உள்ளடக்கத்துக்குச் செல்

குறட்செல்வம்/இறப்பும் பிறப்பும்

விக்கிமூலம் இலிருந்து


40. இறப்பும் பிறப்பும்


மனிதன் ஓயாது உழைக்கும் இயல்பினன். பகல் எல்லாம் உழைக்கின்றான். உழைப்பில் முழு ஆர்வத்துடன், ஈடுபட்டால் ஒரளவே மனிதசக்தி செலவாகும். சூழ்நிலையின் காரணமாக விருப்பமின்றி உழைப்பில் ஈடுபட்டால் நிறைய மனித சக்தி வீணாகிறது. உழைப்பில் இழந்த மனித சக்தியை ஈடுசெய்ய மனிதன் உறங்குகின்றான்.

உறக்கம், அதியற்புதமான மருந்து. உழைப்பில் இழந்த சக்தியை ஈட்டித் தருவதுடன் சோர்வை அகற்றி சுறுசுறுப்பைத் தருகிறது. மனிதன் உறங்கிய பிறகு எழுச்சியுடன் எழுந்திருக்கின்றான். இது இந்தப் பருவுடலைப் பொறுத்த நிகழ்ச்சி முறை.

அதுபோலத்தான் ஆன்மாவும் அதன் நுண்ணுடலும் இப்பிறப்பில் பல் வேறு வகையான வேதனைகளுக்கு ஆளாகிறது. அதில் உயிருக்கு அலுப்பும் சோர்வும் ஏற்படுகிறது. அதனாலேயே பிறப்பைத் துன்பமென வர்ணிக்கின்றனர்.

இந்த ஆன்மநுண்ணுடல் சம்பந்தமான துன்பங்கள் நீங்கவே, மனிதனுக்கு இறப்பு வருகிறது. சிந்தனையிலும் உணர்விலும் கிழடுதட்டித் துன்பத்தில் உழன்று அழுது கொண்டே சாகும் மனிதன் திரும்பவும் கிழடு இல்லாத — இளமை நலன்கள் செறிந்த உடலுடன் தன்னுடைய ஆன்மப் பயணத்தின் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறான். w

ஆனாலும் முன்னைய அத்தியாயத்தின் துன்பச் சார்புகள் சூழ்நிலைக்கு அமுங்கிப் போகும். நினைவிற்கு வாரா முன்னைப் பயணத்தின் பயனாகப் பெற்ற அறிவும் பண்பும் மட்டும் கைகொடுக்கும். மீண்டும் வாழ்ந்து தன்னுடைய இலட்சியப் பயணத்தை அடைகின்றான்.

ஆதலால், ஒரு மனிதன் துன்பச் சூழலில் இறப்பது குறித்து அவ்வளவாக வருந்தவேண்டிய அவசியமில்லை. அஃது அவனுக்கொரு கொடையே; இதனைத் திருவள்ளுவர்,

உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.

என்று கூறுகின்றார். அன்றாட வாழ்க்கையில் உறக்கமும் விழிப்பும் எங்ஙனம் இயல்பாக நடைபெறுகிறதோ அது போன்ற இயல்பானதொன்று மரணமென்பது வள்ளுவர் கருத்து. இதனையே அப்பரடிகளும்,

"துறக்கப் படாத உடலை துறந்துவெம் தூதுவரோடு
இறப்பன் இறந்தால் இருவீசும் பேருவன் ஏறிவந்து
பிறப்பன் பிறந்தால் பிறையணி வார்சடைப் பிஞ்ஞகன்பேர்
மறப்பன் கொலோ என்றென் உள்ளங் கிடந்து மருகிடுமே"

என்று பாடுகிறார்.

இதுபோலவே மிகப் பெரிய அளவில் தோன்றிய உலகம், திரும்பத் திரும்ப, தோன்றுதலுக்கு “இளைப் பொழித்தல்” என்று மாதவச் சிவஞானமுனிவர் கூறுவர். ஆதலால், மரணம் பற்றிக் கவலைப்படுவதை விட வாழ்க்கையைப் பயனுடையதாக்கிக் கொள்ள வேண்டும் என்று கவலைப்பட்டு முயலுதலே, முறையான வாழ்க்கை. ஆதலால், எல்லோருடைய மரணம் பற்றியும் அழுதல் நெறியன்று. முறையாக வாழத் தெரியாதவன் மரணத்திற்கு ஆட்படுதல் மீண்டும் புதிய வாய்ப்பு கிடைத்தற்கு ஏதுவாகும்.

ஆனால், இந்தப் பொதுவிதி நல்லோருக்கல்ல. அவர்கள் வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள். ஆதலால் மரண வாயிலில் அழமாட்டார்கள்; மாறாக மகிழ்வார்கள்.

ஆனால், இந்த நிலத்தியலின் வாழ்க்கைக்கு வித்தென விளங்கும் நல்லவரை இழப்பது குறித்து அழுவார்கள், நாம் சிரிக்க மற்றவர்கள் அழ, வாழ்க்கை முடியுமானால் அது வாழ்வாங்கு வாழ்ந்த வாழ்க்கையே! நாம் அழவும் மற்றவர்கள் சிரிக்கவும் வாழ்க்கை முடியுமானால் அஃது இரங்கத் தக்கது. இத்தகையோரின் மரணமும் வரவேற்கத்தக்கது.