உள்ளடக்கத்துக்குச் செல்

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8/திருவெம்பாவை - திருப்பள்ளியெழுச்சி விளக்கம்

விக்கிமூலம் இலிருந்து

17


திருவெம்பாவை – திருப்பள்ளி யெழுச்சி விளக்கம்


திருவெம்பாவை

சக்தியை வியந்தது

திருச்சிற்றம்பலம்

ஆதியு மந்தமு மில்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாட்டடங்கண்
மாதே! வளருதியோ? வன்செவியோ நின்செவிதான்?
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதா ரமளியின்மே னின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனு மாகாள் கிடந்தா ளென்னே! யென்னே!
ஈதேயெந் தோழி பரிசேலோ ரெம்பாவாய்.

1

அறிவால் சிவமேயாய மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவாசகம் தேன்; மன்னுயிர்க்கு மருந்து, திருவாசகம் ஓதுதல் தீவினைக்கு மருந்து. சிவஞானத்தை நல்கும் திருவமுது. திருவாசகத்தில் திருவெம்பாவைப் பாடல்கள் திருவருள் நிலையை விளக்குவன; திருவருளை வழங்குவன. திருவெம்பாவைப் பாடல்கள் மகளிர் பாடுகின்றனவாக அமைந்துள்ளன. மார்கழித் திருவாதிரைத் திருநாள், சிவபெருமான் திருநாள்! மார்கழித் திருவாதிரைத் திருநாளன்று நிறைவுறும் வகையில் சிவபெருமானுக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்வர்; மகளிர் நீர் நிலைகளுக்குச் சென்று நீராடிப் பராசக்தியைப் பாவைத் திருவுருவில் வழிபடுவர். பாவை வழிபாட்டினால் பார் செழிக்கும்; மங்கலமாகிய மனைமாட்சி வளரும்; திருவருளின்பமும் கிடைக்கும். அறியாமையில், இருள் ஆணவத்தில் கிடக்கும் உயிர்களைப் பராசக்தியின் அருள் எடுத்துத் திருவருளைப் பதித்து இன்ப அன்பினை வழங்குவதைப் பாவை விளக்குகிறது.

பாவைப் பாடல்கள் அம்மையை வழிபடும் பாடல்கள், அம்மையப்பனாகவே பாடுதல் மரபு. ஆனால், திருவெம்பாவை சிவசக்தியை-பராசக்தியைப் போற்றிப் பரவுகிறது.

“பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி”

என்பதும்,

“முன்னிக் கடலைச் சுருக்கி”

என்ற பாடலும் அம்மையைப் பாடிப்பரவுவன. ஆதலால், ‘திருவெம்பாவை’ என்கின்றோம்.

மார்கழித் திங்கள்; பொழுது புலரவில்லை. நாட்காலை, ஆர்வமுடைய மகளிர் எழுந்துகூடி நீர்நிலை நோக்கிப் புறப்படுகின்றனர். அதுபோது துயிலெழுந்து வாராதாரின் வீட்டு வாயிலில் நின்று தூங்குபவளை எழுப்புகின்றனர்.

“ஒளி பொருந்திய கண்களையுடைய நங்கையே! தொடக்கமும் முடிவும் இல்லாத அரியபெரிய சோதியை நாங்கள் புகழ்ந்து பாடக்கேட்டும் துயில்கின்றாயோ? நின் செவி வன்செவியோ? திருவீதியில் சிவபெருமானை வாழ்த்தும் வாழ்த்தொலி கேட்ட அளவில் படுக்கையினின்றும் புரண்டு எழுந்து விம்மி விம்மி அழுகின்றாள்! தன் நிலை இழந்தாள்! இவள் எச்செயலுக்கும் ஆகாள்! இவள் நிலை வியப்பிற்குரியது-” என்று பாடுகின்றனர்.

இறைவனுக்குத் தொடக்கமில்லை; இறுதியும் இல்லை. தோன்றுவன வெல்லாம் அழியும் என்பது நியதி. இறைவனை ஞானப்பேரொளியாக-அகண்ட ஒளியாக வழிபடுதல் வழக்கம். “அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய்” என்பார் தாயுமானார். இறைவன் அரும் பெரும் சோதியாக விளங்குவதைப் “பசுபதியாகிய இறைவா! கதிரவன் மண்ணகத்தைச் சூழ்ந்துள்ள இருளையோட்டிக் காண்பார் கண்களுக்கும் புலனாகின்றான். ஆனால் நீயோ, அக்கதிரவனைப் போல நூறாயிரங்கோடி ஒளிக்கதிர்களையுடையனாக இருந்தும் என் கண்களுக்குப் புலனாவதில்லை. என் அகவிருள் வலிமையுடையதோ? அன்று. அன்று! நின் கருணைப் பெருக்கு முழுதுமாகத் தேவை” என்று ஆதிசங்கரர் கூறுவதால் அறிக!

சிவபெருமானை வாழ்த்தும் வாழ்த்தொலி கேட்டதும் படுத்திருந்தவள் ஏன் வரவில்லை? அவள் உறங்கவில்லை; வாழ்த்தொலியைக் கேட்ட அளவிலேயே பக்தியில் மன முருகி மெய்ம்மறந்து கிடக்கிறாள்! அவள் திருவருள் வயப்பட்டு விட்டாள்! இனி உலகியலுக்கு ஆகாள் என்பது கருத்து. உறக்கத்தைத் தவிர்ப்போம். உளம் உருகி வழிபடுவோம்!

பாசம் பரஞ்சோதிக் கென்பா யிராப்பகல் நாம்
பேசும்போ தெப்போதிப் போதா ரமளிக்கே
நேசமும் வைத்தனையோ? நேரிழையாய் நேரிழையீர்
சீசி! யிவையுஞ் சிலவோ? விளையாடி

ஏசு மிடமீதோ? விண்ணோர்க ளேத்துதற்குக்
கூசு மலர்ப்பாதந் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோ ரெம்பாவாய்.

2

மாதங்களிற் சிறந்த மார்கழித் திங்கள்; வைகறைப் போது! வீட்டு வாயிலில் எழுப்பும் குரல் கேட்கிறது! குரல், எழுப்புவதாக மட்டுமில்லை. எள்ளி நகையாடுவதாகவும் இருக்கிறது! “அணிகலன்களையுடைய பெண்ணே! பேசும் பொழுதெல்லாம், “எந்தாய்! எந்தை இறைவனே!” என்று பேசுவாய்! நின் அன்பு முழுதும் அவனுக்கே உடைமை என்பாய்! ஆனால், இப்போது படுக்கைக்கே அன்பு வைத்தாயோ?” என்று காலம் கடந்து உறங்குபவளை எள்ளி நகைத்து எழுப்புகின்றனர். தூங்குபவள், துயிலின் பிடியில் சிக்கியிருந்ததால் நல்ல பணிக்கு எழுப்புபவர்களை நோக்கிச் “சீச்சி” என்கிறாள். “விளையாட இதுவா இடம்?” என்று கேட்கிறாள். வெளியே நின்று துயிலெழுப்பிய தோழிகள். “நாங்கள் ஏசவும் வரவில்லை; விளையாடவும் வரவில்லை. நாங்கள் அனைவரும் தேவர்களால் தொழுதற்கரிய-நமக்கு எளிதாக வந்தருளும் இறைவன்-திருச்சிற்றம்பலத்துத் தலைவன் திருவடிகளுக்கு அன்புடையோம். அந்த அன்பினை நீயும் பெறுதற்பொருட்டே எழுப்புகின்றனம்” என்கின்றனர்.

“பாசம்” என்பது மிக்க அன்பினைக்குரிப்பது. இப் பாடலில் இறைவனுடைய திருவடிகளின் அருமையும் எளிமையும் ஒரு சேர விளக்கப் பெற்றுள்ளன. விண்ணோர்கள் ஏத்துதற்குக் கூசும் மலர்ப்பாதம்” என்பது அருமையை உணர்த்துகிறது. விண்ணோர்கள் சூழ்ந்து சூழ்ந்து இறைவனை வாழ்த்த முயன்றாலும் பெருமான் அவ்வாழ்த்தினை ஏற்பதில்லை. ஏன்? அந்த வாழ்த்தில் பக்தியில்லை; நலம் இல்லை; வானவர்கள் வாழ்த்துதலில் அன்பில்லை; ஆசை நிறைய இருக்கிறது. அமரர்கள் ஆசைநோக்கி வாழ்த்து கின்றனரேயன்றி, வாழ்த்துதல் நோக்கமன்று. ஆதலின், வானவர் வாழ்த்தினைக் கண்டு இறைவன் நாணுகின்றான். அமரர்கள் திருவடிகளைப் பெறுதல் இயலாது. அதே திருவடிகள் எளிதில் நம்மை நாடிவந்து ஆட்கொள்கின்றன. “தந்தருள வந்தருளும்” என்று எளிமையும் விளக்கப் பெறுகிறது.

“பாசம் பரஞ்சோதிக்கு என்பாய்” என்றதாய்” “சொல்லும் நீ, செயலுக்குரிய காலத்தில் தவறுகிறாய் என்று உணர்த்தப் பெறுகிறாள். சொல்பவர்கள் பல செயலில் சிலர் கூடக் காண்பது அரிது. வைகறைப் போது இறைவணக்கத்திற்கேற்ற இனியபோது, ஆரவாரமுடைய புறவுலகம் மோனத்தில் அமிழ்ந்திருக்கும் அந்த நேரம் இறை வழிபாட்டுக்கு உற்ற நேரம்.

இப்பாடல், உயிர்களின் பிறப்பின் நோக்கத்தை இறைவனைப் பூசித்து இன்ப அன்புநிலையை எய்திடுதல் வேண்டும். அதுவே பிறப்பின் குறிக்கோள்! அக்குறிக்கோளினின்றும் பிறழ்ந்து வாழ்வெனும் மையலிற் சிக்குண்டு கிடக்கும்பொழுது ஞானாசிரியன் கருணையோடு கடிந்துரைத்து ஈடேற்றுதல் வழிவழிவந்த வழக்கம். அதுவே தந்தருளும் நிலை; இறைவன் எளிமையில் தந்தருளுகின்றான்; அவ்வருளைப் பேண-பாவை நோன்பு நோற்றிடுவோம் வாரீர்! வாரீர்!

முத்தன்ன வெண்ணகையாய்! முன்வந் தெதிரெழுந்தென்
அத்தனா னந்த னமுதனென் றள்ளுறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீ ரீசன் பழவடியீர்! பாங்குடையீர்!
புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ?
எத்தோதின் னன்புடைமை? யெல்லோ மறியோமோ?
சித்த மழகியார் பாடாரோ நஞ்சிவனை?
இத்தனையும் வேண்டும் எமக்கேலோ ரெம்பாவாய்.

3

மார்கழித் திங்கள்; பொழுது புலர்கிறது. மண்ணிருள் நீங்குகிறது; மனத்திருள் நீங்கவில்லை. அகவிருள் நீக்கத்திற்குரிய அகனமர்ந்த வழிபாட்டினாலேயாம். வழிபாட்டிற்கு மகளிர் புறப்பட்டு விட்டனர். வழிபாட்டில் கலந்துகொள்ள வராத தோழியின் வீட்டு வாயிலில் எழுப்புகின்றனர். காலத்தில் வாராது தூங்குபவளிடம் நேற்று “நீங்கள் நாட் காலையில் எழுந்துவரும் முன்னே நான் எழுந்து வந்து இறைவனைத் துதிப்பேன்; புகழ்ந்து பாடுவேன்” என்று சொன்னாயே! இப்பொழுது உறங்குகின்றாயே!” என்று நினைவூட்டுகின்றனர். “செயலில் திட்பமின்றிப் பேசிப் பயனென்ன?” உடன் எழுந்துவா! கதவைத்திற!” என்கின்றனர்.

தூங்குகின்றவள், “மெய்யன்புடையீர்! பழமையான அடிமையுடையீர்! நீவிர் குற்றம் பாராட்டாது சீராட்டி ஆட்கொள்ளலாகாதோ?” என்று கூறுகிறாள். அவளை எழுப்பக் கூடியிருந்தவர்கள், “உன் அன்பு அறியாததா? மனத்தூய்மையுடையவர்கள் இறைவனைப் பாடமாட்டார்களோ? உன்னை எழுப்பவந்த எங்களுக்கு நீ தரும் பரிசு வேண்டியது தான்!” என்று கூறுகிறார்கள்.

இத்திருப்பாடல் இறைவனை மொழியால் பாராட்டி வணங்குகிறது; ‘பழ அடியார்’-வழிவழித் தொண்டு பூண்டவர்; இறைவனுக்குத் தொண்டு பூண்டொழுகும் பரம்பரைக் குடியிற் பிறந்தவர் பழைய அடியார். ஒரே பிறப்பிலும் கூடப் பன்னெடு நாட்கள் மாறா அன்பில் தொண்டு செய்து வருவாரும் பழைய அடியாராவர் ‘பாங்குடையீர்’ என்பவர், பழைய அடியார்க்குத் துணை நிற்கும் தோழமைப் பண்பில் சிறந்தோராவர். ‘பத்துடையீர்’ என்பவர். அடியார்க்குரிய இலக்கணம் பத்து உடையவர். அதுவும் புறத்திலக்கணம் பத்து, அகத்திலக்கணம் பத்து என்று உபதேச காண்டம் கூறும். புறத்திலக்கணமாவது திருநீறும் கண்டிகையும் அணிதல், சிவனடியாரை வணங்கல், சிவனைப் புகழ்ந்து பாடுதல், ஐந்தெழுத்து எண்ணுதல், சிவபூசை செய்தல், சிவ புண்ணியங்களைச் செய்தல், சிவபுராணங்களைக் கேட்டல், திருக்கோயில் வழிபாடு செய்தல், திருவருள் நெறி நிற்பாரிடமே உண்ணுதல், சிவனடியார் உவப்பன கொடுத்தல் ஆகியன. அகத்திலக் கணமாவது; இறைவனது பொருள்சேர் புகழைக் கேட்கும் பொழுது மெய்ப்பாடுறுதல்! அவை மிடறு விம்மல், நாத்தழு தழுத்தல், இதழ்துடித்தல், உடல் குலுங்கல், மயிர் சிலிர்த்தல், வியர்த்தல், சொல்லெழாமை, கண்ணீர் அரும்புதல், வாய்விட்டு அழுதல், மெய்ம்மறத்தல் ஆகியன. சித்தத்தில் தூய்மையுடையவர் இறைவனைப் பாடுவர். சித்தத்திற்கு அழகு. திருவருட் சிந்தனையாம். பழைய அடியார், புத்தடியாரைக் குற்றம் நீக்கிச் சிவமாக்கும் அருளிப் பாட்டினை இயல்பாகவுடையவர். இங்ஙனம், சித்தம் அழகியார் இறைவனைப்பாடும் பெற்றியை நினைந்து நாமும் பாடுவோமாக! திருவருளை நினைந்திடுவோம்; சித்தத்தில் அழகினைப் பெற்றிடுவோம்; மாந்தர் குலத்தின் சிந்தனையில் அழகு தோன்றின் சகமெலாம் அழகு பொலியும்.

ஒண்ணித் திலநகையா யின்னம் புலர்ந்தின்றோ?
வண்ணக் கிளிமொழியா ரெல்லாரும் வந்தாரோ?
எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோ மவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாமாட்டோம் நீயேவந்
தெண்ணிக் குறைவில் துயிலேலோ ரெம்பாவாய்.

4

மார்கழித் திங்களின் குளிர், உறக்கத்திற்குத் துணை செய்கிறது. பொழுது புலர்கிறது! பொழுது புலர்தல் எழுச்சிக்குத் துணை. உறக்கமா? எழுச்சியா? என்ற வினாவிற்கு விடை காண்பதிலேயே உயிருலகம் வளர்கிறது; வாழ்கிறது. அறியாமை, அழிக்கும் இன்பங்களில் ஆழ்த்தும், அறிவு, இலக்குகளில் ஈடுபடுத்தும்; குறிக்கோளில் கொண்டு சேர்க்கும். அறியாமையில் ஆழ்வோர் அழிவிலின்பத்தை மறுத்தல் இயற்கை.

உறங்கும் தோழியிடம், “இன்னும் பொழுது புலர வில்லையோ?” என்று கேட்கின்றனர். உறங்குபவள் உறக்கத்தின் சுவையில் மேலும் சில வினாடிகள் உறங்க எண்ணி, அதே பொழுது தன்னுடைய உறக்க ஆர்வத்தை வெளிப்படுத்திக் கொள்ளாமல்-சாக்காக, “எல்லோரும் வந்து விட்டனரா?” என்று கேட்கிறாள். இது, நேற்றும் இன்றும் உள்ள உலகியல் நடைமுறை. உறக்கத்திலிருப்போர் ஏதாவது ஒரு சாக்குச் சொல்லி உறக்கத்தை நீட்டிக்கவே விரும்புவர். இங்ஙனம் உறங்குபவள் கூற, எழுப்ப வந்தவர்கள் “நீயே வந்து எண்ணிக் கொள்” என்று மறுமொழி கூறுகின்றனர். ஏன்? உறங்குபவளின் உறக்கத்தை நீட்டிக்க விரும்பவில்லை; உடனடியாக உறக்கத்திற்கு முடிவுகட்ட விரும்புகின்றனர். அதுமட்டுமின்றி, உறங்குபவள் பேருறக்கத்தில் இல்லை. உறங்கியும் உறங்காமலும் இருக்கின்ற நிலையினளே! அவளுக்கு ஒரு பணியிருந்தால் உடன் எழுந்து வந்து விடுவாள். அவள் எழுச்சிக்குப் பணி தூண்டுதலாக அமையும்! ஆதலால், “நீயே வந்து எண்ணிக்கொள்!” என்கின்றனர். இங்ஙனம் கூறுகிறவர்களுக்கும் இதில் ஒரு தற்காப்பு இருக்கிறது. அதாவது, அரன் நாமத்தைக் கூறாமல் யார் யார் வந்ததனர்? என்று எண்ணிப் பொழுதைக் கழிக்க இவர்கள் விரும்பவில்லை. இங்ஙனம் எண்ணிப் பழகினால், யார் யார் வந்தார்? என்று எண்ணும் பழக்கமே மிகும். இறைவன் திருநாமத்தை எண்ணும் பழக்கம் முறுகி வளராது. ஆதலால் இவர்கள் எண்ண விரும்பவில்லை! எண்ணும் நிலையில் இவர்களும் இல்லை.

அமரர்களுக்கு அமுதவானை, வேத விழுப்பொருளைக் கண்ணுக்கு இனியானைக் காதலால் பாடிக் கசிந்து உருகி நிற்கின்றனர். ஆதலால், எண்ணும் நிலையில் இவர்கள் இல்லை. கணக்கு வழக்கைக் கடந்த திருவடியைப் பாடிக் கசிந்துருகி நிற்பவர்களால் எங்ஙனம் எண்ண இயலும்? இறைவன் திருநாமம், பிறவிப் பிணிக்கு மருந்து. ஆதலால், மருந்து என்றார். உலகில் நிலவும் ஒரு பிணிக்குப் பல மருந்துகள் உண்டு. ஆனால், பிறவிப் பிணிக்கு மருந்துகள் பல இல்லை. இறைவன் திருவடியாகிய ஒரு மருந்தே பிறவிப் பிணிக்கு மருந்து. ஆதலால், “விண்ணுக்கு ஒரு மருந்து” என்றார். ‘ஒரு’ என்பது, எண் பொருட்டன்று’ சிறப்புக் கருதியே! அந்த ஒரு மருந்தை நாம் அனைவரும் காட்சியால் அறிந்து எண்ணி இன்புறப் பாடுவோமாக!

