குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6/பாரதி காட்டும் வழி

விக்கிமூலம் இலிருந்து




15
பாரதி காட்டும் வழி


பாரதியார் ஒரு மகாகவி, தமது உணர்ச்சியை வெளிப்படுத்துவதில் பேராற்றல் படைத்தவர். அவர் உள்ளத்து உள்ள உண்மை ஒளியே கவிதையாக மலர்கின்றது; அவர் பாடல்கள் தமிழர்களுக்குப் புத்துணர்ச்சியைக் கொடுத்தன. கொடுத்துக் கொண்டிருக்கின்றன. தேசப் பற்றையும், தெய்வப் பற்றையும், கவிதை இன்பத்தையும் ஊட்டுகின்ற கவிஞர் அவர். பாரதியார் சிறந்த கவிதைத் தச்சர். ஒப்பற்ற சீர்திருத்தச் சிற்பி. அழுத்தமான தெய்வ பக்தர். வாய்மையும் நேர்மையும் பொருந்திய சமுதாயத்தின் வழிகாட்டி. சமுதாயத்தை வளப்படுத்த வந்த மாபெரும் தலைவராகிய பாரதியார் தலைவர்களாக உள்ளவர்களுக்கும் நல்ல வழிகாட்டுகிறார்.

பாரதத் தாயின் அடிமை நிலையினை அகற்ற முயன்ற முன்னையோரில் முதல்வர் தாதாபாய் நவுரோஜி அறிவும், திறனும், அன்பும், உறுதியும் படைத்த வீரத் தலைவர் அவர். விற்போரில் வெற்றி கொள்ள நினைப்பது பயனற்றது எனக் கருதிச் சொற்போரால் தொண்டாற்றியவர். எல்லாவற்றிற்கும் மேலாக சீர்மை பொருந்திய ஒரு பண்பை அணி கலனாக கொண்டவர். அது என்னவென்றால் தன்னலமின்றி பிறர் நன்மைக்கென்றே அரும்பாடுபட்ட பற்றற்ற துறவியாய் வாழ்ந்தமையே. அவற்றையெல்லாம் கண்ட பாரதியார் மனமார வாய் நிறைய வாழ்த்துகிறார். அந்தக் கவிதையைப் பார்ப்போம்:

"கல்வியைப்போல் அறிவும், அறிவினைப்போலக்
கருணையும் அக்கருணை போலப்
பல்விதஊக் கங்கள் செயும் திறனும்
ஒரு நிகரின்றிப் படைத்த வீரன்
வில்லிறவாற் போர் செய்தல் பயனிலதாம்
என அதனை வெறுத்தே உண்மைச்
சொல்விறலாற் போர் செய்வோன்;
பிறர்க்கன்று தனக்குழையாத் துறவி யானோன்"


இதன் மூலம் தலைவர்களுக்குக் கல்வியும், அறிவும், கருணையும், ஊக்கமும், தீர்க்காலோசனையும், தன்னலத் துறவும் எவ்வளவு அவசியம் என்பதைப் பாரதியார் உணர்த்துகிறார். தமிழ் இலக்கியங்களிலெல்லாம் மிகச் சிறந்த பண்பாடாகப் பேசப்படுகின்ற தன்னலத் துறவு அறிந்தின்புறத்தக்கது.

"தமக்கென முயலா நோன்றாட்
பிறர்க்கென முயலுந ருண்மையானே"


