குமண வள்ளல்/பிரியா விடை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

3. பிரியா விடை

 குமணன் பெருஞ்சித்திரனாரிடம் மிக்க அன்பு பூண்டு பழகினான். அவருடைய புலமையும் பண்பும் அவன் உள்ளத்தைக் கவர்ந்தன. முதிரமலைக் குரங்கைப்பற்றிப் பாடியதை நினைக்கும்போதெல்லாம் அவனுக்கு உவகை உண்டாகும்; உடனே நகையும் எழும். “நீங்கள் குரங்கை எப்படிக் கவனித்தீர்கள்?” என்று கேட்டான்.

“மலையையும் மரத்தையும் விலங்கினங்களையும் கண் கண்டு இன்புறுவது எங்களுக்கு இயல்பு அல்லவா? மனிதர்கள் யாவரும் ஒரு மாதிரியே இருப்பதில்லை. அடிக்கடி மாறுகிறார்கள். ஆனால் மலை மாறுவதில்லை. மரம் கனி தருவதையும் நிழல் தருவதையும் நிறுத்துவதில்லை. விலங்குகள் அன்பு செய்வதில் மாறுபடுவதில்லை. அதனுல் அவற்றைக் கண்டு கண்டு அவற்றைப் படைத்த இறைவன் பெருமையை உணர வழியிருக்கிறது. அந்தக் குரங்குக்குத் தன் மனைவியிடம் எத்தனை அன்பு!”

“ஆம், மனிதனிடம் காணாத பல நல்ல இயல்புகளை விலங்குகளிடம் காண்கிறோம். உங்களைக் கண்டு பழகும் வாய்ப்புக் கிடைத்ததைப் பெரும் பேறாக நான் கருதுகிறேன். உங்களுக்கு மனைவி மக்கள் இருக்கிறார்களா?” என்று குமணன் மெல்ல விசாரிக்கத் தொடங்கினான்.

புலவர் அங்கே வந்து சில நாட்கள் ஆயின. குமணனும் அவரும் ஓரளவு நெருங்கிப் பழகினர். இந்த நிலையில் புலவருடைய நலந் தீங்குகளைத் தெரித்துகொள்ள விரும்பினான் குமணன்.

கடுவனது பேச்சு வந்தபோதே புலவருக்குத் தம் மனைவியின் நினைவு உண்டாயிற்று. குமணன் தம் குடும்பத்தைப்பற்றிக் கேட்டுவிடவே, அந்த நினைவு வலிமையுற்றது. இங்கே வந்து தங்கிய சில நாட்களில் தமிழ்ச் சுவையைக் குமணணோடு நுகர்ந்தார். பல பாடல்களைச் சொன்னர். ஆனால் தம்முடைய வறுமையைப்பற்றிச் சொல்லவில்லை. தமக்கு உதவி புரிய வேண்டும் என்றும் கேட்கவில்லை. ‘அதை எப்படிச் சொல்வது?’ என்று தயங்கினார். எத்தனை காலம் அங்கே தங்கியிருந்தாலும் குமணன் சிறந்த வகையில் உபசாரம் செய்து பேணுவான். ஒவ்வொரு நாளும் இனிமையாகவே கழியும். ஆனால் ஊரில் அவருடைய தாயும் மனைவியும் மக்களும் உண்ண உணவின்றி வாடுவார்களே! அவர்கள் பசித்திருக்கப் புலவர் மட்டும் இங்கே விருந்து உண்டு கவலையின்றி இருப்பதா? அப்படி இருப்பது அறமாகுமா?

இந்த எண்ணம் பெருஞ்சித்திரனாருடைய உள்ளத்தினூடே நின்று குத்திக்கொண்டே இருந்தது. தக்க சமயத்தில் தம் வறிய நிலையைத் தெரிவிக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். நல்ல வேளையாக அரசனே குடும்பத்தைப்பற்றிக் கேட்டுவிட்டான். இதைக் காட்டிலும் வாய்ப்பான செவ்வி வேறு ஏது?

குமணன் கேட்ட கேள்விக்கு விடை கூறப் புகுந்தார் புலவர்.

“எனக்கு மனைவி மக்கள் எல்லோரும் இருக்கிறார்கள். முதுமையால் தளர்வுற்ற தாய் ஒருத்தியும் இருக்கிறாள். இங்கே நான் மன்னர்பெருமான் செய்யும் உபசாரத்தைப் பெற்று நல்விருந்து உண்டு மகிழ்கிறேன். இடையிடையே அவர்களை நினைத்துக்கொள்கிறேன். அவர்கள், அங்கே என்ன செய்கிறார்களோ!”

