குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்/ஆய்வுரை
ஆய்வுரை
குயில்-சஞ்சீவி பர்வதத்தின் சாரல் இரண்டுமே ஒரே யாப்பில்-கலிவெண்பாவில் இயன்றுள்ளன. சொல்லாட்சிகள்-ஏறக்குறைய ஒரே மாதிரியாக-புதுமையாக அமைந்துள்ளன. மிக எளிய நடையில் இயன்றுள்ளன. நல்ல கற்பனைக்கு எடுத்துக் காட்டாக இரண்டுமே அமைந்துள்ளன. படிக்கத் தொடங்கினால் ஒரே மூச்சில் முடிவு வரை படித்துப் பார்த்துவிடும்படியான விரைவு நடையைப் பெற்றுள்ளன. ஒன்று கனவில் தோன்றிய கற்பனையாகவும்: மற்றொன்று மூலிகையில் பிறந்த காட்சியாகவும் அமைந்துள்ளன. எனினும் கதையமைப்பு ஒன்றுக்கொன்று முரண் பட்டதாக-நேர்மாறானதாக அமைந்துள்ளன. குயில்பாட்டு-புராணக்கதை போல் அமைந்துள்ளது.
தேசியக் கவியாகவும் புதுமைக் கவியாகவும், புரட்சிக்காரராகவும் மக்களுக்கு அறிமுகமாகியுள்ள பாரதியார் இது போன்ற ஒரு கதையைப் படைத்ததே-நம் எதிர்பார்ப்புக்கு மாறுபட்டதாக உள்ளது.
காதல் காதல் காதல்
காதல் போயிற் காதல் போயிற்
என்ற வரிகளைப் படிக்கும்போது, காதலுக்கு ஒரு இலட்சியப் பொருளை நாம் ஏற்றிப் பார்க்கிறோம். ஆனால் குயிலின் காதலிலே அந்த இலட்சியக் காதலைப் பார்க்கமுடிவதில்லை. மனிதனையும் மாட்டையும் குரங்கையும் அது வேற்றுமை யில்லாமல் காதலிக்கிறது. இதற்கு வித்தான காரணம் என்று சொல்லி ஒரு முற்பிறப்புக் கதையை உண்டாக்குகிறார் பாவலர். அந்த முற்பிறப்புக் கதையில் பழம் புராணக் கூறே மேலோங்கியிருக்கிறது. குரங்கனோடு வாழ்க்கை நடத்தி விட்டு மாடனிடம் வந்துவிடுவதாக ஆறுதல் கூறும் குயிலி: சேரமான் மகனிடம் ஆறாக் காதல் கொண்டு விடுகிறாள். கொலையுண்டு இறந்த மாடனும் குரங்கனும் பேயாகிக் குயிலியை ஒரு குயிலாக மாற்றி, அதைச் சுற்றிக் கொண்டு திரிவதாக முற்பிறப்புக் கதை கூறும் முனிவர் கூறுகிறார், ஆனால், நடப்பு நிகழ்ச்சியை நோக்கும்போது, குயில்தான் அவர்களை மயக்கிக் காதல் போதையேறச் செய்கிறது . மாடும் குரங்கும் குயிலை ஆட்டிப்படைக்கும் நிகழ்ச்சி ஒன்று கூடக் காணப்படவில்லை, குயில் தான் அவற்றை ஆட்டிப் படைக்கிறது. குயிலுக்கு காதல் ஒரு வேடிக்கை விளையாட்டாக இருக்கிறது. மன உணர்வுகளைத் தூண்டி விட்டு, ஒவ்வொருவரும் தன் மீது மோக மயக்கம் அடைவதை அது வேடிக்கை பார்க்கிறது. இப்படிப்பட்ட குயிலைத் தான் நாம் பார்க்கிறோம்.
எதிரில் இருப்பவரை உயர்த்திப் பேசுவதும்- இல்லாதவரைத் தாழ்த்திப் பேசுவதும்-ஏற்கெனவே இப்படிப் பேசினோமே என்பதைப் பற்றிக் கவலைப் படாமல், அந்தந்த நேரத்திற்கு யார் எதிரில் நிற்கிறார்களோ அவர்களையே உயர்த்துவதும் காதலிப்பதும் குயிலின் இயல்பாக இருப்பதைப் பார்க்கிறோம். கடைசிவரை அது மாயக் குயிலாகவே இருக்கிறதே தவிர, யாராவது ஒருவருக்கு நேயக் குயிலாக இல்லை.
