குமண வள்ளல்/முதற் காட்சி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

2. முதற் காட்சி

ன்றுதான் பெருஞ்சித்திரனாருக்கு எப்படியும் குமணனிடம் சென்று வரவேண்டும் என்ற எண்ணம் உறுதியாயிற்று. வீட்டில் உள்ளவர்கள் வறுமையினால் படும் துன்பக் காட்சிகளைக் காணக் காண அவர் மனம் துன்பக் கடலில் மூழ்கியது. அவருடைய முதிய அன்னை எலும்பு உருவமாக நின்றாள். முதுகு வளைந்து தள்ளாடித் தள்ளாடி நடந்தாள். கையில் கோலை ஊன்றிக்கொண்டு குறுக அடியிட்டு நடக்கும்போது, எங்காவது விழுந்துவிட்டால் என் செய்வது என்ற அச்சமே காண்பவர்களுக்கு உண்டாகும். தலை முழுவதும் நரைத்துவிட்டது. வெள்ளை நூலைத் தலையில் பரப்பினாற்போல் இருந்தது: அதன் தோற்றம். வீட்டு வாசலை விட்டு அவள் எங்கும் போவதேயில்லை. திண்ணையிலே சோர்ந்து சோர்ந்து விழுந்து தூங்குவதைத் தவிர அவளுக்கு. வேறு வேலை இல்லை.

அதிகமான் இறந்துவிட்டான் என்ற செய்தியைக் கேட்டுப் பெருஞ்சித்திரனார் வருந்தியதை, அவள் கண்டாள். ‘யார் யாரையோ யமன் விரைவில் கொண்டு போய் விடுகிறான். எனக்கு மாத்திரம் முழு ஆயுள் போட்டு வைத்திருக்கிறது. இன்னும் பல ஆண்டுகள் பூமிக்குப் பாரமாக இருக்க வேண்டும் என்று என் தலையில் எழுதியிருக்கும்போது என் உயிர் எளிதில் போய்விடுமா?’ என்று அவள் தன் நிலையை நினைந்து வருந்தினாள்.

“ஏன் அம்மா அப்படிச் சொல்கிறாய்? இறைவனுடைய திருவுள்ளப்படியேதான் எல்லாம் நடக்கும். நீ எதற்காக இப்படி வருத்தப்பட வேண்டும்?” என்று புலவர் மனம் நைந்து கேட்டார்.

“நீ இந்தக் குடும்பத்தைக் காப்பாற்றுவது எவ்வளவு இன்னலாக இருக்கிறது ! நான் ஒருத்தி வேறு சோற்றுக்குக் கேடாய் இருப்பது ஏன் ? என்னால் யாருக்காவது லாபம் உண்டா ? குழந்தைகள் படும் பாட்டைப் பார்த்துக்கொண்டு நான் இன்னும் வாழ வேண்டுமா ?”

அவள் துயரத்தைப் புலவர் கிளப்பிவிட்டாரே ஒழியக் குறைக்கவில்லை. நாம் ஏன் பேசினோம் என்று ஆகிவிட்டது. பேசாமல் எழுந்து வெளியே சென்றார்.

அவருக்குப் பல குழந்தைகள் இருந்தார்கள். ஒன்று ஆண் குழந்தை ஓடியாடி விளையாடும் பருவம் உள்ள குழந்தை. கைக் குழந்தை ஒன்றும் இருந்தது. மனைவி குழந்தையைப் பெற்ற பச்சை உடம்புடன் காடிக் கஞ்சியை மூடிக் குடித்தாள். கைக் குழந்தைக்குக் கொடுக்க அவளிடம் பால் இல்லை. பால் கிடைக்காமையால் குழந்தை அழுதது. அவள் என்ன செய்வாள், பாவம்! அவள் உடம்புக்கு ஊட்டம் இருந்தால் அல்லவோ குழந்தைக்கு உணவு கிடைக்கும்?

ஏதாவது கிடைத்தால் அதை மற்றவர்களுக்குப் போட்டாள். அவள் எதை உண்டாள்? புழைக்கடையில் குப்பையிலே ஏதோ கீரை முளைத்திருந்தது; அதைப் பறித்து வேகவைத்தாள். அதற்குப் போட உப்புக்கூட வீட்டில் இல்லை. அரிசியைப்பற்றிச் சொல்வானேன்? மோரும் கிடையாது. வெறும் நீரில் வெந்த உப்பில்லாக் கீரையை உண்டு காலம் கடத்தினாள் அவள். அவள் இடையில் ஒரு சீலைத் துண்டைக் கட்டியிருந்தாள். மாற்றி உடுக்க வேறு ஆடை இல்லை. ஆகையால் அந்த உடையும் அழுக்குப் படிந்து படிந்து அதனால் சிக்குப் பிடித்து நைந்து குறைந்து வந்தது.

இந்தக் காட்சியும் புலவர் கண்ணில் பட்டது. அவருக்குக் கவி பாடத் தெரியும். வரிசையறிந்து தமிழ் இனிமையை நுகர்பவரிடம் செல்வாரே ஒழியப் பணம் படைத்தவர்களிடமெல்லாம் போக அவர் உள்ளம் இடம் கொடுப்பதில்லை. வயிற்றைவிட அவருக்கு மானமே பெரிதாகத் தோன்றியது. “சோறு இல்லை; துணி இல்லை; தா” என்று பணக்காரர்களிடம் தம் வறுமையை விளம்பரப்படுத்தும் துணிவு அவரிடம் இல்லை. தொழில் ஒன்றும் தெரியாதவர் அவர்.

