குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்/6 முதல் 11 வயதுக் குழந்தைகள்

விக்கிமூலம் இலிருந்து

3. 6 முதல் 11 வயதுக் குழந்தைகள்

வயது 6 முதல் 11 வயது வரை பயிலும் மாணவ, மாணவியர் முதல் வகுப்பிலிருந்து 5ம் வகுப்பு வரை படிக்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.

அவர்களுக்கு அளிக்கப்படும் பாடத்திட்டமும், பயிற்சி முறைகளும், பின்வரும் விளைவுகளை ஏற்படுத்தி விடுவதாக அமைந்திட வேண்டும்.

நோக்கமும் நடைமுறையும் :

உடற்கல்விப் பாடத்திட்டத்தின் நோக்கமானது, மாணவ, மாணவியர்க்கு உடல் வளர்ச்சியை உண்டு பண்ண வேண்டும்.

உடலின் தசை வளர்ச்சியையும், தசையில் விசைச் சக்திகளையும் வளர்த்து விட வேண்டும்.

ஏனென்றால் முதல் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியரின் தேக அமைப்பானது, குறைந்த வலிமையும், அரை குறை திறமைகளும், எதிர்ப்புச் சக்தியில் குறைவான அம்சம் கொண்டனவாகவும் இருக்கும்.

ஆகவே உடல் வலிமையை (Strength) உண்டாக்கிட வேண்டும். தசை நரம்புகளின் கூட்டான காரியங்களில் தேர்ச்சி பெருகுவதாகவும் அமைந்திடவேண்டும்.

இந்த வயதுக் குழந்தைகள், அதிக சுறுசுறுப்புடன் இருப்பார்கள். ஆர்வம் மிகுதியால் பரபரப்புடன் நடந்து கொள்வார்கள்.

அவர்கள் ஆர்வத்தையும், உற்சாகத்தையும் குறைத்து விடாமல், அதே சமயத்தில் அவர்கள் சீக்கிரத்தில் களைத்துப் போய் விடாமல், பாதுகாப்புடன் விளையாட்டில் ஈடுபட வைத்திருப்பது, மிக முக்கியமான காரியமாகும்.

குழந்தைகளின் ஆர்வம், வந்த வேகத்தில் (கொஞ்ச நேரம் இருந்து) விடை பெற்றுக்கொண்டு, பறந்தோடிப் போய்விடும்.

ஆகவே, அவர்கள் ஆர்வத்தையும் உற்சாகத்தையும் அதிகமாக வளர்ப்பது போலவும், நீண்ட நேரம் நிலை நிறுத்தி வைத்திருப்பது போலவும், பல விதமான செயல் முறைகள் கட்டாயம் இருந்தாக வேண்டும்.

குழந்தைகள் ஆர்வமெல்லாம் தங்கள் உடலை இயக்கி, உடல் தசைகளைப் பயன்படுத்தி, சக்திக்கு மீறிய வலிமையான வேலைகளைச் செய்திட வேண்டும் என்ற வேகத்திலேயே இருக்கும். அப்படித்தான் துடிக்கும்.

ஆகவே, அவர்களின் ஆர்வத்தைத் தூண்டி மகிழ்விக்கும் காரியங்களான இயல்பான இயக்கங்கள், கதை, நாடகங்கள், செய்து காட்டும் பாவனை நிகழ்ச்சிகள், கதைப்பாடல்கள், பொழுதுபோக்கும் விளையாட்டுக்கள் எல்லாம், அவர்களை அதிகமாக உற்சாகப்படுத்தும் என்பதால், அவற்றிற்கான, முறைகளையெல்லாம், இனி வயது வாரியாகத் தொகுத்துக் காண்போம்.