மாலறியா நான்முகனுங் காணா மலையினைநாம்
போலறிவோ மென்றுள்ள பொக்கங்க ளேபேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ! கடைதிறயாய்
ஞாலமே விண்ணே பிறவே யறிவரியான்
கோலமு நம்மையாட் கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்
றோல மிடினு முணரா யுணராய்காண்
ஏலக் குழவி பரிசேலோ ரெம்பாவாய்.

5

பொழுது புலர இருக்கிறது. ஞாயிற்றொளியின் முன்னாலே இரிந்தோட இருக்கும் இருள் கவ்விப் பிடிக்கிறது. அதுபோல், திருவருள் வழி நிற்க வேண்டிய உயிர்கள் ஞானநெறிப்படுதற்குமுன், திணிந்த இருளில் கிடக்கும். எளிதில் அருள் நெறிக்குத் திரும்பா! இறைவன் திரு நாமத்தைப் போரொலியாகக் கேட்டாலும் சற்றும் ஞானம் வராது என்னும் குறிப்பை இந்தத் திருப்பாடலில் மாணிக்கவாசகர் விளக்குகின்றார்.

உறங்குபவளை எழுப்பவந்து நிற்போர், “சிவனே! சிவனே!” என்று ஓலமிடுகின்றனர். உறங்குபவள் எழுந்திருக்கவில்லை. உடலுக்கு எழிலும் நலமும் தேடும் நாட்டமுடை யவர்கள், உயிருக்கு நலம் நாடும் நாட்டமில்லாமல் இருக்கின்றனரே என்ற இரக்கக் குறிப்பு அறிந்து உணர்க! உறங்குபவள், யாதும் அறியாதவளல்லள்; வாழ்வியலிற் சதுரப்பாடுடையவள், அறியாததை அறிந்ததைப் போலப் பேசும் திறத்தள்! ஊரில், உலகத்தில் உள்ள பொய்களெல்லாம் அவள் நாவிற்கு அன்றாடம் அத்துபடி! இத்தகையோர் வஞ்சகர்! ஆயினும், தேனூறப் பேசுவர்; இனிக்க இனிக்கப் பேசுவர்; நெஞ்சைத் திறந்து காட்டமாட்டார்கள். ‘நெஞ்சு’ என்று ஒன்று இருந்தால்தானே அவர்கள் திறந்து காட்ட! உறங்குபவள் கலந்துரையாடி மகிழ்ந்திருந்தபோது “திருமாலும் நான் முகனும் தேடிக் காணாத திருவருள்மலையை யானறிவேன்!” என்று கூறியிருக்கிறாள்! அங்ஙனம் உண்மையில் அறிந்திருப்பின் சிவனே! சிவனே!” என்ற ஓலம் கேட்ட பிறகும் உறங்குதல் இயலாது. அதுமட்டுமா? அவன்-அந்த மாமருந்து, உயிர்களைத் திருத்தி ஆட்கொள்ளும் கருணையைப் பாடும்பொழுது உண்மைப் பத்திமையுடைய ஆளாகாது வாளா இருத்தல் இயல்பன்று. ஆதலால் அவள் ‘அறிவேன்’ என்று சொல்லியிருந்தது பொய். பொய்ம்மையில் மெய்ம்மை காண இயலாது. மெய்பொருளை அனுபவித்தற்கியலாது; ஆதலால், பொய்யினைத் தவிர்த்திடுமின்! கண்ணுதற் பெருமான் கருணையைப் பாடுமின்! ‘சிவனே, சிவனே! என்று ஓல மிடுமின் என்பது பாட்டின் பொருள்!

திருமாலும் நான்முகனும் காணாத மலையினை என்பது ‘திருமால்’ ‘நான்முகன்’ என்ற பெயர்களைக் கொண்டு மயங்கற்க இப்பெயர்ச் சொற்கள் தத்துவங்களை விளக்க வந்தன. திருமால், செல்வத்தின் சின்னம்! நான்முகன் அறிவின் சின்னம்! செல்வமும் அறிவும் செருக்கினை விளைவிக்கும். செல்வம் ‘எனது’ என்ற செருக்கினையும், அறிவு ‘நான்’ என்ற செருக்கினையும் தரும். ‘நான்’ ‘எனது’ என்ற செருக்கற்ற நிலையே திருவடி-திருவடியைச் சார்ந்த திருவருளின்ப நிலை, என்ற கருத்தினை “மாலறியா நான் முகனும் காணா மலை” என்று விளக்கி அருளுகின்றான் அறிவாலும் இறைவனைக் காண முடியாது. செல்வத்தினாலும் இறைவனைக் காண முடியாது. ஞானம் ஒன்றாலேயே இறைவனைக் காண முடியும். இறைவன் திருவருள் உலகின் எல்லோராலும், எல்லாப் பொருள்களாலும் தேடிக் காணப்படாதது. ஆயினும் அடியார்கள். அத் திருவருள் வலிய வந்து, பிழைகளைத் திருத்திச் சீராட்டி ஆட்கொள்ளும் கருணையை வியந்து உள் நெக்குருகப் பாடுகின்றனர்.

“ஞாலமே, விண்ணே, பிறவே அறிவரியான்
கோலமும் நம்மையாட் கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடி”

என்ற சொற்றொடர்களை நினைந்து நினைந்து ஓதுதற்குப் பாடுவோமாக! ஓதுவோமாக!

மானே! நீ நென்னலை நாளைவந் துங்களை
நானே யெழுப்புவ னென்றலும் நாணாமே
போன திசைபகரா யின்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே யறிவரியான்
தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்குன் வாய்திறவாய்
ஊனே யுருகா யுனக்கே யுறுமெமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோ ரெம்பாவாய்

6

பகலிற் பேசுவதுபோல் இரவில் சிலர் நடப்பதில்லை. அதுமட்டுமன்று. முதல் நாள் பகல் பேச்சோடு இரவுப் பழக்கத்தின் காரணமாக மாறுபட்டு, மறுநாட்காலை முரண்பட்டு ஒழுகுவர்; பழகுவர், அயர்ந்து இருளிற் சிக்கிவிட்டாலும் ஒளியின் அனுபவத்தை இருள்கெடுத்து விடுகிறது. இத்திருப் பாடலில், உறங்குகிறவள் நேற்றுப் பகற்போதில் மார்கழிநோன்பை எடுக்கும் வகைபற்றிப் பேசிக்கொண்டிருந்தபொழுது, நானே நாளை வந்து உங்களை எழுப்புகின்றேன்” என்று சொன்னாள். ஆனால், இப்பொழுதோ உறங்கிக் கொண்டிருக்கிறாள்! உறக்கத்தில் அவள் உயிருணர்வு சென்ற திசை தெரியவில்லை! சொன்ன சொற்படி நடக்க இயலவில்லையே என்ற நாணத்தை இழந்து உறங்குகின்றாள். ஆதனால், எழுப்புகிறவர்கள் “இன்னும் பொழுது புலரவில்லையோ?” என்று எள்ளிக் கேட்கின்றனர். எழுப்புகிறவர்கள் மேலும் இரக்க உணர்ச்சியோடு, “உனக்காக நீ, பாட எழுந்து முன் வராது போனாலும் நாங்கள் வந்து எழுப்புகிறோமே! எங்களுக்காகவாவது எழுந்து பாடவா!” என்பது உலகியல். அறியாமையினால் அடம் செய்யும் குழந்தையைத் தாய், தன்மீது ஆனைகாட்டித் தனக்காகவாவது சிறப்புடைச் செயல்களைச் செய் என்று வழி நடத்தும் உலகியல் வழக்கு அறியத்தக்கது. பொதுவாக, உலகியல் அவரவர்க்கென்று உணர்ந்து நலம் நாடுதல் - செய்தல் எளிதன்று. பெருவழக்குமில்லை. தொடர்புடையார் நலங்கருதிச் செய்தல் மூலமே, நலம்பெறுதல் இயல்பு. தாயின் நலங்கருதிச் சேயும், சேயின் நலங்கருதித் தாயும், கணவன் நலங்கருதி மனைவியும், மனைவியின் நலங்கருதிக் கணவனும் ஒழுகும்பொழுது, ஒழுக்கநிலை எய்துகின்றனர்; நலம்பல எய்துகின்றனர். பிறர்நலம் பேணும் பெட்பில் இடரின் இயல்பாய் வளர்கின்றனர். “எங்களுக்காகவாவது பாடு!” என்பதில் உள்ள அருமை அறிக.

உறங்குபவள், இறைவன் திருப்புகழைக் கேட்டும் அவன் தன் தண்ணருளைப் பாடக்கேட்டும் ஊனுருகாமல் உள்ளம் உருகாமல், ஒரு வார்த்தையும் பேசாமல் உறங்கும் நிலையை எண்ணி வருந்துகின்றனர்; ஒப்புரவுப் பண்பிற்குக் கூட அவள் ஏழாதிருப்பதை எண்ணி வேதனைப்படுகின்றனர். அதுதான் போகட்டும்! இறைவன் புகழைப் பாடுகிறவர்களை ஊர் மெச்சுகிறது; உலகம் மெச்சுகிறது. அதற்காகவாவது பாடக்கூடாதா? என்று, “எமக்கும் ஏனோர்க்கும் தங்கோனைப் பாடேல் ஓர் எம்பாவாய் என்று பாடுகின்றனர்.

இறைவன், மெய்யடியார் உள்ளத்தே பள்ளக்காண் உறுபுனல்போல் வந்து தங்குவான். இது “மலர்மிசை ஏகினான்!” என்ற திருக்குறளுக்குப் பரிமேலழகர், “அவரவர் நினைந்த வடிவத்தோடு விரைந்து சேறலின்” என்று எழுதிய உரையோடு ஒப்புநோக்கி உய்த்துணரத் தக்கது. இறைவனின் திருவருளுக்குத் தாழ்ந்த நெஞ்சம் நாம் பெற்றால், அத்திருவருள், பெற்ற அளவிலேயே வந்து பொருந்தும். “தாழ் வெனும் தன்மையோடு சைவமாம் சமயம் சாரும் ஊழ்பெற லரிது” என்றார் அருணந்தி சிவம். ஆதலால், நாம் இறைவனைத் தேடவேண்டாம். அவன் அருள் நோக்கித் தாழ்வோம்! அவனே வந்து ஆட்கொள்வான்.

அன்னே யிவையுஞ் சிலவோ? பலவமரர்
உன்னற் கரியா னொருவ னிருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னாவென் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை யென்னரைய வின்னமுதென் றெல்லோமும்
சொன்னோங்கேள் வெவ்வேறாயி யின்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோ ரெம்பாவாய்.

7

துயிலில் ஆழ்ந்து கிடப்பவள், இறைவனின் பொருள் சேர் புகழ் பரவும் ஒலி கேட்டும் எழுந்திருக்கவில்லை! உறங்குபவள் வயதில் இளையாள். “அம்மா! தாயே!” என்று நகைப்புக் குறிப்பில் அழைக்கின்றனர். “அம்மா! தாயே!” இப்படியும் ஒருநிலை உனக்கு உண்டா? நீயே முன்பெல்லாம் சிவத்தை நினைப்பூட்டும் சிறு ஒலிகள் கேட்டால் கூட-திருச்சின்னம் கேட்டால் “சிவ, சிவ!” என்று உணர்ந்து சொல்வாய்; அங்ஙனம் அந்தத் திருநாமத்தை நீ சொல்லும் பொழுதே உருகி நிற்பாய். ஆனால் இப்போது நீயோ, நாங்கள் அனைவரும் இறைவனைப் பற்றிப் பேசியும் நீ யாதும் அறியாதவள் போல் உறக்கத்தில் கிடக்கின்றாயே! இஃதென்ன உறக்கம்! என்று எழுப்புபவர்கள் கேட்கின்றனர். இத்திருப்பாடல் ஞானம் தலைப்பட்ட உயிர், பழக்க வாசனையால் பாதிக்கப்பட்ட நிலையை எடுத்துக் காட்டுகிறது. பெருங்காயம் இருந்த பாண்டத்தில் பெருங்காயத்தினை எடுத்த பிறகும் பெருங்காயத்தின் மணமிருக்கும். அந்த மணத்தினையும் எடுத்து விழுங்கும் ஆற்றலுடைய பொருள், அப்பாண்டத்தில் இடப்பெறாது போனால், பெருங்காயத்தின் மணமேவிஞ்சும். அதுபோல, ஆணவத்தின் ஆற்றல் அடங்கிற்றாயினும் அதன் வீச்சு முழுமையாக அகன்று விடுவதில்லை. பழக்கத்தின் வாசனையால் அது தலை காட்டும். பழக்கம் தவிரப் பணித்தல் நமது கடன். ஆணவத்தினின்றும் விலகித் திருவருள் தலைப்பட்ட உயிர், திருச்சின்னத்தின் ஒலி கேட்டபொழுதும் “சிவ, சிவ!” என்றது, சிவனறிவு நெறிப்பட்டது; அருள் தழீஇ நின்றது. அதனால், ஊனுருகி, உளமுருகி, உயிருருகி மெய்யுணர்வு வழிப்பட்டு நின்றது. ஆனால், இந்த இன்னுயிரைப் பழைய வாசனை ஆணவத்தின் முடை நாற்றம்-அறியாமையின் இருள் வீச்சு சூழ்ந்து கவ்விக் கொண்டது. அதனால், “பாடியும் கேட்கிலை; பேசியும் கேட்கிலை! சின்னங்களின் ஒலி கேட்டதுமே அழுதவளாகிய நீ, இன்றோ இறைவனின் திருநாமத்தை, அருளிப்பாடுகளை விரித்துப் பேசுவதைக் கேட்டும் எழுந்திருக்கவில்லையே!” என்று ஆற்றாமை மேலிடக் கூறுகின்றனர்.

இறைவனோ, அமரர்களுக்கு அறிய முடியாதவள் ஏன்? அமரர்களுக்கு ஞானம் ஏது? அவர்கள் தங்கள் அகக் கருவிகளாலேயே ஆண்டவனைத் தேடுபவர்கள் அவ்வகக் கருவிகளும் கூட இன்ப விழைவிலும், அதிகார விருப்பிலும் தம்முள் மயங்கியவை. அதனால், அமரர்கள் ஞானம் பெறுதல் அரிது. இவையெல்லாம் அறிந்தும் அறியாதவள் போல் வாளா கிடத்தியோ? என்று இரக்க முற்றுப் பாடுகின்றனர்.

இத்திருப் பாடலில், உயிர் ஆணவமலச் சார்பால் மயங்கிக் கிடந்துழி, இறைவன் ஞானாசிரியனாக எழுந்தருளி நன்னெறி, உணர்த்தியும், தோழனாகப் போந்தருளி நன்னெறியில் உடன்நின்று நடத்தியருளியும் ஆட்கொண்டருளும் திறன் பாராட்டப்பெறுகிறது. நாமும் நெஞ்சத்தைக் கடினமாக்கும் அறியாமையினின்றும் அகலுவோம்; உறக்கத்தைத் தவிர்த்திடுவோம்; காணும் காட்சி அனைத்திலும், கேட்கும் ஒலி அனைத்திலும் சிவத்தினைக் கண்டிடுவோம்; நெஞ்சத்தால், வாயால் “சிவ, சிவ” என்று எண்ணியும், சொல்லியும் இன்பநிலை எய்துவோமாக!

கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்
ஏழி வியம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கரணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோங் கேட்டிலையே
வாழியீ தென்ன வுறக்கமோ? வாய்திறவாய்
ஆழியா னன்புடைமை யாமாறு மிவ்வாறோ?
ஊழி முதல்வனாய் நின்ற வொருவனை
ஏழைபங் காளனையே பாடேலோ ரெம்பாவாய்.

8

பொழுது புலர்கிறது; கோழி கூவுகிறது.. பொழுது புலர்வதைக் கோழி உணர்த்துகிறது. ஆம்! இருளில் கிடந்து தேறித் தெளிந்து பெற்ற உருவம்தானே சேவல்! அச்சேவலுக்குத் தானே பொழுது புலர்தலையும், புலர்தலின் அருமையையும் அறிந்து மகிழும் ஆற்றலுண்டு. அதனால், மகிழ்ந்து கூவுகிறது! அறியாமையின் பிணிப்பு இருள்! அறிவு தலையெடுத்தல் பொழுது புலர்தல்! பொழுது புலரும் மகிழ்ச்சியால் அறிவு தலைப்பட்ட இன்னுயிர்கள் இசைக்கருவிகளை இயக்குகின்றன; எங்கும் இன்ப இசைவெள்ளம்; இறைவனோடி சைக்கும் இசை வெள்ளம்; அந்த இசைவெள்ளத்தில் ஆழ்ந்து பரம்பொருளைப் பாடுகின்றோம். நாங்கள் பரம்பொருளைப் பாடும் ஒலி உனக்குக் கேட்கவில்லையா? அம்மா! தாயே! வாழ்க, உன் உறக்கம்!

உடல் உறக்கம் இன்றியமையாததே! பாவைப் பாடலில் உணர்த்தப்படும் உறக்கம் உடல் உறக்க மன்று! உயிர் உறக்கம்; இன்று உலகிடை விழித்திருந்து உண்டு திரிந்து வாழ்வோரில் கோடானு கோடி பேர் உயிருறக்கத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். ஐயகோ! உயிர்கள் அறியாமைப் பேருறக்கத்தினின்றும் விழித்தெழும் நாளே இன்பம் தொலையும் நாள்; இன்புற்று வாழும் நாள்; அப்போதே உயிர்கள் வளரும்; வாழும்! வாழ விரும்புவோருக்குப் பேருறக்கம் ஆகாது. உயிர் பேருறக்கத்தில் ஆழ்ந்து வாழ்தல் வாழ்வன்று. வாழ்வியலுக்குக் கண் திறந்திருந்தால் போதாது; உணர்வின் வாயில்களும் திறந்திருக்க வேண்டும். இங்கே தூங்குபவள் மெல்லக் கண் திறக்கிறாள். ஆனால், வாய் திறக்க மறுக்கிறாள்! கண்ணிருந்து வாய் பேசாத ஊமையானால் காட்சிக்குப் பொருளேது? இதனை உணர்த்த “வாழி! ஈதென்ன உரக்கமோ? வாய் திறவாய்!” என்கின்றனர்.

