொகை முழுவதும் கொடுக்கின்ற நாடு சிறந்த நாடு என்று சொன்னார். அது எப்பொழுது என்றால்,

‘பொறை ஒருங்கு மேல்வருங்கால்’

நாட்டின் மேலே படையெடுப்பு வருகின்ற காலத்திலும், வேறு அல்லல் வருகின்ற காலத்திலும் அரசு திட்டமிட்டு இவ்வளவு தொகை வேண்டும் என்று கேட்கும். கேட்ட 24 மணி நேரத்தில் அது அரசனுடைய கருவூலத்திற்கு வந்து சேரும்.

‘ஒருங்கு நேர்வது நாடு’

இன்று கொஞ்சம், நாளை கொஞ்சங்கூட அல்ல! ஒரு தேதியில் அதைக் கொடுத்துவிட்டுத்தான் மறு வேலை பார்ப்பார்கள் அந்த நாட்டுக் குடிமக்கள். இது இயல்பு என்று வள்ளுவர் சொன்னார். இது இங்கிலாந்து நாட்டுச் சரித்திரத்தைப் பார்க்கையிலே, சர்ச்சிலினுடைய உதாரணம் என்று சொல்லுவார்கள். ஆனால் இப்பொழுது நம் நாட்டிலே அரசுக்குக் கடன் வழங்குவது என்று சொன்னால் அந்த அதிகாரிகள் படுகின்றபாடு, ஆண்டவனுக்குத்தான் தெரியும். ஒரு கடன் என்று அரசு ஒரு மின்சாரக் கழகத்திற்கு அறிவித்துவிட்டால்-ஒரு சிறு சேமிப்பு என்று அறிவித்து விட்டால் அதை 24 மணி நேரத்துக்குள்ளாக முறையாகத் தேசபக்தியோடு கொண்டுபோய் அங்கு நின்று கொடுப்பது இல்லை.

நாம் 2 லட்ச ரூபாய் அல்லது கோடி ரூபாய் வசூல் செய்தால் அதில் கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய் செலவாகும்போல் தெரிகிறது. அதிலே இருக்கின்ற முயற்சிகளைப் பார்த்தால் ஐந்து லட்ச ரூபாய் செலவுமட்டு மல்லாமல், அந்த ஒரு மாதத்தில் அந்த அலுவலர்கள் செய்ய வேண்டிய வேலைகள் எல்லாம் விடுபட்டு, ‘அது ஏன் வரவில்லை’ என்று கேட்டால், ‘அது அந்த வேலையாகப் போய்விட்டது, இனிமேல்தான் எடுக்கவேண்டும் என அலுவலர்கள் கூற நேரிடும்.

அரசுக்குரிய கடன்களை-அரசுக்குத் தேவையான பொருட்களை, ‘இறை ஒருங்கு நேரவேண்டும்’ என்று சொன்னார்.

இது எப்படியாவது வரி விதிக்கப்படுகின்ற முறை. ஆனால் நிரந்தரமான வரி என்ன இருந்தது அரசுக்கு?

‘உறுபொருள் உல்கு பொருள்’

என்று இரண்டு பொருள் சொல்கிறார்.

‘உறுபொருள்’ என்பதற்கு உரை ஆசிரியர்களே பல இடங்களில் மாறுபடுகிறார்கள்.

பரிமேலழகர் புதையல் என்று பொருள் செய்கிறார். நிலத்திற்குள்ளாக யாருக்கும் உரிமை இல்லாமல் கிடைக்கின்ற புதையல் உறுபொருள். தன்னிச்சையாகக் கிடைக்கின்ற பொருள் அரசுக்குச் சொந்தம்தான்.

இதுவரையில் அது அரசுக்குச் சொந்தம்தான்.

இப்பொழுதும்கூட நமக்குப் பூமிக்குள் இருந்து தங்கப் பாறை கிடைக்கிறது என்றாலுங்கூட, அது அரசுக்குத்தான் சொந்தமே தவிர நமக்கல்ல! அது யார் வீட்டுத் தோட்டத்தில் இருக்கிறதோ அவருக்குச் சொந்தமல்ல. ஆனால், ‘உறு பொருள்’ புதையல் மட்டுமல்ல. வழிவழி வாரிசு இன்றிப்போனால், அந்தச் சொத்தும் அரசுக்குச் சேரும்.

இப்பொழுது யாரும் அரசுக்கு வழிவழிச் சொத்துக்களை விடுவதில்லை என்று நான் நினைக்கிறேன். ஏன் என்றால், அரசு மீது அவர்களுக்கு மிகவும் நம்பிக்கை இல்லாது போனதினாலேயே, வழிவழிச் சொத்தை அரசிடம் தர அவர்கள் தயாராக இல்லை.

யாராவது இறக்கின்ற நேரத்தில், சொத்து அரசுக்குப் போய்விடக்கூடாதே என்று ‘ஸ்வீகாரம்’ செய்ய எண்ணுகிறான். அவன் அவ்வாறு செய்யவில்லை என்றால் கூட, அந்தச் சொத்துக்கு ஆசைப்பட்டவன் அந்த இறந்தவனுடைய கட்டை விரலை மை தடவி உருட்டியாவது, பொய்ப்பத்திரம் தயார் செய்துவிடுகிறான்.

ஆனால் திருவள்ளுவர் காலத்தில் வாரிசு இல்லாதவர்களுடைய பொருள், மக்கட்பேறு இல்லாதவர்களுடைய பொருள், அரசுக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது.

ஆக, உறுபொருள் என்று சொல்லுகிறபொழுது, நிலத்திலே புதைந்து கிடக்கின்ற புதையல்கள் வாரிசு இல்லாமல் போகின்ற பொருள்கள் ஆக இரண்டு பொருளும் அரசுக்குச் சொந்தம்,

‘உல்குபொருள்’ என்று சொல்லுகிறார். திருவள்ளுவருக்கு இந்த நாட்டினுடைய சுயதேவையைப் பற்றி எவ்வளவு அக்கறை!

உள்நாட்டுப் பொருள் எதற்கும் அவர் வரி போடவில்லை. அயல் நாட்டிலிருந்து இங்கு இறக்குமதியாகும் பொருள்களுக்குச் சுங்க வரி என்று இப்பொழுது போடுகிறார்களே அதை வள்ளுவர் ‘உல்குபொருள்’ என்று அப்போதே சொல்லியிருக்கிறார்.

அந்தப் பொருட்களுக்கு வரி விதித்ததன் காரணம் என்ன? அயல் நாட்டின் பொருள்கள் நம் நாட்டிலே செலா வணி ஆகிக்கொண்டிருப்பின், அதையே நமது மக்கள் வாங்கிப் பயன்படுத்திக்கொண்டு ஏழையாகப் போய் விடுவார்கள். ஆகவே அப்பொருட்களின் மீது வரியைப் போட்டால், பொருளின் விலை கூடும். விலை கூடினால் வியாபாரம் சுருங்கும். நம் நாட்டிலே செல்வம் செழிக்கும் என்ற கருத்திலே வள்ளுவர் ‘உல்குபொருள்’ அரசுக்குரிய பொருள் என்று சொன்னார்.

பிறகு ‘ஒன்னார்த்தெறும் பொருளும்’ பகைக்குலத்திலே மாற்றாருடன் போராடி அந்த நாட்டில் இருந்து கொண்டு வருகின்ற பொருள்.

இந்தப் புதையல், வாரிசு இல்லாமல் இருக்கும் சொத்துக்கள், வெளிநாட்டில் போராடிக் கொண்டுவரும் பொருட்கள், ஆகிய மூன்றும் அரசுக்குச் சொந்தம் என்கிறார்.

இதற்குப் பிறகு வேண்டியபொழுது விதித்து வாங்குகிற வரிப்பொருள், இதைத் தவிர அரசுக்கு வேறு வரி என்ற அமைப்பு திருவள்ளுவர் குறிப்பிடவில்லை.

ஆனால், தமிழ்நாட்டினுடைய வரலாற்றைப் பார்த்தால், அரசியல் அமைப்பைப் பார்த்தால், நமக்கு ஒரு ஐயப்பாடு தோன்றுகிறது. அது நீண்ட நெடிய அளவுக்கு உரியது.

நிலங்கள், செல்வத்தினுடைய உற்பத்திக் கேந்திரங்கள், இவைகள் எல்லாம் அரசுக்குச் சொந்தமாக இருந்தனவாகத் தெரிகிறதே தவிர, தனி மனிதனுக்குச் சொந்தமாக இருந்தனவாகத் தெரியவில்லை.

