உள்ளடக்கத்துக்குச் செல்

குமரியின் மூக்குத்தி/உள்ளத்தில் முள்

விக்கிமூலம் இலிருந்து


உள்ளத்தில் முள்

1

வராத்திரி அணுகிக்கொண்டிருந்தது. அவரவர்கள் வீட்டில் புதிய புதிய பொம்மைகளை வாங்கி வாங்கிச் சேர்த்தார்கள் பெண்மணிகள். குழந்தைகளுக்குத்தான் எத்தனை குதுாகலம்! நாளுக்கு ஒரு கோலம் புனைந்துகொண்டு வீடு வீடாகப் புகுந்து அழைத்து வருவதற்கு அவர்கள் தயாரானார்கள்.

இந்த ஆண்டு விசுவநாத ஆசாரியாருக்கு வியாபாரம் அதிகம். அவர் முன்பே பல மூர்த்திகளைச் செய்து வைத்திருக்கிறார். வெறும் மண் பொம்மையா அவை? கருங்காலியிலும் சந்தன மரத்திலும் செய்த தெய்வங்கள்! அவரிடம் வாங்கின உருவங்களிற் பல, அஷ்டோத்தரமும் சகஸ்ரநாமங்களுமாகப் பெற்றுக் கற்ப்பூர ஆரத்தி வாங்கிக் கொண்டு தெய்வமாக விளங்குகின்றன. எத்தனேயோ காட்சிகளில் அவருக்குப் பரிசும் பாராட்டும் கிடைத்திருக்கின்றன.

அவ்வளவுக்கும் காரணம்? நன்றியறிவோடு அந்தப் பெரியவரை நினைந்து பெருமூச்சு விட்டார் ஆசாரியார். அவர் கை வேலை செய்துகொண்டிருந்தது. எதிரே மிக மிக வியத்தற்குரிய ராஜராஜேசுவரியின் பிம்பம். அதைப் பார்த்துப் பார்த்து வேலை செய்து கொண்டிருக்கிறார். சிற்றுளி கொண்டு செதுக்குகிறார்; இழைக்கிறார். முன்னாலே இருக்கிறதைப் போலவே செய்ய வேண்டும் என்பது அவருடைய ஆசை. அப்படியானல் முன் உள்ளது வேறு யாரேனும் செய்ததோ?

இல்லை, இல்லை. அதுவும் அவர் செய்ததுதான். அதை எதற்காக அவர் அடிக்கடி பார்க்கிறார்? அதே அச்சாக அமைய வேண்டும் என்பது அவர் எண்ணம். கலைஞனுக்குத் தான் படைக்கும் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தனி யழகு பொலியும்; தொழிலாளியோ எல்லாவற்றையும் ஒன்று போலச் செய்வான். தான் செய்ததையே பார்த்து மறுபடியும் அதே அச்சாகச் செய்யும்போது கலைஞனுக்கு அலுப்புத் தட்டிவிடும். வெறும் கைவேலை மட்டுந்தானே? புதிய கற்பனைக்கு இடம் இல்லாமற் போய்விடுகிறதல்லவா?

விசுவநாத ஆசாரியார் நிலையும் அப்படித்தான் இருந்தது. புதியதாக மற்றொரு மூர்த்தியைச் செய் என்றால் மிகவும் எளிதில் மகிழ்ச்சியோடு செய்துவிடுவார். இப்போது ஒரு நிர்ப்பந்தத்தில் அகப்பட்டுக்கொண்டிருக்கிறார். இம்மி பிச்காமல் அதே மாதிரி அமைய வேண்டும். ஏன்? அவராக வருவித்துக்கொண்ட சங்கடம் அது.

***

விசுவநாத ஆசாரியாருக்குத் தச்சு வேலைதான் இளமையில் அவர் தகப்பனார் சொல்லித் தந்தார். ஆனால் அவர் கையில் வெறும் தச்சுத் தொழிலாளியின் நரம்பு ஒடவில்லை. சிற்பக் கலைஞனுடைய ஆற்றல் அதற்கு, இருந்தது. நாய், யானை, மனிதன் என்று உருவங்களை இளம்பிராயத்தில் செதுக்கத் தொடங்கினர். பிறகு தேரில் பதிக்க வேண்டிய உருவங்களில் பெரும்படியான வேலைகளைச் செய்தார். அப்பால் நுட்பமான வேலைகளையும் செய்யத் தெரிந்துகொண்டார்.