செல்வத்திற் சிறந்த திருமாலே, அரனை அயரா அன்பால் அருச்சித்ததை அறியாயோ? ஆழியான் அன்புடைமையை அறிந்திருந்தும் நீ படுக்கையில் மயங்கி உறங்குவது ஏன்? இறைவனை நீ சந்திக்காமல் உன் வாழ்வு நிறைவுறாது. ஏன்? இறைவன் பிறப்பு-இறப்புகளைக் கடந்த வன்! ஊழிகளை கடந்து தனி ஒருவனாய் விளங்குகின்றவன். ஊழிக்காலத்தில் அவனருளை நாடாமல் என் செய்வாய்? அன்று தேவைக்கெனத் தொழாமல், இன்று இயல்பாய்த் தொழுதல் நன்றன்றோ! அவன் ஊழி முதல்வனாய் ஓங்கி உயர்ந்து நின்றாலும் ஏதும் பெறாத ஏழைகள் பால் இரக்கமுடையவன். அருளே திருமேனியாகிய அம்மையைப் பங்கிலே உடையவன். அம்மையின் கூட்டால் அவன் அருட்கடலாக விளங்குகின்றான். அவளைப் பாட எழுந்து வா! இந்த அழைப்பு நம் ஒவ்வொருவருக்குந்தான்! நாம் அனைவரும் பாடுவோம்! நமது வாழ்வில் இருள் இரிந்து ஓடட்டும்! பொழுது புலரட்டும்!

முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே!
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோ மாங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே யெங்கணவ ராவா ரவருகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே யெமக்கெங்கோ னல்குதியேல்
என்ன குறையு மிலோமேலோ ரெம்பாவாய்.

9

கன்னியரனைவரும் உறக்கத்திலிருந்து எழுந்து கூடி விட்டனர். ஒருநிலை மனத்துடன் இறைவனைப் புகழ்ந்து பாடுகின்றனர். “பழமைக்கும் பழைமையானவனே! புதுமைக்கும் புதுமையானவனே! உன்னைத் தலைவனாகப் பெற்றோம். ஆதலால், நாங்கள் சிறந்த அடியார்கள் நாங்கள் அடியார்களையே வணங்குவோம். அடியார்களிடத்தேயே தோழமை கொள்வோம்! அவர்களையே மணப்போம்! அவர்கள் உவப்பனவே செய்து, உழுவலன்புவழி கிடப்போம். அவர்கள் பணியே, எங்கள் பணியெனச் செய்வோம். இங்ஙனமே அருளிச் செய்த நீ இவ்வகையே அருளிச் செய்யின் எக்குறையும் இல்லாது வாழ்வோம்.” என்று இறுமாந்து பாடிப்பரவிப் பாவை நோன்பு நோற்கின்றனர்.

உயிர்களில் ஆண், பெண் வேறுபாடு இல்லை. திருவெம்பாவைப் பாடல்கள் உயிர்களில் உய்திக்குரிய பாடல்களே! சிறப்பாகப் பெண்கள் ஓதுதலுக்குரியுன. தலைவனாகிய இறைவனை உயிர்கள் சார்தலே மணம், உடற்குரிய திருமணங்கள் நிகழ்ந்து, ஈருடலில் வாழ்ந்த உயிர்கள் ஓருயிராக உருமாறி, ஆண்-பெண் வேறுபாட்டை இழந்து இறையருளில் திளைத்தலே இன்ப அன்பு நிலை, பெண், சிவத்தினை மணத்தல் சிவ நெறியில் இல்லை. சிவம், போகங்களைக் கடந்த போகம். அதனால் பாவை மகளிர் இறைவனை மணக்க விரும்பவில்லை. அடியார்களை மணக்க விரும்புகின்றனர். இறைவனிடம் மாறா அன்புடைய அடியார்களைத் திருமணம் செய்து கொள்வது நோக்கத்திற்குத் துணை செய்யும். இம்மை வாழ்க்கை சிறக்கும். இன்பமும் கிடைக்கும்; இன்ப அன்பும் கிடைக்கும். மங்கையர்க்கரசியார்-நின்ற சீர் நெடுமாறன் வரலாறு அறிக!

பழைமை, புதுமை என்பன காலத்தைப் பொறுத்து அல்ல. நேற்றும், இன்றும் என்றும் வாழ்விற்கு நலத்தருவன புதுமையே. காலத்தாற் பழைமையானதும், பின்னைப் புதுமையாக உயிர்களை இன்புறுத்தல் கூடும். இறைவன் கால தத்துவத்தைக் கடந்தவன். காலம் எண்ணிக் காட்டும் முயற்சி சில ஆயிரம் ஆண்டுகளாகத் தான். மனிதகுலம் தொடங்கிய நாளிலிருந்து கால அளவு முறை இருந்ததில்லை. வரலாற்றாசிரியன் “வரலாற்றுக் காலத்திற்கு முன்பு” என்பான். இறைவனோ காலங்களைக் கடந்தவன்; ஆதலால் “முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருள்” என்றார். கால எல்லைக்குட்பட்ட பொருள்கள் உருமாற்றங்கள் பெறும்; சில அழியவும் கூடும். எல்லாம் வல்ல இறைவனருளோ உருமாற்றங்கள் பெறாதது; அழியாதது. அதனால் இறைவன், ‘முன்னைப் பழம் பொருள்; அதனால் உயிர்களுக்கு என்ன பயன்? காலச் சுழற்சியில் உருமாறி அலைந்து எய்த்துக் களைத்து வளரும் உயிர்களுக்கு அந்தந்தக் காலச் சூழ்நிலையில் உயிர்கள் துய்த்து மகிழ்ந்து அனுபவிக்கும் புதுமைக் கோலங்களை வடிவங்களை - உணர்வுகளை இறைவன் பெற்றுப் பின்னைப் புதுமையாகவும் விளங்கிப்பயன்படுகிறான். ஆட்கொள்கிறான்.

“பெற்ற அனுபவத்தை வளர்க்கும் தோழமையை அருளிச் செய்வீர்! அடியவர்களையே கணவன்மாராகப் பெற அருளிச் செய்வீர்” என்று வேண்டுகின்றனர். மகளிரை மணக்கப் பொன் விரும்பிக் கேட்கும் இந்த யுகத்தில் பொன்னனைய மகளிர், தம்மை மணக்க விரும்பும் நம்பிக்குத் திருவெம்பாவை காட்டும் இலக்கணத்தை வகுத்தால் இயல்பாகவே வரதட்சணை ஒழியும்; ஏன்? ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார்தம் அடியார்களாக முடியும். அங்ஙனம் வளர்த்தவர்கள் பொன்னை நேசிக்க மாட்டார்கள்; பொன்னனையாரை நேசிப்பர்; இறையருளை நாடிநிற்கும் அடியார்களை நாடுவோம்; அவர்களுக்குத் தோழமை பூண்போம்; தொண்டு செய்வோம்!

பாதாள மேழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியு மெல்லாப் பொருண்முடிவே
பேதை யொருபாற் றிருமேனி யொன்றல்லன்
வேதமுதல் விண்ணோரு மண்ணுந் துதித்தாலும்
ஓத வுலவா வொருதோழந் தொண்டருளன்
கோதில் குலத்தரன்றன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்
ஏதவனூ ரேதவன்பே ராருற்றா ராரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோ ரெம்பாவாய்.

10

இன்றுபாடிய திருப்பாட்டில், நமையாளும் ஞானத் தலைவர் மாணிக்கவாசகர் மகளாக மாறிக் கோயிற் பணிப் பெண்களோடு பேசுகின்றார்; பெருமானைப் பற்றி வினவுகின்றார். அன்று, கோயிற் பணிப்பெண்கள் ஞானத்தில் முதிர்ந்தவர்கள்; பழுத்த மனத்து அடியவர்; திருவருளே நினைப்பாக வாழ்ந்தவர்கள்; இந்தநிலை, திருக்கோயில்கள் சாதிகளின் கூடாரமாகச் செல்வத்தின் பண்ணையாக, நிலப் பிரபுத்துவத்தின் மறுபதிப்பாக உருமாறியவுடன் மாறிற்று: கோயிற் பணிப்பெண்கள் நிலை தாழ்ந்தது. இன்று அதனினும் தாழ்ந்த நிலை! இன்றைய திருக்கோயில்களிலும் “பணிப் பெண்கள்” பெயரில் சிலருண்டு. எண்ணெய் வற்றிய உடல் தாங்கி, அறியாமையின் மறுபதிப்பாகச் சிலர் பணி செய்கின்றனர். அவர்களைப் “பணிப் பெண்கள்” என்பது சொல் வழக்கே யாம். மாணிக்கவாசகரே கோயிற் பணிப் பெண்களுடன் ஞான வினா-விடை நிகழ்த்தினார் என்றால், அவர்களின் மாட்சிமை என்னே!

மாணிக்கவாசகர் இத்திருப்பாடலில் இறைவனின் நிலையை இனிது விளக்குகின்றார். சொற்களின் எல்லையைக் கடந்தது அவனுடைய திருவடிகள்! பொருள்களின் முடிபாக உள்ளது அவன் திருமுடி! அவன் மங்கை பாகன்! அவன், புகழ்ச்சியைக் கடந்த போகம்! ஆயினும் அவன் தோழன்; தொண்டர்கள் உள்ளத்தில் விருப்புடன் தங்கி அருள்பவன். அவன் ஊர் எது? அவன் பெயரென்ன? அவனுக்கு உறவினர் உண்டா? உண்டெனில் உறவினர் யார்? உறவினர் உண்டெனில் அயலாருண்டோ? அயலார் உண்டெனில் அவர் யார்? அவனைப் புகழ்ந்து பாடும் வழி எது? வகை எது? என்று கோயிற் பணிப்பெண்களை வினவுவார் போல விளக்கி அருளுகின்றார்.

பொருள் முடிவு, திருமுடி என்றது பொருள்களின் எல்லை சிவமே என்பதை உணர்த்துவதற்கே! திருவாசகத்தின் பொருள் ஆடல் வல்லான்தானே! சொற்களுலகம் பொருளைப் பொருளின் பொருளைத் தேட துணை செய்வதில்லை. சொற்களைக் கடந்த பொருளைத் தேடுவோம்; காண்போம்.

உருவ வழிபாட்டின் இன்றியமையாமையை இப்பாடல் உணர்த்துகிறது. ஒலி, வரி வடிவம் பெற்றாலன்றி முழுதின்பம் தராது. அதுபோல் அருவநிலையினனாகிய ஆண்டவன் அருவுருவ நிலையை உருவ நிலையை உயிர்களுக்காகக் கொண்டு ஆண்டு கொண்டருளும் திறன் பாராட்டப்படுகிறது. இங்கு இறைவனின் திருவருள் மாதொரு பாகனாக இருப்பது உணர்த்தப்படுகிறது. இத்திருவுருவமே பழந்தமிழகத்தின் வழிபாட்டுத் திருமேனி. அம்மையப்பன் ஓருவாகத் திகழும் திருக்கோலத்தைத் திருக்கழுமலப் பதிகத்தில் “தொன்மைக் கோலம்” என்று அருளிச் செய்துள்ளார். இறைவன், தொண்டர் உள்ளத்தினன். அவனுக்கு ஊரில்லை; பேரில்லை; உற்றாரில்லை; அயலாரில்லை. நாமும் இறைவனைத் தொழுவோம்! தொண்டராய்த் தொழும்பு செய்வோம்? அவனை நம் முள்ளத்தனாகப் பெறுவோம்! இறையருள் வழிநின்று மனித குலத்தில் உறவினர், அயலார் என்றில்லாமல் ஒருமை நெறியில் சன்மார்க்கராய் வாழ்வோம்!

மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்கா ணாரழல்போற்
செய்யாவெண் ணீறாடி செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ யாட்கொண் டருளும் விளையாட்டின்
உய்வார்க ளுய்யும் வகையெல்லா முய்த்தொழிந்தோம்
எய்யாமற் காப்பா யெமையேலோ ரெம்பாவாய்.

11

மார்கழித் திங்கள் குளிர்காலம்; சுனையில் படிப் படியாகக் கால்வைத்து இறங்குதல் இயலாது; குளிர் வருத்தும். ஆதலால், திடீரெனச் சுனையில் குதித்து விடுகின்றனர். தண்ணீரைக் குடைந்து ஆடுதலால் தண்ணீர் இதமான சூடுறுகிறது.

“மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையால் குடைந்து குடைந்து”

ஆடுவதாகப் பாடினார். எல்லாவற்றிற்கும் அப்பாலாகக் கடந்து நிற்கும் கடவுள், உயிர்களை ஆட்கொள்ளத் திருமேனி தாங்கி ஆடும் திருவிளையாடல்கள் விளக்கப் பெற்றுள்ளன. இறைவன் திருவருளை நினைந்து நீரில் ஆடுதல் உடல் - உயிர்த்தூய்மைகளை ஒருசேரத் தரும். ஆதலால் இங்குச் சுனையாடும் மகளிர், ‘ஐயா! நாங்கள் வழியடியோம்! செய்யா! வெண்ணீறாடி! செல்வா! மையார் தடங்கண் மடந்தை மணவாளா!” என்று பாடிப் பரவுகின்றனர். ‘வெண்ணீறாடி!’ என்றும், ‘மணவாளா’ என்றும் இறைவன் திருமேனியை வாழ்த்துகின்றனர். வெண்ணீறு அணிவது வினைநீக்கம் தரும். அங்ஙனமாயின் வினையினீங்கி விளங்கிய அறிவினனாகிய இறைவனுக்கு ஏன் வெண்ணீறு?

“.................தொழுதெழுவார்
வினைவளம் நீறெழ நீறணி அம்பலவன்.......”

என்பது திருக்கோவையார். அதாவது, தம்மைத் தொழுவார் வினை நீறாகும் வண்ணம் இறைவன் நீறணிகின்றான். குழந்தையை நோக்கித் தாய் மருந்துண்பதுபோல! இறைவன் திருமேனியிலுள்ள வெண்ணீறு ஊழிப்பெருந்தீயில் விளைந்தது. இறைவனை ‘ஆரழல்போற் செய்யா!’ என்றதால் படைப்புக்குரிய செம்மையையும், ‘வெண்மை’ என்றதால் பாதுகாப்பையும் ‘நீறு’ என்றதால் துடைப்பையும், ‘செல்வா’ என்றதால் வீடுபேறு அருளுதலையும் காட்டிற்று.

இறைவனைத் தீ வடிவினனாக வண்ங்குதல் வழக்கு. ஐம்பூதங்களில் தீ ஒன்றே சார்ந்த பொருளின் தூய்மையின்மையை நீக்கித் தூய்மை செய்து நலந்தருகிறது. அதுபோல இறைவனின் திருவருள், நம்முடைய ஆணவத்தைச் சுட்டெரித்து நலம் தருகிறது. இறைவன் உயிர்களை ஆட்கொள்ளும்வகை ஒன்றல்ல; பலப்பல; ஆட்கொள்ளும் வகைகள் மாறுபடுவது உயிர்களின் தகுதி நோக்கியேயாம். இறைவன் உயிர்களை ஆட்கொள்ள உயிரினது பொறி, புலன்களைத் திருவருள் வயத்ததாகச் செய்திருக்கின்றான். உயிர்கள் தம் அகக் கருவிகள் அருளார்ந்த நிலையை அடைந்திடச் சிவபூசையை மேற்கொள்கின்றன. சிவயோகம் கடைப்பிடித்து ஒழுகுகின்றன. மேலும், பெற்ற சிவானுபவத்தில் நிலைபெற்றிடவும் பழைய பழக்கம் வாராது தடுக்கவும், ஐந்தெழுத்தை எண்ணுகின்றன. இவையே உயிர்கள் உய்யும் வகை. உய்யும் நெறிகளில் எல்லாம் நின்று ஒழுகுதலால் இளைத்துப் போகாவண்ணம் இன்னே - இனிதே காத்தருள்க என்று பேசப்படுகிறது.

இறைவா! உயிர்களை ஆட்கொள்வதற்காகப் பிறப்பில் ஈடுபடுத்துதல், இன்பதுன்பங்களை வழங்குதல், அடித்தல், அணைத்தல் ஆகிய உனது அனைத்து அருள் விளையாட்டுத் துறைகளிலும் நாங்கள் பிழைபடாமல் தேர்ந்துள்ளோம். ஒரோவழி பிழைபட்டிருந்தாலும் பொறுத்துக் கொள்க! இன்று நேற்று நாங்கள் உனக்குத் தொழும்பு பூண்டவர்களல்ல; வழிவழி அடியோம்! பல்லாண்டு அடிமை பூண்டொழுகுவாரை எய்க்கவைப்பது ஆகாது. ஆதலின், எய்யாமற் காத்தருள்க! என்று வேண்டினார்கள். நாமும் வாழ்க்கையில் எய்த்தல் கூடாது. எய்ப்பினில் வைப்பாக விளங்கும் திருவருளை வாழ்த்துவோம்! அவனை நினைவூட்டும் திருநீறு அணிவோம்! அருளோடு உடனுறையும் பெருமானை வாழ்த்துவோம்! வாழ்வோம்!

ஆர்த்த பிறவித் துயர்கெடநா மார்த்தாடும்
தீர்ந்தனற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும்
கூத்தனிவ் வானுங் குவலயமு மெல்லோமும்
காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழன்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி யிருஞ்சுனைநீ ராடேலோ ரெம்பாவாய்.

12

இத்திருப்பாடல், பாவை நோன்பு நோற்கும் மகளிர். இறைவனின் திருப்புகழைப் பாடிக்கொண்டு சுனையாடுதலை இனிதே விளக்குகின்றது. நீராடும்பொழுது, இறைவன் திருப் புகழைப் பாடுதல் மூலம் உடலும் தூய்மையுறுகிறது; உயிரும் தூய்மையுறுகிறது. சாதாரண நீர்நிலைச் சுனைகள்கூடத் தீர்த்தங்களாகின்றன. மகளிர் வளையல்கள் ஒலிக்கவும் மேகலைகள் ஆரவாரம் செய்யவும், குழலணி மலர்களில் வண்டுகள் எழுந்து ஒலிக்கவும் பொய்கையைக் குடைந்து ஆடுகின்றனர்; ஈசனின் பொற்பாதத்தைப் பாடுகின்றனர்.

துயர், காரியம், துயருக்குக் காரணம் இருள்மலப் பிணிப்பு; அதாவது, ஆணவத்தின் சேர்க்கை; அறியாமையின் கூட்டு. உயிரை இயல்பிற் பற்றியிருக்கும் ஆணவத்தினை அகற்றி, இன்ப அன்பினை வழங்க அளிக்கப் பெறுவது பிறவி. பிணி நிக்க வந்தது பிறவி, சார்ந்ததன் காரணத்தால், உபசார வழக்கால் பிறவியும் பிணி என்றே கூறப்பெற்றது. பிறவி, ஒரு மருந்து, மருந்து உண்டபின் இன்பந்தருமானாலும் உண்ணும் பொழுதும், பத்தியம் காக்கும்பொழுதும் துன்பத்தினைத் தருகிறதல்லவா? அதுபோல அறியாமை நீக்கத்தில் இழப்பல்லாதனவற்றை இழப்பென்று கருதி அல்லலுறும் துன்பம் உண்டல்லவா? அத்துன்ப நுகர்வுக்குப் பின்தானே இன்பம்! அவ்வளவில் பிறவியும் துன்பமெனக் கூறப்பெறுகிறது. ஒரோவழி நோயில்லாவிடினும் சில உயிர்கள் பிறத்தலுண்டு. அது மற்றவர் நோய் நீக்க எடுக்கும் பிறப்பே யாகும். நாயன்மார்களின் பிறப்பு இத்தகையதே!