தம் தாய் படும் துன்பத்தையும் மனையாளும் குழந்தைகளும் படும் அல்லலையும் கண்டு கண்டு அவர் மனம் வருந்தினர். ‘இனிச் சும்மா இருப்பது பாவம்’ என்ற எண்ணம் தோன்றவே, குமணனிடம் சென்று அவனுடைய அன்புக்கு ஆளாகி நலம்.பெற வேண்டும்' என்று உறுதியாகத் தீர்மானித்தார். ஒரு நாள் புறப்பட்டு விட்டார்.

கொங்கு நாட்டுக்குச் சென்று முதிர மலை எங்கே இருக்கிறதென்றும், குமணன் வாழும் ஊர் எது என்றும் விசாரித்துத் தெரிந்துகொண்டார். பிறகு அந்த ஊரை அடைந்தார்.

போகும்பொழுதே முதிர மலையையும் பார்த்து விட்டுப் போனர். அது வளம் மிக்க மலையாக இருந்தது. மரங்கள் பல அதில் அடர்ந்து வளர்ந்திருந்தன. சுரபுன்னை மரங்களும் மூங்கில்களும் செறிந்திருந்தன. பலா மரங்களுக்குக் கணக்கே இல்லை. நன்றாகக் கனிந்து பழுத்த பழங்கள் அம் மரங்களில் தொங்கின. எங்கே பார்த்தாலும் கம் என்ற வாசனை. பலாப் பழம் இருக்கிற இடத்தில் குரங்குகள் கூட்டங் கூட்டமாக வந்துவிடும். இந்த இடத்திலோ காவலே இல்லை. பலாப் பழம் அருமையான பண்டமாக இருந்தாலல்லவா காவல் வேண்டும்? முதிர மலையில் அதற்குப் பஞ்சமே இல்லை. ஆதலின், ஆண் குரங்குகளாகிய கடுவன்களும் பெண் குரங்குகளாகிய மந்திகளும் குரங்குக் குட்டிகளும் தம் மனம் போன போக்கிலே பலா மரங்களில் தாவிப் பழங்களைத் தோண்டித் தின்றன.

பெருஞ்சித்திரனார் பலா மரச் சூழலில் ஓர் அரிய காட்சியைக் கண்டார். ஓர் ஆண் குரங்கு ஒரு மரத்தில் இருந்தது. அதில் தொங்கிய பெரிய பழமொன்றைத் தோண்டிக் கொஞ்சம் சுவைத்துப் பார்த்த அந்தக் கடுவன் எதிரே வேறு ஒரு மரத்திலிருந்த மந்தியை அழைத்துக்கொண்டிருந்தது. மனிதர்களைப் போலவே கையைக் காட்டித் தன்னுடைய மொழியில் கீச்சிட்டு அழைத்தது.

இதைக் கண்டார் புலவர். ‘இறைவனுடைய படைப்பின் பெருமையே பெருமை! இந்தக் கடுவனுக்கு எத்தனை அன்பு! தான் உண்ணும் கனியை மந்திக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும் என்ற அறிவுடையதாக இருக்கிறதே! மனிதர்களில் எத்தனை பேர் இப்படி இருக்கிறார்கள்? இது எல்லாக் குரங்குகளிடத்திலும் உள்ள இயல்புதானா? அல்லது இந்த முதிர மலையின் சிறப்பாக இருக்குமோ? இதன் தலைவனாகிய குமணன் தான் பெற்ற பெருஞ் செல்வத்தைப் பிறர்க்கும் வழங்கி இன்புறுகிறவனாதலின் அவன் இயல்பை அவன் நாட்டில் வாழும் விலங்கினங்களும் மேற் கொண்டனவோ?’—அவர் சிந்தனை படர்ந்தது. அவர் குமணனைப் பாட ஒரு நல்ல காட்சி கிடைத்துவிட்டது!

குமணன் இருந்த ஊரை அடைந்த புலவர் நேரே அரண்மனையை அணுகினார். குமணன் நல்ல செல்வம் உடையவன் என்பதை அந்த அரண்மனையே எடுத்துக் காட்டியது. அதன் வாசலில் இரு புறமும் இரண்டு யானைகள் நின்றுகொண்டிருந்தன. ‘நாம் வந்திருக்கிற இடம் மற்ற இடங்களைப் போன்றது அன்று. இறைவன் திருவருளால் இம் மன்னனுடைய நட்புக் கிடைத்தால் இனி வரும் ஏழு தலைமுறையின் வறுமையையும் போக்கிக்கொள்ளலாம்’ என்ற நம்பிக்கை அவருக்கு உதயமாயிற்று. வறுமையின் பிடிப்பிலே உள்ளம் வாடிக் குமைந்த அவருக்குத் தெரியும் அந்த வேதனை.

அங்கே இருந்தவர்கள் பெருஞ்சித்திரனாரைப் புலவர் என்று அறிந்து அன்போடு வரவேற்றனர். அவர்களுடைய அன்பான பேச்சும் அவர்கள் காட்டிய மரியாதையும் அவர்களுடைய தலைவனாகிய குமணன் புலவர்களிடம் பெருமதிப்பு உள்ளவன் என்பதைப் புலப்படுத்தின.

“நெடுந் தூரத்திலிருந்து வந்திருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது. முதலில் நீராடிவிட்டு உணவு கொள்ளுங்கள். பிறகு மன்னர் பிரானைக் காணலாம்” என்று அரண்மனை அதிகாரி ஒருவர் சொன்னர்.

