குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5/இனிய காண்க

விக்கிமூலம் இலிருந்து




2


இனிய காண்க!


படைப்புக் கடவுள் நான்முகன் என்பது நல்லோர் நம்பிக்கை. ஆனால் உலகியலறிந்தோர் தத்துவ ஞானம் உணர்ந்தோர் நான்முகனால் இந்த உலகம் படைக்கப்பெற்ற தென்பதை ஒத்துக் கொள்வதில்லை. உலகு இயற்கை, இயற்கையாய இவ்வுலகம் இயங்கும் அச்சு, கடவுள்! உயிர்கள் படைக்கப் பெற்றன அல்ல. அவை நிலையானவை. தோற்றமும் மறைவும் உயிர்க்கு இல்லை; உயிரியக்கத்திற்கு இறைவன் தலைமை தாங்குகின்றான். வழி நடத்திச் செல்கிறான். அவன் தலைவன். உயிர்கள் அவன் வழிச் செல்வன. எங்ஙனமாயினும் அறிவிற் சிறந்த தத்துவ ஞானிகள் உலகு படைக்கப் பெற்றதல்ல என்று ஓர்ந்து உணர்ந்துள்ளனர். அவன் இந்த உலகத்தின் படைப்பாளன் நான்முகன் என்பதை ஏற்பதில்லை. இந்தக் கருத்து இன்று நேற்று தோன்றியதல்ல; வழி வழி தோன்றி வளர்ந்து வரும் கருத்து.

ஒரோ வழி பழங்காலத் தமிழன் நான்முகன் உலகத்தைப் படைத்தான் என்று ஏற்றுக் கொண்டாலும் அவனுடைய படைப்பில் புதுமையில்லை; பொதுமையில்லை; நயத்தக்க நாகரிகமில்லை; பண்பாடில்லை. எனவே, நான்முகனின் முறை பிறழ்ந்த படைப்பைப் பார்த்தாலே அவன் பண்பில்லாதவன் என்று தெரிகிறது என்று, நான்முகனை இடித்துக் கூறிய சான்றோனும் உண்டு. அது மட்டுமா? அந்தப் பண்பிலாளனாகிய நான்முகன் படைப்பு இன்னாதது. ஏ மனிதனே! நான்முகன் படைத்த படைப்பை மாற்று! அதுவே தலைவிதி என்று நம்பாதே! அதை அழித்து எழுது! இனியன காண முயற்சி செய்! என்று பழங்காலத் தமிழ்ப் புலவன் “பக்குடுக்கை நன்கணியார்” எழுச்சியுடன் மனித உலகத்தை இன்னாதன அழித்து இனியன காண்க! என்று ஆணையிடுகின்றான்! ஆற்றுப் படுத்துகின்றான்.

ஒரு வீட்டில் நெய்தற்பறை கேட்கிறது. நெய்தற் பறை இறந்த வீட்டில் கொட்டுவது. மரணம் அல்லது இறப்பு இயற்கையானது; தவிர்க்க முடியாதது என்ற நம்பிக்கையே மக்கட் சமுதாயத்தில் காலூன்றி நிற்கிறது.

திருவள்ளுவரும் கூட நேற்றிருந்தவர் இன்றில்லை என்ற பெருமை உலகிற்கு உண்டு என்ற கருத்தில் 'நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை பிறங்கிற்று உலகு' என்றார். இளங்கோவடிகளும் 'வையகத்தில் வரையறுத்த வாழ்நாள் யாரறிவார்?’ என்றார். நற்றமிழ்த் திருஞானசம்பந்தரும் ‘சா நாளும் வாழ்நாளும் யாரறிவார் நன்நெஞ்சே! என்றார்.

