உள்ளடக்கத்துக்குச் செல்

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6/பாரதிக்குப்பின் கவிதை வளர்ந்திருக்கிறதா?

விக்கிமூலம் இலிருந்து

10


பாரதிக்குப்பின் கவிதை
வளர்ந்திருக்கிறதா?

இந்த நாட்டின் வரலாற்றில் பாரதியார் ஒரு மையப் புள்ளிபோல. அவர் அடிமையாகப் பிறந்தார்; அடிமையாகவே வாழ்ந்தார்; அடிமையாகவே இறந்தும் போனார். எனினும் தமது கவிதையால் இந்த நாட்டு மக்களிடையே சுதந்திர உணர்வைத் தட்டி எழுப்பினார்.

திருவள்ளுவரையும், கம்பரையும்விட பாரதி வளர்ந் திருக்கிறார் என்று கூறலாம், கருத்தோட்டமும் நடை முறையில் இருக்கும் பாரதியின் கவிதைகளும் பாரதியின் வளர்ச்சியைக் காட்டுகின்றன.

'இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்'

என்றார் வள்ளுவப் பெருந்தகை. வள்ளுவர் வாழ்ந்த காலம் முடியாட்சிக்காலம்; அவர் முடியாட்சி மரபு முதலியவற்றை ஏற்றுக் கொண்டே பாடினார். எனவே தான் ‘இயற்றியான்' என்றார். பாரதியார் மக்களாட்சி யுணர்வு மிக்கோங்கியிருந்த காலத்தில் வாழ்ந்தவர். எனவே,

'தனியொருவனுக்கு உணவிலை எனில்,
சகத்தினை யழித்திடுவோம்'

என்றார். தனியொருவனுக்கு என்று பாரதியார் கூறுகிறாரே, அந்தத் தனியொருவன் யார்? அமைச்சரா? அதிகாரியா? பெரிய மனிதரா? அத்தகையவர்களுக்கு உணவு இல்லை என்ற நிலை வராது; சமுதாயத்தில் வாயும், கையும் உள்ளவர்கள் என்றும் எப்படியும் வாழ்ந்து விடுவார்கள். வாயும், கையும் இல்லாமல் சக்தியற்று மூலையிலே ஒதுங்கிக் கிடக்கின்ற ஒருவனைத்தான் பாரதி தனியொருவன் என்றார். உதைத்துக் கேட்பவனுக்கும்-தட்டிக் கேட்பவனுக்கும் கொடுக்காதவர்களும் கொடுத்துவிடுவார்கள். இதைத்தான் திருவள்ளுவர்,

'ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கைய ரல்லா தவர்க்கு'

என்றார்.

உள்ளத்தில் எழும் உணர்ச்சியை ஒழுங்குபடுத்திகேட்பவர் மனத்தில் நன்றாகப் பதியும்படி-அதைக் கேட்பவர்களும் அந்த உணர்விலே தோயும்படி இருந்தால் அது கவிதைதான்-இலக்கியம்தான். இசைத் தமிழ் வேறு. இலக் கியம் வேறு என்றால், தேம்பாவணி, இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரம், நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தரின் திருப் பதிகங்கள் ஆகியவற்றை எதிலே சேர்ப்பது?

பாரதிக்குப்பின் கவிதை வளர்ந்திருக்கிறதா என்றால், பாரதியின் மரபு வளர்ந்திருக்கிறதா? பாரதி சொன்னதை விமரிசனம் செய்து சொல்லும் திறமை வளர்ந்திருக்கிறதா? என்றுதான் பார்க்கவேண்டும். பாரதியிடத்திலே நற்சான்று பெற்ற கவிஞர் புரட்சிக்கவி பாரதிதாசன். யாமறிந்த புலவரிலே-என்ற பாரதியின் கருத்தை வைத்து-அதன் விளக்கமாக-பாராட்டாக பாரதிதாசன் பாடியிருக்கிறார். நாவின் சுவையும், வயிற்றுச் சுவையும் மிகுதியும் உடைய மக்கள் வாழ்கின்றார்கள் என்பதையுணர்ந்த பாரதிதாசன்,

'தமிழ் எங்கள் இளமைக்குப் பால்'

என்றும்,


'உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே


என்றும் பாடுகிறார்.


