குமண வள்ளல்/“எல்லோர்க்கும் கொடு”

விக்கிமூலம் இலிருந்து

“4. எல்லோர்க்கும் கொடு”

பெருஞ்சித்திரனார் தம்முடைய ஊருக்கு வந்து சேர்ந்தபோது அவர் வீட்டில் உள்ளவர்கள் அவரைக் கண்டு வியப்பில் மூழ்கினார்கள். அவர் முகத்தில் தெளிவும், உடம்பில் பொலிவும் உண்டாகியிருந்தன. அவர் அணிந்திருந்த ஆடையும் அணிகளும் அவரை மணக்கோலத்தில் இருப்பவரைப்போலத் தோற்றச் செய்தன.

கொண்டு வந்த பொருள்களால் அவர்களுடைய வறுமை அப்போதைக்கு நீங்கியது. அவர் மனைவி அறிவுடையவளாதலின் அவற்றை வைத்துக்கொண்டு செட்டாக வாழத் தொடங்கினாள். அன்று முதல் அந்தக் குடும்பத்தில் ஒளி புகுந்தது. உணவும் உடையும் பிற பண்டங்களும் நிரம்பின. குழந்தைகள் உரமும் எழிலும் பெற்றார்கள்.

ஒவ்வொரு நாளும் குமணனை வாழ்த்திய படியே உணவு கொண்டார் பெருஞ்சித்திரனார். அவருடைய மனைவி தனக்கு இயல்பாக உள்ள உடல் நலத்தையும் வன்மையையும் பெற்றாள். அவர்களுடைய இன்பத்தில் பங்கு பெறப் பல உறவினர்கள் வந்து சில நாட்கள் தங்கிச் சென்றார்கள்.

பல காலமாகத் தன்னைச் சார்ந்தவர்களைத் தன் வீட்டுக்கு அழைத்து வரவேண்டும் என்ற விருப்பம் பெருஞ்சித்திரனாருடைய மனைவிக்கு இருந்து வந்தது. தங்களுக்கே போதிய உணவு கிடைக்காதபோது விருந்தினர்களை அழைப்பது எப்படி? அப்போது அவளுக்கு உண்டான விருப்பத்தை இப்போது அவள் நிறைவேற்றிக்கொண்டாள். இவ்வாறு அவர் வீட்டில் அழைப்பின் மேல் வந்த விருந்தினர்களும், அழையா விருந்தினர்களும் வந்து நிரம்பினார்கள். வீடு கல்யாண வீடு போலப் பொலிவுடன் விளங்கியது.

ஏழை யென்றால் அயல் வீட்டுக்காரர் கூட ஏனென்று கேட்காத உலகம் இது. பணக்காரன் என்றால் வலியச் சென்று நட்பாடுவார்கள் மக்கள். வறுமை மலிந்திருந்த பழங்காலத்தில் எட்டிக்கூடப் பாராத ஊர்க்காரர்கள் இப்போது தாமே வந்து வந்து பழகினார்கள். பெருஞ்சித்திரனார் குமணனைக் கண்டு பரிசில் பெற்ற வரலாற்றைச் சொல்லச் செய்து கேட்டுப் பாராட்டினார்கள். ஊர்ப் பெண்கள் அவருடைய மனைவியுடன் பழகத் தொடங்கினார்கள்.

‘என்ன விசித்திரமான உலகம்!’ என்று புலவர் தமக்குள்ளே எண்ணி வியந்தார்.

எப்படியோ ஊரவர் பழக்கம் உண்டானது நல்லதாகப் போயிற்று. புலவர், அவர் மனைவியார் இருவருடைய நல்லியல்புகளையும் மற்றவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஊரவரிலும் நல்லவர்கள் இருப்பார்கள் அல்லவா? அவர்கள் நெருங்கிப் பழகினார்கள்.