சீத்தலைச் சாத்தனாரும் “பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்” என்றார். ஆனால் பக்குடுக்கையார் நெய்தற் பறை ஓசையைக் கேட்டு நெஞ்சு குமுறுகின்றார். ஏன் மரணம்? மரணத்தை எதிர்த்து மாற்ற முடியாதா? மாற்ற முடியும்! மாற்ற வேண்டும். ஒருவர் வீட்டில் சாப்பறையும் பிறிதொரு வீட்டில் மணப்பறையும் என்பது இயற்கைக்குமாறு என்பதே கவிஞனின் கருத்து. பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு மரணத்தை வெல்ல வேண்டும் என்று கூறியும் இன்னமும் மனித உலகம் செத்துக் கொண்டிருக்கிறது. ஒரு மனையில் நெய்தற்பறையும், பிறிதொரு மனையில் மணப் பறையும் கேட்கிறது. வெளிப்பார்வையில் இந்தப் பறை முழக்கத்தின் வேறுபாடுகள் நம்மில் யாருடைய கவனத்தையும் கவர்வதில்லை. அய்யோ பாவம் ஒரோ வழி நம்முடைய கவனத்திற்கு வந்தாலும் அய்யோ பாவம்! ஆண்டவன் விட்ட வழி என்று அனுதாப வார்த்தைகளோடு முடிந்துவிடும். இது அறிவுக் கண்ணைத் திறப்பதில்லை. மரணமிலாப் பெருவாழ்வை அடைய முடியும் என்ற நம்பிக்கையைத் தருவதில்லை. அளவுக்கு மிஞ்சிய சகிப்புத் தன்மை துன்பத்தை, மரணத்தை எதிர்த்துப் பயனில்லை என்ற மூடக் கொள்கை காரணமாக வாழ்க்கையில் அறியாமை, ஆள்வினையின்மை, நொந்து நொந்து அணு அனுவாகச் சாதல் ஆகிய துன்பங்கள் வந்து சூழ்ந்தன. காலப் பேர்க்கில் மனிதன் இயற்கையை எதிர்த்துப் போராடுவதற்குப் பதில் இயற்கைக்கு அடிமைப்பட்டுவிட்டான். ஒரு வீட்டில் மகிழ்ச்சியும், ஒரு வீட்டில் துன்பமும் என்ற வேறுபட்ட காட்சிகளை பக்குடுக்கையார் இயற்கையன்று என்கிறார். இந்த வேறுபாட்டைப் படைப்பித்தவன் ஒருவன் இருப் பானானால் அவன் பண்பில்லாதவன் என்று சாடுகின்றார்.

எல்லோர் வீடுகளிலும் இன்பம். எல்லோருக்கும் வாழ்க்கை என்ற சமநிலைப் பண்ணின் சுருதி, புறநானூற்றுக் காலத்திலேயே கூடிவிட்டது. ஆம்! சுருதிக்கு இசைந்து பாடுகின்ற மனிதனைத்தான் காணோம். ஆரூரர் வாழ்க்கையிலும் பார்க்கின்றோம். ஆரூரர் அவிநாசிக்குச் செல்கின்றார். ஒரு வீட்டில் மகிழ்ச்சி வெள்ளம்! ஒரு வீட்டில் அழுகுரல். ஆரூரரின் அருளுள்ளம் அழுகுரல் கேட்கும் வீட்டை நோக்கி நடைபோடுகின்றது. ஆம்! அவர் நற்றமிழ் நாவலூரர்! தமிழ்ப் பண்பு அன்பின் வழிப்பட்டது. தமிழன் என்றும் வாழ்வாருக்கு மாரடிக்க மாட்டான். அவன் வாழ வேண்டியவர்கள் பக்கம். இதுவே சிறந்த சமயத் தத்துவமுங்கூட, அவிநாசியில் மகனை இழந்த பெற்றோரின் அழுகை மாற்றப் படுகிறது.

உலகம் இன்னாததாக இருக்கலாம். ஆனால் அந்த இன்னாமையை அப்படியே தாங்கிக் கொள்ள வேண்டும் அல்லது தாங்கும் சக்தியற்ற கோழைகளாக இருப்பின் எல்லாவற்றையும் துறந்து எங்கேயாவது ஓடிவிடவேண்டும் என்ற கொள்கை தமிழ் வழக்கன்று. ஏன்? வாழும் நெறியுமன்று. துன்பம் இயற்கையாக இருக்கலாம். ஆனால் அவற்றை மாற்றுவதற்குரிய சக்தி நமக்கு உண்டு என்று நம்பாத மனித உலகம் வாழ்ந்தும் வாழாத உலகமே!

