குறுந்தொகை 11 முதல் 20 முடிய

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

பாடல்: 11 பாலை (கோடீரிலங்கு)[தொகு]

தலைவி கூற்று

கோடீ ரிலங்கு வளை ஞெகிழ நாடொறும்
பாடில கலிழுங் கண்ணொடு புலம்பி
ஈங்கிவ ணுறைதலு முய்குவ மாங்கே
எழுவினி வாழியென் னெஞ்சே முனாது
குல்லைக் கண்ணி வடுகர் முனையது
பல்வேற் கட்டி நன்னாட் டும்பர்
மொழிபெயர் தேஎத்த ராயினும்
வழிபடல் சூழ்ந்திசி னவருடை நாட்டே.

என்பது தலைமகள் தன் நெஞ்சிற்குச்சொல்லுவாளாய்த் தோழி கேட்பச் சொல்லியது.

பாடியவர்
மாமூலனார்.

செய்தி[தொகு]

தலைமகன் பிரிந்திருந்தபோது தலைமகள் தன் நெஞ்சிலுள்ளதைத் தோழியிடம் வெளிப்படுத்துகிறாள்.

தன் நெஞ்சுக்குச் சொல்கிறாள். நெஞ்சே! இங்கு இருந்தது போதும். அவர் சென்றுள்ள நாட்டை இனி வழிபடு. (அந்த நாடு அவரைக் காப்பாற்றட்டும்) சங்கை அறுத்துச் செய்த வளையல்கள் நழுவுகின்றன. ஒவ்வொரு நாளும் கண்கள் தூங்கவில்லை. இவற்றையே எண்ணிப் புலம்பியது போதும். இனி புறப்படு. அவர் சென்றுள்ள நாட்டை வழிபடு.

கட்டி என்பவன் சிறந்த வேல்வீரன். அவன் குல்லைப்பூ மாலையணிந்த வடுகரை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கிறான். அது அவருக்கு மொழி தெரியாத தேசம். அங்கு அவர் சென்றுள்ளார். (போர் முடியவேண்டும் என்று நீ அந்த நாட்டை வழிபடு)

வரலாறு[தொகு]

இந்தக் கட்டி என்னும் அரசன் சுமார் 345-525 ஆண்டுகளில் வாணவாசியில் இருந்துகொண்டு ஆட்சிபுரிந்துவந்த கடம்பர் இனத்தவரின் மூதாதை. en.wikipedia.org/wiki/Kadamba_Dynasty

பாடல்: 12 (எறும்பி)[தொகு]

பாலை - தலைவி கூற்று

எறும்பி யளையிற் குறும்பல் சுனைய
உலைக்க லன்ன பாறை யேறிக்
கொடுவி லெயினர் பகழி மாய்க்கும்
கவலைத் தென்பவவர் சென்ற வாறே
அதுமற் றவலங் கொள்ளாது
நொதுமற் கழறுமிவ் வழுங்க லூரே.

என்பது ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

பாடியவர்
ஓதலாந்தையார்

செய்தி[தொகு]

கிழவன் பிரிவைப் கிழத்தி தாங்கமாட்டாள் என்று கவலைப்பட்ட தோழிக்குக் கிழத்தி சொல்கிறாள்.

அவர் பிரிவை நான் தாங்கிக்கொள்வேன். அவர் சென்ற ஊர் எப்படிப்பட்டது என்பதை ஊரார் சொல்வதை எண்ணும்போதுதான் என் மனம் வேதனைப்படுகிறது. கறையான் புற்றைப் போன்று ஆழமுள்ள சிறிய சுனைகள் பல இருக்குமாம். கொல்லன் உலைக்களத்தில் இரும்பை அடிக்கும் பணைக்கல்லைப் போன்ற பாறைகளின்மேல் ஏறி எயினர் கொடிய அம்புகளை எய்யும் மலைப்பிளவுகள் இருக்குமாம். ( அவர் சுனையில் தவறி விழுந்துவிடுவாரோ? அவர்கள் எய்யும் அம்பு அவர்மீது தவறிப் பாய்ந்துவிடுமோ? - இதுதான் கவலை என்கிறாள் கிழத்தி)

பாடல்: 13 (மாசறக்)[தொகு]

குறிஞ்சி - தலைவி கூற்று

மாசறக் கழீஇய யானை போலப்
பெரும்பெய லுழந்த விரும்பிணர்த் துறுகல்
பைத லொருகலை சேக்கு நாடன்
நோய்தந் தனனே தோழி
பசலை யார்ந்தநங் குவளையங் கண்ணே.