இத்திருப்பாடலில் இறைவனுடைய திருநாமம் ‘தீர்த்தன்’ என்று பேசப்படுகிறது. உயிர்கள் உய்யும் நெறிகளில் ஒன்று தீர்த்தமாடுதல், தீர்த்தமாடுதல் உயிர்கள் மகிழ்வொடு செய்யும் ஓர் அறப்பணி. இறையருள் பெறுதற்குரிய மற்ற நெறிகளைவிடத் தீர்த்தமாடுதலில் எளிமையும், மகிழ்ச்சியும் கலந்திருக்கிறது. அதனால் இறைவனே தீர்த்தங்களாகின்றான்.

“சென்றாடும் தீர்த்தங்கள் ஆனார் தாமே”

என்பது அப்பரடிகள் வாக்கு. தீர்த்தங்களாடும்பொழுது உடல் தண்ணீரிலும், உயிர் திருவருளிலும் தோயாமல் ஆடுவதில் பயனில்லை. மாசு நீங்கப் பிறவிப் பெருங்கடலில் மூழ்கலும், வினை மாசு விலக இறைவனின் அருள் நோக்கத் தீர்த்தத்தில் ஆடுதலும் உய்யும் நெறி. இத்திருப்பாடலில் ‘தீர்த்தன்’ என்றதால் தீர்த்தத்தையும் ‘நற்றில்லைச் சிற்றம்பலம்’ என்றதால் தலத்தையும், ‘கூத்தன்’ என்றதால் மூர்த்தியையும் எடுத்துக்காட்டி விளக்கினார். தீர்த்தம், தலம், மூர்த்தி ஆகிய முறையே ஆடி, வலம் வந்து, வாழ்த்துவாருக்கு எளிதில் திருவருள் கூட்டும். இம்மூன்றும் வெவ்வேறாக இல்லாமல் ஓருருவமாக விளங்கும் ஆடல் வல்லானின் எடுத்த பொற் பாதத்தைப் போற்றுதல் துயர் நீக்கும்; இன்பத்தைக் கூட்டுவிக்கும்; எடுத்த பொற்பாதத்தை இதயத்தில் ஏத்தி வழிபடுவோமாக!

பைங்குவளைக் கார்மலராற் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால்
தங்கண் மலங்கழுவு வார்வந்து சார்தவினால்
எங்கள் பிராட்டியு மெங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.

13

மார்கழித் திங்கள், பாவைநோன்பு நோற்கும் மகளிர் பூஞ்சுனையில் ஆடி விளையாடுகின்றனர். பூஞ்சுனையிலாடும் மகளிர் காணும் காட்சியனைத்தும் திருவருட் காட்சியாக விளங்குகின்றன. அவர்கள் குடைந்தாடி மகிழும் பூஞ்சுனையைச் சிவசக்தியாகப் பாவித்து ஆடுகின்றனர். பைங் குவளைக்கார் மலர். கருமை நிறமுடையதானாலும் நீல நிறத்தில் தோற்றமளிக்கிறது. நமையாளும் அருட் சக்தியின் நிறம் நீலம். ‘செங்கமலப் பைம் போது’ என்றதால் செம்மேனி உணர்த்தப் பெற்றது. நீலநிறத்ததாகிய அருட்சக்தி தண்ணருளையும், சிவப்பு நிறத்ததாகிய சிவம் வெவ்விய ஆற்றலையும் குறிக்கும். ஓவிய நூல் வல்லார் அருளுக்கு நீலத்தையும் ஆற்றலுக்குச் சிவப்பையும் பயன்டுத்துதல் அறிக.

நீலமலரும், வளையல்களும் அம்மையை உணர்த்திச் செந்தாமரை மலரும், பின்னிக்கிடக்கின்ற பாம்புகளும் சிவபெருமானை உணர்த்தின. உடலழுக்குக் கழுவுவார் சாரும் மடுப்போல, மன அழுக்கு நீக்குவார் நாடும் திருவருளை ஒத்திருப்பதால் பொய்கையின் மடு சிவசக்தி மயமாயிற்று. பொங்கும் மடு, இறைவனைக் காட்டுகிறது. குவளைமலர் இறைவனின் பேரருள் உடைமையையும், செங்கமலப்போது, வரம்பிலின்பம் உடைமையையும், குருகினம் தூய உடம்பினையும், அரவம் முடிவிலா ஆற்றலையும், மலங்கழுவுவார் பாசங்களினின்று இயற்கையில் நீங்கியமையையும் விளக்கிக் காட்டுகின்றன.

உய்திக்குரிய தகுதிப்பாட்டை அடைந்த உயிர்கள் காணும் காட்சியெல்லாம் சிவக்காட்சி! துய்ப்பனவற்றையும் உய்ப்பனவற்றையும் கூட அவை, சிவபோகமாக்கிக் கொள்ளும். இத்தகைய உயிர்களுக்குக் குடங்கள் அடுக்கிக் கூர்ச்சங்கள் அணிந்து, மந்திரங்களை ஓதிச் செய்யும் கிரியா தீட்சைகள் தேவையில்லை. இத்தகைய உயிர்கள், தாம் காணும் காட்சிகளிலிருந்தே ஞானத்தினைப் பெறும், பைங்குவளைக் கார்மலரைப் பார்க்கும் பக்குவ உயிர்கள் அருட்கண்ணால் நோக்கப் பெற்றுப் பாசத்தை ஒழித்திடும் அனுபவத்தைப் பெறுகின்றன. செங்கமலப் பைம்போது, பாவனையால் பாசத்தை ஒழித்துத் திருவருளைப் பதித்தல், அதாவது, ஞானாசிரியன் மாணவனது இதய கமலத்துக்குள் புகுந்து அவனறிவை வாங்கித் தன் இதய கமலத்தில் கலந்ததாகக் கொண்டு, மாணவன் அறிவின் புன்மையை நீக்கித் தனது தண்ணருளைச் சேர்த்து, மாணவனை இதயத்தில் மீண்டும் சேர்த்து நிலைப்படுத்துதலாம். இவ்வளவும் பாவனையில் நிகழுதல் வேண்டும். பாவனையால் இங்ஙனம் நிகழுமா? என்று ஐயுற வேண்டியதில்லை. கருடனைப் பாவிப்பதன் மூலம் பாம்பின் நஞ்சை இறக்குதலைக் காண்கின்றோம்.

‘அங்கம் குருகினம்’ என்பது, திருக்கரங்களால் தொட்டுப் பாசத்தை நீக்கிப் பதியருளைச் சேர்ப்பித்துக் காத்தல். ஒலி பேசப் பெறுவதால் திருவைந்தெழுத்தை உபதேசித்து நலம்புரிதல். இங்ஙனம், அம்மையப்பனாகிய பெருமானை அடைந்து, பெறுதற்குரிய அனைத்து இன்பத்தினையும் மடுவின் மேலேற்றி மொழிந்த எளிமையும் அருமையும் நினைந்து இன்புறத் தக்கது. நாமும் பெருமானின் திருவருளைப்பாடி மகிழ்ந்து அத்திருவருள் இன்பத்தினில் ஆழ்ந்து மகிழ்ந்து இன்புற்று ஆடுவோம்.”

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி யப்பொருளா மாபாடிச்
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி யந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி யாடேலோ ரெம்பாவாய்.

14

இத்திருப்பாடல், சிவபெருமானின் கீர்த்தியைப் பேசுகிறது. அம்மையின் புகழைப் பாடிப் பரவுகிறது. எம்பெருமானின் கீர்த்தியையும், அருளன்னையின் புகழையும் பாடி ஆடுக! என்று ஆற்றுப்படுத்துகிறது.

நோன்பு நோற்கும் மகளிர், பூஞ்சுனையில் பாய்ந்தாடும் பொழுது நிகழும் நிகழ்வுகளைப் பாடல் கூறுகிறது.

“காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாட”

மகளிர் சீதப்புனலாடுகின்றனர்; சிற்றம்பலம்பாடி வேதப் பொருள்பாடுகின்றனர். வேத விழுப்பொருளாக விளங்கும் இறைவனைப்பாடி ஆடுகின்றனர். இருள்நீக்கி இன்பம் வழங்கும் சோதியின் திறம்பாடி ஆடுகின்றனர். இறைவன் எப்பொருளுக்கும் முதலாக விளங்கும் நிலையைப் பாடி ஆடுகின்றனர். இறைவன் எல்லாப் பொருள்களுக்கும் ஈறாக விளங்குவதை எண்ணிப் பாடுகின்றனர்; உயிர்களின் அறிவை வேறுவேறாக வளர்த்து எடுத்தாளும் அன்னை திருவருட் சக்தியின் திறம்பாடி ஆட அழைக்கின்றனர்.

“வேதப் பொருள்பாடி” என்றதால் ஞானமாகிய அருவ நிலையையும் “சோதி” என்றதால் அருவுருவ நிலையையும் ‘கொன்றைத்தார்’ என்றதால் உருவ நிலையையும் ஓர்ந்து உணர்க! காலங் கடந்த பரமசிவம், அனாதியானது. கால தத்துவத்திற்கிசைந்த ஆதியாகவும் நின்று அருள்பாலிக்கும் அருமைப்பாட்டினை அடிகள் நினைந்துருகிப் பாடுகின்றார். அறிவியல் நியதிப்படி அனாதியாயிருக்கும். ஒன்றே இறுதி நிலையாதல் கூடும்.

இத்திருப் பாடலில் உணர்வைத் தொடும் பகுதி.

“பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி”

என்ற சொற்றொடராகும். பேதித்தலாவது உயிர்களின் அறிவை ஒருகாலுக்கொருகால் வேறாகச் செய்தல், அங்ஙனம் அறிவை வேறுபடுத்துதல் ‘வளர்த்து’ என்று கூறியதால் ஆக்கவழியின்பாற்பட்ட வேறுபாடு என்பது அறியத் தக்கது. “அறிதோறறியாமை” என்ற வள்ளுவர் வாக்கும் அறிக! குற்றங்கண்டவிடத்து அடித்தும், குணங் கண்டவிடத்து அணைத்தெடுத்துப் பாராட்டி வளர்ப்பதும் தாயின் இயல்பு. “புளியம் விளாறினால் மோதுவிப்பாய்பின்னை உகப்பாய்” என்றார் அப்பரடிகள். அன்னை சிவசக்தி உயிர்கள் பக்குவமடைதற்காக, உயிர்களைப் பிணித்து நின்ற மலத்திற்கு அனுகூலமாய் உடன்பட்டு நின்று வினைப்போகங்களில் அழுந்தி அனுபவிக்கச் செய்கிறாள்! உயிர்கள், வினைப் போகத்தில் திளைத்து அயரும்பொழுது திருவருள் நினைப்பினைத் தந்து பக்குவத்தை வளர்த்து அருட்சக்தியாய் நின்று இன்பம் ஊட்டுவாள்! மறைப்பதும் அருட்சக்தியே! அருளுவதும் அந்த அருட் சக்தியே! என்பதை விளக்கப் “பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை” என்றார். மறைக்கும் ஆற்றலாய் உடன்நின்று வினைப் போகத்தில் அழுத்தம் பண்ணி உயிரைப் பிணித்து நிற்கும் மலம், துய்ப்பின்வழி ஆற்றலை இழக்கிறது. வளர்த்தலாவது, உயிரை இன்பதுன்பத்தை நுகரச் செய்தல். அதேபொழுது வினைப் போகத்திலேயே ஆழ்ந்திடாவண்ணம் உரிய நேரத்தில் எடுத்தணைத்து ஏற்றம் தருதலை ‘எடுத்தல்’ என்றார். அருட் சக்தியை வணங்குதல் இருளை நீக்கும்; இன்பம் தரும்.

ஓரொருகா லெம்பெருமா னென்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர
நீரொருகா லோவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள்
பேரரையற் கிங்ஙனே பித்தொருவ ராமாறும்
ஆரொருவ ரிவ்வண்ண மாட்கொள்ளும் வித்தகர்தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.

15

இத்திருப்பாட்டில் இறைவனின் திருவருள் வசப்பட்ட ஒரு பெண்ணின் சொல்லையும் செயலையும் விளக்குகிறாள் பிறிதொரு பெண். அந்தப் பெண் அறிவிப்பது போல் அடிகளே அறிவிக்கிறார். சிவபெருமானிடம் தலையன்பு கொண்ட பெண்ணொருத்தியின் தன்மைகளை எல்லாப் பெண்களும் உணரும் வண்ணம் ஒருத்தி விளக்கும் முறையில் பாடல் அமைந்துள்ளது.

சிவனருள் திறத்தில் ஆழ்ந்த மூத்த நிலையில் நிற்கும் இவள், சில சமயத்தில் “எம்பெருமானே” என்று பல முறை அரற்றுகிறாள். அவனே, “நம் பெருமான்” என்று அவன் புகழை இடைவிடாது வாயினாற் பேசுகிறாள்; சிந்தை மகிழ்ச்சியில் பொங்கப் பேசுகிறாள்; கண்களில் நீர் பொழிய நின்று பேசுகிறாள்; நிலத்தில் வீழ்ந்து வணங்குகிறாள்; இடையில் மாய்மாலம் காட்டும் தேவர்கள் யாரையும் வணங்கமாட்டாள். இறைவனுக்குப் பித்தானார் செயல் இது போலும்! இந்நெறியில் ஆட்கொள்ளும் அந்த வித்தகர் யார்? அந்த வித்தகரை-ஞான வடிவினரின் திருவடிகளை வாயாரப் பாடிப் புனலில் ஆடுவோமாக என்று அழைக்கிறாள்.

தலைவன் நாமத்தைத் தலையன்பு பூண்டோர் பித்தேறி அரற்றுதல் இயற்கை அதிலும், மங்கையர்க்கும் மங்கையர் மனம் பெற்றோர்க்கும் இயல்பானது. இறைவன் திருநாமத்தை இடைவிடாமல் சொல்லுவதிலேயே இன்பம் தோன்றுகிறது. “நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே!” என்புழி மறத்தல் இல்லை. இறைவன் திருநாமத்தை இடைவிடாமல் சொல்லுவதால் சித்தத்தில் களிப்பு மிகுகின்றது. அவ்வழி கண்கள் இரண்டிலும் ஆனந்த அருவி வழிகிறது. இந்த மெய்ப்பாட்டு நிலையை அடைந்தவர்கள் உயிர் நாயகனாக - தலையளித்து ஆளும் தலைவனாகச் சிவத்தினையே கொள்வர்; சென்று-சிறு தேவதைகளை வணங்கார்; விண்னோரைப் பணியார்.

“கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு குடி கெடினும்” என்பது திருவாசகம். இறைவன், “எவ்வுயிர்க்கும் உடைமையாளன்; நம்பெருமான்” என்றும் அதே பொழுது தம்முடைய தனி உரிமை பாராட்டும் உணர்வில் “எம்பெருமான்” என்றும் கூறுகிறார்.

இத்திருப்பாடலில் முத்த நிலையை எய்திய உயிர், மனம், மொழி, மெய்களால் ஒருசேர ஒரு நிலையில் இறைவனை வாழ்த்தி வணங்கும் பெற்றிமையை விளக்கும் திறம், அருமையுடையது. “நம்பெருமான் சீரொருகால் ஓவாள்!” என்றதால் வாயும், “சித்தம் களிகூர” என்றதால் மனமும், “பாரொருகால் வந்தனையாள்” என்றதால் மெய்யும் வழிபாட்டில் ஈடுபடும் நிலை விளக்கப்படுகிறது. இப்பாடலில் முத்த நிலையடைந்த பெண்ணின் கண்கள் ஆனந்த அருவிக் கண்ணீரிலே மூழ்கி ஆடுகின்றன. அவள் தம் திருவுடல் பொய்கை நீரிலே மகிழ்ந்து ஆடுகிறது. இவ்விரு நிலையும் ஒருசேரப் பெற்றார், மண்ணிற் பிறந்த பயன் எய்துதல் எளிது. ஆதலால், இறைவன் திருப்புகழை நாமும் வாயாரப் பாடிச் சிந்தையால் நினைந்து, உடலால் வணங்கி உய்தி பெறுவோமாக!

முன்னிக் கடலைச் சுருக்கி யெழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை யாளுடையா ளிட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை யாளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமா னன்பர்க்கு
முன்னி யவன் நமக்கு முன்சுரக்கு மின்னருளே
என்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய்.

16

இத்திருப்பாட்டில் அம்மையின் அருளைப்போல மழை பொழிக! என்று வேண்டப்படுகிறது. பாவை நோன்பிற்கு உறுப்பு, மழை; பாவை நோன்பின் பயன் மாமழை; திருவருள் மாமழை; மேகமே! நீ, இக்கடல் நீரைக் குடித்து எம் அன்னையைப் போல நீல நிறம் பெற்று விளங்குக! நமையாளும் தேவியின் இடையைப் போல மின்னுக! தாயின் சிலம்பைப்போல ஒலித்திடுக! அன்னையின் அழகிய திருப்புருவம் போல வானவில் காட்டுக! இங்ஙனம் நீ விளங்கி எமை ஆளுடைய தலைவனை என்றும் பிரியாத பேரருட்சக்தியின் அருளைப்போல மழையைப் பொழிந்திடுக! என்று வேண்டப்படுகிறது.

இன்னும் முறையாகக் கன்னிப் பெண்கள் பாவைப் பாடல் பாடி, நீராடி நோன்பு நோற்றால் வான்மழை தவறாது பெய்யும். இது சத்தியம்! நமது குன்றக்குடியில் கடந்த பத்தாண்டுகளாக இசைஞானியார் மாதர் சங்கத்தினர், மார்கழித் திங்களில் நாட்காலை நீராடிப் பாவை நோன்பு நோற்று வருகின்றனர். குன்றக்குடியில் மழை பொய்த்த தில்லை. தமிழக மகளிர் பாவைப் பாடல்களைப் பாடிப் பாவை நோன்பு நோற்றால் மழை பொழிவது உறுதி.

பாவை நோன்பின் பொதுப்பயன் வான்மழை சுரத்தலும், நாடு வளம் பெறுதலுமாகும்; சிறப்புப் பயன் திருவருட்பேறு. மண்ணில் வளம் இன்றேல் உயிர்களின் வினை நீக்கத்திற்குரிய துய்ப்பனவும் உய்ப்பனவும் கிடைக்காதன்றோ! துய்ப்பு இல்வழி வினைப்போகம் நீங்காது. ஆதலால், மன்னுயிர் உய்தியும், மண்ணின் வளமும் இணைப்புடையன. துய்ப்பனவும் உய்ப்பனவும் இல்லாத வழி துறத்தலும்கூட இல்லை. இஃதொரு சிறந்த வாழ்வியல் உண்மை. நம்முடைய சமயம் இந்த அடிப்படையில் அமைந்திருக்கிறது. அதனாலன்றோ, நம்பியாரூரர், “இம்மையே தரும் சோறும் கூறையும்” என்றார். கச்சியப்ப சிவாசாரியாரும்.

“வான்மழை வழாது பெய்க! மலிவளம் சுரக்க! மன்னன் கோன்முறை அரசு செய்க! குறைவிலாது உயிர்கள் வாழ்க” என்று அருளிச்செய்தமையை அறிக.

