குறுந்தொகை 21 முதல் 30 முடிய
பாடல்: 21 (வண்டுபடத்)
[தொகு]முல்லை - தலைவி கூற்று.
- வண்டுபடத் ததைந்த கொடியிண ரிடையிடுபு
- பொன்செய் புனையிழை கட்டிய மகளிர்
- கதுப்பிற் றோன்றும் புதுப்பூங் கொன்றைக்
- கானங் காரெனக் கூறினும்
- யானோ தேறேனவர் பொய்வழங் கலரே.
என்பது, பருவம் வருந்துணையும் ஆற்றுவித்த தோழி, "அவர் வரக்குறித்த பருவ வரவின்கண் இனி ஆற்றுவிக்குமாறு எவ்வாறு?" என்று தன்னுள்ளே கவன்றாட்கு, அவளது குறிப்பறிந்த தலைமகள், "கானம் அவர் வருங்காலத்தைக் காட்டிற்றாயினும், யான் இது கார்காலமென்று தேறேன், அவர் பொய்கூறாராகலின்" எனத் தான் ஆற்றுவல் என்பதுபடச் சொல்லியது.
- பாடியவர்
- ஓதலாந்தையார்.
செய்தி
[தொகு]கார்காலம் வரும்போது திரும்பிவிடுவேன் என்று சொல்லிவிட்டு அவன் பொருள் தேடும்பொருட்டு அவளை விட்டுவிட்டுப் பிரிந்து சென்றான். கார்காலம் வந்துவிட்டது. அவன் வரவில்லை. தலைவியைத் தேற்றுவது எப்படி என்று தோழி கலங்குகிறாள். தோழியின் கலக்கத்தைத் தலைவி தெரிந்துகொண்டு கவலைப்படாதே அவர் பொய் சொல்லமாட்டார். கான்றை மலர் பூத்து இது கார்காலம் என்று காட்டினாலும் இதனைக் கார்காலம் என்று நம்பமாட்டேன் என்கிறாள்.
(தலைவிக்கும் இது கார்காலம் என்பது தெரியும். நான் அவர் வரும்வரையில் பொறுத்துக்கொள்வேன் என்பதை நாகரிகமாகச் சொல்லும் நயம் இது)
அணிகலன்
[தொகு]கதுப்பு என்பது அக்கால மகளிர் அணிந்திருந்த ஒருவகை அணிகலன். இதனை இக்காலத்தில் முத்துச்சரம் என்பர். இது பொன்னால் செய்யப்பட்ட கம்பியில் கோக்கப்பட்டது. இதனை மகளிர் கழுத்தில் அணிந்துவொள்வர். கொன்றைப்பூ இந்தக் கதுப்பு என்னும் அணிகலன் போலப் பூத்திருந்ததாம். அத்துடன் மகளிர் இலையும் பூவுமாக இருந்த கொத்துகளால் கட்டிய மாலையும் அணிந்திருந்தார்களாம். கொன்றை இலைகள் இந்த மாலை போல இருந்தனவாம்.
பாடல்: 22 (நீர்வார்)
[தொகு]பாலை - தோழி கூற்று
- நீர்வார் கண்ணை நீயிவ ணொழிய
- யாரோ பிரிகிற் பவரே சாரற்
- சிலம்பணி கொண்ட வலஞ்சுரி மராஅத்து
- வேனி லஞ்சினை கமழும்
- தேமூ ரொண்ணுத னின்னொடுஞ் செலவே.
என்றது, செலவுக் குறிப்பறிந்து ஆற்றாளாகிய கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது.
- பாடியவர்
- சேரமானெந்தை
செய்தி
[தொகு]அவன் பொருளுக்காகப் பிரிந்து செல்வதைத் தலைவி ஏற்கவில்லை. அவளது தோழி அவன் சென்றுவர ஒப்பதல் தருமாறு வற்புறுத்துகிறாள்.
கண்ணீர் வடிக்கும் உன்னை இங்கே விட்டுவிட்டு யார்தான் பிரியவல்லவர்? என்றாலும் உன்னை அழைத்துக்கொண்டு செல்லமுடியுமா? - என்கிறாள் தோழி.
செடியினம் - மரா மரம்
[தொகு]மரா மரத்தின் நெற்றுகள் சிலம்பு போல் ஒலிக்குமாம். அடிமரம் முறுக்கிக்கொண்டு வளர்ந்திருக்குமாம். வேனில் காலத்தில் அது சினை அரும்பிப் பூக்குமாம். அதன் பூமணம் போலத் தலைவியின் நெற்றி மணந்ததாம்.