என்பது தலைவன் தோழியிற் கூட்டங் கூடி ஆற்றும் வகையான் ஆற்றுவித்துப் பிரிய, வேறுபட்ட கிழத்தி தோழிக்கு உரைத்தது.

பாடியவர்
கபிலர்

செய்தி[தொகு]

பசலை என்பது கண்ணிலும் மேனியிலும் தோன்றும் பசபசப்பு
பைதல் என்னும் நடை மலைப்பாறையில் மான் ஏறுவது போன்றது

அவன்(நாடன்) அவளோடு இருந்தான். நன்றாகப் பசப்பு மொழிகளைக் பேசிவிட்டுப் பிரிந்து சென்றான். அவன் பசப்பியதை அவள் எண்ணும்போது அவள் கண்கள் அவனைத் தேடுகின்றன. தேடும் கண்கள் ஒளி மங்கிப் பசலை பாய்ந்து கிடக்கின்றன. - இப்படிச் சொல்கிறாள் அவள் (தலைவி)

அழுக்கு நீங்கக் குளிப்பாட்டிவிட்ட யானையைப் போல் அடுக்கடுக்காக இணைந்து கிடக்கும் பெரிய மலைப்பாறை நல்ல மழையில் நனைந்திருக்கும்போது அதில் கலைமான் பைதல்நடை போட்டு ஏறிப் படுத்திருக்கும். அந்த நாட்டுக்காரன் அவன்.

அவன் யானை. அவள் மான். - இவை இப்பாடலில் சுட்டப்பட்ட இறைச்சிப்பொருள்.

பாடல்: 14 (அமிழ்துபொதி)[தொகு]

குறிஞ்சி - தலைவன் கூற்று

அமிழ்துபொதி செந்நா வஞ்ச வந்த
வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி யரிவையைப்
பெறுகதில் லம்ம யானே பெற்றாங்
கறிகதில் லம்மவிவ் வூரே மறுகில்
நல்லோள் கணவ னிவனெனப்
பல்லோர் கூறயா நாணுகஞ் சிறிதே.

என்பது "மடன்மா கூறு மிடனுமா ருண்டே" (தொல்காப்பியம்:களவு,11) என்பதனால் தோழி குறை மறுத்துழித் தலைமகன் மடலேறுவல் என்பதுபடச் சொல்லியது.

பாடியவர்
தொல்கபிலர்.

செய்தி[தொகு]

அவளது வாய் அவனுக்கு அமிழ்தம். அவள் நாக்கு அவனுக்குச் செம்மையானது. சொன்ன சொல் தவறாத சில சொற்களை மட்டுமே பேசும். சின்மொழி பேசும்போது வரிசைபட்டுக் கிடக்கும் அவளது பற்கள் தெரியும். (சிரித்துப் பேசுவாள்) ஒருநாள் அவன் அவளிடம் இருந்தான். மீண்டும் அவளை அடைய அவளது தோழியின் துணையை நாடினான். தோழி உதவ மறுத்தாள். பனைமட்டையால் செய்த மடல் மேலே ஏறிக்கொண்டு உன் ஊருக்கே வருவேன். அப்போது ஊரிலுள்ளவர்கள் அனைவருக்கும் உண்மை தெரியவரும். தெருவெல்லாம் இந்த நல்லவளின் கணவன் இவன் என்று பேசுவர். அதைக் கண்டு எனக்குக்கூட அவளைப் போல நாணம் சிறிது வரும். என்றாலும் இந்த வழியில் நான் என்னவளைப் பெறுவது உறுதி. - இப்படி அவன் தோழியிடம் சொல்லி அச்சுறுத்துகிறான்.

பாடல்: 15 (பறைபடப்)[தொகு]

பாலை - செவிலித்தாய் கூற்று

பறைபடப் பணில மார்ப்ப விறைகொள்பு
தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிய
நாலூர்க் கோசர் நன்மொழி போல
வாயா கின்றே தோழி யாய்கழற்
சேயிலை வெள்வேல் விடலையொடு
தொகுவளை முன்கை மடந்தை நட்பே.

என்பது, உடன்போயினபின்றைத் தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றாள்; நிற்பச் செவிலித்தாய் நற்றாய்க்கு அறத்தொடு நின்றது.

பாடியவர்
ஒளவையார்.

செய்தி[தொகு]

அவள் தான் பிறந்த வீட்டை விட்டுவிட்டு அவனோடு போய்விட்டாள். இதனை அவள் தோழி அவளை வளர்த்த நற்றாய்க்கும், நற்றாய் அவளைப் பெற்ற தாய்க்கும் சொல்லுகின்றனர்.

