உள்ளடக்கத்துக்குச் செல்

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9/அப்பரும் சேக்கிழாரும்

விக்கிமூலம் இலிருந்து



6


அப்பரும் சேக்கிழாரும்

சேக்கிழார் பெருமான் பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டக் காவியம் பாடியவர். ஒரு வரலாற்றுக் காவியம் எழுதுவது எளிதன்று. அதிலும், உணர்ச்சியில் இம்மியளவும் குறையாமல் வடித்துத் தருவதென்பது அரிய பணி.

உளம் நிறைந்த பக்தி அனுபவத்தினாலும் அடியார்கள் மாட்சியில் மனங்கலந்த ஈடுபாடு கொண்டமையாலுமே சேக்கிழார் பெருமானால் காவியம் செய்ய முடிந்தது. சேக்கிழார் பெரியபுராணத்தை இயற்றித் தராதிருப்பரானால் துய சிவநெறியின் வரலாறு கிடைக்காமலே போயிருக்கும்.

சிவநெறி வாழ்க்கையோடியைந்தது என்னும் பேருண்மையை உலகுக்கு உணர்த்துவதற்குப் பெரிய புராணமே நமக்குரிய சிறந்த சாதனமாகத் திகழ்கிறது.

அப்பரடிகள் வரலாற்றை அருந்தமிழ்ச் சேக்கிழார் அருள் உணர்வு பொங்கித் ததும்ப வழிய எடுத்து இயம்பும் முறை, எண்ணத்தக்கது.

திருத்தொண்டர்க்கொரு தலைவராக வந்து அவதரித்த திருநாவுக்கரசரைத் தொண்டின் திருவுருவாகவே சேக்கிழார் பெருமான் படைத்துக் காட்டுகின்றார்.

சேக்கிழார், அப்பரடிகள் காலத்திற்கு மிகமிகப் பிந்தியவர் ஆயினும், அப்பரடிகளை நினைந்து நினைந்து, தமது உள்ளக்கிழியில் உரு எழுதி ஒவாத் தமிழ் தந்துள்ள அருமை, நினைந்து நினைந்து இன்புறத்தக்கது. அப்பரடிகளின் திருமேனி, திருவுள்ளம் ஆகியவற்றைப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். அப்பரடிகள், திருநீறணிந்து மகிழ்வதைக் கடமையாகக் கொண்டவர். பழுதிலாத் துறவாலும், சிலம்நிறை வாழ்வாலும், தவத்தின் வலிமையாலும், திருவருள் நினைவாலும், பொன்னொளிர் மேனி பெற்றவர். அந்தப் பொன் மேனியில் திருநீறு மண்டி மணம் கமழ்கின்றது.

இறைவனின் திருவடிகளை அப்பரடிகள்தம் நெஞ்சு அண்ணித்துத் தொட்டுத் தடவிக் கொண்டிருக்கிறது: அப்பரடிகள் நெஞ்சத்தில் திருவடிகள் திருக்கோயில் கொண்டருளின. அப்பரடிகளின் நெஞ்சம், ஒன்றையே நினைக்கிறது. மறந்தும் பிறிதொன்றை நினைப்பதில்லை. அதுவே, எந்தை ஈசன் திருவடிகள்! நெஞ்சத்தில் திருவடியை நினைந்து நினைந்து இன்ப அன்பினில் திளைத்து மகிழ்வ தால் கண்களில் நீர் மல்குகின்றது. அன்பின் பெருக்கில் ஊற்றெடுப்பது கண்ணிரே! கண்கள் காதற் பெருக்கில் கண்ணிரை மழையெனப் பொழிகின்றன!

அப்பரடிகளின் செந்நா சிவத்தையே பாடிய செந்நா. அவர் வாயில் உதித்த சொற்கள் செஞ்சொற்கள். சிவத்தின் செவிக்கே அமுதமெனத்திகழ்ந்த சொற்கள். நன்றுடையானே நாவுக்கரசரெனப் பெயர் சூட்டியபேரரசு, அப்பரடிகள் திருவாயில் ஊற்றெடுத்த திருத்தமிழைச் செவிமடுப்பதற் கென்றே எம்பெருமானும் கயிலையை மாற்றிக்கொண்டார்!

இத்தகைய இனிய இயல்புகளையுடைய அப்பரடிகள் புலன்கள்மீது தனியரசு செலுத்திய அரசு எனவும், நற்றமிழ்க்கோர் நாவுக்கரசெனவும், சிவநெறிக்கோர் அருளரசு எனவும் விளங்கியமையைச் சேக்கிழார் பெருமான் என்பு நெக்குருகப் பாடுகின்றார்.


"தூயவெண் ணிறு
துதைந்தபொன் மேனியும்
தாழ்வடமும்
நாயகன் சேவடி
தைவரு சிந்தையும்
நைந்துருகிப்
பாய்வது போல
அன்புநீர் பொழிகண்ணும்
பதிகச் செஞ்சொல்
மேயசெவ் வாயு
முடையார் புகுந்தனர்
வீதி யுள்ளே”

என்பது திருப்பாடல்.