இவ்வுலகம் உண்டென்று கூறுகிறது புறநானூறு. "தனக்கென்று ஒன்றானும் உள்ளான். பிறர்க்கே உறுதிக்கு உழந்தான்” என்பது குண்டலகேசி. "தனக்கென வாழாப் பிறர்க்குயிராளன்” என்பது அகநானூறு "பிறர்க்கற முயலும் பெரியோய்” என்பது மணிமேகலை. பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வழிகாட்டும் தலைவனுக்கு இந்தத் தன்னல மறுக்கும் பண்பு அமையாதிருக்குமானால் அவன் தலைமை நல்ல பயனை விளைவிக்காது; அவனது தலைமையும் மக்கள் சக்தியால் மாற்றப்பட்டு விடும். எத்தனையோ பேரரசுகள் மறைந்தொழிந்தமையே இந்த உண்மையை நன்கு எடுத்துக் காட்டும். மகாகவிபாரதியின் இந்தத் தன்னல மறுப்பு உபதேசம் அரசியல் தவைலர்களுக்கு மட்டுமல்ல. சமுதாயம், சமயம், அறநிலையங்கள், மடாலயங்கள் முதலியவற்றின் தலைவர்களுக்கும் சிறந்த வழிகாட்டியாக அமைகின்றது. துறவியினுடைய இலட்சணம் இவ்வுலகப் பொருள்களிடத்துப் பற்றின்றி வாழ்வதேயாம். ஆனால் தன்னைச் சார்ந்துள்ள-தன் நாட்டிலுள்ள மக்களை மறத்தல் அன்று. அறிவும், ஒழுக்கமும், அன்பும், நம்பிக்கையும் கொண்டு மக்கள் நலம்பெற வாழ வழிகாட்டிப் பணி செய்வதையே கடமையெனக் கொண்டவர் துறவிகள் என்பது கதே என்ற தத்துவ ஞானியின் அறிவுரை, "ஞானிகள் முயல வேண்டுவது உலகத்தை வெறுக்கவன்று; உலகத்தை அறியவேயாகும்" என்பது அவர் மொழி, ஈண்டு உலகம் என்பது மக்களையே குறிக்கின்றது. உலக மக்களின் நிலையறிந்து, தேவையறிந்து அவர்கள் வளர வேண்டுவன செய்யக் கடமைபட்டிருக்கிறான் உண்மையான துறவி. அதையே பாரதி "பிறர்க்கன்றி தனக் குழையாத் துறவியாவேன்" என்று சொல்லி விளக்குகிறார். இத்தகைய துறவிகள் இந்த நாட்டிலே பெருகுவார்களானால் இம்மண்ணுலகமே விண்ணுலகமாய் மாறிவிடும்.

சில இடங்களில் பாரதியார் ஆண்டவனை நோக்கிச் செய்யும் தமது பிரார்த்தனையின் மூலம் தலைவர்களுக்குச் சிறந்தவழியைப் புகட்டுகிறார். பாரதியார் தமது சுயசரிதையைப் பாடி முடித்தபின்பு இறுதியாகப் பரம்பொருளிடம் ஒரு சில வேண்டுகிறார். அவற்றைப் பார்ப்போம்.

"அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி, அகத்திலே
அன்பினோர் வெள்ளம்
பொறிகளின் மீது தனியரசானை, பொழுதெல்லாம்
நினது பேரருளின்
நெறியிலே நாட்டம், கருமயோகத்தில் நிலைத்திடல்,
என்றிவை அருளாய்; -

'குறிகுணம் ஏதும் இல்லதாய் அனைத்தாய்க் குலவிடு
தனிப்பரம் பொருளே’

கலக்கமற்ற அறிவு, சபலமற்ற நெஞ்சு, அன்பு நிறைந்த உள்ளம், பொறிகளை அடக்கியாளும் ஆற்றல், இறைவன் திருவருள் நெறியினை மறவாத நோக்கம். இடையறாப் பணியில் ஈடுபாடு இவற்றையெல்லாம் ஆண்டவனே எனக்கு அருள்வாய் என்று வேண்டுகிறார் பாரதி. அதாவது இவையெல்லாம் ஒரு தலைவனுக்கு இன்றியமையாது வேண்டப்படுபவை என்று அறிறுறுத்துகிறார் நவயுலகத் தலைவர் பாரதி. இன்னும் ஒரு தலைவனுக்கு வேண்டிய குணத்தையும் வெளிப்படுத்துகிறார். அது பகைமை உணர்ச்சியாகும். ஒரு தலைவன் எதைப் பகைக்க வேண்டும் என்பதை மாஜினியின் மூலமாக உணர்த்துகிறார்.


தீயன புரிதல், முறைதவிர் உடைமை,
செம்மைதீர் அரசியல், அநீதி
ஆயவற்று என்னெஞ்சு இயற்கையின்
எய்தும் அரும்பகை”

தீமையையும், அநியாய உடைமையையும், கொடுங்கோலையும் அநீதியையும் கண்டால் ஓர் உண்மைத் தலைவன் இயல்பாகவே அதன்மீது கோபங்கொண்டு அதை அழிக்கக் கொதித்து எழுவான் என்ற உண்மையையும் நன்கு வெளிப்படுத்துகிறார் பாரதி. மேலும் மனித உள்ளத்திலே பெரும்பாலாகத் தோய்ந்து கிடக்கும் சில தீமைகள் ஒழிய வேண்டும் என்றும் வேண்டுகிறார்.