பாடல்: 23 (அகவன்மகளே)
[தொகு]குறிஞ்சி - தோழி கூற்று
- அகவன் மகளே அகவன் மகளே
- மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல்
- அகவன் மகளே பாடுக பாட்டே
- இன்னும் பாடுக பாட்டே அவர்
- நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே.
என்பது, கட்டுக்காணிய நின்றவிடத்துத் தோழி அறத்தொடு நின்றது.
- பாடியவர்
- ஒளவையார்.
செய்தி
[தொகு](அகவல் மகள் என்பவள் குறி சொல்லும் பெண். அவள் குறி சொல்லிக்கொண்டே பாடும் பாட்டுதான் அகவல் ஓசை. ஆசிரியப்பா அகவல் ஓசையால் பாடப்படும்.)
(அகவல் மகள் குறி சொல்லத் தொடங்கும்போது முதலில் முருகளையும், அவன் குடிகொண்டுள்ள மலையையும் வாழ்த்திப் பாடிவிட்டுதான் குறி சொல்லத் தொடங்குவாள்.) அவனையே நினைத்துக்கொண்டிருக்கும் அவளது உடலிலும் உள்ளத்திலும் மாறுபாடு காணப்படுகிறது. காரணம் என்னவென்று குடும்பத்தார் குறிக்காரியிடம் கேட்கின்றனர். குறிக்காரி முருகனது மலையை வாழ்த்துகிறாள். அந்த மலைவாழ்த்து தலைவியின் உள்ளத்திலிருக்கும் தலைவனை வாழ்த்துவது போல் அமைந்துவிடுகிறது. அதனைக் கேட்ட தோழி அவன் குன்றத்தைப் பாடிய பாட்டை இன்னும் பாடுக என்கிறாள். (இவ்வாறு இவள் சொல்வதிலிருந்து தலைவியின் சுற்றத்தார் தலைவியின் தலைவனைத் தெரிந்துகொள்வார்களாம்)
விலங்கினம் - மனவு
[தொகு]- மனவு என்பது முள்ளம்பன்றி. அதன் முள் அதன் உடலில் படிந்திருக்கும். அதுபோல் பெண்ணின் கூந்தல் படிந்தது என்பது அரிய உவமை.
வழக்கம்
[தொகு]- அகவல்மகள் என்னும் குறிக்காரி குறிசொல்லத் தொடங்கும்போது முருகனையும் அவனது மலையையும் வாழ்த்துவாள். (அவன்மேல் ஆணை, அவன் வாக்கால் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டுத் தன் குறியைச் சொல்லத் தொடங்குவாள்.)
பாடல்: 24 (கருங்கால்)
[தொகு]முல்லை - தலைவி கூற்று
- கருங்கால் வேம்பி னொண்பூ யாணர்
- என்னை யின்றியுங் கழிவது கொல்லோ
- ஆற்றய லெழுந்த வெண்கோட் டதவத்
- தெழுகுளிறு மிதித்த வொருபழம் போலக்
- குழையக் கொடியோர் நாவே
- காதல ரகலக் கல்லென் றவ்வே.
என்பது, பருவம் கண்டு ஆற்றாளாகிய கிழத்தி உரைத்தது.
- பாடியவர்
- பரணர்.
செய்தி
[தொகு]வேப்பம் பூ பூத்திருக்கிறது. (வேனில் காலமே வந்துவிட்டது) அவர் இல்லாமல் நான் தனித்திருக்கும் காலமாகவே அது கழிந்துவிடுமோ? என் காதலர் பிரிந்துள்ளார். ஊரே 'கல்' என்று (கலகல வென்று) பேசுகிறது. அவர்கள் நாக்கு அருகிப் போகட்டும். ஆற்றங்கரையில் வெண்ணிற கிளையில் பழுத்திருக்கும் ஒரு அத்திப் பழத்தை ஏழு குளிறுகள் மிதித்துத் தின்னாமல் அழுகுமாறு போல அழுகிப் போகட்டும். - என்கிறாள் தலைவி.
தலைவி - அத்திப்பழம். ஊரார் - குளிறுகள் என்பன இறைச்சிப்பொருளால் கருத்தை உணர்த்தின.
