குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்/9 முதல் 10 வயது குழந்தைகளுக்கு
1. இயற்கையான இயக்கங்கள் (Free Movements)
நடை ஒட்டம் தாண்டல், எறிதல் போன்ற செயல்களை அதிகம் கற்பித்து கைகளுக்கும் கால்களுக்கும் வலிமை கூடவும், திறன்களில் நுண்மை பெருகவும் ஆசிரியர்கள் உதவ வேண்டும். பெற்றோர்களும் பெருமை தரத்தக்க அளவில் துணை புரிய வேண்டும்.
ஓட்டம் தாண்டலுக்குரிய பயிற்சி முறைகள் :
பக்கவாட்டில் ஓடிக்கொண்டே, அங்கிருக்கும் சிறு தடையைத் தாண்டித் தூரமாகக் குதித்தல், (Sideways jump)
1 முதல் 2 அடி உயரமாக ஒரு சிறு கயிற்றைப் பிடிக்கச் செய்து, அதை ஒடி வந்து தாண்டுமாறு செய்தல் (Straightjump) ஒரு கயிற்றைப் பிடிப்பது போல, சற்று தூரம் துரமாக இன்னும் இரண்டு கயிறுகளை அதே உயரத்திற்குப் பிடிக்கச் செய்து, நீளத் தாண்டல் போல ஓடி வந்து, தாண்டுமாறு செய்தல்.
இவ்வாறு 1 அடி அல்லது 2 அடி உயரமாகக் கயிற்றைப் பிடிக்க செய்து, நின்ற இடத்திலிருந்தே தாண்டி - முழங்கால் மடிய நின்று, பிறகு நிமிர்ந்து நிற்றல். (Standing jump)
வேகமாக ஓடி வந்து, உயரமான அந்த தடையை தாண்டி, அதன் பக்கத்தில் போட்டிருக்கும் வட்டத்திற்கு உள்ளேயே நிற்றல்.
நீளத் தாண்டுதல் போலவே, இரண்டு முறை தாண்டித் தாண்டிக் குதித்து நிற்றல்.
ஓரடி இடைவெளி இருப்பது போல, நான்கு வட்டங்களைப் போட்டு, அதில் ஒவ்வொன்றாகக் குதித்துக் குதித்துப் போகுமாறு செய்தல்.
ஒரு காலை மடித்து ஒரு காலில் நின்று. தாவி ஒரு பொருள் மீது குதித்து, அதை ஒரு காலிலேயே செதுக்கிப் போகச் செய்து, அதன் மேலே மீண்டும் நின்று ஆடுதல் (கிராமப்புறங்களில் குழந்தைகள் ஆடும் செல் செதுக்கி ஆடுகிற ஆட்டம்.) 20 கெஜ தூரத்தில் ஒரு கோட்டைப் போட்டு, அதைப் போய் விரைவாக ஓடித் தொட்டு விட்டுத் திரும்பச் செய்கிற குறுகிய விரைவோட்டங்கள் (short runs)
ஓடுபவர் கையிலே கிரிக்கெட் மட்டை, போன்றவற்றைக் கொடுத்து, விரைவாக முடிப்பவர் 1 ஒட்டம் எடுத்தார் என்று கணக்கிடுதல் போல ஓடச் செய்யவும்.
பந்து விளையாட்டுப் பயிற்சிகள்:
இரண்டு பேர்களை ஒரு குழுவாகப் பிரித்து, ஒருவர் கையில் சிறு பந்து ஒன்றைக் கொடுத்து, மற்றவரை ஓடச் செய்து, அவரை, பந்தால் அடிக்கச் செய்தல், மற்றவர் பந்து தன் மீது படாமல் தப்பி ஓடவும், பந்து வைத்திருப்பவள் குறி பார்த்து அடிக்கவும் செய்தல். ஒரு தடவை பந்தால் அடித்ததும், அடித்தவர் ஓடவும், அடிபட்டவர் அடிக்க முயலவும் என மாற்றிக் கொண்டு ஆடுதல் (Hitting partner)
ஒரு வட்டம் போட்டு, 5 அடி அல்லது 6 அடி தூரத்திற்கு அப்பால் நின்று. அந்த வட்டத்திற்குள் பந்து விழுமாறு, பந்தை எறிதல்.
கூடைப் பந்தாட்ட ஆடுகளம் இருந்தால், அந்த வளையத்திற்குள் போய் பந்து விழுமாறு எறிந்து பழகுதல் (Throwing into circle)கரளா கட்டை, அல்லது சீசா மாதிரி இருப்பது போல கட்டைகளை அருகருகே வைக்கச் செய்து, 10 அடி தூரத்தில் இருந்து பந்தை உருட்டி அவற்றை இடித்து விழச் செய்தல், ஒரு தடவை பந்தை உருட்டும் போது எத்தனை கட்டைகள் விழுந்தன என்று எண்ணி, 5 முறை வாய்ப்பு வழங்குதல்.
கரளா கட்டைகளை ஒரடி இடை வெளி இருப்பது போல வரிசைகளாக வைத்து, அந்த இடைவெளிக்குள் பந்தை உருட்டுதல் (கட்டைகள் விழாமல்.)
குழந்தைகளை பந்தால் குறிபார்த்து அடிக்கலாம், அல்லது உருட்டலாம். இப்படி ஒவ்வொரு திறமையிலும் வாய்ப்பு தந்து விளையாடச் செய்தல்.
குழந்தைகளை அணி அணியாகப் பிரித்துக் கொள்ளவும். 5 அல்லது 10 குழந்தைகள் அணி, ஒரு சுவரில் 2 அல்லது 3 அடி உயரத்தில் ஒரு வட்டம் போட்டு, அதில் படுமாறு பந்தை எறிதல். அணியினர் எத்தனை பேர் வட்டத்திற்குள் படுமாறு பந்தை எறிந்தனர் என்று கணக்கிட்டு, வெற்றி பெற்ற அணியை அறிவிக்க வேண்டும்.
பிரம்பு வளையம் (Hoop) ஒன்றை 5 அடி தூரத்திற்கு அப்பால் ஒருவரைப் பிடிக்கச் செய்து, குறிப்பிட்ட இடத்திலிருந்து, வளையத்திற்குள் நுழைந்து போகுமாறு பந்தை எறிதல்.ஒரு வாளியை 3 அடி துரத்திற்கு அப்பால் வைத்து, அதற்குள் பந்து விழுமாறு, குறிபார்த்து எறிதல்.
பந்தை உதைத்தல், பந்துடன் ஓடுதல்,
தலையாலிடித்தல் போன்ற பயிற்சிகள்
பந்தை நேராக உதைத்தல், வேகமாக உதைத்தல், வட்டத்தில் ஓரிடத்தில் போய் படுமாறு குறி பார்த்து உதைத்தல். இடைவெளிக்குள், எதிலும் பந்து படாதவாறு உதைத்தல்
அதுபோல, பந்தைக் காலால் உருட்டிக் கொண்டே (Dribbling)ஓடுதல். இருக்கும் தடைகளைச் சுற்றிச் சுற்றி, பந்தைக் காலால் உருட்டிக் கொண்டே ஓடுதல்.