காரணம், பாரி முந்நூறு ஊரும் கொடுத்தான். இவ்வளவு ஊரும் கொடுத்தான்ென்றால், இடையிலே கருப்புச் சாமிக்கும், சிவப்புச் சாமிக்கும் அங்கே பட்டா இருந்திருக்குமானால், அவன் எப்படி கொடுத்திருக்க முடியும்?

நம்முடைய பேரரசுகள்-சேர, சோழ, பாண்டியர்கள் பல கோயில்களுக்கு, பல இடங்களை, பல கிராமங்களை இனாமாக வழங்கி இருக்கிறார்கள்.

அப்பொழுது நிலத்தை உழுகின்றவனுக்கு உழுகின்ற உரிமை தவிர, நிலத்திலே வேறு விதமான உரிமை இல்லாமல் அரசுக்கு நிலம் சொந்தமாக இருந்தது.

ஆகையினாலேதான் அரசர்கள் நிலத்தைத் தம்முடைய விருப்பம் போல் வழங்கியிருக்கிறார்கள்.

ஆகவே, இந்த நிலத்திலே, வழங்கப்பட்ட நிலம் போக, யாரும் பயன்படுத்தாத, பட்டா வாங்காமல் இருக்கிற நிலம் போக மற்ற நிலங்களில் வருகின்ற பொருள் இருந்திருக்கலாம். அது அவனுக்குச் சொந்த உடைமையாகவே இருந்திருக்கிறது.

“நிலம் பொதுவெனப் பொறான்”

என்பது புறநானூற்றுப் பாட்டு. நிலத்தைப் பொது என்று சொல்வதைத் தாங்கிக்கொள்ள மாட்டான். அது அரசுக்குள்ளேயே என்று வந்தாலுங்கூட!

அரசுக்கு நிலம் சொந்தமாகவே இருந்து வந்திருக்கிறது. இது நமக்கு வழக்கிலேகூடத் தெரிந்து வந்திருக்கிறது.

அரசன் இனாமாகக் கொடுத்தானேயானால், எப்படி மற்றவர்க்குச் சொந்தம் ஆக இருந்திருக்கமுடியும்? ஆகையினால் அரசுதான் நிலத்தின் உடைமைக் கர்த்தாவாக இருந்திருக்க முடியும்.

இனி மனிதர்களைப்பற்றிப் பேசுகின்றபோது, வள்ளுவர் வேறு உடைமைகளைப்பற்றிப் பேசாமல், ‘ஊக்க முடைமை உடைமை” என்று சொல்லுகின்ற பொழுதில் எல்லாம், உள்ள ஊக்கந்தான் உடைமையே தவிர, காணி, பூமி உடைமை என்று சொல்லவே இல்லை.

ஆகையினாலே, வள்ளுவர் பின்னாலே வந்த மார்க்ஸ் முனிவருடைய சித்தாந்தப்படி உற்பத்திக் கேந்திரங்கள் எல்லாம் அரசுக்குச் சொந்தமாக இருந்தால் தேவையானவர்கள், தகுதியானவர்கள், உழைப்பாளிகள் எடுத்துப் பயன் படுத்துவார்கள். அது நாட்டிலே செல்வச் செழிப்புக்குத் துணை செய்யும்.

தனி மனிதனுக்கு உடைமைகள் இருப்பதினாலே அதிலே பற்றுகளும், பாசங்களும் பெருகி, காலப் போக்கிலே அவன் ஒழுக்கக்கேடு உடையவனாகப் போய்விடுகிறான்.

ஆகவே திருவள்ளுவர், “உள்ளம் உடைமை உடைமை, ஊக்கமுடைமை உடைமை” என்று சொன்னார். இது ஆய்வுக்கு உரியது. நிலம் அரசுக்குச் சொந்தமாக இருந்திருக்கிறது. இது வள்ளுவருடைய அரசுக்குரிய பொருளியல் அமைப்பிலே நாம் காணுகின்ற சிறந்த சாட்சி.

அரசு தவறு செய்கிறது அல்லது மக்கள் தவறு செய்கிறார்கள் என்றால் திருவள்ளுவருடைய ஆராய்ச்சியே தனிப் போக்கு.

நம்முடைய நாட்டிலே பழங்காலந்தொட்டு இயற்கை கெட்டால், விரிசுடர் வீழ்ந்தால், மழை பொய்த்தால் அரசைத்தான் குறை சொல்லுவார்கள். அரசு ஒழுக்க நம்பிக்கையாக இல்லையென்றால் மழை பெய்யாது; கற்பு முதற்கொண்டு இருக்காது; அறம் இருக்காது. ஆக, அரசின் பேரில் அவ்வளவு நம்பிக்கை இருந்தது.

காரணம், எல்லா விதமான அதிகாரங்களும் அரசுக்கு இருக்கின்றன அல்லவா?

தனி மனிதன் முயன்று முயன்று செய்தாலும் சிறு தவறுகள் பண்ணுவானே தவிர பெரிய தவறுகள் செய்து நாட்டினுடைய வரலாற்றைக் கெடுத்துவிட முடியாது.

அரசு என்பது எல்லா விதமான அதிகாரங்களும் குவிந்திருக்கின்ற இடமானமையின் காரணமாகத் தவறு பெரிதாகப் படுகிறது.

மலையிலே ஏற்றி வைக்கப்படுகின்ற விளக்கைப் போன்றது அரசு. வீட்டிற்குள்ளே ஏற்றிவைக்கப்பட்ட விளக்கைப் போன்றவை தனி மனிதனின் தவறுகள். ஆக, மலையிலே ஏற்றிவைக்கப்பட்ட அந்த விளக்கு அணைந்து விட்டால், ஊர் முழுவதிலும் இருள் சூழ்கிறது. வீட்டினுள்ளே விளக்கு அணைந்துவிட்டால் குறிப்பிட்ட இடத்தில் மட்டுந்தான் இருட்டு. அரசு என்பது நடுவூரிலே ஏற்றிவைக்கப்பட்ட விளக்கைப் போன்றது. அது அணைந்தால், நாட்டிலே-நகரத்திலே இருக்கின்ற மக்கள் அனைவரும் அல்லல் படுவார்களே என்பதினாலே அரசினுடைய ஒழுக்கத்திலே திருவள்ளுவருக்கு நிறைந்த நம்பிக்கை,

ஆதலினாலே அவர் சொல்லுகிறார்,

‘தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம்
காண்கிற்பின்’

என்று.

ஒருவன் தவறு செய்கிறான். தவற்றுக்குத் தண்டனை உண்டு. ஆனால் அரசு முதலில் யோசிக்க வேண்டும், ‘இந்தத் தவறுகளைச் செய்யக்கூடிய சூழ்நிலையில் நம்முடைய ஆட்சியும் அரசும், அமைந்திருக்கின்றனவா?” என்று.

அந்த ஆட்சியினுடைய அமைப்பு, சமூகத்தினுடைய அமைப்பு, நல்லவையாக இருக்க வேண்டும்.

அவனுக்கு நல்ல காவல் வேண்டும். எல்லாவற்றையும் விட உத்தரவாதம் வேண்டும். வள்ளுவருக்கு அதிலே அசைக்க முடியாத நம்பிக்கை.

நான் இந்த நாட்டிலே பிறந்திருக்கிறேன். எனக்கு வாழ்வதற்கு உத்தரவாதம் இந்தச் சமூகமும், இந்த அரசும் கொடுக்க வேண்டும். பெரும்பாலும் உத்தரவாதம் கொடுப்ப தென்பது அருமையான செய்கை.

சில நாட்களுக்கு முன்பு புயல் வந்தது. இருந்ததோ ஒரு சிறு குடிசை. குடிசையும் காற்றில் போய்விட்டது. கட்டியிருந்த மனை இன்னொருவருக்குச் சொந்தம். புயலிலே நட்டமானவர்களுக்குக் கடன் கொடுப்பதற்கு அதிகாரிகள் வருகிறார்கள். கடன் கொடுக்க விரும்புகிறார்கள். அரசு சட்டப்படி, ‘உனக்குச் சொத்து இருக்கிறதா?’ என்று கேட்கிறார்கள். அவன் ‘அந்தக் குடிசைதான் எனக்குச் சொத்து. அதுவும் காற்றில் போய்விட்டது. மனை எனக்குச் சொந்தமில்லை’ என்று சொல்ல, அதிகாரி, ‘உனக்குக் கடன் கொடுக்க இயலாது’ என்று சொல்கிறார். இது எப்படி உத்தரவாதமுள்ள அரசாக இருக்க முடியும்?