அத்திமரம்
[தொகு]அத்திமரம் ஆற்றங்கரையில் மிகுதியாக வளரும். மரமும் கிளையும் வெண்மையாக இருக்கும். பூக்காது. இலைகளுக்கிடையே காய்க்காது. அடிமரத்திலும் கிளைகளிலும் காய்த்துப் பழுக்கும். அத்திக் காய்களைச் சமைத்து உண்பர். பழங்களை அணில் விரும்பி உண்ணும். மக்களும் பறித்து உண்பர்.
குளிறு
[தொகு]குளிறல் = குதித்து ஓடுதல். குதித்து ஓடும் அணில் குளிறு.
பாடல்: 25 (யாருமில்லைத்)
[தொகு]குறிஞ்சி - தலைவி கூற்று
- யாரு மில்லைத் தானே கள்வன்
- தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ
- தினைத்தா ளன்ன சிறுபசுங் கால
- ஒழுகுநீ ராரல் பார்க்கும்
- குருகு முண்டுதான் மணந்த ஞான்றே.
என்பது, வரைவு நீட்டித்தவிடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
- பாடியவர்
- கபிலர்.
செய்தி
[தொகு]என்னைத் திருடிக்கொண்ட கள்வன் வேறு யாரும் இல்லை. அவன்தான். இப்போது அவன் தான் கள்வன் அல்லன் என்பான் போலக் காலம் கடத்துகிறான். அவனே திருடிவிட்டு அவனே இல்லை என்றால் நான் என்ன செய்வேன். அவன் என்னை ஆற்றங்கரையில் கள்ளத்தனமாகத் தழுவி உறவு கொண்டபோது ஆற்றுவெள்ளத்தில் வரும் ஆரல் மீனுக்காக அங்கே காத்துக்கொண்டிருந்த குருகுதான் அவன் என்னை உண்டமைக்குக் கரி(சாட்சி) - இவ்வாறு தலைவி தோழியிடம் கூறுகிறாள்.
குருகு
[தொகு]குருகின் கால்கள் தினை விளையும் பயிரின் தாள்போல் மெலிந்து உயரமாக இருக்கும்.
பாடல்: 26 (அரும்பற)
[தொகு]குறிஞ்சி - தோழி கூற்று
- அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கை
- மேக்கெழு பெருஞ்சினை யிருந்த தோகை
- பூக்கொய் மகளிரிற் றோன்று நாடன்
- தகாஅன் போலத் தான்றீது மொழியினும்
- தன்கண் கண்டது பொய்க்குவ தன்றே
- தேக்கொக் கருந்து முள்ளெயிற்றுத் துவர்வாய்
- வரையாடு வன்பறழ்த் தந்தைக்
- கடுவனு மறியுமக் கொடியோனையே.
என்பது, நற்றாயுஞ் செவிலித் தாயும் தலைமகளது வேறுபாடுகண்டு, இஃது எற்றனானாயிற்றென்று கட்டுவிச்சியை வினவிக் கட்டுக்காண்கின்ற காலத்துத் தலைமகளது வேறுபாட்டிற்குக் காரணம் பிறிதோர் தெய்வம் என்று கூறக்கேட்டுத் தோழி அறத்தொடு நின்றது.
- பாடியவர்
- கொல்லன் அழிசி
செய்தி
[தொகு]அவன் தொடர்பால் அவள் உடலிலும், உணர்விலும் மாறுபாடு. தலைவின் இந்த மாறுபாட்டுக்குக் காரணம் என்ன என்று அவளைப் பெற்ற தாயும், அவளை வளர்த்த செவிலித் தாயும் கட்டுவிச்சி என்னும் குறிக்காரியைக் கேட்கின்றனர். இனி மறைத்துப் பயனில்லை என்பதை உணர்ந்த தலைவியின் தோழி உண்மையைப் பக்குவமாக வெளிப்படுத்துகிறாள்.
அவன்(தலைவன்) தகாதவன் போலத் தீய பொய் சொன்னாலும், அவன் என்னை எடுத்துக்கொண்டபோது அங்கு விளையாடிய குரங்குக் குட்டியின் தந்தை கடுவனுக்கு உண்மை தெரியும் - என்கிறாள் தோழி.