எதிரில் ஒருவரை நிற்கச் செய்து, அவரைச் சுற்றிச் சுற்றி, பந்தை உருட்டிப் பயிற்சி செய்தல்.
டென்னிஸ் பந்தை உயரமாகப் போட்டு, தலையாலிடித்துத் தள்ளுதல் (Heading).
2. தாள லயப் பயிற்சிகள் (Rhythmic)
சேர்ந்து ஆடும் குழு நடனங்கள்
அந்தந்த மாநிலத்தின் கிராமிய நடனங்கள்
கொடிப் பயிற்சிகள் (Flag drills) சிறு கம்புப் பயிற்சிகள் (Wand drills)
டம்பெல்ஸ் பயிற்சிகள் (Dum bells)
பிற்பகுதியில் தனித் தனியாகத் தரப்பட்டிருக்கின்றன. வேண்டும் பயிற்சிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
3. முன்னோடி விளையாட்டுக்கள் (Lead up games)
முதன்மையான விளையாட்டுக்களில், முக்கிய திறன் நுணுக்கங்கள் என்று பல பிரிவுகள் இருக்கின்றன. அந்தத் திறன்களை நன்றாகக் கற்றுக் கொள்ளவும், அவற்றில் தேர்ச்சி பெறவும், நன்கு விளையாடவும், முன்னோடி விளையாட்டுக்கள் உதவுகின்றன.
இந்த வயதுக் குழந்தைகளுக்கு, இங்கே மூன்று விளையாட்டுக்களைக் கற்றுத் தருகிறோம்.
1. கோகோ 2. கால்பந்தாட்டம், 3. கிரிக்கெட்
அவற்றைக் கற்றுத் தரும் ஓரிரண்டு முன்னோடி விளையாட்டுக்களைப் பார்ப்போம்.
3.1 கோ கோ ஆட்டம்
கோ கோ ஆட்டத்தில் முக்கியத்திறன்கள் விரட்டுதல், கோ கொடுத்தல்: தப்பி ஓடுதல்; ஏமாற்றி சமாளித்து ஓடுதல் முதலியன.
அதற்கான முன்னோடி ஆட்டம்
வட்டக் கோ கோ (circle kho kho)வந்திருக்கும் குழந்தைகளை இரண்டு குழுவாக முதலில் பிரித்து நிறுத்த வேண்டும்.
15 கெஜம் விட்டமுள்ள ஒரு வட்டம் 25 கெஜம் விட்ட முள்ள இன்னொரு வட்டம். உள்ளே ஒரு வட்டம். அதைச் சுற்றி பெரிய வட்டம். இப்படி ஒன்றைச் சுற்றி ஒன்றாகப் போட்டிருக்கவேண்டும்.
ஒரு குழுவினர் விரட்டித் தொடுபவராக (Chasers) மாறி, 15 கெஜ விட்ட வட்டத்தின் உட்புறத்தில், வட்டத்தை சுற்றி, கோ கோ பாணியில் உட்கார்ந்திருக்க வேண்டும். அதாவது ஒருவர் உட்புறமாக, மற்றொருவர் வெளிப்புறமாகப் பார்த்திருப்பது போல அமரவும். அமருகின்ற இடம் குறைந்தது 5 முதல் 6 அடி இடைவெளி தூரம் இருக்க வேண்டும்.
தொடப்படாமல் ஓட இருக்கின்ற குழு (Runners) 25 கெஜ விட்டமுள்ள வட்டத்திற்குள்ளாக, எங்கு வேண்டுமானாலும் நின்று கொண்டிருக்கலாம்.
சைகை கிடைத்தவுடன், விரட்டும் குழுவில் உள்ள ஒருவர், அந்த சிறு வட்டத்தை ஒரு சுற்று சுற்றி (Round) வந்து, வட்டத்தின் உட்புறமாகப் பார்த்திருக்கும் ஒருவருக்கு 'கோ' கொடுக்க வேண்டும். கோ பெற்ற புதிய விரட்டுபவர், சிறிய வட்டத்திற்குள்ளே நின்று கொண்டிருப்பவர்களை மட்டுமே தொட முயல வேண்டும்.
வெளி வட்டத்திற்குள், ஓடுபவர்கள் நின்று கொண்டிருந்தால், வெளிப்புறமாக வந்து அவர்களைத் தொடக்கூடாது. ஆகவே வட்டத்தின் வெளிப்புறமாகப் பார்த்து அமர்ந்திருப்பவருக்கு அவர் கோ கொடுத்து விட்டு, அமர்ந்து கொள்ள வேண்டும்.
அப்படி கோ பெற்ற விரட்டுபவர். உள் வட்டத்திற்கு வெளியே நின்று கொண்டிருக்கும். ஆட்டக்காரர்களை மட்டுமே தொட வேண்டும்.
விரட்டுபவர்கள், எதிர்க் குழுவினர் அனைவரையும் எத்தனை நிமிடத்திற்குள் தொட்டர்கள் என்று கணக்கிட்டுக் கொண்டு, மற்றக்குழு எத்தனை நிமிடங்களில் தொட்டது என்று சரிபார்த்து, குறைந்த நேரத்தில் தொட்டு வெளியேற்றிய குழுவையே, வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும்.
2. கோட்டில் குறுக்கு நெடுக்காக ஓடுதல் (Line kho kho)
விளையாட வந்திருப்பவர்களை, இரண்டு குழுவாக, முதலில் பிரித்துக் கொள்ள வேண்டும். 10 அடி இடைவெளி இருப்பது போலவும் இணையாக இருப்பது போலவும், இரண்டு நீண்ட கோடுகளைப் போடவும்.
ஒவ்வொரு கோட்டின் மீதும், ஒவ்வொரு குழுவும் தன் ஆட்டக் காரர்களை, 6 அடி இடை வெளி விட்டு. ஒருவர் மாற்றி ஒருவர் உட்பக்கம் வெளிப்பக்கம் பார்த்திருக்குமாறு, உட்காரச் செய்ய வேண்டும்.
சைகை கொடுத்தவுடன், ஒரு முனையில் உட்கார்ந்திருக்கும் ஒவ்வொரு குழு ஆட்டக்காரரும், ஒடத் தொடங்கி, தன் குழு ஆட்டக்காரர்களின் முதுகுப்புறமாக ஓடிக் கடந்து கடந்து ஓடி, எல்லோரையும் கடந்த பிறகு, திரும்பவும் அதே போல் சுற்றி வந்து, தனக்கு அடுத்து உட்கார்ந்திருக்கும் ஆட்டக்காரரைத் தொட்டு, கோ கொடுத்து விட்டு அமர்ந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு ஓட்டம் தொடரும்.