'தனியொருவனுக்கு உணவில்லையெனில்
சகத்தினை அழித்திடுவோம்'

என்ற பாரதியைவிட,

'உலகம் உண்ண நீ உண்:
உடுத்த உடுப்பாய்'


என்ற பாரதிதாசன் வளர்ந்துதான் இருக்கிறார், கவிதை வளர்ந்துதான் இருக்கிறது. "சகத்தினை அழித்திடுவோம்' என்று உணர்ச்சி வேகத்தில் பாரதி பாடிவிடுகிறார்; ஆத்திரத்தின் உச்சியில் நின்று பாடுகிறார், பாரதிதாசனுக்குத் தன்னம்பிக்கை இருக்கிறது. எனவே,

'நடத்து உலகத்தை நான்கு புறமு
முள்ள சுவரை இடித்துவிடு'

என்று பாடுகிறார். வேற்றுமைகளை யெலலாம் விட்டு நாட்டோடு நாடு இணைத்து மேலேறு என்று பாடுகிறார். 'உடைமை அனைத்தும் மக்கட்குப் பொதுமை என்று பாடுகிறார்.

குளத்தில் விழுந்தவனை எட்டிப் பிடித்துக் காப்பாற்றத்தான் கை என்பதுபோல சமுதாயத்தில் வீழ்ச்சியுற்ற வர்களை எழுச்சியுறச்செய்து வாழ்விக்கத்தான் கவிதை.

பாரதிக்குப்பின் கவிதை இலக்கியம் வளரவில்லை என்று கூறமுடியுமா? மனித சமுதாயம் வளர்ந்திருக்கிறது-வளர்ந்து கொண்டிருக்கிறது-வளர வேண்டும். அது வளரவில்லை என்பது பிற்போக்குத்தனமானது. உணர்ச்சி படைத்த கவிஞனை-சிந்தனை உணர்வுடைய கவிஞனை வளரவில்லை என்று எப்படிக் கூறமுடியும்? 'இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின்' என்று பாடிய திருவள்ளுவருக்குப் பிறகு, தனியொருவனுக்கு உணவிலை யெனில் என்று பாடிய பாரதிக்குப் பிறகு, உலகம் உண்ண உண், உடுத்த உடுப்பாய் என்று பாடிய பாரதிதாசன் பாரம்பரியத்திற்கு மேலாகத் தமிழ்த் தந்தை திரு.வி.க. பாடியிருக்கிறார்.

'அண்டையன் பசியால்வாட
அணங்கொடு மாடிவாழ்தல்
மண்டையன் குற்றமன்று
மன்னிடும் ஆட்சிக்குற்றம்'


என்று பாடுகிறார் தமிழ்த்தந்தை திரு.வி.க.


துரியோதனாதியரின் கொடுமைகளைப் பாஞ்சாலி சபதத்தில் பாரதியார் மிக அழகாகப் பேசுகிறார். மன்னனின் கொடுமையைப் பாரதிதாசன் பேசுகையில்,

'சிரமறுத்தல் வேந்தனுக்குப்
பொழுதுபோக்கும் சிறியகதை:
நமக்கெல்லாம் உயிரின் வாதை'

என்கிறார். இரண்டே வரிகளில், ஆதிக்கத்தின் பாற்பட்ட மன்னனை-ஆட்சிக்கேட்டை வன்மையாகச் சாடுகிறார்.

சென்றிடுவீர் எட்டுத்திக்கும்-கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்'

என்றார் பாரதியார். இதன் பொருள் பல்கலைச் செல்வங்களையும் பிற மொழிகளில் படியுங்கள் என்பதன்று. பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்களை நமது தமிழ்மொழியிலே ஆக்கித் தருதல் வேண்டும் என்றுதான் பாரதி கூறினார்.

"..துறைதோறும் நூல்கள் ஒருத்தர்தயை இல்லாமல் ஊரறியும் தமிழில் சலசலவென நீரோடைபோல வெளி வரவேண்டும் என்கிறார் பாரதிதாசன். அதாவது பாரதியின் கருத்தை மேலும் தெளிவாகக் கூறுவதுபோல, படித்தவர்வெள்ளை வேட்டிக்காரர்-மேல் மட்டத்தில் வாழ்பவர்கள் ஆகியோர் எவருடைய தயவும் இல்லாமல் சாதாரணமான தமிழில்-பல்துறை நூல்களும் வெளி வரவேண்டும் என்கிறார்.