‘குந்தித் தின்றால் குன்றும் மாளும்’ என்று சொல்வார்கள். குமணன் கொடுத்தனுப்பிய பொருள்கள் சில மாதங்களுக்கு வந்தன. வர வர அவை குறைந்தன.

அயலில் உள்ளவர்கள் வேண்டிய பண்டங்களைக் கொடுத்தார்கள்; புலவர் மனைவியிடம், “இவற்றை நீ திருப்பித் தர முடிகிறபோது தந்தால் போதும்” என்று சொல்லி அளித்தார்கள். அவர்களுக்கு அவளிடம் அத்தகைய அன்பு வளர்ந்திருந்தது. அவள் பண்டங்கள் குறைந்து வருவதை அறிந்து செலவைக் குறைத்தாள். இல்லாத பொருள்களைத் தனக்குத் தெரிந்தவர்களிடம் கடனாக வாங்கிக்கொண்டாள். அவற்றை அளந்து வாங்கிக்கொண்டு, குறிப்பிட்ட அந்த அளவுப்படியே மீட்டும் அளந்து தருவதாகச் சொன்னாள். இதற்குக் குறியெதிர்ப்பை என்று பெயர்.

இப்படி இன்னும் பல நாட்கள் வாழ முடியாது என்பதைப் புலவர் மனைவி உணர்ந்தாள். பெருஞ்சித்திரனாரோ ஒரு கவலையும் இல்லாமல் இருந்தார். ஒரு நாள் அவர் மனைவி அவரிடம், “மறுபடியும் ஒரு முறை குமண வள்ளலிடம் போய்விட்டு வாருங்கள்” என்று மெல்லத் தெரிவித்தாள்.

“ஏன்? அவரிடம் போய் வந்து நெடு நாட்கள் ஆகவில்லையே!” என்றார் புலவர்.

“அவர் உங்களை அனுப்புவதற்கு மனம் இல்லாதவராக இருந்தார் என்று சொன்னீர்களே; மறுபடியும் அவரைப் போய்ப் பார்க்கவில்லையா?”

“பார்க்கத்தான் வேண்டும். இன்னும் சில நாட்கள் போகட்டும்.”

“மறுபடியும் பழைய நிலை வந்த பிறகு போகலாம் என்று நினைத்திருக்கிறீர்களோ?”–அவள் சற்றே பரிகாசம் தொனிக்கும் குரலில் பேசினாள். மனைவிக்கு அந்த உரிமைகூட இல்லையா?

“நான் வாங்கி வந்த பொருள்கள் எல்லாம் ஆகிவிட்டனவா?”

“ஆகாமல் அப்படியே உட்கார்ந்திருக்குமா? இன்னும் பத்து நாட்களில் பானையெல்லாம் சூனியமாகிவிடும். அதற்குமுன் நீங்கள் போய் வந்தால் நல்லது.”

புலவருக்குப் பழைய நிலை மறுபடியும் வந்துவிடப் போகிறதே என்ற அச்சம் உண்டாயிற்று. குமணனுடைய பேரன்பை நினைத்துப் பார்த்தார். எப்போது போனாலும் புலவரை அவன் அன்புடன் வரவேற்க ஆயத்தமாக இருந்தான்.

ரண்டாவது முறையும் குமணனைக் காணும் பொருட்டுப் பெருஞ்சித்திரனார் புறப்பட்டார். நன்றாகப் பழகிய இடமாதலின், நிச்சயம் தமக்கு வேண்டிய பொருள்களைப் பெற்று வரலாம் என்ற நம்பிக்கை அவரிடம் இருந்தது. முதிரத்தை அடைந்தார். குமணனைக் கண்டார். அவரைக் கண்டவுடனே குமணன், “என்ன காரியம் செய்தீர்கள்? இவ்வளவு காலம் என்னை அடியோடு மறந்துபோய்விட்டீர்களே!” என்று கேட்டான்.

“நான் போய்ச் சில வாரங்களே ஆயின. இது பெரிய இடையீடு ஆகுமா?” என்றார் புலவர்.