முதலில் ஒடி முடிக்கின்ற குழுவே வெற்றி பெற்றதாகும்.
3.2. கால் பந்தாட்டம்
கால் பந்தாட்டத்தில், பந்தை உதைத்தல்; பந்தைத் தடுத்து தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருதல்; பந்தை காலால் உருட்டல்; தலையாலிடித்தல், இலக்கைக் காத்தல் போன்ற திறன்கள் உண்டு.
அவற்றை வளர்த்து விடுகின்ற இரண்டு முன்னோடி ஆட்டங்களைப் பார்ப்போம்.
வட்ட இலக்குக் கட்டைகளை வீழ்த்தல் (Pin Foot ball)
கால் பந்தாட்ட ஆடுகளத்தின் நீளம் 100 அடி, அகலம் 50 அடி ஒவ்வொரு அகலப் பக்கத்திலும் 5 அடி விட்டமுள்ள ஒரு வட்டம். அந்த வட்டத்திற்குள்ளே 2 கரளா கட்டைகளை (Clubs) நிறுத்த வேண்டும்.
ஒரு குழுவிற்கு 20 ஆட்டக்காரர்களாக, இரண்டு குழுக்களாகப் பிரித்து விட வேண்டும்.
ஒரு பருவத்திற்கு 10 நிமிடமாக, 2 பருவங்கள் (Half) ஆடச் செய்ய வேண்டும்.
பந்தைக் காலால் தான் உதைக்க வேண்டும். கையால் தொடக்கூடாது.
இரண்டு குழுவினரும், தங்கள் எதிர்க்குழுவினர் காத்து விளையாடுகின்ற வட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கரளா கட்டைகளை, பந்தை உதைத்து, அதன் மூலம் வீழ்த்த வேண்டும். தடுப்பவர்களாக இருந்தாலும், தாக்கி ஆடுபவர்களாக இருந்தாலும், யாரும் அந்த வட்டத்திற்குள்ளே போகக் கூடாது. வட்டத்திற்கு வெளியேயிருந்து தான் பந்தை உதைத்து, கட்டைகளை வீழ்த்த வேண்டும்.
ஒரு முறை எதிரி கரளா கட்டைளை வீழ்த்துகிற குழு, 1 வெற்றி எண்ணைப் பெறுகிறது.
5 நிமிட இடைவெளி விட்டு, 20 நிமிடங்கள் ஆடிய பிறகு, எந்தக் குழு அதிக வெற்றி எண்களைப் பெற்றிருக்கிறதோ, அந்தக் குழுவே வெற்றி பெற்ற தாகும்.
2. வட்டக் கால் பந்தாட்டம் (Circle Foot Ball)
இரண்டு குழுவாக விளையாட வந்தவர்களைப் பிரித்துக் கொள்ள வேண்டும்.
20 அடி விட்டமுள்ள ஒரு வட்டமும், அதைச் சுற்றி 25 அடி விட்டமுள்ள ஒரு வட்டமும் போட்டிருக்க வேண்டும். அதன் நடுவில் ஒரு மையக் கோட்டை இழுத்து, இரண்டு பகுதிகளாக ஆடுகளத்தைப் பிரித்துக்கொள்ள வேண்டும்.
இப்பொழுது ஒவ்வொரு குழுவிற்கும் உள் வட்டம், வெளி வட்டம் என்ற இரண்டு அரை வட்டங்கள், ஆடும் இடமாக அமைந்திருக்கின்றன. ஒரு குழுவில் உள்ளவர்கள், தங்களிடம் இருக்கிற பந்தை எதிர்க்குழு விளையாடுகிற வெளி வட்டம் நோக்கி உதைக்க வேண்டும்.
அந்தப் பந்து தங்கள் வெளி வட்டத்திற்குப்போகாத வண்ணம், மறு குழுவினர் தடுத்து நிறுத்த வேண்டும்.
அப்படி தடுத்திட முயன்றும் முடியாமல், வெளி வட்டத்திற்குப் பந்து போகுமாறு விட்டு விட்டால், உதைத்தக் குழுவிற்கு, 1 வெற்றி எண் கிடைக்கும்.
பிறகு, அடுத்த குழு, தங்களுக்கு உதைக்கும் வாய்ப்பைப் பெற்று உதைத்தாட ஆட்டம் தொடரும்.
மொத்த நேரமும் (20 நிமிடம்) விளையாடிய பிறகு, எந்தக் குழு அதிக வெற்றி எண்களை எடுத்திருக்கிறதோ, அந்தக் குழுவே வென்றதாகும்
குறிப்பு: வெளி வட்டத்திற்குப் பந்தை விடாமல் தடுக்க முயல்கிற குழுவினர், கால்களால் பந்தைத் தடுத்து நிறுத்தலாம்.
கைகளால் பந்தைப் பிடித்துக் கொள்ளலாம். தலையால் இடித்தும், பந்தைத் தள்ளிவிடலாம். தலைக்கு மேலாகப் போகிற பந்து, அல்லது எட்டாமல் வெளியே போகிற பந்து 'அவுட்' என்று அறிவிக்கப்பட்டு, மீண்டும் ஆட்டத்தைத் தொடருகிற வாய்ப்பை மறு குழு பெற்றுக்கொள்ளும். 3.3. கிரிக்கெட் ஆட்டம்
1. டென்னிஸ் பந்து கிரிக்கெட் ஆட்டம்
கிரிக்கெட் பந்திற்குப் பதிலாக, டென்னிஸ் ஆட்டத்தில் ஆடப்படுகிற பந்தைப் பயன்படுத்தி, இந்த ஆட்டத்தை ஆட வேண்டும்.
குழுவிற்கு 11 பேர், ஒரு குழு பந்தெறியும் ஓவர்கள் 20. ஒரு ஓவருக்கு 6 எறிகள். (over)
கிரிக்கெட் ஆட்டம் போலவே, குழந்தைகளை ஆடச் செய்ய வேண்டும்.
2. வளையப் பந்தாட்டம் (Tenikoit)
வளையத்தைப் பிடிப்பதும் எறிவதும் ஆகிய இரண்டு முக்கியத் திறன்களையும், நன்குக் கற்றுக் கொள்ள, பயிற்றுவிக்கப் பல முறைகளை ஆசிரியர் கையாளலாம்.
உங்கள் கற்பனைக்கேற்ப அமைத்துக்கொண்டு, ஆடச் செய்யலாம்.