கதிரவனின் ஒளிக்கற்றை வீசும்பொழுது மழையும் பொழியுமானால் கதிரவனுக்கு எதிர்த்திசையில் வானவில் தோன்றும். இங்குச் சிவசூரியன் முன்னிலையில் அம்மையின் அருள்மேகம் கருணைமழை பொழிவதால் சிவசூரியனை நோக்கும் திருப்புருவம் என்னச் சிலைகுலவி என்றார். இறைவன், எம்பிராட்டியை எப்போதும் பிரியாதவன். பொருள், பொருளின் ஆற்றல்-இறை பிரித்தற்கியலாதன. பொருளுக்கு ஆற்றலின்றேல்! இயக்கமில்லை; இனிய பயன்களும் இல்லை. ஆற்றல் பற்றிநின்று தொழிற்படும் பொருள் தேவை. நெருப்பு பற்றி எரிய விறகு தேவை. மின்னாற்றல் சிறந்து தொழிற்பட இயந்திரங்கள் தேவை. இங்குச் சக்தி, ஆற்றல்! சிவம், பொருள்! அதனால் பிரிவில்லை! அம்மையொடு பிரிவில்லா அப்பனை என்றும் தொழுவார்க்கு இன்பம்.

வான்மழை பொழியும்! வளம் சுரக்கும்! பாவைப் பாடல்களைப் பாடுவோம்! இயற்கைப் பூஞ்சுனையில் பாய்ந்து ஆடுவோம்! எம்பிராட்டியின் புகழைப் பாடுவோம்! மாமழை காண்போம்! மண்ணில் வளம் கண்டிடுவோம்! இனிதே வாழ்வோம்! இன்ப அன்பு நெறியில் சென்றிடுவோம்.

செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கு மிலாததோ ரின்பநம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை
அங்க ணரசை யடியோங்கட் காரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்

17

கன்னிப்பெண்கள் பலர் பூஞ்சுனையில் குடைந்தாடுகின்றர்; இறைவன் புகழ் பாடி ஆடுகின்றனர். அவர்களில் ஒருத்தி குளிருக்கு அஞ்சி கரையிலிருக்கிறாள். அவளை நோக்கிப் பாடியது இந்தப் பாடல். “கொங்குண் கருங்குழலி” என்று அவள் அழைக்கப்படுகிறாள். ஒதுங்கியிருந்தவளும் நற்பெண்! சிந்தையில் வளர்ந்த சிவமணம் பூத்த பெண்ணேயாம்; அவள், “கொங்குண் கருங்குழலி” அதாவது, மணம் பொருந்திய கூந்தலையுடையவள்; நற்பெண்டிர் கூந்தலுக்கே மணம் உண்டு.

கொங்குண் கருங்குழலி! இறைவனின் தண்ணருள் நம்முடைய குற்றங்களை நீக்கி நிறை நலம் நல்க - விண்ணவர்கள்பால் இல்லாத ஒரு தனி இன்பத்தை வழங்க நமது இல்லங்களாகிய உடல்கள் தோறும் எழுந்தருளித் திருவடிகளைத் தந்து அருளுகின்ற அருட்டிருச் செல்வன்; வென்றித் திருவுடையான்; அமுதமனையான் நம்தலைவன். நன்மைகள் உண்டாக அவனைப் பாட வருக! பூஞ்சுனையில் நீராடிப் பாடி ஆடிட வருக! என்று அழைக்கின்றனர். இறைவன், உயிர்களின் குற்றங்களைக் கருதிப் புறக்கணிப்பதில்லை; கருணையோடு ஆட்கொள்வான்; உயிர்கள் துன்புறா வண்ணம் குற்றங்களை நீக்கியருள்வான்; குணங்களைக் கொடுத்தாட்கொள்கின்றான்; உயிர்களை ஆட்கொள்வதற்காக உயிர்கள் உறையும் உடல்கள் தோறும் எழுந்தருள்கின்றான்; செங்கமலப் பொற்பாதங்களைத் தந்தருள்கின்றான்.

இறைவன் சேவகன், அவன்தன் வீரம் உயிர்களைக் காக்கிறது. இறைவனுடைய வீரம் அநீதிகளிலிருந்து உயிர் குலத்தைக் காத்தாள்கிறது. மிகவுயர்ந்த தலைவனாகிய இறைவன், மிகத் தாழ்ந்த உயிர்களை நோக்கி இறங்கி வந்து, உயிர்களின் செவ்வி பார்த்து உயிர்கள் உவப்பன செய்து ஆட்கொண்டருளும் திறன் நோக்கிச் ‘சேவகள்’ என்று அருளிச் செய்தார்.

விண்ணோர்கள் நோற்றுப் பெற்ற இன்பம் அதிகார இன்பமே! அதிகாரத்தின் வழி செருக்கு உண்டு. யாதொரு அதிகாரமும் இல்லாதபொழுது எல்லாரும் நல்லவர்களே! ஆயினும் அதிகாரம் கிடைத்தபோது குணங்கள் கெடுதல் இயற்கை அதிகாரம் தொழிற்படும்பொழுது தன்முனைப்புத் தோன்றும்; புகழ்வேட்டையில் நாட்டம் கூடும். ஆதலால், விண்ணோர்கள் செருக்கில் தலைப்பட்டு அழிவதேயன்றி அழிவிலின்பத்தை அவர்கள் ஒருபொழுதும் பெறமாட்டார்கள். விண்ணோர்கள் சிவலோகம் சென்று சிவபெரு மானின் செவ்வி பார்த்து-கருணை நோக்கிக்காத்துக் கிடக்கின்றனர். ஆனால், சிவபெருமானோ நம்மை ஆட்கொள்வதற்காக விண்ணிலிருந்து மண்ணகம் போந்து நம் இல்லங்கள்தோறும் எழுந்தருளிப் பொற்பாதங்களைத் தந்தருளுகின்றான் என்றதால், இறைவன் திருவருள், வானோர்க்கு அருமையாகவும், மண்ணில் உள்ள நல்லவர்களுக்கு எளிமையாகவும் கிடைத்திடுவது எண்ணி இன்புறத்தக்கது.

அண்ணா மலையா னடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றார்போற்
கண்ணா ரிரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணா ரொளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி யாணா யவியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி யித்தனையும் வேறாகிக்
கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணேயிப் பூம்புனல்பாய்ந்தாடேலோ ரெம்பாவாய்.

18

இன்று பாடிய திருப்பாட்டில் இறைவன் எல்லாமாய், அல்லதுமாய், அமுதமுமாய் நின்றருளும் இயல்பு பாராட்டப் பெறுகிறது; போற்றப்பெறுகிறது. பெண்ணே! அண்ணாமலை அண்ணலின் திருவடித் தாமரைகளின் திருமுன்பில் அமரர்களின் மணிமுடிகள் ஒளியிழந்து போயின! கதிரவனின் ஒளிக்கதிர் முன்பு இருள் இரித்தோடியது. விண்மீன்கள் ஒளி குன்றிப்போயின! பொழுது புலர்ந்து விட்டது! நமையாளும் பெருமாள் ஆணாகிப், பெண்ணாகி, அலியாகி, வானுலகமாகி, மண்ணுலகமாகி, இவ்வளவிற்கும் வேறாகி, அன்பர்க்கு அமுதமுமாகி நின்றருளும் திருவடிகளைப் பாடிப் புதுப்புனலில் மூழ்கியாடிட வந்திடுக! என்று பேசப் பெறுகிறது!

இத்திருப்பாடல் முத்திநிலை யெய்திய பெண் பாடிய பாடல். இத்திருப்பாடல், உயிர் இறையருளிற் கலந்து நின்றிடும் இயல்பினை விளக்குகிறது; ஆண்டவன் திருவடிகளே தீர்த்தம் என்று கூறுகிறது. ‘அண்ணமலையான்’ என்பது அண்ணாமலையையே குறிக்கும். திருவண்ணாமலையிலுள்ள திருமலை, ஞானத் திருமலை! அதுவே சிவம்! அம்மலையைத் தொழுதலே பேறு. அதாவது, இறைவன் அமரர்கள் அண்ணாந்து பார்க்கும் அளவுக்குச் செந்தீ மலையாக உயர்ந்து, அண்ணாமலையான பின்பே தலம், திருவண்ணாமலையென்று பெயர் பெற்றது. தலத்தை வைத்து மூர்த்திக்கு வந்த பெயரன்று; மூர்த்தியை வைத்துத் தலத்திற்கு வந்த பெயர்.

இறைவன் உயிர்களுடன் உடனாகி, வேறாகி, ஒன்றாகி ஆட்கொண்டருளும் படிநிலைகளைப் பாடல் விளக்குகிறது. “பெண்ணாகி, ஆணாய், அலியாய்ப் பிறங்கொளிசேர் விண்ணாகி, மண்ணாகி” என்று குறிப்பிட்டதால், இத்திருவுருவங்களில் உயிர்களோடு உடன் சேர்ந்து நின்று, ஊட்டி, மலம் நீக்கும் கருணைத் திறம் ஓர்க! இக்குறிப்பிலேயே.

“.....................
ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ
ஒருகுலமும் சுற்றமும் ஓரூரும் நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ
துணையாய்என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ
இப்பொன்நீ இம்மணிநீ இம்முத்துநீ
இறைவன்நீ ஏறூர்ந்த செல்வன் நீயே”

என்றார் அப்பரடிகள்.

“இத்தனையும் வேறாகி” என்றதால், வேறாய் நின்றும் “கண்ணாரமுதமாய்” என்றதால் ஒன்றாகியும் உயிர்களை ஆட்கொள்ளும் திறன் அறிக, உயிர்களோடு திருவருள் உடனாதல் மூலம் வேறுபாடின்றி நம்பிக்கைக்குரியனவாகி அதேபொழுது வேறாதல் மூலம் தேவைப்படும்பொழுது கடிதலுக்கும், தடிதலுக்கும் உரியதாகி ஒன்றாதல் மூலம் உயிர்நலத்தையே நாடுதலால் இன்பம் விளைவித்தலும் ஏற்புடையதாகிறது.

பெண், ஆண், அலி என்பன அறிவுடைப் பொருள்கள், மற்றயாவும் அறிவிலாப் பொருள்கள். அறிவுடைப் பொருள் இயங்கும்; அறிவிலாப் பொருள்கள் இயங்கா. திருவருள் இவ்விருவகைப் பொருள்களுக்குள்ளும் கலந்து நின்று உயிர்களின் உய்திக்குத் துணை செய்கிறது. இத்திருப்பாடலில் இறைவன் திருவடியைப் புகழ்தலால் திருவருட்சக்தியை வியந்ததாம். உயிர்களைத் தாங்கி அருள் பாலித்திடும் பாங்கு திருவடிப் போதுகளிலேயேயாம். ஆதலால், திருவடிகள் என்றாலும், திருவருள் என்றாலும் ஒரு பொருளே; திருவடிகளைப் போற்றுவோம்! திருவருளை வாழ்த்துவோம்! திருவெல்லாம் பெற்றிடுவோம்!

உங்கையிற் பிள்ளை யுனக்கே யடைக்கலமென்
றங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமா னுனக்கொன் றுரைப்போங்கேள்
எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க
எங்கை யுனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகலெங்கண் மற்றொன்றுங் காணற்க
இங்கிப் பரிசே யெமக்கெங்கோ னல்குதியேல்
எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய்.

19

இன்றைய பாவைப் பாட்டு, திருவருள் தோய்வில் ஒன்றாகி நிற்கும் பெண்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் இறைவனுக்கே ஆக்குக! என்று பாடியது.

எங்கள் தலைவனே! “உங்கையிலுள்ள பிள்ளை உனக்கே அடைக்கலம்” என்னும் பழமொழியை நின்னிடத்தில் மீண்டும் விண்ணப்பிக்க அஞ்சுகின்றோம். ஐய, ஒரு விண்ணப்பம்! கேட்டருள்க! எங்கள் தோள்கள் நின் அன்பரையே தழுவுக! எங்கள் கைகள் உனக்கே பணி செய்க! எங்கள் கண்கள் இரவும் பகலும் நின்னையே காண்க! இவ்விண்ணப்பத்தை ஏற்றருளிச் செய்யின் நாங்கள் பெரும் பேறு பெற்றவர்கள்! யாதொரு கவலையும் அற்றவர்கள். இறுமாந்து வாழ்வோம். ஞாயிறு எந்தத் திசையில் தோன்றினால் என்ன?

“உன் கையிற் பிள்ளை; உனக்கே அடைக்கலம்”- இது பழமொழி. திருமணக் காலத்தில் மணப் பெண்ணை மணமகன் கையில் ஒப்படைத்துச் சொல்லும் பழமொழி என்பர். தாயிடம் பிள்ளையைக் காப்பாற்று-என்று கூறியது என்பர். தாய்க்குப் பிள்ளையை வளர்த்தல் கடமை. தாய்க்கு நலமும் மகிழ்வும் தரும்பணி. ஆதலால் தாய்க்கு அறிவுறுத்த வேண்டியதில்லை. உயிர்க்குத் தந்தை இறைவன்; உயிர்க்குத் தாய் பராசக்தி. தந்தையாகிய இறைவன் தாய் பராசக்தியிடம் உணர்த்தியது என்றும் கொள்ளலாம். “நானுனக்குப் பிள்ளை; இன்றல்ல, நேற்றல்ல, வழிவழி அடியேன்; என்னைக் காப்பாற்றி அருள்க!” என்று எல்லாம் அறிந்த நின்னிடத்தில் விண்ணப்பிக்க அஞ்சுகின்றோம். உரிமைப் பொருளைவிட அடைக்கலப் பொருளைப் பாதுகாத்தல் கடமை. நாங்களோ உனக்கு அடைக்கலப் பொருள்! உரிமைப் பொருளுங் கூட! ஆதலால், நாங்கள் வேண்டுவதை எமக்கருளிக் காப்பாற்றுக! நாங்கள் கேட்பதும் மிகையன்று! ஆண்டானுக்கும் அடிமைக்கும் ஒருசேர நன்மை பயப்பவை; சிறப்புடையன; ஆண்டானுக்கு நலம் செய்வன; கருத்துச் சிறப்புடையன; ஆண்டானுக்கல்லாது அடிமைக்கே நலம் செய்வன - நலமுடையன அல்ல. அங்ஙனம் வேண்டுபவர்கள் ஆண்டான் - அடிமை நெறிமுறையில் நிற்பவர்கள் அல்லர்; மாணிக்கவாசகர் நல்லடிமை;

“மண்மேல் யாக்கை விடுமாறும்
வந்துன் கழற்கே புகுமாறும்

அண்ணா எண்ணக் கடவேனோ
அடிமை சால அழகுடைத்தே!”

என்று பாடுகின்றார்.

கன்னிப் பெண்கள் ஆண்டான் நலனுக்கு முரணில்லாத - ஆண்டான் நலனுக்கு நலம் சேர்க்கும் வகையிலேயே வேண்டுகின்றனர். “சிவனடியார்களையே மணக்கவேண்டும்; சிவபெருமான் பணிகளையே செய்ய வேண்டும்; வேறு எப்பணியும் செய்யலாகாது” என்று வேண்டுகின்றனர். கன்னிப்பெண்களின் அடிமைத் திறத்தில் நிற்கின்றனர். எங்கள் கண்கள் நின்காட்சி தவிர, வேறு காட்சியைக் காணற்க! வேறொன்றையும் காணாத துணிவு புலப்படுகிறது. இவ்வகையால் காண்பனவும் துய்ப்பனவும், பணி செய்வனவும் பெருமானுக்கே என்ற தெளிவு பெற்றுள்ளனர். “மணமகன்”-என்றதால் இம்மைப் பயனும், ‘பணி’ என்றதால் மறுமைப் பயனும் ‘கண்ணுதற் காட்சியே காண்க’ என்றதால் வீடுபேறும் பெறுதற் குரியன.

திருவருள் நாட்டம் உடையார் காதல் திருவருள் வழியது; சுந்தரர்-பரவையார் காதல்; சுந்தரர்-சங்கிலியார் காதல் ஆகியவற்றால் அறிக! அடியாரோடு இணங்கி வாழவும், இறைவனுக்குப் பணி செய்யவும், கண்கள் அவன் காட்சியைக் காணவும் அருளப் பெற்றதால் ஞாயிறு எங்குத் தோன்றினால் என்ன? நமது நாட்டு மகளிர் குலமும் இந் நன்னெறியில் நின்றொழுகி இறுமாந்து வாழ்ந்திட நமது பிரார்த்தனை!

போற்றி யருளுகநின் னாதியாம் பாதமலர்
போற்றி யருளுகநின் னந்தமாஞ் செந்தளிர்கள்
போற்றியெல் லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம்
போற்றியெல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்

போற்றியெல் லாவுயிர்க்கு மீறா மிணையடிகள்
போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம்
போற்றியா முய்யவாட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியா மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய்.

20

மார்கழித் திங்கள்-பாவை நோன்பு நிறைவுறும் நன்னாள்! இருள் மயக்கில் கிடந்த உயிர்கள், அறிவு புலரப் பெற்றுப் பொலிவெய்தின; துய்ப்பனவும் உய்ப்பனவும் பெற்றுத் துய்த்தன; இனிதே வளர்ந்தன; அன்னையின் கருணையினால் திருவருள் நினைப்பினைப் பெற்றன; எம்பெருமானை உள்ளத்திலே எழுந்தருளச் செய்து, கொண்டன; அந்த உயிர்கள் முத்திநிலை எய்தி, மோனநிலை எய்திப் பாடிடும் அருமையான பாடல் இது. இறைவனை அண்மித்து நிற்பவர்கள் திருவடிகளையே காண்பர்; பாடுவர், இறைக்காட்சியில் வண்ணக்காட்சி, நெடுந்தொலைவுக் காட்சி! வடிவக்காட்சி, செம்மைக்காட்சி! திருவடிக்காட்சி, அண்மைக்காட்சி!

“வண்ணந்தான் அதுகாட்டி வடிவு காட்டி
மலர்க்கழல்கள் அவைகாட்டி”

என்பார் நமது பெருமான். திருநாவுக்கரசர் பாடிய திருவடித் தாண்டகங்கள் ஊனுயிர் உருக்குந் தன்மையன. மூத்த நிலையில் நின்று திருக்குறள் தந்த திருவள்ளுவனாரும் திருவடிகளைப் பற்றியே பேசினார்.

இத் திருப்பாட்டில் முத்திநிலை எய்திய மகளிர், இறைவன் திருவடிகளையே எல்லாமாக வியந்து பாடுகின்றனர். கன்னி மகளிர், மார்கழி நீராடி ஒன்று சேர்ந்து இறைவன் திருவடிகளைப் போற்றித் துதிக்கின்றனர். “காப்பாற்றும் பெருமானே! எப்பொருட்கும் முதலாயுள்ள திருவடிகளைக் கொடுத்தருள்க! எல்லாவற்றிருக்கும் ஈறாக உள்ள தளிரனைய திருவடிகளைக் கொடுத்தருள்க! உயிர்க் குலத்தின் தோற்றத்திற்குக் காரணமாகவுள்ள திருவடிகளுக்கு வணக்கம். எல்லாவுயிர்களுக்கும் காவலாக விளங்கும் கழல்களுக்கு வணக்கம். எல்லாவுயிர்களுக்கும் முடிவெய்துதற்குக் காரணமாய திருவடிகளுக்கு வணக்கம். அரியும் அயனும் காணாத கமலத் திருவடிகளுக்கு வணக்கம். எங்களை அடிமையாகக் கொண்டு ஆண்டருளி உய்தி கூட்டித் தரும் பொன்மலர்த் திருவடிகளுக்கு வணக்கம். இங்ஙனம் அழகமர் திருவடிகளைப் பலகாலும் வணங்கிப் பூம்புனல் பாய்ந்தாடுவோம்” என்று துதிக்கின்றனர்.