“குழந்தையையும் மனைவியாரையும் அன்னையாரையும் பார்த்துவிட்டு வருவதாகப் போனீர்கள். என்ன இருந்தாலும் புதிய நட்புப் பழைய அன்புக்கு எதிராக நிற்க முடியுமா? அங்கே போனவுடன் குழந்தைகளோடு குலாவியும் மனைவியாரோடு அளவளாவியும் தாயாரோடு உரையாடியும் பொழுது இனிதாகப் போயிருக்கும். இரண்டு மூன்று நாள் பழகிய என் நினைவு வரக் காரணமே இல்லை.”

புலவர், “அப்படிச் சொல்லக் கூடாது. நான் ஒவ்வொரு நாளும் மன்னர்பிரானை நினைத்துக்கொண்டே இருந்தேன். நான் உண்ணும் உணவு மன்னர் பெருமான் அளித்ததாக இருக்க, நான் எப்படி மறக்க முடியும்? நன்றியறிவு இல்லாதவனாக வாழ்வதிலும் இறந்துபடுவது நன்று என்று நினைக்கிறவன் நான்....” என்று சொல்லி வரும்போது, குமணன் இடைமறித்தான்.

“நான் உங்களை நன்றியறிவு இல்லாதவர் என்று சொல்ல வரவில்லை. இங்கே இதுகாறும் வராததற்குக் காரணம் எதுவாக இருக்கும் என்று ஆராய்ந்து, எனக்குத் தோன்றியதைச் சொன்னேன், உங்கள் மனத்தில் வருத்தம் உண்டாக வேண்டுமென்று சொல்லவில்லை. இதை நீங்கள் மறந்துவிடுங்கள்.”

“நான் செய்த பிழையை உணர்கிறேன். மன்னர் பிரானை முன்பே வந்து கண்டு மகிழ வேண்டியவன் நான். என்னவோ வராமல் இருந்துவிட்டேன். மன்னர் பிரான் இதைப் பெரிதாக எண்ணக்கூடாது.”

இருவரும் ஒருவரிடம் ஒருவர் வைத்திருந்த பேரன்பினால் இப்படிப் பேசிக்கொண்டார்கள்.

“இந்த முறை என் விருப்பப்படி பல நாள் இங்கே தங்கி எனக்குத் தமிழின்பத்தை ஊட்டும் எண்ணத்தோடுதானே வந்திருக்கிறீர்கள்?”

“ஆம். மன்னர் பிரான் எப்போது, இவன் இங்கிருந்தது போதும் என்ற நினைப்போடு விடை கொடுக்க நேர்கிறதோ அப்போதுதான் போவதென்று தீர்மானித்துக்கொண்டு வந்திருக்கிறேன். என்ன செய்யச் சொன்னாலும் செய்யக் காத்திருக்கிறேன்.”
4

புலவரும் புரவலனும் பல நாள் உரையாடி இன்புற்றனர். முதிரமலைக் காட்சிகளைக் கண்டுவந்தனர். அந்தக் காட்சிகளைச் சொல்லோவியமாக்கிப் புலவர் பாடினார். அவர் பாடிய கவிதைகளைக் குமண வள்ளல் கேட்டு மகிழ்ந்தான். “பெருஞ்சித்திரனார் என்ற பெயர். உங்களுக்கு அமைந்தது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது! வண்ண ஓவியங்களில்கூட இத்தனை நன்றாகக் காட்ட முடியாது. உங்கள் கவிதை கண்ணாற் கண்டதை மாத்திரமா சொல்கிறது? கருத்தால் கருதுவதையும் சித்திரம் போலக் காட்டுகிறது” என்று பாராட்டினான். ஒவ்வொரு நாளும் மிக இனிதாகப் பொழுது போய்க்கொண்டிருந்தது. புலவர் வந்து பல வாரங்கள் ஆயின. தாம் வீட்டை விட்டு வரும்போது மனைவி சொன்னது புலவருடைய நினைவுக்கு வந்தது. மறுபடியும் பழைய நிலை வந்துவிடக் கூடாதே என்ற அச்சம் உண்டாயிற்று. ஆனாலும் அதை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளவில்லை.