அவருடைய பால்ய சிநேகிதர் பரமசிவ சாஸ்திரியார். ஒரே பள்ளிக்கூடத்தில் நாலு வகுப்பு வரையிலும் ஒன்றாகப் படித்தார்கள்; அதற்குமேல் இருவரும் அந்தப் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்கள். சாஸ்திரி யாருடைய தகப்பனார் பெரிய ஜோசியர்; வடமொழியிலும் மந்திர சாஸ்திரங்களிலும் வல்லவர். அவர் தம்முடைய பிள்ளைக்கு, மிலேச்சபாஷை வேண்டாமென்று நிறுத்திக் கொண்டு தம்முடைய வித்தைகளைச் சொல்லிக் கொடுத்தார். பரம்பரை வித்தை எளிதிலே பரமசிவ சாஸ்திரியாருக்கு வந்துவிட்டது. பையன் எப்படியாகிலும் பிழைத்துக்கொள்வான் என்ற முழு நம்பிக்கையுடன் அவருடைய தங்தையார் கண்மூடினார்.

இப்போது பரமசிவ சாஸ்திரியார் மந்திர சாஸ்திரத்தில் வல்லவர் என்று பெயர் எடுத்தார். என்ன எடுத்து என்ன பிரயோசனம்? ஜோசியத்தையும் மந்திரத்தையும் கட்டி அழுகிறவர்களேத்தான் சனி பகவான் அடைக்கலம் புகுந்து கிரந்தரமாக அவர்களிடம் இருந்துவிடுகிறானே! சாஸ்திரியார் குழந்தை குட்டிகளோடு வறுமையையும் வளர்த்து வந்தார்.

தம்முடைய கண்பர் விசுவநாத ஆசாரியார் இப்போது ஒரளவு செயலாக இருப்பது தெரிந்து அவருக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று. இரண்டு நண்பர்களும் அடிக்கடி கலந்து பேசுவார்கள். ஆசாரியார் ஏதோ தம்மாலான உபகாரத்தைச் சாஸ்திரியாருக்குச் செய்வதுண்டு. நேரே கொடுத்தால் அவர் வாங்கிக் கொள்ளமாட்டார் என்று, ஏதோ தகடென்றும் தாயித்தென்றும் பேர் சொல்லி வாங்கிக் கொண்டு பொருள் கொடுப்பார்.

ஒருநாள் சாஸ்திரியார் தம் நண்பருக்கு ஒரு யோசனை கூறினர். "நீ இந்த மாட்டையும் குதிரையையும் யானேயை யும் செய்து விற்கிறாயே! உனக்கோ திறமை இருக்கிறது. உன் உளி நினைக்கிறதையெல்லாம் உருவாக்கி விடுகிறது. நல்ல தெய்வ பிம்பங்களாகச் செய்தாயானால் உனக்குப் புண்ணியமும் லாபமும் அதிகம் ஏற்படும்” என்றார்.

"என்ன செய்யவேண்டும்? அதைச் சொல்லுங்கள்; செய்து பார்க்கிறேன்."

"ராமன், கிருஷ்ணன், முருகன் என்று பல மூர்த்திகளைச் செய்யலாம். எவ்வளவோ அருமையான மூர்த்திகளின் தியான சுலோகங்கள் இருக்கின்றன. அவற்றில் உள்ளபடி நீ மூர்த்திகளைச் செய்தாயானால் பலர் விரும்பி வாங்கிக் கொள்வார்கள்.'

"எனக்கு அந்த மூர்த்திகளின் லட்சணங்கள் தெரிய வகை இல்லேயே!” என்று அங்கலாய்ப்புடன் சொன்னார் ஆசாரியார்.