4. சிறுபரப்பு விளையாட்டுக்கள் (Small Area Games)
4.1 தொட்டால் தொடரும் (Free and Caught)
விளையாட இருப்பவர்களில் இருவரை, விரட்டுபவர்களாகத் (it) தேர்ந்தெடுக்க, மற்ற ஆட்டக்காரர்கள், மைதானம் முழுவதும், பரந்து நிற்க வேண்டும்சைகை கிடைத்தவுடன், இரண்டு விரட்டுபவர்களும், ஓடிப் போய் மற்றவர்களைத் தொட வேண்டும். தொடப்பட்டவர் உடனே கீழே தரையில் உட்கார்ந்து விட வேண்டும்
ஒருவர் அவருக்குக் காவலாக நிற்க, மற்றவர்கள் அடுத்த விரட்டுபவர், விரட்டித் தொட ஓட வேண்டும். அப்பொழுது தப்பி ஓடுபவர்களில் ஒருவர் ஓடி வந்து, உட்காாந்திருப் பவரைத் தொட்டு விட்டால், உட்காாந்திருந்தவர், ஆட்டத்தில் கலந்து கொள்ளும் தகுதியைப் பெறுகிறார்.
மூன்று பேர்கள் (உட்கார்ந்து விடும் நிலை) தொடப்பட்டவுடன், அவர்கள் இருவரின், தொடும் ஆட்டம் முடிவு பெறுகிறது.
குறிப்பு : விரட்டித் தொட்டு ஒருவரை உட்கார வைப்பது பெரிய காரியமல்ல. அவர் மற்றவர்களால் தொடப்பட்டு, உயிர் பெறும் சூழ்நிலையை அளிக்காமல், விரட்டுபவர் (it) கண் காணித்துக் கொண்டு ஆடுவதும், தொட ஓடுவதும் தான் ஆட்டத்தின் முக்கியமான குறிக்கோளாகும்.4.2. மலையிலே நெருப்பு! ஓடு ஓடு (Fire on the Mountain)
விளையாட வந்திருப்பவர்களின் எண்ணிக்கைக்கு ஒன்று குறைவாக, மைதானத்தில் சிறு சிறு வட்டம் போட்டிருக்க வேண்டும். அதாவது 50 பேர்கள் இருந்தால் 49 வட்டங்கள் போட்டிருக்க வேண்டும்.
ஒவ்வொரு வட்டத்திலும் ஒருவர் நின்று கொண்டிருக்க, வட்டம் இல்லாத ஒருவர், 10அடி தூரத்திற்கு அப்பால் நின்று கொண்டிருக்க, ஆட்டம் ஆரம்பிக்கும்.
சைகை கிடைத்தவுடன், வட்டம் இல்லாதவர், மலையிலே நெருப்பு ஒடு ஓடு என்று கத்திக் கொண்டே இருப்பார். எல்லோரும் அவர் இருக்கும் இடத்தை நோக்கி ஓடி வர வேண்டும். தன்னிடம் எல்லோரும் வந்தவுடன், தொடர்ந்து மற்றவர்களுடன், ஓட, கத்தியவரும் கூட ஓடி வருவார்.
குறிப்பிட்ட ஒரு இடம் வந்தவுடன், கத்திக் கொண்டே இருந்தவர், நெருப்பு அணைந்து விட்டது என்று மீண்டும் குரல் கொடுக்க வேண்டும்.
இப்படிக் கத்தியவுடனேயே, பயந்து ஓடி வந்த எல்லோரும் மீண்டும் தாங்கள் நின்று கொண்டிருந்த வட்டம் நோக்கி ஓடி, ஏதாவது ஒரு வட்டத்திற்குள் போய் நிற்க முயற்சிக்க வேண்டும்.வட்டம் இல்லாதவரும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு ஓடி, ஏதாவது ஒரு வட்டத்திற்குள் நிற்க முயற்சிக்க வேண்டும். கடைசியில், வட்டம் கிடைக்காத ஒருவர், இது போல் மலையிலே நெருப்பு ஓடு ஓடு என்று கத்த, ஆட்டம் மீண்டும் தொடரும்.
4.3. என்னுடன் வா (Come with me)
மலையிலே நெருப்பு ஆட்டம் போல் தான், ஏறத்தாழ, இதுவும் அமைந்திருக்கிறது.
இருக்கிறவர்களில் எண்ணிக்கையில் ஒன்று குறைவாக இருப்பது போல சிறு சிறு வட்டம் போட்டு, ஒவ்வொரு வட்டத்திலும் ஒவ்வொருவரையும் நிற்கச் செய்துவிட வேண்டும்.
வட்டம் இல்லாத ஒருவர், அங்கே போய் அருகில் நிற்க, ஆட்டம் தொடங்கும்.
வட்டம் கிடைக்காதவர், ஒவ்வொரு வட்டத்திற்கும் சென்று, 7 அல்லது 8 பேரைத் தொட்டபடி, என்னுடன் வா என்று சொல்லிக் கொண்டே போக வேண்டும். தொடப்பட்ட அவர்களும், அவர் பின்னாலேயே போய்க் கொண்டிருக்க வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட தூரம் சென்றவுடன், வீட்டிற்குப் போகலாம் என்று அழைத்து வந்தவர் சத்தம் போட, கூட வந்தவர் எல்லோரும் தாங்கள் முன்பு நின்று கொண்டிருந்த வட்டத்தை நோக்கி, ஒடி இடம் பிடிக்க முயற்சிப்பார்கள்.
என்னுடன் வா என்று அழைத்துக் கொண்டு வந்தவரும், அவர்களுடன் ஒடி ஒரு வட்டத்திற்குள் நின்று கொள்ள, முயற்சிப்பார்.
இந்த இடம் பிடிக்கும் போட்டியில், வட்டம் கிடைக்காதவர், முன்னர் கூறி அழைத்தது போல, என்னுடன் வா என்று, அழைக்க, மீண்டும் ஆட்டம் தொடரும்.
4.4. பிடித்தால் அடிக்கலாம் (Pagalwala)
இந்த ஆட்டத்தில் விளையாட வந்திருக்கும் எல்லா ஆட்டக்காரர்களுமே கலந்து கொள்ளலாம்.
டென்னிஸ் பந்து ஒன்று ஆட்டத்திற்கு வேண்டும். அதை உயரத்தில் எறிந்து ஆசிரியர் ஆட்டத்தை ஆரம்பித்து வைக்கிறாள்.
குழந்தைகள் எல்லோருமே அந்தப் பந்தைப் பிடிக்க முயல வேண்டும்.
பந்தைப் பிடித்து விடுகிற ஒருவர், பந்தைப் பிடித்ததும், அந்தப் பந்தால் மற்றவர்களை அடிக்க முயல்வார்.
பந்தை ஒருவர் பிடித்தவுடன், மற்றவர்கள் எல்லோரும், தப்பித்துக்கொள்ள, தூரமாக ஓடிவிட முயல வேண்டும். இவ்வாறு பந்தை எடுத்து, அடித்தாடும் ஆட்டம் சிறிது நேரம் தொடரும். பிறகு மீண்டும் முன் போல் ஆட்டத்தைத் தொடங்க வேண்டும்.
