குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8/வள்ளலார் நெறி I

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


31


வள்ளலார் நெறி I


எந்தக் குறையை எந்த ஒரு பெரியார் எந்த நாளிலே இது தவறு என்று இடித்துக் கூறினாரோ அந்தத் தவற்றை அந்தக் குறையை அவர் காலத்திலாவது அல்லது அடுத்த தலைமுறையிலாவது நாம் நீக்கினோ மில்லை. குறை களைந்தோம் இல்லை.

திருவள்ளுவர் காலந்தொட்டு அப்பரடிகள் காலம் உள்பட மாணிக்கவாசகர் காலம் உள்பட இராமலிங்க அடிகள் காலம் உள்பட இன்றுவரை அவர்கள் இடித்துக் கூறிய குறைகளையே நாம் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறோமே தவிர-சொல்லி வந்திருக்கிறோமே தவிர அவற்றிலிருந்து மக்கள் விடுதலை பெற்றிருக்கிறார்களா என்றால் இல்லை இல்லை இல்லை என்ற பதில் தான் கிடைக்கும்.

இந்த நாட்டில் ஆயிரம் ஆண்டுக்கு ஒருதரம் அல்ல, ஒரு நூற்றாண்டுக்கு ஒருதரம் பெரியவர்கள்-கொள்கையாற் சிறந்தவர்கள் - சால்புடையவர்கள் - சான்றாண்மையுடையவர்கள் தோன்றி இனிய தமிழில் எண்ணற்ற அறிவுரைகளை எடுத்துச் சொல்லி வந்திருந்தாலும்கூட அவற்றையெல்லாம் நம்மவர்கள் போற்றத் தெரிந்தார்கள் - புகழக் கற்றுக் கொண்டார்கள். (பஜனை மடத்தில் வைத்து வழிபாடு செய்யக் கற்றுக் கொண்டார்கள். மற்றபடி அவற்றை நடை முறைக்குக் கொண்டு வரவில்லை.)

இந்த நாட்டில் வள்ளலார் பிறந்தார் - திரும்ப ஒரு வள்ளலார் பிறந்து வந்தாலும்கூட இந்தக் காரியம் முடியுமா என்பது எனக்குச் சற்று ஐயப்பாடுதான். இன்று நேற்றல்ல - ஆயிரம் ஆண்டுக்கால வரலாற்றைப் பார்க்கிறேன். இந்த நாட்டு வரலாற்றில் ஒரு 300 அல்லது 500 ஆண்டுகள் ஓர் ஒழுக்க நெறியைச் சேர்ந்தாற்போல தமிழர்கள் பின்பற்றியதாகக் கூற முடியாது. நாம் எவ்வளவுதான் பேசினாலும், எவ்வளவுதான் விடிய விடியக் கதறினாலும் இந்த நாட்டு மக்கள்-கதறுகிறவர்களும் கேட்கிறவர்களும் செயல்படமாட்டார்கள். இப்படி இந்த நாட்டின் போக்கு அமைந்திருப்பதைக் கண்டு நான் பெரிதும் வருத்தப்படுகிறேன். அப்படியிருந்தும் எனக்கு ஏமாற்றமும் தோல்வி மனப்பான்மையும் ஏற்பட்டும்கூட நான் தொடர்ந்து எனது பணிகளைச் செய்து கொண்டிருக்கிறேன் என்றால், இன்னும் எனக்கு வயது நிறைய ஆகாததால் ஒருகால் என் தலைமுறையில் முடிந்தாலும் முடியலாமே என்ற ஆசைதான். ஆனாலும் இராமலிங்கர் கூறியதுபோல, கடைவிரித்தேன்- கொள்வாரில்லை- கட்டிக்கொண்டேன் என்று சொல்லும்படியாக, இந்தத் தலைமுறைத் தமிழர்கள் என்னை விட்டுவிடமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் சொல்லிக் கொண்டிருக்கிறேன். அந்த நம்பிக்கை பொய்க்கக் கூடாது என்று சொல்ல ஆசைப்ப்டுகிறேன்.