"அதைப்பற்றி நீ ஏன் கவலைப்படுகிறாய்? நான் அந்தத் தியான சுலோகங்களின் பொருளை விளக்கமாகச் சொல்கிறேன். நீ அதன்படியே விக்கிரகங்களைச் செய்யலாம்" என்று சாஸ்திரியார் கூறினார்.

அதுமுதல் விசுவகாத ஆசாரியார் முழுக்க முழுக்கத் தெய்வத் திருவுருவங்களேயே சமைத்து வந்தார். பலர் அவருடைய பிரதிமைகளே வாங்கத் தொடங்கினார்கள். சந்தனத்தாலே செய்த திருவுருவங்களை வாங்கிப் பூஜை செய்தார்கள். இதனால் ஆசாரியாருடைய வருவாய் மிகுதியாயிற்று. தமக்கு இந்த வருவாய் வருவதற்குக் காரணம் சாஸ்திரியார் என்பதை அவர் மறக்கவே இல்லை.

சாஸ்திரியார் நவராத்திரியில் சிறப்பாகப் பூஜை செய்வார். அவருக்கு நல்ல சந்தன மரத்தில் ஶ்ரீ ராஜராஜேசுவரியின் உருவத்தைச் செய்து கொடுத்துப் பூஜை செய்யச் சொல்ல வேண்டும் என்பது விசுவநாதருக்கு ஆசை. அவர்கள் ஊராகிய துத்திகுளம் கொல்லிமலை அடிவாரத்தைச் சார்ந்திருந்தது. கொல்லி மலையில் காட்டினிடையே சந்தன. மரங்கள் வளர்ந்திருக்கும். அரசாங்கத்தாரின் கட்டுக் காவலுக்கு உட்பட்டிருந்தாலும் விறகு வெட்டி வருகிறவர்கள் சந்தனக் கட்டையையும் யாருக்கும் தெரியாமல் வெட்டிக்கொண்டு வந்து விற்றுவிடுவார்கள். விசுவநாதஆசாரியார் நியாயமான முறையில் சந்தனக் கட்டைகளைக் கடைகளில் வாங்கி வேலை செய்தாலும், விறகு வெட்டிகளிடம் சில சமயம் மிகவும் அருமையான வைரம் ஏறின கட்டை கிடைக்கும். அதனால் அவர்களிடமும் வாங்குவார். தவறு தான் ஆனாலும் வேறு வழி இல்லாமல் வாங்குவார். அதிகாரிகள் அவரைப் பொறுத்தமட்டில் ஒன்றும் செய்யாமல் இருந்தார்கள்.

ஒரு சமயம் ஒரு விறகுவெட்டி மிகவும் பெரிதாக, வைரம் பாய்ந்ததாக ஒரு சந்தனக்கட்டையைக் கொண்டு வந்து கொடுத்தான். நல்ல பவுன்நிறம் என்று சொல்ல வேண்டும். அதைக் கண்டவுடன் அவருக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. அவனிடம் ஒன்றும் கேட்காமலே ஐம்பது ரூபாயைத் தூக்கிக்கொண்டு வந்து கொடுத்து விட்டார். அவன் பிரமித்துப் போனான்.

நெடுநாட்களாகத் தாம் பட்ட கடனைத் தீர்த்துவிடலாம் என்ற ஆர்வம் அவருக்கு. இந்த நவராத்திரி வருவதற்குள் மிகவும் அழகாக, பூஜைக்கு உரியதாக ஶ்ரீ ராஜ ராஜேசுவரியின் திருவுருவத்தைச் செய்துவிட வேண்டும் என்ற ஆசை. அவர் தம் அகக் கண்ணில் அம்பிகையை உருவாக்கிவிட்டார். முன்பே சாஸ்திரியாரிடம் அம்பிகை யின் திருக்கோலத்தைப்பற்றித் தெளிவாகக் கேட்டு அறிந்திருக்கிறார் அல்லவா?