4.5 ஆனையும் ஆமையும் (Crows and Cranes)
(காக்கையும் கொக்கும் என்று கூறினால், ஆட்டம் சரிவர வராது என்பதால், ஆனையும் ஆமையும் என்று இதற்குப் பெயர் தந்திருக்கிறேன்.)
வந்திருக்கும் குழந்தைகளை சம எண்ணிக்கையுள்ள, இரண்டு குழுவாகப் பிரித்து நிற்க வேண்டும்.
6 அடி இடைவெளி தூரம் இருப்பது போல இரண்டு இணையான (Parallel) கோடுகளைப் போட்டு, இரண்டு குழுவினரையும் ஒருவரை ஒருவர் பார்ப்பது போல,கோட்டின் மீது நிற்க வைக்க வேண்டும்.
ஒவ்வொரு குழுவுக்கும் பின்னால் 40 அடி தூரத்தில், ஒரு கோடு போட்டு, அதனை இறுதி எல்லை என்று குறித்திருக்க வேண்டும்.
ஒரு குழுவிற்கு ஆனை என்றும், இன்னொரு குழுவிற்கு ஆமை என்றும் ஆசிரியர் பெயர் கொடுத்திருக்க, அவர்கள் ஆடுவதற்குத் தயாராக நிற்க வேண்டும்.
ஆசிரியர் யார் பெயரைக் கூறுகிறாரோ; அந்தக் குழு தங்கள் இறுதி எல்லையை நோக்கி ஓட, மற்ற குழு அவர்களை விரட்டித் தொட முயற்சித்து, எல்லைக் கோட்டை அடைவதற்கு முன் எத்தனை போர்களைத் தொட்டு அவுட்டாக்குகிறார்கள் என்பது தான் விளையாட்டு.
ஆக, இந்தப் பெயரைச் சொல்வதற்கு முன், ஆசிரியர் மிக சத்தமாக, ராகம் போடுவது போல ஆ என்று தொடங்கி, மீண்டும் 'ஆ' என்று கூவி, னை என்றோ, மை என்றோ கூறலாம்.
ஆனை என்று கூறிவிட்டால், ஆனைக்குழுவினர், தமக்குப் பின்புறம் உள்ள 40 அடிக் கோட்டை நோக்கி ஓட வேண்டும்.
ஆமைக் குழுவினர், ஓடுபவர்களை ஓடிப்போய் தொடரவேண்டும். தொடப்பட்டவர்கள் எல்லோரும், ஆமைக் குழுவில் போய் சேர்ந்து கொள்ள, ஆட்டம் தொடரும்.
இதுபோல 5 முறை ஓடச் செய்யலாம். 5 ஓட்டங்களுக்குப் பிறகு, அதிகமான ஆட்டக்காரர்களைச் சேர்த்துக் கொண்டிருக்கும் குழுவே வெற்றி பெற்றது என்று அறிவிக்கப்படும்.
4.6 சங்கிலித் தொடர் ஆட்டம் (Chain Tag)
விரட்டித் தொடுபவரை முதலில் தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும். விளையாட்டுக் காரர்கள் எல்லோரும் மைதானம் முழுவதும் பரவி நின்று கொண்டிருக்க வேண்டும்.சைகைக்குப் பிறகு, விரட்டித் தொடுபவர், ஓடி விரட்டி ஒருவரைத்தொட, தொடப்பட்டவர் தொட்டவருடன் சேர்ந்து கொள்ள வேண்டும்.
இருவரும் கையைக் கோர்த்துக் கொண்டு, மற்றவர்களை விரட்டித் தொட, அவர்களால் தொடப்பட்டவர், தொட்டவர்களுடன் வந்து சேர, இப்படியாக, சங்கிலித்தொடர்போல விரட்டுபவர்கள் ஒன்று சேர்ந்து கொண்டு, விரட்டித் தொடவேண்டும்.
தொடப்பட்டவர்கள் எல்லோரும் சங்கிலியாக சேர்ந்து கொள்ள, கடைசி ஆளைத் தொடும் வரை, ஆட்டம் தொடரும்.
இருவரும் கையைக் கோர்த்துக் கொண்டு, மற்றவர்களை விரட்டித் தொட, அவர்களால் தொடப்பட்டவர், தொட்டவர்களுடன் வந்து சேர, இப்படியாக, சங்கிலித் தொடர்போல விரட்டுபவர்கள் ஒன்று சேர்ந்து கொண்டு, விரட்டித் தொடவேண்டும்.
தொடப்பட்டவர்கள் எல்லோரும் சங்கிலியாக சேர்ந்து கொள்ள, கடைசி ஆளைத் தொடும் வரை, ஆட்டம் தொடரும்.
குறிப்பிட்ட எல்லைக்குள்ளே தான் மற்றவர்கள் ஓட வேண்டும். தப்பி ஓடுபவர்கள் எல்லைக்கு வெளியே போனாலும், அல்லது தொடப்பட்டாலும், விரட்டுபவருடன் சங்கிலித் தொடர் ஆகிவிட வேண்டும். 4.7 தோழரைத் தேர்ந்தெடு (Find a Partner)
ஒற்றைப்படையில் எண்ணிக்கை இருப்பது போல, மொத்த ஆட்டக்காரர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். (உம்) 19, 27, 35 என்பது போல ஆட்டக்காரர்கள் எல்லோரும், மைதானம் முழுவதுமாக, பரந்து நிற்பது போல, நிற்கச் செய்து விட வேண்டும்.
விசில் ஒலி மூலம் சைகை கொடுத்தவுடன், பரந்து நின்று கொண்டிருந்தவர்கள் எல்லோரும், பரபரப்புடன் ஓடி, தனக்குத் தோழர் (Partner) ஒருவரைத் தேடிப்பிடித்து, முதுகு முதுகு ஒட்டியவாறு நின்று கொள்ள வேண்டும்.
தோழர் யாரும் கிடைக்காமல் நிற்கிற ஒருவர் இருப்பாரே! அவர் மீது தவறு என்று குறிப்பிட்டுக் கொள்ள வேண்டும்.
இப்படி 3 முறை தோழர் கிடைக்காமல் தவறிப் போகிறவருக்கு, ஏதாவது ஒரு தண்டனை கொடுக்க, ஆட்டம் மீண்டும் தொடரும்.
தண்டனை என்பது நகைச்சுவை அளிப்பது போல, தமாஷாக இருக்க வேண்டும்.
4.8. வணக்கம் வணக்கம் (Good Morning)
ஆட்டக்காரர்கள் அனைவரையும் கை கோர்த்துக்கொண்டு, ஒரு பெரிய வட்டம் போட்டு நிற்கச் செய்ய வேண்டும். அவர்களில் ஒருவரை, விரட்டித் தொடுபவராக (it) இருக்கச் செய்ய வேண்டும்.