21 வயது ஆகிவிட்டால், இல்லை, இந்த நாட்டிலே-இந்த மண்ணிலே பிறந்துவிட்டானானால், அவனுக்குரிய வாழ்க்கையை வேறு எதை வைத்தும் கொடுக்காமல் இந்த நாட்டுக் குடிமகன் என்கிற அமைப்பில் கொடுக்கிற-வழங்குகிற அரசுதான் உத்தரவாதமுள்ள அரசு.

அரசு குடிமகனுக்குக் கடன் கொடுத்தால், அதை எப்படி வசூலிப்பது? வசூலிப்பதற்கு நிறைய வழிகள் உண்டு. நெடுஞ்சாலைத் துறை இருக்கிறது. பொதுப்பணித்துறை இருக்கிறது. நான் உழைப்புச் சக்தி உடையவன் என்று சொன்னால் அரசாங்கம் பதிவு செய்துகொள்கிறது. ‘இன்ன மாவட்டத்திலே-இன்ன தாலூகாவிலே-நீ உன்னுடைய உழைப்பால் ஆகிய வேலையைச் செய்; பாதி ஊதியத்தை வாங்கிக்கொள்; பாதியைக் கடனுக்கு அடை’ என்றால், அடைத்துவிட்டுப் போய்விடுகிறான். அவனுக்குச் சொத்து இருந்தால்தான் கடன் தருவேன் என்றால், சொத்து இருக்கிறவன்தான் கடன் வாங்கிக்கொண்டிருப்பான். சொத்து இல்லாதவன் என்றைக்கும் கடன் வாங்க முடியாது. அவன் முன்னுக்கு வர வாய்ப்பே இல்லை. நான் கடன் வாங்கவேண்டுமென்ற நோக்கத்தோடு இதனைச் சொல்லவில்லை. கடன் வாங்குவது என்பது இப்பொழுது நாகரிகம். உலகம்-அதாவது, இப்பொழுது புது உலகத்திலே, மேல் தட்டிலே இருக்கிறவர்கள் கடன் வாங்கவில்லையென்றால் அது கேவலம் என்று கருதுகிற காலம். பழங்காலத்திலே கடன் வாங்குவது கெளரவக் குறைச்சல்.

இப்பொழுதெல்லாம் ‘எனக்கு அந்த பாங்கிலே ஓவர் டிராப்ட்’ என்று சொன்னால், ஓஹோ! இரண்டு மூன்று பாங்கிலே ஓவர் டிராப்ட் வைத்திருப்பதனாலே பெருமையான ஆளே தவிர சிறுமையான மனிதர்கள் அல்ல!

ஆதலினாலே வள்ளுவர் சொன்னார்,

‘தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு.’

436

என்று. எப்பொழுதும் நாட்டிலே நடக்கின்ற குற்றங்களுக்குத் தன்னுடைய அரசு, தன்னுடைய ஆட்சி சார்பாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

‘வேந்தனும் அல்லவை செய்யான்’

இது புறநானூற்றுப் பாடல்.

ஒருவருக்கு எழுபது ஆண்டுகள் கழித்தும் தலை நரைக்கவில்லையாம். பெரிய அதிசயம் அந்தக் காலத்திலே! இப்பொழுது நமக்கு அதிசயமே இல்லை ஏன் எனில் இளமையிலேயே நிறையப் பேர் கிழவர்களாகி விடுகிறார்கள். அவர்களுக்கு நரை, திரை, மூப்பு வந்து விடுகின்றன. அந்தக் காலக் கிழவன் ஒருவனுக்கு எழுபது ஆண்டுகள் ஆகியும் நரை தோன்றவில்லை.

‘யாண்டு பலவாக நரையில வாகுதல்
யாங்காகியர்’

என்று கேள்வி கேட்கிறார்.

சில வீடுகளில் மிகவும் பரபரப்பே இருக்கும். அரிசிப் பானையிலே உலை கொதிப்பது போல் பரபரப்பும் இருக்கும். அது வீட்டு வாழ்க்கை என்று சொல்ல முடியாது. மிகவும் அமைதியாகவும் நிம்மதியாகவும் வாழவேண்டும்.

‘மாண்டஎன் மனைவியொடு மக்களும் நிரம்பினர்’

அவனுடைய வீட்டிலே நல்ல மனைவி, நல்ல மக்கள், அவனுக்கு உயர்ந்த நண்பர்கள், அவன் நினைத்ததைச் செய்யும் ஏவலர்கள். இப்பொழுது சொன்னதைச் செய்தாலே போதும் என்ற காலம். வேலைக்குச் சேர்க்கும்போதே, நான் சொன்னதைச் செய்தால் போதும், நீயாக ஒன்றும் செய்ய வேண்டாம், என்று சொல்லி வேலையாளைச் சேர்க்கின்ற காலம் இது!

‘வேந்தனும் அல்லவை செய்யான்’

அவன் படுத்தால் நிம்மதியாகத் தூங்க வேண்டும். இதுவும் அரசனது பொறுப்பு.

என்னுடைய கைகளிலே உள்ள பொருட்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்வது, போட்டா போட்டிகள் நிறைந்த ஒரு விலங்கு உலகம் ஆகும்.

‘உங்களுடைய கைகளிலே உள்ளவைகளைப் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்!’ கோயில்களிலே திருவிழாவிற்குச் சென்றால், அடிக்கடி ஒலி பெருக்கியிலே சொல்லுவார்கள். ‘சங்கிலிகளைப் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்! கைகளிலே உள்ள ‘பர்சை’ பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்!’ என்று சொல்லுவார்கள்.

பத்திரப்படுத்துவது யாருடைய பொறுப்பு என்று வள்ளுவர் கருதுகிறார்? ஒருவன் பொருளைத் தமது பொருள் போல் பாதுகாத்துக் கொடுக்கவேண்டும்.

இப்பொழுது நமக்கு அந்த ஒழுக்க இயல்பு இல்லை. வள்ளுவர் நமக்கு அந்தக் குறிப்பைச் சொல்கிறார்.

நீ மற்றவருடைய ஒழுக்கத்தை வளர்க்க வேண்டுமென்றால், உன்னுடைய அரசு ஒழுக்கச்சார்பு உடையதாக இருக்கவேண்டும். ஆதலினாலே,

‘தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்’

என்றார்.

முதலிலே குற்றங்கள் நிகழ்வதற்கு உரிய காரணமாக இருக்கிற, உன்னுடைய அரசின் குற்றத்தை நீக்கு! ஏழ்மையும், வறுமையும், பகையும், உட்பகையும் இருக்குமானால், மக்களும் குற்றம் செய்துகொண்டே இருப்பார்கள்.

அவர்களை மேய்ப்பதே அரசுக்கு ஒரு வேலையாக இருக்குமே தவிர, ஆட்சி வேலைகளைச் செய்ய முடியாது என்ற குறிப்பை மிகத் தெளிவாக நினைவுபடுத்துகிற காட்சியைப் பார்க்கிறோம்.

அடுத்து, தண்டனைக்கு வருவோம். முதலில் அரசுக்குச் சொன்னார். தண்டனை கொடுக்காமல் இருக்கலாமா?

தண்டனை கொடுப்பதை மேலை நாட்டு அறிஞர்கள் மிக வேடிக்கையாகச் சொல்கிறார்கள்.

‘கொலையின் கொடியாரை வேந்தொறுத்தல்’

கொலையினும் கொடியவனாக இருக்கிறவனை வேந்தன் ஒதுக்கத்தான் வேண்டும். அதை ஏன் என்று ரூஸோ தன் சமுதாய ஒப்பந்தத்தில் ஒரு அழகான உவமை சொல்லி விளக்குகிறான்.

