குயில் பாட்டு/7. குயிலும் மாடும்

விக்கிமூலம் இலிருந்து

காலைத் துயிலெழுந்து, காலிரண்டு முன்போலே

சோலைக் கிழுத்திட, நான் சொந்தவுணர் வில்லாமே

சோலையினில் வந்துநின்று, சுற்றுமுற்றுந் தேடினேன்.

கோலப் பறவைகளின் கூட்டமெலாங் காணவில்லை.

மூலையிலோர் மாமரத்தின் மோட்டுக் கிளியினிலே ... 5

நீலக் குயிலிருந்து நீண்ட கதை சொல்லுவதும்,

கீழே யிருந்தோர் கிழக்காளை மாடதனை

ஆழ மதியுடனே ஆவலுறக் கேட்பதுவும்,

கண்டேன், வெகுண்டேன், கலக்கமுற்றேன்; நெஞ்சிலனல்

கொண்டேன், குமைந்தேன், குமுறினேன், மெய்வெயர்த்தேன்; ... 10

கொல்லவாள் வீசல் குறித்தேன். இப் பொய்ப்பறவை

சொல்லுமொழி கேட்டதன்பின் 'கொல்லுதலே சூழ்ச்சி' யென

முன்போல் மறைந்துநின்றேன்; மோகப் பழங்கதையைப்

பொன்போற் குரலும் புதுமின்போல் வார்த்தைகளும்

கொண்டு, குயிலாங்கே கூறுவதாம். 'நந்தியே! ... 15

பெண்டிர் மனத்தைப் பிடித்திழுக்கும் காந்தமே!

காமனே! மாடாகக் காட்சிதரும் மூர்த்தியே!

பூமியிலே மாடுபோற் பொற்புடைய சாதியுண்டோ ?

மானுடருந் தம்முள் வலிமிகுந்த மைந்தர் தமை

மேனுயுறுங் காளையென்று மேம்பா டுறப்புகழ்வார். ... 20

காளையர்தம் முள்ளே கனமிகுந்தீர் ஆரியரே!

நீள முகமும், நிமிர்ந்திருக்கும் கொம்புகளும்,

பஞ்சுப் பொதிபோல் படர்ந்த திருவடிவும்,

மிஞ்சுப் புறச்சுமையும், வீரத் திருவாலும்,

வானத் திடிபோல 'மா'வென் றுறுமுவதும், ... 25

ஈனப் பறவை முதுகின்மிசை ஏறிவிட்டால்

வாலைக் குழைத்து வளைத்தடிக்கும் நேர்மையும், பல்

காலம்நான் கண்டு கடுமோக மெய்திவிட்டேன்.

பார வடிவும் பயிலு முடல்வலியும்

தீர நடையும் சிறப்புமே இல்லாத ... 30

சல்லித் துளிப்பறவைச் சாதியிலே நான் பிறந்தேன்.

அல்லும் பகலுநிதம் அற்ப வயிற்றினுக்கே

காடெல்லாஞ் சுற்றிவந்து காற்றிலே எற்றுண்டு,

மூட மனிதர் முடைவயிற்றுக் கோருணவாம்,

சின்னக் குயிலின் சிறுகுலத்தி லேதோன்றி ... 35

என்னபயன் பெற்றேன்? என்னைப் போலோர் பாவியுண்டோ ?

சேற்றிலே தாமரையும் சீழுடைய மீன் வயிற்றில்

போற்றுமொளி, முத்தும் புறப்படுதல் கேட்டிலிரோ?

நீசப் பிறப்பொருவர் நெஞ்சிலே தோன்றிவரும்

ஆசை தடுக்கவல்ல தாகுமோ? காமனுக்கே ... 40

சாதிப் பிறப்புத் தராதரங்கள் தோன்றிடுமோ?

வாதித்துப் பேச்சை வளர்த்தோர் பயனுமில்லை,

மூடமதியாலோ, முன்னைத் தவத்தாலோ,

ஆடவர்தம் முள்ளே அடியாளுமைத் தெரிந்தேன்.

மானுடராம் பேய்கள் வயிற்றுக்குச் சோறிடவும் ... 45

கூனர்தமை ஊர்களிலே கொண்டு விடுவதற்கும்

தெய்வமென நீருதவி செய்தபின்னர் மேனிவிடாய்

எய்தி யிருக்க மிடையினிலே, பாவியேன்

வந்துமது காதில் மதுரவிசை பாடுவேன்;

வந்து முதுகில் ஒதுங்கிப் படுத்திருப்பேன், ... 50

வாலிலடி பட்டு மனமகிழ்வேன், 'மா' வென்றே

ஒலிடுநும் பேரொலியோ டொன்றுபடக் கத்துவேன்,

மேனியுளே உண்ணிகளை மேவாது கொன்றிடுவேன்,

கானிடையே சுற்றிக் கழனியெலாம் மேய்ந்து, நீர்

மிக்கவுண வுண்டுவாய் மென்றசைதான் போடுகையில் ... 55

பக்கத்திருந்து பலகதைகள் சொல்லிடுவேன்,

காளை யெருதரே! காட்டிலுயர் வீரரே!

தாளைச் சரணடைந்தேன். தையலெனைக் காத்தருள்வீர்.

காதலுற்று வாடுகின்றேன். காதலுற்ற செய்தியினை

மாத ருரைத்தல் வழக்கமில்லை என்றறிவேன். ... 60

ஆனாலும் என்போல் அபூர்வமாங் காதல் கொண்டால்,

தானா வுரைத்தலின்றிச் சாரும் வழியுளதோ?