விரட்டித் தொடுபவர், வட்டத்திற்கு வெளிப்புறமாக வந்து நின்றவுடன், விசில் ஒலி மூலம் சைகை கிடைக்க, அவர் வட்டத்தைச் சுற்றி ஓடி வர வேண்டும்.
அப்படி ஓடிக்கொண்டிருக்கும் போதே, வட்டத்தில் நிற்கும் ஒருவரின், முதுகைத் தொட்டுவிட்டு ஓட வேண்டும்.
தொடப்பட்டவர், தொட்டவர் ஓடும் திசைக்கு எதிர்த்திசைப்புறமாக வேகமாக ஓடிவர, தொட்டவரும் தான் திசைப்புறமாக ஓடிவர, இரண்டு பேரும் ஓரிடத்தில் சந்திப்பார்கள்.
சந்தித்தவுடன், இருவரும் கைகளைக் குலுக்கிக்கொண்டு, வணக்கம், வணக்கம் என்று இரண்டு முறை கைகுலுக்கிய பிறகு, காலியாக இருக்கும் அந்த இடம் நோக்கி, வேகமாக ஓட வேண்டும்.
யார் முதலில் அந்த இடைவெளி இடத்தில் போய் நிற்கிறாரோ, அவர் வட்டத்தில் நிற்கும் ஒருவராக, இடம் கிடைக்காதவர் ஏமாளியாகிப் போகிறார்.
அவர் ஓடித் தொடுபவராக மாற, ஆட்டம் தொடரும். 5. சீருடல் பயிற்சிகள் (Gymnastics)
5.1. தோள்களில் உருளல் (Shoulder Roll) (படம் பார்க்கவும்.)
a. தோள்களில் உருளுவதற்கு முன்னதாக ஆயத்தமாக நிற்றல். b. தலையை சாய்த்து, தோள்களை பக்கவாட்டில் திருப்புகிறபொழுதே தோள்பக்கமாக உருண்டு, முழுங்கையைத் திருப்புதல். c. தோள்பட்டையில் படுவது போல குட்டிக் கரணம் அடித்து, உருளல். தரையில் உருளும்போது முதுகுப் பட்டையையும், இடுப்புப் பின்பகுதி தசைகளையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
d. உருண்ட பிறகு எழுந்து நிற்றல்.5.2 இரட்டையர் உருளல் (Double Roll)
படம் பார்க்கவும்
a. இருவரில் ஒருவர் படுத்து கால்களை உயர்த்தியருப்பதையும் ஒருவர் நின்று அவர் கால்களைப் பிடித்திருப்பதையும் பார்க்கவும். b. நின்று கொண்டிருப்பவர், அப்படியே முன்பக்கமாக துள்ளி விழுதல்.
C. தரையை முன்புறமாக வைத்து, மேலாக எழுந்து கால்களைத் தரையில் ஊன்றுதல் உருளும் முறையை சற்று விளக்கமாகக் காண்போம்.தரையில் படுத்திருப்பவர் செய்ய வேண்டியது
a. கீழே தரையில் படுத்து, உயரமாகக் கால்களை உயர்த்தி, நின்று கொண்டிருப்பவரின் கால்களைப் பற்றிப் பிடித்திருக்கவும்.
b. நின்று கொண்டிருப்பவர் தரையை விட்டுக் கால்களை உயர்த்துவது போல, ஒரு துள்ளு துள்ளி (Spring Action) உயர்த்தி விடுதல்.
C. மேலே வந்தவரின் தலையானது, தன் கால்களில் இருப்பது போல வைத்துக்கொள்ளுதல்.
நின்று கொண்டிருப்பவர் செய்ய வேண்டியது
a. படுத்திருப்பவரின் தலை இருபுறமும் தன் கால்களை ஊன்றி, உயர்த்தியுள்ள கால்களைப் பிடித்திருத்தல்.
b. படுத்திருப்பவரின் கால்களை விரித்து, அதில் தலை வைத்து கீழாகக் கவிழ்ந்து விடுதல்.
C. கால்களுக்கு இடையே தலை இருக்குமாறும், பின்புறத்தசைகள் பக்கமாக இருப்பது போலவும் வைத்துக்கொண்டு, முன்னோக்கி எழும்புதல்.
5.3. ஒற்றைச் சக்கரவண்டி (Wheel Barrow)
இருவர் இந்த சாகசச் செயலில் பங்குபெற வேண்டும். கனம் அதிகம் இல்லாமல் (lighter) இலேசாக இருக்கும் ஒருவர், முதலில் நான்கு கால் பாய்சசலில் நிற்பது போல, முழங்கால்களிலும் இரண்டு கைகளையும் ஊன்றி உட்கார வேண்டும்.இன்னொருவர், அவரது இரண்டு கால்களையும் தூக்கிப் பிடித்துக்கொள்ள, கீழே இருப்பவர், இப்போது இரண்டு கைகளையும் ஊன்றியபடி நிற்க வேண்டும்.
உடனே, முதுகுப்பகுதியை நேராக வைத்துக் கொண்டு, கைகளால் முன்னோக்கி நடந்து செல்ல வேண்டும்.
கால்களைப் பிடித்திருப்பவர், நீட்டமாகக் கால்களைப் பிடித்துக்கொண்டு, முன்புறமாக நடத்திப் போகவும்.
குறிப்பு : ஒற்றைச் சக்கர வண்டிக்குக் கைப்பிடி இருக்கும். அதைப் பிடித்துத் தள்ளிக் கொண்டு போவது போல, இந்த சாகசச் செயலைச் செய்திட வேண்டும்.
6. தனிப்போர் விளையாட்டுக்கள் (Simple Combatives)
6.1. கைப்பிடி யுத்தம் (Hand wrestle)
இரண்டு போராளிகளை முதலில் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு பேரும் அருகருகே வந்து நின்று, வலது காலை முன்புறமாக வைத்துக் கொண்டு, வலது கையினால் ஒருவர் கையை ஒருவர் நன்றாகப் பற்றிக்கொண்டு நிற்க வேண்டும்.
(படத்தில் உள்ளது போலவும் செய்யலாம்.)
இடதுகையை முதுகுப் புறத்தில் இருவரும் வைத்துக் கொள்ள வேண்டும்.
சண்டை போடுங்கள் என்று சொன்னவுடன், ஒருவரை ஒருவர் வலது கையைப் பற்றிய படியே இழுத்து, தள்ளி, திருப்பி, சுழற்றி அடுத்தவரை சமநிலை இழக்கச் செய்துவிட வேண்டும். அல்லது அவள் தரையில் ஊன்றி யிருக்கும் ஏதாவது ஒரு காலை இடம் பெயரச் செய்துவிட வேண்டும்.
இந்தச் சண்டையில், வலது கையை மட்டுமே உபயோகிக்க வேண்டும். இடது கையை பயன் படுத்தவே கூடாது.