ராமன் என்கிறவன் கோவிந்தனைக் கொன்று விட்டான். கோவிந்தன் இறந்துபோனான். ராமன் பேரிலே ‘கோவிந்தனைக் கொன்றுவிட்டானே’ என்று கோவிந்தனின் நண்பனுக்குக் கோபம் வரும். பிறகு அவன் என்ன செய்வான்? ராமனைக் கொல்ல வருவான். அப்போது, ராமன் இறந்துபட்டான் என்றால், ராமனுடைய நண்பன் அவனைக் கொல்ல வருவான். இது சங்கிலித் தொடர் போலப் பெருகிக்கொண்டே இருக்கும். ஆதலினாலே, யார் ஏமாற்றப்பட்டானோ அவனுக்கு ஆறுதல் கொடுத்து, அவனுக்குரிய ஈட்டை அரசு கொடுத்துவிட்டால், சங்கிலித் தொடர் போலத் தீமைகள் தொடரா.

அந்தத் தண்டனை கொடுக்காது போனால், அவர்களுக்குள்ளே ஆத்திரம் மிகுந்து, தண்டனையை அவர்களே கொடுக்கின்ற நிலைமை ஏற்படும். நாட்டிலே கொலையே பெருகும்.

ஆகவே, தண்டனை கொடுப்பதுகூட மேலும் கொலை பெருகாமல் இருப்பதற்கு ஒரு தூக்குத் தண்டனையோடு முடித்துவிடுகிறார்கள். அப்படிக் கொடுக்காதுபோனால், மேலும் பல கொலைகள் பெருகும் என்று அவர்கள் சொல்லுகிறார்கள்.

பெரும்பாலும் பார்க்கிறோம். ஒருவனை மற்றொருவன் வஞ்சித்து ஏமாற்றிவிட்டான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு அரசு தண்டனை கொடுத்துவிட்டது என்றால், அவனுக்கு ஒரு மன திருப்தி வந்துவிடுகிறது. அவன் திரும்பி வந்துவிட்டான், தண்டனை இல்லாமல் என்று சொன்னால், அவனுக்குத் திரும்பவும் ஏமாற்றம் ஏற்பட்டு, திட்டமிட்டு மற்றொருவனுக்குத் தண்டனையைத் தருகிறான். ஆக,

‘கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்’

550

என்று சொன்னார்.

நீ பயிரைச் சாகுபடி செய்யவேண்டும் என்று சொன்னால், களை பிடுங்க வேண்டியது அவசியம். ஆனால் நம்முடைய நாட்டிலே இப்போது களை எது, பயிர் எது என்று கண்டுபிடிப்பதே ஒரு பெரிய வேலையாகப் போய்விட்டது.

பெர்னார்ட் ஷா ஒரு தடவை வேடிக்கையாகச் சொன்னார். ‘சமயத்தை எல்லோரும் திருத்த முயல்கிறார்கள். சமய உலகத்தையே களை பிடுங்க நினைக்கிறார்கள். எனக்கு ஒரே ஒரு கவலை. களை பிடுங்க வேண்டும் என்று நினைப்பவர்கள், இறங்குவதற்கு முன்னாலே களை எது, பயிர் எது என்று தெரிந்து கொண்டு இறங்கினால், அவர்கள் பயிரைக் களை என்று நினைத்துக்கொண்டு பிடுங்காமல் இருக்கலாம். ஒருகால் பயிரைப் போய்க் களை என்று நினைத்துப் பிடுங்கிவிட்டால், சாகுபடிக்காரருக்கு ஒன்றும் மிச்சமில்லாமல் போய்விட்டால், என்ன பண்ணுவது?’ என்றார்.

அதுபோலத் தண்டனை எங்கே, எப்போது, எதற்கு, யாருக்கு என்று இல்லை. “வாச்சான், போச்சா”னாகச் சிலருக்குத் தண்டனை கிடைத்துவிடுகிறது. சிலர் தப்பித்துக் கொண்டுவிடுவார்கள். நன்கு கண்ணுக்குத் தெரிந்து கொலை செய்தவர்கள், வெளியே திரும்பி வந்து விடுவார்கள். ஒன்றும் செய்யாத-அறியாதவர்கள் உள்ளே போய் மாட்டிக் கொள்வார்கள்.

இது, ஆட்சித் திறமையிலே, நல்ல துணுக்கமான அறிவினாலே பார்க்க வேண்டிய இடங்கள்.

ஆக, “கொலையின் கொடியாரை வேந்து ஒறுக்க வேண்டும்.” அது சாகுபடிக்கு-வேளாண்மைத் தொழிலுக்குக் களை பிடுங்குவது எவ்வளவு இன்றியமையாத தொழிலோ, அது போலச் சமுதாயத்திற்கு. ஆனால் மீண்டும் புதிய அரசியல் பாதையிலே பார்த்தால், இந்தத் தண்டனை என்பதுகூடத் திருத்துவது. அதை இன்னொரு முறையில் சிறப்பாகச் சொல்லுவார்கள். இந்தத் தண்டனைகள் கொடுக்கிறபோதெல்லாம், அரசு கொடுக்கிற தண்டனைகூட, அது உயிருக்கு அல்ல; அது உடம்புக்குத்தான்! இந்த உடம்பு இந்தத் தப்புப் பண்ணிவிட்டது. அவனுடைய மனத்தை

தி.IV.13. மாற்றினால், திரும்ப அவன் புது மனிதனாக வந்து நல்லது செய்தாலும் செய்யலாம் என்ற நம்பிக்கையோடு அவனுடைய மனதை மாற்றிக்கொடுப்பது என்று தத்துவ நம்பிக்கையோடு கருதுகிறார்கள்.

சிறைக்கு அனுப்புகிறோம் ஒரு மனிதனை. சிறை தண்டனை என்று நம் பிற்கால வழக்கிலே சொல்லுவது கிடையாது.

முற்கால வழக்கிலேதான் இருந்தது சிறை தண்டனை. சிறையிலே அவனுடைய மனத்தை மாற்றுதல்-சூழ்நிலையிலிருந்து அவனுடைய மனத்தை மாற்றுதல்.

ஆனால் இப்பொழுது அந்த முயற்சி பல சிறைக் கூடங்களிலே செய்யப்படுவதில்லை. நியாயமாகப் பார்த்தால், நல்ல மனோதத்துவ நிபுணர்களைச் சிறையில் நியமித்து, தண்டனை பெற்று வந்தவர்கள் ஏன் தவறு செய்கிறார்கள்? எப்படித் திருத்துவது? என்று பார்க்கச் செய்யவேண்டும்.

சில பேரைப் பார்த்தால் தவறு செய்யாமல், உள்ளே இருப்பவர்கள் போல் தெரிகிறது. உள்ளே ஒரு நாளல்ல, ஒரு ஆண்டல்ல, ஆயுள் முழுவதும் இருக்கவேண்டிய ஆளெல்லாங்கூட வெளியே இருந்துகொண்டிருப்பர்.

நமக்கு வித்தியாசமாக இருக்கும். ஆக, திருவள்ளுவர் நினைவுபடுத்துகிறார். குற்றத்தைத்தான் கடிய வேண்டும். குற்றம் நீக்குதல், குற்றத்தைக் கடிதல், வழுவு அன்று; வேந்தன் தொழில் என்றார்.

குற்றங்கடிதல், இப்போது குற்றமுடையான்மீது நமக்கு வெகுளி வந்துவிடுகிறது. சமயத்தில் ஆத்திரத்திலே குற்றத்தின் மீது நமக்கு வெகுளி வரக்கூடாது.

பானையிலே இருக்கின்ற தண்ணீர் நன்றாக இல்லையென்றால், தண்ணீரை ஊற்றலாமே தவிர, பானையை உடைக்கக் கூடாது. அதைத்தான் இளங்கோவடிகள் “கருணை மறவன்” என்று சிறப்பித்தார்.

மனிதனுக்குத் தேவையான ஒழுக்கம் எல்லாவற்றையும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு நல்ல குணம்கூட இல்லாத ஆள் உலகத்திலேயே கிடையாது. 1330 குறளிலேயும் 80 ஒழுக்க நெறிகள் வள்ளுவர் சொல்லுகிறார். இந்த 80 ஒழுக்க நெறியிலும் 5 குறளாவது தெரியாத மனிதன் இருப்பான் என்ற நம்பிக்கை எனக்குக் கிடையாது.

சில பேர் அன்புடையவராக இருக்கலாம். அழுக்காறு இல்லாதவராக எத்தனையோ பேர் இருக்கலாம். ‘அது சரி, அவன் கொடுத்து வைத்தது, அனுபவிக்கிறான்; நமக்கு எதற்கு அது’ என்று சொல்லுகிற ஆளையும் பார்க்கிறோம். ஆகவே, மனிதனுக்கு ஒரு ஒழுக்கம், இரண்டு ஒழுக்கம் இருப்பதினாலே அவன் முழு மனிதனாக வந்து விடுவதில்லை.