"உன்னுடைய மற்ற வேலைகளையெல்லாம் கெடுத்துக் கொண்டு இதை ஏன் செய்கிறாய்? ஒழிந்தபோது செய்து தரலாமே!” என்று சாஸ்திரியார் சொன்ன போது விசுவநாதர் கேட்கவில்லை.

"முன்பே செய்து தந்திருக்க வேண்டியது. இவ்வளவு நாள் நல்ல கட்டையாகக் கிடைக்கவில்லை. இப்போது தான் கிடைத்தது. இந்தச் சமயத்தை விடலாமா? எப்படியும் இந்த நவராத்திரிக்கு அம்பாள் உங்கள் கையில் பூஜையை ஏற்றுக்கொள்ள எழுந்தருளுவாள்' என்று சொன்னார். -

சாஸ்திரியார், "எல்லாம் அம்பிகையின் கிருபை" என்று பேசாமல் இருந்துவிட்டார்.

புரட்டாசி மாதம் பிறந்துவிட்டது. விசுவநாதர் ஒருவாறு உருவத்துக்கு எல்லை கோலி வேலை செய்துவந்தார். அவயவம் அவயவமாக நுட்பமாக வடித்தெடுத்தார். சாஸ்திரியார் ஒவ்வொரு நாளும் தம் நண்பர் வீடுவந்து பார்த்துப் போவார். அவருக்கும் அது நன்றாக நிறைவேறவேண்டும் என்ற ஆசை. அம்பிகை உருவாகி வந்தாள். "உன் கை விசுவகர்மனுடைய கை, அப்பா. இந்த விக்கிரகத்துக்கு ஒரு லட்சார்ச்சனை பண்ணிவிட்டேனானால் இந்தச் சந்நிதானத்தில் பேய்கள் கூத்தாடும். எத்தனை கச்சிதமாக இருக்கிறது உன் வேலை!" என்று சாஸ்திரியார் பாராட்டுவார்.

"எல்லாம் நீங்கள் காட்டும் வழிதான்" என்பார் நண்பர்.

ஒருவாறு திருவுருவம் பூர்த்தியாயிற்று. சாஸ்திரியார் அதைப் பார்த்துப் பார்த்துப் பூரித்துப் போனர். நவராத்திரிக்கு இன்னும் எட்டே நாட்கள் இருந்தன. இடையில் சாஸ்திரியார் வெளியூர் செல்லவேண்டி நேர்ந்தது. அந்த விக்கிரகத்தை இப்போதே கொடுத்துவிடு. நான் வீட்டில் வைத்திருக்கிறேன். நவராத்திரி ஆரம்பத்தில் ஆவாகனம் முதலியவை செய்யலாம்" என்றார்.

"இல்லை, இல்லை. சில்லறை காசு வேலைகள் இருக்கின்றன. அவற்றைச் செய்துவிட்டு நீங்கள் ஊரிலிருந்து வந்தவுடன் தந்துவிடுகிறேன்” என்றார் விசுவநாதர்,

'என்னவோ அம்பாள்தான் உனக்கு மேன்மேலும் நன்மையை உண்டுபண்ண வேணும். எவ்வளவோ வேலைகளைக் கெடுத்துக்கொண்டு, வரும்படியை விட்டுவிட்டு எனக்காக இதைச் செய்ய ஆரம்பித்தாய். இவ்வளவு நாளும் மெனக்கெட்டது போதாதென்று இன்னமும் வேலை இருக்கிறதென்கிறாய். உனக்கு நான் என்ன செய்யப் போகிறேன்!”

"அந்தக் கேள்வியை நான் கேட்க வேண்டும். நீங்கள் அல்லவா இந்தப் புதிய வழியை எனக்குக் காட்டி என்னே முன்னுக்கு வரச் செய்தீர்கள்? அதற்கு என் உடம்பைச் செருப்பாகத் தைத்துப் போட்டாலும் போதாதே!”

“சரி, சரி, போதும், போதும் உன் பேச்சு. நான் ஊருக்குப் போய்விட்டு வருகிறேன்.”