“அவர்கள் உங்களைப் பிரிந்து வருந்துவார்கள். ஆனாலும் புலவர்கள் எப்போதும் வீட்டிலேயே இருக்க முடியுமா? இருந்தால் நாங்களெல்லாம் தமிழ் விருந்தை அருந்துவது எப்படி?”

“அவர்கள் என் பிரிவால் வருந்துவார்கள் என்பதை நான் எண்ணவில்லை. வறுமை என்னும் பேயினால் அலைப்புண்ட அவர்கள் என்ன நிலையில் வாடுவார்களோ என்றுதான் நினைத்து வருந்துகிறேன்.”

“வறுமை நிலை என்றா சொன்னீர்கள்? ஏன்?”

“ஏனா? புலவர்களுக்கு வள்ளல்கள் ஈயும் பொருளே பொருள். நான் எந்த வள்ளலையும் அணுக முடியாமல் தவித்தேன். இப்போதுதான் இங்கே வரும் வாய்ப்புக் கிடைத்தது.”

“உங்கள் தாயார் மிக்க முதுமை உடையவர்களோ?”

“தலையெல்லாம் வெள்ளை நூல்போல நரைத்துப் போய்விட்டது. கோலை ஊன்றிச் சில அடிகள் வைத்து நடப்பாள். அதற்குள் தளர்ச்சி வந்துவிடும். ‘இன்னும் பல ஆண்டுகள் தொல்லையுற வேண்டும் என்று விதித்திருக்கும்போது என் உயிர் போகுமா?’ என்று தன்னைத் தானே நொந்துகொண்டு காலத்தைக் கழிக்கிறாள். எங்கும் வெளியிலே செல்வதில்லை. வீட்டு வாசலிலே சிறிது நடப்பாள். மறுபடி திண்ணையிலே முடங்கிக்கொள்வாள்.”

“ஐயோ பாவம் மிகவும் வருத்தத்தைத் தரும் செய்தி. உங்கள் குடும்பத்தைப்பற்றி நான் இவ்வளவு நாட்கள் தெரிந்துகொள்ளாமல் இருந்தது பெரும் பிழை. உங்கள் மனைவியார் குடும்பத்தை எப்படித்தான் காப்பாற்றுகிறார்கள்?”

“அவள் உடம்பு பச்சை உடம்பு, சமீபத்தில் தான் குழந்தை ஒன்று பிறந்தது. முன்பும் குழந்தைகள் உண்டு. வீட்டில் ஓர் அரிசி இல்லை. கூழ் காய்ச்சக்கூட வகையில்லை. குப்பைக் கீரையைக் கொய்து உப்பில்லாமலே வேக வைத்து அதைத் தான் உண்டு, கிடைத்த கூழையோ மற்றப் பொருளையோ அந்தக் கிழவிக்கும் எனக்கும் குழந்தைக்கும் போட்டுக் காப்பாற்றுகிறாள்.”

“நான் உடனே உணவுப் பண்டங்களையும் பிறவற்றையும் உங்கள் வீட்டுக்கு அனுப்புகிறேன். அவர்களைப்பற்றி இனிமேல் நீங்கள் கவலைப்படவேண்டாம். நீங்கள் இன்னும் சில காலம் இங்கே இருந்து செல்லலாம்” என்று மனம் கசிந்து கூறினான் குமணன்.

“இங்கே எவ்வளவு நாட்கள் இருந்தாலும் மன்னர்பிரான் என்னைப் போகும்படி சொல்லப்போவ தில்லை. ஆயினும் அங்கே நான் சென்று நிற்க, என் தாயும் மனைவியும் என் புதிய நிலை கண்டு உவப்பதை நான் பார்க்க வேண்டாமா?”

“நீங்கள் வந்து சில நாட்களே ஆயின. அதற்குள் போகிறேன் என்று சொல்கிறீர்கள். என் மனம் அதற்கு உடம்படவில்லையே! நீங்கள் வற்புறுத்திப் போகத்தான் வேண்டும் என்றால் மனம் கொள்ளாமல் விடை கொடுக்க வேண்டி வரும்.”

