உள்ளடக்கத்துக்குச் செல்

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8/பெரியோர் செயல்!

விக்கிமூலம் இலிருந்து


29


பெரியோர் செயல்!


உடலெடுத்த பிறவி உதவி செய்தற் பொருட்டே உயிர்க்கு நிறை நலத்தினைத் தந்து இன்ப அன்பினை வழங்கி வாழ்விப்பது உதவி செய்யும் பண்பாடேயாம். உயிர், எலும்பொடு தொடர்பு கொண்டு உடலாக உருமாறி உலகினில் உலா வருவது அன்பு செய்தற்கே யாம். திருவள்ளுவர்,

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.

(73).

என்பார். உதவிக்குக் காரணம் அன்பு. உதவி செய்யும் பண்பில் மாறாது வளரும் விலங்கினங்கள், தாவர இனங்கள், களவு-காவலின்றி வாழ்கின்றன. அவற்றில் அனாதை இல்லை.

ஆனால், மனிதன் தனது இயற்கையான உதவி செய்யும் இயல்பினின்றும் மாறுபட்டு வாழ்வதால் அவனுடைய வாழ்க்கை முழுமையாகச் சிறைச்சாலையாக்கப் பெற்றுள்ளது. அந்தோ பரிதாபம்!

உதவியா? நாமா பிறர்க்குச் செய்வது? நமக்கு எங்கே வசதியிருக்கிறது? நமக்கு நாலுபேர் செய்ய வேண்டிய திருக்கிறதே என்றெல்லாம் அங்கலாய்ப்பவர்களும் உண்டு. அவர்கள் “தனக்கு மிஞ்சியதே தான தர்மம்” என்ற பழமொழியினை எடுத்துக் காட்டி நியாயம் பேசுவர்.

தனக்கு மிஞ்சுதல் ஒருபோதும் உலகத்தில் நடக்கக் கூடிய காரியமில்லை. அதுவும், இன்றைய மனிதன் தேவைகளை நோக்கியே பயணம் செய்து கொண்டிருக்கிறான். அவன்-குறிப்பாக இந்தியன் அமெரிக்காவைப் பார்த்துத் தன் தேவைகளுக்குப் பட்டியல் தீட்டுகிறான்.

தேவை யென்பது உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாதனவும் தாங்கள் மேற்கொண்ட கடமைகளை முறையாகச் செய்தற்குரியனவுமாகிய நியாயமான தேவைகளாகும்.

நமது நாட்டில் இன்று கார் தேவையான பொருளா? அல்லது சுகத்தின் சின்னமா? அல்லது செல்வத்தின் எடுத்துக் காட்டா? அல்லது வருமான வரிக்குச் சரிக்கட்டா? என்ற வினாக்களை அடுக்கினால் ஒரு சிலருக்கே கார் தேவைப்படும். பலருக்கு அது செல்வத்தைத் துய்க்கும் ஒருவழி: சுகப்பொருள்; வருமான வரிக்குச் சரிக்கட்டு! ஏன்? ஈருருளை வண்டிகூட அப்படித்தான்!

இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள பள்ளிக்குச் சென்று பணி செய்து திரும்ப, இன்று ஈருருளை வண்டியை நாடி நிற்போர் பலர். இவர்களுடைய கால்கள், நடக்கும் சக்தியை இழந்துவிட்டன. தெளிவாகச் சொன்னால் இவர்களுக்கு உண்மையான தேவை நடைப் பயிற்சியே யாம்!

நோயின்றி வாழ இவர்களுக்கு இன்றியமையாதது நடையே! ஆனால் அதை உடலுக்குத் தராமல், காரிலும், ஈருருளை வண்டியிலும் பலர் பயணம் செய்வதால் நோய்க்கு ஆளாகின்றனர். ஆதலால் உண்மையான தேவை என்பது வேறு. மனிதன் உண்டாக்கிக் கொள்ளும் செயற்கைத் தேவை வேறு.