மனிதனின் தோற்றம் அவன் ஒரு மையொற்றுத் தாளைப்போல வாழ்ந்து முடிப்பதற்காக அல்ல. அவனிடத்தில் இயல்பாக ஒரு போர்க் குணம் உண்டு. அவனுடைய படைப்பின் நோக்கமே அவன் போராட வேண்டும் என்பதுதான். அவன், ஓயாது போராடித் தொடர்ந்து நான்முகனோடு படைக்குமாற்றலில் போட்டிபோட வேண்டுமென்பதுதான். அவன் மண்ணைப் படைத்தால் மனிதன் மாளிகைகள் படைக்க வேண்டும்; கனிதரு சோலைகள் படைக்க வேண்டும். நான்முகன், படைத்த மண்ணில் உவரும், களரும் இருக்கலாம்.

ஆனால், மனிதன் படைத்த கனிதரு சோலைகளில் இனிய கணிகளே உண்டு. அவன் கடலைப் படைத்தால், இவன் கலம் படைப்பான். ஆக இவன் தீமையை எதிர்த்துத் துன்பத்தை எதிர்த்து வறுமையை எதிர்த்து, அறியாமையை எதிர்த்துப் போராடப் பிறந்தவனே. ஆனால் அய்யகோ! அவன் இன்று பக்கத்திலுள்ள மனிதனோடு போராடிக் கொண்டிருக்கிறான். அவன் தேவையில்லாத சாதிகளை, வேலிகளை, எல்லைகளைக் கற்பித்துக் கொண்டு, உடன் பிறந்த சகோதரர்களோடு போராடிக் கொண்டிருக்கிறான். மனிதனின் போர் முனை திசை திரும்பி விட்டது. அதன் காரணமாக உலகம் ஈட்டும் செல்வத்தில் பெரும்பகுதி படைப் பெருக்கத்திற்குப் பயன்படுகிறது. நாலு பேர் கூடினால் நாற்பது போலீஸ்காரர் தேவைப்படுகின்றனர். எங்கே நாகரிகம்! நாள்தோறும் வளர்ந்து வரும் சிறைச் சாலைகளின் எண்ணிக்கை என்ன? பூட்டுக்கள் விற்பனைப் பெருக்கத்தின் உண்மை என்ன? சட்டத்தின் மேல் சட்டம் இயற்றிக் குவிக்கப்படுகின்றன. வழக்கறிஞர்கள் நாள்தோறும் எண்ணிக்கையில் பெருகி வருகின்றனர். இவையெல்லாம் எதன் அடையாளம்: உலகத்தில் இன்னமும் கணிசமாக மனித குலம் வயிறார உண்ண வழியில்லை, உடலார ஒண்டிப் படுக்க ஒரு குடிசையில்லை. ஆயினும் போர் ஓய்ந்ததா? என்ன! இன்றைய மனிதன் போராட வேண்டாத இடத்தில் போராடிக் கொண்டிருக்கிறான். பட்டி தொட்டிகளில் கூடக் கட்சி சண்டை, கட்சிக் கொடிக் கம்பங்களின் சண்டைகள்! குத்து வெட்டு! கொலைச் செய்திகள்! மனிதன் எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறான். அவனுடைய போர்க்குணம் அதிகாரத்தைப் பற்றியதாகிவிட்டது.