“மன்னர் பிரானைக் கண்டு பேசி மகிழ இன்றே வாய்ப்புக் கிடைக்குமா?” என்று கேட்டார் புலவர்.

அவர் பல இடங்களுக்குச் சென்று, உரியவர்களை எளிதில் பார்க்க இயலாமல் வருந்தினவர் என்று எண்ணினார் அதிகாரி. அவர் கேட்ட கேள்வியிலிருந்து தான் அந்த எண்ணம் உண்டாயிற்று.

“தடையின்றிப் பார்க்கலாம். இன்றே பார்க்கலாம். இப்பொழுதுகூடப் பார்க்கலாம். ஆனல் தாங்கள் வழி நடந்து இளைப்புற்றிருக்கிறீர்கள். இந்த நிலையில் தங்களை வைத்துப் பேசுவது முறையாகாது. முதலில் இளைப்பாறுங்கள்” என்றார் அதிகாரி.

பெருஞ்சித்திரனார் நீராடிவிட்டு வந்தார். அவர் கொண்டுவந்த ஆடையை உடுத்துக்கொள்ள விடவில்லை அதிகாரி, அரண்மனையிலிருந்து புதிய ஆடையை அளித்தார். புலவர் அதை அணிந்து கொண்டு அங்கே விருந்து உண்ணத் தொடங்கினர். அத்தகைய உணவை அவர் உண்டு எத்தனையோ நாட்கள் ஆயின. அதிகமானோடு அவர் உண்டிருக்கிறார்.

இப்போது அதிகமான் நினைவு அவருக்கு வந்தது. உடனே தம் வீட்டு நினைவும் வந்தது. அவருடைய தாயும், உப்பில்லாக் கீரையை உண்டு வாழும் மனைவியும், குழந்தைகளும் அவர் அகக் கண் முன் நின்றனர். அவர்கள் அங்கே நல்ல உணவின்றி வாடத் தாம் அறுசுவை உணவு பெறுவதை எண்ணும் போது அவருக்குத் துயரம் குமுறிக்கொண்டு வந்தது. வரும் வழியில் பார்த்த குரங்கை நினைத்தார். அதன் அன்பை நினைத்தார். தாம் இனிப் பெறப் போகும் பரிசிலைக் கொண்டு சென்று தம் குடும்பத்தினருடைய வறுமையை முதலில் போக்க வேண்டும் என்ற எண்ணம் அவர் உள்ளத்தில் ஓங்கி நின்றது.

விருந்து உண்டார். உடனிருந்து தம்மை உண்பித்த அதிகாரியிடம், “இப்போது அரசர்பிரானப் பார்க்கலாமா?” என்று கேட்டார். புலவருக்குக் குமணனைப் பார்க்கவேண்டும் என்று இருந்த ஆர்வ மிகுதியை அதிகாரி நன்கு உணர்ந்தார்.

“எப்பொழுது வேண்டுமானாலும் கண்டு மகிழலாம். ஆனாலும் தாங்கள் இப்போதுதான் உணவு கொண்டீர்கள். உண்ட இளைப்புத் தொண்டருக்கும் உண்டு என்பார்கள். வழி நடந்த இளைப்பு வேறு இருக்கிறது. ஆதலால் சற்றே படுத்து இளைப்பாறுங்கள். பிறகு மன்னர்பெருமானைக் கண்டு நெடுநேரம் அளவளாவலாமம்” என்றார் அதிகாரி.

“என்னை உங்களுக்கு முன்பு தெரியாது. உங்கள் மன்னர் என்னை அறியும் அளவுக்கு நான் புகழ் படைத்தவன் அல்லேன். அப்படியிருக்க என்னைக் கண்டவுடன் இவ்வளவு உபசாரம் செய்கிறீர்களே! இதற்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்!”

“இது எங்கள் கடமை. அரண்மனை வழக்கம் இது. புலவரென்று யார் வந்தாலும் முதலில் அவர் உணவு கொண்டாரா என்று அறிந்து உண்பிக்க வேண்டும் என்பது அரசர் இட்ட கட்டளை. அவருக்குத் தங்களைத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அவருக்குத் தமிழைத் தெரியுமே! தமிழினிடம் அவருக்கு உள்ள ஆராக்காதல் எந்தப் புலவராயினும் முன்பின் அறியாமலே உறவுகொள்ளும்படி செய்கிறது. தாங்கள் அவருடன் அளவளாவும்போது அவருடைய இயல்பைத் தெரிந்துகொள்வீர்கள். தமிழ்ப் புலவர்களிடம் அப்பெருமான் காட்டும் அன்புக்கு, நாங்கள் காட்டும் அன்பு எம் மாத்திரம்?....சரி, சரி, தங்களைத் தூங்கச் சொல்லிவிட்டு நான் பேசிக்கொண்டே இருக்கிறேனே; தயை செய்து இளைப்பாறுங்கள்.”

கட்டிலும் மெத்தையும் உள்ள இடத்தைக் காட்டினர் அதிகாரி. உண்மையில் களைப்பாகத்தான். இருந்தது புலவருக்கு படுக்கையில் படுத்தார்; தூங்கி, விட்டார்; நன்றாகத் தூங்கினார். கண் விழித்துப் பார்க்கையில் ஏவலாளன் ஒருவன் இனிய பானத்துடன் அருகே நின்றான். முகத்தைக் கழுவிக்கொண்டு அந்தப் பானத்தை உண்டார். உடனே அவரை உபசரித்த அதிகாரியும் வந்துவிட்டார்.

