உள்ளடக்கத்துக்குச் செல்

குமண வள்ளல்/புகழ் கேட்ட புலவர்

விக்கிமூலம் இலிருந்து

குமண வள்ளல்
1. புகழ் கேட்ட புலவர்

காலை நேரம் அது. வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்தார் பெருஞ்சித்திரனார். அவர் உள்ளம் தண்டமிழ்ச் செல்வம் நிறைந்த கருவூலம். ஆனால், அவர் இல்லமோ கூரை வேய்ந்த குடிசைதான். அங்கே திருமகள் தாண்டவம் ஆடவில்லை. மருமகளாகிய கலைமகள் வாழும் இடத்தில் வாழ்வதற்கு அந்தப் பெருமாட்டி திருவுளம் கொள்வதுதான் இல்லையே! புலவர் எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தார். புதிய கவிதைக்குரிய பொருளைச் சிந்திக்கவில்லை. பழைய பொருளைக் கற்பனை வண்ணத்தில் தீட்டவும் முயலவில்லை. தம்முடைய இல்லத்தில் நிலவிய வறுமையைப் போக்கும் வழி என்ன என்பதைப் பற்றியே அவர் சிந்தித்துக் கொண்டிருந்தார்.

தமிழ் நயம் தேர்ந்து இன்புறும் செல்வர்களைத் தேடிச் சென்று தம் கவித் திறத்தைப் புலப்படுத்தி, அவர்களுடைய பாராட்டையும், பரிசையும் பெற்று, வாழ்க்கையை நடத்துபவர் அவர். அவருக்குப் பழக்கமான பெருவள்ளல் அதிகமான் எழினி என்பவன், தன்னுடைய நகரமாகிய தகடூரில் சேர அரசனாகிய பெருஞ்சேரல் இரும்பொறையோடு பொருது வீழ்ந்து விட்டான் என்ற செய்தி அணிமையில் அவர் காதில் விழுந்தது; அதுவும் அவர் உள்ளத்தை அலைத்துக் கொண்டிருந்தது. அதிகமானிடம் அவர் ஒரு முறை சென்று தக்க பரிசுகளைப் பெற்றிருக்கிறார். அவனைக் கண்டபோது நிகழ்ந்த நிகழ்ச்சி புலவருக்கு இப்போது நன்றாக நினைவுக்கு வந்தது. அன்றுதான் அதிகமானுடைய பெருந்தன்மையைப் பெருஞ்சித்திரனார் உணர்ந்துகொண்டார். முதலில் அவர் அவனைச் சிறந்தவனாகக் கருதவில்லை; அவனிடம் அவருக்குக் கோபம் உண்டாயிற்று. ஆனால் அவருடைய கோபம் பின்பு நன்மையே விளையச் செய்தது.

தகடூர் நெடுந்துாரத்தில் உள்ள ஊர். அதற்குப் போகவேண்டுமானால் மலையடர்ந்த பகுதிகளைக் கடந்து செல்லவேண்டும். இப்போது சேலம் மாவட்டத்தில் உள்ள தர்மபுரி என்ற ஊரின் பழைய பெயர்தான் தகடூர் என்பது. தர்மபுரிக்கு அருகில் இன்றும் அதிகமான் கோட்டை என்ற இடம் இருக்கிறது. அங்கேதான் சிற்றரசனாகிய அதிகமான் வாழ்ந்து வந்தான். நெடுநாள் வாழும்படியாகச் செய்யும் நெல்லிக் கனியை ஔவையாருக்கு வழங்கி அப்பெருமாட்டியாரின் பாடலைப் பெற்றுத் தமிழுலகம் முழுவதும் புகழும் உயர்நிலையை அடைந்தவன் அவன்.

பெருஞ்சித்திரனார் அவனை நாடிச் சென்றார். அவர் போன சமயம், பெருஞ்சேரலிரும்பொறை போர் செய்ய வரக்கூடும் என்ற செய்தி அதிகமானுக்கு ஒற்றர் மூலமாக எட்டியிருந்தது. ஆதலின், தன்னுடைய நண்பர்களோடும் அமைச்சர்களோடும், போர் நேர்ந்தால் என்ன் செய்வது என்ற ஆராய்ச்சியில் அவன் ஈடுபட்டிருந்தான்.

