குழந்தை இலக்கியம்/செயற்கை

விக்கிமூலம் இலிருந்து
செயற்கை










16.கண்ணாடி 35

17.மரக்குதிரை 36
18.அகல் விளக்கு 37
19.தொட்டில் 38
20.எழுதுகோல் 41
21.ஏற்றம் ‌ 43
22.பழக் கூடை 44
23எங்கள் வீடு 45




38 கவிஞர்.வாணிதாசன்
16

றையில் இருக்குது கண்ணாடி!
அப்பா அம்மா பின்னோடி
மறைந்து நின்றால் கண்ணாடி
வந்ததை விளக்கும் கண்ணாடி! 1

தலையைச் சீவச் சீவும்!
தம்பி தாவத் தாவும்!
மலைத்து நின்று பார்த்தால்
மலைத்து நின்று பார்க்கும்! 2

சாந்தெ டுத்தால் எடுக்கும்!
தலைமு டித்தால் முடிக்கும்!
மாந்த ளிரைப் போன்ற
வாய்தி றந்தால் திறக்கும்! 3

வீட்டுக் கழகு கண்ணாடி!
விலைக்கு வாங்கிய கண்ணாடி!
காட்டக் காட்டும் கண்ணாடி!
தானே காட்டாக் கண்ணாடி! 4

17

ஒடாக் குதிரை ஒரு குதிரை!--வீட்டின்
உள்ளே இருக்குது மரக்குதிரை!
காடும் மேடும் ஓடாது!--வாயில்
கடிவாளம் காட்டத் தாவாது!

1

குனிந்த தலையை நிமிர்த்தாது!--வட்டக்
குளம்புக் காலைத் தாழ்த்தாது!
புனைந்த சேணம் மாற்றாது!--மண்ணில்
புரண்டு சோம்பல் ஆற்றாது!

2

புல்லும் கொள்ளும் கேட்காது!--கழுத்துப்
பூட்டுக் கயிறும் கேட்காது!
அல்லும் பகலும் கனைக்காது!--தம்பி
ஆட்ட ஆடும் சளைக்காது

3
18

ண்ணால் ஆன விளக்கு
மாடத்(து) அகல் விளக்கு !
எண்ணெய் வார்த்தால் எரியும் !
இல்லை யேல்திரி கரியும்! 1

காலை படுத்துத் தூங்கிக்
கண்வி ழிக்கும் மாலை !
மாலை இருந்து காலை
வரையும் எரியும் வேலை! 2

தங்கை தூங்கும் போதும்,
தம்பி தூங்கும் போதும்
மங்கி எரிந்து விழிக்கும் !
வந்த இருளை ஒழிக்கும் ! 3

19

தொட்டில்! தொட்டில்! தொட்டில்!
தொங்கி ஆடும் தொட்டில் !
பட்டுக் குழந்தை தூங்கப்
பாட்டி வாங்கிய தொட்டில் ! 1

பொம்மைக் குழந்தை தூங்கப்
பொம்மை சிரிக்கும் தொட்டில் !
அம்மா ஆட்டும் தொட்டில்!
அழகுத் தொட்டில் ! தொட்டில் ! 2

அக்கா வளர்ந்த தொட்டில் !
அண்ணன் வளர்ந்த தொட்டில் !
செக்கச் சிவந்த தம்பி
சிணுங்கச் சிரிக்கும் தொட்டில் ! 3



வளர்த்து மங்கிய தொட்டில் !
வளரா திருக்கும் தொட்டில் !
தளர்ந்த முதியோர் இளைஞர்
உளத்தை ஈர்க்கும் தொட்டில் ! 4

கன்னிப் பெண்கள் நெஞ்சில்
களிப்பை ஊட்டும் தொட்டில் !
சின்னப் பிள்ளை துரங்க
அன்னை ஆட்டும் தொட்டில் ! 5

அம்மா ஆட்டும் தொட்டில் !
அழுது சிரித்த தொட்டில்
இம்மா நிலத்துச் சொத்தாம் !
இளமைச் சிரிப்பின் முத்தாம்! 6

பாட்டி ஆட்டும் தொட்டில்!
பாட்டன் ஆட்டும் தொட்டில்!
வீட்டிற் பிறந்த முன்னோர்
விரும்பி ஆட்டும் தொட்டில்! 7

வாழ வைத்த தொட்டில்!
வளர வைத்த தொட்டில்!
பாழ டைந்த போதும்
பாலர்க் குதவும் தொட்டில்! 8

குழந்தைக் கேற்ற அன்பைக்
கொடுக்கும் கிழவி தொட்டில்!
பழகும் தாயைப் போலப்
பற்றைக் காட்டும் தொட்டில்! 9