“எங்கள் மன்னருக்குத் தங்கள் வரவைச் சொன்னேன். புதிய புலவர் ஒருவரைத் தெரிந்துகொள்வது என்றால் அவருக்கு எப்போதுமே மிக்க விருப்பம். தங்களைக் காணவேண்டும் என்று காத்திருக்கிறார்” என்றார்.

“அப்படியா என்னை முன்பே எழுப்பியிருக்கலாமே!”

“தாங்கள் அயர்ந்து தூங்கும்போது எழுப்பலாமா? என்ன அவசரம்? எப்படியும் தாங்கள் இங்கே வந்தாயிற்று, ஓய்வாகப் பார்த்துப் பேசி இன்புறலாம் என்ற எண்ணத்தால் தங்கள் தூக்கத்தைக் கலைக்கவில்லை. இப்போது மன்னரைக் காணலாமா?”

“கரும்பு தின்னக் கூலியா?” என்று வியந்த ஆடியே புலவர் குமணனைக் காண எழுந்தார். அவனைக் காணும்போது அவர் ஏதேனும் கையுறை கொண்டு செல்லவேண்டாமா? பழமும் பண்டமும் கொண்டு மன்னரைக் காண்பது குடிமக்கள் செயல்ரிடம் எல்லாவற்றிற்கும் மேற்பட்ட தமிழ்க் கனி இருக்கிறது அல்லவா? பெருஞ்சித்திரனாரும் குமணனைப் பாராட்டும் பாடலைக் கையுறையாகக் கொண்டு சென்றார், அதை அவர் தம் உள்ளத்தில் உருவாக்கி வைத்திருந்தார்.

புலவர் குமணன் வீற்றிருந்த அவைக்களத்தைக் குறுகினார். அவன் அவரை அன்புடன் வரவேற்று அருகில் இருந்த இருக்கையில் அமரச் செய்தான்.

“நீங்கள் வந்திருப்பதாக அறிந்து அளவிலா மகிழ்ச்சி அடைந்தேன். புதிய நாடு ஒன்று கிடைத்தால் மன்னர்களுக்கு மிக்க இன்பம் உண்டாகும். புதிய புலவர் ஒருவரைக் கண்டு பழகுவதால் அதை விட மிகுதியான இன்பம் எனக்கு உண்டாகிறது. நெடுந்துாரத்திலிருந்து வந்திருப்பதாகக் கேள்வியுற்றேன். நன்றாக இளைப்பாறினீர்களா?” என்று தானே வலிந்து விசாரித்தான் குமணன். அவன் பேசிய மொழிகளிலே அன்பு கனிந்திருந்தது.

புலவர் அவனைக் கண்டவுடனே வாயடைத்துப் போனார். அவனுடைய அன்புரை அவரை வியப்பில் ஆழ்த்தியது. சிறிது நேரம் பேசவே இயலவில்லை. உணர்ச்சி அவர் உரைக்குக் காப்பிட்டது. பிறகு தெளிந்து பேசலானார்.

“எத்தனையோ காலமாக எளியேன் பண்ணிய புண்ணியத்தின் பயனாக இன்று மன்னர் பிரானைக் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. தமிழ்ப் புலவர்களை வரவேற்று உபசரித்துப் பாராட்டும் வள்ளல்கள் வரவரக் குறைந்துகொண்டே வருகிறார்கள். இந்தக் காலத்தில் அரசர்பிரான் கற்பக மரம் போல அவர்களைக் காப்பாற்றக் கங்கணம் கட்டிக்கொண்டிருப்பதாக முன்பே கேள்வியுற்றேன்.” “நீங்கள் இதற்குமுன் இங்கே வந்ததே இல்லையே!” என்றான் குமணன்.

“என் ஊழ்வினை தடுத்து நின்றது. நல்ல காலம் பிறவாமல் இருந்தது. இப்போதுதான் திருவருள் கூட்டுவித்தது. நான் வந்ததிலிருந்து இங்கே கிடைக்கும் நலன்களை எண்ணி எண்ணி இன்புறுகிறேன். குழந்தையைக் கண்ட தாய்க்கு அதன் வயிற்றின் வாட்டந்தான் முதலில் கண்ணில் படும். அப்படி இங்கே உள்ளவர்கள் என் பசியறிந்து உணவிட்டுத் தூங்க வைத்தார்கள்.”

“புலவர்களுக்கு உபசாரம் செய்வதைக் காட்டிலும் பெரிய கடமை இங்கே யாருக்கும் இல்லை. இது என்ன சிறப்பான உபசாரம்? தமிழ் நாட்டில் புலவர்களுக்கு உள்ள மதிப்பை நான் ஓரளவு அறிந்திருக்கிறேன். அவர்களைத் தக்கபடி உபசரித்து அளவளாவ நான் என்ன பாரியா? காரியா?"

அரசன் இப்படிச் சொன்னபோது புலவருக்கு இன்பக் கிளுகிளுப்பு உண்டாயிற்று. அவர் பாரி முதலிய வள்ளல்களைப்பற்றித் தாம் கூற இருக்கும் பாட்டிலே சொல்லியிருந்தார். குமணனே அதற்குத் தோற்றுவாய் செய்துவிட்டான்,

அவர் பேசத் தொடங்கினர்: “அரசர் பெருமானே, நானும் பாரியையும் காரியையும் நினைத்தேன். தாங்கள் அவர்களைப்பற்றிச் சொன்னீர்கள். பாரி முதலிய ஏழு வள்ளல்களைப்பற்றித் தமிழ்நாடு நன்கு அறியும். அவருள் ஒருவனாகிய அதிகமானை நான் ஒருமுறை பார்த்துப் பழகியிருக்கிறேன். பாரி, புலவர்களுக்குக் கணக்கு இல்லாமல் வாரி வழங்கின பெரு வள்ளல் என்பது உண்மைதான். முடியுடை யரசர்கள் பொறாமையால் அவனுடன் பொருதார்கள். வீரம் காட்டி அவனை வெல்வதற்கு அவர்களால் இயல வில்லை. அவனுடைய நெடிய மலையாகிய பறம்பை முற்றுகையிட்டார்கள். அதனல் அவனுக்கு ஒரு தீங்கும் உண்டாகவில்லை. அவனைப்பற்றி நான் பாடியிருக்கிறேன்.”