வறுமையை எதிர்த்துக் கழனியில் போராட வருபவர் எத்தனை பேர்? “உற்பத்தித் திறனில் முடுக்கி விடப்பட்ட போர்க்குணம் இருக்குமானால் இன்று உலகம் பெற்றிருக்கும் செல்வத்தைப் போல பல மடங்கு செல்வம் பெருகும். ஆனால் மனிதனின் வியாபாரப் புத்தி செல்வ உற்பத்தி பெருகுமானால் விலை வீழுமே என்று அஞ்சுகிறது. மனிதனைத் திசை திருப்புகிறது. செயற்கைப் பஞ்சத்தை உருவாக்குகிறது. பொருளை உற்பத்தி செய்பவனிடம் இருக்க வேண்டிய விலை நிர்ணய உரிமையை வியாபார உலகம் பறித்துக் கொள்கிறது. ஊரெல்லாம் உண்ண உணவு கொடுத்தவன், தான் உண்ண உணவின்றிப் போராடுகின்றான். இது என்ன கொடுமை! நம்முடைய போர்க்குணம் மனிதனைப் பற்றியதாக இருக்கின்றவரை, மொழிகளை, சமயங்களை, அரசியலைப் பற்றியதாக இருக்கிறவரை மனித உலகம் வறுமையிலிருந்து மீளாது. அடிமைத் தனத்திலிருந்து மீளாது. அவர்களை நோதல், அழுதல், சாதல் ஆகிய எந்தக் கேட்டிலிருந்தும் யாராலும், இறைவனாலும்கூடக் காப்பாற்ற முடியாது. அதனால் உலகத்தில் துன்பம் நிலையானதாகி விட்டது. மனிதனும் துன்பம் இயற்கையானது, துன்பத்தை மாற்ற முடியாது என்ற பைத்தியக்காரத்தனமான முடிவுக்கு வந்துவிட்டான். இது வாழும் நெறியன்று.

மனித உலகம் துன்பத்திலிருந்து விடுதலை பெற வேண்டுமானால், மரணத்திலிருந்து விடுதலை பெற வேண்டுமானால், அடிமைத்தனத்திலிருந்து பரிபூரணமாக விடுதலை பெற வேண்டுமானால், மனிதர்கள் துன்பம் இயற்கையன்று என்ற அறிவின் தெளிவைப் பெறவேண்டும். மனித உலகத்தின் கொடிய பகை அறியாமை. அறியாமையைக் கருவியாகக் கொண்டு ஆதிக்கக்காரர்களால் படைக்கப் பெற்ற வேற்றுமைகளை, எல்லைக் கோடுகளை மனிதன் நிலையானதெனப் பற்றிக் கொண்டுவிட்டான். அந்த எல்லைக் கோடுகளை, வேற்றுமைகளைப் பாதுகாப்பதிலேயே இன்றையச் சக்தி முழுவதையும் செலவழிக்கின்றான்.

உலகத்தை ஒன்றுபடுத்தத் தோன்றிய சமய நெறிகளில் கூட அனுபவம் குறைந்து ஆர்ப்பாட்டம் பெருகிவிட்டது. “இவர் தேவர் அவர் தேவர்” என்று இரண்டாட்டுகின்ற தொழில் ரீதியான புரோகிதர்கள் பல்கிப் பெருகிவிட்டனர். அதனால் மனிதன் எப்படியோ போராடிக் கொண்டிருக்கிறான். அவனுடைய போர்க்குணம் ஓய்ந்தபாடில்லை. போர் முனை மாறுபட்டிருப்பதே துன்பத்திற்குக் காரணம். ஆதலால் நாம் பக்குடுக்கையார் எடுத்துக்காட்டும் வழியில் போராட்டத்தைத் தொடங்கவேண்டும். துன்பம் இயற்கை யென்று நம்பக் கூடாது. அப்படியே துன்பம் இயற்கையாக இருந்தாலும் நாம், அதனை மாற்ற வேண்டும் என்ற நோன்பை மேற்கொள்ள வேண்டும். அன்றுதான் உலகின் வறுமை நீங்கும், வளம் கொழிக்கும், ஒருலகம் தோன்றும். “இன்னாதம்ம இவ்வுலகம் இனிய காண்க” என்ற ஆணையை மறவாதீர்! ஓர்ந்து உணர்க. உணர்ந்து செயற்படுக!

 ஓரில் நெய்தல் கறங்க ஓரில்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்
புணர்ந்தோர் பூவணி யணியப் பிரிந்தோர்
பைத லுண்கண் பணிவார் புறைப்பப்
படைத்தோன் மன்ற அப் பண்பிலாளன்
இன்னா தம்ம இவ் வுலகம்
இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே!

(புறம்-194)

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.

(குறள்-505)