“அப்படி நான் விடை பெற விரும்பவில்லை. மனம் மேவாமல் அரசர்பிரான் யானையைப் பரிசாகக் கொடுத்து விடை தந்தாலும் கொள்ளமாட்டேன். மனமுவந்து, போய் வாருங்கள் என்று சொல்லி அனுப்புவதானால், சிறிது கொடுத்தாலும் பெற்றுக் கொண்டு போவேன். நான் இங்கே அரண்மனையில் உபசாரம் பெறப் பெற என் மனம் முதிர்ந்த என் தாயையும் ‘அறக் கடவுளுக்குக் கண் இல்லையே!’ என்று சொல்லிச் சோறின்றி வாடும் மனைவியையும் நினைக்கிறது. பசியினால் மெலிந்துபோன சுற்றத்தார் சிலரும் இருக்கிறார்கள், காட்டில் உள்ள மரங்களை வெட்டிக் கொளுத்தி, உழுது மலை நெல்லை விதைத்து அதோடு தினையையும் பயிராக்கி, அவை பூட்டை வாங்காமல் இருக்கும்போது, மழை பெய்தால் எப்படி இருக்கும்! அப்படி நான் தாங்கள் வழங்கும் பொருள்களைக் கொண்டு போனால் அவர்கள் எல்லோரும் பார்த்து மகிழ்ச்சியடைவார்கள். ஆகவே, மன்னர் பிரான் எப்போது மனம் விரும்பி என்னை அனுப்ப முடியுமோ, அப்போது நான் போகிறேன்” என்று புலவர் சொல்லித் தம் கருத்தை அமைத்து ஒரு பாடலையும் சொன்னார்:


வாழும் நாளோடு யாண்டுபல உண்மையின்
தீர்தல் செல்லாதுஎன் உயிர் எனப் பல புலந்து
கோல்கால் ஆகக் குறும் பல ஒதுங்கி
நூல்விரித் தன்ன கதுப்பினள், கண்துயின்று
முன்றிற் போகா முதிர்வினள் யாயும்.

[வாழவேண்டிய நாளும் ஆண்டுகளும் பல இருப்பதனாலே என் உயிர் போகாமல் இருக்கிறது என்று பல சொற்களை வாழ்க்கையில் வெறுப்போடு சொல்லி, கோலை ஒரு காலாகக் கொண்டு குறுகிய பல அடி வைத்து நடந்து, நூலை விரித்தாற்போன்ற கூந்தலை உடையவளாகி, தூங்கி முற்றத்தை விட்டுப் போகாத முதிர்ச்சியை உடையவள் என் தாய்.]

இது அவர் தம் தாயின் நிலையைச் சொன்ன பகுதி.

அந்தப் பாட்டில் புலவர் தம்முடைய தாயின் நிலையையும் மனைவியின் நிலையையும் உள்ளது உள்ளபடியே சொல்லியிருந்தார். அதைக் கேட்டுக் குமணன் மிக்க இரக்கம் கொண்டான்.

இன்னும் சில நாட்கள் பெருஞ்சித்திரனார் அங்கே தங்கினார்.


குப்பைக் கீரை கொய்கண் அகைத்த
முற்றா இளந்தளிர் கொய்துகொண்டு உப்பின்று
நீர்உலை யாக ஏற்றி மோர் இன்று
அவிழ்ப்பதம் மறந்து பாசடகு மிசைந்து
மாசொடு குறைந்த உடுக்கையள், அறம்பழியாத்
துவ்வா ளாகிய என்வெய் யோளும்.

[குப்பையில் விளைந்த கீரையில் முன்பே பறித்த இடங்களில் மீண்டும் தழைத்த முற்றாத இளந்தளிரைக் கொய்துகொண்டு, உப்பில்லாமல் வெறும் நீரை உலையாக அடுப்பில் வேக வைத்து, மோரும் இல்லாமல், சோற்றுப் பருக்கையையே மறந்து போய், பச்சை இலையை உண்டு, அழுக்கினால் நைந்து கிழிந்த ஆடையை உடையவளாகி அறக் கடவுளைப் பழித்து, உணவின்றி இருப்பவளும் என்னை விரும்புபவளும் ஆகிய என் மனையாட்டியும்]

இது தம் மனைவியைப்பற்றிச் சொன்ன பகுதி.

உயர்ந்தேந்து மருப்பிற் கொல்களிறு பெறினும்
தவிர்ந்துவிடு பரிசில் கொள்ள லென் : உவந்து நீ
இன்புற விடுதி ஆயின், சிறிது
குன்றியும் கொள்வல், கூர்வேற் குமண!
அதற்பட அருளல் வேண்டு வல்; விறற் புகழ்
வசையில் விழுத்தினைப் பிறந்த
இசைமேந் தோன்றல்நிற் பாடிய யானே.