“தனக்கு மிஞ்சியதே தான தர்மம்” என்ற பழமொழி தமிழகத்து வழக்கில் பிறந்ததன்று, “தன்னை மிஞ்சியதே தான தர்மம்” என்பதுதான் உண்மையான பழமொழி.

உதவி செய்வதென்பது, பொருள் இருந்தால்தான், என்பதில்லை! அநேகமாக நிறைந்த பொருள்வளம் உடையவர்களில் மிகக் குறைந்தவர்களுக்கே உதவி செய்யும் இயல்பு இருக்கும்.

மிகக் குறைந்த வருவாயுடையவர்களும், வாழ்க்கைப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களும்கூட உதவி செய்ய வேண்டும். ஏன்? பொருளில்லையானாலும், பொருள் தேடுதற்குரிய உடலாற்றல் இருக்குமானால் பொருளைத் தேடி வந்தும் உதவி செய்ய வேண்டும்.

“இல்லென்று இரப்போர்க்கு இயைவது கரத்தல்
வல்லா நெஞ்சம் வலிப்ப நம்மினும்
பொருளே காதலர் காதல்”

என்பது அகநானூறு.

வழங்குதற்காகவே பொருளீட்டுதல் என்பது ஒரு கொள்கை இல்லை, ஓர் அறம்! புறநானூறு “செல்வத்தின் பயன் ஈதல்” என்று பேசும். உண்ண உணவில்லாத நிலையிலும் வயலில் விதைத்த வித்தை அரித்துக் கொண்டு வந்து சமைத்து உணவு வழங்கிய இளையான்குடி மாற நாயனார் வரலாறும், கற்புடை மகளிர்க்குரிய மங்கல அணியை மாற்றியும் உதவி செய்த குங்குலியக் கலய நாயனார் வரலாறும் நினைவிற் கொள்ளத் தக்கன. ஏன்? நன்னெறி ஆசிரியர் நமது உடம்பிலேயே இதற்கோர் உவமை காட்டி விளக்குகிறார்.

நாக்கு, தானே பூரணமாக ஒன்றைச் சுவைத்தற்கு இயலாது. நாவிற்குப் பூரணமான சுவையை வழங்கப் பற்கள் துணையாயமைந்து மிகக் கடினமான பதார்த்தங்களையும் தாம் முயன்று மென்று அறைத்துச் சுவை கூட்டி நாக்கிற்கு வழங்குகின்றது. எளிய முயற்சியில் நாக்கு சுவைக்கிறது.

நாக்கினால் பற்களுக்கு யாதொரு பயனுமில்லை. ஆயினும் பற்கள் முயன்று நாக்குக்குச் சுவை கூட்டி வழங்குகின்றன. அதுபோல ஒவ்வொருவரும் முயன்று மற்றவர்களுக்கு வாழ்க்கையை வழங்க வேண்டும்.

‘உதவி செய்யும் வாழ்க்கையின் மூலம் நெடிய பயன் விளையும்; அழிவிலின்பம் கிடைக்கும். ஆயினும் சில துன்பங்கள் வராமல் போகா. அத்துன்பத்தினையும் ஏற்று மெய்வருத்தமுற அரிதின் முயன்று உதவி செய்தலே நல்லோர் கடமை. அத்தகைய உதவி வையகத்து வான்மழையைப் போல!

அறிவறிந்த ஆள்வினையை மேற்கொள்க! உடல் களைப்புறும் வரையில் உழைத்திடுக! பழியஞ்சிப் பொருளீட்டுக! ஈட்டிய பொருளை உதவி செய்தல் என்ற உயரிய வேள்விக்குப் பயன்படுத்துக! வாழ்வித்து வாழ்க!

“கைம்மாறு உகவாமல் கற்றறிந்தோர் மெய்வருந்தித்
தம்மால் இயலுதவி தாம்செய்வர்-அம்மா!
முளைக்கும் எயிறு முதிர்சுவை நாவிற்கு
விளைக்கும் வலியனதாம் மென்று”

என்பது நன்னெறி ஆசிரியர் வற்புறுத்தும் நெறி.