குமணன் அவருடைய உள்ளக் குறிப்பை உணர்ந்துகொண்டான். சில நாட்களாகப் புலவருடைய பேச்சில் அவருடைய குடும்பத்தைப்பற்றிய செய்திகள் இடையில் வருவதை அவன் கவனித்தான். ‘இவ்வளவு நாள் இவர் இங்கே தங்கியதே பெரிய காரியம். இவரை நாம் சோதனை செய்யக்கூடாது’ என்ற எண்ணம் அவனுக்கே உண்டாகிவிட்டது. ஆதலின், புலவரை அனுப்புவதற்குரிய ஆயத்தங்களைச் செய்தான். இந்த முறை அளவற்ற பரிசில்களை வழங்கினான். ஆடையாகவும் அணிகளாகவும் அவன் வழங்கியவை பல. இரண்டு மூன்று வண்டிகள் நிறைய வாழ்வுக்குரிய பண்டங்களை நிரப்பினான்.

உங்களுக்கு எப்போது எது வேண்டுமானாலும் சிறிதும் தயக்கமின்றி எனக்குத் தெரிவித்தால் உடனே அனுப்புகிறேன். உங்கள் வீட்டில் உள்ளவர்கள் வாழ்க்கை நிலை குறையக் கூடாது. அதை எண்ணியே இவற்றை அனுப்புகிறேன். நீங்கள் சென்று வாருங்கள் என்று குமண வள்ளல் பெருஞ்சித்திரனாருக்கு விடை கொடுத்து அனுப்பினான்.

அவன் அளித்த பரிசில்களைக் கண்டு புலவர்க்கு மூர்ச்சை போடாததுதான் குறை. ‘இனிப் பல மாதங்கள் நம் குடும்பத்துக்கு ஒரு விதமான குறையும் இல்லை’ என்ற பெருங்களிப்புடன் அவர் ஊரை அடைந்தார். அவர் நடையிலே என்றும் இல்லாத பெருமிதம் உண்டாயிற்று.

வீட்டுக்கு வந்து, தாம் பெற்ற பரிசில்களைத் தம் அன்னையாருக்குக் காட்டினார். பின்பு தம் மனைவியை அணுகி, “அதோ பார், அந்த வண்டிகளில் உள்ள பண்டங்களை இறக்கி வைத்துக்கொள்” என்றார்.

அவற்றை ஏறெடுத்துப் பார்த்தாள் அந்தப் பெண்மணி. “எல்லாம் குமண வள்ளல் தந்தவையா?” என்று வியப்புடன் கேட்டாள்.

“எல்லாம் அந்தப் பெருமான் வழங்கியனவே. இவை எல்லாவற்றையும் ஒழுங்காக எடுத்து வை. வைத்துவிட்டு வா. உன்னிடம் சில செய்திகளைச் சொல்லவேண்டும்.”

அவள் சுறுசுறுப்பாக, வீடு தேடி வந்த திருமகளைப்போல எண்ணி அவற்றையெல்லாம் எடுத்து வைத்தாள். வீடு கொள்ளாத பண்டங்கள்! தெரிந்தவர் வீடுகளில் சில பண்டங்களை இறக்கும்படி ஏற்பாடு செய்தாள். ஒருவாறு எல்லாவற்றையும் ஒழுங்கு செய்த பிறகு தன் கணவரிடம் வந்தாள். “எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டேன். ஏதோ சொல்ல வேண்டும் என்று சொன்னீர்களே! என்ன அது?” என்று கேட்டாள்.

“அதுவா? இப்படி உட்கார், சொல்கிறேன். இவ்வளவு பண்டங்களையும் என்ன செய்யப் போகிறாய்?”

