குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8/காக்கை விரும்பும் கனி

விக்கிமூலம் இலிருந்து



27


காக்கை விரும்பும் கனி!


மானுட வாழ்க்கை குறைகளையுடையது. ஆயினும் குறைகளே உடையதுமன்று; குறைகளும் உண்டு; நிறைகளும் உண்டு. குறைவிலா நிறைவுடையது கடவுள் ஒன்றேயாம்! “குறைவிலா நிறைவு” என்று மாணிக்கவாசகர் பாராட்டுகிறார். “நன்றுடையான் தீயதிலான்” என்று திருஞானசம்பந்தர் பாராட்டுகின்றார். குறையின் விளைவு, தீமை; துன்பம்! நிறையின் விளைவு நன்று; இன்பம்! “இன்பம் காண் துன்பங்கள் இல்லாதான் காண்!” என்று அப்பரடிகள் பாராட்டுகின்றார்.

குறைகளும், நிறைகளும் கலந்ததே மனித வாழ்க்கை! ஆனாலும், குறைகள் இயல்பானவை என்றும், சரியானவை என்றும் நியாயப்படுதல் கூடாது. குறைகளினின்றும் விடுதலை பெறவே வாழ்க்கை; கல்வி; கேள்வி; அறிவு; சமயம்; இல்லற வாழ்க்கை; துறவற வாழ்க்கை ஆகிய அனைத்தும்!

அறிவறிந்த ஆள்வினை; பொருளீட்டம்; துய்த்தல் ஆகிய அனைத்தும் கூட, மனித உயிர் வாழ்க்கை குறைகளினின்றும் நீங்கி, நிறை பெறற்குரிய சாதனங்களே! ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் குறைகளும் உண்டு; நிறைகளும் உண்டு. குறைகளையும், நிறைகளையும் சீர்தூக்கி ஆராய்ந்து மிகுதி நோக்கிப் பாராட்ட வேண்டும்; போற்ற வேண்டும்; ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது திருவள்ளுவர் கருத்து.

“குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்”

(504)

என்பது திருக்குறள்.

குறைகளைத் திருத்தும் வழி, குறைகளைத் துாற்றுதல் அல்ல. ஒருவரிடமுள்ள குறைகளை எடுத்துத் தூற்றுவதைத் திருவள்ளுவர் “சிறுமை” யென்றே கண்டிக்கின்றார்.

“அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்”

(980)

என்றும், “வடுக்காண வற்றாகும் கீழ்” என்றும் திருவள்ளுவர் அருளிச் செய்துள்ளமை அறியத் தக்கன. அங்ஙனமாயின் குற்றங்களை எடுத்துக் காட்டித் திருத்தாமல் குற்றங்களுக்கும் உடந்தையாக இருக்கவேண்டும் என்பது கருத்தா? அப்படியன்று, குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தால் குறை நீக்கம் நிகழாதல்லவா? இழிவுபடுத்தும் நோக்கத்தோடு குற்றத்தை எடுத்துக் காட்டுதல் தவறு. பழிதூற்றும் எண்ணத்தோடு, குற்றத்தை எடுத்துக் கூறுதலும் தவறு.

மாறாக அவரிடமுள்ள குணங்களைப் பாராட்டி மனம் நிறைந்த உறவினைப் பெற்று அவ்வழி நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு தோழமை உணர்வில் வடுப்படாமல் பைய குற்றங்களினின்றும் தேற்றி, விலக்கி நிறைகளைப் பெறத் துணை செய்யவேண்டும்.

அறியாமை மிக்குடைய உயிர்களைத் திருத்தும் திருவருள் “பையத் தாழுருவி” என்பார் மாணிக்கவாசகர். திருஞான சம்பந்தர், மதுரையில் தமது திருமடத்தில் பகைவர் தீவைத்தபொழுது “பையவே சென்று பாண்டியர்க்காகவே” என்றார்.

உடலிற் புறப்பட்ட கட்டி குற்றமுடையதே! துன்பம் தருவதே! ஆனாலும், அதையும் மெல்லத் தடவிக் கொடுத்து அது பழுத்தற்குரிய உணர்வினை வழங்கிப் பழுத்த பிறகு வலியில்லாமலும், செங்குருதி சிந்தாமலும் அறுத்து அகற்றும் முறைதானே மருத்துவமுறை! ஈரும் பேனும் உள்ள தலையானாலும் எண்ணெய் தடவிச் சீவித்தானே அகற்ற வேண்டும்! ஆகக் குற்றங்களைத் திருத்தும்முறை இனிய முறையாக இருக்க வேண்டும்; அன்பு கலந்த முறையாக இருக்கவேண்டும். அப்பொழுதுதான் உயிர்கள் மகிழ்ந்து குற்றங்களினின்றும் எளிதில் விடுதலைபெறும். இதுவே இறைவன் உயிர்களை ஆட்கொள்ளும் முறையும் கூட!