ஒரு செங்கல், இரண்டு செங்கல் மாளிகை ஆகிவிட முடியாது. மனிதனுக்குத் தேவையானவை ஏராளமான உயர் குணங்கள். அவற்றிலே வள்ளுவர் 70, 80 ஒழுக்கங்களை முறைப்படுத்திச் சொல்லுகிறார். இந்த எண்பதிலே, நாற்பதுக்கு மேற்பட்ட ஒழுக்கங்களாவது இருந்தால்தான், மனிதன் முழுமனிதனாக இருக்க முடியும். ஏதாவது கொஞ்சமாவது என்று சொன்னால், மிகச் சுலபமாகத் தப்பித்துக்கொள்வார்கள். ஒருவன், எப்போதுமே சிரித்த முகமாகவே இருக்கிறான்.

‘முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.’

93

அவனது முகம் எப்போதும் சிரித்த முகந்தான். எப்போதும் இனிய சொற்கள்தான் சொல்வதுண்டு. கடுஞ்சொல் சொல்வதே இல்லை. அவன் முறைப்படியான ஆள்தான். ஆனால் முகம் சிரிப்பாய் இருக்கும்; இனிய வார்த்தை இருக்கும். அவன் என்றைக்காவது திட்டமிட்டுச் செய்தானே ஆயின், ஆள் தலையே தப்பாது. அந்த ஆள் மனத்திற்குள்ளே மாசு.

‘மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்’

278

அந்த இலக்கணம் வருகிறபோது அடிபட்டுப் போய் விடுகிறான்.

தாயம் விளையாடும்போது காய் தப்பித்துக் கொண்டே போகும். இரண்டு மூன்று தடவை தப்பித்துக் கொண்டே வரும். பின்பு இன்னொரு காய் குறுக்கே வந்து அடித்துவிடும். ஆக,

‘முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தான்ாம்
இன்சொ லினதே அறம்’

93

என்ற இலக்கணத்திலே வெற்றி பெற்றுவிட்டான். பிறகு அகத்தாலே அந்த ஒழுக்கம் இல்லாமையினாலே,

‘மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்’

278

என்ற இடத்திலே அந்தக் காய் அடிபட்டுப் போய்விடுகிறது. பிறகு அறிவுடையவன் என்று வளர்ந்து வருவான். அறிவினால் ஆவது உண்டோ? என்று கேள்வி கேட்கிறபோது, அது அடிபட்டுப் போய்விடுகிறது.

ஆகையினாலே வாழ்க்கையிலே பல்வேறு இயல்புகள் உண்டு.

அந்தப் பரமபதத்திலே காயாடும்போதிலே மேலே போய்ப் பாம்பின் வாய் கடிபட்டவுடன், கீழே காய் வேகமாக வந்துவிடுகிறதே. அதே போல மனிதனுடைய வாழ்க்கை ஒரு செங்குத்துப் பாறைபோல ஏற வேண்டிய ஒன்று. அதிலே ஒன்றா, இரண்டா, மூன்றா, நான்கா என்று வைத்துக்கொள்ள முடியாது.

நிறைந்த ஒழுக்கங்கள் பல தேவை. ஆகையினாலே திருவள்ளுவர் ‘குற்றமுடையான்கண்வெகுளி’ காட்டாமல் குற்றத்தின்மீது வெகுளி காட்டுகிறார்.

அதை நம்முடைய திருஞானசம்பந்தர், வெகு அற்புதமாகத் தேவாரத்தில் சொன்னார்.

‘ஆழ்க தீயதெல்லாம்
அரன் நாமமே சூழ்க’

சமணர்களையோ, மற்றவர்களையோ, தீயவர்கலளையோ, அவர் ஆழவேண்டும் என்று சொல்லவில்லை. “ஆழ்க தீயது.” தீமை ஒழிய வேண்டுமே தவிர, தீமை உடையவர்கள் ஒழியக் கூடாது.

தீமை உடையவர்மீது நமக்குப் பற்றிருக்க வேண்டும். ஆனால் அவனுடைய தீமையை மாற்றவேண்டும். அதனால் தான் நாத்திகர்களைப்பற்றி மாணிக்கவாசகர் சொல்லுகிற போது “ஆத்தமானார்” என்றார். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களைப் பார்த்தால் மாணிக்கவாசகருக்கு மிகவும் அச்சம். இருந்தாலும் ரொம்ப ஆத்தமானவர்களாயிற்றே!

‘ஆத்த மானார் அயலவர் கூடி
நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர்’

என்றார்.

அவர் அப்படி அணைக்கிறார், அயலவர்கள் ஆத்தமானார் என்று. காரணம், அவர்கள் மீது பகை இருக்கக்கூடாது என்பதனாலேயே.

ஆக திருவள்ளுவர்,

‘குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.’

549
என்றார். குற்றத்தைக் கடிய வேண்டுமே தவிர, குற்றமுடையானை வெறுக்கக் கூடாது.

இது திருவள்ளுவருடைய அரசிலே இருந்த மிகச் சிறந்த அமைப்பு. இன்னும் சிறந்த அமைப்பு, தண்டிக்கவும் வேண்டும்; ஆள் உடம்பும் வலிக்கக்கூடாது. எவ்வளவு நாகரிகமாகப் பேசுகிறார்.

நாட்டிலே ஒரு பழமொழி சொல்லுவார்கள், "கோலும் ஒடியக் கூடாது, பாம்பும் சாகக்கூடாது" என்று. கருணை மறவன் என்று இளங்கோவடிகள் கோவலனைச் சிறப்பிக்கிறார். மணிமேகலையின் பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். முதிய பார்ப்பனர் ஒருவர் தானம் வாங்க வருகிறார். அரசு யானை கட்டிலிருந்து அறுத்துக் கொண்டு மதம் பிடித்துத் தன்னிச்சையாக வருகிறது. அது வழியிலே வருகிற முதிய பார்ப்பனரை மிதித்துவிடும் போலத் தெரிகிறது. இந்த முதிய பார்ப்பனர் ஓட முடியாமல் அந்த யானையினுடைய பிடிக்குள்ளே அகப்பட்டுவிட்டார். தூரத்திலிருந்து கோவலன் பார்க்கிறான். அந்த முதிய பார்ப்பனரைக் காப்பாற்றவேண்டும் என்ற எண்ணம்-கருணை கோவலன் நெஞ்சிலே வருகிறது.

அவரைக் காக்க வேண்டும் என்று எண்ணும் பொழுதே, வேலை எடுத்து வீசி, யானையைக் கொன்று, அவரைக் காப்பாற்ற வேண்டும் என்ற உணர்ச்சி வரும். பார்ப்பனர் காப்பாற்றப்பட வேண்டும், யானையும் சாகக் கூடாது, தானும் சாகக்கூடாது. இது கோவலனுடைய விருப்பம்.

ஆக, மூவரும் காப்பாற்றப்பட வேண்டும் என்ற குறிப்பிலே யானைக்கு அருகில் சென்று யானையையும் கொல்லாமல், பார்ப்பனரை விடுதலைசெய்து, யானையினுடைய கரத்தைப் பிடித்து, யானையின்மீது ஏறி அதை அடக்குகிறான்.

இதைப் பார்த்தபொழுது இளங்கோவடிகளுக்கு நினைவு வருகிறது, கருணை மறவன் என்று. வீரத்தில் கருணை! மதம் பிடித்த யானை அருகில் செல்லும் செயல் வீரம்.

ஆனால், யானையையும் கொல்லாமல், பார்ப்பனரும் சாகாமல், தன்னையும் பலியிட்டுக்கொள்ளாமல், காப்பாற்றிய திறத்தைப் பார்க்கும்பொழுது, “கருணை மறவன்” என்று சொன்னார்.

ஆதலினாலே, “கடிதோச்சி மெல்ல எறிக,” என்றார் வள்ளுவர்.

கை மேலே ஓங்குகிறபோது, என்னவோ ஓங்குவது போல் தெரியவேண்டுமே தவிர, முதுகிலே விழுகிறபோது, அடி பலமாக விழுந்துவிடக் கூடாது. சில பேர் அடித்தால் எட்டு நாளைக்கு அந்த அடியின் வலி நிலைத்து நிற்கும். சில குழந்தைகள் கனவிலேகூட பயந்து அழுதுவிடும்.