அவர் ஊருக்குப் போயிருந்தபோதுதான் விசுவநாதருக்கு அந்தச் சோதனை நேர்ந்தது. யாரோ ஒரு நண்பர் அவர் வீட்டுக்கு வந்திருந்தார். அவர் தம்முடன் ஒரு செல்வரையும் அழைத்து வந்தார். அவர் வீட்டில் அம்பிகை பூஜை செய்கிறவராம். அப்போது ராஜராஜேசுவரி முழுப் பொலிவோடு உருவாகி விட்டாள். அந்தத் தெய்வ உருவைத் தம் நண்பருக்கும் அவருடன் வந்த செல்வருக்கும் காட்டினர் மரச் சிற்பி. அதைக் கண்டவுடன் செல்வர் வியப்பே வடிவமானார். அதைப் பார்க்கப் பார்க்கத் தம் கண்ணை வாங்க முடியவில்லை. "இது என்ன விலையாகும்?" என்று கேட்டார். - .

"விற்பதற்குச் செய்தது அல்ல இது" என்றார் ஆசாரியார்.

"ஏன் விற்கக்கூடாது?" என்று செல்வர் கேட்டார்.

ஆசாரியாருக்கு என்னவோ தோன்றிற்று; இதற்குப் பணம் கொடுக்கிறவர் யாரும் இல்லை” என்று கூறினார்.

"என்ன அப்படிச் சொல்கிறீர்கள்? அப்படி என்ன விலை ஆகப்போகிறது? எவ்வளவு விலை ஆனாலும் நான் கொடுத்துவிடுகிறேன்.”

ஆசாரியார் உடனே, "ஆயிர ரூபாய்” என்றார். அந்தத் தொகையை அவர் கொடுப்பதாவது என்று எண்ணினார். ஆனால் செல்வரோ சளைக்கவில்லை. 'இவ்வளவுதானா? இந்தாருங்கள், இருநூறு ரூபாய் முன்பணம். பாக்கியை ஊருக்குப் போய் அனுப்பி இந்த மூர்த்தியை வாங்கிக் கொள்கிறேன்” என்று சொல்லி இரண்டு நோட்டை நீட்டினார். விசுவநாதருக்கு இப்போது திகைப்பு உண்டாகி விட்டது. ஆயிர ரூபாய்! விட மனசு வரவில்லை. இதைக் கொடுத்துவிட்டு, இதே மாதிரி வேறு ஒன்று செய்து விட்டால் போகிறது.

"நவராத்திரிக்கு இன்னும் மூன்றே நாட்கள் இருக்கின்றன. அதற்குள் எப்படிச் செய்வது? ஏதோ பைத்தியக்காரத்தனமாகப் பேசி அகப்பட்டுக் கொண்டோமே!' என்று ஓர் எண்ணம் அவருக்குத் தோன்றியது. ஆயிர ரூபாய் என்ற நினைவு அவரைச் சற்றே சபலத்துக்கு உள்ளாக்கியது.

என்ன யோசிக்கிறீர்கள்?' என்று செல்வர் கேட்டார். அதற்குள் கலைஞர் ஒருவிதமாக முடிவுக்கு வந்துவிட்டார். "இந்த ரூபாயை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். நவராத்திரிக்கு இன்னும் மூன்று நாட்கள் இருக்கின்றன. நவராத்திரியன்று காலையில் பணத்துடன் ஆளை அனுப்புங்கள். விக்கிரகத்தைக் கொடுத்தனுப்புகிறேன். அதற்குள் உங்கள் மனசு மாறினல் நீங்கள் இதை வாங்கிக்கொள்ள வேண்டாம்" என்று சிற்பி சொன்னபோது, இல்லை, இல்லை; இப்போதே எடுத்துக்கொண்டு போகிறேன். இந்த நண்பர் எனக்குப் பிணையாக இருப்பார். ஊர் போனவுடன் பணத்தை அனுப்பிவிடுகிறேன்” என்று பரபரப்பாகப் பேசினர் செல்வர்.

"இன்னும் சில சில்லறை வேலைகள் இருக்கின்றன; அவற்றையும் செய்து அனுப்புகிறேன். நீங்கள் கவலையில்லாமல் ஊருக்குப் போங்கள்" என்று சொல்லி அவரை அனுப்பினார் கலைஞர்.