பாரதியார், தம் ஆற்றல் அறிவு திறன் அத்தனையும் கொண்டு சித்திரித்த இத்தக் குயில் இலட்சியக் குயிலாகக் காணப்படவில்லை.
குயில் பாட்டிலே பாரதியாரின் கவியாற்றல் முழுவதும் அழகாக வெளிப்படுகிறது. நுட்பமான நோக்கறிவு சிறப்பாக வெளிப்படுகிறது. இயற்கை வருணனை, தத்துவபோதனை போன்ற கூறுகளெல்லாம் சிறப்பாக அமைந்துள்ளன. ஆனால் இத்தனை சிறப்புக்களும் கூடி மற்றொரு புராணக் கதையையே படைத்து விட்டமைதான் பெருங்குறையாக உள்ளது.
இந்தக் குறையைத் தீர்த்து வைக்கிறார் பாவேந்தர் பாரதிதாசன் சஞ்சீவி பர்வதத்தின் சாரலிலே, பாவேந்தரின் படைப்பு-பகுத்தறிவைப் பரப்பும் ஒரு குறிக்கோளோடு ஆக்கப் பெற்றிருக்கிறது. இராமாயணம் போன்ற பகுத்தறிவுக் கொவ்வாத கதைகளால் நாட்டில் மூடத்தனம் வளர வாய்ப்புண்டே தவிர முன்னேற்றம் அடைய வாய்ப்பில்லை என்பதை அழகாக, இலக்கிய நயத்தோடு எடுத்துக் காட்டுகிறது சாரல்கதை.
எதையும் நம்பும் குப்பன்-நாட்டில் இராமாயணம் போன்ற நலிவு தரும் கதை இருப்பதை அறியாத, நாட்டுணர் வில்லாத குப்பன்-வஞ்சியால் திருத்தப்படுகிறான். வஞ்சியிடம் காதல் கொண்ட குப்பன், தெளிந்த மனம் படைத்த வஞ்சியால் புது மனிதனாகிறான்.
இராமாயணக் கதையிலே கம்பன் திறமை முழுவதும் வெளிப்படுகிறது. நூற்றுக் கணக்கான சந்த விருத்தங்களைப் பாடிய கம்பன், கவியுலகிலே கொடி கட்டிப் பறக்கிறான். பாத்திரப் படைப்பில் அவன் செய்த புதுமை கண்டு பாரெலாம் வியக்கிறது. அவன் கையாண்ட உவமைகள் சொல்லாட்சிகள், கவிதா முத்திரைகள் அனைத்தும் அவனுக்குப் புகழ் சேர்க்கின்றன. ஆனால் அவன் எடுத்துக் கொண்ட கதை இராமாயணம். அந்த இராமாயணம் சிறந்த இலக்கியமாக மதிக்கப்படலாம். ஆனால், நாட்டில் மூடத்தனம் வளருவதற்கு அடிப்படையான ஒரு பழம் குப்பையான கதையாக இருந்துவிட்ட காரணத்தால், கம்பன் கடைசிவரை பழிப்புக்கு ஆளானவனாக இருக்கிறான் . அறிவுலகம் அவனை இந்த நாட்டுக்குத் தீமை செய்தவனாகவே கருதுகிறது. அப்படிப்பட்ட தீய கதையின் கருத்தை எடுத்துக் காட்டி, அதுபோன்ற கதைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, காலத்துக்கேற்ற புத்திலக்கியம் படைக்க வேண்டிய இன்றியமையாமையை எடுத்துக் காட்டிப் படைத்த புதிய இலக்கியத்தின் முன்னோடிதான் சஞ்சீவி பர்வதத்தின் சாரல்.
பாவேந்தர் பாரதிதாசன் சஞ்சீவி பர்வதத்தின் சாரல் கதையைப் படைத்ததன் மூலம் புத்துணர்வு கொண்ட இளம் உள்ளங்களிலெல்லாம் நிலையாக வாழும் இலட்சியக் கவிஞராகத் திகழ்கின்றார்.