[கூரிய வேலையுடைய குமணனே! வெற்றியினால் உண்டான புகழைப் பெற்ற, குற்றம் இல்லாத சிறந்த குலத்தில் பிறந்த, புகழால் மேம்பட்ட தலைவனே! உன்னேப் பாடிய யான், முகம் காட்டாமல் திருப்தி தவிர்ந்து விடுக்கும் பரிசிலாக உயர்ந்து ஏந்திய கொம்பை யுடையதும் ப்கைவரைக் கொல்லுவதுமாகிய களிறு பெற்றாலும் கொள்ளமாட்டேன். மனம் மகிழ்ந்து இன்ப மடையும்படி விடை தந்தால் குன்றியளவானாலும் ஏற்றுக் கொள்வேன். ஆதலின் அந்த மகிழ்ச்சி உண்டாகும்படி கருணைபுரிதலே வேண்டுகிறேன்.]

இது பாட்டின் முடிவு.

மறுபடியும் அவருக்குத் தம் குடும்பத்தின் நினைவு வந்துவிட்டது. நாள்தோறும் நல்ல சோற்றையும், பல வகைக் கறி முதலியவற்றையும் பல கலங்களில் இட்டு அருத்தினான் குமணன். அவர் உண்டு இன்புற்றாலும் தம் குடும்பத்தின் நிலை அவர் உள்ளத்தை உறுத்திக்கொண்டே இருந்தது.

மறுபடியும் குமணனிடம் விடை கேட்கப் புலவர் துணிந்தார். அவர் அங்கே தங்கிய சில நாட்களில் வேறு சில புலவர்களும் வந்து குமணனுடைய உபசாரத்தைப் பெற்றுச் சென்றார்கள். அவர்களிடம் அவன் அளவுக்கு மிஞ்சிய அன்போடு நடந்துகொள்வதைக் கண்டு கண்டு இன்புற்றார், எப்படியும் விடை பெற்றுச் செல்லவேண்டும் என்று முடிவு செய்துகொண்ட அன்று குமணனிடம் தம் குறிப்பைத் தெரிவிக்கலானார்.

“இங்கே புலவர்கள் பெறும் இன்பம் எவ்வளவு சிறந்ததாக இருக்கிறது. வெயிலால் தீய்ந்துபோன காட்டில் மழை பெய்தால் அக் காடு முழுவதும் பச்சைப் பசேலென்று தழைத்து வளம் பெறுகிறது. அதைப் போன்ற காட்சியைத்தான் இங்கே பார்க்கிறேன்” என்று தொடங்கினர்.

“நீங்கள் எதைச் சொல்கிறீர்கள்?” என்று குமணன் வினவினான்.

“புலவர்களின் பழைய நிலை எனக்குத் தெரிந்த அளவுக்கு அரசர்பிரானுக்குத் தெரிந்திராது அவர்கள் தின்ன எதுவும் கிடைக்கிறதில்லை; பசி அவர்கள் உடம்பைத் தின்றுகொண்டே வருகிறது. சோறு காணாத குடல் அப்படி அப்படியே மடிப்பு மடிப்பாக இருக்கிறது.அத்தகைய அவர்கள் வயிற்றில் இப்போது தண்ணென்று உணவு புகுகிறது. தாளித்த பலவகைச் சோறும் கறியும் புகுகின்றன. துவையல் என்ன, நெய் பிழியும் சோறு என்ன, பிற உண்டி வகைகள் என்ன—இவற்றை யெல்லாம் சிறிய சிறிய பொற் கலத்தில் நிறைத்துச் சுற்றிலும் வைத்து, ‘பாடும் புலவர்கள் இவற்றை உண்டு கேடு இல்லாமல் சுகமாக இருக்கட்டும்’ என்று மன்னர் பிரான் உபசரிப்பதாகக் கேள்வியுற்றேன். பிற மன்னர்களிடம் போரிட்டுப் பெற்ற அரிய பொன் அணிகளை மிக எளிதில் புலவர் கூட்டம் பெறும்படி வாரி வழங்குவதாகவும் சொன்னர்கள். தம்மிடம் வந்து நட்டவர்களைச் சமானமாக வைத்து நட்புச் செய்யும் பெருமையுடையவர் என்றும் கேள்வியுற்றேன். முதிரத்தில் இருப்பதாகச் சொன்னர்கள். அங்கே போனால் நிறையக் கொடுப்பார் என்றும் கூறினார்கள். ஒருவர் அல்லர், இருவர் அல்லர், பலர் மன்னர் பிரானுடைய புகழை வாயாரக் கூறினார்கள். அதைக் கேட்டு எனக்கு ஓர் ஊக்கம் உண்டாயிற்று. இங்கே வந்தேன்.”

