உள்ளடக்கத்துக்குச் செல்

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6/பாரதி வலியுறுத்துவது எது?

விக்கிமூலம் இலிருந்து



13
பாரதி வலியுறுத்துவது எது?

ஒரு நாட்டு மக்கள் எத்தகைய நூல்களைப் போற்றுகிறார்களோ அதைக் கொண்டே அந்த நாட்டின் எதிர் காலம் அமையும். ஒரு நாட்டின் நிலை மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் கருத்துப் புரட்சி இன்றியமையாதது. கருத்துப் புரட்சி மட்டும் இல்லையானால், அந்த நாட்டில் ஒடுகின்ற ஆற்றாலும், உயர்ந்தெழுந்து நிற்கின்ற மலைகளாலும், அங்குள்ள இயற்கை வனங்களாலும், அணக்கட்டுகளாலும், பிறவற்றாலும் உரிய பயன் கிடைக்காது.

நமது தமிழ்மொழி இலக்கிய வளமும், நாகரிகமும் செறிந்து விளங்கும் மொழி. கருத்தாலும் காலத்தாலும் மிகமிக மூத்த மொழி. 2 ஆயிரம் ஆண்டுகட்கு முன்னமேயே திருவள்ளுவர் பெரும் புரட்சி செய்ய நினைத்தார். அதற்காகவே திருக்குறளை எழுதினார்.

இந்த நாடு அந்நியர்க்கு அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில் பாரதி தோன்றினார். பாரதி அடிமையாகப் பிறந்தார். அடிமையாக வாழ்ந்தார். அடிமையாகத்தான் இறந்தார். ஆனால் அவர் விடுதலையைச் சிந்தித்தார் விடுதலைக்காகப் பாடினார்-விடுதலையைப் பாடினார்.

உணவுக்காக நாம் உணவு சமைப்பதில்லை. உண்பதற்காக-உண்டு உயிர் வாழ்வதற்காகவே உணவு சமைக்கிறோம். அதுபோல பாரதியார், கவிதைக்காக-வெறும் கவிதையுணர்வுக்காகக் கவிதை பாடவில்லை. இந்த நாட்டு மக்ளள் விடுதலை பெற வேண்டும் என்று விரும்பினார். அதற்காகவே-அந்த இலட்சியத்துடனேயே கவிதை பாடினார்.

கேள்வி கேட்டால் பாவம்-கேள்வி கேட்டது குற்றம் என்ற குறுகிய எல்லைக்குள் நாம் வாழ்ந்து விட்டோம்வளர்ந்து விட்டோம். எனவே இந்த நாடு கருத்து வழிபாழ்பட்டது. இதைத்தான் பாரதி, ‘பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசம்தன்னை என்று பேசுகின்றார்.

பாரதி ஒரு முழு நிறைவான கவிஞர். அவர் சமுதாயத்தினை பல்வேறு கோணங்களிலும் பார்த்தார். சமுதாயத்தினை முழுமையாகப் பார்த்தார். பார்த்து விமரிசனம் செய்தார். அவரிடத்து எஞ்சியதோ மிஞ்சியதோ இல்லை. அவர் சமுதாயத்தைப் பற்றி எப்படிப் பேசினார் என்று பாராமல், அவர் சொன்னது நாட்டுக்கு ஏற்றதா என்பதைப் பற்றி எண்ணிப் பார்க்க வேண்டும். கவனம் செலுத்த வேண்டும்.

வீடு என்கிறோம். வெறும் சுவரோ, சன்னலோ, அடித்தளமோ மட்டும் வீடாகிவிடாதே. அடித்தளம், சுவர், சன்னல் அத்தனையும் சேர்ந்துதானே வீடு. அது போல, மனித சமுதாயத்தின் கோடானுகோடி உணர்ச்சி வடிவங்களைக் கவிஞன் கவிதைப் பார்க்க வேண்டும். அப்படிப் பாடுபவன்தான் உண்மையான கவிஞன்.

பாரதியார் கைகளை-கால்களை இயந்திர சாதனங்களை நம்பினார். எனினும் இவற்றிற்கெல்லாம் மேலாக விளங்கும் ஓர் ஈடிணையற்ற சக்தியையும் உண்டு என்கிறார். இறைமைதான் மனிதனின் பரிபூரணத்துவ அமைப்பு. நேராக மானிடர் பிறரைக் கொல்ல நினையாமல் வாழ வேண்டும்: என்றும் பேசுகிறார். இங்கு சற்று நுட்பமாகக் கவனிக்க வேண்டும். பிறரைக் கொல்லாமல்கூட அல்ல; கொல்ல நினையாமல் என்று கூறுகின்றார். உள்ளத்தால் உள்ளலும் தீது என்ற வள்ளுவர் வாக்கை பாரதியார் இங்கு நமக்கு நினைவுறுத்தி உள்ளத்தாலும் ஒழுக்கமுடையவனாக வாழு என்று வலியுறுத்துகிறார். இதுதான் இறைமை.