கால்கள் சமநிலை இல்லாமல் கீழே விழுந்தாலோ, அல்லது கால்களை நகர்த்தி விட்டாலோ, அப்படிச் செய்தவர் தோற்றவராகிறார்.
வலது கைப்பிடியில் வழுக்கல் நேர்ந்தால், மீண்டும் கையைப் பற்றி சண்டையைத் தொடரவேண்டும்.
6.2. பெஞ்சின் மேல் சண்டை (Push off the Bench)
இரண்டு எதிராளிகளும், ஒரு பெஞ்சின் மேல் ஏறி நின்று கொள்ள வேண்டும். ஒருவரை ஒருவர் பார்த்தபடி நின்று கொண்டு, 2 அடி நீளமுள்ள சிறிய கைத்தடி ஒன்றையும், இருவரும் உறுதியாகப் பற்றியபடி நிற்க சண்டை தொடரும்.
சைகை கொடுத்த பிறகு, இருவரும் கையில் பிடித்துள்ள கைத்தடியைப் பற்றியபடி, எதிராளியை முன்புறமாக இழுக்கலாம். பின்புறமாகத் தள்ளலாம். எதிராளியை சுழற்றி, குழப்பி, அவரை பெஞ்சிலிருந்து கீழே தள்ளி விட வேண்டும்.
பெஞ்சின் மேல் நின்று சண்டை போட முடியாமல், கீழே தள்ளப்படுகிறவர், சண்டையில் தோற்றவராகிறார்.
6.3. முக்காலியின் மேல் சண்டை (Push off the Stool)
இரண்டு எதிராளிகள் ஆளுக்கு ஒரு முக்காலியின் மேல் நின்று கொள்ள வேண்டும். இரண்டு முக்காலிகளுக்கும் அடையில், குறைந்தது 2 அல்லது 3 அடி தூரம் இருப்பது போல் வைத்துக் கொள்ளலாம்.
ஒரு நீண்ட தடியை ஆளுக்கு ஒரு முனையில் படித்துக் கொண்டிருக்க, சண்டை ஆரம்பமாகிறது.
சண்டையிடுங்கள் என்று சைகை கொடுத்தவுடன், முனை ஒன்றைப் பிடித்துக் கொண்டிருக்கிற எதிராளி இருவரும், தடியை முன்னுக்குத் தள்ள, பின்னுக்கு இழுக்க, தடியை சுற்ற, சுழற்ற - இப்படி ஏதாவது ஒன்றைச் செய்து, அவரை முக்காலியிலிருந்து தரைக்குப் போகுமாறு தள்ளிவிட வேண்டும்.
6.4. முட்டியைத் தட்டு (Knee Slap)
போட்டியிடும் எதிராளி இருவரும், ஒருவரை ஒருவர் பார்த்தபடி நிற்கவும்.
தொடங்குங்கள் என்று சைகை கிடைத்தவுடன், எதிராளியின் முட்டியை (முழங்காலை) தன் வலது கையால் தட்ட வேண்டும். இது தான் ஆட்டத்தின் நோக்கம்.
தான் அடுத்தவர் முட்டியைத் தட்ட வேண்டும். ஆனால் தன் முட்டியை அடுத்தவர் தொட்டு விடக்கூடாது. இப்படி தன்னைக் காத்துக்கொண்டு, அடுத்தவர் முட்டியை முதலில் தட்டி விடுகிறவர், வெற்றி பெற்றவராகிறார்.
இதற்காக இருவரும் சுற்றிச் சுற்றி வரலாம். ஆனால், உடலைக் கட்டிப் பிடித்துக் கொள்ளக் கூடாது. எதிரியை ஏமாற்ற எப்படி வேண்டுமானாலும் தந்திரங்கள் பலவற்றை மேற் கொள்ளலாம்.
6.5. பாதங்களில் நின்று சண்டை (Stepping on Toes)
போரிடும் இரண்டு பேரும், தங்கள் முன் பாதங்களில் நிற்க வேண்டும். வலது கையை தலைக்கு மேலே உயர்த்தி, இருவரும் வலது கையைப் பற்றிய படி இருக்கையில், சண்டை ஆரம்பமாகிறது.சைகை கிடைத்ததும், வலது கைப் பிடியை இறுக்கி, எதிராளியைத் தள்ளி, முன் பாதத்தினால் நிற்பதை, தடுமாறி காலை ஊன்றச் செய்து விட வேண்டும். இது தான் ஆட்டத்தின் நோக்கம்.
பாதங்களினால் நிற்க முடியாமல், தடுமாறி காலை தரையில் ஊன்றி விடுபவர் தோற்றவராகிறார். (6.1. படம் பார்க்கவும்.)
7. உடல் நலம் (Health)
சுற்றுப்புற சுகாதாரம்
7.1. குடிநீர்ப் பழக்கம்
தன்னுடல் சுகாதாரப் பழக்க வழக்கங்களில், தகுந்த பயிற்சிகளையும் பழக்க வழக்கங்களையும் மேற்கொண்டால் தான், சுற்றுப்புற சுகாதாரத்தைப் புரிந்து கொள்ள முடியும். பேரார்வத்துடன் வளர்க்கவும் முடியும்.
7.1.1. குடிநீர் பற்றி தெளிந்த அறிவு வேண்டும். பாதுகாக்கப்பட்ட, சுத்தமான நீரையே குடிக்கும் பழக்கம் வேண்டும். அப்படி வைத்திருக்கும் குடிநீரைப் பயன்படுத்துகிற போது, சுத்தமாகவும் பத்திரமாகவும், வீணாக்கமல் பாதுகாத்துக் கையாளுகின்ற பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். 7.1.2. குடிநீர்க் குழாய் அருகிலோ அல்லது குடிநீர் வழங்கும் தொட்டியின் கீழோ, குளிக்கின்ற பழக்கம், தவறானது. துணி துவைக்கின்ற வேலைகள் எதையும் அங்கு செய்யவே கூடாது. அந்த இடத்தில் தண்ணீரைத் தேங்கவிட்டு, சாக்கடையாய் மாற்றி விடவும் கூடாது.
7.1.3. சிறுநீர் கழிப்பதாக இருந்தாலும், மலம் கழிப்பதாக இருந்தாலும், அதற்காக ஒதுக்கப்பட்ட கழிப்பறைக்குத் தான் செல்ல வேண்டும். தடுப்பதற்கு யாருமில்லை என்று, நினைத்த இடத்தில் ஒதுங்குவது தவறு. பொது இடத்தைத் தமது வீடு போல, சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற நினைவுடன் தான் நடந்து கொள்ள வேண்டும்.
7.1.4. கழிப்பறைகள் எதுவும் இல்லாத போது, குடிநீர் இருக்குமிடத்தில், அல்லது, நீர் நிலை ஓரங்களில் மலஜலம் கழிக்கக் கூடாது. அதைக் கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும்.
