குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1/கடைசி நாள்
Appearance
கடைசி நாள்
ரத்தின புரியின் அரசனுக்கே
எத்தனை மனைவியர் ? அப்பப்பா !
மொத்தத் தொகையைச் சொல்லிடவா ?
முந்நூற் றறுபத் தைந்தாகும் !
மனைவியர் தனித்தனி வாழ்ந்திடவே
மாளிகை பலவும் கட்டிவைத்தான்.
தினமும் ஒருத்தியின் மாளிகையில்
திருப்தி யாகச் சாப்பிடுவான்.
ஒவ்வோர் ஆண்டும் ஒருநாள் தான்
உண்பான் ஒருத்தியின் மாளிகையில்.
இவ்விதம் சென்றன மூன்றாண்டு.
இனிமேல் நான்காம் ஆண்டாகும்.
அந்த ஆண்டின் கடைசிதினம்
அரசனை எந்த மனைவியுமே
வந்தே அழைக்கா திருந்தனால்,
வாட்டம் கொண்டே அவனிருந்தான்.
அன்று முழுதும் பட்டினிதான்.
‘அந்தோ, இப்படி ஆனதுவே!
என்னே காரணம்?’ என்றவனும்
எண்ணிப் பார்த்தான் புரிந்ததுவே.
அந்த வருடம் லீப்வருடம்.
அதனால் ஒருநாள் அதிகமன்றோ?
எந்த மனைவியின் முறையென்றே
எவரும் அறியா திருந்தனராம்!