உள்ளடக்கத்துக்குச் செல்

குழந்தைச் செல்வம்/உழைக்க வேண்டும்

விக்கிமூலம் இலிருந்து

56. உழைக்கவேண்டும்

ஆக்கம் வேண்டு மெனில் - நன்மை
     அடைய வேண்டுமெனில்,
ஊக்கம் வேண்டுமப்பா! - ஓயாது
     உழைக்க வேண்டுமப்பா! 1

உண்ணும் உணவுக்கும் - இடுப்பில்
     உடுக்கும் ஆடைக்கும்
மண்ணில் அந்நியரை - நம்பி
     வாழ்தல் வாழ்வாமோ? 2

நெற்றியின் வியர்வை - நிதமும்
     நிலத்தில் வீழ்ந்திடிலே
சற்றும் வாடாமல் - சுதந்திரம்
     தழைத்து வருமப்பா! 3

ஜாதிச் சண்டையெலாம் - ஓய்ந்து
     தணிய வேண்டுமப்பா!
நீதி நாடெங்கும் - நிலைத்து
     நிற்க வேண்டுமப்பா! 4

உலக மக்களெலாம் - அன்பொடு
     ஒருதாய் மக்களைப்போல்
கலக மின்றிவாழும் - காலம்
     காண வேண்டுமப்பா! 5