'பிறிதோரிடத்தில் தமிழ்மொழியை மதங்களிலே சாய்க்காமை வேண்டும் என்றார். பாரதிதாசன் சாடுவதெல்லாம் பிற்போக்கான மதத்தையும், மதச் சடங்குகளையுமேயாகும். மதத்தின் அடித்தளமான கோட்பாடுகளை அவர் சாட வில்லை. உலகத்தில் வாழுகின்ற எல்லா உயிர்களும் இறைவனின் திருமேனி என்பதே மதத்தின் அடித்தளக் கொள்கை, பிறருக்குத் தீங்கிழைத்து விட்டுத் தனக்கு நலன் தேடுவதான பேராசைக் கொள்கையை அன்று தொட்டே மதம் எதிர்த்து வந்திருக்கிறது.


மடமையுற்ற வாழ்க்கையை
மடங்கள் தந்த தாதலால்
கடவுளில்லை கடவுளில்லை
கடவுளென்ப தில்லையே

என்றார் நண்பர் ஜீவானந்தம். "ஜீவா" மதத்தை எதிர்க்கிறார் என்றால், குப்பை கூளம் நிறைந்த பிற்காலச் சமயக் கருத்துகளைத்தான் எதிர்க்கிறார். மனித உலகத்தை அச்சத்திலிருந்து விடுதலை செய்து, அன்புணர்ச்சியிலேயே வளர்க்கவேண்டிய மதம் தனது கடமையிலிருந்து தவறிவிட்டது. எனவேதான் பிற்காலத்தில் மதம் பல தாக்குதல்களுக்கு இலக்காக வேண்டியதாயிற்று.

பொதுவாக பக்தியிலே மனம் வளர்ந்திருக்கிற தென்றால் சிந்தையில் செம்மை வளர்ந்திருக்கவேண்டும்செழுமை மலர்ந்திருக்க வேண்டம. இன்று சோஷலிசம் பற்றிப் பெரும்பாலும் எல்லோரும் பேச ஆரம்பித்து விட்டார்கள். இதனை மார்க்ஸிஸ்டுகள் ஒத்துக்கொள்வதில்லை.

'இரைபோடும் மனிதருக்கே
இரையாகும் வெள்ளாடே-வீண்
அனுதாபம் கண்டு
மதிமோசம் போகாதே'

{{block_center|<poem>

</poem>}} என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மிக அழகாகப் பாடுகிறார். சுரண்டும் வர்க்கத்தைச் சார்ந்தவன் பாட்டாளிக்கு என்றாவது ஒருநாள் வடைபாயசத்தோடு சோறு போடுவான் - வேட்டி எடுத்துக் கொடுப்பான். இதைப் பார்த்து அந்த ஆளையும் நம்பக்கூடாது. அவனுடைய செயல் சுயநலத்தின் பாற்பட்டது.

'உள்ளம் என்பது ஆமை-அதில்
உண்மை என்பது ஊமை
சொல்வில் வருவது பாதி-நெஞ்சில்
துரங்கிக் கிடப்பது மீதி”


என்பது போன்ற அருமையான பல தத்துவப் பாடல்களைக் கவிஞர் கண்ணதாசன் பாடியிருக்கிறார். இத்தகைய கவிஞர்கள் எண்ணற்றோர் இருக்கின்றனர். அத்தகைய கவிஞர்கள் நம்மோடு வாழ்வதாலேயே அவர்களையெல்லாம் குறைத்து மதிப்பிடக்கூடாது. பாரதிக்குப் பின் கவிதை இலக்கியம் வளர்ந்திருக்கிறது-வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது - வளர வேண்டும். பாரதிக்குப் பிறகு, இந்த நாட்டின் வளர்ச்சித் திட்டங்களையும் பிற முன்னேற்றங்களையும் பாடும் சுதந்திரக் கவிஞர்களும், சோஷலிஸ்க் கவிஞர்களும் தோன்றித்தான் இருக்கின்றனர்.

'தம்மின் தம்மக்கள் அறிவுடைமை ஞாலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது


என்றார் திருவள்ளுவர். அப்பாவைவிட மகன் அறிவு வளர்ந்தவனாகத்தானிருப்பான்; அவன் தனது தந்தை என்பதற்காக எழுந்து மரியாதை கொடுப்பான். அது போல பாரதி, கவிதையுலகத்தின் தந்தையாக விளங்குகிறார். அதற்குரிய மரியாதையை நாம் கொடுத்துத்தானாக வேண்டும். எனினும் மரியாதை கொடுப்பதை வைத்துக்கொண்டு பாரதிக்குப் பிறகு கவிதை இலக்கியம் வளரவில்லை என்று முடிவு செய்யக் கூடாது; முடிவு செய்யாதீர்கள். பாரதிக்குப்பின் கவிதை வளர்ந்திருக்கிறது-வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இனிமேலும் வளரும்.