கோசர் அரசனின் வரியைத் தண்ட ஊரின் பொதுமன்றத்தில் கூடிய செய்தி போல அவள் அவனோடு கொண்டிருந்த நட்புறவு எல்லாருக்கும் தெரிந்துவிட்டது.

வரலாறு[தொகு]

கோசர் குடியினரில் ஒரு பிரிவினர் நாலூர்க் கோசர். நாலாப்பக்கத்து ஊர்களுக்கும் சென்று தம் அரசனுக்காக வரி தண்டுவது அவர்களது தொழில். ஊரின் பொது இடமாக விளங்கிய பொதியில் என்னுமிடத்தில் இருந்துகொண்டு அவர்கள் வரி தண்டுவர்.

பாடல்: 16 (உள்ளார்)[தொகு]

பாலை - தோழி கூற்று

உள்ளார் கொல்லோ தோழி கள்வர்தம் (கள்வர் என்பதற்கு வேறு பாடம் கானவர்)
பொன்புனை பகழி செப்பங் கொண்மார்
உகிர்நுதி புரட்டு மோசை போலச்
செங்காற் பல்லி தன்றுணை பயிரும்
அங்காற் கள்ளியங் காடிறந் தோரே.

என்பது, பொருள்வயிற் பிரிந்த இடத்துத் தலைமகள் ஆற்றாமை கண்டு தோழி கூறியது.

பாடியவர்
பாலைபாடிய பெருங்கடுங்கோ.

செய்தி[தொகு]

அவர் கள்ளிக் காட்டில் செல்லும்போது என்னை நினைக்கமாட்டார் போலிருக்கிறது. அதனால்தான் நம் வீட்டில் ஆண்பல்லி தன் பெண்பல்லியை அழைப்பதற்காக ஓசை எழுப்பும் ஒலி கேட்கிறது - தலைவனைப் பிரிந்த தலைவி தன் தோழியிடம் இவ்வாறு கூறுகிறாள்.

பழக்கம்[தொகு]

கானவர் என்னும் பாலைநில மக்கள் தம் அம்புகளைத் தம் விரல் நகத்தில் புரட்டித் தீட்டுவர். அவர்கள் தீட்டும் ஓசை போலப் பல்லி படும்(கத்தும்)

பாடல்: 17 (மாவென)[தொகு]

பாலை - தலைவன் கூற்று
மாவென மடலு மூர்ப பூவெனக்
குவிமுகி ழெருக்கங் கண்ணியுஞ் சூடுப
மறுகி னார்க்கவும் படுப
பிறிது மாகுப காமங்காழ்க் கொளினே.

என்பது, தோழியிற் கூட்டம் வேண்டிப் பின்னின்ற தலைமகன் தோழி குறைமறாமல் கூறியது.

பாடியவர்
பேரெயின் முறுவலார்.

செய்தி[தொகு]

அவளிடம் சொல்லி அழைத்துவா என்று அவன் தோழியிடம் கூறும்போது தோழி மறுக்காமல் இருக்க இச் செய்தியைச் சொல்கிறான். அழைத்துவராவிட்டால் மடலேறுதல் ஊர்வழக்கம் என்று சொல்லி அச்சுறுத்துகிறான்.

வழக்கம்[தொகு]

மடலேறுதல்; மடல் என்பது இங்குப் பனைமட்டையைக் குறிக்கும். பனைமட்டைகள் கறுக்குகள் கொண்டவை. பல்லுப் பலாக இருக்கும் அந்தக் கறுக்குகள் உடம்பில் படும்போது கிழித்து இரத்தம் வரும். இந்தப் பனைமட்டைகளால் குதிரை உருவம் செய்வர். அதில் தலைவன் ஏறிக்கொள்வான். தோழர் குதிரையை இழுத்துக்கண்டு தலைவி வாழும் ஊரில் தெருத்தெருவாகச் செல்வர். தலைவன் தான் விரும்பும் தலைவியின் பெயர் எழுதிய ஓவியம் ஒன்றை வைத்திருப்பான். அதனைப் பார்த்த ஊர்மக்கள் தலைவன் தலைவி உறவைப் பற்றிப் பேசுவர். அவனுக்கு அவளை மணம் முடிக்குமாறு அவளது பெற்றோரிடம் கூறுவர்.

பாடல்: 18 (வேரல்)[தொகு]

குறிஞ்சி-தோழி கூற்று
வேரல்வேலி வேர்க்கோட் பலவின்
சார னாட செவ்வியை யாகுமதி
யாரஃ தறிந்திசி னோரே சாரற்
சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள்
உயிர்தவச் சிறிதே காமமோ பெரிதே.