“என்ன செய்வார்கள்? வைத்துக்கொண்டு செட்டாகக் குடித்தனம் செய்வேன்.”

“அது வேண்டாம் என்று சொல்லத்தான் உன்னை அழைத்தேன். குமண வள்ளல் இருக்குமட்டும் நமக்கு ஒரு குறைவும் வராது. இந்தப் பொருள்களை யெல்லாம் வேண்டியவர்களுக்குக் கொடு.”

“யாருக்குக் கொடுப்பது?”

அதை நான் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஆனாலும் சொல்கிறேன் கேள்: உன்னைத் தேடிக்கொண்டு தாமே இங்கே வந்து தங்கும் ஏழை உறவினர்கள் இருக்கிறார்களே, அவர்களுக்கு வேண்டியதைக் கொடு. நீயாக விரும்பிச் சிலரை அழைத்தாயே, அவர்களுக்கும் கொடு. நான் சொல்வதைக் கேட்டு அப்படியே நடக்கும் மாட்சிமையுள்ள கற்புடையவள் நீ ஆதலால் இதைச் சொல்கிறேன். உனக்குச் சொந்தக்காரர்கள் யார் உண்டோ அவர்களுக்கும் எடுத்துக் கொடு. பல காலமாக எத்தனையோ பண்டங்களை அயலாரிடம் அளந்து வாங்கியிருக்கிறாய்; திருப்பித் தருவதாகச் சொல்லி வாங்கியிருக்கிறாய், அப்படிப் பெற்ற குறியெதிர்ப்பைகளை யெல்லாம் ஒன்றுகூட மிச்சமின்றித் திருப்பிக் கொடுத்துவிடு. இவருக்குக் கொடுக்கலாமா, அவருக்குக் கொடுக்கலாமா என்று என்னைக் கேட்க வேண்டுமென்று வைத்துக்கொள்ளாதே. அது வேண்டியதில்லை. இன்னார், இனியார் என்னாமல் கொடு. இவற்றை வைத்துக் கொண்டு சாமர்த்தியமாக வாழலாம் என்று எண்ணாதே. இவற்றை அளித்த குமணன் இருக்கிறான். அவனைக் கொடுக்கும்படி செய்த இறைவன் இருக்கிறான். ஆதலின், கொடுத்தால் குறைந்துவிடுமே என்று எண்ணாமல் கொடு. என்னிடம் யாராவது எதையாவது கேட்டாலும் கொடுக்கிறேன். நீயும் கொடு. நீதானே வீட்டுக்குத் தலைவி? உன்னிடந்தான் எல்லோரும் வந்து கேட்பார்கள். பழங்கள் நிரம்பிய முதிரமலைத் தலைவனகிய குமணன் வழங்கிய இந்தப் பொருள்களை நீ பிறருக்கு வழங்கி அதனால் வரும் இன்பத்தை அடைவாயாக!”

இந்த நீண்ட அறிவுரையைக் கூறிய புலவர் அதைப் பாட்டாகவே அமைத்துவிட்டார்.

நின்நயந்து உறைநர்க்கும் நீநயந்து உறைநர்க்கும்
பன்மாண் கற்பின் நின் கிளைமுத லோர்க்கும்
கடும்பின் கடும்பசி தீர யாழநின்
நெடுங்குறி எதிர்ப்பை நல்கி யோர்க்கும்
இன்னோர்க்கு என்னாது, என்னோடும் சூழாது
வல்லாங்கு வாழ்தும் என்னது. நீயும்
எல்லோர்க்கும் கொடுமதி மனை கிழி வோயே!
பழம்தூங்கு முதிரத்துக் கிழவன்
திருந்துவேற் குமணன் நல்கிய வளனே.