இன்றைய சமுதாயம் நைந்து மடிந்தாலும் இனிவரும் தலைமுறையாவது நைந்து மடியாமல் இன்ப வாழ்வு பெறுதல் வேண்டும்; மலர்ச்சி பெற வேண்டும் என்று பாரதி விரும்பினார். இதுதான் மறுமலர்ச்சி.

தேசியம் என்ற சொல்லே ஆழமான-அகலமான பொருள் பொதிந்த ஒரு சொல் ஒரூர்-ஒரு நாடு என்ற நிலையின்றி தானுண்டு, தன் வீடுண்டு என்றிருந்த நிலையை மாற்றி, நீ பெரிதன்று-உமது விடும் பெரிதன்று இந்த ஊரும் நாடுந்தான் உயர்ந்தன-பெரியன என்று உணர்த்தினார். அதுதான் தேசியம்.

பாரதியாருக்கு முன்னே நமக்கு ஜில்லா உணர்ச்சி, சாதி உணர்ச்சி இப்படித்தானிருந்தது. பாரதி இந்நிலையை மாற்றி, இந்தியத் தேசியம் கூட அல்ல-உலக தேசியத்தையே பாடியிருக்கிறார். மனிதன் வாழும் உரிமை பெற்றவன்; ஒருவரைச் சரண்டாமல்-அட்டை போல உறிஞ்சாமல் அவன் மனிதனாகவே வாழ வேண்டும் என்றார் அவர். தேசியம் என்பதிலே, மறுமலர்ச்சியும், இறைமைத் தன்மையும் விரவிக்கலந்து கிடக்கின்றன.

நமது நாட்டில் இன்று இறைமைத் தன்மையின் பேரால் ஆடுகின்ற பேயாட்டம் மிகமிகக் கொடியதாக இருக்கின்றது. இங்கு இறைமைத் தோற்றமும் காட்சியும் இருக்கிறதே யொழிய இறையின் செயல் வாழ்வில் ஊடாடி வளரவில்லை.

பழனிமலையிலே இறைவனைக் கோவணாண்டியாகத் துறவுக் கோலத்தில் காண்கின்றோம். இங்கு வருகி றோம். வாழ்த்துகிறோமே, வணங்குகிறோமே, அந்தந்த துறவுக் கோலத்திலிருந்து நாம் பெற வேண்டிய எளிய வாழ்க்கையும், தன்னலமின்மையும் நமது வாழ்க்கையில் கலந்திருக்கின்றனவா? இறையின் செயல் தோற்றம் நமது வாழ்வில் கலந்திருக்கிறது என்றால், அந்த எளிய தோற்றமும், தன்னலமில்லாப் பண்பும் அல்லவா நமது வாழ்வில் கலந்திருக்க வேண்டும்?

இறைவன் கூலியாளாக வந்து பிட்டுக்கு மண் சுமந்தான் என்றால் அதைப் பிட்டுத் திருநாளாக்கி நெய் பிட்டாக்கியல்லவா மகிழ்ச்சியடைகின்றோம். மண் சுமந்ததை மறந்து விடுகிறோமே. இறைவனின் செயல் தோற்றம் நம் வாழ்க்கையில் கலந்திருக்கிற தென்றால், இறைவனே வந்து மண் சுமக்கிறான் கொஞ்சம் பிட்டைக் கூலியாகப் பெற்றுக் கொண்டு-என்ற வரலாற்றை வைத்துக்கொண்டு, உழைப்பில் இழிவில்லை-எல்லோரும் உழைக்க வேண்டும். பதிலாகத் தேவையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற பண்பியல் பல்லவா வளர்ந்திருக்கவேண்டும். வளர்ந்திருக்கிறதா?

பாரதியார் தேசிய கீதம் பாடினார். மறுமலர்ச்சி பாடினார்-இறைமையைப் பாடினார். நம்மைப் பொறுத்த வரை இம்மூன்றுக்கும் அப்படியொன்றும் அதிகப்படியான வேறுபாடு இருப்பதாக நமக்குத் தெரியவில்லை. தேசீயம்நிலம்-மறுமலர்ச்சி-செயற்பாடு-பயன்-இறைமைத்தன்மை. எனவே எல்லாம் ஒரே வட்டம்தான். இதை முறையாகச் சொன்னவர் பாரதியார்.