“அப்படியா! எங்கே, அதைச் சொல்லுங்கள், கேட்கலாம். நல்லோர் பண்பைக் கேட்பதே பெரிய பேறு அல்லவா?”

புலவர் தம் பாடலைச் சொன்னர். அதில் பாரியின் புகழ் வந்தது. பாட்டின் தொடக்கமே அதுதான்.

முரசுகடிப்பு இகுப்பவும் வால்வளை துவைப்பவும்
அரசுடன் பொருத அண்ணல் நெடுவரைக்
கறங்குவெள் அருவி கல்அகிலத்து ஒழுகும்
பறம்பிற் கோமான் பாரியும்.[1]

[முரசத்தைக் குறுங்தடி அடிக்கவும், வெள்ளையான சங்குகள் முழங்கவும் முடியரசர் மூவருடன் பொருதவனும், பெருமையும் உயரமும் உடையதும் ஒலிக்கின்ற வெள்ளருவியானது கற்களைப் புரட்டிக்கொண்டு விழுவதற்கு இடமானதுமாகிய பறம்பு மலைக்குத் தலைவனுமாகிய பாரியும்.]

இந்த அடிகளைப் புலவர் சொல்லும்போது குமணன் கூர்ந்து கேட்டான். புலவர் சொல்லி நிறுத்தியவுடன், “பாரியும் என்று பாடியிருக்கிறீர்களே; அவனோடு வேறு சிலரையும் பாடியிருக்கும் பாட்டாக அல்லவோ இது தோன்றுகிறது?” என்றான்.

“உண்மைதான். ஓரியையும் பாடியிருக்கிறேன்.”

“அப்படியா? புலவர் பாடும் புகழைப் பெற்ற அவர்கள் இறந்தும் இறவாதவர்களாக இருக்கிறார்கள். எங்கே, ஓரியைப் பாடியதைக் கேட்கலாம்.”

புலவர் வல்வில் ஓரி என்ற வள்ளலைப்பற்றிப் பாடியுள்ள அடுத்த பகுதியைச் சொன்னார்.

பிறங்குமிசைக்
கொல்லி ஆண்ட வல்வில் ஓரியும்.[2]

(உயர்ந்த உச்சியையுடைய கொல்லி மலையை ஆண்ட வல்வில் ஓரியும்.)

“மறுபடியும் ஓரியும் என்று நிறுத்திவிட்டீர்களே! அடுத்தபடி மற்ற வள்ளல்களையும்பற்றிச் சொல்லியிருப்பீர்கள்போல் தெரிகிறது. அவர்கள் புகழையும் கேட்கலாம், சொல்லுங்கள்.”

அடுத்தபடி மலையமான் திருமுடிக் காரியைப் பற்றிச் சொன்னர் புலவர். அவனுடைய குதிரைக்குக் காரி என்று பெயர். அதையும் அவனுடைய மாரி போன்ற வள்ளன்மையையும் பாராட்டியிருந்தார்.

காரி ஊர்ந்து பேரமர்க் கடந்த
மாரி ஈகை மறப்போர் மலேயனும்.

(காரி என்னும் குதிரையின் மேல் ஏறிச் சென்று பெரிய போர்களிலெல்லாம் வென்றவனும், மேகத்தைப் போல வழங்கும் ஈகைக் குணமுடையவனும், வலிமை மிக்க போரைச் செய்வதையே தொழிலாக உடையவனுமாகிய மலையமான் திருமுடிக்காரியும்.) முடியுடை மன்னர்களுக்குத் துணையாகச் சென்று அவர்கள் போரில் உடனிருந்து பகைவரோடு பொருது வெற்றியைப் பெறச் செய்வதில் சிறந்தவன் மலையமான். அவ்வாறு துணை நின்று வென்ற காலங்களில் பேரரசர்கள் அவனுக்கு மிகுதியான பொருள்களை வழங்குவார்கள். அவற்றைக் கொண்டு வந்து தனக்கு என்று பாதுகாத்து வைத்துக்கொள்ளாமல் புலவர்களுக்கு அவ்வளவையும் வழங்கி இன்புறும் வள்ளன்மையுடையவன் அவன். ஆதலால் அவனை, “மாரி ஈகை மறப்போர் மலையன்” என்று பாடியிருந்தார் புலவர். அதைக் கேட்ட குமணன், “சுருக்கமாகச் சொன்னாலும் மலையமானின் பெருமையை நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள். எத்தனை போர்களில் அவன் முடியுடை வேந்தர்களுக்கு வெற்றியை வாங்கித் தந்திருக்கிறான்!” என்று பாராட்டினான். “நீங்கள் அதிமான் நெடுமான் அஞ்சியைப் பார்த்துப் பழகியதாகச் சொன்னீர்களே. அவனைப் பாடவில்லையோ?” என்று கேட்டான்.