7.1.5 எந்த வேலையைச் செய்தாலும், செய்து முடித்த பிறகு கை, கால், முகம் முதலியவற்றை நன்றாகக் கழுவிய பிறகே, சாப்பிடச் செல்ல வேண்டும். உடையில் துடைத்துக் கொண்டால் உறுப்புக்கள் தூய்மையடைந்து விடாது.
7.2. உணவுண்ணும் பழக்கம்
7.2.1. சரியான நேரத்தில், எப்பொழுதும் குறிப்பிட்ட சமயத்தில் சாப்பிடுகிற பழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். சாப்பிடுகிற போது அவசரம் கூடாது. எந்தக் கவலையையும் துயரத்தையும் மனதில் ஏற்றி வைத்துக் கொண்டு சாப்பிடக் கூடாது.
மனதில் மகிழ்ச்சியும், உற்சாகமும் இருப்பது போல், ஆனந்தத்துடன் சாப்பிட வேண்டும். அதற்காக, அளவுக்கு மீறி சாப்பிடக் கூடாது. அதிகமாக சாப்பிடுவது, உடலை வளர்க்காமல், கெடுத்து விடும்.
7.2.2. காலம், பருவம் இவற்றிற் கேற்பவே, உணவுப் பழக்கம் மாறும். அந்தந்த பருவத் தின் தட்ப வெப்பநிலைக்கேற்ப, உணவை உட்கொள்ளும் பழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
7.2.3. உள்ளுரிலே கிடைக்கின்ற உணவுப் பொருட்கள் எல்லாம் உடலுக்கு நல்லது. அவற்றை உதாசினப்படுத்துவது, உதறித் தள்ளுவது நல்ல தல்ல. ஆகவே, நல்ல தரமான உள்ளுள் உணவுப் பொருட்களைப் பயன்படுத்திக் கொள்ளுவது அறிவுடமையாகும்.
7.2.4. பச்சைக்காய் கறிகள், புதிய பழங்கள் எதுவாக இருந்தாலும் அவற்றை நன்றாக நீரில் கழுவிய பிறகே, சாப்பிட வேண்டும்.
7.2.5. உண்ணும் பண்டங்களை வீணாக்கவே கூடாது. தேவையானதை தெரிந்தெடுத்து உண்ணும் பழக்கத்தை, நன்கு அறிந்து வைத்துக் கொள்வது, சிறந்த மனிதராக எதிர்காலத்தில் உருவாக்கி விடும்.
7.2.6. ஏதாவது ஒரு காரணத்தால், உணவு முழுவதையும் சாப்பிட முடியவில்லை என்றால், அதற்காக அதனைக் கண்ட இடத்தில் தூக்கியெறிவது அறிவார்ந்த செயல் அல்ல, அருகில் உள்ள குப்பைத் தொட்டிகளில் தூக்கியெறிவது அல்லது அங்கே உள்ள குப்பை போடும் இடம் பார்த்து போடுவது நல்ல முறையாகும்.
7.3. உடற்பயிற்சிப் பழக்கம்
7.3.1. தங்களுக்குரிய வயதுக்கு ஏற்ப உள்ள விளையாட்டுக்களில் மட்டுமே, குழந்தைகள் பங்கு பெற்று விளையாடி மகிழ வேண்டும்.
7.3.2. வேலை எப்போது, படிப்பு எப்போது, விளையாட்டு எப்போது என்பதையெல்லாம் திட்டம் போட்டு, அதன்படி செயல்பட வேண்டும்.
7.3.3. பத்திரமான இடத்தில், ஆபத்து ஏதும் ஏற்படாது என்கிற இடத்தில் தான் விளையாடவேண்டும். விபத்து நிகழாமல். விளையாடக் கற்றுக் கொள்ள வேண்டும்.
7.3.4. விளையாடுவது உடல் ஆரோக்கியத்திற்காக, மனதில் மகிழ்ச்சி ஏற்படுவதற்காக விளையாடிய பிறகு களைத்துப் போவதும், மனம் கஷ்டப்படுவதும் தவறு. அதற்குப் பெயர் விளையாட்டே அல்ல. ஆகவே, களைப்புடன் கவடிடப்படாமல், உடல் நலமாகத் திகழ்வது போல விளையாட வேண்டும்.
7.3.5. ஓய்வு மிகவும் அவசியம், உறக்கம் அதற்கு உதவும். நன்றாகக் காற்றோட்டமுள்ள இடத்தில் உறங்குவது நல்லது. இறுக்கமான உடைகளை அணிந்து கொண்டு உறங்குவதும், முகத்தை முடிக் கொண்டு தூங்குவதும் நல்ல பழக்கம் அல்ல.
7.3.6. உடல் நலத்திற்காக பள்ளிகளில் தடுப்பு ஊசி மருந்துகள் போன்றவைகளை தருகின்ற சமயங்களில் அவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும். அது உடல் நலத்தை மேலும் உயர்விக்கும்.
7.3.7. உடல் நலப் பழக்கங்களை அலட்சியம் செய்யாமல் நமக்கு தேவை அவை என்ற நன்னோக்கோடு அனுசரித்துக் கடைபிடிக்கும் போதுதான், நலமான வாழ்வு. நிறைவோடு கிடைக்கும்.
7.4. பாதுகாப்பு பழக்கம்:
7.4.1 துன்பம் விளைவிக்கின்ற பிராணிகளுடன் விளையாடக் கூடாது.
7.4.2. நெருப்புடன் விளையாடக் கூடாது. ஆழமான நீர்ப்பகுதிகளில் போய் நீந்தக் கூடாது. கிணற்றில் இறங்கிப் பார்க்கிறேன் என்ற விஷமத்தனமாக முயற்சியில் இறங்கக் கூடாது. குளம் குட்டை இடங்களில் இறங்கிப் பார்க்கிறேன் என்று குளிக்க முயலக்கூடாது.
7.4.3. எப்பொழுது வீதிகளில் நடந்தாலும், ஒரமாக நடைபாதையின் மீது தான் நடந்து செல்ல வேண்டும்.
7.4.4. வீதிகளில் அல்லது வீதி ஓரங்களில் விளையாடுவது தவறு. அவை பாதுகாப்பான இடங்கள் அல்ல.
7.4.5. மின்சாரம் - இது தொடர்பான எந்தப் பொருளையும் தொடுவதோ, அவற்றுடன் விளையாடுவதோ, உயிருக்கே ஆபத்தை விளைவிப்பதாகும்.
7.4.6 கூரிய கத்தி, கத்தரிக்கோல், பிளேடுகள், உடைந்த கண்ணாடித் துண்டுகள் இவற்றை வைத்துக் கொண்டு விளையாடக் கூடாது.
7.4.7. ஒடும் போது, தாண்டும் போது, விளையாடும் போது மிகவும் எச்சரிக்கையுடனும், நிதானத்துடனும் செய்வது நன்மை பயக்கும்.