அருள்நெறித் திருக்கூட்டத்தினர் இந்த சன்மார்க்க சங்கங்களில் கலந்து கொள்ளக் கூச்சப்படுகிறார்கள் என்று சொன்னார்கள். என்னைப் பொறுத்தவரை ஏறாத மேடையில்லை. ஏறாத மேடை ஏறுகிற மேடை என்ற வேறுபாடு எனக்கில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். என்னோடு முற்றிலும் கருத்துவேறுபாடு கொண்டவர்களின் மேடைகளிலும் போய்க் கலந்து கொண்டு அவர்களின் பொல்லாப்பை ஏற்றுக் கொண்டவர்களில் நானும் ஒருவன்-இப்படிச் சொல்லுவதைவிட நான் தான் என்று சொன்னால் கூடத் தவறில்லை. இப்படி எல்லா மேடைகளுக்கும் கூச்சமின்றிச் செல்லுகிற வாய்ப்பை ஆண்டவன் எனக்கு எந்த வழியோ அருளிச் செய்திருக்கிறார். ஆனால், அருள் நெறித் திருக்கூட்டத்தினர் அச்சப்படுகின்றனர்- கூச்சப்படுகின்றனர் என்றால், அதற்குக் காரணம் அவர்கள் வள்ளலாரின் நெறி மட்டுமின்றி, வள்ளலாருக்கு முன்னமேயே வள்ளலாராலேயே பாராட்டப் பெற்ற பெருமக்களின் நெறியையும் ஏற்றுப் போற்றிப் பாராட்ட வேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்தக் கொள்கையோடுதான் அருள்நெறித் திருக்கூட்டம் தொடங்கப் பெற்றது. வள்ளலாரின் நெறியோடு, அப்பரடிகள், மாணிக்கவாசகர் போன்றவர்களின் நெறியையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அருள்நெறித் திருக்கூட்டத்தின் அடிப்படைக் கொள்கை. சன்மார்க்க நெறியினர் காலப்போக்கில் உருவ வழிபாடு திருக்கோயில் வழிபாடு போன்றவைகளில் நம்பிக்கையின்றித் தனியே ஒரு மடம் கட்டி, தனியே ஒரு ஜோதி வைத்து வழிபடும் உணர்வுடையவர்களாக ஆகிவிட்டமையின் காரணமாகத் திருக்கோயில்களைப் பேணிப் பாதுகாக்க முடியாமற் போய்விடுமோ என்ற அச்சம் சிற்சில இடங்களில் அருள் நெறித் திருக் கூட்டத்தினர்க்கு இருக்கிறது. அந்த அச்சத்தை மாற்ற வேண்டிய பொறுப்பு சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்தவர்களுக்கும் உண்டு என்று சொல்லிக் கொள்ள விரும்புறேன்.

“கந்த கோட்டத்துள் தலமோங்கு கந்தவேளே” என்று கூறும் வள்ளலாருக்கு உருவ வழிபாட்டில் நம்பிக்கை கிடையாது என்று கூறிவிட முடியாது. அதை அவர் முழுக்க ஏற்றாரா இல்லையா என்பது வேறு. எனினும் திருவுருவ வழிபாடு, திருக்கோயில் வழிபாடு போன்றவற்றில் வள்ளலாருக்கு நம்பிக்கை இருந்தும் கூடப் பெரும்பான்மையான சன்மார்க்க சங்கத்தினர் திருக்கோயில் வழிபாட்டை வலியுறுத்தாமல் - அது பற்றியே பேசாமல் தனியே ஒரு மடம் அமைத்து அங்கே ஒரு ஜோதியை வைத்து வழிபடுகின்றனர்-இராமலிங்க அடிகளை மட்டும் வைத்து வழிபடுகின்றனர். இந்நிலை இருப்பதனால், ஆண்டாண்டுக் காலமாக இந்த நாட்டின் பாரம்பரியத்தில் ஊறிக் கிடக்கும் திருக்கோயில் வழிபாடு காலப்போக்கில் அழிந்து விடுமோ என்ற அச்சத்தின் காரணமாகத்தான் அருள்நெறித் திருக்கூட்டத்தினர் சன்மார்க்க சங்கத்தில் சேர வெட்கப்படுவார்கள் - கூச்சப்படுவார்கள். சன்மார்க்க சங்கத்தினர் திருக்கோயில் வழிபாடும், திருவுருவ வழிபாடும் தேவைதான்- தங்கட்கும் உடன்பாடுதான் என்கிற நிலைமையை உருவாக்கி அருள் நெறித் திருக்கூட்டத்தினரின் அச்சத்தைப் போக்கினால் இந்தச் சிக்கல் எளிதில் தீர்ந்து விடக்கூடும் என்று நம்புகிறேன்.