குரங்குக் குட்டி இனிய மாம்பழத்தைத் தன் சிவந்த வாயிலுள்ள முள் போன்ற பற்கள் தெரியக் கடித்துத் தின்றுகொண்டு வரையில் விளையாடிக்கொண்டிருந்தது. (ஒருவேளை அது பார்க்காமல் இருந்திருக்கலாம். ஆனால்) அதன் தந்தை கடுவன் அவன் அவளோடு(தலைவியோடு) உறவு கொண்டதைப் பார்த்துக்கொண்டிருந்தது. - என்கிறாள்.
வேங்கைமரம்
[தொகு]அடிமரம் கருமைநிறம் கொண்டிருக்கும். அரும்பு தெரியாமல் பூத்துக்கிடக்கும். மயில் அதன் பூக்களை உண்ணும். மயில் பூவை உண்ணும் காட்சி மகளிர் பூப் பறிப்பது போல் தோன்றும். இப்படிப்பட்ட நாட்டுக்கு அவன் தலைவன்.
பாடல்: 27 (கன்றும்)
[தொகு]பாலை - தலைவி கூற்று
- கன்று முண்ணாது கலத்தினும் படாது
- நல்லான் றீம்பா னிலத்துக் காஅங்
- கெனக்கு மாகா தென்னைக்கு முதவாது
- பசலை யுணீஇயர் வேண்டும்
- திதலை யல்குலென் மாமைக் கவினே.
என்பது, பிரிவிடை யாற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
- பாடியவர்
- வெள்ளி வீதியார்
செய்தி
[தொகு]அவன் பிரிந்திருக்கிறான். பிரிவை அவள் தாங்கமாட்டாள் என்று அவளது தோழி கவலைப்படுகிறாள். ஏன் கவலைப்படுகிறாய்? அவன் என் அழகையோ, அல்குலையோ துய்க்காவிட்டால் என்ன? பசலைநோய் தின்றுவிட்டுப் போகட்டுமே! - என்கிறாள் அவனுக்கு உரிமை பூண்ட கிழத்தி.
மாமை = மாந்தளிர் போன்ற மேனியழகு.
திதலை = அல்குலில் இருக்கும் வரிக்கோடு
பசலை = காதல் ஏக்கத்தால் உடலில் தோன்றும் தேமல் நோய்.
பசுவின் பாலை, ஒன்று கன்றுக்குட்டி உண்ணவேண்டும். அல்லது கறக்கும்போது கலத்தில் விழவேண்டும். இரண்டும் இல்லாமல் மண்ணில் விழுவது போல் அன் ஆழகு எனக்கும் பயன்படாமல், அவருக்கும் பயன்படாமல் பசலைநோய் தின்னட்டுமே! - இவை கிழத்தியின் சொற்கள்.
பாடல்: 28 (முட்டுவேன்)
[தொகு]பாலை - தலைவி கூற்று
- முட்டு வேன்கொ றாக்கு வேன்கொல்
- ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்
- டாஅ வொல்லெனக் கூவு வேன்கொல்
- அலமர லசைவளி யலைப்பவென்
- உயவுநோ யறியாது துஞ்சு மூர்க்கே.
என்பது, வரைவிடை யாற்றாளாய்க் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
- பாடியவர்
- ஒளவையார்.
செய்தி
[தொகு]திருமணம் செய்துகொள்ளும் காலம் தள்ளிப்போகிறது. தோழிக்குக் கவலை. கிழத்தி தோழிக்குச் சொல்கிறாள்.
யாரிடம் சென்று முட்டிக்கொள்வேன்? யாரைக் குறை கூறித் தாக்குவேன்? நானோ ஒருத்தி. ஏதாவது ஒரு காரணம் சொல்லி 'ஆ' என்று திடீரெனக் கூவிவிடலாமா என்று தோன்றுகிறது. அலமரல் என்னும் என் துன்பக் காற்றலைதான் என்னையே தாக்கி என்னையே அலைக்கழிக்கிறது. என் உயவு நோயைத் தெரிந்துகொள்ளாமல் தூங்கிக்கொண்டிருக்கும் இந்த ஊரிடம் முட்டிக்கொள்வதாலோ, தூங்கும் ஊரைத் தாக்கிப் பேசுவதாலோ என்ன வந்துவிடப்போகிறது?
- அலமரல் = மனச்சுழற்சி, மனக்கலக்கம். 'அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி' - தொல்காப்பியம் உரியியல்.