“எல்லாம் பொய் என்று தெரிந்துகொண்டீர்கள் அல்லவா?” என்று சொல்லிப் புன்னகை பூத்தான் குமண வள்ளல்.

“அவர்கள் சொன்னது குறைவு என்று தெரிந்து கொண்டேன். ஒரே ஒன்றை மாத்திரம் சொல்ல விரும்புகிறேன். வந்தவர்களை வாருங்கள் என்று சொல்லத் தெரிந்த மன்னர் பிரானுக்குப் போக வேண்டியவர்களைப் போய்விட்டு வாருங்கள் என்று சொல்லத் தெரியவில்லை. என் வீட்டு நிலையை மறு படியும் எடுத்துரைப்பதற்காக என்னைப் பொறுத்தருள வேண்டும். என் மனைவிக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாக இருக்கும்.”

“நான் வேண்டிய பொருள்களை அனுப்புகிறேன் என்று அன்றே சொன்னேனே!”

“என்னையே அனுப்பிவிட வேண்டுகிறேன்.”

“குழந்தையின் நினைவு வந்துவிட்டதோ?”

“குழந்தையின் மழலையும் அழகும் நினைவுக்கு வரவில்லை. அவனுடைய பசிதான் நினைவுக்கு வருகிறது. இதை மன்னர் பெருமான் சற்றே காது கொடுத்துக் கேட்க வேண்டும். என்னுடைய மகன் சிறிய குழந்தைதான். அவன் எப்போதும் வீட்டுக்கு வெளியிலே தான் இருப்பான். வீட்டில் உணவு போட்டால்தானே வீட்டு நினைவு வரும்? உணவு என்ற பொருளே வீட்டில் இல்லாமையால் அவன் தன் பரட்டைத் தலையோடு வெளியிலே உலாவிக்கொண்டிருப்பான். எப்போதாவது வீட்டுக்கு வந்தால் தன் தாயை அணுகிப் பால் உண்ண முயல்வான். அது கிடைக்காமையால், கூழ் இருக்கிறதா, சோறு இருக்கிறதா என்று ஒவ்வொரு சட்டியையும் திறந்து திறந்து பார்ப்பான். எல்லாம் சூனியமாக இருப்பதைக் கண்டு அழத் தொடங்குவான். அவன் அழுகை என் மனைவியின் உள்ளத்தை உலுக்கும். அவள் என்ன செய்வாள் பாவம் அவனைச் சமாதானம் செய்யப் பார்ப்பாள், வயிறு கிண்டும்போது சமாதானப் பேச்சு என்ன செய்யும்? அதோ புலி வருகிறது! அழாதே. அழுதால் புலி கடித்துவிடும்' என்று பயமுறுத்துவாள். குழந்தை ஒரு கணம் பேசாமல் இருப்பான். பசியென்னும் புலி உண்மையாகக் கடிப்பதால் மறுகணம் அழுவான். உடனே அவனை இடுப்பில் எடுத்துக்கொண்டு வெளியில் வந்து, ‘அதோ பார், நிலா. எங்கே, நிலா நிலா வா வா என்று கூப்பிடு பார்க்கலாம்’ என்று நயமாகப் போக்குக் காட்டுவாள். அதுவும் ஒரு கணந்தான் பயன்படும். மறுபடியும் அவன் அழுவதைக் கண்டு அவள் நொந்து சாம்புவதைக் கடவுளே அறிவார். ‘உன் அப்பா, போனவர் வரவில்லையே! அவர் வந்தால் அவரை நீ எப்படிக் கோபிப்பாய்? எப்படி முகத்தை வைத்துக்கொள்வாய்? எங்கே காட்டு’ என்று கூறிப் போது போக்க முயல்வாள். இப்படி யெல்லாம் அல்லல் உழப்பவள் தன் துன்பம் தீர்ந்து சுகம் அடையும்படி மிகுதியான பொருளைக் கொடுத்து என்ன விரைவில் அனுப்பவேண்டும். இந்த உலகத்தில் தங்கள் புகழ் ஓங்குக என்று வாழ்த்துகிறேன். யான் போய் அவர்களுக்கு வேண்டியதைக் கொடுத்து இன்புறச் செய்துவிட்டு மீட்டும் இங்கே வருகிறேன். கருணை புரிய வேண்டும்.”

