உள்ளடக்கத்துக்குச் செல்

குழந்தைச் செல்வம்/சிறுமியர் பொழுதுபோக்கு

விக்கிமூலம் இலிருந்து

51. சிறுமியர் பொழுதுபோக்கு

காலத்துக் கேற்ற உடையணிவோம் - வாசம்
     கட்டிய சந்தனம் பூசிடுவோம்;
கோலமாய்ச் சீவிச் சிணுக்கெடுத்து - மலர்
     கூந்தலிற் சூட்டி அழகுசெய்வோம். 1

பந்துகள் ஆடிப் பழகிடுவோம் - கழல்
     பாங்கியர் தம்மொடும் ஆடிடுவோம்;
சந்தம் எழக் கும்மி பாடிடுவோம் - சுற்றிச்
     சப்பாணி கொட்டிச் சிரித்திடுவோம். 2

ஓடி ஒளித்துக் களித்திடுவோம் - நாங்கள்
     ஒற்றை இரட்டையும் வைத்திடுவோம்;
நாடியே வட்டுகள் ஆடிடுவோம் - தோழீ
     நாணக்கண் பொத்தி நகைத்திடுவோம். 3

உன்னி யெழும் ஊஞ்சல் ஆடிடுவோம் - கேட்போர்
     உள்ளம் குளிரவே பாடிடுவோம்;
சின்னஞ் சிறுவீடு கட்டிடுவோம் - அதில்
     சித்திர வேலைகள் செய்திடுவோம். 4