குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1/மயிலுக்குப் போர்வை
மயிலுக்குப் போர்வை
இயற்கை அழகினைக் கண்டுகண்டு-பெரும்
இன்ப மடைந்திடும் ஓர் அரசன்,
உயர்ந்த மலைகளைக் கண்டிடவே-மிக
உல்லாச மாகக் கிளம்பினனே.
மலைவளம் கண்டு வருகையிலே-அங்கு
மடமட வென்று மழைபொழிய,
பலகிளை உள்ள மரத்தடியில்-சென்று
பதுங்கினன் அந்த அரசனுமே.
பயத்தால் உடலும் நடுங்குதல்போல்-குளிர்
பரவிட மன்னன் நடுங்கினனே.
உயர்ந்த மதிப்புள்ள போர்வையினால்-நன்றாய்
உடம்பை இறுகவே மூடினனே.
மேகங்கள் கூடிடக் கண்ட துமே-அங்கு
வேகமாய் ஓர்மயில் ஓடிவந்தே,
தோகை விரித்துநின் றாடியதே-மேலும்
தொண்டையைத் தூக்கி அகவியதே!
“ஐயோ, குளிர்மிக வீசுவதால்-இந்த
ஆண்மயில் மேனி நடுங்குதம்மா !
‘ஐயா, உதவுங்கள்’ என்கிறதோ-மயில் ?
ஆமாம், அதைத்தான் உரைக்கிறது.”
எண்ணினன் இப்படி மன்னனுமே-உடன்
எடுத்தனன் போர்த்திய போர்வையினை.
சென்றனன் அந்த மயிலருகே-உள்ளம்
திருப்தி அடைந்திடப் போர்த்தினனே,
உடலும் மழையால் குளிர்ந்திடவே-அவன்
உள்ளம் கொடையால் குளிர்ந்ததுவே,
கொடையில் சிறந்தோன் பெயர்சொல்லவா? -மக்கள்
கொண்டாடும் பேகன்[1] அவனல்லவா!
- ↑ பேகன் கடையெழு வள்ளல்களில் ஒருவன். பழனி மலையையும் அதையடுத்த ஊர்களையும் ஆண்டு வந்தவன்.