இத்திருப்பாடலில் இறைவன் திருவடிகள் ஐந்தொழில் நிகழ்த்தும் இயல்பு வாழ்த்தப் பெறுகிறது. மார்கழி ஆதிரை நாள், சிவபுண்ணியத்திற்குரிய நன்னாள்! அன்று பெருமானை அருச்சித்தல் சிறப்பு, ‘தோற்றமாம்’ என்றது படைப்பையும் ‘போகமாம்’ என்றது காப்பையும் ‘ஈறாம்’ என்றது அழிப்பையும், ‘காணாத புண்டரிகம்’ என்றது மறைப்பையும், ‘ஆட்கொண்டருளும் பொன் மலர்கள்’ என்றது அருளையும் கூறிற்று.

இத்திருப்பாடலில் எட்டுப் போற்றிகள் வந்துள்ளன. ‘போற்றி’ என்ற சொல், தமிழில் அருச்சனைக்குரிய மந்திரச் சொல். எண்வகைப் போற்றிகள் அமைந்துள்ள இப்பாடலை நாள்தோறும் ஓதி மலர் தூவி வழிபட்டால் இறைவனின் எண்குணங்களும் நம்மிடம் வந்து தங்கும். இங்ஙனம் மார்கழி நீராட்டு, திருவருளோடு ஒன்றாகிய இன்பக் கலப்பாய் - அன்பு நீரோட்டமாய் அமைந்தது. நிகழ்வனவெல்லாம் திருவடிகளாகிய திருவருட்சக்தியே என்று காண வைத்ததால் திருவருட்சக்தியை வியந்ததாயிற்று.

இந்நாட்டுப் பாவையர் பாவைநோன்பு மரபுவழி நோற்றிடுக! பாவைப் பாடல்களைப் பாடிப் பூஞ்சுனையில் ஆடிடுக! வான்மழை பொழிக! மலிவளம் சுரக்க! உயிர்கள் தழைத்தினிது வாழ்க! இறைவன் மனக்கோயிலில் எழுந்தருள்க! இன்பமே சூழ்க! எல்லோரும் வாழ்க!

திருப்பள்ளியெழுச்சி


திரோதான சுத்தி


திருச்சிற்றம்பலம்


போற்றியென் வாழ்முத லாகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண்
டேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்
எழினகை கொண்டுநின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
ஏற்றுயர் கொடியுடை யாயெனை யுடையாய்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே.

1

திருவாசகத்துள் திருப்பள்ளியெழுச்சி, நலம் நாடுவோர் நாளும் ஓதுதற்குரியது. நூற்குறிப்பு, திருப்பள்ளியெழுச்சியைத் ‘திரோதன சுத்தி’ என்று கூறும். நத்தையை நினைத்தால் முத்தை மகிழ முடியாது. புனுகு பூனையை நினைத்தால் புனுகின் மணத்தை அனுபவிக்க முடியாது. நத்தையை, புனுகு பூனையை மறந்தால்தான் துய்ப்பு; அவ்வழி மகிழ்ச்சி! அதுபோல் வினைப்பயனைத் துய்க்குங்கால் வினை நிகழ்ந்த வழியை நினைத்தால் துய்ப்பு தடைப்படும். துய்ப்புக்குத் துணை நிற்பது திரோதானம்.

உயிருக்கு மறைப்பினைச் செய்து வினைப்பயனைத் துய்க்குமாறு பக்குவம் செய்த திரோதான சக்தி, அருட் சக்தியாக வெளிப்பட்டு அருளும் காலம் திருப்பள்ளியெழுச்சி. இப்பக்குவ நிலையை, உயிர்கள் பெற்று, இறைவனை எழுந்தருளவும், வேண்டிச் செய்யும் பணியையும் கேட்டு நிற்பது திருப்பள்ளியெழுச்சி! உயிர், அருட்சக்தி தலைப்படலால் தனது உள்ளத்தில் இறைவனை எழுந்தருளும்படி வேண்டி, அங்ஙனமே எழுந்தருளப் பெற்றுத் திருவருள் வழிப்பணி நிற்கும் வேட்கையைத் தெரிவிப்பது திருப்பள்ளி யெழுச்சி. பாழறையாகிய மன அறையில் இறைவனை எழுந்தருளச் செய்யும் பாடல்களே திருப்பள்ளி யெழுச்சி. திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவன், மனக்கோயிலில் குடிபுகும் நாளே உயிர்கள் வாழத் தொடங்கும் நாள்; இன்பநாள்.

“எம் பெருமானே! பொழுது புலர்ந்தது! நின் திருவடிகளில் மலரைத் தூவித் தொழக் காத்திருக்கின்றோம். பள்ளி யெழுந்தருள்க!”

“அடியேனது வாழ்விற்கு மூலமாகிய பொருளே! தாமரைகள் மலரும் நன்செய் சூழ்ந்த திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!, ஆனேற்றுக் கொடியை உயர்த்தியவனே! என்னை அடிமையாகப் பெற்றவனே! தலைவா! பொழுது புலர்ந்தது! நினது மலரடிகளில் மலர்களைச் சாத்தி எமக்கருளும் திருமுகத்தின் புன்முறுவலை நினைத்து திருவடிகளைத் தொழுவோம்! எழுந்தருள்க!” என்று அழைக்கின்றார்.

உயிர் வாழ்க்கைக்கு உய்தியாகிய ஊதியம் தேட கடவுள் ‘முதல்’ என்பதை உணர்த்த ‘வாழ்முதல்’ என்றார். கடவுள் வாழ்த்துப் பொருள் மட்டுமன்று; வாழ்வுப் பொருளுமாம்! புல்லும் பூண்டும், கல்லும் கட்டியும் இல்லாது உழுத சேற்றில், செந்தாமரை தோன்றி மலரும். முரண்பாடுகளும் மாறுபாடுகளும் இல்லாது அன்பில் உழுத பழுத்த மனத்தடியார்-சிவானுபூதிச் செல்வர் சிந்தையில் பரமசிவம் தோன்றும்.

“போற்றி! என் வாழ் முதலாகிய பொருளே!” “திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!” “ஏற்றுயர் கொடியுடையாய்!” ‘எனையுடையாய்!’ ‘எம்பெருமான்’ என்ற ஐந்து விளிகள், இறைவனின் ஐந்து முகங்களை நினைந்து அழைத்ததை உணர்த்தும். ஈசானம், தத்புருடம், அகோரம், வாமதேவம், சத்தியோஜாதம் என்பன திருமுகங்கள். இவ்வைந்தும் முறையே ஈசானம் வடகிழக்கும், தத்புருடம் கிழக்கும், அகோரம் தெற்கும், வாமதேவம் வடக்கும், சத்தியோஜாதம் மேற்கும் ஆகிய திசைகளை நோக்கி இருந்தருள் செய்வன. இத் திருமுகங்களில் இறைவனை அருச்சித்து வழிபடுவோர் இன்புறுவர்.

ஞானம் விரும்புவோர் ஈசானத்திலும், செல்வம் விரும்புவோர் தத்புருடத்திலும், பாச நீக்கம் விரும்புவோர் அகோரத்திலும், சம்பத்து விரும்புவோர் வாம தேவத்தினும், முத்தி வேண்டுவோர் சத்தியோஜாதத்திலும் வழிபடுவர். பேறுகள் அனைத்தையும் ஒருசேரத் தருவது ஞானம். ஆதலால், ஈசானத்தில் வழிபட்டால் அனைத்தும் பெறலாம்; ஞானம் பெறலாம்; பொன்னும் போகமும் பெறலாம். ஆதலால், இறைவனை வாழ்முதலாகக் கருதி, உள்ளத்தில் எழுந்தருளச் செய்க! ஏத்தி வழிபடுக! இன்புற்று வாழ்க!

அருணனிந் திரன்றிசை யணுகின னிருள்போய்
அகன்றது வுதயநின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரிய னெழவெழ நயனக்
கடிமலர் மலரமற் றண்ணலங் கண்ணாந்
திரணிரை மறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
அருணிதி தரவரு மானந்த மலையே
அலைகட லேபள்ளி யெழுந்தரு ளாயே.

2

இன்றைய திருப்பள்ளியெழுச்சித் திருப்பாடல், இறைவன், உயிர்களின் சாதல்-பிறத்தல் துன்பத்தை நீக்கியருளும் பாங்கினை வாழ்த்துகிறது.

“திருப்பெருத்துறையில் எழுந்தருளியுள்ள சிவ பெருமானே! திருவருட் செல்வத்தை அருள எழுந்தருளும் பேரின்ப மலையே! அலைகடலே! செங்கதிரோன் இந்திரன் திசையை–கீழ்த்திசையை அணுகினன்; இருள் அகன்றது; உதய ஒளி எங்கும் பரவிற்று. நின் திருமுகத்தின் அருளைப் போலக் கதிரவன் ஒளி மேலுயர்ந்து வரவரத் தாமரைகள் மலர்கின்றன; வண்டுகள் ஒலிக்கின்றன. பள்ளியெழுந்தருள்க! திருவருளினைத் தந்திடுக!”

இறைவன், பிறவிப்பிணியின் மருந்து என்பதை உணர்ந்த “பேரின்ப மலையே”, என்றும் இறப்பிற்கு மருந்து திருவருளே என்பதை உணர்த்த ‘அலை கடலே’ என்றும் வாழ்த்தினார்.

அருணோதய நேரத்தில் செய்யும் வழிபாட்டினால் அக இருள் நிங்கும்; ஞானம் கைகூடும். காண்பானும் காணப்படும் பொருளும் வேறுவேறாக இருந்து கலப்பால் ஒன்றானபோதே இன்பம் விளையும். சுவைப்பானே சுவையாயின் நுகர்ச்சி ஏது? கற்கண்டைச் சுவைக்கும் மனிதன், கற்கண்டாகவே ஆகிவிட்டால் சுவை ஏது? எந்நிலையிலும் இறையும் உயிரும் வேறுவேறு பொருள்களே!

இத் திருப்பாடலில் ‘அருணன் கீழ்த்திசை அடைந்தான்’ என்றதால், அருட்சக்தியின் வெளிப்பாட்டையும், ‘இருள் போயிற்று’ என்றதால் துன்பமல நீக்கமும் ‘உதயம் அகன்றது’ என்றதால் சிவஞானம் பரவிற்று என்பதும். ‘திருமுகத்தின் கருணையின் சூரியன் எழஎழ நயனக் கடிமலர் மலர’ என்றதால் சிவ தரிசனமும் திருவருட்பேறும் கிடைத்தன என்பதும். ‘கண்ணாம் அறுபதம் முரல்வன’ என்றதால் அதில் நுகரும் வண்டுகளாக அடியார் கண்கள் அமைந்துள்ளன என்பது உணர்த்தியமை அறிக!

இத் திருப்பாடலில் உலகியலும் அருளியலும் ஒப்புமையாகப் பேசப்படுகிறது. கதிரவன் கீழ்த்திசையில் எழுவதால் புறத்திருள் நீங்குகிறது. கண்ணுதற்பெருமான் கருணை அகத்தில் எழுவதால் அகஇருள் நீங்குகிறது, புறத்தே கதிரவன் எழுவதால் ஒளி பரவுகிறது. கண்னின் ஒளிக்குக் கதிரவன் துணை செய்கிறான். கண்ணுக்குக் காணும் பொருளைக் காண உதவி செய்கிறான். பழுதைப் பாம்பைப் பிரித்துக் காட்டுகிறான். மேடு-பள்ளத்தைக் காட்டுகிறான். கண்ணுதற்பெருமான் கருணை ஒளி அகத்தே எழுதல் மூலம் ஞான ஒளி பரவுகிறது. ஆன்மாவின் அறிவுக் கண்ணுக்கு அந்த ஞான ஒளி, காட்டும் கண்ணாக விளங்குகிறது. நன்மை-தீமை, புண்ணியம்-பாவம் ஆகியவற்றைக் காட்டுகிறது. அதனால், ஆன்மாவின் அகக்கருவிகளும் புறக்கருவிகளும் ஞானேத்திரியங்களும், கன்மேந்திரியங்களும் செல்லுழிச்சென்று சிந்தனையில் வளர்ந்து, அழிவிலின்பத்தை அடைய முடிகிறது. கதிரவன் எழுச்சியால் கமலங்கள் மலர்கின்றன. கண்ணுதற்பெருமான் எழுச்சியால் உயிர்களின் இதயங்கள் மலர்கின்றன.

அறியாமை நீங்கி, அறிவு தலைப்பட்டு ஞானத்திற் பயின்று, செய்வன செய்து, இன்ப அன்பில் தலைப்படுதலே பிறப்பின் குறிக்கோள்! இப்பேற்றினை அளிக்க வரும் கடவுள் வந்து வழங்குகின்றான் ஆனந்த மலையைக் காணத் தயக்கம் ஏன்? அலைகடல் ஒலி கேட்கத் தயக்கம் ஏன்? அவன் பள்ளியெழுந்தருளிவிட்டான் அயர்ச்சியில் கிடக்கும் நாம் எழுந்து ஏத்துவோமாக!

கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுக ளியம்பின வியம்பின சங்கம்
ஓவின தாரகை யொளியொளி யுதயத்
தொருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்
தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
யாவரு மறிவரி யாயெமக் கெளியாய்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே.

3

மாணிக்கவாசகர் திருவடிக் காட்சிக்கு வேண்டி நிற்கின்றார்.

“தேவ தேவனே! திருப்பெருந்துறையுறை சிவபெருமானே! யாவராலும் அறிதற்கு அரியவனே! எமக்கு எளிமையானவனே! எம்பெருமானே! குயில்கள் கூவின; கோழிகள் கூவின; நாரைகள் ஒலித்தன; சங்குகள் ஒலித்தன; விண்மீன்கள் ஒளிகுன்றன, உதய காலத்து ஒளி எழுந்தது! தேவரீர்! திருப்பள்ளியெழுந்தருள்க! எமக்குத் திருவடி யிரண்டினையும் காட்டத் திருவுள்ளம் கொள்க!

அக இருள் நீக்கி ஞானம் தலைப்படுதல் திருவடிக் காட்சிக்கு உரிய காலம். பின்னே கூவும் குயில் முன்னே கூறப்பட்டது ஏன்? குயில் மிகவும் கருமையானது. ஆயினும் இனிய குரலுடையது. அதுபோல ஆண்வமலம் கருமையானது, அதாவது துன்பமானது. ஆனால் ஆணவமல அனுபவத்தின் விளைவு, பயன், முடிவு-இன்பம்; அதோடு குயில் கூவின காலம் இருள் விலகும் நிலை எய்தியது என்பதாம். கோழி, மிகுந்த செம்மையும் சிறிது கருமையும் கலந்தது. இது மறைக்கும் இருளும், அருளும் சக்தியும் கலந்ததன் சின்னம்! அதன் அடையாளம் கோழி! கோழி கூவுதல் அறியாமை அருகி, அருள்மேம்பட்டு விளங்கும் நிலையை உணர்த்தும். குருகு, பெரும்பகுதி வெண்மையும் சிறுபகுதி செம்மையும் உடையது. குருகு பரிபாகச் சிறப்பையும், வாசனாமலர் சேர்க்கை சிறிதுமுடைய தூய நிலையை உணர்த்தும் அடையாளம். அதனால்தான் நாரை தவம் செய்யும் முனிவர்களுக்கு உவமையாயிற்று. சங்கு முழுதும் வெண்மையானது. உலகியல் துறைதோறும் சென்றலைந்த சிந்தனை இன்று அருட் சக்தியின் கருணையினால் இருள் நீங்க-ஞானஒளி தலைப்பட மனம் ஒருமைப்படுகிறது; இறைவனை ஏத்த ஒருப்படுகிறது. அதனால் திருவடி தந்தருள்க என்பது பொருள் வழிபாட்டுக்கு ஒருமை இன்றியமையாதது. “ஒரு நெறிய மனம் வைத்துணர் ஞானசம்பந்தன்” என்ற சொற்றொடரும் “ஒன்றியிருந்து நினைமின்கள் உந்தமக்கு ஊனமில்லை” என்ற அப்பர் திருப்பாடலடியும் “ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற” என்ற வள்ளலார் வாக்கும் எண்ணத்தக்கது. வழிபாடு அகலமாவதிற் பயனில்லை; ஆழ மாதல் வேண்டும், பொறிகள் நிகழ்த்தும் வழிபாடு போதாது. புலன்களை வழிபாட்டில் ஈடுபடுத்த வேண்டும். புறப்பூசையினும் அகப்பூசை உயர்ந்தது. அகப்பூசை கழனியில் பயிர். புறப்பூசை பயிருக்கு வேலி. அதனாலன்றோ, பூசலார் எழுப்பிய மனக்கோயில் கற்கோயிலினும் இறைவனுக்கு உவப்பாயிற்று. புறப்பூசை மணமற்ற மலர். அகப்பூசை மண மலர். அகனமர்ந்த அன்பில் ஒருமையுணர்வுடன் அவன் திருவடிக்கு ஒரு பச்சிலை சாத்துதல்-இல்லை, சாத்துவதாக எண்ணுதல் நூறாயிரங்கோடி அருச்சனைக்குச் சமம்.

பொழுது புலர்கிறது. அகஇருளும் நீங்க அமைதியாக அமர்ந்திடுக! உலகத்தை-உலகத்தில் நம்மோடு தொடர்புள்ள பொருள்களை ஒவ்வொன்றாக எண்ணி உள்ளத்தால் ஒதுக்குக; அவற்றினின்றும் விலகுக! ஒருநிலை எய்திடுக! ஒருவனை உன்னுக; அவனோடு ஒன்றாகிடுக; இந்தச் சீரிய நோன்பிற்கு உடலை வருத்த வேண்டாம்; உயிரை வருத்த வேண்டாம்; வீட்டை விட வேண்டாம்; காட்டைத் தேட வேண்டாம்; இருந்த இடத்திலிருந்தே இயற்றலாம். “எக் கோலம் கொண்டாலென்ன? ஏதவத்தைப் பட்டாலென்ன? முத்தர் மனமிருக்கும் மோனத்தே!” காலம் தாழ்த்தாதீர்! இறைவனை மனக்கோயிலில் பள்ளியெழுந்தருளச் செய்வீர்!

இன்னிசை வீணைய ரியாழின ரொருபால்
இருக்கொடு தோத்திர மியம்பின ரொருபால்
துன்னிய பிணைமலர்க் கையின ரொருபால்
தொழுகைய ரழுகையர் துவள்கைய ரொருபால்
சென்னியி லஞ்சலி கூப்பின ரொருபால்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே.

