உள்ளடக்கத்துக்குச் செல்

குழந்தைச் செல்வம்/தெய்விகக் காட்சி

விக்கிமூலம் இலிருந்து

பஞ்சாமிர்தம்

38. தெய்விகக் காட்சி

வான வெளிதனிலே - கவிந்தெழு
    மாலைப் பொழுதினிலே,
கூனப் பிறைவரவே - சிவன் திருக்
    கோலம் தெளிவேன், அடி! 1

முற்றிய ஆழியிலே - அலைவந்து
    மோதி எறிகையிலே,
கற்றைக் கதிரெழவே - உமைதிருக்
    காட்சி வியப்பேன், அடி! 2

தாமரைப் பொய்கையிலே - கதிரொளி
    தட்டுமவ் வேளையிலே,
பூமலர்ந் தோங்கிடவே - அரியென்று
    போதம் நயப்பேன், அடி! 3

மாமலைச் சாரலிலே - மதமிகு
    வாரணக் கூட்டத்திலே,
காமலர் சிந்திடவே - கணேசர் என்
    கண்முனே நிற்பார், அடி! 4

மேட்டு நிலங்களிலே - தினைக்கதிர்
    விம்மி விளைகையிலே.
காட்டு மயில்வரவே-குகனும் என்
    காதல் விளைப்பார், அடி! 5