இரவில் அவன் பெயரைச் சொன்னாலே பயப்படும். அவ்வளவு பயங்கரமாக அடித்து இருப்பான்.

“கடிதோச்சி மெல்ல எறிக”

இதை அப்பரடிகள் சிவபெருமானுடைய கருணையிலே வைத்துக் காஞ்சிபுரத் தேவாரத்திலே பேசுகிறார்.

இறைவன் புளியம் விளாரினாலே அடிக்கிறார். அடித்தவுடன், “வலிக்கிறதா மகனே? வாடா, தம்பி!’ என்று அணைத்துக்கொள்ளுகிறாராம். அணைத்து முத்தம் கொடுக்கிறாராம்.

‘புளியம் விளாரினால் மோதுவிப்பாய்
பின்னை உகப்பாய் கச்சிஏகம்பனே!’

விளாரினாலே அடிக்க ஓங்குகிறாராம். அடிபடு முன்னே கை முன்னாடி விழுந்துவிடுகிறதாம். பின் அணைத்து முத்தமிட்டு, ‘வலிக்கிறதா? நீ தவறு செய்யாமல் இருந்தால் நான் உன்னை இப்படி அடிப்பேனா? நீ நல்ல பிள்ளை” என்று சொன்னாராம் சிவபெருமான்.

அப்பரடிகளுக்கும், பெருமானுக்கும் இருந்த உறவைப் பார்க்கிறோம்.

‘புளியம் விளாரினால் மோதுவிப்பாய்
பின்னை உகப்பாய் கச்சிஏகம்பனே!’

என்று பாடுகிறார் அப்பரடிகள்.

அதே போல இங்கே நமது வள்ளுவர்,

"கடிதோச்சி மெல்ல எறிக"

என்கிறார். ஆட்சியைப் பார்த்துப் பயம் இருக்க வேண்டும். ஆட்சியினிடம் ஓர் அச்சம் இருக்கவேண்டும். ஆனால் அது பேயைக் கண்டு அச்சப்படுவது போல் அமைந்துவிடக் கூடாது. ஆக, கடிதோச்ச வேண்டும். மெல்ல எறிய வேண்டும்.

இதைவிட அரசுக்கு, அரசனுக்கு என்ன புத்தி சொல்ல முடியும்? நம்முடைய நாட்டிலே கடிதோச்சியவர்கள், மெல்ல எறிந்தவர்கள், ஏராளமானவர்களை வரலாற்றிலே பார்க்கிறோம்.

கடிதோச்சி தன் அரசையே இழந்து ஊரைவிட்டு ஓடியிருக்கின்ற நிலையையும் பெரும்பாலும் நம்முடைய நாட்டிலே, மூவேந்தர்களது ஆட்சியிலே காணலாம். பெருமைக்குரிய செய்தி, குடிகளால் அரசு துறந்துபோன மன்னர்களே கிடையாது.

நீ இந்த ஆட்சிக்குத் தகுதியில்லாதவன் என்று எந்த மன்னனையும், மக்கள் அரசிலிருந்து விரட்டியதே கிடையாது.

பிரான்ஸ் தேசத்து சரித்திரத்திலேயே ஏராளமான அரசர்கள், சில சமயங்களில் நாயைவிட மிகக் கேவலமாக நடத்தப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால் நம்முடைய நாட்டிலே, பகைப்புலத்தினாலே வந்த கேடுகளினாலே அரசர்கள் சிலர் போனதுண்டு.

இந்த நாட்டு மக்கள் இந்த அரசு சரியில்லை என்று கிளர்ச்சி செய்து, அரசை முடி துறக்கச் செய்ததாக இல்லை. காரணம், அரசன் அவன் உயிரையே அரச நீதியிலே வைத்திருந்தான்.

ஆக, அரசனுடைய இயல்பிலே அவனுக்குப் பார்க்கிற பொழுது, அவன் கடிது ஓச்சினான், ஆனால் மெல்ல எறிந்தான். அவனுடைய வாழ்க்கையிலே அந்த அமைப்பு இருந்தது என்பதைப் பார்க்கிறோம்.

இதுவரையில் மூன்று அமைப்புகள். அரசியல் அமைப்பிலே முக்கியமானவற்றைச் சொல்லிவிட்டோம்.

இப்போது ஜனநாயக உலகம், மக்களாட்சித் தலைமுறை. மிகச் சிறப்பான உரிமை. விமர்சன உலகம். யாரும் பேசவேண்டும். எதையும் பேசலாம். அரசு என்ன செய்கிறது என்பதைப் பேச உரிமை.

அமைச்சர் எங்கு போனார், என்ன சாப்பிட்டார், என்பதைப் பேசக்கூட உரிமை.

இதையெல்லாம் அரசியல் நாகரிகம் என்று நினைக்கத் தயாராக இல்லை.

அரசியல் மேதைகள் தரம் உயர்ந்தவர்களாக இருந்தால்தான் நாட்டு மக்களுடைய தரம் உயரும்.

ஏன் எனில் அரசியல், நாட்டு மக்களுடைய கவனத்தை ஈர்க்கின்ற ஓர் இயக்கம்.

இந்த நாட்டிலே மக்களாட்சித் தலைமுறை தோன்றி 20 ஆண்டுகள் ஆகியிருப்பதினால், இன்னும் 20 ஆண்டுகள் கழித்தால், நிச்சயமாக அரசியல் மேடைக்கு மக்கள் ஆர்வமாகப் போகமாட்டார்கள். தேர்தல்கள் மிகச் சாதாரணமாக நடைபெறும். இந்த நாட்டு மக்கள் தகுதி பெற்றவர்கள் ஆகிவிடுவார்கள்.

ஆனால், இன்றைக்கு மக்களாட்சித் தலைமுறை தோன்றி வளர்ந்து கொண்டிருக்கின்ற காலமானதால், அவர்கள் வரி செலுத்துகின்ற பொறுப்பு, அரசியல் நண்பர்களுக்கும், அரசியல் மேதைகளுக்கும் இருப்பதனால், அவர்கள் விமர்சனம் செய்துகொள்ள உரிமை எடுத்துக் கொள்ளலாம். ஆனால், தரம் குறைந்து விமரிசனம் செய்தால், அதை நாடு தாங்காது.

திருவள்ளுவர் விமரிசனத்தை ஒப்புக்கொள்ளுகிறார். விமரிசனத்தைத் தாங்கிக்கொள்ளுகிற சக்தி அரசுக்கு வேண்டுமென்று சொல்கிறார்.

‘செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடைவேந்தன்’

என்கிறார். காதாலே கேட்க முடியாத சொற்களைச் சொன்னால்கூட நீ கவலைப்படாமல் தாங்கிக்கொள்ள வேண்டும்.

‘செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.’

389

நீ அரசை நீண்ட நாட்களுக்கு நடத்த வேண்டுமென்றால், தரம் குறைந்த வார்த்தைகளினாலே, செவிக்குக் கேட்கும்படியாகச் சொன்னால்கூடக் கவலைப்படாதே!

சீன நாட்டிலே இதற்கொரு வரலாறு சொல்வார்கள்.

ஓர் அரசன் ஆட்சி உரிமையுடையவன். ஆட்சி மனையிலிருந்து அலுவல் பார்த்துக்கொண்டிருக்கிறான். அவனுக்குக் கொடிய பகைவன் ஒருவன் தெருவிலே நின்று திட்டிக்கொண்டிருந்தான். பகல் முழுதும் திட்டிக்கொண்டே இருக்கிறான். அரசன் அவனுடைய வேலையைப் பார்த்துக் கொண்டே இருக்கிறான். மாலையிலே அவன் வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு, அரண்மனைக்கு வருகிறபோது அவன் பின்னால் அந்தப் பகைவன் திட்டிக்கொண்டே வந்திருக்கிறான். அரசனும் கேட்டுக்கொண்டே வந்தானாம். அவன் வீட்டுக்குள்ளே போகிறபோது, காவலரை அழைத்து திட்டுகின்ற பகைவனுடன் ‘அவனுக்குக் காவலாய் வீடுவரை சென்று திரும்பிவா’ என்று ஒரு விளக்கையும் கொடுத்து அவனை அனுப்பினானாம்.