4

இன்றைய திருக்கோயில் காட்டுகிறது. “திருப்பெருந்துறை உறையும் சிவபெருமானே! ஆண்டவனே! நீ, திரு வோலக்கம் கொண்டருளும் திருச்சபையில் ‘தான்’ அழியப் பெற்ற சிவனடியார்கள் ஞான இசையினை வீணையாலும் யாழினாலும் மீட்டுகின்றனர்; இருக்கை ஓதுகின்றனர். நின்னுடைய பொருள்சேர் புகழ்மிக்க பாடல்களைப் பாடுகின்றனர். நின் திருவடிப் போதுகளுக்கு மலர்தூவ, மலரேந்திய கைகளுடன் நிற்கின்றனர். தொழுத கையினர், நின் திருவருட் பொலிவைக் கண்டு எளிமையில் ஆட்கொள்ளும் அருளும் திறன் நோக்கி அழுகின்றனர்; கூடும் அன்பினில் கும்பிடலே குறிக்கோளாகக் கொண்டு சென்னியிற் கைகுவித்து நிற்கின்றனர். இங்ஙனம் அருள் பழுத்த மனத்தடியார் பலர் நிற்க, என்னையும் ஆண்டருள் செய்த பெருமானே! அடியேன் உள்ளத்தில் திருப்பள்ளி யெழுந்தருள்க!”

திருவடிக்கண் அன்பும் ஆசாரமும் சீலமும் இல்லாத தன்னை, ஒறுத்துத் திருத்துவதற்குப் பதிலாக ஆட்கொண்டருளி உயர்த்தும் கருணையை நினைந்து உருகி “என்னையும் ஆண்டு கொண்டு இன்னருள் புரியும்” என்று பாடிப் பரவுகின்றார். இசையில் சிவநாமத்தை இசைக்கும் பொழுது உலகுயிர்கள் ஞானத்தில் நாட்ட முறுகின்றன. சூழ்நிலையில் ஐந்தெழுத்திசைத்த ஆனாய நாயனார் அருமை நினையத்தக்கது.

இருக்கு வேதம்:- இது மந்திர வடிவானது. இறைவனுக்குத் திருமுழுக்காட்டும் பொழுது இருக்கு ஓதி ஆட்டுதல் மரபு. தோத்திரம், இறைவனைப் புகழ்ந்து பாடுதல், இருக்கு, கன்ம நெறியையும் தோத்திரம் அன்பு நெறியையும் வளர்க்கும்.

தொழுதல்:- கங்கு கரையற்ற அன்பு கரை புரண்டு வெளிப்படும் பொழுது எழுந்தும் விழுந்தும் கைகளைக் குவித்தும் சிரம்மேல் உயர்த்தியும் வணங்குதல் தொழுதலாகும். உள்ளமே தொழுகிறது; உடலின் செயல்கள் மெய்ப்பாடே!

அழுதல்:- இன்ப அன்பு மேலீட்டினால் அழும் அழுகையே அழுகை; ஆக்கத்தில் அழும் அழுகை இது. இறைவனை நினைந்து அழுதல் அன்பினை வளர்க்கும்.

துவள்கை:- உள்ளம் அன்பில் நைந்து உருளுவதாலும், திருவருளின்பத்தை ஆராமையால் மிக்குத் துய்ப்பதனால் நிகழும் மெய்ப்பாடு! அழுதலும், துவள்தலும் சிவஞானிகளின் செயல்! ஆழ்கடல், அலையால் ஆர்ப்பரிக்காது நீர் மட்டம் உயருதல் போல், அன்பர்கள் இறையன்பில் ஆழங்கால்பட்டு அனுபவத்தில் உயர்ந்து வளர்ந்து சென்னியிற் கரங்குவித்து நிற்பர். இஃதோர் உயர்ந்த குறிக்கோள்!

இந்த உயர்ந்த அனுபவத்தைப் பெறுதல் எளிதன்று. இந்த உயர்ந்த அனுபவத்தைப் பெற இறைவனை உள்ளக் கோயிலில் எழுந்தருளுச் செய்ய வேண்டும். அவனுடைய திருவடிகளை மனத்துட்கொண்டு அருச்சித்தல் வேண்டும். அவனுடைய புகழை இசைக்கும் இசையைக் கேட்க வேண்டும். இறைவனை நினைந்து அவனுடைய பெருமையை நினைந்து, கருணையை நினைந்து அழக் கற்றுக் கொள்ள வேண்டும். இங்ஙனம் அழக் கற்றுக் கொள்ளாமல் அருச்சனைகள் பலசெய்து பயனில்லை, அருச்சனை அருளைப் பெறும் கருவியன்று. அழத் துணைசெய்யும் சாதனமே அருச்சனை! ஊண் துறந்து உடலை வெறுத்துத் தவம் செய்து பயனில்லை. “ஐயன் ஐயாறனார்க்கு அன்பால் பொருளில்லை” என்பார் அப்பரடிகள்! “உன்றன் வார் கழற்கு அன்பு எனக்கு நிரந்தரமாய் அருள்வாய்!” என்பார் மாணிக்கவாசகர். அவன் மலைதான்; ஆனால், உளியில் அகப்படும் மலையன்று; அன்பினில் அகப்படும் மலை. ஆதலால், இறைவனை இனிய அன்பில் ஏத்தித் தொழுமின்! அவன் அருளோடு ஆட்கொள்வான்!

பூதங்கள் தோறுநின் றாயெனி னல்லாற்
போக்கிலன் வரவில னென நினைப் புலவோர்
கீதங்கள் பாடுத லாடுத லல்லாற்
கேட்டறி யோமுனைக் கண்டறி வாரைச்
சீதங்கொள் வயற்றிருப் பெருந்துறை மன்னா
சிந்தனைக் கும்மரி யாயெங்கள் முன்வந்
தேதங்க ளறுத்தெம்மை யாண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே.

5

இன்று பாடிய திருப்பள்ளியெழுச்சித் திருப்பாடலில் “இறைவன் காண்டற்கரியவன்; ஆயினும் துன்பங்களைத் தொலைத்து அருள்பாவிப்பவன்” என்று கூறி, நம்மை ஆற்றுப் படுத்துகின்றார் மாணிக்கவாசகர்.

“திருப்பெருந்துறை அரசே! சிந்திப்பதற்கும் அரியவனே! இங்குத் திருமேனி தாங்கி எழுந்து வந்தருளித் துன்பங்களை நீக்கி அருளின்பம் வழங்கும் பெருமானே! “நீ, ஐம்பூதங்களிலும் ஒன்றிக் கலந்திருக்கிறாய்!” என்று ஞானிகள் பாடுகின்றனர்; ஆடுகின்றனர். அங்ஙனமின்றி நின்னைக் கண்டவர்களைக் கேட்டிலோம். நின்னை அறிந்தவர்களைக் கேட்டிலோம். எம்பெருமானே! பள்ளியெழுந்தருள்க!

“திருப்பெருந்துறையில் பெருமான் எழுந்தருளியிருந்தும், அவன் சிந்தித்ததற்கு அரியவனாகவே இருக்கின்றான். ஏன்? அறியாமையில் மூழ்கிக்கிடப்போர்-ஆணவ வெறியில் தலை தடுமாறுவோர் சிந்திக்கமுடியாது.

“கேட்டறியோம் உனைக் கண்டறிவாரை” என்பதில் ஒரு தர்க்கம் இருக்கிறது. காண்டல் முந்தியா? அறிதல் முந்தியா? தூரத்துப் பொருள்களை அறிந்த பிறகே, காணும் ஆர்வம்; அறிவால் அறிந்த பிறகே காண்பது நிகழ்கிறது. அது போல இறைவனை ஏதுக்களாலும், எடுத்த மொழிகளாலும் உய்த்து உணர்ந்து அறிந்த பிறகு அவனைக் காணும் வேட்கை அரும்புகிறது. அவ்வழியேதான் இறைவனைக் காணும் காட்சி கிட்டுகிறது. கடவுள், அறிவில் தலைப்படுபவன். அறிவினாலன்றிக் கடவுளைக் காண இயலாது. அதனால் “கேட்டறி யோம் உனைக் கண்டறிவாரை” என்றார்.

பூதங்களாகிய மண், புனல், அனல், கால், வெளி ஆகியவற்றில் இறைவன் நீக்கமற நிறைந்திருக்கிறான். ஆயினும், இறைவன் சாதல்-பிறத்தலுக்கு உரியவனல்லன்.

“நினைப்புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதலல்லால்” என்ற சொற்றொடரில் புலவோரைப் ‘போற்றுவோர்’ என்ற பொருளில் குறிப்பிடுகின்றார். இன்று புலவோர் என்பது உலகியல் வழக்காகிவிட்டது. புலவோர் என்ற சொல், அருளியல் உலகில் தோன்றி வழக்கிற்கு வந்த சொல்! புலவோர் என்றால், புலன்களை உழுது பண்படுத்தி ஞானத்தில் முதிர்ந்திருப்பவர்கள். இவர்களே அந்தணர்கள்! இவர்களே ஞானிகள்! “புலனழுக்கற்ற அந்தணாளன் கபிலன்” என்று சங்க நூல் பேசும். இன்று பெரு வழக்காகக் கூறுவதைப் போலப் “புலவோர்” என்பவர் இலக்கண - இலக்கியம் பயின்றவர் அல்லர்; தேவர்களும் அல்லர். புலன்களை வென்ற ஞானிகள் புலவோர், அவர்கள் இறைவனைப் பாடுவர்; ஆடுவர்!

“புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதலல்லால் கேட்டறியோம் உனைக் கண்டறிவாரை” என்றதால் இந்தச் சிவஞானிகளுக்கும் சிவம் அனுபவத்திற்கு உரிய பொருளேயாம்; காட்சிப் பொருளன்று.

“சிந்தனைக்கும் அரியாய்” என்ற சொற்றொடரால் சிந்தையின் செயலாய் “நான் சிந்திக்கிறேன்” என்ற முனைப்பில் தன்னுடைய சிற்றறிவையே கருவியாகக் கொண்டு அறிய முற்படுதல். கண்ணுக்கு ஒளி உண்டேயானாலும், கதிரவன் ஒளியின்றேல் காட்சி ஏது? அது போல உயிர், இறைவனின் கருணையைப் பெற்று அவனுடைய கண்களையே தன் கண்களாகக் கொண்டு காண முயன்றால் அவனைக் காணலாம். “அவனருளே கண்ணாகக் காணின் அல்லால் காண்பார் யார்?” என்றும், “அவன் அருளாலே அவன்தாள் வணங்கி” என்னும் வாக்குகளை அறிக!

இறைவன் தானே வலிய வந்து, உயிர்கள்பால் இரக்கம் கொண்டு, காண்பதற்குரிய திருமேனி கொண்டு வந்தருளித் துன்பங்களை நீக்கி ஆட்கொண்டருளும் கருணையை வியந்து “முன்வந்து ஏதங்கள் அறுத்தெமை ஆண்டருள் புரியும்” என்று பாடிப் பரவுகின்றார்.

பப்பற வீட்டிருந் துணருநின் னடியார்
பந்தனை வந்தறுத் தாரவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானிடத் தியல்பின்
வணங்குகின் றாரணங் கின்மண வாளா
செப்புறு கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
இப்பிறப் பறுத்தெமை யாண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே.

6

இன்றைய பாடல், இறைவன் பிறப்பினை நீக்கி ஆட்கொண்டருளும் கருணையை வாழ்த்துகிறது.

“மங்கை நாயகனே! செந்தாமரை மலர்கள் பூத்த வயல்கள் சூழ் திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானே! இடையறாது தொடரும் பிறப்பை நீக்கி எமை ஆட்கொண்டு அடிமை கொண்டருளும் பெருமானே! பாசங்களை விட்டகன்று பரப்பரப்பன்றி நின்னையே நினைப்பற நினைக்கின்ற சிவஞானியர் பலர் வணங்குகின்றனர். திருத்தொண்டிற்குக் களமாக-பயனாக அமையும் மண்ணில் பிறந்து தமது அறியாமையை, அவ்வழி உள்ள தீமையை நீக்கிக் கொண்டு பக்குவம் அடைந்தார் பலர். மக்கள்-பலர் கன்னியரியல்பில் வந்து வணங்கி நிற்கின்றனர். எம்பெருமானே! பள்ளி யெழுந்தருள்க!”

புண்ணியம் இருவகை. ஒரு புண்ணியம் இன்பத்தைத் துய்த்தற்குத் துணை செய்வது. பிறிதொரு புண்ணியம் இன்பங்களைக் கடந்த திருவருளின்பத்தில் திளைக்கத் துணை செய்வது. இருவகைப் புண்ணியமும், செய்யும் நன்மைகளால், விளைவதேயாம். முன்னையதில்-அதாவது, இன்பங்களைத் துய்க்கச் செய்யும் புண்ணியம் ‘நான்’ என்ற முனைப்பில் செய்யப் பெறுவது; விளம்பர வேட்கையுடையது; புகழ் வேட்டையை நாட்டமாக வுடையது. இக்குண இயல்புகளுடன் செய்யப்பெறும் புண்ணியம். திருவருளைத் தருவதில்லை; மண்ணுலக-அமரருலக இன்பங்களை வழங்கும். இவ்வின்பங்களைத் துய்க்கும் அமரர் வேட்கை தணியாமை கண்டு, பிறவித் துன்பத்திற்குரிய காரணங்கள் மாறாமை கண்டு வருந்தி மண்ணிற் பிறந்து பெருமானைப் பூசித்து சிவத்தொண்டுகள் செய்து, அடியார் பணியை அரன் பணியெனச் சென்று உய்தி பெறுகின்றனர்.

“அணங்கின் மணவாளா!” என்றது, தனக்கென்று யாதோர் உருவமும் இல்லாத இறைவன் உயிர்களுக்கு அருள. உமையொடு கூடிய உருவமே பெறுகின்றான் என்பதை உணர்த்த! மங்கை நாயகரை வணங்குவோர் இம்மையும் பெறுவர்; மறுமையும் பெறுவர்; அழிவிலின்ப வீடும் பெறுவர்!

‘இப்பிறப்பறுத்து எமை ஆண்டருள் புரியும்’ என்ற சொற்றொடரில் உள்ள ‘இப் பிறப்பு’ என்பது இரக்கக் குறிப்புடையது. மாணிக்கவாசகரே, ‘எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்’ என்பார். உயிர், உய்தி பெறுதற்கே பிறப்பு, ஆனால், உய்தி கிடைக்காமையினால் பல பிறப்புக்கள் பிறந்து எய்த்தாயிற்று. இப்பிறப்பு, மிகச்சிறந்த மானுடப் பிறப்பு! இப்பிறப்பிலும் திருவருள் கிடைத்து உய்திபெறாது போனால் உயிரின் நிலை.....அந்தோ, பரிதாபம்!

‘பப்பற வீட்டிருந்து உணரும் நின்னடியார்’ என்ற சொற்றொடர் ஆழ்ந்த பொருளுடையது. அடியாராதல் எளிதன்று. மனத்தின் இயல்பு பரப்பரப்படைதல். தருமைக் குரு முதல்வரின்,

“பரபரக்க வேண்டா பலகாலும் சொன்னேன்
வரவரக்கண் டாராய் மனமே!”

என்ற அருளுரை அறிக! பொறிகளின் உணர்வுக்குச் செய்திகள் கிடைத்தவுடன் அவை உண்மையா? பொய்யா? நன்மையா? தீமையா? என்று ஆராய்ந்து அறியும் திறனில்லாதவர்கள் பரபரப்பர்; உலையிடைப் பெய்த நொய்யரிசியைப் போல ஆவர். வெகுளி, அவலம் முதலியன வயப்பட்டு அழிவர்; அழிவைச் செய்வர். பரபரப்பை விட்டு அமைதியான மனச்சூழ்நிலையில் எண்ணிச் செயற்படுவோர் இம்மை–மறுமைகளைப் பெறுவர். ஏன்? இறையருளும் கூட எளிதில் கிட்டும். அலைகளில்லா ஆழ் கடலில்தான் விலை மதிக்க முடியாத முத்துக்கள் தோன்றுகின்றன. அதுபோல அலையும் சலனங்கள் இல்லாத அமைதியான மோன மனத்தில்தான் இன்பம் கிடைக்கும்; திருவருள் கைக்கூடும். அத்தகைய, மனம் பெற்றோர் இறைவனைக் காண்பர்.

இப்பிறப்பு அருமையானது. மண்ணகம், உய்தியைத் தரும் புண்ணிய பூமி! பரபரப்பினை விடுவோம்! அமைதியினை அடைவோம்!ஆண்டவனைத் தொழுவோம்! இருட்பொழுது புலரும்! உதய ஒளி தோன்றும்! எம் பெருமான் நமது இதயங்களில் பள்ளியெழுந்தருள்வான்?

அதுபழச் சுவையென அமுதென அறிதற்
கரிதென எளிதென அமரரு மறியார்
இதுவலன் றிருவுரு இவனவ னெனவே
எங்களை யாண்டுகொண் டிங்கெழுந் தருளும்

மதுவளர் பொழிற்றிரு வுத்தர கோச
மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னா
எதுவெமைப் பணிகொளு மாறது கேட்போம்
எம்பெரு மான் பள்ளி யெழுந்தரு ளாயே

7

இறைவனை வணங்கும் முறைகளையும், வணங்கிக் கேட்கும் மரபுகளையும் இன்றைய பாடல் விளக்குகிறது.

“அமரர்களும், திருவருளின்பம் பழத்தின் சுவையென, அமுதின் சுவையென, அறிதற்கு அரிதென, அறிதற்கு எளிதென அறியார். அங்ஙனம் இருக்க ‘இது அவன் திருவுரு; இவன் அவன் எனவே’ எங்களை ஆண்டு கொண்டு இங்கு எழுந்தருளும் பெருமானே! தேன்மலர்ப் பொழில்கள் சூழ் உத்தர கோச மங்கையுள்ளானே! திருப்பெருந்துறையுறை அரசே! எம்பெருமானே! எங்களைத் தொண்டு கொள்ளும் முறை எது? என்று இரந்து கேட்கின்றோம். பெருமானே! திருப்பள்ளி எழுந்தருளி எமைப்பணி கொள்ளும் பாங்கினைக் கூறிடுக! பணியினைக் கொண்டிடுக!”

‘அது’ என்பது சிவானந்தம். சிவானந்தம் மனத்தின் உணர்வு தழீஇய நுகர்ச்சிக்குப் புலனாவது. அதற்குப் பெயரும் இல்லை! உருவமும் இல்லை! அதனால் ‘அது’ என்றார். பழச்சுவை, அமுதச் சுவை முதலியவற்றை இன்ன சுவையென அறிந்து கூற, முன்னர் அந்தச் சுவைகளைச் சுவைத்தோராலேயே முடியும். சிவானந்தம் அமரர்களால் ஒருபோதும் சுவைத்தறியப்படாதது. அதனால் ‘இதுபோல’ ‘அதுபோல’ என்று கூறி அலமருகின்றனர். சிவானந்தத்தைச் சுவைத்தறிதல் அருமையானதா? அல்லது எளிமையானதா? அதை எப்படி அமரர்கள் கூற முடியும்? அமரர்கள் அந்தத் துறையில் ஒரு சிறிதும் முயன்றறியாதவர்கள். அவர்கள் முயன்றதெல்லாம் போகம் பெற்றிட! தாம் உயர்ந்திட! தம்மைப் பலர் தொழுதிட-அன்றி அவர்கள் எப்பொழுது சிவானந்தம் நோக்கி முயன்றனர்? அத்துறையில் ஒருசிறிதும் முயலாதார் அருமை என்று கூறுதல் வெறும் பொய்! தமது இயலாமையை மறைக்க அறிவார் போல அருமையென்றும் எளிமையென்றும் முரண்படக் கூறுகின்றனர். முரண்பாடுகளே அறியாமையின் சின்னம் தானே!

