குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6/பாரதி அமைத்த பாலம்

விக்கிமூலம் இலிருந்து



14
பாரதி அமைத்த பாலம்


பழமையிலுள்ள உயிர்ச் சத்தான கருத்துகளைவாழ்க்கைக்கு உறுதி பயக்கும் கருத்துகளை-நலன் விளைவிக்கும் கருத்துகளை பாரதி மறுக்கவில்லை-ஏற்றுக் கொள்ளத் தயங்கவில்லை. தந்தை தோண்டிய கிணறு நல்ல கிணறாக இருந்தால் புதிய கிணறு தேவையில்லை என்பது பாரதியாரின் கருத்து.

மனிதன் நாளுக்குநாள் பண்பாட்டால்-நாகரிகத்தால் வளர்கிறான்-வளரவேண்டும். அதுதான் நியதி முறை. வளரவேண்டிய மனிதன் உழைக்கவில்லையானால், சிந்திக்க வில்லையானால், அவனுடைய உடலும் வளராது-உள்ளமும் வளராது. நீண்ட நெடுநாள்களுக்குப் புகழோடு வாழவும் முடியாது. மனிதன் வளர்கிறான் என்றால் அவன் சிந்திக்கிறான் என்று பொருள்.

தாயைவிடப் பிள்ளை சிறந்ததாக இருப்பது தாய்க்குப் பெருமை-தந்தையின் சிந்தனையைவிட மகனின் சிந்தனை சிறந்ததாக இருப்பது தந்தைக்குப் பெருமை. இந்த வளர்ச்சியில் தவறேதுமில்லை. இதைத்தான்,

"தம்மின்தம் மக்கள் அறிவுடைமை-மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது”

என்றார் வள்ளுவப் பெருந்தகை வள்ளுவரும், கம்பரும் இளங்கோவும் இலக்கிய உலகில் பாரதிக்குத் தந்தையராக விளங்குகின்றனர். எனினும் அவர்களைக் காட்டிலும் சில இடங்களில் பாரதி மேலோங்கி நின்றார் என்பதை நாம் ஏற்கத் தயங்கக்கூடாது. ஆங்கில இலக்கியமேதை ஜார்ஜ் பெர்னாட்ஷா உலக நாடகப் பேராசிரியரான ஷேக்ஸ்பியரையும்விடத் தாம் வளர்ந்திருப்பதாக ஒரு சமயம் தம்மைப் புகழ்ந்து எழுதியிருந்தார். இதையொட்டி அவருக்கு எதிர்ப்புத் தோன்றியது. அதற்குப் பெர்னாட்ஷா, ஷேக்ஸ்பியர் தரை மட்டத்தில் நின்று கொண்டார்-நான் அவர் தோள்மீது ஏறி நின்று கொண்டு தொடுகிறேன் என்று அழகாக- சுருக்கமாக ஆனால் தெளிவாகப் பதில் கூறினார். முதல் சால் உழும் போது ஏற்படுகின்ற புழுதியைவிட இரண்டாவது சால்உழும்போதுதானே அதிகப் புழுதி ஏற்படுகிறது?

பாரதி, பண்டை கருத்துவழி நின்றே புதுமையைக் கண்டார். பழமைக் காலத்திற்கேற்ப-கருத்து வளர்ச்சிக்கேற்பமாறி வளர்ந்துதான் புதுமையாகிறது. ஒன்று பண்டைக் காலத்தில் தோன்றியது என்பதாலேயே அது பழமையாகிவிடாது. இன்று முளைத்தது என்பதாலேயே ஒன்று புதுமையாகிவிடாது. பழமைக்கும் புதுமைக்கும் காலம் அளவுகோல் அன்று. ஒரு கருத்து காலத்தால் மிக மூத்ததாக, பழமையானதாக இருந்தாலும் இன்றைய வாழ்க்கைக்கு உதவுவதாக-ஏற்புடையதாக இருக்குமானால் அதைப் புதுமையானதாகவே எண்ணிப் போற்ற வேண்டும்; ஒரு கருத்து நேற்று முளைத்ததாக இருந்தாலும், இன்றே தோன்றியதாக இருந்தாலும் வாழ்வியலுக்கு ஒத்ததாக-உறுதி பயப்பதாக-நலன் விளைவிப்பதாக இல்லையானால் அதைப் பழையது என்று கருதி ஒதுக்கித் தள்ளத்தான் வேண்டும்.