அருள் நெறித் திருக்கூட்டமும், சன்மார்க்க இயக்கமும் மாறுபட்ட கருத்துடைய இயக்கங்கள் அல்ல. உடன்பாடான இயக்கங்கள்தாம் துணை இயக்கங்கள்தாம் - வழி இயக்கங்கள்தாம். ஆதலின் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. சன்மார்க்க சங்கத்தினர் ஒரு பரு வடிவத்திலே நின்று விடுகிறார்கள். அருள்நெறித் திருக்கூட்டம், மேலும் ஒரு ஆயிரம் ஆண்டுக்காலப் பாரம்பரியத்திலே தன்னைப் பின்னிப் பிணைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நாட்டில் திருக்கோயில்களைப் பேணிக் காக்கவேண்டும்- திருக்கோயில்களுக்கு வருகிறவர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்- திருக்கோயில்களுக்கு வருகிறவர்களின் வழிபாட்டுணர்ச்சியை வளர்க்கவேண்டும் என்ற உணர்விலே தான் அருள் நெறித் திருக்கூட்டம் இயங்கி வருகிறது.

இன்று பலர் நன்மை செய்வதாக நினைத்துக் கொண்டு பல தீமைகளைச் செய்கிறார்கள். இந்தப் புத்திசாலித்தனம் நம் நாட்டிலேதான் உண்டு

நமக்கெல்லாம் இராமலிங்கர் மீது பக்திதானே! அவர் மீது பக்தியும், பாசமும் கொண்டுதானே நாம் இங்கே கூடியிருக்கிறோம். அவர்மீது காகிதப் பூவைப் போட்டால் அது போலிதானே! அவர் திருவுருவப் படத்தை அலங்கரிக்கும் தேரில் காகிதப் பூவைப் போட்டால் அது எதைக் காட்டும்? நாம் இன்னும் மணமிக்கவர்களாக ஆகவில்லை என்பதைத்தானே? வழிபாட்டில்-வழிபாட்டு நிகழ்ச்சிகளில் - வீட்டு நிகழ்ச்சிகளில் மணமிக்க மலர்களையும் பயன்படுத்துவது ஏன்? மனிதனின் உள்ளுணர்வு மணமிக்க மலர்போல பூத்து, மலர்ந்து மணம் வீசவேண்டும் என்பதன் அறிகுறியாகத் தானே? கையிலே மலர்க் கொத்து (Bouquet) கொடுக்கிறோமென்றால், கையிலே இருக்கிற மலர்போல உள்ள மலரும் மணம் வீசவேண்டும் என்பதற்காகத்தானே? இப்படிச் செயலால் உணர்த்துவது (Practical Study) செய்முறைப் படிப்பு. பல ஆண்டுகட்கு முன்பே மதம் இந்தச் செய்முறைப் படிப்பை நடைமுறைக்குக் கொணர்ந்தது.

இன்று, திருமண வீட்டிலே பூ கொடுக்கிறோம்.

“இந்த மலரைக் கொடுக்கிறேன்; மலர், மணமும் இனிமையும், தண்மையும் மகிழ்ச்சியும் தருவதுபோல, உங்களுக்கும் எனக்கும் இருக்கிற உறவிலே மணம், இனிமை, தண்மை, மகிழ்ச்சி, கவர்ச்சி எல்லாம் இருக்கட்டும் என்பதற்காகத்தான். இப்பொழுது கொடுக்கப் பெறுகிற துலுக்கன் செவந்திப் பூவின் மணம் போல உங்கட்கும் எனக்கும் உறவு இருக்கட்டும் என்றால், அது நடைமுறைக்கு ஒத்து வருமா?