பெருஞ்சித்திரனாருக்கு இந்தச் செய்தி தெரியாது. அவர் மிக்க ஆர்வத்தோடு அதிகமான் நெடுமான் அஞ்சியைப் பார்க்கும் பொருட்டு அவன் மாளிகையை அடைந்தார். எந்தப் புலவர் வந்தாலும் அரசனுடைய கட்டளையின்றியே வேண்டிய உபசாரங்களை அங்குள்ளவர்கள் செய்வார்கள். அப்படியே பெருஞ்சித்திரனாருக்கும் உபசாரங்கள் நடந்தன. "அரசர் பிரானைப் பார்த்து அளவளாவ வேண்டும்" என்ற தம் கருத்தைத் தெரிவித்தார் புலவர். அவன் அப்போது தான் ஆழ்ந்த மந்திராலோசனையில் ஈடுபட்டிருந்தான். புலவர்களிடத்தில் அவனுக்கு இருந்த பெருமதிப்பை அரண்மனையில் உள்ளவர்கள் நன்கு உணர்ந்திருந்தார்கள். ஆதலின், பெருஞ்சித்திரனார் வரவை ஒருவர் அதிகமானிடம் தெரிவித்தார். அவன் அவரை முன்பு அறிந்ததில்லை. “அவருக்குத் தக்கபடி பரிசு அளித்து அனுப்புங்கள். மற்றொரு முறை வந்தால் பார்க்கிறேன் என்று சொல்லுங்கள்” என்று அவன் பணித்தான். .

அவ்வள்ளல் பணித்தபடியே ஒருவர் ஓர் அழகிய தட்டில் பொன்னும் பொருளும் பழமும் தாம்பூலமும் வைத்துக் கொணர்ந்து புலவர்முன் வைத்தார். ம“ன்னர்பிரான் இன்றியமையாத ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார். பின் ஒருமுறை வந்தால் பார்த்து இன்புறுவதாகத் தெரிவித்தார்” என்றார்.

இதைக் கேட்ட புலவர் மனத்தில் பெருத்த ஏமாற்றம் உண்டாயிற்று. அவர் எத்தனை காதம் கடந்து வந்திருக்கிறார் மறுபடியும் போய்விட்டு ஒரு முறை வருகிறதாவது! அவர் அடுத்த ஊரில் இருக்கிறவரா? அவருக்குக் கோபங்கூட வந்தது.

அரசனுடைய ஏவலின்படி வந்தவர் தட்டை எடுத்து நீட்டினார். புலவர் அதைப் பார்த்தார்; அதை அளித்தவர் முகத்தைப் பார்த்தார்: “அதை அப்படியே வையுங்கள்” என்றார். அந்த அதிகாரிக்கு ஒன்றும் விளங்கவில்லை; தடுமாறினர்.

“இதை எனக்குக் கொடுக்கும்படி உங்கள் அரசர் சொன்னாரா?” என்று பெருஞ்சித்திரனார் கேட்டார்.

“ஆம், தங்களைச் சந்திக்க முடியாததற்கு வருந்தினார். இந்தப் பரிசிலை வழங்கும்படி கட்டளையிட்டார்.”

“அப்படியா? நான் இதற்காகத்தான் வந்திருக்கிறேன் என்று அவர் எப்படி அறிந்துகொண்டாரோ?”

பெருஞ்சித்திரனார் சற்றுப் பெருமிதத்துடன் பேசினார். அவர் பேச்சிலுள்ள உறுதியைக் கண்டு அதிகாரி அஞ்சினார்.

“மன்னர் பெருமான்....” என்று அவர் எதையோ சொல்ல வந்தார். புலவர் அவரைப் பேச விடவில்லை.

