குழந்தைச் செல்வம்/கடல்
20. கடல்
[கற்களும் பாறைகளும் அடர்ந்த கடற்கரையில், கடல் கொந்தளிப்பாயிருந்த தருணத்தில், மணலிலே விளையாடிக்கொண்டிருந்த குழந்தை கடலை நோக்கிக் கூறியது.]
எல்லை அறியாப் பெருங்கடலே! - நீதான்
இரவும் உறங்காயோ?கடலே!
அல்லும் பகலும் அலைகடலே!- உனக்கு
அலுப்பும் இலையோ? கருங்கடலே !
1
உருண்டு திரண்டு வருங்கடலே ! -உடைந்து
ஓடிப் போவதேன்? கடலே!
வெருண்டு மதிகெட் டாய்கடலே! பாறை
விலகிப் போகுமோ? கடலே!
2
பொங்கு திரைகளோ?கடலே! - அவை
புரவி நிரைதாமோ? கடலே!
எங்கும் உனதொலியோ? கடலே! - அன்றி
இடியின் முழக்கமோ? கடலே!
3
ஓடம் எடுத்தெறியும் கடலே! - தயை
உனக்குச் சற்றிலையோ? கடலே !
ஆடல் வீடிதனைக் கடலே!- நீயும்
அழிப்ப தழகாமோ? கடலே!
4
மலையை வயிற்றடக்கும் கடலே ! - எண்ணில்
மகர மீனுலவும் கடலே!
விலைகொள் முத்தளிக்கும் கடலே! சிப்பி
விளையா டற்குதவும் கடலே!
5
மழைக்கு மூலமும் நீ, கடலே ! - அதை
வாங்கி வைப்பதும் நீ, கடலே !
வழுத்து மகிமையெலாம், கடலே!- எவர்
மதித்து முடிக்கவலார்,கடலே!
6