[நின்னை விரும்பி வந்து தங்கும் இயல்புடையவர்களுக்கும், நீ விரும்ப உன் அழைப்பை ஏற்று வந்து தங்குபவர்களுக்கும், பலவாக மாட்சிமைப்பட்ட கற்பையுடைய நின் சுற்றத்தார் முதலியவர்களுக்கும், நம் சுற்றத்தாரின் கடுமையான பசி தீரும் பொருட்டு நினக்குப் பண்டங்களைக் கடன் கொடுத்தவர்களுக்கும், இன்னாருக்கு என்று ஆராய்ந்து பாராமல், என்னோடு கலந்து யோசனை செய்யாமல், சாமர்த்தியமாக இதை வைத்துக்கொண்டு வாழலாம் என்று நினையாமல், வீட்டுக்குத் தலைவியே, பழங்கள் தொங்கும் முதிர மலைக்கு உரியவனும் செம்மையான வேலை உடையவனுமாகிய குமணன் வழங்கிய பொருளே, நீயும் யாவருக்கும் கொடுப்பாயாக.]

புலவர் இவ்வாறு கூறுவதைக் கேட்ட மனைவி முதலில் சிறிது தடுமாறினாள். அவர் மறுபடியும், “குமணன் செல்வம் எல்லாம் நம் செல்வந்தான். இறைக்க இறைக்க ஊறும் கிணறுபோல் கொடுக்கக் கொடுக்கத்தான் நமக்கும் செல்வம் வரும். செல்வத்தைப் பெற்றவர்கள் யாராக இருந்தாலும் அதைப் பாதுகாத்து வைப்பதால் பயன் இல்லை. பிறருக்கும் கொடுத்துத் தாமும் உண்ணவேண்டும். அதில்தான் உண்மையான இன்பம் இருக்கிறது. ஆதலால் நீ யாவருக்கும் கொடு. வாங்கும் இன்பத்தை நன்கு அறிந்த நமக்குக் கொடுக்கும் இன்பத்தையும் அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்திருக்கும்போது அதை விடலாமா?” என்றார்.

அவர் தாம் பட்ட வறுமையை மறந்தார். கிடைத்த செல்வத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற உலோப குணம் அவரிடம் இல்லை. உயிர்களுக்கெல்லாம் அன்பு பாலிக்கும் உள்ளமுடையவர் அவர் நல்ல கவிதை பிறக்கும் உள்ளம் அல்லவா அது? அவருக்கு இந்தப் பொருள் பெரிது அன்று. இதை அவர் எப்போதும் போற்றிப் பாதுகாத்துச் சேமிப்பதற்குரியதென்று கருதவில்லை. அவருக்கும் வண்மைப் பண்பு இருந்தது.

தன் கணவர் கூறியதைக் கேட்ட அப்பெருமாட்டி அவ்வாறே செய்யத் தொடங்கினாள். வறிய நிலை மாறி வள நிலையில் இருந்த அந்த வீடு இப்போது வண்மை நிலையும் பெற்று விளங்கியது.

புலவர்கள் வறியவர்களாக இருந்ததற்குக் காரண்மே இதுதான். அவர்களுக்குப் பொருள் கிடைக்காமல் இருப்பதில்லை. புலவர்களிடம் அன்பு பூண்ட புரவலர்கள் பலர் இருந்த தமிழ் நாட்டில் புலவர்களுக்கு வேண்டியவற்றை அவர்கள் நல்கிவந்தார்கள். தமக்குக் கிடைத்த பொருளை. இது பல நாளுக்கு இருக்க வேண்டும் என்று சேமித்து வைக்கும் இயல்பைப் புலவர்கள் அறிய மாட்டார்கள். எப்படிக் கிடைத்ததோ, அப்படிச் செலவிட்டு விடுவார்கள். துறவி கையில் கிடைத்த பொருளும் புலவர் கையில் கிடைத்த பொருளும் பலருக்குப் பயன்படும்.

இந்தக் கூட்டத்தைச் சேர்ந்த பெருஞ்சித்திரனார் தம் மனைகிழவோளுக்கு இத்தகைய அறிவுரையைச் சொன்னது வியப்புக்கு உரியது அன்று.