உள்ளடக்கத்துக்குச் செல்

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7/முரண்பாடா?

விக்கிமூலம் இலிருந்து
12
முரண்பாடா?

எந்தை ஈசன் சலமிலன். அவன் பெயர் சங்கரன். குறியொன்றுமில்லாத கூத்து ஆடுபவன். அவன் அம்மையோடு அப்பனாக இருந்து அருள் வழங்குகின்றான். அன்னை உமையினைப் பிரியாமல் உடம்பிடம் கொடுத்தவன். அதனால் அவனைப் “பெண்பால் உகந்த பித்தன்” என்றும் அறியாதார் கூறுவர். ஆனால், தமிழக மக்கள் மங்கை பாகனை, குவளைக் கண்ணிக் கூறனை வழிபடுதலையே பெருவழக்காகக் கொண்டு வந்துள்ளனர். சங்கத் தமிழிலக்கியமாகிய ஐங்குறுநூறு “நீலமேனி வாலிழைபாகத்து ஒருவன்” என்று பாராட்டும். திருவள்ளுவரும் ஆதியாகிய சக்தியைப் பங்கிலே உடையவன் என்ற பொருட் குறிப்பிலேயே ‘ஆதிபகவன்’ என்று பாடினார். இறைவன் அருளும் மூர்த்தியாக விளங்கி அருள் செய்த பொழுதெல்லாம் அம்மையப்பனாகவே காட்சியளித்ததாக நம்முடைய திருமுறை கூறும். நம்முடைய மாணிக்கவாசகரும் இந்த அம்மையப்பன் திருக்கோலத்தை,

தோலுந் துகிலுங் குழையுஞ் சுருள்தோடும்
பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியுஞ்



சூலமுந் தொக்க வளையு முடைத்தொன்மைக்
கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ,

என்று பாடிப் பரவுகின்றார்.

இங்ஙனம் பெண்ணோடு கூடிவாழும் பெருந்தலைவன் காமனை எரித்தான். காமன் உயிர்களுக்கு விருப்பத்தை விளைவிக்கும் தொழிலையுடையவன். சிறப்பாகப் பெண்ணியற் காதலைத் தோற்றுவிப்பவன். ஒருகால் உமையை எம்பெருமான் பிரிந்திருந்த பொழுது அந்தப் பிரிவை மாற்றி அவர்களைக் கூடச் செய்வதற்காகச் சிவபெருமானிடம் தன்னுடைய தொழிலாகிய காமத்தைத் தோற்றுவிக்க முயற்சி செய்தான். ஆனால் சிவபெருமான் காமத்தின் வழிப்படாது, காமனை விழித்து நோக்கி எரித்தான். இங்ஙனம், காமனை எரித்தவன் உமையொடும் கலந்து வாழ்கிறான் என்று திருமுறைகள் பேசும். இதனைத் திருஞானசம்பந்தர்,

காம னெரிப்பிழம் பாக நோக்கிக்
காம்பன தோளியொ டுங்கலந்து
பூமரு நான்முகன் போல்வரேத்தப்
புகலி நிலாவிய புண்ணியனே
ஈமவ னத்தெரி யாட்டுகந்த
வெம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
வீமரு தண்பொழில் சூழ்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே!

என்று பாடுகின்றார்.

காமனை எரித்தவன் உமையுடன் கலந்து வாழ்தல் முரணில்லையா? என்று கேட்கத் தோன்றும், முரணில்லை. ஒன்றைத் துய்த்தலோ அல்லது மகிழ்தலோ காமத்தின் வழிப்பட்டதாக இருக்குமானால் அது தீது. அத்தகைய துய்ப்புணர்வு எரியிடைப்பட்ட எண்ணெய்போல மேலும் மேலும் காமத்தை வளர்க்கும். அத்தகைய துய்ப்புணர்வு தூய்மையான இன்பத்தைத் தராது; அமைதியைத் தராது; அவலத்தையே தரும்; உயிரைச் செழுமைப்படுத்தாது; உருக்குலைக்கும். துய்ப்பிப்போரிடையேகூட இனிய உணர்வுடன் கூடிய இன்பக்கலப்பு இருக்காது. அங்கே சுயநலமே தாண்டவமாடும். அங்கே புணர்ச்சிக்கே இடம்; உணர்ச்சிக்கு இடமில்லை. இத்தகைய காமம் நரகத்தின் வாயில்.

எந்தை ஈசன், உமையொடு கலந்திருப்பதோ, காமத்தால் விளைந்ததன்று. தான் துய்க்க வேண்டும் என்ற விருப்பில் எழுந்தன்று. உலகுயிர்கள் போகம் துய்த்து மகிழ்ந்து வாழ அவன் அன்னை உமையுடன் கலந்து வாழ்கின்றான். இந்தக் கலத்தல் தண்ணளியின் பாற்பட்டது; இன்ப அன்பு வழிப்பட்டது. உலகு தழீஇய காதல். இங்குப் புணர்ச்சிக்கு இடமில்லை; உணர்ச்சிக்கு இடமுண்டு. இங்ஙனம் கலந்து வாழும் நெறி நாட்டிடையிலும் மலருமாயின் மண்ணகம், விண்ணகமாகும்.

இங்ஙனம், மங்கை பாகனாக விளங்கும் மூர்த்தியை முறையாக வழிபாடு செய்வோர் பொன்னினைப் பெறுவர்; பொருளினைப் பெறுவர்; போகத்தினைத் துய்ப்பர். அல்வழி அவாத் தணிந்து அருளியல் காட்சி தலைப்பட்டுத் திருவினைப் பெற்றுத் திருவருளில் திளைப்பர். இதுவே நம்முடைய நாயன்மார்கள் காட்டிய வாழ்க்கை நெறி.