உள்ளடக்கத்துக்குச் செல்

குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1/நிலைத்த ஆலமரம்

விக்கிமூலம் இலிருந்து

நிலைத்த ஆலமரம்

சாலைவ ழியிலோர் ஆலமரம் - அது
தங்க நிழலினைத் தந்தமரம்.
சாலை வழியாகச் செல்பவர்க்கு - அது
தளர்வு மாற்றியே நின்றமரம்.

களைத்து வருந்தியே வந்திடுவார் - அங்குக்
கால்வலி தீர அமர்ந்திடுவார்.
இளைத்த அவர்க்குமே இன்பம்தரும் - அன்றி
இன்னலும் தீர்த்து வழியனுப்பும்.

பள்ளிச் சிறுவர்கள் ஓடிவந்தே - அங்கே
பற்பல ஆட்டங்கள் ஆடிடுவார்.
அள்ளியே சுள்ளிகள் சேர்த்திடுவார் - நல்ல
அந்தணர் வேள்வி நடத்திடவே.

காலைப் பொழுதிலே பல்துலக்க - அது
கனிவுடன் குச்சிகள் தந்திடுமே.
மாலைப் பொழுதினைப் போலதுவும் - என்றும்
மனங்கு ளிர்ந்திடச் செய்திடுமே.


எத்திசையும் சுற்றிக் காற்றொருநாள் - அங்கு,
எமனைப் போலவே வந்ததடா!
எத்தனை யோஉயிர் மாண்டிடவே - மிக்க
இன்னல் புரிந்துமே சென்றதடா!

எண்ணரும் உயிர்கள் எத்தனையோ - அதில்
இன்புற்ற வாழ்வினை நீத்தனவே.
கண்ணினைப் போன்றநம் ஆலமரம் - அந்தக்
கணக்கில் ஒன்றெனச் சேர்ந்ததுவே!

வேரற்று அம்மரம் வீழ்ந்ததுவே - பெரும்
வீரனைப் போலக் கிடந்ததுவே.
ஊரினர் யாவரும் கூடிவந்தே - அதன்
உன்னத நன்மையைப் பேசினரே.

அத்தனை மக்களும் வாடினரே - ‘இது
ஐயோ, போனது !’ என்றனரே.
இத்தலம் விட்டே போய்விடினும் - அது
எல்லார் உள்ளத்தும் நின்றதுவே!