'மதிமூடும் பொய்மையிருளெல்லாம்-எனை
முற்றும் விட்டகல வேண்டும்:
ஐயம்தீர்ந்து விடல் வேண்டும். புலை
அச்சம் போயொழிதல் வேண்டும்"

என்று சொல்லி, உன்னைக் கோடி முறை தொழுதேன். இனி வையத்தலைமை எனக் கருள்வாய்” என்று வேண்டுகிறார். "அச்சமே கீழ்மக்களது ஆசாரம்" என்று வள்ளுவர் பேசு கிறார். அச்சமும், சந்தேகமும் அதாவது நம்பிக்கையின்மையும் தலைவனைத் தலைமைப் பதவிக்குத் தகுதியற்றவனாக ஆக்கிவிடுகின்றன என்பதை வையத் தலைமையை வேண்டும் பாரதி நன்றாக விளக்குகிறார்.

எந்த ஒரு விஷயத்தையும் பரபரப்பின்றி வரவரக் கண்டு, ஆராய்ந்து பார்த்து முடிவு செய்ய வேண்டியது தலைவர்களுக்கு இன்றியமையாது வேண்டப்படுகின்ற பண்பு. இந்தப் பண்பாட்டைப் பாரதி பாஞ்சாலி சபதத்தில் அர்ஜுனன் மூலமாக உணர்த்துகிறார். சூதாட்டத்திலே தருமன் பாஞ்சாலியை வைத்துத் தோற்றுவிட்டான். பீமன் கொதித்தெழுகின்றான். மூத்தவன் என்ற மரபையும் மறந்து கடுஞ்சொற்களைக் கொட்டுகிறான். அச்சமயத்திலே அர்ஜுனன் பீமனைத் தடுத்து நிறுத்தி சினமான தீயறிவினால் அடாத வார்த்தைகளைச் சொல்லாதே என்று அமைதிப்படுத்திப் பின்னர் அறம் பேசுகிறான். அறம் சொல்லுவதோடு அர்ஜுனன் நிற்கவில்லை. நியதி தத்துவத்தையும் உணர்த்துகிறான்.

"தருமத்தின் வாழ்வதனைக் குதுகவவும்:
தருமம் மறுபடி வெல்லும்”

என்ற அழியாத உண்மையை அறிவுறுத்துகிறான். தருமத்திற்கு மாறானவை அப்போதைக்குத் தலைதூக்கி நின்றாலும் அது வெற்றியாக மாட்டாது என்பதைத் தலைவர்கள் நன்கு உணர்ந்து செயலாற்ற வேண்டும். சகிப்புத் தன்மையே சாசுவத வெற்றிக்கு அடிப்படை என்ற எண்ணம் அர்ஜுனனுக்கு. ஆயினும் அவனது வீரவுணர்வும் தன்னம்பிக்கையும் மாய்ந்து விடவில்லை. பாடலைப் பார்ப்போம்.

"தருமத்தின் வாழ்வதனைச் சூதுகவவும் தருமம்
மறுபடி வெல்லும்" எனுமியற்கை
மருமத்தை நம்மாலே உலகம் கற்கும் வழிதேடி.விதி
இந்தச் செய்கை செய்தான்
கருமத்தை மேன்மேலுங் காண்போம் இன்று
கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம்மாறும்
தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்
தனுவுண்டு காண்டீபம் அதன் பெயர்"