உயிர்கள் ஆணவத் தொடர்பால் அறியாமை வழிப்பட்டு வேட்கை கொள்கின்றன. இறைவன் “இது தீது!” “அது தீது” என்று எடுத்த எடுப்பில் உபதேசம் செய்வதில்லை. உயிர்களின் வேட்கையை அறிந்துகொண்டு பொன்னும், மெய்ப் பொருளும் தந்து, போகமும், திருவும் வழங்கி, உயிர்கள் செல்லுழித் தான் சென்று, புற்ம் புறம் திரிந்து, துய்ப்பில் வேட்கை தணிந்துழி அறிவினைத் தந்தருளி ஆண்டருளுகின்றான். சுந்தரர் வாழ்க்கை இதற்கோர் எடுத்துக்காட்டு!

இத்தகைய குற்றங்களை அன்பின் வழியில் அகற்ற முயல்வோர் சான்றோர். இத்தகு சான்றோர் இன்று நாட்டில் அருகிவிட்டனர். ஏன்? பிறர் குற்றத்தைக் தூற்றுவதே தொழிலென வளர்ந்து வருகிறது. துரதிருஷ்டவசமாகச் சீர்திருத்தம் என்று அதற்குப் பெயர் சூட்டியுள்ளனர். இது நெறியுமன்று; முறையுமன்று. ஒருவர் குற்றத்தை நீக்குபவர்களுக்குத் தாயிற் சிறந்த தயாவும், மருத்துவரிற் சிறந்த அறிவும் தேவை.

ஆனால், இன்று நாட்டிடையில் குற்றமே கானும் இயல்பு பெருகி வளர்கிறது. உண்டோ? இல்லையோ? எங்கும் ஊழலைப் பற்றிய பேச்சு! இவை எடுத்துக் காட்டப்படுவதில்லை. முறையீட்டு மன்றங்களுக்கும் எடுத்துச் செல்வதில்லை. இங்ஙனம் இங்கு மங்குமாகவுள்ள குறைகளைத் தூற்றுவதையே தொழிலாகக் கொண்ட தாள்களும், மேடைகளும் வளர்ந்துவிட்டன.

ஒரு சார்புடையவர்கள் - பகையுணர்ச்சி யுடையவர்கள் குற்றங்களைப் பார்க்கிறார்கள். குணங்களை எடுத்துக் கொள்ளத் தவறுகிறார்கள்; இல்லை, மறுக்கிறார்கள்! ஆதலால், சிலர் இகழ்வதை ஒரு பொருளாகக் கருதத் தொடங்கினால் வாழவே முடியாது. ஆதலால், நன்னெறி ஆசிரியர் ஒருசிலர் இகழ்வதைப் பொருளெனக் கொள்ளற்க என்கிறார்.

காக்கை வேப்பம் பழத்தையே விரும்புகிறது. அதனால் வேப்பம்பழம் இனிமை யுடையதாகிவிடாது. காக்கை விரும்பாத மாம்பழம் சுவையில்லாததாகவும் ஆகிவிடாது. காக்கைகளைப் போல கருமை மனம் உடையோர் நின் குணங்களைப் பார்க்க மறுப்பர். கவலற்க!

அங்ஙனம் குறையே நோக்கி இகழ்பவர் நிறை நோக்கிப் பாராட்ட மறுப்பவர்தம் உளங்கொள நீ வாழ்தல் அரிது. காரணம் அவர்களுக்கு இகழுதல் ஒரு தொழில்; பழக்கம்! கவலற்க! நம்மை நாமே குறைகளும் நிறைகளும் நோக்கி நினைந்திடுவோம்! நாளும் குறைகளிலிருந்து விடுதலை பெற முயலுவோம்! இகழுக்கு அஞ்சியல்ல! நெறிமுறை வழிப்பட்ட வாழ்க்கையில் நிறைநலம் பெற வேண்டுமென்பதற்காக! என்கிறார்.

“உண்டு குணமிங்கு ஒருவர்க்கு எனினும்கீழ்
கொண்டு புகல்வது அவர் குற்றமே-வண்டு மலர்ச்
சேக்கை விரும்பும் செழும் பொழில்வாய் வேம்பன்றோ
காக்கை விரும்பும் கனி”