உள்ளடக்கத்துக்குச் செல்

குழந்தைச் செல்வம்/உடல் நலம் பேணல்

விக்கிமூலம் இலிருந்து

50. உடல் நலம் பேணல்

உடலின் உறுதி உடையவரே
     உலகில் இன்பம் உடையவராம்;
இடமும் பொருளும் நோயாளிக்கு
     இனிய வாழ்வு தந்திடுமோ? 1

சுத்த முள்ள இடமெங்கும்
     சுகமும் உண்டு; நீ அதனை
நித்தம் நித்தம் பேணுவையேல்,
     நீண்ட ஆயுள் பெறுவாயே 2

காலை மாலை உலாவிநிதம்
     காற்று வாங்கி வருவோரின்
காலைத் தொட்டுக் கும்பிட்டுக்
     காலன் ஓடிப் போவானே! 3

ஆளும் அரசன் ஆனாலும்
     ஆகும் வேலை செய்வானேல்,
நாளும் நாளும் பண்டிதர் கை
     நாடி பார்க்க வேண்டாமே. 4

கூழை யேநீ குடித்தாலும்,
     குளித்த பிறகு குடி,அப்பா!
ஏழை யேநீ ஆனாலும்,
     இரவில் நன்றாய் உறங்கப்பா! 5

மட்டுக் குணவை உண்ணாமல்
     வாரி வாரித் தின்பாயேல்,
திட்டு முட்டுப் பட்டிடுவாய்;
     தினமும் பாயில் விழுந்திடுவாய். 6

தூய காற்றும் நன்னீரும்
     சுண்டப் பசித்த பின்உணவும்,
நோயை ஓட்டி விடும்.அப்பா!
     நூறு வயதும் தரும், அப்பா! 7

அருமை உடலின் நலமெல்லாம்
    அடையும் வழிகள் அறிவாயே;
வருமுன் நோயைக் காப்பாயே;
    வையம் புகழ வாழ்வாயே. 8