உள்ளடக்கத்துக்குச் செல்

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5/சிலம்புவழிச் சிந்தனை

விக்கிமூலம் இலிருந்து






13


சிலம்புவழிச் சிந்தனை


தமிழ்த்தாய் பெற்றுள்ள மிகச் சிறந்த காப்பியங்களுள் சிலப்பதிகாரமும் ஒன்று. சிலப்பதிகாரம் செஞ்சொற் காப்பியம். பாரதி கூறியதுபோல, நெஞ்சையள்ளும் காப்பியம்! தமிழ்ச் சுவையாலும், கருத்துச் செறிவாலும், உணர்ச்சியூட்டும் வகையாலும் சிறந்து விளங்குகிறது. சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோவடிகள் தமிழ் மரபினர்-தண்ணருள் மிக்கவர்-முதற்பெரும் கவிஞர். அவர் தமிழினத்திற்கென்று திட்டமிட்டுச் செய்த காப்பியம் சிலப்பதிகாரம். இளங்கோவடிகள் காலத்தில், தமிழக அரசு மூன்று பேரரசுகளாகப் பிரிந்தும் பிணங்கியும் இருந்ததைக் கண்டார். சேர சோழ பாண்டிய நாடெனத் திகழ்ந்த இம்மூன்று நாடுகளையும் ஒருங்கிணைக்க விரும்பினார். நிலப்பரப்பால் ஒருங்கிணைக்கும் முயற்சியைவிட, கருத்துவழி இணைப்பு உரிய பயனைத் தரும் என்று நம்பினார். ஆதலால் மூன்று நாடுகளையும் இணைத்த காப்பியத்தைச் செய்ய அவர் முன்வந்தார். அக்காப்பியத்தின் வழி மக்கள் மன்றத்தில் பிரிவினைகளைக் கடந்த ஒருமைப்பாட்டுணர்வைத் தோற்றுவித்து வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டார். ஆதலால், சோழ நாட்டுக் குடிமகளாகிய கண்ணகியைப் பாண்டிய நாட்டில் பயிலவைத்துச் சேரநாட்டில் தெய்வமாக்கினார். தமிழகத்தின் மூன்று நாடுகளையும் தழுவிய காப்பியமாகத் திகழ்வது சிலப்பதிகாரம் ஒன்றேயாம்.

மூன்று நாடுகளைத் தழுவிய காப்பியம் மட்டுமன்று. அது முத்தமிழ்க் காப்பியமாகவும் திகழ்கிறது. உலகில் வேறு எந்த மொழியும் இயல் இசை கூத்தென முப்பிரிவுகளைக் கொண்டு-அமைந்து விளங்கவில்லை. ஒரு துறைக் காப்பியமாக அமைபவை சமுதாயத்தின் பல்வேறு துறையினரும் அனுபவித்தற்குரியனவாக அமைவதில்லை. இயற்றமிழைப் புலமைமிக்க சான்றோர்களே அனுபவிக்க முடியும். இசைத்தமிழை இயற்றமிழ்ப் புலமை குறைந்தோரும் அனுபவிக்கலாம். கூத்தை மிகச் சாதாரண மக்களும் அனுபவிக்கலாம். சமுதாயத்தில் உள்ள இந்த மூவகைத் துறையினர்க்கும் பயன்படும் வண்ணம் அமைந்துள்ள ஒரே காப்பியம் சிலப்பதிகாரம்.

தனிமனித வாழ்க்கையிலும்கூட அறிவு, உணர்வு, செயல், படிவ வளர்ச்சி தேவை. இயற்றமிழ் அறிவு வளர்ச்சிக்கும், இசைத்தமிழ் உணர்வுப் பெருக்கத்திற்கும், கூத்துத்தமிழ் செயற்பாட்டிற்கும் துணை செய்யும்.

வாழ்க்கையின் உறுதிப் பொருள் மூன்று என்று அற நூல் கூறும். அவை, அறம் பொருள் இன்பம் என்பனவாம். இம் மூன்று உறுதிப் பொருள்களையும் எடுத்துக் காட்டும் வகையில் சிலப்பதிகாரம் அமைந்திருக்கிறது. சிலம்புப் படைப்பின் நோக்கமே அறநெறியின்பாற்பட்டது என்று அடிகள் கூறுகின்றார். கோவலன் வீழ்ச்சிக்குக் காரணமாகப் பொருள் அமைந்திருக்கிறது. ஐந்திணையின்பம், சிலம்பின் பெண் பாத்திரங்கள் அனைவரிடத்தும் அமையப் பெற்றுள்ளது. பேரின்பக் குறிப்பைப் பதிகத்தில் குறிப்பிடுகின்றார்.

தமிழகத்தின் தனிச் சமயமாகிய சிவநெறியில் இளங்கோவடிகளுக்கு நிறைய ஈடுபாடுண்டு. அவரைச் சிவநெறிச் சார்ந்தவர் என்றாலும் மிகையாகாது. சிவநெறியின் அடிப்படை உண்மை முப்பொருள் அமைப்புடையது. அஃதாவது இறை, உயிர், தளை என்பனவாகும். கோவலனை உயிர்நிலையில் வைத்து ஆராய்ந்தால் அவன் தளையால் தாங்கொணாத் துயருற்றதும் பின்னர் தன்னுடைய பத்தினிப் பெண்டின் கற்புவழியாகக் கடவுளின் கருணைக்கு ஆளானதும் முப்பொருண்மையை விளக்குவனவாக அமைந்துள்ளன.

இளங்கோவடிகள் காலத்தில் தமிழகத்தில் பல்வேறு சமய நெறிகள் பரவி இருந்தன. அந்தச் சமயநெறிகளைப் பற்றியும் வழிபடு தெய்வங்கள் பற்றியும் இளங்கோவடிகள் தம்முடைய காவியத்தில் சிறப்பித்துப் பேசியுள்ளார். எனினும், தமிழக வரலாற்றில் மிகுதியும் சிறப்புடைய சமயங்களாகிய சைவம், வைணவம், சமணம் ஆகிய சமய நெறிகளை விரித்தும் பெருமைப்படுத்தியும் பேசியிருப்பதின் மூலம் சிலம்பு முச்சமய நூலாகத் திகழ்கிறது என்று கருதுவதில் கருத்து வேறுபாடு இருக்கமுடியாது.

சமுதாய அமைப்பில் தனிமனிதன், சமுதாயம், அரசு ஆகிய முறைவைப்பு வளர்ந்து பன்னூறாண்டுகளாயிற்று. இந்த முறைவைப்பு மூன்றையும் தழுவிய காப்பியமாகச் சிலப்பதிகாரம் அமைந்திருக்கிறது. கண்ணகி குடிமகள் என்ற பாத்திரமாக விளங்குகின்றாள்-முந்நாட்டு மக்களின் வாழ்வியல், பிறப்பியல்புகள் வரலாற்றோடு இணைத்துப் பேசப் பெறுகின்றன. அடுத்து, மூன்றுநாட்டு அரசர்களும் அரசுகளாகப் பேசப்பெறுகின்றனர். இங்ஙனம், நாடு முதல் மக்கள் வாழ்வு ஈறாகப் பல்வேறு அமைப்புக்களையும் தழுவித் தோன்றிய காப்பியமாகச் சிலப்பதிகாரம் சிறந்து விளங்குகிறது.