நாள் முழுவதும் கங்கணம் கட்டிக்கொண்டு, தன்னைத் திட்டிய மனிதனைக் கடமை முடிந்த பிறகு அவனைப் பத்திரமாக வீட்டிலே கொண்டுபோய் விட்டு வா என்று சொன்னது, ‘தத்தா, நமர்!’ என்று சொல்லியதற்கு ஒப்பானதாக இருக்கிறது.

“செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்”

என்றார் திருவள்ளுவர்.

அவ்வளவு பெரிய பண்பு அரசுக்கு இருக்கவேண்டும் என்று சொன்னார். அதற்குப் பிறகு அரசனுக்கு சொல்லுகிறபொழுது, படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் இவைகளையெல்லாம் பெறுவது அரசு என்று சொன்னால் கூட, ‘உன்னை இடித்துப் பேசுகிற ஆள் இல்லை என்று சொன்னால், அது அரசு இல்லை’ என்று சொல்லுகிறார்.

‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.’

448

என்றார்.

அரசு தனக்கு அரணைப் போல், படையைப் போல, பாதுகாப்பைப் போல, இடித்துப் பேசுகின்ற மனிதனை நட்பாக வைத்துக்கொள்ள விரும்ப வேண்டும்.

காரணம், அவனுடைய தொல்லை வேண்டாம் என்பதற்காகவாவது, ஒழுங்காய்ச் செய்வாய் அல்லவா? காடுகளில் எல்லாம் ஏன் விலங்குகள் இருக்கின்றன என்று ஒருவர் அதிசயமாக ஆராய்ச்சி செய்தார்.

இந்தக் காடுகளில் எல்லாம் புலி, சிங்கம் போன்ற மிருகங்கள் இருக்கும். ஏன் எனில், காடுகள் மனிதனுக்கு காற்றுக்கும், மழைக்கும் அவசியமானவை. இவன் பசியினால் எல்லாவற்றையும் வெட்டிச் சாப்பிட்டு விடுவான். ஆதலினாலே காட்டிற்குள்ளே புகுந்து, வெட்டாமல் இருக்க வேண்டும் என்று அச்சுறுத்துவதற்காக விலங்குகளை அங்கு வைத்தானாம். அவன் எண்ணியதைப் போலக் காட்டை வெட்டாமல் இரு என்று. இப்பொழுது விலங்கையும் வேட்டையாடி விட்டு, காட்டையும் வெட்டிவிடுகிறான். ஆதலினாலே,

‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்’

448

‘உனக்குப் பகை அரசன் வேண்டுமென்று அவசியமில்லை. உன் குற்றத்தை இடித்துச் சொல்லுகின்ற அறிஞனோ, கவிஞனோ, ஒரு குடிமகனோ இல்லாமையாலும் உன்னுடைய அரசு கெடும்’ என்று சொல்லுகிறார். ஆக,

‘செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு’

389

என்பதன் மூலமும்,

‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்’

448

என்பதன் மூலமும், வள்ளுவருக்கு அரசியல் விமரிசனத்திலே எவ்வளவு நம்பிக்கை இருந்தது என்பதை அறியலாம்.

விமரிசனம் செய்து செய்து வளர வேண்டும் என்ற பெருவிருப்பம் இருந்தது.

இன்றைய மக்களாட்சித் தலைமுறையிலே, நாட்டினுடைய அமைப்பிலே பல்வேறு செய்தியினைப் பார்க்கிறோம். இப்பொழுது, நாம் நம்முடைய நாட்டு அரசை “க்ஷேமநல அரசு” என்று சொல்லுகிறோம்.

க்ஷேம நல அரசு (Welfare State) என்று சொன்னால், திருவள்ளுவர் அதற்கு ஓர் இலக்கணமே சொல்லுகிறார். என்ன மாதிரி அரசு? எல்லோருக்கும் எல்லா நலன்களும் நாடுகின்ற அரசு. “க்ஷேம நல அரசு” என்று பொருள்.

இந்திய அரசியல் நோக்கம், தமிழக அரசியல் நோக்கம் இது என்றுகூட, நாம் அடித்துக் கூறிவிடலாம் போலத் தெரிகிறது.

ஒரு நாடு என்றால், மக்களுக்குப் பிணி இருக்கக் கூடாது. கொடிய மனம் படைத்த சிலரை மருத்துவ மனையைச் சுற்றி அழைத்துச் சென்றால், அவர்கள் திருந்திவிடுவார்கள். அத்துணைக் கொடிய பிணிகள்.

பட்டினத்தார், தாயுமானவர் முதலியவர்களுடைய பாட்டுக்களையெல்லாம் சொல்லிக்கொண்டு இருப்பதற்குப் பதிலாக, மருத்துவமனைக்குள்ளே ஒருவனை அழைத்துச் சென்று, ஆப்பரேஷன் செய்கின்ற இடத்தைக் காட்டினால், அவன் மனம் நொந்து, நல்லவனாக மாறினாலும் மாறுவான்.

எத்தனை எண்ணத் தொலையாத வியாதிகள்! மனிதன் துய்த்து, மகிழ்ந்து, அனுபவித்து, இறப்பதற்காக இங்கே வந்தான்.

பொங்கல் பானையிலே பால் பொங்குவது என்பது ஒரு சடங்கு. பால் எப்படிப் பொங்குகிறதோ அதைப் போல மனிதனுடைய மனத்திலே மகிழ்ச்சி பொங்க வேண்டும்.

மகிழ்ச்சி பொங்கி, உயிர் துய்த்து மகிழ்ந்து இன்ப ஊற்றிலே இருந்தால்தான் அது மேலும் உலகத்திற்கு மேலான கருத்துக்களை எண்ண முடியும். அது அல்லல் பட்டு அழுதால், அவர்களது வாழ்க்கை எந்த நோக்கத்தோடு இந்தப் பிறப்புக் கிடைத்ததோ அதைக்கூடத் துய்க்க முடியாமல் போகிறார்கள்.

இன்னும் சொல்லப்போனால், உயிர்களது இன்பத்திற்கு இடையூறாக இருந்தால் அவன் கடவுள் பணிக்குக் குறுக்கே நிற்கிறான் என்று ஒருவன் சொன்னான்.

உயிர்களுடைய இன்பத்திற்கு இடையூறாக நின்றால்-உயிர்களுக்கு இன்பத்திற்கு மாறாகத் துன்பத்தைத் தருவானேயானால் அவன் எல்லாம் வல்ல கடவுளுக்கே குறுக்கே நிற்கிறவனாம்.

கடவுள் இந்த வாழ்க்கையை அவனுக்குக் கொடுத்தது, அவன், மேலும் நல்ல அனுபவங்களை அனுபவித்து மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்பதற்காக அதில் இவன் போய்க் குறுக்கே நின்று தடை செய்கிறான்.

ஆக, நம்முடைய குறிக்கோள், திருவள்ளுவர் கருத்துப்படி பிணியின்மையாகும். நோயைக் கண்டால் துாரப் போ! நோயின்றி வாழ வேண்டும். சிலருக்கு நோய் வந்து விட்டால், ‘போன ஜென்மத்தில் செய்த பாபம், வந்து விட்டது’ என்று சொல்லுவார்கள். போன ஜென்மத்தில் என்ன செய்துவிட்டோம் என்கிற கவலை ஒரு பொது வியாதியாகப் போய்விட்டது.

இந்தக் கவலையைத்தான் “நெஞ்சிற் கவலை நித்தம் பயிராக்கி” என்றான் பாரதி.

நெஞ்சிற் கவலையால் சில பேர் வாழ்க்கை செம்மை இல்லாமல் இருக்கிறது.

“என்னங்க செளக்யமா?” என்று கேட்டால், “என்னமோ, இருக்கிறேன்!” என்று சொல்லுகிறபோது செத்து விடுவான் போலத் தெரிகிறது.

அவன் மகிழ்ந்து, சிரித்து, கன்னம் எல்லாம் பூரிக்க அவன் மகிழ்ச்சியாக இருந்ததில்லை. காரணம், அவன் வாழ்க்கையில் அல்லல்படுகிறான்.

நான் காரிலே சென்றுகொண்டிருக்கும்பொழுது, ஒரு மனிதன் தூக்க முடியாத சுமையை வண்டியில் வைத்து இழுத்துக்கொண்டு இருக்கிறான். அதை ஒரு மனிதன் தலையை முட்டுக் கொடுத்துத் தள்ளிக்கொண்டிருந்தான்.

