குழந்தைச் செல்வம்/கூண்டுக் கிளி
Appearance
9. கூண்டுக் கிளி
சிறுவன்
பாலைக் கொண்டு தருகின்றேன்,
பழமும் தின்னத் தருகின்றேன்;
சோலைக் கோடிப் போகவழி
சுற்றிப் பார்ப்பதேன் கிளியே?
1
காட்டில் என்றும் இரைதேடிக்
களைத்திடாயோ? உனக்கிந்தக்
கூட்டில் வாழும் வாழ்வினிலே
குறைகள் ஏதும் உண்டோ? சொல்.
2
கிளி
சிறையில் வாழும் வாழ்வுக்குச்
சிறகும் படைத்து விடுவானோ?
இறைவன் அறியாப் பாலகனோ?
எண்ணி வினைகள் செய்யானோ?
3
பாலும் எனக்குத் தேவையில்லை ;
பழமும் எனக்குத் தேவையில்லை ;
சோலை எங்கும் கூவி நிதம்
சுற்றித் திரிதல் போதுமப்பா!
4