என்கின்றான். தரும நம்பிக்கையும், அத்தோடு தன்னம்பிக்கையும் தலைவர்களுக்கு எவ்வளவு அவசியம் என்பதை வையத் தலைவன் பாரதி நன்றாக எடுத்துக் காட்டுகிறார். இல்லையா? காந்திய உணர்விலே ஊறிய பாரதி தலைவர்களுக்குச்சொல்லும், செயலும் ஒன்றாக இருக்க வேண்டும்; கொள்கை வேறு வாழ்க்கை வேறு என்று இருக்கக்கூடாது; அப்படி மாறுபட்டிருப்பவர்கள் சமுதாயத் துரோகிகள் என்று வசனத்தில் எழுதுகிறார். நிலையான வெற்றி வேண்டில் அறமான செயல் வேண்டும் என்பது பாரதி காட்டும் வழி. "ஜெயம் நிலையாக செய்வதற்கு அறமே சிறந்ததோர் மார்க்கம்” என்று மாஜினியின் மூலம் நமக்கு எடுத்து விளக்குகிறார். மேலும் மாஜினியின் மூலம் பூரணத்தியாகத்திற்குத் தயாராக இருப்பவனே தலைவனா வான் என்பதை.


"என்னுடன் ஒத்த தருமத்தை யேற்றார்
இயைந்த இவ்வாலிபர் சபைக்கே
தன்னுடல் பொருளும், ஆவியுமெல்லாம்
தத்தமாய் வழங்கினேன்"

என்று நமக்கெல்லாம் அறிவுறத்துகிறார். ஒரு தலைவன் சர்வாதிகார மனப்பான்மையின்றித் தன்னுடன் உழைப்போர் மணமறிந்து ஒற்றுமைப்பட்டு தான் என்றும் ஊழியனே என்ற பணியுணர்ச்சியோடு பணிசெய்ய வேண்டும். அயர்ச்சி தளர்ச்சியுமற்றவனாய் அப்பணியின்றி, வேறெந்தத் தொழிலிலும் ஈடுபடா ஏகாக்கிரக சித்தமுடையவனாக நிற்க வேண்டும். அதில் எவ்வாற்றாலும் தவறமாட்டேன் என்ற சங்கல்பத்தை திரிகரண சுத்தியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த இலட்சிய வெறியைப் பின்வரும் இரண்டு பாடல்கள் மூலம் பாரதி காட்டுகின்றார்.


"இவருடன் யானுமிணங்கியே யென்றும்
இது அலாற் பிறதொழில் இவனாய்த்
தவற்று முயற்சி செய்திடக் கடவேன்
சந்ததமும் சொல்வினால் எழுத்தால்,
அவமற செய்கை யதனினால்
இயலும் அளவெலாம், எம்மவரிந்த
நலமுறு சபையினொரு பெருங்கருத்தை
நன்கிதின் அறிந்திடப் புரிவேன்"


"இன்றும், எந்நாளும் இவை செயத்
தவறேன் மெய்யிது, மெய்யிது, இவற்றை
என்றுமே தவறிழைப்பனேல் என்னை
ஈசனார் நாசமே புரிக,
அன்றியும் மக்கள் வெறுத்தெனை யிகழ்க
அசத்தியப் பாதகஞ் சூழ்க
நின்ற தீயெழுவாய் நரகத்தின் வீழ்ந்து
நித்தம் யான் உழலுக மன்னோ”


இவை ஏதோ மாஜினி எடுத்துக் கொண்ட பிரதிக்ஞை யையுமே அறிவிக்கும் சாதாரண ஒரு செய்தியன்று. பாரதியும் வெறும் பத்திரிகை நிருபர் அல்லர். ஆனால் மக்களைத் தலைமை தாங்கி இட்டுச் செல்லும் தலைவர்களுக்கு இருக்க வேண்டிய குணங்களையும் அவர்கள் கொள்ள வேண்டிய பிரதிக்ஞையையுமே இதன் மூலம் செம்மையாக அறிவுறுத்து-கிறார். கடமை தவறிய தலைவர்கள் ஆண்டவனுடைய, கோபத்திற்கும் பொது மக்களின் இகழ்ச்சிக்கும் தவிர்க்க முடியாத பல தண்டனைகளுக்கும் ஆளாவர் என்பதைச் சுட்டிக்காட்டி கடமையாற்றும் நெறியிலே தலைவர்களுக்கு நல்லவழி காட்டுகிறார் பாரதி.

மக்களை மக்களாகக் கருதவேண்டும்; அவர்களின் உணர்ச்சியையும், உரிமையையும் மதிக்க வேண்டும்.