பிள்ளை இன்பம் ஒன்றே
பெரிதாய் எண்ணும் தொட்டில்!
உள்ளம் நொந்த பிள்ளைக்(கு)
உறக்கம் ஊட்டும் தொட்டில்! 10

பெண்ணின் பெருமை காட்டிப்
பிரியா அன்பை ஊட்டி
மண்ணில் தாய்மை உணர்த்தும்
தொட்டில் வாழ்க தொட்டில்! 11



20

ருவைத் தாளில் தீட்டும்;
உளத்தைத் தாளிற் காட்டும்;
அருமை யான பேச்சின்
ஆழம் அழகைக் காட்டும்! 1

பகையைச் சாய்க்கும் கூர்வாள்;
பலரை ஈர்க்கும் காந்தம்;
நகையை மூட்டும் குழவி;
நலிவைப் போக்கும் தென்றல்! 2

உலகை மாற்றும் மருந்து;
உணர்வை மாற்றும் விருந்து;
கலக மூட்டும் மருந்து;
கவலை போக்கும் மருந்து! 3

அறிவைச் சொல்லும் தந்தை;
அன்பைக் காட்டும் தாயார்;
வெறியை ஊட்டும் காதல்;
வீர மூட்டும் தாறு! 4

விளக்கிக் காட்டும் கணக்கன்;
மேன்மை சொல்லும் தோழன்;
தளர்வில் ஊக்கும் நமது
சங்க காலப் பாட்டே! 5




21

வில்லைப் போல இருக்கின்றாய்!
வெளியில் நீரை இறைக்கின்றாய்!
கொல்லை மேடும் கோடையிலே
குளிர்மை அடையும் உன்னாலே!1

ஏரி சுண்டிய காலத்தும்,
இடிமழை குன்றிய காலத்தும்
நீரால் வாழும் உழவர்க்கு
நிமிர்ந்து குனிந்து கொடுக்கின்றாய்!2

உயர்ந்தோர் தாழ்ந்தோர் எண்ணாமல்
உன்னை மிதிப்போர் எண்ணாமல்
முயன்றோர்க் கெல்லாம் தண்ணீரை
மொண்டு மொண்டு கொடுக்கின்றாய்!3

‘ஏற்றம்’ என்று பெயரிட்டார்
ஏற்றம் அடைந்தோர் உன்னாலே!
ஏற்றம் மக்கள் அடையவெனில்
உழவர் இன்னல் களைவோமே!4
22

ழக்கூடை இந்தா!-தமிழ்ப்
பழக்கூடை இந்தா!

அழுகாமல் உனைக்காக்கும் தற்காப்புக் கூழை!
அமிழ்து சுவைப்பலா மாங்கனி வாழை!
செழுந்தமிழ் கைவிட்டால் உனைச்சூழும் பீழை!
சிந்தித்துப் பாரடி வாழ்விக்கும் பொற்பேழை!

காவிப்பொன் பற்கள் நினைவூட்டும் மாதுளை!
கைக்குழந் தைமொழி யூட்டும் பலாச்சுளை!
ஆவி செழுந்தமிழ் ஆமோ மலைவாழை!
மாவை அணில்கோத ஆனோமே நாம்ஏழை!

வற்றாத கூடை மலர்பூத்த ஓடை!
மாத்தமிழ் தென்றல் தவழ்சோலை மேடை!
உற்று நினைத்துப்பார் உன்றன் தமிழ்வாழ்வே!
உன்வாழ்வு, உன்னினப் பெருவாழ்வு ஆகும்மே!

23

எங்கள் வீடு கல்வீடே!
என்னை வளர்த்த நல்விடே!
தெங்கும் மாவும் தோட்டத்தில்!
சிறிய ஊஞ்சல் கூடத்தில்!

வீட்டின் முன்னே சிறுபந்தல்!
வேய்ந்த கீற்றோ வெறுங்கந்தல்!
வீட்டின் முன்னர் இருதிண்ணை!
மேயும் கோழிக் கதுபண்ணை!

ஆட்டுக் குட்டி ஒருகாலில்!
ஆவின் குட்டி ஒருகாலில்!
மாட்டிக் கட்டிய தாழ்வாரம்
மழை தாலோ ஒரேஈரம்!

அண்ணன் தம்பி படிப்பதற்கும்,
அக்காள் பின்னி முடிப்பதற்கும்,
திண்ணை ஓரம் நடையொன்று
திகழும் சன்னல் ஒளிகொண்டு!4 கூடம் நிறையப் படமிருக்கும்!
பித்தளைக் குத்து விளக்கிருக்கும்!
மாடம் நிறையக் கடையிருந்து
வாங்கிய முல்லைச் சரமிருக்கும்!5