உள்ளடக்கத்துக்குச் செல்

குழந்தைச் செல்வம்/புத்தரும் ஏழைச் சிறுவனும்

விக்கிமூலம் இலிருந்து

37. புத்தரும் ஏழைச் சிறுவனும்

[புத்தர் நமது பாரத நாட்டில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய சிறந்த ஞானி. அரச குடும்பத்தில் பிறந்து, சீரும் சிறப்புமாக வாழ்ந்த இவர் உலகவாழ்க்கையை விட்டுத் துறவியானார். அரண்மனையை விட்டு நீங்கிச் சென்ற புத்தர் வழிநடந்த களைப்பால் சோர்ந்து கிடந்தார். அவரைக்கண்ட ஓர் இடைச் சிறுவன், தான் தாழ்ந்த குலத்தில் பிறந்தமை பற்றித் தன் கலயத்தில் பால் கறந்து புத்தருக்குக் கொடுக்கத் தயங்கினான். பிறப்பினால் உயர்வு தாழ்வுகள் பாராட்டலாகாது என்று புத்தர் அவனுக்குப் போதித்த வரலாறு இதனுள் கூறப்படுகிறது.]

சிறுவன் வழியில் மயங்கிக் கிடந்த புத்தரைக் காணுதல்

ஆடுகள் மேய்த்துவரும் - ஒருவன்
      ஆயர் குலச் சிறுவன்,
வாடிக் கிடந்தவனைச் - செல்லும்
      வழியின் மீதுகண்டான்.

         அவன் செயல்
வையகம் வாழ்ந்திடவே - பிறந்த
      மாதவச் செல்வன் முகம்
வெய்யிலில் வெந்திடாமல் - தழைகள்
      வெட்டி அருகில் நட்டான். 2

தெய்வ குலத்திவனை - எளியேன்
      தீண்டலும் ஆகாதினிச்
செய்வதும் யாதெனவே- சிறிது
      சிந்தை தயங்கி நின்றான். 3

உள்ளந் தெளிந்துடனே - வெள்ளாடு
     ஒன்றை அழைத்துவந்து.
வள்ளல் மயக்கொழிய - மடுவை
     வாயில் கறந்துவிட்டான். 4

நட்ட தழைகளெல்லாம் - வளர்ந்து
     நாற்புறமும் கவிந்து,
கட்டிய மாளிகைபோல் - வனத்தில்
     காட்சி யளித்த, அம்மா! 5

ஐயனை இவ்வுலகம் - காணுதற்கு
     அரியவோர் தெய்வமெனக்
கைகள் தொழுதுநின்றான் - சிறுவன்
     களங்க மிலாவுளத்தான். 6

       புத்தர் எழுந்து பால் கேட்டல்
நிலத்திற் கிடந்த ஐயன் - மெல்ல
     நிமிர்ந்து தலை தூக்கி,
கலத்தினி லேகொஞ்சம்-பாலைக்
     கறந்து தருவாய்' என்றான். 7

       சிறுவன் மறுத்தல்
“ஐயையோ! ஆகாது” என்றான் - சிறுவன்
      “அண்ணலே! யானும் உனைக்
கையினால் தீண்டவொண்ணா - இடையன் ஓர்
       காட்டு மனிதன்“ என்றான். 8

      புத்தர் அறிவுறுத்தல்
“இடர் வரும் போதும் - உள்ளம்
      இரங்கிடும் போதும்
உடன் பிறந்தவர்போல் - மாந்தர்
      உறவு கொள்வர், அப்பா! 9

ஓடும் உதிரத்தில் - வடிந்து
     ஒழுகும் கண்ணீரில்,
தேடிப்பார்த்தாலும் - சாதி
     தெரிவதுண்டோ அப்பா? 10

பிறப்பினால் எவர்க்கும் - உலகில்
     பெருமை வாராதப்பா!
சிறப்பு வேண்டு மெனில் - நல்ல
     செய்கை வேண்டும். அப்பா! 11

நன்மை செய்பவரே - உலகம்
     நாடும் மேற்குலத்தார்;
தின்மை செய்பவரே -அண்டித்
     தீண்ட ஒண்ணாதார்.” 12

    சிறுவன் பால் தருதல்
நிலத்துயர் ஞானி-இவை
    நிகழ்த்தி, ”என் தம்பீ!
கலத்தினிலே கொஞ்சம்-பாலைக்
    கறந்து தா” என்றான். 13

ஆயர் சிறுவனும் - கலத்தில்
    அளிக்க வாங்கியுண்டு,
தாயினும் இனியன் - கொண்ட
     தளர்ச்சி நீங்கினனே. 14