‘இது அவன் திருவுரு; இவன் அவன் எனவே’ என்ற சொற்றொடர், திருவுருவ வழிபாட்டுத் தத்துவத்தை விளக்குவது. திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் திருவுருவத்தை உருவமாக எண்ணி வழிபடுவது ஆகாது. சிவமாகவே எண்ணி வழிபடுதல் வேண்டும்.

“திருக்கோயில் உள்ளிருக்கும் திருமேனி தன்னைச்
சிவன் எனவே கண்டவர்க்குச் சிவனுறைவன் அங்கே”

என்றார் அருணந்தி சிவம். உருவங்கள் வாயிலாக உயிரினை நாடி அன்பு செய்தல் அருளியல் அறிவு.

உயிர் சிவமாகவும், உயிருறையும் உடல் சிவம் எழுந்தருளும் திருக்கோயிலாகவும் எண்ணத் தூண்டுகிறது. சீவன், தனது தன்மைகளை இழந்து சிவத்தின் தன்மையைப் பெற்றுச் சித்தம் சிவமாதலே வாழ்வின் இலக்கு. இதனைக் குமர குருபரர் “பின்னும் ஓர் மாத்திரை குறுகினேன் பின்” என்பார். அதாவது, ‘சீவன்’ என்ற சொல்லில் உள்ள ஒரு மாத்திரை குறைந்து ‘சிவன்’ ஆயிற்று என்பது. சிவன் என்றால் பொருளாற் சிவனல்ல; தன்மையால் சிவன்! சிவத்தன்மை பெற்ற உயிர் தங்கும் பொழுது உடல் விமானம் ஆகிறது.

‘இது வேண்டும்; அது வேண்டும்’ என்று கேட்டு இறைவனை வணங்குதல் கூடாது. நமக்குத் தேவையானவற்றை அறிந்து வழங்குகின்ற அருளிப்பாடு அவனுக்கு உண்டு. அவனால் வழங்கப் பெறாதன யாதானும் உண்டாயின் அவை நமக்கு வேண்டுவன அல்ல. இறைவனைத் தொண்டு கொள்ளும் படியே வேண்ட வேண்டும். தொண்டு செய்யும் உரிமை வழி இன்பம் வந்தமையும். எம்பெருமானை வணங்குவோம்! எது எமைப் பணி கொளுமாறு என்று கேட்போம்! பணிகளைச் செய்வோம்!

முந்திய முதல்நடு இறுதியு மானாய்
மூவரு மறிகில ரியாவர்மற் றறிவார்
பந்தணை விரலியும் நீயுநின் னடியார்
பழங்குடில் தொறுமெழுந் தருளிய பரனே
செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித்
திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி
அந்தண னாவதும் காட்டிவந் தாண்டாய்
ஆரமு தேபள்ளி யெழுந்தரு ளாயே.

8

இறைவன் நம்முடைய பழங்குடிசைதோறும் எழுந்தருளி அருளும் திறனை ஊனுருக, உயிருருகப் பாடிப் பரவுகிற பாடல் இது!

“அடைதற்கரிய அமுதமே! முற்பட்ட முதலும் நடுவும் முடிவும் ஆனவனே! உன்னை மும்மூர்த்திகளும் அறிய வல்லாரல்லர். மும்மூர்த்திகளாலேயே நின்னை அறிந்து ஏத்த முடியாதெனில் வேறு யார் நின்னை அறிதல் கூடும்? பந்தனை விரலியும் நீயும் உடனாகி அடியார்களுடைய பழங்குடிசைதோறும் எழுந்தருளிய பெருமானே! மேலுக்கும் மேலானவனே! செந்தழல் போன்ற திருமேனி காட்டித் திருப்பெருந்துறையுறை திருக்கோயிலும் காட்டி, எங்கள்பால் வந்து ஆட்கொண்டவனே! பள்ளியெழுந்தருள்க!

முதல், அனைத்திற்கும் முந்தியது ஆதலால், ‘முந்திய முதல்’ என்றார். உயிர்களுக்கு-வினைப்போகத்திற்கு ஈடாக உரியகால எல்லை வரை போகத்தை ஊட்டிப் பாதுகாத்தலின் ‘நடு’ என்றார். ஊழிக்கால எல்லைக் கண் உயிர்களைத் தம்மிடத்து ஒடுக்கி ஓய்வளித்து அனைத்திற்கும் முடிவாயிருத்தலின் ‘இறுதியும் ஆனாய்’ என்றார்.

படைத்தல், காத்தல், அழித்தல், ஆகிய முத்தொழில்களையும் அயன், அரி, உருத்திரன் என்ற மூவர் நிகழ்த்துவது இறைவனின் திருவருட் குறிப்பினாலேயாம். மூவரும் முத்தொழிலைச் செய்தாலும் பெருமானை அறியார்.

“நின்னடியார் பழங்குடில்தோறும் எழுந்தருளிய பரனே!”–‘பழங்குடில்’ என்பது குடிசயைன்று; உயிர்கள் உறையும் நுண்ணுடம்பே பழங்குடில், நுண்ணுடலில், உயிர்களின் உள்ளமே இறைவன் விரும்பிப்புகும் குடில். இந்த நுண்ணுடல் உயிருக்குப் பிறப்புக் காலம் தொட்டு வருவது. அதனால் பழங்குடிலாயிற்று! மண்ணில் உள்ள பழங்குடில் ஓலைகள் பிரிந்தும் கம்புகள் கலைந்தும் நைந்து இருக்கும். அதுபோல அடியார் உள்ளமும் பிறப்பில் தொடக்கத்தில் இருந்த மலக்கட்டுக் குலைந்து அன்பினால் நைந்து விளங்கும் என்பது உய்த்தறிக. “பழங்குடில் தொறும்” என்ற சொற்றொடர் வியப்பிற்குரியது. அளப்பில் உயிரினத் தொகுதியில் ஒவ்வோருயிரின் உள்ளந்தோறும் அவன் தவறாமல் புகுகின்றான்.

‘செந்தழல் புரை திருமேனியும் காட்டி’ என்பது இறைவனின் அருவ நிலையையும் ‘திருப்பெருந்துறையுறை கோயிலும் காட்டி’ என்பது அருவுருவ நிலையையும் ‘அந்தண னாவதும் காட்டி’ என்பது உருவநிலையையும் உணர்த்தியமை அறிக! உள்ளப் பெருங்கோயிலில் எழுந்தருளும் இறைவனையே ஆன்மநாயகனாக வழிபடுதல் வழக்கம். மாணிக்கவாசகருக்குத் திருப்பெருந்துறையுறை சிவபெருமானே ஆன்ம நாயகன்! முன், திருப்பெருந்துறை திருத்தலமல்ல, மாணிக்கவாசகரை ஆட்கொண்ட அருள் திருமேனி எழுந்தருளியதால் திருப்பெருந்துறை ஆயிற்று; திருத்தலம் ஆயிற்று! மாணிக்கவாசகப் பெருமானால் கோயிலாக்கப் பெற்றது. அதனால், ‘திருப்பெருந்துறையுறை கோயில்’ என்றார். திருப்பெருந்துறை, ஆட்கொண்டருளிய எம்பெருமானுக்கு அடைமொழி. இறைவன் குருநாதனாக எழுந்தருளி அருள்பாலித்தமையை ‘அந்தணனாவதும் காட்டி’ என்று கூறி உணர்த்துகின்றார்.

இத்திருப்பாடலால் இறைவன் எல்லாருக்கும் முன்னேயுள்ள மூத்தவனானாலும், முதல்-நடுவாக விளங்கினாலும், மூவரால் அறிய முடியாத விழுப்பொருளானாலும் அவன் எளிவந்த கருணையோடு நமது உள்ளமாகிய பழங்குடில் தோறும் எழுந்தருளிச் செந்தண்மை காட்டி, ஆட்கொண்ட, பள்ளியெழுந்தருள்கின்றான். நமது இல்லங்களில் எழுந்தருளியுள்ள இறைவனை இழக்காமல் ஏத்திப் போற்றுவோமாக!

விண்ணகத் தேவரும் நண்ணவு மாட்டா
விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள்
மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே
வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம்
கண்ணகத் தேநின்று களிதரு தேனே
கடலமு தேகரும் பேலிரும் படியார்
எண்ணகத் தாயுல குக்குயி ரானாய்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே.

9

இன்று பாடிய திருப்பள்ளியெழுச்சிப் பாடல் இறைவன் கருணையினால் மண்ணில் எழுந்தருளி ஆட்கொளும் திறன் வாழ்த்தப்படுகிறது.

“விண்ணோரும் சென்று அடைய வொண்ணாத செம்பொருளே! உன்னுடைய தொண்டாற்றும் அடியோங்கள் மணனுலகத்தே வாழ, மண்ணக்கத்தே எழுந்தருளிச் செய்தவனே! திருப் பெருந்துறை யுடையவனே! வழிவழித் தொண்டராகிய எங்கள் கண்ணிற் பாவையே! அகத்தே களிதரு தேனாய்க் களிப்பு அளிப்பவனே! விண்ணவர்க்குக் கடலமுதம் ஆனவனே! அருமருந்தே! கரும்பே! அன்பால் விரும்புகின்ற அடியவர்கள் நினைவில் உள்ளவனே! உயிர்களுக்கு உயிரே! தலைவனே! திருப்பள்ளி யெழுந்தருள்க!”

விண்ணவர்களும் காணாத விழுப்பொருள், பெருமான்! மக்கள் தேவர்களை உயர்ந்தவர்கள் என்று நினைக்கின்றனர். விண்ணவர்கள் அறிவு, பதவியின் காரணமாக வளராததால் இறைவனைக் காண முடியவில்லை.

நமது சமயமரபில் நாம் விண்ணகத்திற்குச் செல்வதில்லை. இறைவனை மண்ணகத்தில் நடமாடச் செய்வதே நம்முடைய மரபு. “இறைவனுக்கும் கூட விண்ணில் விருப்பமில்லை.” “வான்பழித்து இம்மண் புகுந்து மனிதரை ஆட்கொள்ளும் வள்ளல்” என்ற திருவாசகத்தால் அறிக! மாணிக்கவாசகரை ஆட்கொள்ள எம்பெருமான் குருமூர்த்தி, குதிரைச் சேவகன், கொற்றாள் என வந்து ஆட்கொண்டருளிய அருளிப் பாட்டினை நினைந்து பாட மொழி ஏது, அதனாலன்றோ “மண்ணகத்தே வந்து வாழச் செய்தானே?” என்றார். வாழ்தல் நோக்கமுடையது. நோக்கம் நிறை வேறினால் வாழ்தலுக்குப் பொருளுண்டு. அது வாழ்தல் என்று கருதப் பெறும். “வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே!” என்பார் மாணிக்கவாசகர். இங்கு மாணிக்கவாசகர் “வாழச் செய்தானே!” என்பதால், அமைச்சுப் பொறுப்பிலிருந்து விலக்கி, ஞானாசிரியனாகக் காட்சி தந்து ‘சிவாய நம’ எனச் சொல்லித் தந்து, அச் சொல்லின் பொருளைக் காட்டி, அப்பொருளுக்குத் திருக்கோயில் எழுப்பும் பணியினில் ஈடுபடுத்திக் கொற்றத்தால் வந்த ஏதங்களைத் தடுத்து இனிதே ஆட்கொண்டு அவன்தன் திருவருளின்பத்தில் திளைக்கும் இன்னுயிராக வையகத்தில் பிறந்த உயிர்கள் உய்தி உணர்வைப் பெற்று உணரும் கால எல்லை வரை திருவாசகமாக வாழும் அருளிப் பாட்டினை எண்ணி மகிழ்ந்து ‘வாழச் செய்தானே!’ என்றார்.

குரங்கின் ஆட்டம், களியாட்டம் ஆமோ, அல்லது ஆடற்கலையாமோ? ‘களிப்பு’ என்பது தூய்மையானது; பொறிகளைக் கடந்து புலன்களிற் பொருந்தி, உயிருக்கு இதம் அளிப்பது. களிப்பு. புறத்தே விரிவதன்று; அகத்தே சென்று ஆங்கு விரிந்து முழுமையாகிப் பொறிகளில் இன்பத் தென்றலென வெளிப்படுவது! கண்ணகத்தே நின்று களிதரு தேனே! என்றதால் கண்களில் நின்றே களிப்பைப் பெறுதல் என்பது பொருள்! எல்லாவித இன்பத்திற்கும் அல்லது துன்பத்திற்கும் கண்களேதான் வாயில்! மற்றப் பொறிகள் தனித்தனியே தான் இயங்கும்! ஆனால், கண்கள் மற்றப் பொறிகளுக்கும் துணையாக இயங்க முடியும். கண்கள் வழியாக ஐம்புலக் களிப்பையும் ஒருசேரத் துய்க்க முடியும். “ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள” என்ற சேக்கிழார் திருவாக்கும் அறிக. தொண்டு செய்யும் அடியார்கள் மண்ணகத்தே வாழ வந்தருள் செய்யும் பெருமான் பள்ளி யெழுந்தருள்கின்றான்! அவன் திருப்பள்ளியெழுச்சி எழுந்தருளும் திருவோலக்கத்தைக் கண்களால் காண்க! களித்து மகிழ்ந்து வாழ்ந்திடுக!

புவனியிற் போய்ப்பிற வாமையில் நாள்நாம்
போக்குகின் றோமவ மேயிந்தப் பூமி
சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம்
அவன்விருப் பெய்தவு மலரல னாசைப்
படவுநின் னலர்ந்தமெய்க் கருணையும் நீயும்
அவனியிற் புருந்தெமை யாட்கொள்ள வல்லாய்
ஆரமு தேபள்ளி யெழுந்தரு ளாயே.

10

மாதேவன் மண்ணிடைத் தோன்றி ஆட்கொள்ளும் திறனை வாழ்த்துகிற பாடல் இது.

“திருப்பெருந்துறை யுறைவாய்! ஆரமுதே! திருமாலும் நான்முகனும் பூமியிற் பிறவாமல் நாட்களை வீணாகக் கழிக்கின்றோமே என்று எண்ணிக் கவலைப்படுகின்றனர். பூமியில் பிறந்தால் சிவபெருமான் உய்யக் கொள்கின்ற நெறியில் உய்தி பெறலாமே என்று திருமால், மண்ணிற் பிறப்பை விரும்புகின்றான்; பிரமன் பிறந்திட ஆசைப் படுகின்றான். பெருமானே! நீயும். நினது திருவருளும் உடனாக இப் பூமியில் தோன்றியருளி எம்மை ஆட்கொள்ள வல்லவனே! பள்ளியெழுந்தருள்க!”

மண்ணிற் பிறந்திடும் பிறப்பு, பொய்யன்று; மாயையன்று துன்பம் அன்று. உயிர்களை இறைவன் ஆட்கொள்ளும் இடம் மண்ணகமே! பிரமன், திருமால் ஆகியோர் விண்ணகத்தில் படைத்தல், காத்தல் தொழில்களைச் செய்து பெருமையுடன் வாழ்கின்றனர். ஆயினும், எல்லையில் இன்ப அன்பு கிட்டியபாடில்லை. துன்பத்திற்குக் காரணம் நீங்கவில்லை. அதனால், உய்திக்குரியன நாடாமல் பதவிகளுக்குரிய பணிகளிலேயே காலம் கழிந்து வீணாகப் போகிறதே என்று கவலைப்பட்டு மண்ணிற் பிறக்க ஆசைப்படுகின்றனர். உய்திக்குரிய பணிகள் இறைவனைப் பூசித்தல்; இறைபணி நிற்றல்; அன்பர் பணிசெய்தல் ஆகியன. பதவிகளின் வழிபட்ட கடமைகள் வாழ்த்துக்களைப் பெறுதல்; மரியாதைகளைப் பெறுதல்; மகிழ்ந்திருத்தல்; அதிகாரம் செய்தல்; முகமனுக்கு முகம் மலர்ந்திருத்தல்; இடித்துக் காட்டினால் ஒறுத்து ஒதுக்குதல் முதலியன. பதவிகளின் வழிப்பணியினால் உலகத்தில் தாழ்வென்னும் தன்மை வராது; சூழ்ந்து நிற்பர் அனுமதிக்கமாட்டார்கள்; அதனால், பதவிச் சுழலிலிருந்து விலகி மண்ணிற் பிறத்தல் உய்தற்குரிய நெறியைத்தரும் என்று அமரர்கள் எண்ணுகின்றனர். அதனால், திருமாலும் பிரமனும் கூட மண்ணில் பிறப்பதை. மலர்கொண்டு அருச்சிப்பதை விரும்பி ஆசைப்படுகின்றனர். ஆனால், மண்ணிற் பிறந்தோர் இறைவனை எண்ணிப் போற்றிடாது வாழ்நாளை வாளா கழிக்கின்றனர்.

நம்முடைய சூழ்நிலையில்கூட உய்தற்கேற்ற பணிகளுக்குரிய பணிகள் கொள்ளை கொண்டு விடுகின்றன. இக்கொள்ளையிற் சிக்காதார் யார்? பதவிகள், உய்திக்குரிய பணிகளுக்குத் தடையாக இருப்பின் பதவியைத் துறத்தலே நனறு.

இப்பூமி, சிவன் உய்யக் கொள்கின்ற புண்ணியபூமி! இறைவனுக்கு அருளே திருவுரு; திருமேனி! அதனால், ‘கருணையும் நீயும் அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்” என்றார்.

இறைவன் ஆட்கொண்டருளக் கருணைகொண்டாலும் உயிர் திருவருளுக்கு அடிமையாதலை விரும்பினாலும் ஆட்கொண்டருளும் நிகழ்வு நிகழ்வதில்லை! எத்தனை தடைகள்! மலரெடுக்கும் சிந்தனையைச் செய்தித்தாள் தடுக்கிறது! அகனமர்ந்த பூசனையில் குறுக்கிடுகிறது. தொலைபேசியின் அலறல்! ஐந்தெழுத்தை எண்ணும் முயற்சியில் அன்பர்கள் குறுக்கீடு! ‘பெருமானைப் பூசிக்க’ தபால் பெட்டி தடையாக வருகிறது! இவ்வளவும் புறத் தடைகள்! அகத்தே இப்பொழுதென்ன? சில நாள் போகட்டும் என்று எண்ணுகிறது!

பணியும் பூசைதானே என்று கருதுகிறது. இன்று என்ன? திருவிழா வரட்டுமே என்று தோன்றுகிறது! இத்தனை தடைகளையும் தாண்டி உயிர் ஆட்பட வேண்டும்; அவன் ஆட்கொள்ள வேண்டும். தடைகளை நீக்கி அவன் ஆட்கொள்வான் என்பதனை “ஆட்கொள்ள வல்லாய்!” என்றார். “வல்லாளன் தென்னன் திருப்பெருந்துறையான் ஆட்கொண்டருளத் திருப்பள்ளியெழுந்தருளியுள்ளான்! வழிபடுவோம்! வாரீர்!

வாழ்த்து

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
நான் மறையறங்களோங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்


திருச்சிற்றம்பலம்