“அவனைப் பாடாமல் இருப்பேனா? அடுத்தபடி அவன் புகழைத்தான் பாட்டில் கோத்திருக்கிறேன்.”

அதிகமானுக்கு எழினி என்று ஒரு பெயர் உண்டு. அவனுடைய மலைக்குக் குதிரை மலை யென்று பெயர்.

ஊராது ஏந்திய குதிரைக் கூர்வேற்
கூவிளங் கண்ணிக் கொடும்பூண் எழினியும்.

(ஏறிச் செலுத்தாமல் பிறரைத் தாங்கிய குதிரையாகிய மலையையும், கூரிய வேலையும், வில்வமாகிய தலையில் அணியும் அடையாள மாலையையும், வளைந்த அணிகலன்களையும் உடைய எழினியாகிய அதிகமானும்.) "நன்றாயிருக்கிறது. குதிரை மலையை, ஊராது ஏந்திய குதிரை என்று நயமாகச் சொல்லியிருக்கிறீர்கள். ஓடும் குதிரை பிறர் ஏறிச் செலுத்த அவர்களைத் தாங்குகிறது. இந்தக் குதிரையும் மக்களைத் தாங்குகிறது. ஆனால் அவர்கள் இதை ஊர்வதில்லை. ஊராது ஏந்திய குதிரை என்பது எவ்வளவு அழகாக இருக்கிறது எழினியைப் பாராட்டினீர்கள். இங்கே சிறிது தூரத்தில் பொதினி மலை இருக்கிறதே, உங்களுக்குத் தெரியுமோ? முருகன் எழுந்தருளியிருக்கும் திருமலை அது. அங்கிருந்த பேகனையும் பாடியிருக்கிறீர்களோ?"

“மன்னர் பெருமான் நான் அடுத்தபடி யாரைப் பாடியிருக்கிறேனே அவரையே கேட்பது வியப்பாக இருக்கிறது. முருகன் அடியாராகிய அந்த வள்ளலைப் பாடாமல் இருக்க முடியுமா?”

புலவர் பேகனையும், அவன் மலையையும், அந்த மலையின் உச்சியில் முருகன் கோயில் கொண்டிருப் பதையும் பாட்டில் புலப்படுத்தியிருந்தார்.

ஈர்ந்தண் சிலம்பின் இருள் துரங்கு நளிமுழை
அருந்திறற் கடவுள் காக்கும் உயர்சிமைப்
பெருங்கல் நாடன் பேகனும்.[3]

(ஈரமான குளிர்ந்த மலைப் பக்கங்களில் இருள் தங்கியிருக்கும் செறிவான குகைகளையும் அரிய திறலையுடைய முருகக் கடவுள் திருக்கோயில் கொண்டு பாதுகாக்கும் உயர்ந்த உச்சியையும் உடைய பெரிய குன்றமாகிய பொதினியையுடைய நாட்டுக்குத் தலைவனாகிய பேகனும்.)

  • “ஐந்து பேர்களின் புகழைப் பாடியிருக்கும் நீங்கள் மற்ற இருவர் புகழை விட்டிருப்பீர்களா? ஆய் அண்டிரனும், நள்ளியும் உங்கள் பாட்டில் வருகிறார்கள் அல்லவா?”

“ஆம், வள்ளல்கள் எழுவர் என்று புலவர்கள் ஒரு வரிசைப்படுத்திச் சொல்லும் மரபை அறிந்த நான் அவ்விருவர்களையும் விடமுடியுமா?” என்று மற்ற இருவர் புகழைப் பாடிய பகுதியையும் புலவர் சொன்னார். ஏணிச்சேரி முடமோசியார் என்ற புலவர் ஆய்அண்டிரனைப் பாராட்டிப் பல பாடல்களைப் பாடியிருக்கிறார். அதனைப் புலவர் தம் பாட்டில் எடுத்துச் சொன்னார். நள்ளி என்ற வள்ளலின் தகைசான்ற வள்ளன்மையையும் பகைவரை ஓட்டிய வீரத்தையும் புகழ்ந்தார்

..................................திருந்துமொழி
மோசி பாடிய ஆயும், ஆர்வமுற்று
உள்ளி வருநர் உலைவுநனி தீரத்
தள்ளாது ஈயும் தகைசால் வண்மைக்
கொள்ளார் ஓட்டிய நள்ளியும்
என ஆங்கு எழுவர்.

[4]

[செவ்விய சொல்லையுடைய முடமோகியார் என்னும் புலவர் பாடிய ஆயும், விருப்புற்றுத் தன்னை எண்ணி வருபவர்களுடைய தளர்ச்சி நன்றாகப் போகும்படி வெறுப்பின்றிக் கொடுக்கும் தகுதி மிக்க வள்ளன்மையையுடையவனும், பகைவர்களை வென்று புறங்காட்டி ஒடும்படி செய்தவனுமாகிய நள்ளியும் என்று அவ்வாறு சொல்லப் பெற்ற ஏழு வள்ளல்கள்.] பாட்டைக் கேட்ட குமணனுக்கு இப்போது ஓர் ஐயம் எழுந்தது. இந்த ஏழு பேரைப் பாடியும் பாட்டு நிறைவு பெறவில்லை. “இது எப்படி முடியப் போகிறது?” என்பதே அவன் ஐயம். “ஏழு வள்ளல்களையும் நன்றாகப் பாடியிருக்கிறீர்கள்; இந்தப் பாட்டு எப்படி முடிகிறது? இதில் எத்தகைய கருத்தை வைத்துப் பாட்டை நிறைவேற்றியிருக்கிறீர்கள்?” என்று கேட்டான் அரசன்.

