உள்ளடக்கத்துக்குச் செல்

குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்/பாரதியும் பாரதிதாசனும்

விக்கிமூலம் இலிருந்து

பாரதியும் பாரதிதாசனும்


பாரதியும் பாரதிதாசனும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள். இருவரும் மிகச் சிறந்த பாவலர்கள். இருவரும் புதுமை நோக்குள்ளவர்கள். புரட்சிக் கருத்துடையவர்கள்.

பாரதி நாட்டு விடுதலைக்காகப் பாடியவர். மக்கள் யாவரும் ஒப்பென்று எண்ணியவர். நடைமுறையில் பொது எண்ணத்தோடு வாழ்ந்தவர். அவருடைய புதுமைக் கருத்துக்களிலே மனத்தைப் பறிகொடுத்து, அவருடைய கூட்டுறவில் இன்பம் கண்டு, அவரை வழிகாட்டியாகக் கொண்டு, இலக்கிய வாழ்வு மட்டுமன்றிப் பொதுவாழ்வும் கொண்டவர் பாவேந்தர் பாரதிதாசன்.

பாரதியிடம் கொண்ட உண்மையான ஈடுபாட்டின் காரணமாகத் தம் பெயரையே பாரதிதாசன் என்று மாற்றி வைத்துக் கொண்டவர். பாரதியின் புரட்சி வழியைப் பின்பற்றிய பாரதிதாசன், பாரதியினும் தீவிரமான சமுதாயப் புரட்சி வழியிலே நடைபோடத் தொடங்கிப் பெரும்புரட்சியாளராக மாறிய நிலையிலும், பாரதியிடம் கொண்டிருந்த மதிப்பில் சிறிதுகூட மாற்றங்கொள்ளவில்லை.

பாரதி எண்ணிக்கூடப்பாராத–புரட்சியின் உயர் நிலையாகிய–தன்மானக் கருத்துக்களைக் கொண்டபோதும் கூட அவர் ‘பாரதிதாசன்’ என்ற தம்பெயரை மாற்றிக்கொள்ளவில்லை.

பறையருக்கும் இங்குதியர் புலையருக்கும் விடுதலை

பரவரோடு குறவருக்கும் மறவருக்கும் விடுதலை

என்று உண்மையான விடுதலையைக் கனவு கண்டு பாடியவன் பாரதி.

ஏழையென்றும் அடிமை யென்றும்
     எவரும் இல்லை சாதியில் இழிவு
கொண்ட மனிதரென்ப

     திந்தியாவில் இல்லையே

என்று சமான வாழ்வைப் பாடியவன் பாரதி.

சுதந்திரம் வந்தால் அது எப்படி இருக்கவேண்டும் என்ற உண்மையான உரிமை வாழ்வைக் கற்பனை செய்து கனவு கண்டவன் பாரதி.

அவனுடைய சுதந்திரப் பள்ளுப் பாட்டு, வெள்ளையனை விரட்டியடித்தபின் இருக்க வேண்டிய பாரதத்தின் உண்மையான படப்பிடிப்பு. பரங்கியரைத் துரத்தியபின் ஏற்றம் போட்டு விடக்கூடிய பார்ப்பனரை ஆதிக்கம் பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய விழிப்புணர்வை சுதந்திரப் பள்ளுப் பாடலில் காண்கிறோம்.

உண்மையான சுதந்திரம், விழிப்புச் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதை சுதந்திரப் பள்ளுப்பாட்டு உணர்த்துகின்றது.

வெள்ளைக்காரனிடமிருந்து விடுதலை பெறுவது மட்டும் சுதந்திரம் என்று பாரதி நினைக்கவில்லை. நம் நாட்டுக்குள்ளேயே நிலவி வருகின்ற நீண்டகால அடிமைப்பழக்கவழக்கமும் தொலைந்து உண்மையான உழைக்கும் வர்க்கம் சுதந்திரம் அடையவேண்டும் என்ற கருத்தினைக் கூறுகின்றான்.

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்—வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்! என்று உழைக்காமல் ஊரை ஏமாற்றித் தின்போரைச் சாடுகின்றான். அவ்வாறு பெற்ற சுதந்திரம் வீணர் அதிகார ஆட்சியில் சிக்கிவிட்டால் அது விழலுக்கு இறைத்த நீராகி விடும் என்பதை உணர்த்துகின்றான்.

விழலுக்கு நீர்பாய்ச்சி மாயமாட்டோம்–வெறும்
     வீணருக்கு உழைத் துடலம் ஓயமாட்டோம்.

எல்லோரும் ஒன்றென்னும்
      காலம் வந்ததே-பொய்யும்
ஏமாற்றும் தொலைகின்ற
      காலம் வந்ததே-இனி
நல்லோர் பெரிய ரென்னும்
      காலம் வந்ததே-கெட்ட
நயவஞ்சக் காரருக்கு

      நாசம் வந்ததே!

என்று ஏமாற்றிப் பிழைக்கும் கூட்டத்துக்குச் சாபம் இடுகின்றான்.

சுதந்திரப் போராட்டம் வெள்ளைக்காரனை எதிர்த்துத் தொடங்கியது. அன்னியனாகிய பரங்கியனை நம்நாட்டை விட்டு அப்புறப்படுத்துவதற்காகத் தொடங்கியது. வெள்ளையனே வெளியேறு எங்கள் நாட்டை நாங்களே ஆள்வோம் என்று பாரத வீரர்கள் ஆர்ப்பரித்து அறப்போர் நடத்திய காலத்தில் சுதந்திரப்பள்ளு எப்படிப் பிறந்திருக்க வேண்டும். முற்றிலும் வெள்ளையனைச் சாடியிருக்கவேண்டும் அல்லவா?

ஆனால் எடுத்த எடுப்பிலேயே

பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே

என்று சுதந்திரப் பள்ளு தொடங்குகின்ற தென்றால், நாட்டில் பார்ப்பன ஆதிக்கம் வேரூன்றியிருந்தது பாரதியாரை எவ்வளவு உறுத்தியிருக்க வேண்டும். முதலில் இந்த அடிகளைச் சொல்லி விட்டுப் பிறகுதான் வெள்ளைப் பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே என்று பாடுகின்றான்.

பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே – வெள்ளைப்
பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே – பிச்சை
ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே – நம்மை

ஏய்ப்போருக் கேவல்செய்யும் காலமும் போச்சே.

என்று உண்மையான சுதந்திரப் பள்ளைப் பாடுகின்றான் இப்படிப்பட்ட உண்மையான சுதந்திரக் கருத்துக் கொண்டிருந்த பாரதியைத் தன் வழிகாட்டியாகக் கொண்டு தன் பெயரையும் பாரதிதாசன் என்று பெயர் மாற்றிக் கொண்ட சுப்புரத்தினம் கடைசிவரை பாரதிதாசனாகவே இருந்தார்.

பாரதியினும் தீவிரமாக அவர் தன்மானக் கொள்கை வீரராக விளங்கினார்.

பாரதியின் குயில் பாட்டை அடியொற்றி அவர்தம் சஞ்சீவி பர்வதத்தின் சாரல் என்ற பாட்டை எழுதுகின்றார். பாரதி கையாண்ட கலிவெண்பா யாப்பிலேயே தம் நூலையும் படைக்கின்றார். அந்தப் பாட்டைத் தொடங்கும்போதே குயில் என்ற சொல்லில்தான் தொடங்குகின்றார். பாட்டின் முதல் அடி குயில் கூவிக் கொண்டிருக்கும் என்றே தொடங்குகின்றது.