"நாட்டு மாந்தர் எல்லாம்-தம்போல்
நரர்களென்று கருதார்
ஆட்டு மந்தையாம் என்று, உலகை
அரசர் எண்ணிவிட்டார்”


என்று சர்வசுதந்திரப் போக்கைக் கண்டிக்கின்றார் பாரதி. அத்துடன் அமைதியில்லை பாரதிக்கு. ஆம். பார்க்குமிட மெங்கனும் நீக்கமற அப்பரனையே தரிசிக்கும் பண்பாளன் பாரதி. அதனால் உயிர்கள் அனைத்தும் கடவுளின் உருவம். கடவுளின் பிள்ளைகள் என்று மதித்துப் பரிவுடன் ஏன் பக்தியுடனே பணிபுரிய வேண்டும் என்று கூறுகிறார். வெறும் அறவுரைக்காகக் கூறுவதைவிட அங்கனம் வாழ்ந்து சிறந்த தலைவர் ஒருவரை உதாரணமாகக் காட்டுவதே நலமெனத் தெளிந்து காந்தியடிகளை நம் மனக்கண்முன் கொண்டுவந்து, நிறுத்துகிறார். பாட்டைப் பார்ப்போம்.


"மன்னுயிர் எல்லாம் கடவுளின் வடிவம்
கடவுளின் மக்கள்என் றுணர்தல்
இன்னமெய்ஞ் ஞானத் துணிவினை, மற்றாங்கு
இழிபடு போர், கொலை, தண்டம்
பின்னியே கிடக்கும் அரசியல் அதனில் ,
பிணைத்திடத் துணித்தனை பெருமான்"

காந்தியடிகளின் பண்பாட்டையும் சீலத்தையும் பாடிப் பரப்புவதன் மூலம் தலைவர்களுக்கு வேண்டிய குணங்களையும் ஒழுக்கத்தையும் நன்கு புலப்படுத்திவிட்டார்.

இறுதியாகத் தலைவர்களுக்கு இருக்க வேண்டிய மேலான ஒரு குணத்தைக் காட்டுகிறார் பாரதி. அதாவது தானே தலைவன் என்றெண்ணி இறுமாந்து தலை தடுமாறிப் போகப்படாது. தலைவர் தலைவனாக ஆண்டவன் ஒருவன் என்றுமுள்ளான் என்பதை மறக்காமல் நடக்க வேண்டும் என்றெல்லாம் எச்சரிக்கிறார்-வதி காட்டுகிறார் பாரதி.

ஒரு தலைவன் என்றும் எப்பொழுதும் கடவுளை மறவா உள்ளத்தவனாயிருக்க வேண்டும் என்பதை எத்த னையோ இடங்களில் சுட்டிக் கொண்டே போகிறார் பாரதி. மாஜினியின் உறுதிமொழியை "பேரருள் கடவுள் திருவடி ஆணை” என்றே பாரதி தொடங்குகிறார். "ஈசன் இங்கு எனக்கும் என்னுடன் பிறந்தோர் யாவர்க்கும் இயற்கையின் அளித்த தேசம்" என்று நினைவூட்டுகிறார். உறுதி தவறினால் "ஈசன் என்னை நாசமே புரிக' என்று முடிவு கட்டுகிறார்.

பரிபூரண சுதந்திரப் பிரியரான பாரதி அடிமை நிலையை எவ்வளவு வெறுத்தார் என்பதை நாம் நன்கறிவோம். அதனால்தான் "பூமிதனில் எவர்க்கும் அடிமை செய்யோம்" என்று வீறுகொண்டெழுகிறார்: ஆனால் அப்படிச் சொன்ன வாயை மூடாமலே தொடர்ந்து "பரிபூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம்” என்று பூரிப்புடன் முடிக்கிறார். அந்நியர்க்கடிமை செய்வது தாழ்வை யளிக்கும் என்றால் ஆண்டவனுக்கு அடிமை செய்வது வாழ்வை அருளும் என்று எவ்வளவு அருமையாகக் குறிப்பிடு கிறார் பார்த்தீர்களா? இங்ங்னம் தலைவனுக்கு வேண்டிய பிற குணங்களுக்கெல்லாம் மணிமுடியாகக் கடவுட்பற்றைக் கூறி நமக்கெல்லாம் நல்ல வழி காட்டுகிறார் வையத் தலைவர் பாரதி.