குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7/திருமுறையின் ஆற்றல்

விக்கிமூலம் இலிருந்து
35


திருமுறையின் ஆற்றல்

தமிழ் இலக்கிய மரபுகள் மரணத்தை வென்ற மரபுகளாகும். “கூற்றம் குதித்தலும் கைகூடும்” என்று திருக்குறள் கூறுகிறது. பக்குடுக்கை நன்கணியார் என்ற சங்ககாலப் புலவர்,

ஓரில் நெய்தல் கறங்க ஓரில்
ஈர்ந்தண் முழுவின் பாணி ததும்பப்
புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
பைத லுண்கண் பணிவார் புறைப்பப்
படைத்தோன் மன்றஅப் பண்பி லாளன்
இன்னா தம்மஇவ் வுலகம்
இனிய காண்க.இதன் இயல்புணர்ந் தோரே!

என்று பாடினார். இதனால் துன்பம் இயற்கை; மரணம் இயற்கை என்ற கருத்துக்களில் நம்பிக்கைகளில் தமிழருக்கு நம்பிக்கை இல்லை. இதுமட்டுமல்ல. மனிதனுக்கு வாய்க்கும் துன்பத்திற்குக் கடவுள் காரணம் அல்ல என்ற முற்போக்கான சிந்தனை தமிழருக்கு இருந்தது. இந்த உலக இயற்கை துன்பம் சூழ்ந்ததாக இருக்கலாம். ஆனாலும் துன்ப உலகத்தை இனிய உலகமாக மாற்றிப் புதியதோர் உலகம் காண்பது மானுடத்தின் கடமை என்பதே தமிழரின் கருத்து. ஆதலால், மரணம் இயற்கை நியதி என்ற நம்பிக்கை எல்லையைக் கடந்து சென்று மரணமிலாப் பெருவாழ்வு பெற்றிடச் சிந்தித்துள்ளனர்; எண்ணியுள்ளனர்.

ஆம்! தமிழர்களின் வழிபடு கடவுள் சிவம்! சிவன் பிறப்பு - இறப்பு அறியாத பெருந்தலைவன். விண்ணோர்கள் அமுதுண்டும் சாவ, நஞ்சுண்டும் சாவா மூவாத் தலைவன் சிவன். ஆதலால், சிவனை வழிபாடு செய்பவர்கள் மரணமிலாப் பெருவாழ்வு எய்தலாம். எய்தமுடியும். ஆனால், இதுவரையில் நடைபெறவில்லை! ஏன்? மரணத்திலிருந்து பலரை மீட்டவர்கள் கூட, இன்று நம்மிடையில் இல்லை. இவர்கள் மரணம் அடைந்தார்களா? இல்லை, இல்லை! ஒருபொழுதும் மரணம் அடைந்திருக்க இயலாது. பாம்பு சட்டையை உரித்துக் கொண்டாற்போல இந்த அருளாளர்கள் சிவானந்தப் பெருவாழ்வு நண்ணினர். சிவானந்தப் பெருவாழ்வில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதுவே மரபுவழிச் சிந்தனை!

சிவனை நினைந்து நினைந்து வழிபாடு செய்த அடியார்களும் நாயன்மார்களும் சிவனைப் போலவே ஐந்தொழில் செய்யும் ஆற்றல் பெற்றனர்.

நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப,

என்ற நூற்பாவுக் கிணங்க அமைந்தவை நாயன்மார்களின் திருமுறைப்பாடல்கள். இரும்பு சுடாது. நெருப்பொடு சேர்ந்த இரும்பு சுடும். நாயன்மார்கள் சிவன் திருவருள் உணர்த்தத் திருவருள் தோய்ந்து வந்தவை அத்திருப்பாடல்கள். அதனாலன்றோ “என்னுரை தன்னுரையாக” என்று சிவபெருமான் ஏற்றுக் கொண்டாதாகத் திருஞானசம்பந்தர் அருளிச் செய்கின்றார். தளரா உறுதியுடன் 'ஆணை நமதே' என்றும் அருளிச் செய்திருப்பதையும் உணர்க. ஆனால் அப்படிப்  பட்ட ஆற்றல் அவசியம் ஏற்பட்டபொழுது மற்றவர்கள் நலனுக்காகவே பயன்படுத்தப் பெற்றது. எந்த ஒரு சூழ்நிலையிலும் இந்த ஆற்றல் தற்சார்புக்காகப் பயன்படுத்தப் பெற்றதில்லை, சுயநலம் கடுகளவு சேர்ந்தாலும் பொது நலம் கெடும்; ஆன்ம நலம் கெடும். நாயன்மார்கள் வரலாற்றைக் கூர்ந்து நோக்கின் அவர்கள் தனிப்பட்ட முறையில் துன்புற்றுன்னர். ஆனால் மற்றவர்களுக்காக அற்புதங்கள் செய்துள்ளனர்.