அவருக்கு இந்த மூன்று காட்களில் அதேமாதிரி வேறு ஒன்றைச் செய்துவிடலாம் என்ற தைரியம். சாஸ்திரியார் நவராத்திரி ஆரம்ப நாள் காலையில்தான் வரப் போகிறார் என்று தெரிந்திருந்தமையால் அதற்குள் செய்து விடலாம் என்ற துணிவு ஏற்பட்டது. செய்யத் தொடங்கி விட்டார். இரவும் பகலும் செய்தார். ஒன்று போலவே ஒன்று செய்வது எளிதென்று நினைத்தார். ஆனால் அது எவ்வளவு கடினமானது என்று அந்தக் கலைஞருக்கு இப்போது தெரிந்தது. அது உயிர் இல்லாத யந்திரத்தின் வேலையல்லவா? -

நடுநடுவே தர முடியாது என்று செல்வருக்குச் சொல்லி அனுப்பிவிடலாமா என்று தோன்றியது. ஆயிர ரூபாய் நினைவு அதை மாற்றியது. "நான் அதை விற்று விட்டேன். அடுத்த நவராத்திரிக்கு வேறு செய்து தருகிறேன்” என்று தம் நண்பரிடம் சொல்லலாமே என்று நினைத்தார். அப்படிச் செய்வதனால் சாஸ்திரியார் சிறிதும் வருத்தப்பட மாட்டார். நல்ல விலைக்கு விற்றதுபற்றி மகிழ்ச்சியே அடைவார். ஆனால்-அந்த மகோபகாரியை ஏமாற்றலாமா? அது தருமமாகுமா? அவரைவிட ஆயிர ரூபாய் பெரிதா? அவருடைய சகாயம் இல்லாவிட்டால் இந்தப் பொருள் ஏது? புகழ் ஏது?-அலைமோதும் உள்ளத் தோடு அவர் வேலை செய்து வந்தார். கடுமையான வேலை. அதைவிட அவர் உள்ளத்தில் உண்டான போராட்டம் பின்னும் கடுமையாக இருந்தது. எப்படியாவது மற்றொரு திருவுருவத்தைச் செய்து இந்தத் தர்மசங்கடத்தினின்றும் விடுதலை பெற வேண்டும் என்று தீவிரமாக உழைத்து வந்தார்.

2

வர் கை வலித்தது. கண் வலித்தது. எல்லாவற்றிற்கும் மேலாக நெஞ்சு வலித்தது. மார்பு அன்று; அவர் உள்ளந்தான் வலித்தது. பணப்பேயின் 'வலைப்பட்ட பாவி' என்று தம்மையே திட்டிக்கொண்டார். இரண்டு நாட்கள் ஆயின. இன்னும் இருபத்துநான்கு மணி நேரத்தில் இரண்டாவது ராஜராஜேசுவரி உருவாக வேண்டும். வெறி பிடித்தவரைப் போல வேலை செய்தார்.

வீட்டில் உள்ளவர்கள் எல்லாரும் அவர் நிலையைக் கண்டு அஞ்சினார்கள். "என்ன இது? சரியாகச் சோறு தின்னாமல், கண்ணை மூடாமல் வேலை செய்தால் உடம்பு எதற்காகும்?" என்றார்கள். அவர் ஒன்றையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. மூர்த்தன்யமாக அவர் ராஜ ராஜேசுவரியை உருவாக்கிக் கொண்டிருந்தார். ஒவ்வொரு மணியாகக் காலம் கழிந்து கொண்டிருந்தது. அவர் வேலையின் வேகம் அதிகமாயிற்று. -

