உள்ளடக்கத்துக்குச் செல்

குழந்தைச் செல்வம்/கிளி

விக்கிமூலம் இலிருந்து

26. கிளி

தேமலர்ச் சோலையிலே - வாசமெழு
     தென்றல் உலாவையிலே,
மாமண மங்கையைப்போல் - பெரிது
     மகிழ்ந்துநீ தங்கினையோ? 1

பச்சிலையும் கனியும் - நிறைந்து
     படர்ந்து வளர் ஆலின்
உச்சியிற் சென்றிருந்தால் - எப்படியான்
     உன்னையும் கண்டிடுவேன்? 2

நாடும் என் உள்ளத்திலே - குடிபுகும்
     நாயகி கையமர்ந்து,
பாடி அமுதளிக்கும் - அழகிய
     பைங்கிளி நீயலவோ? 3

பூனைகள் இங்குவரா - வேடர்தம்
     பொறியின் பயமும் இல்லை;
யானுனைக் காத்திடுவேன் - இறங்கி நீ
     என்கையில் வந்திடாயோ? 4

வட்டமா யுன்கழுத்தில் - ஒருநாளும்
     வாடாத ஆரமதை
இட்டவர் ஆரடியோ? - எனக்கும்
     இயம்புவையோ? கிளியே! 5

மாணிக்க மூக்கழகும் - மரகத
      வர்ண வடிவழகும்
காணக்கண் ணாயிரந்தான் - இருப்பினும்,
      கண்டு முடிந்திடுமோ? 6

கத்திரி போலவெட்டிக் - கனியினைக்
      கௌவி யெடுத்தோடச்
சித்திர வாயளித்த - கடவுள்
      திருவருள் சற்றோ? அம்மா! 7

சாய்ந்து தலைவணங்கி - இனிய
      தமிழைநீ கற்குமுறை,
ஆய்ந்த புலவருமே -எழுதி
      அயர்ந்துகை சோர்வார், அம்மா! 8

பறக்கச் சிறகிருந்தும் - மரக்கிளை
      பற்றிநீ ஏறுவதேன்?
திறத்தை உலகினுக்கு - மிகவும்
      தெரிவிக்கவோ? கிளியே! 9

காட்டுத் தினைக்கதிரை - பறித்து நீ
       கண்டித் தருந்தாமல்,
கூட்டுக் கெடுத்தோடும் - குறிப்பெது
       கூறுவையோ? கிளியே! 10

ஒற்றை யொருகாலில் - நின்றுகனி
       உண்ணும் அறியவித்தை
கற்றதும் யாவரிடம் - அவரை நீ
       காட்டுவையோ? கிளியே! 11

கானத் தினைப்புனத்தில் - குறமகள்
     காவலிற் கொள்ளையிடல்
ஈனச் செயல் அல்லவோ? - குலத்துக்கு
     இழுக்கமும் வந்திடாதோ? 12

செம்பவழ வாயைத் - திறந்து நீ
     செப்பு மொழிகேட்கில்,
உம்பர் அமுதமெல்லாம் - செவியகத்து
     ஓடி யொழுகும், அடி! 13

கொம்பிற் கொலுவிருந்து - களித்து நீ
     கூவுங் குரல்வருமேல்,
பம்பி யெழுஞ்சோலை - எனக்குப்
    பரம பதம், அடியோ! 13

உண்ணும் கனியிலெழும் - சுவையினை
    உள்ளம் களிகொளவே,
பண்ணிற் கலந்திடநீ - தெரிந்துசெய்
    பக்குவம் ஏதடியோ? 14

பேசும் மரகதமே! உனைத் தினம்
    பேணி வளர்த்திடுவேன்;
ஆசை யமுதமொழி - அளிக்க நீ
    அண்டையில் வந்திடாயோ? 16

பண்ணுக் கிசைந்ததம்மா! - பழத்தொடு
    பாலுங் கலந்ததம்மா!
மண்ணுக் கமுதமம்மா! - உனது செவ்
    வாய்மொழி, தத்தையம்மா 17

மாணிக்கச் செப்பினிலே - அமுதை
       வடித்துச் சுவைபெருக்கி,
பேணி யுனக்களித்த - பிரமன்
       பெரியன் பெரியன், அம்மா! 18

சின்னஞ் சிறுபள்ளியில் - உனக்கொரு
       சிங்காரப் பெஞ்சுமிட்டுத்
தின்னக் கனியளித்துப் - பாலபாடம்
       செப்புவன் வா, கிளியே! 19

கண்ணுக் கினிமையாகி - என திரு
       காதும் குளிரச்செய்யும்
வண்ணப் பசுங்கிளியே!-குயிலும் உன்
       மாதவஞ் செய்ததுண்டோ? 20

பாலுக்குச் சீனியைப்போல் - பசுந்தமிழ்ப்
       பாடலுக் கின்னிசைபோல்,
சோலைக்குப் பைங்கிளியே! - உனது
       துணையும் இனிதே அம்மா ! 21

உள்ளக் களிப்பெழுந்து - வெளியில் வந்து
       உன்னுருக் கொண்டதுவோ?
மெள்ளப் பிடித்துநெஞ்சில் - அணைத்திட
       வேட்கை மிகுதே அம்மா! 22

"https://ta.wikisource.org/w/index.php?title=குழந்தைச்_செல்வம்/கிளி&oldid=1672338" இலிருந்து மீள்விக்கப்பட்டது