விருந்தினர்க்கு மாலை போடுவது சடங்கு. அந்த மாலையைப் பெற்றுக் கொள்ளுகிறவர் ‘உங்கள் அன்பை - உறவைக் கண்ணின் இமை போலக் காப்பாற்றுகிறேன்’ என்பதன் அடையாளமாக-மரியாதையாகக் கண்ணில் ஒற்றி வாங்கிக் கொள்ள வேண்டும். இப்பொழுது அணிவிக்கப் பெறுகிற மாலையைக் கண்ணிலே ஒற்றினால், மாலையில் சுற்றிக் கட்டப் பெற்றுள்ள காக்காய்த் தகடு கண்ணிலே குத்திக் காயப்படுத்தி விடும்.

‘கண்மூடிப் பழக்க மெல்லாம் மண் மூடிப்போக’ என்று பாடினார் வள்ளலார். என்ன கண்மூடிப் பழக்கம்?

நம் நாட்டில் பொதுவாக இருக்கிற ஒரு குறை, ஏன் என்று கேட்டால் பாவம் என்கிற மனோபாவம். தாயை மகள் கேள்வி கேட்டால் தவறு! தகப்பனை மகன் கேள்வி கேட்டால் தவறு! ஆசிரியரை மாணாக்கன் கேள்வி கேட்டுவிட்டால் வந்தது ஆபத்து! இவற்றிற்கெல்லாம் மேலாக, மதத்தின் தலைவரை மக்கள் கேள்வி கேட்டு விட்டால் இந்த உலகமே பிரளயத்தில் அழிந்துவிடும். இங்கு மதத்துறையில் இருக்கிறவர்கள் மக்களை அச்சுறுத்தியதாலேயே இந்த நாட்டின் ‘மதம்’ கெட்டுப் போய்விட்டது. மக்களிடத்தே அச்சம் பரவியுள்ளது!

கேள்வி கேட்க முடியவில்லை. இதைத்தான் வள்ளலார் கண்மூடிப் பழக்கம் என்றார். பலருக்குக் கருத்தில்லை - கருத்தோடு தொடர்பும் இல்லை. கண்ணை மூடிக்கொண்டனர். எனவே கண்மூடிப் பழக்க வழக்கங்கள் மலிந்தன.

நம் நாட்டிலே அர்ச்சகர் வீட்டிலே அர்ச்சகன் பிறந்து விடுகிறான். அவனுக்கு ஞானம் வேண்டாம்; ஒழுக்கம் வேண்டாம்; அறிவுகூட வேண்டாம். ஆனால் தாசில்தார் வீட்டிலே தாசில்தார் பிறப்பதில்லை-தண்டல் நாயகம் வீட்டில் தண்டல் நாயகம் பிறப்பதில்லை.

பொதுவாகப் பலரிடம் ஏன் செய்கிறீர்கள் என்றால் தெரியாது! எதற்காகச் செய்கிறீர்கள் என்றால் தெரியாது! இதைச் செய்ததால் நீங்கள் என்ன பயனைப் பெற்றீர்கள் என்றால் தெரியாது! இதைச் செய்ததால் எத்தகைய உணர்வைப் பெற்றீர்கள் என்றாலும் பதில் கிடைக்காது. இந்த நிலைமையில் பரவியிருந்த பழக்க வழக்கங்களைப் பார்த்துத் தான் ‘கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப்போக’ என்றார் இராமலிங்கர். இப்படி நாம் சொல்லுவதால் பழக்கங்களை இராமலிங்கர் கண்டித்தார் என்று கூறுவதாகப் பொருளில்லை. பழக்கங்களை அவர் கண்டிக்கவில்லை. பழக்கங்களினாலேயே மனிதனின் உள்ளுணர்வு தூண்டப் பெறுகிறது. புறச்சடங்குகள்-பழக்கங்கள் முதலியவற்றால், அமைந்து போய்க்கிடக்கிற- அடங்கிப்போய்க் கிடக்கிற - தம்பித்துப் போய்க்கிடக்கிற உணர்ச்சிகளை அசைத்து விடமுடியும். தூண்டிவிட முடியும். எனவே அறிவிற்கும் அனுபவத்திற்கும் தொடர்பின்றிச் சிந்தனைக்கும் செயலுக்கும் தொடர்பின்றித் தன்னிச்சையாகச் செய்கிற செயல்களைத்தான் வள்ளலார் கண்டித்தார்.