“மறுபடியும் வந்தால் பார்க்கலாம் என்று சொன்னார்? நான் அருகில் உள்ள ஊரிலிருந்து வரவில்லை. குன்றும் மலையும் பல பின் ஒழிய நெடுந்துாரத்தைக் கடந்து வந்திருக்கிறேன். நான் புலவனாதலால் இந்த வள்ளலைக் கண்டு இவர் வழங்கும் பரிசிலைப் பெற்றுக் கொண்டு செல்லலாம் என்றுதான் வந்தேன். ஆனால் பரிசிலை இத்தகைய முறையில் பெறுவதற்காக நான் வரவில்லை. என்னிடம் கருணை கூர்ந்து, இதைப் பெற்றுக்கொண்டு போகட்டும் என்று எதைக் கொண்டு சொன்னாரோ அறியேன். அவர் முகத்தைக் கண்டு அவரோடு அளவளாவி அவருடைய அன்பாகிய பரிசிலைப் பெற்றுப் பின்னரே இத்தகைய பரிசிலைப் பெற விரும்பினேன். இப்போது நான் அவரைக் காணவில்லை என்னையும் அவர் பார்க்கவில்லை. பரிசில்தான் கிடைத்துவிட்டதே, வாங்கிக்கொண்டு போகலாம் என்ற எண்ணமும் எனக்கு உண்டாகவில்லை. வியாபார நோக்கு உடையவர்களுக்குத்தான் அந்த எண்ணம் தோற்றும். நான் பரிசிலன்தான்; ஆனால் வாணிகப் பரிசிலன் அல்லேன். அவர் என்னைக் கண்டு பேசி என் புலமைத் திறத்தை உணர்ந்து தினையளவு கொடுத்திருந்தாலும் இனிதாகப் பெற்றுப் போவேன். இது இங்கேயே இருக்கட்டும்” என்று சொல்லி எழப் போனார் பெருஞ்சித்திரனார்.

அவருடைய வீரப்பேச்சைக் கேட்ட அதிகாரி அயர்ந்து போனார். ‘இவர் உயர்ந்த புலவர்’ என்ற எண்ணம் அவருக்கு உண்டாயிற்று. அதற்குள் பெருஞ்சித்திரனார் தம்முடைய கருத்தையெல்லாம் அமைத்து ஒரு பாட்டையே பாடிவிட்டார்.

குன்றும் மலையும் பலபின் ஒழிய
வந்தனென் பரிசில் கொண்டனென் செலற்குஎன
நின்ற என்நயந்து அருளி, ‘ஈதுகொண்டு
ஈங்கனம் செல்க தான்’என என்னை
யாங்குஅறிந் தனனோ தாங்கருங் காவலன்?
காணாது ஈத்த இப்பொருட்கு யான்ஒர்
வாணிகப் பரிசிலன் அல்லேன்: பேணித்
தினை அனைத்து ஆயினும் இனிது, அவர்
துணையளவு அறிந்து நல்கினர் விடினே.

[1] பாட்டுக் காதில் விழுந்ததும் அதிகாரி வெல வெலத்துப் போனார். “சற்று இருங்கள்; அரசரிடம் கேட்டுவிட்டு வருகிறேன்” என்று அவர் புலவருடைய விடைக்குக் கூடக் காத்து நில்லாமல் உள்ளே போய்விட்டார்.

என்ன ஆச்சரியம்! சிறிது நேரத்தில் அதிகமான் அஞ்சியே எதிரில் வந்து நின்றான். “புலவர் பெருமான் என் பிழையைப் பொறுக்கவேண்டும். தங்களைப் பாராமல் பரிசிலைக் கொடுத்தனுப்பியது தவறுதான். தங்களை இதுகாறும் அறிந்து கொண்டதில்லை” என்று சொல்லிக்கொண்டே வந்தான்.

புலவர் அதிகமான் புகழை முன்பே கேட்டவர். “ஔவையாருடைய பாட்டால் தமிழுலகம் அரசர் பிரானை நன்கு அறியும். அத்தகைய வள்ளலைப் பார்த்துப் போகலாமென்று நெடுந்துாரம் வந்ததும் பார்க்க முயலவில்லையே என்ற வருத்தம் மீதூர்ந்தது. அதனால் ஏதோ சொன்னேன்” என்று அவர் சொன்னார்.

அப்பால் சிறிது நேரம் அவர்கள் அளவளாவினர்கள். புலவரைச் சில நாட்கள் தகடுரில் தங்கும்படி வேண்டிக்கொண்டான் அதிகன். அவர் தங்கித் தம் கவித்திறத்தைக் காட்டினர். போர் மூளுமோ என்று அஞ்சியிருந்த நிலையில், நெடுநேரம் புலவரோடு பொழுதுபோக்க முடியவில்லையே என்று அதிகமான் வருந்தினான். அதை அறிந்த புலவர் பின் ஒரு முறை வருவதாகச் சொல்லி விடை பெற்றுக்கொண்டார்.