“அதைத்தான் சொல்லப் போகிறேனே! எட்டாவது வள்ளல் ஒருவரைப்பற்றிப்பாடிப் பாட்டை நிறைவேற்றியிருக்கிறேன்.”

“எட்டாவது வள்ளலா? புதிதாக இருக்கிறதே! எழுவர் என்று கணக்குச் சொல்லி முடித்துவிட்டீர்களே!”

“உண்மைதான். ஆனல் அந்தக் கணக்கு அதோடு முற்றுப் பெறவில்லை. முற்றுப் பெறுவதாக இருந்தால் எழுவரும் என்று முற்றும்மை கொடுத்திருப்பேன். எழுவர் என்றுதானே சொன்னேன்? அதற்குமேல் எட்டாம் வள்ளலைச் சொல்லியிருக்கிறேன்.”

“அந்த வள்ளல் யார்?” என்று ஆவலோடு கேட்டான் குமணன்.

“புலவர் உலகத்தில் இந்த ஏழு பேர்களையும் வள்ளல்களிற் சிறந்தவர்கள் என்று சொல்லிப் பாராட்டுவது வழக்கம். இப்போது இந்த ஏழு பேர்களில் ஒருவரும் இல்லை. எழுவரும் தம் புகழுடம்பை நிறுத்தி மாய்ந்து மறைந்தனர். பாடி வரும் புலவர்களாகிய பரிசிலர்களுக்குத் தாரகமாக இருந்த இவர்கள் போன பிறகு புலவர்களின் நிலை என்ன ஆகும்? அவர்கள் யாரிடம் செல்வார்கள்? வள்ளல்கள் போய் விட்டாலும் புலவர்கள் போகவில்லையே! அவர்களில் மாய்பவர்கள் மாயப் புதிய புலவர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். அவர்களைப் பாதுகாக்கப் புதிய வள்ளல்கள் பிறக்கவேண்டாமா? பலர் பிறக்கவில்லை. ஏழு பேர் போன பிறகு, பாடி வரும் புலவர்களும், பாணர் கூத்தர் ஆகிய பிறரும் வந்து இரப்பார்களே! அவர்களை நான் காப்பாற்றுவேன்' என்று ஒரு. வள்ளல் இக்காலத்தில் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார்.”

“அவர் யார் என்று தாங்கள் சொல்ல வில்லையே!”

“நெடுந்துாரத்திலிருக்கும் யான் அவரைப்பற்றிக் கேள்வியுற்றேன். ஏழு வள்ளல்களும் போய் விட்டார்களே என்று வருந்திய எனக்கு, இப்படி ஒரு வள்ளல் இருக்கிறார் என்று கேள்வியுற்றதும், எப்படியாவது அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஊக்கம் உண்டாயிற்று. அதனால் இங்கே விரைந்து வந்தேன்.”

குமணனுக்குப் புலவருடைய கருத்துப் புலப்பட்டு விட்டது. தன்னையே அவர் புகழ்கிறாரென்பதை உணர்ந்துகொண்டான். புன்முறுவல் பூத்தான். புலவர், பாட்டை விட்ட இடத்தில் தொட்டுக்கொண்டு தொடர்ந்து சொன்னார்:

எழுவர் மாய்ந்த பின்றை, அழிவரப்
பாடி வருநரும் பிறரும் கூடி
இரந்தோர் அற்றம் தீர்க்கு'என, விரைந்துஇவண்

உள்ளி வந்தனென் யானே.[5]

[ஏழு வள்ளல்கள் மறைந்த பிறகு, “மனத்தில் வறுமையால் வருத்தம் உண்டாக, பாடி வரும் புலவர்களும் பிறரும் கூடி இரந்து வரும் அவர்களுடைய தளர்ச்சியைத் தீர்ப்பேன்” என்று நீ உன் செய்கைகளால் புலப்படுத்த, அதனே உணர்ந்து இங்கே உன்னைக் காண எண்ணி விரைந்து யான் வந்தேன்.)

குமணன் இப்போது ஒன்றும் பேசவில்லை. சான்றோனாகிய அவன் தன் புகழைக் கேட்டு, “நன்றாகச் சொன்னீர்கள்!” என்று பாராட்டுவான? “சான்றோர் புகழும் முன்னர் நாணுப” என்று ஒரு புலவர் சொல்கிறார். தம் புகழைக் கேட்டு நாணம் அடைவதே உயர்ந்தோர் இயல்பு. குமணன், இந்தப் பாட்டுக்கு இத்தனை அடிப்படை போட்டது தன் புகழை அதன் மேல் கட்டுவதற்காக என்பதை உணர்ந்துகொண்டான். அதனால் ஒன்றும் பேசாமல் புன்முறுவல் பூத்தபடியே அதைக் கேட்டுக்கொண்டிருந்தான்.

மேலே, குமணனுடைய முதிர மலையைப் புலவர் பாடினர். வரும்போது தாம் கண்ட காட்சியை அதில் இணைத்திருந்தார்; பலாப்பழத்தைப் பெற்ற கடுவன் மந்தியைக் கையைக் காட்டி அழைத்த அன்புக் காட்சியைச் சொல்லியிருந்தார்.

...................................................விசும்புறக்
கழைவளர் சிலம்பின் வழையொடு நீடி
ஆசினிக் கவினிய பலவின் ஆர்வுற்று
முட்புற முதுகனி பெற்ற கடுவன்

துய்த்தலை மந்தியைக் கையிடுஉப் பயிரும்
அதிரா யாணர் முதிரத்துக் கிழவ!

