உள்ளடக்கத்துக்குச் செல்

குறட்செல்வம்/பெய்யும் மழை

விக்கிமூலம் இலிருந்து

8. பெய்யும் மழை


"தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்" என்ற திருக்குறள் இன்றைய யுகத்தில் விவாதத்திற்குரிய குறளாக இருக்கிறது. சிறந்த கற்புடைய பெண்ணுக்கு இலக்கணம் வடித்துத் தருவது இந்தக் குறள்.

ஒருவருக்கொருவர் நம்பிக்கையும் கடமைப்பாடும் தாங்கியதே நல்வாழ்வு. இந்த உயரிய வாழ்க்கை நெறியில் உலக மனித சமுதாயம் செல்லும் வரை இன்பமே; எந்நாளும் துன்பமில்லை.

கணவனுக்கு மனைவி நம்பிக்கைக்குரியவளாக இருக்க வேண்டும். மனைவிக்குக் கணவன் நம்பிக்கைக்குரியவனாக இருக்கவேண்டும். நண்பனுக்கு நண்பன் நம்பிக்கைக்குரியவனாக இருக்கவேண்டும். ஏவல் கொள்வோர்—ஏவல் செய்வோர் இவர்களுக்கிடையேயும் நம்பிக்கை நிலவ வேண்டும்.

கடமைப்பாட்டு நெறி உயிர்ப்போடிருக்க வேண்டும். இந் நெறிமுறை பிறழும் காலங்களிலெல்லாம் மனித உலகம் துன்பத்தால் சூழப்படுகிறது. பெண்ணினத்துக் கற்பை மட்டும் பெரிதுபடுத்தியதற்குக் காரணம், பெண்ணிடத்து நம்பிக்கை மோசம் ஏற்படும்பொழுது ஏற்படும் ஏமாற்றமும் பகையும் அளவிடற்கரியதாக யிருப்பதேயாகும். நிலப்பிரபுத்துவ சமுதாயமும், தனியுடைமை ஆதிக்கமும்; பெண் அடிமைத்தனமும் பரவலாக இருப்பதன் காரணமாகப் பெண்ணின் ஒழுக்கக்கேடு மட்டும் பெரிதுப் படுத்தப்படுகிறது. அதனால், மற்ற இனத்திற்குத் தேவை யில்லையென்று கொள்ளக்கூடாது. ஆதலால் மனித சமூகத்தின் எல்லா உறவுகளிலும் நம்பிக்கையும் கடமைப்பாட்டுணர்வும் நிலவ வேண்டும்.

சிறந்த கற்புடைய பெண் தெய்வம் தொழமாட்டாள். தெய்வம் கடவுளாகாது. தெய்வம் என்ற சொல்லைப் பெரும்பாலும் சிறு தெய்வங்கள் என்றே அறிஞர்கள் ஏற்றுவர். கணவனைக் கூட்டுவிக்கும் காமதேவதையைத் தொழுதலையே "பீடன்று" என்று மறுத்தாள் கண்ணகி. காரணம், தெய்வத்தைத் தொழும்பொழுது தன் கணவனின் குற்றத்தைக் கூறித் தொழவேண்டும். தன்னுடைய கணவனின் பழியை மற்றவர் அறியக்கூறுதலும் தூற்றுதலும் கற்புடையப் பெண்ணுக்கு அழகல்ல.

அதனையே, பிறிதோரிடத்தும் திருவள்ளுவர். சொல் காத்தலையும், பெண்ணுக்குக் கடமையாக்கினார், ஆதலால், தெய்வம் தொழுகின்ற பழக்கத்தைக் கற்புடைப் பெண்ணுக்கு திருக்குறள் விளக்குகிறது.

"கொழுநன் தொழுதெழுவாள்" என்பது கற்புடைய பெண்ணின் அடுத்த இலக்கணம். திருக்குறளின் சொல்லமைப்பு ஆழ்ந்த சிந்தனைக்குரியது. "தொழுதல் என்பதற்கு உடலால் செய்யும் வணக்கம் என்பது மட்டும் பொருள் அன்று. உள்ளத்து உணர்வில் ஒன்றாகி—உணர்வு தலைகாட்டும் பொழுதெல்லாம் இனந்தெரியாத பணிவும், பரிவும் கொண்டு வாழ்தலென்றும் பொருள் கொள்ள வேண்டும். "தொழுது எழுவாள்" என்ற சொல்முறை வைப்பு இந்தப் பொருளையே சிறப்பாகத் தருகிறது. உடல் வணக்கம் என்றே பொருள் கொள்வதாயின் "எழுந்து தொழுதல்" என்று முறைவைப்பு இருக்க வேண்டும்.

அடுத்து, உணர்வில் கலந்து ஒன்றான பெண்ணுக்கு கணவனின் இயல்பு, குறை, நிறை, தேவை அனைத்தும் தெரியும். அவனுக்கு எது, எப்பொழுது தேவையோ, அப்பொழுது, அவ்வண்ணம் அவள் துணை செய்வாள்.

வேளாண்மை செய்த ஒருவன் விரும்பியபொழுது மழை பெய்தால் அம் மழையினால் அவனடைந்த வேளாண்மைப் பொருள் பெருக்கமும், மன மகிழ்வும் அளவிடற்கரியன. அதுபோலவே, உற்ற இடத்து உரியவாறு துணை செய்யும் வாழ்க்கைத் துணைவியின் மூலம் கணவன் காரியங்களின் சாதனையைப் பெறுகிறான்; மகிழ்வு கலந்த இன்பமும் பெருகிறான்; புகழும் பீடு நடையும் பெறுகிறான். வேண்டிய பொழுது பெய்யும் மழைபோல வேண்டியபொழுது உதவி செய்வாள். அதிலும் நுட்பமிருக்கிறது. வேண்டாத பொழுது மழை பெய்யக்கூடாது. அதுபோலவே கணவன் வேண்டாதபொழுதும் மேவித் துணை செய்யக்கூடாது. அங்ஙனம் செய்யப்புகின் அடக்கமின்மையாகவும், தன் முனைப்பாகவும் கருதப்பெற்று உறவு கெடும்.

ஆதலால் "பெய்யெனப் பெய்யும் மழை" யென்ற சொற்றொடர், சிந்தனைக்கு இன்பம் தருவது. வேண்டிய பொழுது காலந் தாழ்த்தாமலும் உடனடியாகப் பெய்யும் மழையும் சிறப்புக்குரியது. அதுபோலவே கணவனுக்கு வேண்டியபொழுது உடனடியாகத் துணை செய்யாமல் "இதோ வருகிறேன்" என்றோ "இப்பொழுதென்ன அவசரம்?" என்றோ நீட்டித்துக் காலந்தாழ்த்தாமல் உடனே விரைந்து உதவி செய்யும் பெண்ணே உயரிய வாழ்க்கைத் துணைவியாவாள்.

சிறு தெய்வங்களைத் தொழாது கணவனுடன் ஒன்றிய உணர்வால் ஒன்றித்து வாழ்தலின் காரணமாக உண்ர்வு நிறைந்த உறக்கத்தினின்று கண் துயில் நீங்கியவுடனேயே கணவனை உள்ளத்தால் நினைந்து, உணர்வால் தொழுது எழுகின்ற பெண், வேளாண்மை செய்தவன் வேண்டியவாறு பெய்யும் மழை வேளாளனுக்குப் பயன்படுவதைப் போல இந்தப் பெண், தன்னைக்கொண்ட கணவனுக்கு ஒப்பற்ற வாழ்க்கைத் துணைவியாக விளங்குவாள். -

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.