- உயவுநோய் = தனக்குள் கேள்வி கேட்டு விடை பெறமுடியாமல் கலங்கும் மனநோய். (உயா < உசா = வினா, உசாவு. ஒப்புநோக்குக. உசாத்துணை)
பாடல்: 29 (நல்லுரை)
[தொகு]குறிஞ்சி - தலைவன் கூற்று
- நல்லுரை யிகந்து புல்லுரைத் தாஅய்ப்
- பெயனீர்க் கேற்ற பசுங்கலம் போல
- உள்ளந் தாங்கா வெள்ள நீந்தி
- அரிதவா வுற்றனை நெஞ்சே நன்றும்
- பெரிதா லம்மநின் பூச லுயர்கோட்டு
- மகவுடை மந்தி போல
- அகனுறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே.
என்பது, இரவுக்குறி மறுக்கப்பட்ட தலைமகன், இவர் எம்மை மறுத்தார் என்று வரைந்து கொள்ள நினையாது பின்னுங் கூடுதற்கு அவாவுற்ற நெஞ்சினை நோக்கிக் கூறியது.
- பாடியவர்
- ஒளவையார்.
செய்தி
[தொகு]அவன் இரவில் சென்றான். அவள் மறுத்தாள். மறுத்துவிட்டாளே என்று அவளை ஒதுக்கித் தள்ளிவிடாமல் அவள் நினைவாகவே இருக்கும் தன் நெஞ்சோடு தலைவன் பேசுகிறான்.
நெஞ்சே! அவளிடம் நல்லுரையை எதிர்பார்த்துச் சென்றாய். அவள் வாய் நல்லுரையைத் தள்ளிவிட்டுப் புல்லுரையை எறிந்தது. அது உன்னிடம் தாவி விழுந்தது.
சுடப்படாத பச்சைமண்ணால் செய்து வைத்திருக்கும் மண்கலம் நிறைய நிறைய மழை பெய்தால் மண்கலம் என்ன ஆகும்? அதுபோல நெஞ்சே! நீ ஆகியிருக்கிறாய். காரணம் பெறமுடியாத ஒன்றின்மேல் நீ ஆசை வைக்கிறாய். பெரிதும் என்னிடம் சண்டை('பூசல்') செய்கிறாய். என்ன பயன்?
உச்சாங்கிளையில் இருக்கும் மந்தி தன் மகவைத் தன் வயிற்றில் தழுவிக்கொள்வது போல் உன் சொற்களைக் கேட்போர் (தலைவி) இல்லையே!
- உள்ளுறை உவமம் - மந்தி - தலைவி. குரங்குக் குட்டி - தலைவன்.
பாடல்: 30 (கேட்டிசின்)
[தொகு]பாலை - தலைவி கூற்று
- கேட்டிசின் வாழி தோழி யல்கற்
- பொய்வ லாளன் மெய்யுற மரீஇ
- வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட வேற்றெழுந்
- தமளி தைவந் தனனே குவளை
- வண்டுபடு மலரிற் சாஅய்த்
- தமியேன் மன்ற வளியேன் யானே.
என்பது, "அவர் நின்னை வரைந்து கோடல் காரணத்தாற் பிரியவும், நீ ஆற்றாயாகின்றதென்?" என வினாய தோழிக்குத் தலைமகள், "யான் ஆற்றியுளேனாகவும் கனவு வந்து என்னை இங்ஙன் நலிந்தது" எனக்கூறியது.
- பாடியவர்
- கச்சிப்பேட்டு நன்னாகையார்.
செய்தி
[தொகு]அவன்தான் உன்னைத் திருமணம் செய்துகொள்ள வருகிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றானே. அப்படியிருக்கும்போது நீ பொறுமையாக இல்லாமல் துடிப்பது ஏன்? - என்றாள் தோழி, தலைவியை.
தோழி! இதனைக் கேள். அவன் நாள்தோறும் பொய் சொல்வதில் வல்லவன். அவன் என் கனவில் வந்தான். என்னை ஆரத் தழுவினான். மகிழ்ச்சியோடு அவனைத் தழுவினேன். விழித்துப் பார்த்தபோது நான் படுத்திருந்த மெத்தையைத் தடவிக்கொண்டிருந்தேன். வண்டு உண்டபின் குவளை மலர் சாம்பி ஏக்கத்தோடு கிடப்பது போலத் தமியளாய்க் கிடந்தேன். - தலைமகள் தோழியிடம் இப்படி விடை பகன்றாள்.
- சாஅய் = சாய்ந்து, சாம்பி, உணர்ச்சி இழந்து, (உடலுறவுக்குப் பின்னர் இருக்கும் மயக்கம்)