மறுபடி அவரால் போக முடிந்ததா? அவர் போகலாம் என்ற ஆர்வத்தோடுதான் இருந்தார். ஆனால் அதிகமானுடைய கோட்டையைச் சேரமான் பெருஞ் சேரல் இரும்பொறை முற்றுகையிட்டுவிட்டான் என்றும் போர் கடுமையாக நடைபெறுகிறதென்றும் கேள்வியுற்றார். அதிகமான் வெற்றி பெற வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொண்டார். ஆனல் முடிவு வேறு விதமாக ஆயிற்று. அதிகமான் நெடுமான் அஞ்சி அந்தப் போரில் வீழ்ந்து புகழுடம்பு பெற்றான்,

இந்தச் செய்தியைக் கேட்டதுமுதல் புலவருக்கு இருந்த ஊக்கம் குறைந்துவிட்டது. அதிகமானை ஒரு முறைதான் அவர் பார்த்திருந்தாலும் அவனுடைய உயர்ந்த பண்புகளை அவர் நன்கு உணர்ந்து கொண்டார். பல காலம் பழகிய அன்பு அவனிடம் மூண்டது.

‘இனி நம் வறுமையைப் போக்கிக்கொள்ள யாரிடம் போவோம்? நம்முடைய கவிதையின்பத்தை நுகர்ந்து பாராட்டும் வள்ளல் யார் இருக்கிறார்கள்? தமிழ் நாட்டில் புலவர்களுக்கு வரையறையில்லாமல் ஈயும் வள்ளல்கள் ஏழு பேர். அவர்கள் ஒவ்வொருவராக மறைந்துவிட்டனர். அந்த ஏழு பேர்களில் ஒருவனாகிய அதிகமானைப் பார்க்கக் கொடுத்துவைத்தும், பல காலம் பழகி, உள்ள நிறைவோடு பாராட்டிப் பாடக் கொடுத்துவைக்கவில்லை’ என்ற துயரத்தில் ஆழ்ந்திருந்தார் அவர்.

மனம் அவரைத் தகடூருக்கே அழைத்துச் சென்றது. மறுபடியும் அவர் இருந்த குடிசைக்கு அழைத்து வந்தது. அங்கங்கே உள்ள சில சிறிய செல்வர்களை அவர் அறிவார். அவர்களோடு அவர் பழகியிருக்கிறார், சிறு சிறு உதவிகளையும் பெற்றிருக்கிறார். ஆயினும் அவர்கள் எத்தனை காலத்துக்கு அவருடைய குடும்பத்தைத் தாங்க முடியும்?
இத்தகைய நிலையில், அவரிடம் ஒரு நாள் குமணன் என்ற சிற்றரசனுடைய வள்ளன்மையைப்பற்றி யாரோ ஒரு புலவர் சொன்னார். கொங்கு நாட்டில் முதிரம் என்னும் மலைக்கு அருகில் ஓர் ஊரில் அவன் வாழ்கிறான் என்று கேள்வியுற்றார். புலவர்களுக்கு மிகுதியாக வழங்கும் பெருமான் அவன் என்றும், அவனை அணுகினவரிடம் வறுமை விடை பெற்றுக் கொண்டு ஓடிவிடும் என்றும் செய்தி சொன்னவர் பாராட்டினர். அவ்வாறு அவன் செய்வது உண்மை என்பதை வேறு சிலரும் சொன்னர்கள். எல்லா வற்றையும் கேட்ட பெருஞ்சித்திரனுர், குமணனை அணுகி அவனுடைய அன்பைப் பெற வேண்டும் என்ற ஆவலை உடையவரானார்.

  1. குன்றுகளும் மலைகளும் பல பின்னிடக் கடந்து பரிசில் வாங்கிப் போவதற்கு வந்தேன் என்று நின்ற என்பால் அன்பு செய்தருளி, “இதைப் பெற்றுக்கொண்டு இப்படியே அவன் போகட்டும்” என்று, தாங்குதற்கரிய நாடு காவலுயுடைய அரசன் என்னை எவ்வாறு அறிந்தானே? என்னைக் காணாமல் கொடுத்த இந்தப் பொருளைப் பெறுவதற்கு யான் ஒரு வியாபார நோக்கமுடைய பரிசிலன் அல்லேன்; பாராட்டிக் கொடுப்பது தினையளவுடையதானாம், புலவர்களுடைய திறமையின் அளவை அறிந்து பரிசில் வழங்கி விடை கொடுத்தால் அதுவே இனிதாகும்.