அன்றைக்கு மறுநாள் நவராத்திரி. மாலை ஆறு மணி ஆயிற்று. ஒருவிதமாக உருவம் வந்துவிட்டது. கொஞ்சம் நுட்ப வேலைகள் பாக்கி. அவற்றைச் செய்ய மூன்று மணி நேரம் பிடித்தது. எல்லாம் ஆனபிறகு இரண்டு திரு வுருவங்களையும் அருகருகே வைத்துப் பார்த்தார் கலைஞர். இரண்டும் ஒன்றாக இல்லை. மற்றவர்களின் கண்ணுக்கு வேறுபாடு தோன்றாது. ஆனல் அவர் கண்ணுக்கு-நுட்பமான கலைக்கண்ணுக்கு-வேறுபாடு தோன்றியது. ஒன்று அசல்; மற்ருென்று நகல். ஒன்று உயிரின் படைப்பு: மற்றொன்று கையின் படைப்பு. ஒன்றுக்கு அன்பு விலை. மற்றொன்றுக்கு அழியும் பணம் விலை.

இதுவரையில் அவர் எதை யாருக்கு அளிப்பது என்பதைச் சிந்திக்கவே இல்லை. பணம் கொடுக்க முன் வந்தவர் பார்த்தது முதல் திருவுருவத்தை. அதையே கொடுத்து விடுவதாகத்தான் அப்போது எண்ணியிருந்தார். ஆனால் இப்போது - இதைத் தர ஒப்புக்கொண்ட பாவத்தை விட மகாபாவம் மூலத்தைக் கொடுப்பது!

மறுநாள் நவராத்திரி ஆரம்பம். கலைஞர் இரண்டையும் தனித் தனியே மறைத்து வைத்தார். செல்வருடைய ஆள் ஆயிர ரூபாயுடன் வந்தான். இரண்டாவது செய்த உருவை அவனிடம் அனுப்பினார். அதுவரையில் அவருக்கு ஒன்றும் ஒடவில்லை. அவன் கையில் அதைக் கொடுத்த பிறகு பெருமூச்சு விட்டார்.

அவன் கொடுத்துச் சென்ற ஆயிர ரூபாய் அவர் முன் கிடந்தது. அவருக்கு இப்போது அதைத் தொடவும் அருவருப்பாக இருந்தது. எப்படியோ அதை எடுத்துவைத் தார் பெட்டியில். சாஸ்திரியார் வீட்டுக்கு ஆள் அனுப்பி, வந்துவிட்டாரா என்று விசாரித்தார். வந்தது தெரிந்து தம்முடைய அன்புக் காணிக்கையை எடுத்துக்கொண்டு அவர் வீட்டை நோக்கிப் புறப்பட்டார்.

சாஸ்திரியார் வீட்டுக்குப் போய் அட்டைப் பெட்டியிலிருந்து அம்பிகையை ஒரு பீடத்தில் எடுத்துவைத்தார் கலைஞர். அதைக் கண்டவுடன் சாஸ்திரியாருக்கு உடம்பு புல்லரித்தது. சாஷ்டாங்கமாக விழுந்து அதை நமஸ்கரித்தார். எழுந்தவர், என்ன தோன்றிற்றோ, கலைஞர் காலில் விழப் போனர். "என்ன சாமி இது நான் பாவி! எனக்கா நமஸ்காரம்?" என்று சொல்லிக்கொண்டே அவர் காலில் விழுங்தார் கலைஞர். -

"நீ தெய்வாம்சம் பெற்றவன், அப்பா. அம்பிகையை உன் அகக்கண் தரிசித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் இப்படி அமையாது” என்று சொல்லும்போதே சாஸ்திரியார் கண் நீரைக் கக்கியது.

எழுந்த கலைஞருக்கு ஏதோ படபடவென்று வந்தது. விடை பெற்றுக்கொண்டு வீடு சென்றார். சென்று படுத்து, விட்டார். ஜூரம் வந்துவிட்டது. மூன்று நாள் அகாத ஜூரம் அப்போது, "ரூபாய், பாவி, பணப்பேய்!” என்று என்ன என்னவோ பிதற்றினர். சாஸ்திரியார் அவரை வந்து பார்த்துப் போனார். வீட்டில் உள்ளவர்கள், "அப்போதே சொன்னோமே! கேட்டீர்களா?"என்று அங்கலாய்த்தார்கள்.