மேலை நாட்டினர் நம்மைக் காட்டிலும் பல் துறையிலும் முன்னேறியிருக்கிறார்கள்-வளர்ந்திருக்கிறார்கள் -போற்றும் புதுமை பல கண்டிருக்கிறார்கள். ஆம். அவர்கள் புதுமையைப் போற்றுகிறார்கள். எனினும் பழமையைத் தூற்றிக் கொண்டே காலங்கழிக்கவில்லை. புதுமை கண்டு பிடிக்க முயல்கிறார்கள்.புதுமை வளர ஆக்கங் கொடுக்கிறார்கள்-புதுமை புதுமையெனப் புதுமை வேட்கை கொண்டு முன்னேறுகிறார்கள். இங்கோ, புதுமையை ஏற்பவர்கள், புதுமை வேட்கைக் கொண்டவர்கள் புதுமையைப் படைப்பதில் ஆர்வமும் அக்கறையும் காட்டுவதில்லை. பழமையை இழித்தும் பழித்தும் பேசிக் கொண்டே காலங் கடத்துகிறார்கள். பாரதியார் பழமையைப் போற்றினார். பழமையில் நின்று கொண்டு புதுமையைப் படைத்தார். இன்னும் சொல்லப்போனால், பாரதி பழமைக்கும் புதுமைக்கும் ஒர் இணைப்புப் பாலத்தை உருவாக்கினார் என்றே கூறலாம். சாளரத்தின் வழியாகப் புதிய காற்று வந்தால் அதனால் தீமை விளைவதில்லை. சமுதாயத்தில் சுயநலத்தின் காரணமாக-தங்கள் சுகபோக வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படும் என்ற அச்சத்தால் சிலருக்கு இந்தப் புதிய காற்று பிடிப்பதில்லை. அது அவர்கள் குற்றமேயொழிய காற்றின் குற்றமன்று. தேவையற்ற பழையன கழிதலும், பயன் விளைவிக்கும் புதியன புகுதலும் இயல்புதான். இதனையே,


'பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னானே'

என்று நன்னூல் நூற்பா ஒன்று பேசகிறது.

பொதுவாகப் பழைமையை விட்டுவிட்ட புதுமையும் வாழாது. புதுமையைத் தன்னுள் ஏற்றுக் கொள்ளாத பழமையும் வாழாது. அன்னச் சத்திரம் ஆயிரம் கட்டல்; ஆலயம் பதினாயிரம் நாட்டல், முதலியவற்றைவிட ஏழை ஒருவனுக்கு எழுத்தறிவித்தல் சிறந்தது; என்றார் பாரதி. இதனால் 'பாரதி கோயில் வேண்டா என்று சொல்லி விட்டார் என்று கூறிவிட முடியுமா? கோயில் இருந்தது. காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கும் பக்தர்கள் இல்லை யானால் கோயிலால் என்ன பயன்? கோயில் வேண்டும். தொழுது தூமலர் தூவி அழுது அரறும் அடியவர்களும் வேண்டும்.

இங்கு உழைக்காமல்-பரம்பரைச் சொத்தைக் கொண்டு உல்லாசமாக வாழ்பவனுக்குத்தான் சமுதாயத்தில் பாராட்டும் மதிப்பும் இருந்தது. இந்த இழி நிலையை ஒழிக்க வேண்டும் என்று பாரதி விரும்பினார். எனவே,

'உழவுக்கும் தொழிலுக்கும்
வந்தனை செய்வோம்-வீணில்
உண்டுகளித் திருப்போரை
நிந்தனை செய்வோம்’

என்று பாடினார். உழைத்துச் சொத்து சேர்ப்பவனையே பாரதி பாராட்டுகிறார். உழைக்காமல் உண்டு, உறங்கி உல்லாச வாழ்வு வாழ்கிறவர்களை நிந்தனை செய்வோம் என்று பேசினார்.

கங்கையையும் காவிரியையும் இணைத்துப் பாடினார் பாரதியார். இதன் மூலம் வணிகத் தொடர்பு பற்றிப் பேசுகிறார். காசி நகரப் புலவர் பேசும் உரையைக் காஞ்சியிற் கேட்பதற்கோர் கருவி செய்வோம் என்பதன் மூலம் வளர்ந்து வரும் விஞ்ஞானப் புதுமையைக் கையேந்தி வரவேற்றார். சாதி மத இன வேறுபாடுகளை யெல்லாம் தகர்த்தெறிந்து, "பாரதநாடு, பாருக்கெல்லாம் திலகம்; நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்" என்று பாடியதின் மூலம் தேசிய ஒருமைப்பாட்டுணர்வை வலியுறுத்தினார். பழம் நாகரி கத்தை-பண்பாட்டை அடித்தளமாக வைத்துக் கொண்டு, போற்றுதற்கரிய புதுமைகளைப் பாடினார்-எனவே புதுமைக் கவிஞர் பாரதி, பழமையோடு புதுமையை இணைத்துஒட்டிப் பாடினார் என்று கூறுவதே சரியானது.