[6]

[வானை எட்டும்படி மூங்கில் வளரும் மலைப்பக்கத்தில் சுரபுன்னைகளோடு உயர்ந்து வளர்ந்து ஈரப் பலாவோடு அழகு பெற்று நின்ற பலா மரத்தில், ஆசைப்பட்டு வந்து முள்ளைப் புறத்திலே உடைய பழுத்த பழத்தைப் பெற்ற ஆண் குரங்கு, பஞ்சு போன்ற மயிரைப் பெற்ற தலையையுடைய தன் மனைவியாகிய பெண் குரங்கைக் கை காட்டி அழைக்கும், தளராத புதிய புதிய பொருள்களாகிய வருவாயை உடைய முதிரம் என்னும் மலைக்கு உரியவனே!]

இப்படிப் பாடிவிட்டு மேலே குமணனை வாழ்த்திப் பாட்டை நிறைவேற்றினார் புலவர்.

இவண்விளங்கு சிறப்பின் இயல்தேர்க் குமண!
இசைமேந் தோன்றிய வண்மையொடு
பகைமேம் படுகதி ஏந்திய வேலே.

[7]

[இவ்வுலக முழுவதும் பரந்து விளங்கும் சிறப்பையும் இயலும் தேரையும் உடைய குமணனே! புகழால் மேம் பட்ட நின்னுடைய வண்மை ஓங்குக! அதனோடு பகைவரினிடையே நீ ஏந்திய வேல் மேம்பட்டு விளங்குக!]

அவனுடைய வள்ளன்மையாகிய ஈரத்தையும், வீரத்தையும் வாழ்த்திப் பாடி முடித்தார் புலவர். 

"பாட்டில் அந்த எழுவரோடு என்னையும் சேர்த்து வைத்திருக்கிறீர்களே! அது பொருந்துமா?" என்று கேட்டான் குமணன்.

"பொருந்தும் என்பதை நானும் என்னைப் போன்ற புலவர்களும் நன்கு உணர்வோம்' என்று விடையிறுத்தார் புலவர்.

நெடுநேரம் வள்ளலும் தண்டமிழ்ப் புலவரும் பேசிக்கொண்டிருந்தனர். தமிழ்க்கவிதையின் சுவையை நுட்பமாக உணர்ந்து பாராட்டும் கலைஞன் குமணன் என்பதைப் பெருஞ்சித்திரனார் உணர்ந்துகொண்டார்.

  1. * கடிப்பு - முரசை அடிக்கும் குறுந்தடி இகுப்ப - ஒலிக்கச் செய்ய, வால்வளை - வெண் சங்கு. துவைப்ப முழங்க. பொருத - போர் செய்த, அண்ணல் - பெருமை. நெடுவரை - உயர்ந்த மலை. கறங்கு - ஒலிக்கின்ற. அலைத்து - புரட்டி. பறம்பு - பாரியின் மலை
  2. மிசை - உச்சி. வல்வில் ஓரி என்பவன், ஒருமுறை எய்த அம்பு பல இலக்குகளை ஒருங்கே ஊடுருவும்படி விடும் வில் வீரம் உடையவன். அதனால் வல்வில் என்ற சிறப்பு அவனுக்கு அமைந்தது.
  3. * சிலம்பு - மலைப்பக்கம், நளி - செறிந்த, முழை - குகை. கடவுள் என்றது இங்கே முருகனை. சிமை - சிகரம்; உச்சி. பெருங் கல் - பெரிய குன்றம். இக்காலத்தில் பழனியென்று வழங்கும் குன்றமே இது. இதன் பழைய பெயர் பொதினி.
  4. * திருந்து மொழி - குற்றமின்றிச் செம்மையாக அமைந்து சொற்கள். மோசி - உறையூரில் ஏணிச்சேரி என்ற பகுதியில் வாழ்ந்திருந்த முடமோசியார் என்னும் புலவர். ஆய் - ஆய்அண்டிரன்; இவன் பொதிய மலைக்குத் தலைவன். வருநர் வருவோர். உலைவு தளர்ச்சி. தகை - தகுதி, அழகு என்றும் சொல்லலாம். கொள்ளார் - பகைவர். நள்ளி கண்டீரக்கோப் பெருநள்ளி என்னும் வள்ளல்.
  5. அழிவர அழிவு உண்டாக; அழிவு - வருத்தம். வருநர் - வரும் புலவர். அற்றம் - தளர்ச்சி. தீர்க்கு - தீர்ப்பேன். என - என்று புலப்படுத்த. உள்ளி - நினைந்து.
  6. விசும்பு - ஆகாயம். கழை - மூங்கில். சிலம்பு - மலைப் பக்கம். வழை - சுரபுன்னை. ஆசினிக் கவினிய - ஈரப் பலாவோடு சேர்ந்து வளர்ந்து அழகு பெற்ற, ஆர்வு உற்று ஆசைப்பட்டு. கடுவன் ஆண் குரங்கு துய் - பஞ்சு போன்ற மயிர். மங்கி - பெண் குரங்கு. கையிடுஉ-கையைக் காட்டி பயிரும் அழைக்கும். அதிரா - தளராத, யாணர் - புதிய வருவாய்.
  7. இவண் - இவ்விடம்; என்றது உலகத்தை. இயல்தேர் - ஓடும் தேர். இசை - புகழ். மேந்தோன்றிய . மேலாக விளங்கிய, வண்மையொடு வேல் மேம்படுக. இது புறநானுாற்றில் 158-ஆம் பாடலாக இருக்கிறது.