உள்ளடக்கத்துக்குச் செல்

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6/மகாகவி பாரதியாரின் சிந்தனைகள்-III

விக்கிமூலம் இலிருந்து

9

மகாகவி பாரதியாரின்
சிந்தனைகள் - III

மகாகவி பாரதி, கீதையின் சாரத்தைப் பிழிந்து தருகின்றான். கடவுள் ஒருவர். அந்தக் கடவுள் ஒருவரும் ஊர், பெயர் இல்லாதவர், ஆனால், மக்கள் அவரவர் விருப்பம் போல வடிவங்கள், பெயர்களைக் கற்பிக்கின்றனர். அத்தகு பெயர்களில் கண்ணன் என்பதும் ஒரு பெயர். கண்ணனுக்கு உயிர்க்குல வேறு பாடு இல்லை. கண்ணன் எல்லா உயிர்களிடத்திலும் உயிர்க்கு உயிரதாக இருந்தருள் செய்கிறான்.

"எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன்
என்றுரைத் தான் கண்ணபெருமான்!
எல்லாரும் அமரநிலை எய்தும் நன்முறையை
இந்தியா உலகிற்கு அளிக்கும்-ஆம்!
இந்தியா உலகிற்கு அளிக்கும்!"

என்பது பாரதி வாக்கு! ஆம்! அமரர் உலகத்திற்கு எதற்காகச் சாதிமுறை? அமரர் உலகத்திலும் வேறுபாடா? வேறுபாடற்ற உலகமே அமரர் - உலகம்! இஃது இந்தியாவின் செய்தி! ஆனால், மேலை நாடுகளிலும் வெள்ளையர்-கருப்பர், யூதர்-கிறித்துவர் என்ற சண்டைகள், கலகங்கள் இருப்பதைப் பார்த்து வருந்துகிறான்! உலகத்தில் நடைபெறும் இனவழிச் சண்டைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க மருந்தாக, "எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன்” என்ற செய்தியைத் தருகிறான்! ஆனால், இன்று இந்தியாவின் நிலை என்ன? சாதிச் சண்டைகள்! மதச் சண்டைகள்! இந்து-முஸ்லீம் பேதா பேதங்கள்! இவை பாரதியின் சிந்தனைக்கு-ஏன்? உப நிடதக் கொள்கைக்கே முரணானவை! எல்லா உயிர்களிலும் கண்ணன் இருக்கின்றான் என்ற நம்பிக்கை! இது பாரதப் பண்பாட்டின் இதயம்! இந்தியாவின் சமயம்! இந்தியா அமரர் உலகத்தைக் கூவி அழைத்து வழங்கிய அப்பரடிகள் பிறந்த நாடு! ஞானாசிரியரின் விதிமுறைகளை மீறி, நரகத்தையும் விரும்பி ஏற்றுக் கொண்டு அமரர் உலகத்தை அடையச் செய்யும் மந்திரத்தை எல்லோருக்கும் உபதேசித்த எம்பெருமானார் இராமாநுஜர் அவதரித்த புண்ணிய நாடு! இங்கு மதத்தின் பெயரால் கெட்ட போர் வேண்டாம்!

இந்தியா ஒரு நாடு! இமயம் முதல் குமரிவரை ஒரு நாடு! இந்தியாவில் வாழும் அனைவரும் குருதிக் கலப்புடைய ஒரே குலம்! ஒரே சிந்தனையுடைய ஒரே இனம்! இந்தியாவில் வாழும் அனைவரும் இந்திய மக்கள்! இந்தியாவில் வாழும் அனைவரும் சமம்! அவருள் உயர் பார்ப்பனரேனும் சரி, ஈனப் புலையரேனும் சரி வேறுபாடு இல்லை எல்லாரும் ஓர் நிறையே! இந்திய மக்கள் சமமாகப் பாவிக்கப் படுவார்கள்! சமூக வாழ்க்கையில் பணம் பாதிப்புக்களை ஏற்படுத்தி விடுவதில்லை! இது பாரதி வாழ்ந்த காலத்தில்! ஆனால், இன்றோ எங்கும் பண மதிப்பீட்டுச் சமுதாயம்! பணம் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தி “ஏழைகளை” உருவாக்கியுள்ளது. ஆனால், பாரதி "எல்லாரும் ஓர் விலை” என்கிறான்! என்று எல்லாரும் ஓர் விலையாகும் நாள் வரும்! இத்துடன் பாரதி நின்று விட்டானா? பாரதி, அவன் காலத்தில் மன்னர்களைப்பார்த்திருக்கிறான்! அதனால், மன்னர்களின் மகுடங்களில் பாரதிக்கு இருந்த ஆசை அகல வில்லை! இந்தியர்க்ள எல்லோரையுமே இந்தியாவின் மன்னர்கள் ஆக்குகிறான்! இந்தியர்களுக்கு பாரதி அளிக்கும் மன்னர் பதவி அதிகாரப் பதவியல்ல. மன்னர் பதவி நிலை நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. மேலை நாடுகளில் மன்னர் பதவி அதிகார பீடம்! சுகபோகமுள்ள பதவி, இந்தியாவிலோ அப்படியல்ல.

"மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல்
துன்ப மல்லது தொழுதக வில்"

என்று செங்குட்டுவன் வாயிலாக இளங்கோவடிகள் கூறுவதை எண்ணுக. இந்தியாவில் மன்னர்கள் மக்களின் நலம் காக்கும் சேவகர்கள். இந்தியாவை வளர்க்கும் கடமையும் பொறுப்பும் உள்ள மன்னர் பதவி! மன்னர் என்றவுடன் முடியைத் தேடாதீர்! மூளையைத் தடவுங்கள்! அறிவுக் கிளர்ச்சியுடன் அறிவறிந்த ஆள்வினையுடன் இந்தியாவை வளர்க்க, காக்கப் பணி செய்வீர்! இந்தியாவின் இயற்கை வளங்களைப் பாதுகாப்போம்! மேலும் வளர்ப்போம்! எல்லாருக்கும் எல்லாம் என்ற இடம் நோக்கி இந்த பாரதத்தை நடத்துவோம்! இந்தியாவில் பட்டினிச் சாவு இல்லை என்ற புகழ்ப் பரணி பாடுவோம்! இந்தியாவில் எவரும் அமர நிலை எய்த முடியும்! இந்தியர்கள் அனைவரும் ஒரு குலம்! இந்தியாவில் அனைவரும் ஒரு விலை! அனைவரும் இந்நாட்டு மன்னர்! வாழ்க இந்தியா.