இன்று பலருக்குப் புராணக் கதைகள் தெரியுமே தவிர தத்துவங்கள் தெரியாது. இடைக் காலத்தில் இந்த நாட்டில் சமயம், சமயக்கல்வி, தூய உணர்வு, சமயப் பயிற்சி இவற்றையெல்லாம் யார் சொல்லிக் கொடுப்பது என்ற வரையறையின்றி, சொல்லிக் கொடுக்க உரிமையுடையவர் எல்லாம் தொழில் முறையில் மாறிப்போன பிறகு, சமயம் என்ற தேர் அக்குவேறு-ஆணி வேறாகப் பிய்த்தெறியப்பட்டு விட்டது. இந்தச் சூழ்நிலையில்-இந்தக் காலகட்டத்தில் இராமலிங்கர் பிறந்தார். அவர் தோன்றிய காலமே அழுகிக் கெட்டுப் போயிருந்த காலம்தான். இராமலிங்கர் மீதுள்ள பக்தியின் காரணமாக ஒருகால் அவர் காலத்தை நாம் பொற்காலம் என்று கருதிக் கொள்ளலாம். ஆனால், தமிழகம் கெட்டுப் போயிருந்ததை அவரே பல இடங்களில் நொந்து பாடியிருக்கிறார். அவர்காலம் ஒரு சோதனைக் காலம். அன்று, ஆறுமுக நாவலர் போன்றவர்களே இராமலிங்கரை எதிர்த்தார்கள் என்றால், பொறாமையினால் எதிர்க்கவில்லை. நாவலர் போன்றவர்கள் கொஞ்சம் பாரம்பரியமான வைதிக உணர்வுடையவர்கள். அவர்கட்கு வள்ளலார் போன்றவர்களின் சன்மார்க்க சமரச நெறி பிடிக்கவில்லை. நாவலர் போன்றோர் சாதி முதலிய எல்லாம் மறைந்து விடக்கூடாது என்பது போன்ற உணர்வுடையவர்கள். எனவே எதிர்த்தார்கள்.

(புதிய காற்றுச் சிலருக்குப் பிடிக்காது; சிலர் உடம்புக்கு ஒத்துவராது. பிடிக்காது என்றாலும், ஒரு சூழலை உருவாக்கித் தலைமீது சுமத்தி விட்டால் பின்னர் பரவாயில்லை என்று சொல்லி ஏற்றுக் கொள்வர்.) அரிசனங்களை ஆலயத்திற்குள் அனுமதியுங்கள் என்று அண்ணல் காந்தியடிகள் தொடக்கத்தில் கேட்டுக் கொண்ட போதெல்லாம் அதை உறுதியாக எதிர்த்து வந்த வைதிகர்கள், சட்டம் வந்த பிறகு பரிவட்டம் கட்ட ஆரம்பித்து விட்டார்கள். கடவுளுக்காக ஒத்துக் கொள்ளாதவர்கள் சட்டம் வந்த பிறகு, சட்டத்தின் பேரால் வருகிற பிரதிநிதிக்குப் பணிந்து ஏற்று நடைமுறைப்படுத்த முன்வந்தால் சட்டம் பெரிதா? சாத்திரம் பெரிதா? மக்கள் நலன் பெரிதா? தனிமனிதன் நலன் பெரிதா?