நான்காவது நாள் அவருக்குச் சிறிதே குணமாயிற்று. எழுந்தார்; சாஸ்திரியார் வீடு சென்று பார்த்தார். அங்கே அம்பிகை உலக மாதா, சாஸ்திரியாருடைய பூஜையில் கொஞ்சி விளையாடிக்கொண்டிருந்தாள். "உன் படைப்பைப் பார்த்தாயா?" என்று கேட்டார் அந்தப் பெரியவர் "அப்படிச் சொல்லாதீர்கள். நீங்கள் இதற்குத் தெய்வக் களையை ஊட்டிய மகா முனிவர்; நான் ஆசாபாசத்தில் அகப்பட்டு உழலுபவன்.”

"அப்படிச் சொல்லாதே, அப்பா. நீ அவதார புருஷன்.' மேலே அவர் புகழுரையைக் கேளாமல் புறப்பட்டு விட்டார் கலைஞர். அன்று அவர் யார் சொல்லியும் கேளாமல் அவசர காரியமாக வெளியூர் புறப்பட்டுப் போனார்.

3

ன்று வெள்ளிக்கிழமை, நவமி. சரஸ்வதி பூஜை. வழக்கம்போல் பூஜைக்கு ஏற்பாடு செய்துகொண்டிருந்தார் சாஸ்திரியார்; அவருடைய மனைவி அருகில் இருந்து புத்தகங்களை அடுக்கினாள்.

"அம்பிகை எவ்வளவு மூர்த்திகரத்துடன் இருக்கிறாள்! லட்ச ரூபாய் கொடுத்தாலும் இப்படிக் கிடைக்குமா? அரண்மனையில் ராஜ ராஜாக்களிடம் இருக்க வேண்டியவள் இந்த ராஜராஜேசுவரி. இந்த ஏழையிடம் அகப்பட்டுக் கொண்டிருக்கிறாள். அங்கே இருந்தால் அழகான மண்டபம் ஒன்று செய்து அதில் எழுந்தருளச் செய்து பூஜிப்பார்கள். பரம தரித்திரனாகிய நான் எங்கே போவேன்' என்று சொல்லி வாய் மூடவில்லை; "சாமி!" என்ற குரல் கேட்டது. குரலோடு விசுவகாத ஆசாரியார் ஓர் ஆளின் தலையில் ஒரு பெரிய அட்டைப் பெட்டியை வைத்துக்கொண்டு வந்தார்.

"என்ன அப்பா, புதிய சீர்?" என்று கேட்டார் சாஸ்திரியார்,

"அம்பாள் உத்தரவு பண்ணினாள்" என்று சொல்லிக் கொண்டே அட்டைப் பெட்டியைக் கீழே வைக்கச்செய்து பிரித்து உள் இருப்பதை எடுத்து வைத்தார். -

என்ன ஆச்சரியம் இது! வெள்ளியும் தங்கமும் இழைத்துச் செய்த அற்புத மணிமண்டபம், அம்பிகை எழுந்தருள்வதற்கு இல்லையே என்று ஏங்கினாரே அந்த மண்டபம்.

"அம்பிகை இந்த மண்டபத்தில் எழுந்தருளியிருக்கட்டும்” என்று சொல்லும்போது கலைஞர் தொண்டை கரகரத்தது. -

"இது கனவா?” என்றார் சாஸ்திரியார்.

"இல்லை, கனவுதான். இதை ஏற்றுக்கொண்டு என்னை மன்னித்துவிடுங்கள்.”

"மன்னிப்பா!"

சாஸ்திரியார் விழித்தார். -

தம் உள்ளத்தில் முள்ளாகக் குத்திய ஆயிர ரூபாயைக் கொண்டு இந்த மணிமண்டபத்தை வாங்கி வந்து கொடுத்த பிறகே இலை போட்டுச் சோறு சாப்பிடுவது என்ற விரதத்தை அந்தக் கலைஞர் மேற்கொண்டிருந்தார் என்பதை அவர் உணர்ந்தால் இன்னும் எப்படி விழிப்பாரோ!