உள்ளடக்கத்துக்குச் செல்

குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1/என்ன வேண்டும்?

விக்கிமூலம் இலிருந்து

என்ன வேண்டும்

எங்கள் பள்ளியின் முன்னாலே
இருந்தது சிறிய கடைஒன்று.

அந்தக் கடையில் புதிதாக
அன்றொரு பொம்மை இருந்ததனால்,

அதனைப் பார்க்க மாணவர்கள்
அங்கே கூட்டம் போட்டனரே.

நந்தன், கோபு, சாம்புவுடன்
நானும் சென்றேன், கடைமுன்னே.

“வேண்டிய தென்ன? சொல்லிடுவீர்.
வீணாய்க் கூட்டம் போடாதீர்”

என்றே அந்தக் கடைக்காரர்
எங்களைப் பார்த்துக் கூறினரே.


பையில் ஒரு கா சில்லாமல்
பார்த்துக் கொண்டே நாங்களுமே

அங்கே நின்றோம். அச்சமயம்
அவசர மாக ஒருபையன்

ஓடி வந்தான். அவன்கையை
உற்றுப் பார்த்தார் கடைக்காரர்.

வந்தவன் கையில் ஒரு ரூபாய்
வட்ட மாக இருந்திடவே,

“வெட்டிக் கூட்டம் போடாமல்
விலகிப் போங்கள், கழுதைகளா!”

என்றே கூறிக் கோபமுடன்
எங்களைப் பிடித்துத் தள்ளியபின்,

பணத்துடன் வந்த பையனையே
பரிவுடன் அருகில் வரவேற்றே,

“என்னடா தம்பி வேண்டும்?”என
இதமாய்க் கேட்டார் கடைக்காரர்.

பணத்தைப் பையன் நீட்டினனே.
பக்குவ மாகக் கூறினனே!

"அவசரம், அவசியம், ஆனதனால்
அப்பா இங்கே அனுப்பினரே.


சில்லறை வேண்டும் ரூபாய்க்கு!
சீக்கிரம் தருவீர் இப்பொழுது”

இதனைக் கேட்ட நாங்களெலாம்
இடிஇடி என்று சிரித்தோமே!

ஏமாற் றத்தால் கடைக்காரர்
எங்களைப் பார்த்து முறைத்தனரே!


இந்தப் புத்தகத்தில் 50 கதைப்பாடல்கள் இருக்கின்றன.

அவை பலவகை:


  • வரலாற்றுப் பாடல்கள்
  • வாழ்க்கை நிகழ்ச்சிப் பாடல்கள்
  • நெஞ்சைத் தொடும் பாடல்கள்
  • நீதிநெறி உணர்த்தும் பாடல்கள்
  • வியப்பூட்டும் பாடல்கள்
  • வினா-விடைப் பாடல்கள்
  • சிரிப்பூட்டும் பாடல்கள்
  • சிந்திக்கவைக்கும் பாடல்கள்

எல்லாமே சிறுவருக்குப்
பயன் தரும் பாடல்கள்.
எல்லாமே சிறுவர்கள்
பாடி மகிழும் பாடல்கள்.