இதைக் கேட்ட குமணன் உருகிப் போனன். புலவர் தம் கருத்தைப் பாட்டிலும் அமைத்துச் சொல்லி விட்டார்.

இல்உணாத் துறத்தலின் இல்மறந்து உறையும்
புல்உளைக் குடுமிப் புதல்வன், பன்மாண்
பால்இல் வறுமார்பு சுவைத்தனன் பெறாஅன்,
கூழும் சோறும் கடைஇ ஊழின்
உள் இல் வறுங்கலம் திறந்து அழக் கண்டு,
மறப்புலி உரைத்தும், மதியம் காட்டியும்
நொந்தனள் ஆகி, “துந்தையை உள்ளிப்
பொடிந்த நின் செவ்வி காட்டு” எனப் பலவும்
வினவல் ஆனா ளாகி, நனவின்
அல்லல் உழப்போள் மல்லல் சிறப்பச்
செல்லாச் செல்வம் மிகுத்தனே வல்லே
விடுதல் வேண்டுவல்.

[வீடு உணவைத் துறந்திருப்பதனால் வீட்டையே மறந்து வெளியே உறையும் பொலிவற்ற தலைமயிரையுடைய என் புதல்வன் பலமுறை தன் தாயின் பால் இல்லாத வறிய மார்பைச் சுவைத்தும் பாலைப் பெறாமல், கூழையும் சோற்றையும் வேண்டி வரிசையாக உள்ளே ஒன்றும் இல்லாத பாழும் கலங்களைத் திறந்து பார்த்து அழ, அதைக் கண்டு. கொடுமையுடைய புலியின் பேரைச் சொல்லிப் பயமுறுத்தியும், சந்திரனைச் காட்டி நயந்து பேசியும், எதனாலும் அழுகை அடங்காதது கண்டு வருத்தமடைந்து, “உன் அப்பாவை எண்ணி, அவரைக் கோபிக்கும் கோலத்தைக் காட்டு” என்று பல பல கேட்பதை நிறுத்தாதவளாய், கனவில் துன்பம் அடைகிற என் மனைவி பொருள்வளம் பெற்று இன்புறும்படியாக, குறையாத செல்வத்தை மிகுதியாகத் தந்து விரைவில் என்னை அனுப்புதலை வேண்டுகிறேன்.]

இது அவர் தம் இல்லில் தம் மனையாள் படும் பாட்டை எடுத்துரைத்த பகுதி. இதைக் கேட்பவர்கள் யாரானலும், கல் நெஞ்சராக இருந்தாலும், உருகி விடுவார்கள் என்பதில் ஐயமே இல்லை.

குமணன் இப்போது உண்மையை நன்றாக. உணர்ந்துகொண்டான். இனி ஒரு கணமும் பெருஞ்சித்திரனாரை நிறுத்தி வைக்கக்கூடாதென்று எண்ணிப் பலவகைப் பொருள்களை ஒரு வண்டியில் போட்டுப் புலவருக்கு ஆடை அணிகளை வழங்கி அனுப்பினான். “நீங்கள் இங்கே அடிக்கடி வருவதாகச் சொன்னதை நினைப்பூட்டுகிறேன். அதைச் சொன்ன பிறகுதான் உங்களை அனுப்பலாம் என்ற எண்ணம் உண்டாயிற்று. அதற்குமுன் அந்த எண்ணம் தோன்றவில்லை. தோன்றியிருந்தால் நான்கு நாட்களுக்கு முன்பே விடை கொடுத்து அனுப்பியிருப்பேன். உங்களுடைய நட்புக் கிடைத்தது எனக்குப் பெருமை. இது மேன் மேலும் வளரும்படி இறைவன் அருள் செய்ய வேண் டும்” என்று கூறி வழியனுப்பினன்.

புலவருக்குப் பேச்சு எழவில்லை. குமணன் கொடுப்பவனைப்போலப் பேசவில்லை. தனக்குப் புலவர் இன்பத்தைக் கொடுத்தார் என்ற எண்ணத்தோடு பேசினான்.

“இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு”

என்று வள்ளுவர் இத்தகைய வள்ளல்களை நினைந்து தான் கூறியிருக்க வேண்டும்.

கண் நீரைக் கக்க, வாய் தடுமாற, ஒருவாறு விடை பெற்றுக்கொண்ட பெருஞ் சித்திரனார் தம் ஊரை நோக்கிப் புறப்பட்டார்.