சென்னை மயிலாப்பூரில் வாழ்ந்த சிவநேசச் செட்டியார் மகள் பூம்பாவை என்பவள் பாம்பு கடித்து இறந்து போனாள். பெற்றோருக்குப் பூம்பாவையின் மீது அளவற்ற பரிவு. பூம்பாவையின் பிரிவு தாங்க இயலாமல் துன்புற்றனர். பிரிவுத் துயரை ஆற்றிக்கொள்ளப் பூம்பாவை உடம்பை எரித்த சாம்பலை ஒரு பானையில் எடுத்து வைத்தனர். திருஞானசம்பந்தர் மயிலை கற்பகாம்பிகை உடனுறை கபாலீசுவரரை வழிபட வருகிறார். அதுபோது சிவநேசச் செட்டியார் பூம்பாவையின் சாம்பல் குடத்துடன் சென்று திருஞானசம்பந்தர் திருமுன் வீழ்ந்து வணங்கி, பூம்பாவையை எழுப்பித் தரும்படி வேண்டினர். சிவநேசச் செட்டியார் துன்பத்தைக் கண்டு திருஞானசம்பந்தர் கசிந்துருகி, “மட்டிட்ட” என்று பதிகம் எடுத்துப் பாடினார். பூம்பாவை உருப்பெற்று எழுந்தாள். நிறைமொழி மாந்தராகிய திருஞானசம்பந்தரின் மறை வாக்கால் உருவமே இல்லாத நிலையில் சாம்பல் உருவம் பெற்றது. -

அப்பரடிகள் திங்களுர் செல்கிறார். திங்களுர் அந்தணர் அப்பூதியடிகள் தமது இல்லத்தில் அப்பரடிகளுக்கு திருவமுது படைக்க விரும்புகிறார். அப்பரடிகளுக்குத் திருவமுது படைக்க வாழை இலை நறுக்கப் போன அப்பூதியடிகளின் மகன் மூத்ததிருநாவுக்கரசு நச்சரவம் தீண்டி இறந்து போகின்றான். அப்பரடிகள் திருவமுதருந்தத் தடை வரக்கூடாது என்று எண்ணிய பெற்றோர், மூத்த திருநாவுக்கரசின் சடலத்தை மூடி மறைத்துவிட்டு அப்பரடிகளுக்குத் திருவமுது படைக்கின்றார். அப்பரடிகள் மூத்த திருநாவுக்கரசை உடனிருந்து உண்ண அழைக்கின்றார். அப்பூதியடிகள் மூத்த திருநாவுக்கரசின் மரணத்தை மறைக்க “அவன் இப்போது இங்கு உதவான்” என்றார். அப்பரடிகள் விட்டபாடில்லை. அப்பூதியடிகள் உண்மையைக் கூறும் நிலை வந்தது. அப்பரடிகள் மிக வருந்தி, “ஒன்று கொலாம்” என்று பதிகம் எடுத்துப்பாடி மூத்த திருநாவுக்கரசை எழுப்பினார். மூத்த திருநாவுக்கரசு எழுந்தான். இங்குச் செத்தவரை உடலிருந்த நிலையில் மீட்டது தமிழ் மறை. செத்தாரை எழுப்பிய அற்புதம் இது. இங்கு ஒருவரின் உடல் இருந்தது.

நம்பியாரூரர் அவிநாசிக்குச் செல்கிறார். அவிநாசியில் ஒரு வீட்டில் அழுகுரல் கேட்கிறது. இன்னொரு வீட்டில் மகிழ்ச்சி நிரம்பி வழிகிறது. தமிழர் மரபு இதனை ஏற்றுக் கொள்வதில்லை. சங்ககாலக் கவிஞர் பக்குடுக்கை நன்கணியார்,

ஒரில் நெய்தல் கறங்க ஒரில்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்ப,

என்று பாடினார் அல்லவா? அவருக்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு நம்பியாரூரர் அவிநாசிக்குச் சென்ற பொழுதும் அதே நிலை! எனவே, “இரண்டும் உடன் நிகழ்வது ஏன்?" என்று கேட்டார், நம்பியாரூரர். இரண்டு வீட்டிலும் ஒரே நாளில் ஆண் மகவு பிறந்திருக்கிறார்கள். ஒருவீட்டாரின் மகன் குளிக்கச் சென்ற இடத்தில் முதலையால் விழுங்கப்பெற்றான். அதனால் அழுகை; துன்பம், துயரம். பிறிதொரு வீட்டில் மகனுக்குப் பிறந்தநாள் விழா. இந்த வேறுபாட்டினை நம்பியாரூரரால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. ஆனால் குளத்திலோ தண்ணீர் இல்லை; முதலையும் இல்லை; பையனும் இல்லை. அவனது

உடலும்கூட முதலையால் ஜீரணிக்கப் பெற்றுவிட்டது. இந்த நிலையில் நம்பியாரூரர் “தலைக்குத் தலைமாலை” என்று பதிகம் எடுத்துப் பாடுகின்றார். மறைமொழி அல்லவா? திருவருளாற்றல் செறியப் பெற்ற சொற்கள் அல்லவா? அதனால் குளத்தில் தண்ணிர் நிரம்புகிறது! முதலையும் வருகிறது! அந்த முதலை, தான் உண்ட பாலனை உமிழ்கிறது! பெற்றோருக்கு எல்லையற்ற மகிழ்ச்சி!

இங்ஙனம் திருமுறை சாம்பலுக்குப் பெண்ணுருக் கொடுத்தும், உயர் பிரிந்த உடலுக்கு உயிர் கொடுத்தும் அடுத்து உடலும் இல்லாத நிலையில் உடலை வரவழைத்தும் கொடுத்தது. இது திருநெறிய தமிழுக்குரிய ஆற்றல். இன்று தமிழ் மக்கள் திருநெறிய தமிழை ஒதினால் வீறும் பெறலாம்; வளம் பெறலாம்; வாழ்நாள் பெறலாம்.