அதை என்னுடைய கார் டிரைவர் அவசரமாக முந்திக் கொண்டு முன்னே போவதற்குப் பார்த்தார். ‘அவன் உயிருக்கு மன்றாடிக் கொண்டிருக்கிறான். அவனை முந்திக் கொண்டு போக எண்ணலாமா? இது நியாயமா? என்று என் டிரைவரிடம் கேட்டுவிட்டு, ‘அவனைப் போக விடு’ என்று சொன்னேன். ஆனால் பார்த்தபிறகு, அவன் ஒன்றும் ஆன்ம ஞானத்திற்குப் போக முடியாது. அவன் திருவாசகம், தேவாரம் படிக்க முடியாது. திருக்குறள் படிக்க முடியாது.

ஆன்ம அநுபவம் போயிற்று. வெற்று வயிற்றுச் சோற்றுக்காக உடம்பை இப்படி நாறாகப் பிழிகிறான். இதை நம் நாட்டிலே பார்த்துக்கொண்டு மனச்சான்று இல்லாமல் இருக்கிறோம்.

திருவள்ளுவருக்கு 2000 ஆண்டு வரப்போகிறது. இந்த, ஆள் இழுக்கிற கொடுமையையாவது இந்த ஈராயிரம் ஆண்டு நினைவாக, தமிழக அரசு தன்னுடைய அரசின் எல்லையில் ஒழித்துவிட வேண்டும்.

உழைப்பை அதிகமாகச் செலவழிக்காமல் இருக்க, சைக்கிள், மோட்டார் போன்ற நவீன இயந்திரங்களைக் கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும்.

இவ்வாறு நாள்பூராவும் இழுத்துக்கொண்டு அலுத்து, சலித்து வீட்டிற்குப் போகும் அவனிடம் சாமி கும்பிடு என்றால் எப்படிக் கும்பிடுவான்?

அவன் வீட்டிற்குப் போகும்போதே அவன் உடம்பு வலி எடுத்துத் தூக்கம் வருமே.

காட்சிகளைப் பார்க்கின்றபோது பிணியின்மை இல்லாதிருத்தல் வேண்டும்.

"உடம்பார் அழியின் உயிரார் அழிவார்” என்றார் திருமூலர். நமக்கு இடைக்காலத்திலே பெளத்த, சமண மாயாவாதம் வந்த பிறகு, இந்த உடம்பைப் பற்றிய அக்கறையே போய்விட்டது. அந்தப் பெளத்த, சமண மாயாவாதங்கள் எல்லாம் இந்த உடம்பை ரொம்ப இழித்தும், பழித்தும், அது, இது என்று சொல்லியும், ‘அழிகின்ற உடம்புக்குப் பாதுகாப்பு எதற்கு?’ என்று சொல்லியும், கலைத்துவிட்டன.

ஆனால் திருமூலர் அதனைப் பார்த்துப் புரட்சி எழுப்பினார். "உடம்பை வளர்த்தேன், உயிரை வளர்த்தேனே” என்றார்.

நிலத்தை வளர்த்தால்தான் பயிரை வளர்க்கலாம்; அது போல நம்முடைய உடலைக் கருவியாகக்கொண்டுதான் இந்த உயிர் வாழ்க்கை நிகழ்கிறது.

அதனால்தான் நாட்டிலே ஒரு பழமொழிகட உண்டு. "காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்" என்று. காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்றால், நல்ல நேரம், சந்தர்ப்பம், வேண்டிய மனிதர்கள் இருக்கின்ற போதே நம்முடைய காரியத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்பது இப்பொழுது உள்ள அர்த்தம்!

ஆனால் இதன் பொருள் மிகவும் உயர்ந்தது.

இந்த உடம்புக்கும் உயிருக்கும் இடையே இருக்கும் கூட்டு இருக்கிறபோதே பாவத்தைத் தூற்றிவிட்டு, புண்ணியத்தை எடுத்துக்கொள். இந்த உடம்புக்கும் உயிருக்கும் இடையே இருக்கிற கூட்டை உறுதிப்படுத்துகிற அடையாளம், நாம் விடுகின்ற மூச்சுக் காற்று ஆகும். அது நின்றுவிட்டால் ஆள் நின்றுவிட்டான் என்று அர்த்தம்!

அதற்குப்பின் பேச வராது, எழுத வராது; சிரிக்கவும், சிந்திக்கவும், அன்பு செய்யவும் முடியாது. ஆகவே உடம்பில் உயிர் தங்கியிருக்கிற அடையாளக் காற்று இருக்கிறபோதே பாவத்தைத் தூற்றிவிட்டு, புண்ணியத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.

அரசுக்குரிய பொருளைப்பற்றிக் குறிப்பிடுகின்றபொழுது, நம்முடைய திருவள்ளுவர் காட்டுகின்ற அரசில் வரி விதிக்கின்ற, அதாவது சில குறிப்பிட்ட துறைகளைத் தவிர, பொதுப்படையாக மனிதனுக்கு வரி விதிக்கின்ற மரபைத் திருவள்ளுவர் ஏற்றுக் கொள்ளவில்லை.

அரசுக்கு வருகின்ற பொருள்கள் உறுபொருள், உல்கு பொருள், ஒன்னார்த் தெறு பொருள் ஆகும். ஒன்னார்த் தெறு பொருள்-பகைவனுடைய பொருளைக் கொண்டு வருவது ஒரு கொள்ளை அல்லவா? அது அறத்தின் பாற்பட்டதாகுமா?

அப்படிக் கேட்கும்போது, பகைப்புலத்திற்கு வரும் பொழுது அதற்கு நியாயம் வேறு.

மருத்துவமனையில் ஒருவன் “அய்யோ! அப்பா! குத்தினால் வலிக்கிறதே” என்று சொல்லலாமா? குத்துதலும் அவனுடைய நோய் நீங்குவதற்குத்தான். ஆக, நியாயம் எல்லா இடத்திலும் ஒரு மாதிரியாகாது.

ஆனால் வலியச் சென்று, சாவதானமாக, அமைதியாக இருக்கின்ற ஓர் அரசை, அமைதியாக இருக்கின்ற ஒரு நாட்டை, படை எடுத்துப் போர் தொடுத்து அழிப்பது என்பது பாபம்.

ஆனால், தற்செயலாகப் போர் நிகழ்ந்துவிடுகிறது என்று சொன்னால் போர் முனையிலே ஒரு நாட்டினுடைய மானத்தை, மரியாதையைக் காப்பதற்காக ஏற்படுகின்ற செயல்களை நம்முடைய அறநூல்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றன.

ஒருகால் உலக சமாதானம் ஏற்பட்டு, உலகத்தில் எல்லா நாடுகளும் படைகளை வைத்துக் கொள்வதில்லை என்ற நிலைமை ஏற்பட்டு, அந்த நிலைமை ஏற்பட்ட பிறகு பகை வழியாகக் கொள்ளுகின்ற பொருள் தவறு என்று சொன்னால், திருவள்ளுவருக்குப் பிறகு அவர் மற்ற அதிகாரங்களில் காட்டிய அன்பு, அருள், நாகரிகம், முற்றி முதிர்ந்து இந்தச் செயற்பாட்டுக்கு அவசியம் இல்லை என்று ஆகிவிட்டது என்று பொருள் கொள்ளலாம்.

இலக்கிய உலகத்தில் நம்முடைய கையில் இருந்த கருத்துகள், அரசியல் அன்பர்கள், அமைச்சர்கள் கைகளுக்குச் சென்றிருப்பதால், திருக்குறள் விரைவில் நாட்டு இலக்கியமாகும் என்ற நம்பிக்கையை நாம் பெறுகின்றோம்.

அது இந்திய நாட்டு இலக்கியமாக மாறுவதற்கு முன்பு தமிழ் நாட்டிலே, எந்தத் துறைக் கல்லூரியாக இருந்தாலும், எந்தத் துறைப் படிப்பாக இருந்தாலும், எல்லாப் பள்ளிக் கூடங்களிலும், எல்லாக் கூட்டங்களிலும், எல்லாக் கல்லூரிகளிலும், மருத்துவக் கல்லூரியாயினும்கூட, ஒரு குறிப்பிட்ட பகுதி திருக்குறளைப் பாடமாக வைத்து, எல்லோரும் பயிலுதல் என்கிற முறையை முதலில் உண்டாக்கினால் அது இந்திய நாடு முழுவதும் பரவுவதற்குரிய முதல் வாய்ப்பைப் பெறும்.