குழந்தைச் செல்வம்/வீரத்தாய்
55. வீரத்தாய்
[போர்முனைக்குச் செல்லும் தன் மகனை நோக்கி ஒரு வீரத்தாய் கூறுவது.]
தாயிற் சிறந்த தப்பா ! - பிறந்த
தாய்நா டதுபேணார்
நாயிற் கடையரென - இந்த
நானிலம் சொல்லும், அப்பா!
1
தாய்நிலம் காத்திடவே - ருஷியர்
சாவும் மதித்திடாமல்
காய்சினப் போரதிலே - சென்று
கலப்பதும் கண்டிலையோ?
2
நன்றுபுரி வதற்கே - உடலை
நாமிங் கெடுத்தோம், அப்பா!
நின்று தெரிந்திடுவாய் - அதுதான்
நீர்மேற் குமிழி, அப்பா!
3
பாரத நாடளித்த - உன் றன்
பரம்பரை முன்னோரின்
வீரச் செயலை யெல்லாம் - நீயும்
மேற்கொள்ள வேண்டும், அப்பா!
4
புகழ்வி ளையுமிடம் - அந்தப்
போர்முனையே, அப்பா!
மகனே உன்தாயின் - உள்ளம்
மகிழச் செய்வாய்,அப்பா!
5
சற்றும் தளராமல் - இன்று
சண்டைக்குப் போய்வருவாய்!
வெற்றி கிடைக்கும், அப்பா! - ஈசனை
வேண்டித் தொழுதேன், அப்பா!
6