என்பது, இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகனைத் தோழி எதிர்ப்பட்டு வரைவு கடாயது.

பாடியவர்
கபிலர்

செய்தி:மூங்கிலை வேலியாகக் கொண்ட மலைநிலம். அங்கே, வேரிலுள்ள கொம்புகளில் பலாப்பழங்கள் தொங்குகின்ற மலைநாட்டுத் தலைவனே! விரைவில் தலைவியை மணம் செய்துகொள்ளும் காலத்தை உண்டாக்கிக் கொள்வாயாக! உன்னைத் தவிர யாரால் தலைவியின் நிலையை அறிந்துகொள்ள முடியும்? மலையிலே, சிறிய கொம்பிலே பெரிய பலாப்பழம் தொங்கிக் கொண்டிருப்பதுபோல, தலைவியின் உயிரோ மிகச்சிறியது; அவள் உன்மேல் கொண்ட விருப்பமோ பெரியது.

பாடல்: 19 (எவ்வி)[தொகு]

மருதம் - தலைவன் கூற்று

எவ்வி யிழந்த வறுமையாழ்ப் பாணர் (வறுமையர் பாணர்)
பூவில் வறுந்தலை போலப் புல்லென்
றினைமதி வாழிய நெஞ்சே மனைமரத்
தெல்லுறு மௌவ னாறும்
பல்லிருங்கூந்தல் யாரளோ நமக்கே.

என்பது, உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் சொல்லியது.

பாடியவர்
பரணர்.

செய்தி[தொகு]

பரத்தையோடு வாழ்ந்தவன் இல்லம் மீண்டான். தலைவி ஊடினாள். தலைவன் ஏதேதோ சொல்லி உணர்த்திப் பார்த்தான். அவளது ஊடல் தணிந்தபாடில்லை. 'இவள் யார்? என்ன உறவினள்' என்று சொல்லிக்கொண்டு வதங்குகிறான்.

வழக்கம்[தொகு]

மௌவல் என்பது மரமல்லிகைப் பூ. இதன் மொட்டுகள் இரவு விடியும்போது பூக்கும். மகளிர் அதனைத் தலையில் அணிந்துகொள்வர்.

வரலாறு[தொகு]

எவ்வி என்பவன் பாணர்களைப் பேணும் சிறந்த வள்ளல். அவன் இறந்தபோது பாணர் மகளிர் பூச்சூடாமல் இருந்து தம் இரங்கலைத் தெரிவித்தனர். மனைவியை அடையமுடியாத கணவன் நெஞ்சம் எவ்வியை இழந்த பாணர் நெஞ்சம் போலக் கலங்கிற்றாம்.

பாடல்: 20 (அருளுமன்பு)[தொகு]

பாலை - தலைவி கூற்று

அருளு மன்பு நீ்க்கித் துணைதுறந்து
பொருள்வயிற் பிரிவோ ருரவோ ராயின்
உரவோ ருரவோ ராக
மடவ மாக மடந்தை நாமே.

என்பது, செலவுணர்த்திய தோழி்க்குக் கிழத்தி உரைத்தது.

பாடியவர்
கோப்பெருஞ்சோழன்.

செய்தி[தொகு]

தலைவன் தான் பொருள் தேடச் செல்லப்போவதைத் தோழியிடம் சொன்னான். அதனைத் தோழி தலைவியிடம் சொன்னாள். அதைக் கேட்ட தலைவி தோழியிடம் சொல்கிறாள்.

மனைவியைத் தனியே விட்டுவிட்டுப் பொருள் தேடச் செல்வோர் யாரிடத்திலும் அன்போ, அருளோ இல்லாதவர். அவர்கள் நெஞ்சுரம் பெற்றவர்கள். நம்மை விட்டுப் பிரியும் அவரும் அத்தகைய உரம் பெற்றவர்தான். அந்த உரவோர் உரவோராகவே இருந்துவிட்டுப் போகட்டும். நாமெல்லாம் மடமைத் தன்மை உடைய மடவோர். மடவோர் மடவோராகவே இருந்துவிடுவோம்.

(மனைவியைத் துறப்பவர் துறவி. துறவி அருள் உடையவர். நம்முடைய இவர் பொருள்மீது பற்றுடையவர் ஆதலால் துறவியும் இல்லை. அருளும் இல்லை. அன்பு என்பது உயிர்கள்மீது காட்டும் உறவு. இவர் நம் உறவைத் துறப்பதால் அன்புடையவரும் அல்லர்)