வள்ளலார், தமிழகத்தின் எல்லாவிதமான பழைய பாரம்பரியங்களையும் ஒத்துக் கொண்டார். திடீரெனத் தோன்றியவர் அல்லர் அவர் என்ற உண்மையினை,

‘வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட
மரபினில் யானொருவன் அன்றோ’.....

என்ற வரிகள் மூலம் அவரே ஒத்துக் கொண்டிருக்கிறார்.

நமது தமிழ் நாட்டின் வரலாற்றைத் திரும்பத் திரும்பப் புரட்டிப் பார்த்தால் மேதைகள், ஞானியர்கள், வரலாற்றுப் பெரியோர்கள் இப்படித் தொடர்ந்து தோன்றி வாழ்ந்து வந்திருப்பதை யறியலாம். மாணிக்கவாசகரையும், அவரது திருவாசகத்தைப் பற்றியும் அவர் பாடுகையில்,

வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்து
ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே

என்று குறிப்பிடுகிறார். மாணிக்கவாசகரின் திருவாசகத்தைக் கேட்டபொழுது, “கீழ்ப்பறவைச் சாதிகளும் வேட்டமுறும்; பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான நாட்டமுறும்” என்று பேசுகின்றார்.

நால்வர் நெறியிலே, ‘வாழையடி வாழையாக’ வந்து தோன்றியவர் வள்ளலார். நால்வர் நெறியிலே அவருக்கு உயிர்ப்பிடிப்பு இருந்தது. மாணிக்கவாசகரின் குழைவை நாம் அருட்பாவிலே காணலாம்; திருவாசகத்திற்கு ஒரு மறு பதிப்பு அருட்பா என்று கூறலாம். திருவாசகத்தில் இவர் கரைந்து பாடியிருக்கிறார் என்பதை அவரது அருட்பாவிலிருந்து தெளிவாக உணரலாம். அவரது வாழ்க்கை வரலாற்றில்கூடச் சொல்லுவார்கள், அவர் திருமணம் நடந்த முதல் நாள் இரவு, வழக்கப்படி கையிலே திருவாசகத்தை எடுத்துக்கொண்டு சென்றார் என்று- வள்ளலாரை வளர்த்தது- அவரை வள்ளலாராக ஆக்கியது- அருட்பா மழையைப் பொழியுமாறு செய்தது- அம்மழை பொழிவதற்கு முகிலாக இருந்தது திருவாசகம் என்றே சொல்லலாம். மாணிக்கவாசகர் காலத்திற்குப் பின் பல நூற்றாண்டுகள் கழித்து வள்ளலார் தோன்றினார். அதன் பிறகும், தமிழகம் திருந்திவிடவில்லை. மாணிக்கவாசகர் காலத்தில் இருந்ததை விடக் கொஞ்சம் அதிகம் கெட்டுப் போய்த்தான் இருந்தது. மாணிக்கவாசகர் அவதரித்த காலத்திலும் இந்நாடு கெட்டுத் தான் போயிருந்தது.

‘சாதிகுலம் பிறப்பென்னும் சுழிப்பட்டுத் தடுமாறும் ஆதமிலி நாயேனை’ என்று மாணிக்கவாசகர் பாடிய பிறகு, எத்தனை பேர் எவ்வளவு காலமாக இந்தப் பொல்லாத சாதிப் பேயை இல்லாமல் ஒழிக்க முயற்சித் திருக்கிறார்கள்! ஆனால், சாதி மட்டும் இருந்தபடியே தான் இருக்கிறது. ஓர் அங்குலம் கூடக் குறையவில்லை. எனவே, வள்ளலார் நெறிநிற்கிற அன்பர்கள், இந்நாட்டு மக்களை ஆண்டாண்டுக் காலமாகப் பிடித்துக் கொண்டிருக்கிற சாதிப்பேயை விரட்டியடிப்பதில் முழு முயற்சியோடு ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சாதிப்பேயை அடியோடு அழித்தொழிக்கும் காலமே வள்ளலாரின் மனம் மகிழும் காலம்.