ஒத்த குலத்தவர்பால் உண்டாகும் வெட்கமெலாம்,

இத்தரையில் மேலோர்முன் ஏழையர்க்கு நாணமுண்டோ ?

தேவர் முன்னே அன்புரைக்க சிந்தை வெட்கங் கொள்வ துண்டோ ? ... 65

காவலர்க்குத் தங்குறைகள் காட்டாரோ கீழடியார்?

ஆசைதான் வெட்கம் அறியுமோ? என்றுபல

நேசவுரை கூறி நெடிதுயிர்த்துப் பொய்க்குயிலி

பண்டுபோ லேதனது பாழடைந்த பொய்ப்பாட்டை

எண்டிசையும் இன்பக் களியேறப் பாடியதே; ... 70

காதல், காதல், காதல்;

காதல் போயிற் காதல் போயிற்,

சாதல், சாதல், சாதல்

முதலியன (குயிலின் பாட்டு)

பாட்டு முடியும்வரை பாரறியேன், விண்ணறியேன்;

கோட்டுப் பெருமரங்கள் கூடிநின்ற காவறியேன்!

தன்னை யறியேன்; தனைப்போல் எருதறியேன்;

பொன்னை நிகர்த்தகுரல் பொங்கிவரும் இன்பமொன்றே

கண்டேன், படைப்புக் கடவுளே! நான் முகனே! ... 75

பண்டே யுலகு படைத்தனைநீ என்கின்றார்.

நீரைப் படைத்து நிலத்தைத் திரட்டி வைத்தாய்

நீரைப் பழைய நெருப்பிற் குளிர்வித்தாய்.

காற்றைமுன்னே ஊதினாய் காணரிய வானவெளி

தோற்றுவித்தாய், நின்றன், தொழில்வலிமை யாரறிவார்? ... 80

உள்ளந்தான் கவ்வ ஒருசிறிதுங் கூடாத

கொள்ளைப் பெரியவுருக் கொண்ட பலகோடி

வட்ட வுருளைகள் போல் வானத்தில் அண்டங்கள்

எட்ட நிரப்பியவை எப்போதும் ஓட்டுகின்றாய்;

எல்லா மசைவில் இருப்பதற்கே சக்திகளைப் ... 85

பொல்லாப் பிரமா, புகுத்திவிட்டாய் அம்மாவோ!

காலம் படைத்தாய் கடப்பதிலாத் திக்கமைத்தாய்;

ஞாலம் பலவினிலும் நாடோ றுந் தாம்பிறந்து

தோன்றி மறையும் தொடர்பாப் பல அனந்தம்!

சான்ற உயிர்கள் சமைத்துவிட்டாய், நான்முகனே! ... 90

சால மிகப்பெரிய சாதனைகாண் இஃதெல்லாம்!

தாலமிசை நின்றன் சமர்த்துரைக்க வல்லார் யார்?

ஆனாலும் நின்றன் அதிசயங்கள் யாவினுமே

கானா முதம்படைத்த காட்சிமிக விந்தையடா!

காட்டுநெடு வானம், கடலெல்லாம் விந்தையெனில், ... 95

பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா!

பூதங்க ளொத்துப் புதுமைதரல் விந்தையெனில்

நாதங்கள் நேரும் நயத்தினுக்கு நேராமோ?

ஆசைதருங் கோடி அதிசயங்கள் கண்டதிலே,

ஓசைதரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ! ... 100

செத்தைக் குயில்புரிந்த தெய்விகத்தீம் பாட்டெனுமோர்

வித்தை முடிந்தவுடன், மீட்டுமறி வெய்திநான்

கையினில் வாயெடுத்துக் காளையின் மேல் வீசினேன்.

மெய்யிற் படுமுன் விரைந்துததுதான் ஓடிவிட,

வன்னக் குயில்மறைய மற்றைப் பறவையெலாம் ... 105

முன்னைப்போற் கொம்பு முனைகளிலே வந்தொலிக்க,

நாணமில்லாக் காதல்கொண்ட நானுஞ் சிறுகுயிலை

வீணிலே தேடியபின், வீடுவந்து சேர்நதுவிட்டேன்.

***

எண்ணியெண்ணிப் பார்த்தேன் எதுவும் விளங்கவில்லை.

கண்ணிலே நீர்ததும்பக் கானக் குயிலெனக்கே ... 110

காதற் கதையுரைத்து நெஞ்சங் கதைத்ததையும்,

பேதைநா னங்கு பெரியமயல் கொண்டதையும்,

இன்பக் கதையின் இடையே தடையாகப்

புன்பறவை யெல்லாம் புகுந்த வியப்பினையும்

ஒன்றைப் பொருள்செய்யா உள்ளத்தைக் காமவனல் ... 115

தின்றெனது சித்தம் திகைப்புறவே செய்ததையும்,

சொற்றைக் குரங்கும் தொழுமாடும் வந்தெனக்கு

முற்றும் வயிரிகளா மூண்ட கொடுமையையும்,

இத்தனைகோ லத்தினுக்கு யான்வேட்கை தீராமல்,

பித்தம் பிடித்த பெரிய கொடுமையையும் ... 120

எண்ணியெண்ணிப் பார்த்தேன். எதுவும் விளங்கவில்லை;

கண்ணிரண்டும் மூடக் கடுந்துயிலில் ஆழ்ந்துவிட்டேன்.